காலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 9

0

-மேகலா இராமமூர்த்தி

1932ஆம் ஆண்டு தோற்றம்பெற்ற  கலைமகள்  மாத இதழுக்கென்று ஓர் தனிச்சிறப்பு உண்டு. தமிழகப் பெண்களை ஊக்கப்படுத்தி எழுதவைத்த முதல் இதழ் அதுதான். கலைமகள் பெண் எழுத்தாளர்கள் வரிசை என்ற ஒன்றே அந்நாளில் இருந்திருக்கின்றது. சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், எம்.ஆர். ராஜம்மா போன்றவர்கள் அவ்வரிசையில் வரக்கூடியவர்கள். அவ்விதழில் பரிசுக்குரிய சிறுகதைகளையும் பெரும்பாலும் பெண் எழுத்தாளர்களே படைத்துள்ளனர் என்பது நாம் நினைந்து மகிழத்தக்கது. ராஜம் கிருஷ்ணனின் ’ஊசியும் உணர்வும்’, ’நூறு ரூபாய் நோட்டு’, ஆர். சூடாமணி எழுதிய ’காவேரி’ போன்றவை கலைமகளில் பரிசுபெற்ற சிறுகதைகளாகும்.

1947இல், கல்கி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில், குறிப்பிடத்தக்க மற்றொரு பெண் எழுத்தாளரான, அநுத்தமாவின் முதல் கதையான ’அங்கயற்கண்ணி’ இரண்டாம் பரிசினைப் பெற்றது. பெண் எழுத்தாளர்களில் பெரும்பாலோர் குடும்ப உறவுகள், குடும்பச் சிக்கல்களை மையமாக வைத்தே அப்போது கதைகள் எழுதினர். ராஜம் கிருஷ்ணன், சூடாமணிபோல் ஓரிருவர் மட்டுமே சமூக நோக்குடைய கதைகளை எழுதி வந்துள்ளதையும் அறியமுடிகின்றது. பெண்ணியச் சிந்தனைகளின் அடித்தளங்களைக் கட்டமைத்த பெருமை இப்பெண் எழுத்தாளர்களையே சாரும்.

1960களில் தொடங்கி சிவசங்கரி, வாஸந்தி, இந்துமதி, அனுராதா ரமணன் போன்றவர்கள் சிறுகதைகள் அதிகம் எழுதியுள்ளனர். இவர்களது சிறுகதைகளில் பெரும்பாலும் காதல், காதல் மணம், தனிக்குடித்தனம், குழந்தையின்மை போன்றவை கருக்களாக அமைந்திருந்தன. எழுபத்தைந்துக்குப் பின் சிவசங்கரி, வாஸந்தி எழுத்துக்களில் மாற்றங்கள் ஏற்பட்டன. சமூகப் பிரச்சினைகள், பெண் விடுதலை, பெண் உரிமை இவற்றைக் கருவாகக் கொண்ட கதைகளை இவர்கள் எழுதத் தொடங்கினர்.

இதழ்களேயன்றி வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் என்று பல்வேறு வகைகளில் ஊடகத்துறை வளர்ச்சியும் விரிவும் கண்டது இருபதாம் நூற்றாண்டிலேயே. அதனால் எழுத்து மட்டுமல்லாமல், பேச்சு, நடிப்பு என்று பல்துறைகளில் தம் திறமைகளை வெளிப்படுத்தப் பெண்களுக்கு வாய்ப்புகள் கிட்டின.

தொடக்க காலத் திரைப்படங்களில் நடிகையாக வலம்வந்த எம். எஸ். சுப்புலட்சுமி சிறந்த பின்னணிப் பாடகியாகவும் திகழ்ந்தார். இவரைப் போன்றே கே.பி. சுந்தராம்பாள், எஸ். வரலட்சுமி போன்றோர் நடிப்போடு சொந்தக் குரலில் பாடியும் புகழ்பெற்றனர். பி. பானுமதி, நடிப்பு, பாட்டு இவற்றோடு நில்லாது இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என்று திரைத்துறையின் பல்வேறு திறன்களும் ஆளுமையும் வாய்க்கப்பெற்ற அரிய பெண்மணியாய்த் திகழ்ந்தார்.

ஆரம்பத்தில் ஆண் நடிகர்களுக்கு நிகரான கனமான பாத்திரங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பைப் பெண்களுக்கு(ம்) அளித்துவந்த திரைத்துறை பின்பு அந்த நல்ல போக்கிலிருந்து மெல்ல மாறி, பெண்களை வெறும் கவர்ச்சிப் பதுமைகளாகவும், போகப் பொருளாகவுமே திரைப்படங்களில் காட்சிப்படுத்தத் தொடங்கியது. 60களின் இறுதியில் தொடங்கிய இந்த அவலப்போக்கு இன்றுவரை மாறவில்லை என்பது பெரிதும் வருந்தத்தக்கது.

தொலைக்காட்சிகள் என்று எடுத்துக்கொண்டால் ஆரம்பத்தில் அரசாங்கத் தொலைக்காட்சிகள் ஒன்றிரண்டு இருந்தவரையில் செய்தி வாசிப்பது, அறிஞர்களைப் பேட்டியெடுப்பது என்ற அளவில்தான் பெண்களின் பங்களிப்பு இருந்துவந்தது. நாளடைவில், தனியார் தொலைக்காட்சிகள் புற்றீசல்கள்போல் புறப்படத் தொடங்கின. அத்தோடு பெரிய திரைக்குப் போட்டியாக அவையும் தொலைக்காட்சித் தொடர்களைப் படைக்கத் தொடங்கின. பெண்களுக்கு இவற்றில் அதிக அளவில் வாய்ப்புகள் வழங்கப்படுவதென்னவோ உண்மைதான். ஆனால் அவை பெண்களைப் பெருமைப்படுத்தும் வகையில் இல்லை. அவர்களை இரக்கமே இல்லாத அரக்கிகளாகவும், நடமாடும் நகைக்கடைகளாகவும், எப்போதும் யாரையாவது பழிவாங்கத் துடிக்கும் கொடூர மனம் படைத்தவர்களாகவுமே காட்டிப் பெண்மையைப் பெரிதும் இழிவுபடுத்தி வருகின்றன.

இவை போதாதென்று விளம்பரத்துறை என்றொரு துறை இருக்கின்றது. அத்துறைக்கு, ஆண்களுக்கான சிகரெட், உள்ளாடை, ஆணுறை விளம்பரங்களுக்குக் கூட அரைகுறை ஆடையணிந்த பெண்களே விளம்பர மாடல்களாகத் தேவைப்படுகிறார்கள்.

இப்படியாக சின்ன திரை, பெரிய திரை, விளம்பரத்துறை மூன்றுமே பெண்களைப் போட்டி போட்டுக்கொண்டு கேவலப்படுத்துவதைத் தவிரப் பெரிதாக எதையும் செய்துவிடவில்லை.

ஆண்களின் ஆதிக்கத்தில் அகப்பட்டு மூச்சுத் திணறிக்கொண்டிருந்த மற்றொரு துறை மேடைப்பேச்சுத் துறை.  அத்துறையிலும் பெண்கள் மெதுவாய் நுழைந்து அரங்குகளை அணிசெய்யத் தொடங்கினர். புலவர் காந்திமதி, இளம்பிறை மணிமாறன், சாரதா நம்பிஆரூரன், இராம. சௌந்தரவல்லி, சரஸ்வதி இராமநாதன், சௌந்தரா கைலாசம் என்று நீளும் நாவரசிகளின் பட்டியலில் சமீப காலங்களில் பாரதி பாஸ்கர், வழக்கறிஞர் சுமதி, ஆண்டாள் பிரியதர்சினி, பர்வீன் சுல்தானா, விஜயசுந்தரி, சுமதிஸ்ரீ என்று பல பெண்கள் கேட்டார்ப் பிணிக்கும் வகையில் பேசிவருவது பெண்டிர்க்குப் பெருமை தருவதாகும். ஆனால்…கவியரங்கம், பட்டிமண்டபம் போன்றவற்றில் அரங்கத் தலைமைக்கான நாற்காலிகள் இன்றும் ஆடவர்க்கே அதிகம் ஒதுக்கப்படுவது கண்கூடு.

கல்விகற்ற பெண்கள் இப்போது அரசு மற்றும் தனியார்த்துறைகளில் ஆண்களுக்கு இணையாகப் பணியாற்றத் தொடங்கிவிட்டனர். தம் அன்றாடத் தேவைகளுக்கும் ஆண்களையே சார்ந்துநின்ற இழிநிலை மாறி இன்றைய பெண்களில் பலர் தம் சொந்தக் காலில் நிற்பதும், சொந்த உழைப்பில் சோற்றை உண்பதும் பெரிதும் போற்றுதலுக்குரியது. எனினும் பெண்களை வேலைக்கு வைத்துக்கொண்டு அவர்களின் உழைப்பை வேண்டியமட்டும் சுரண்டும் அலுவலகங்கள், அவர்களின் தகுதிக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற உயர்பதவிகளை உரிய காலத்தில் வழங்குகின்றனவா என்று வினவினால் ’ஆம்’ என்று அழுத்தமாகச் சொல்லமுடியவில்லை.

காரணம், ஆண் பெண் பாலின வேறுபாட்டின் அடிப்படையில் பெண்டிரை மட்டும் மேலெழும்ப விடாமல் தடுத்துநிற்கும் கண்ணாடிக் கூரைகள் (Glass ceiling). இக்கூரைகளைத் தகர்த்தெறிந்தால் மட்டுமே பெண்கள் தம் தகுதிக்கேற்ற பதவி உயர்வையும் ஊதியத்தையும் பெறமுடியும்.

அடுத்ததாக நாம் ஆராயவேண்டியது பணியிடங்கள் பெண்களுக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும் தருகின்ற வகையில் அமைந்திருக்கின்றனவா என்பது.

தாம் கற்ற கல்வியால் தமக்குச் செல்வம் வருகின்றது என்பது பெண்டிர்க்கு மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும் உடன்பணிபுரியும் ஆடவரால் பெண்களில் பலர் சந்திக்கும் பாலியல் தொல்லைகள், அருவருக்கத்தக்க ஆபாசப் பேச்சுக்கள் போன்றவை அவர்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகவும் அலுவலகத்தையே ’விடமென’ வெறுக்க வைப்பதாகவும் அமைந்துவிடுகின்றன. இதனால் கண்ணியமாகவும் ஒழுக்கமாகவும் வாழவேண்டும் எனும் கொள்கையுடைய பெண்கள் மனத்துக்குப் பிடித்த நல்ல வேலையைக்கூட உதறிவிட்டு ஓடவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்!

இடைக்காலத்தில் பெண்டிர் கல்வி மறுக்கப்பட்டு, சிந்தனை முடக்கப்பட்டு, வீட்டுக்குள்ளேயே அடைக்கப்பட்டு நுகர்பொருளாகவே நோக்கப்பட்டார்கள் என்றால் ஆண்களுக்கு நிகராகக் கல்வி கற்கவும் பணிபுரியவும் அவர்கள் அனுமதிக்கப்படும் இன்றைய நவீன காலகட்டத்திலும்கூடப் பண்டமாகவும் தசைப் பிண்டமாகவுமே பெண்களைப் பார்க்கும் ஆண்களின் வக்கிரப் பார்வையிலும் கழிகாமச் செய்கைகளிலும் மாற்றமில்லை என்பது வெறுப்பையும் வேதனையையும் தருகின்றது. உயர் விழுமியங்களை ஒல்லும் வாயெல்லாம் ஓயாதுரைத்த தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வீழ்ச்சியாகவே இதனை நாம் எண்ண வேண்டியிருக்கின்றது.

கடந்த இருபது ஆண்டுகளில் கணினித் துறை அசுரவளர்ச்சி கண்டிருக்கின்றது. அதன்பயனாய்த் தோன்றியிருக்கும் தொழில்நுட்பங்கள் நம்மை வாய்பிளக்க வைக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றான திறன்பேசி (smartphone), நம் உள்ளங்கைக்குள் உலகத்து நிகழ்வுகள் அனைத்தையுமே கொண்டுவந்து தந்துவிடுகின்றது. ஊடகத்துறையின் புதிய அவதாரமாகப் புறப்பட்டிருக்கும் சமூக ஊடகங்கள் (social media), இணையத் தொடர்பு வைத்துள்ள அனைவருமே எழுத்தாளர்களாகவும், புகைப்பட நிபுணர்களாகவும் மாற வழிவகை செய்துவருகின்றது.

நம் சிந்தனைகளை இணையத்தில் இலவசமாகப் பூக்கவைக்க உதவும் வலைப்பூக்கள் (Blogs), முகமறியாரோடும் முகமன்கூறிப் பழகவைக்கும் முகநூல் (Facebook), எண்ணச் சிறகால் வையமெங்கும் வட்டமடித்துப் பறக்கவைக்கும் சிட்டுரை (Twitter), சமூக நிகழ்வுகளை உடனுக்குடன் நெருக்கமான நண்பர்களோடு அலச உதவும் புலனம் (WhatsApp), வண்ணப் புகைப்படங்களைச் சுடச்சுட வெளியிட்டுத் தம் அழகையும் ஆளுமையையும் பறைசாற்றப் பயன்படும் இன்ஸ்டாகிராம் (Instagram) என எத்தனை வகைகளில் மனிதர்களின் வாழ்க்கையை இவ்வசதிகள் வனப்புறச்செய்கின்றன!

எனினும் ஒரு நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பதுபோல் நம்மை வசீகரிக்கும் இத்தொழில்நுட்பங்களுக்குக் கோரமான இன்னொரு முகமும் இருக்கவே செய்கின்றது.

 [தொடரும்]

*****

http://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1011-html-p1011223-23799

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *