அமைதிக்காக …அமைதியாக!!

சத்தியமணி

இலங்கைக்கு இன்று ? இதுபோல் எத்தனையோ அன்று ?
வலக்கைக்குப் புரியும் இடக்கைக்குத் தெரியும் ?
எதுவரை போகும் ? எப்போது முடியும் ?
எத்துணை வருடங்கள்? இன்னும் காக்கவேணும் ?

ஆலயங்களில் வெடி. ஆன்மீகத்தில் பழி.
ஆண்டவர்மேல் கேலி. ஆறாத எகத்தாளம்.
யாரும் கண்டிக்காது எவரையும் மன்னிக்காது
வன்மம் வளர்கிறது….. வஞ்சகம் விளைகிறது.

கேட்டவர்க்குக் கலக்கம். தப்பித்தவர்க்கு நடுக்கம்.
பார்த்தவர்க்குப் பரிதாபம் ….வார்த்தவர்க்கு அனுதாபம்
காயப்பட்டோர்க்கோ மயக்கம், இறந்தவர்க்கோ இழப்பு
அன்புள்ளே அதிர்ச்சி……அகிம்சைக்குத் தளர்ச்சி

வெறிகளாலும் வெறுப்புகளாலும்
காழ்ப்புணர்வுகளாலும் கலவரங்களாலும்
தன்னலங்களாலும் கொடூர வன்மங்களினாலும்
மனிதன் தான் மாய்கிறான்.
மண் தான் புண்ணாகிறது
எத்தனை புதைகுழிகள்
அத்தனை விழுப்புண்கள்.

யாருக்கோ இழப்பில்லை…நமக்குத்தான்
யாருக்கோ துக்கமில்லை…நமக்குத்தான்
யாருக்கோ வலியில்லை..நமக்குத்தான்
யாருக்கோ பழியில்லை..நமக்குத்தான்
யாருக்கோ பாவமில்லை..நமக்குத்தான்
என்று புரியுமோ அன்று தான் விடியும்
அமைதிக்காக … அமைதியாக!!!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க