ஓ காதல் கண்மணி – திரை விமர்சனம்
சுரேஜமீ
ஓ காதல் கண்மனி – முரணில் ஒரு முத்து எடுத்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம் அவர்கள்!
ஒரு காலக்கட்டம் வரை, நமது தமிழ்த்திரைப் படங்கள், வாழ்வியலோடு ஒன்றி இருந்தது; ஆனால், மேற்கத்திய தாக்கம், சாதனை எண்ணம், திறன் நிரூபித்தல், புதிய பரிணாமம் எனப் பல்வேறு காரணங்களால்,
திரைப்படங்கள் ஒரு நேரம் கழிப்பானாகவும், பிரமிப்பைக் கண்ணெதிரே கொண்டுவரும் ஒரு ஊடகப் பெட்டகமாகவும் பயணிக்க,
மிகச் சில படங்கள் இன்னமும், பழைய பாதையைத் தொட்டு வருவதாகவும் இருக்க,
ஓ காதல் கண்மனி நம்மை சிந்திக்க வைக்கும் ஒரு இனிய பயணம் என்று சொன்னால் மிகையாகாது!
அருமையான களம். சிறந்த கருத்தோவியம். சில ஒவ்வாமைகளைத் தவிர,
காதல் ஒரு அன்பின் வெளிப்பாடு. அது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணுக்கிடையே வரும்போது , அதை நம் சமூகம் இன்றளவும், ஒரு அந்தரங்கமாகப் பார்த்துப் பழக்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால், அன்பு அளவற்று இருந்தும், அதை வெளிப்படுத்தும் தன்மை, நம்மவர்களுக்குத் தெரியாது. அதற்குக் காரணம், நம் சமூகக் கட்டமைப்பே என்று சொன்னால், ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
கணவன்-மனைவி உறவில் மட்டுமே, அன்பை வெளிப்படையாகத் தெரிவிப்பதைக் காமம் சார்ந்த விஷயமாக, நான்கு சுவர்களுக்குள் மட்டுமே நடக்க வேண்டிய ஒரு கடமையாகப் பார்க்கிறது நம் சமூகம். ஆனால், இம்முறையில், மிகச் சமீப காலத்தில், பல மாற்றங்கள் வந்தாலும்,
மாற்றங்கள் தவறான புரிதலின் காரணமாக வேறு கோணங்களில் இட்டுச் செல்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
சமூக மாற்றங்களை உன்னிப்பாகக் கவனத்தில் கொள்வதும், அதனை நேர்த்தியாக, ஒரு சமூகத்திற்கு படைப்பதும் ஒரு படைப்பாளியின் கடமை என்பதை மிகக் கவனமாகக் கையாண்டிருக்கிறார் மணி – ஓ காதல் கண்மணியில்!
மேற்கத்தியத் தாக்கமான ‘சேர்ந்து வாழும் முறையை’ (Living together), அறிமுகப்படுத்தி, ஒரு ஆண்-பெண் புரிதலை, ஒருவரை ஒருவர் வரம்பு மீறாமல், அதே நேரம், உண்மையான அன்பைப் பரிமாறும் ஒரு காவியமாகப் பயணிக்க வைத்து, அதற்கு ஒப்பாக ஒரு இந்தியப் பாரம்பரிய கணவன் – மனைவி கதாபாத்திரத்தையும் படைத்து, அந்த உறவின் வலிமையை, தூய்மையான அன்பின் பாதுகாப்பை, ஒரு பாடமாக சேர்ந்து வாழும் கலையைப் பின்பற்றும் ‘ஒரு ஆண் – பெண்’ உறவுக்கு வைத்து, கடைசியில், அவர்களை, நம் கலாச்சார நெறிகளைத் தழுவும் திருமண பந்தத்துக்குள் இணைத்திருப்பது பாராட்டத்தக்கது!
கதை, களம் தாண்டி ஒரு கருத்து விதையைப் புதிய சமுதாயத்திற்குக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார் இயக்குனர் மணி!
நீண்ட நாட்களுக்குப் பின் தன் கதையையும், கருத்தையும் மட்டுமே நம்பி, ஒரு நல்ல படத்தின் மூலம் தன்னை உயிர்பித்திருக்கிறார் மணிரத்னம் என்று சொன்னால்,
திரைப்படத்தைப் பார்த்தவர்கள் மறுக்க மாட்டார்கள்!
அவசியம் பார்க்கவும்!
அன்புடன்
சுரேஜமீ
திரையில் வரும் படங்களில் தரமும் மிகுந்தவை சிலவேதான்.. அப்படி ஒரு சில படைப்பாளர்கள் நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கிறார்கள். அந்த முன்னணி வரிசையில் மணிரத்னம்.. இடையில் ஒரு சில படங்கள் சறுக்கல் தெரிந்தாலும்.. மீண்டும் ஒரு முழுமையான தனது முத்திரையை பதித்துள்ளார் என்பது உங்கள் விமர்சனத்திலிருந்து அறிய முடிகிறது. இயக்குனர் மட்டுமின்றி.. விமர்சனம் தந்திருக்கும் நீங்களுமே சமூக அக்கறையுடன் பேனாவை நகர்த்தியிருப்பது பாராட்டிற்குரியது. வாழ்த்துகள்… காவிரிமைந்தன்
நன்றி அண்ணலே!
அன்புடன்
சுரேஜமீ