-மேகலா இராமமூர்த்தி

ஆண்களுக்கு நிகரான பெண் புலமையாளர்களை – கல்வியாளர்களை, சங்க காலத்துக்குப் பிறகு, தேடி அடையாளப்படுத்துதற்குப் பெரும் பிரயத்தனமும் முயற்சியும் தேவைப்படுகின்றது. அப்படிக் கண்டடைந்த பெண்டிரின் சிந்தனைகளும் அவர்கள் வாழ்ந்தகாலச் சமூகப் போக்கினை ஓட்டியே அவர்தம் படைப்புக்களில் பிரதிபலிக்கக் காண்கின்றோம்! அஃது இயற்கையும்கூட!     

அவ் அடிப்படையில்தான் கிபி 3-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பெண்புலவோரின் சிந்தனைகள் மானுடக் காதலைப் பேசுவதாய் அமைந்திருக்க, அதற்குப் பிந்தைய பக்தி இயக்ககாலப் பெண்புலவோரின் சிந்தனைகள் இறையோடு ஒன்றறக் கலக்கும் தெய்விகக் காதலை விதந்தோதுகின்றன.

இப்படி ஒவ்வொரு காலகட்டமாகக் கடந்து வருகையில் பெண்பாலாரின் படைப்புக்கள் குறைந்துகொண்டே வருவது பெண்கல்வியும் காலப்போக்கில் குறைந்து போயிருக்கின்றது என்பதையே  உணர்த்துகின்றது. இத்தகு பெண்கல்வித் தடைக்கோர் முடிவுவந்து மீண்டும் அவர்களின் கல்வி வானம் விடிவுகண்டது மேலைநாட்டாரின் வருகைக்குப் பின்னரே என்பதை மறுப்பதற்கில்லை.

ஆங்கிலேயர், இந்தியாவில் தம் காலனி ஆதிக்கத்தை நிலைநாட்டி இந்தியரை அடிமைப்படுத்தியதால் நாம் நம் சுதந்தரத்தை இழந்தோம்; மேற்கத்தியரின் ஆங்கிலக் கல்விமுறைக்கு மாற்றப்பட்டோம் என்பவை வருந்தத்தக்கனவே எனினும், அவர்கள் காலத்தில்தான் சாதி மத பேதங் கடந்த அனைவருக்கும் பொதுவான ஒரு கல்வித் திட்டத்தை நாடு கண்டது என்ற வகையில் அது போற்றத்தக்கத்தே!

ஆணாதிக்கச் சமூகத்தால் அடிமைப்படுத்தப்பட்டு, அறியாமை யிருளில் அகப்பட்டுக் கிடந்த பெண்களின் வாழ்வில் ஆங்கிலேயர் பரவலாக்கிய கல்விமுறை மீண்டும் அறிவொளி ஊட்டியது.

பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளைக் கண்டித்த இந்தியச் சமூகச் சீர்திருத்தவாதிகளின் எண்ணிக்கையும் இக்காலகட்டத்தில் அதிகரித்தது கண்கூடு. அவர்களில் முதன்மையானவர் ராஜா ராம்மோகன் ராய்.

18-ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் பிறந்த ராம்மோகன் ராய், சமூகத்தில் ஊறிக்கிடந்த மூடநம்பிக்கைகளுக்கும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கும் தீமூட்ட முதலில் தீக்குச்சி கொளுத்தியவர். பழமைவாதத்தில் பிடிமானம் கொண்ட பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்திருந்தும் அறிவுக்கும் மனிதத்தன்மைக்கும் பொருந்தாத மதச்சடங்குகளையெல்லாம் அவர் துணிந்து எதிர்த்தார். இறந்த கணவனோடு உயிருள்ள மனைவியை எரிக்கும் சமூகச் ’சதி’யை முடிவுகட்டப் பாடுபட்டு அதற்கு எதிரான சட்டத்தை அப்போதைய வங்காள ஆளுநர் வில்லியம் பெண்டிங் பிரபு (Lord William Bentinck) அமல்படுத்த ராம்மோகன் ராய் வழிகோலினார்.

இவரைப் போலவே ஈஸ்வர சந்திர வித்யாசாகர், ஜோதிபாய் ஃபூலே, டாக்டர் அம்பேத்கர் என்று சீர்திருத்தச் சிந்தனை கொண்ட ஆடவர் பலர் பெண்களுக்கெதிரான ’சதி’யையும், சமூகத்தின் சாதி வேறுபாடுகளையும் கடுமையாய் எதிர்த்தனர். பெண் கல்வியின் அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்தினர்.

ஆண்களேயன்றிப் பெண்களும் பெண்கல்விக்கு ஆதரவாகவும், பெண்கள்மீதான வன்கொடுமைகளுக்கு எதிராகவும் பாடுபட்டிருக்கின்றனர். அவ்வகையில், ஜோதிபாய் ஃபூலேயின் துணைவியாரான சாவித்ரிபாய் ஃபூலே சிறந்த கவிஞராகவும், பெண்களுக்கான முதல் பள்ளியை பூனேயில் நிறுவிய சாதனையாளராகவும் திகழ்கின்றார்.

நவீன இந்தியாவின் முதல் பெண்ணியவாதியாகக் கருதப்படுபவர் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, மராத்தியரான, தாராபாய் ஷிண்டே (Tarabai Shinde) எனும் பெண்மணி. அவர் தம்முடைய ’Stripurush Tulana’ (A Comparison Between Women and Men) எனும் நூலில் அன்றைய சமூகத்தில் நிலவிவந்த சாதி அடிப்படையிலான சமத்துவமின்மை, ஆணாதிக்கம், சாதி வேறுபாடின்றி எங்கும் நிலவிவந்த பெண்கள் மீதான அடக்குமுறை ஆகியவற்றை மிகத் துணிச்சலாகப் பதிவு செய்திருக்கின்றார். சமூகத்தின் வரவேற்பை இந்நூல் அப்போது பெறாவிடினும், மற்றொரு சீர்திருத்தப் பெண் சிந்தனையாளரான, சாவித்ரிபாய் ஃபூலே இந்நூலைப் பெரிதும் பாராட்டியிருக்கின்றார் என்றறிகின்றோம்.

நம் தமிழகத்திலும் பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், பெண்ணுரிமை ஆகியவற்றுக்கு உரத்துக் குரலெழுப்பிய போராளிகள் பலர் 19, 20-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றினர். தந்தை பெரியார், திரு.வி.க., புரட்சிக் கவிஞர்களான பாரதி, பாரதிதாசன் ஆகியோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

”ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போ மென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்”
என்று பெண்ணடிமைக்கும் பெண்கல்விக்கும் எதிரானவர்களின் வீழ்ச்சியைக் கொண்டாடுகின்றார் பாரதியார்.

”கல்வியில்லாப் பெண்கள் களர்நிலம்
அங்கே புல்விளையலாம் நல்ல புதல்வர்கள் விளைவதில்லை”
என்றார் பாரதிதாசன் உறுதிபட.

”ஆண்களால் பெண்களுக்கு விடுதலையோ சம உரிமையோ கிடைக்காது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்த பெரியார், ”பெண் விடுதலைக்கு ஆண்களைவிடப் பெண்களே இப்போது பெரிதும் தடையாக இருக்கின்றார்கள்; ஏனெனில், இன்னமும் பெண்களுக்குத் தாம் முழு விடுதலைக்குரியவர்கள் என்ற எண்ணமே தோன்றவில்லை; இயற்கையே தங்களை ஆண்களுக்கு அடிமையாகத்தான் படைத்திருக்கின்றது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள்” என்று 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த நம் பெண்களின் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டியதோடு, அந்த அடிமை மனநிலையைக் கண்டிக்கவும் செய்தார்.

அன்றைய பெண்களில் பலர் பெரியாரின் கூற்றுக்கிணங்க ஆடவர்க்கு அஞ்சியும் அடங்கியுமே நடந்தனர் எனினும் அவர்களினின்று(ம்) மாறுபட்டு, பெண் விடுதலைக்கும், பெண்ணுரிமைக்கும் குரலெழுப்பிய பெண்டிரும் தமிழகத்தில் இருக்கவே செய்தார்கள்.

அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் மூவலூர் இராமாமிருதத்தம்மையார். பெண்களைச் சிறுமைப்படுத்தும் ’தேவதாசி’ முறையை ஒழிக்கக் கடுமையாகப் பாடுபட்டச் சமூகச் சீர்திருத்தவாதி அவர். திராவிட இயக்கச் சார்பாளராகவும், சிறந்த எழுத்தாளராகவும் விளங்கிய அவர், ’தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’ என்ற நாவலை 1936-இல் எழுதினார்.

தலைப்பு, தாசிகளின் ஒழுக்கத்தை இழித்துரைக்கும் நாவலோ என்றோர் ஐயத்தை நமக்கு ஏற்படுத்தினாலும் நாவலின் பேசுபொருள் அதற்கு நேர்மாறானது. தாசிகளை உருவாக்கி நிலைநிறுத்தும் சமூக அமைப்பையும், அதன் பழமைவாதத்தை ஆதரித்தபடியே ஒழுக்கநெறி பேசுவோரின் போலித்தனத்தையும் தாசிகளைக்கொண்டே இந்நாவலில் கடுமையாய்ச் சாடியிருக்கின்றார் இராமாமிருதத்தம்மையார். தாசி குலத்தவரும் ஏனைய பெண்களைப் போலவே சமமான உரிமையுடன் திருமணம் செய்துகொண்டு சுய மரியாதையுடன் வாழ்வதற்கு அறைகூவல் விடுக்கின்றார் அவர். தாசிகளின் மோசவலை பற்றிப் பேசுபவர்கள் குடும்பப் பெண்களை தெய்வநிலைக்கு உயர்த்துவார்கள். நீ பரத்தமை ஒழுக்கமுடைய ஆண்மகன் எனில் பெண்ணின் கற்பைப் பற்றிப் பேச உனக்கென்ன தகுதி இருக்கின்றது என்று காட்டமாக வினா எழுப்புகின்றது இந்நாவல்.

பெண் போராளிகளில் குறிப்பிடத்தக்க மற்றொருவர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார். மருத்துவராகவும், சமூகச் சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்த அவர், 1926-இல் சென்னை மாகாணச் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். சென்னை மாநகராட்சியின் முதல் பெண் துணைமேயர் (The deputy chairperson of the legislative council) என்ற சிறப்பும் அவருக்குண்டு. அகில இந்தியப் பெண்கள் அமைப்பின் தலைவராக (President of All India Women’s Conference – AIWC) 1931-இல் தேர்வானார்.

தேவதாசி முறை ஒழிப்பு, இருதாரத் தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய மணங்களைத் தடைசெய்யும் சட்டம் போன்றவற்றை அரசு நடைமுறைப்படுத்தியதில் முத்துலட்சுமி அம்மையாரின் பங்கு முக்கியமானது.

பெற்றோரால் கைவிடப்பட்ட அநாதைக்குழந்தைகளின் பாதுகாப்புக்கும், அவர்தம் வளமான எதிர்காலத்துக்கும் உதவும் வகையில் முத்துலட்சுமி அம்மையாரால் உருவாக்கப்பட்டதே சென்னை அடையாற்றிலுள்ள அவ்வை இல்லம். முத்துலட்சுமி அம்மையாரின் சேவைகளைப் பாராட்டி மத்திய அரசு 1956-இல் ’பத்ம பூஷண்’ விருது வழங்கி அவரைக் கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

[தொடரும்]

*****

https://www.indiacelebrating.com/general-awareness/social-reformers-of-india/

https://en.wikipedia.org/wiki/Savitribai_Phule

https://en.wikipedia.org/wiki/Tarabai_Shinde

https://en.wikipedia.org/wiki/Moovalur_Ramamirtham

https://en.wikipedia.org/wiki/Muthulakshmi_Reddi

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.