வாழ்வியல் ஞானி!
பவள சங்கரி
சீனப் பயணி யுவான் சுவாங் நம் இந்தியாவிற்கு வந்த போது, நாட்டு அரசாங்கத்திடமிருந்து எதிர்ப்பு, இயற்கை சீற்றம், வழியில் சாப்பாடு கூட கிடைக்காமல் துவண்ட நிலை இப்படி எத்தனையோ கடும் இன்னல்களைக் கடந்துதான் இந்தியா வந்தார். அப்படி வரும் வழியில் ஒரு முறை சில கொள்ளையர் அவரை சிறை பிடித்தனர். அவர்களுக்கு கொள்ளையில் அதிகமான வருமானம் கிடைத்துவிட்டால், துர்கா தேவிக்கு ஒரு ஆண் மகனை பலி கொடுக்கும் வழமை இருந்திருக்கிறது. அன்று அப்படி அவர்கள் பலி கொடுக்க வேண்டிய தருணத்தில் இளந்துறவியான யுவான் சுவாங்கைக் கண்டிருக்கிறார்கள். அவருடைய அழகையும், அறிவையும், இளமையையும் வைத்து அவர்தான் தங்கள் துர்காதேவிக்கான சிறந்த படையலாக இருக்க முடியும் என்று முடிவு செய்து அவரை இழுத்துச் செல்கிறார்கள். அப்போது அவ்வூர் மக்கள் அவரை விட்டுவிடும்படியும் தங்களில் யாராவது ஒருவரை பலி கொடுத்துக் கொள்ளட்டும் என்று மன்றாடியும் அந்தக் கொள்ளையர் செவி சாய்க்கவில்லை. அவர்கள் யுவான் சுவாங்கை பலி பீடத்தில் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவரோ, எந்த விதமான அதிர்ச்சியோ, அச்சமோ, சலனமோ இல்லாமல் அப்படியே அமைதியாக அமர்ந்திருந்தாராம். அதைக் கண்ட கொள்ளையர்களுக்கு அவரக் கொலை செய்ய மனம் வராமல் விட்டுவிட்டார்களாம்.. துறவு கொடுத்த அந்த அமைதியும், கருணையும், ஆழ்ந்த ஞானமும் அவரை அந்த அளவிற்குப் பக்குவப்படுத்தி வைத்திருந்ததாம். இப்படித்தான் நம் ஊரிலும், பல துறவிகள் மட்டுமல்லாமல், குடும்பத்தில் உள்ள பல பெண்களும் கர்ம யோகிகளாக மிகுந்த பக்குவமான மனம் பெற்றவர்களாகவே உள்ளனர். இந்த விதத்தில் பெரும்பாலான பெண்கள், ஆண்களைக் காட்டிலும் மற்றுமொரு படி உயர்ந்தவராகவே இருப்பது கண்கூடு. அதனாலேயே நம் நாட்டில் இன்றளவிலும் கூட்டுக் குடும்ப முறைகள் கூட சிறந்து விளங்குகிறது என்றால் அது மிகையில்லை.