இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (278)
சக்திசக்திதாசன்
அன்பினியவர்களே !
அன்பான வணக்கங்கள். அதற்குள் ஒருவாரம் பறந்தோடி விட்டதா? காலம் எனும் இந்தக் காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது போலிருக்கிறதே ! எது எப்படியாயினும் இதோ இந்த வாரத்தில் இங்கிலாந்தின் செய்திகளோடு உங்களுடன் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.
வாரம் வந்து போன வேகம் போல எம்மிடையே ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் ஜனாதிபதி திரு டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் எம்மிடையே வந்து விட்டு சென்று விட்டார். அவர் அமெரிக்க ஜனாதிபதி ஆனதும் முதல் வெளிநாட்டுத் தலைவர் அவரைச் சந்திக்கச் சென்றது இங்கிலாந்துப் பிரதமர் திருமதி தெரேசா மே அவர்கள். அப்போதே இங்கிலாந்துக்கு வருமாறு அவருக்கு தெரேசா மே அழைப்பு விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்தில் பலமுனைகளில் இருந்து அவருக்கு எதிரான குரல்கள் கிளம்பின. அதன் எதிரொலியாக அமெரிக்க அதிபர் தான் தற்போது இங்கிலாந்துக்கு விஜயம் செய்யப்போவதில்லை என்று தனது வழமையான ட்வீட்டர் சமூக வலைத்தளத்தின் ஊடாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து “அவர் வருவாரா இல்லை மாட்டாரா?” எனும் வாதம் தொடர்ந்தது. கடந்த ஆண்டு அவர் இவ்வருடம் ஜூலை மாதம் 12ம் திகதி இங்கிலாந்து வருவதாகவும் அது தேசத் தலைவருக்கு அளிக்கப்படும் வரவேற்பாக இல்லாமல் அவர் மேற்கொள்ளும் ஒரு உத்தியோகபூர்வ விஜயமாக அமையும் என்றும் அறிவிக்கப்பட்டது. இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று எண்ணுகிறீர்களா? தேசத்தலைவருக்கு அளிக்கப்படும் விஜயமென்றால் விமானநிலையத்தில் பிரதமரினால் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டு, இங்கிலாந்து மகாராணியாரோடு ஒன்றாக பிரமாண்டமான நகர ஊர்வலமும் அவ்விஜயத்தில் அடங்கும். ஆனால் இவருக்கோ விமான நிலைய வரவேற்பு இங்கிலாந்தின் வர்த்தக அமைச்சரினால் ஆடம்பரம் அதிகமின்றி அளிக்கப்பட்டது.
திரு ட்ரம்ப் அவர்களின் விஜயம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கான காரணங்கள் பல. அவரின் வருகையை எதிர்த்து பல முன்னணிகள், அமைப்புகள் எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்தத் திட்டமிட்டிருந்தன. அத்தோடு ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அடுத்த வருடம் விலகிய பின்னால் வர்த்தக உடன்படிக்கையில் முதலாவதாக எதிர்பார்க்கப்படும் உடன்படிக்கை ஐக்கிய அமெரிக்காவுடன் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு. இதைப்பற்றி நேரத்துக்கு ஒரு கொள்கை பேசும் அமெரிக்க ஜனாதிபதியின் நிலைப்பாட்டை அறிய பல அரசியல் அவதானிகளும், அரசியல்வாதிகளும், மக்களும் ஆவலாக இருந்தார்கள். இங்கிலாந்து விஜயத்தைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ரஷ்ய ஜனாதிபதியை பின்லாந்தில் சந்திக்க இருந்தார். இங்கிலாந்தில் நடந்த நிகழ்வான ரஷ்ய முன்னாள் உளவாளியின் மீதான இரசாயன தாக்குதலுக்கு ரஷ்யாவே பொறுப்பு என்பது இங்கிலாந்தின் நிலைப்பாடு. அத்தோடு அத்தாக்குதலின் எதிரொலியாக இங்கிலாந்துப் பிரஜைகள் இருவர் அதே இரசாயன பொருளினை அறியாமல் கையாண்டதால் ஒருவர் இறந்து மற்றொருவர் தீவிர சிகிச்சைக்குள்ளாகப்பட்டுக் கொண்டிருப்பதற்கும் ரஷ்யாவே காரணம் என்று இங்கிலாந்து குற்றம் சாட்டுகிறது. இவற்றைப்பற்றி அமெரிக்க ஜனாதிபதி தனது ரஷ்ய ஜனாதிபதியுடனான பேச்சு வார்த்தையின் போது குறிப்பிடுவாரா? எனும் கேள்வி இங்கிலாந்தின் கேள்விக்குறியாக இருந்தது.
வந்திறங்கிய அமெரிக்க ஜனாதிபதி வந்ததும் அடித்தாரே ! ஒரு செம அடி எமது பிரதமருக்கு. ஆமாம் ரெக்ஸிட் எனும் பூதத்தை ஒருவாறு ஒரு வலைக்குள் அடக்கி வைத்து வொட்டேன் என்றிருந்த எமது பிரதமருக்கு ஒரு அதிர்ச்சியாக அப்பிரெக்ஸிட்டுக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர் டேவிட் டேவிஸ் பிரதமரின் ப்ரெக்ஸிட் நோக்கிய கொள்கையில் நம்பிக்கையின்றி ராஜினாமா செய்ய, அவரைத் தொடர்ந்து அவரது பாராளுமன்ற உதவியாளரும், அதைத் தொடர்ந்து புரளிகளுக்குப் பெயர்போன வெளியுறவு அமைச்சர் பொரிஸ் ஜான்சனும் இராஜினாமா செய்தார். அமைச்சரவையில் இத்தகைய ஒரு பிரிவு தோன்ற அமெரிக்க அதிபர் அக்குட்டையை மேலும் குழப்பும் முகமாக பிரதமருக்கு எதிராகவும், பொரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாகவும் ஒரு பேட்டியளித்தார். என்னே ஆச்சரியம் அடுத்தநாள் பிரதமருடனான சந்திப்பு முடிந்ததும் அதே அமெரிக்க அதிபர் தான் அளித்த பேட்டியை அப்படியே மறுதளித்தார். அமெரிக்க அதிபரைப் பற்றிய பலரின் அபிப்ராயத்தை அவர் நிரூபித்து விட்டார்.
அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகளை மற்றுமோர் மடலில் ஆராய்வோம். இங்கிலாந்துப் பிரதமர் ஒரு அரசியல் சூறாவளியினூடாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார். நாட்டின் நலனை முன்னிட்டு ப்ரெக்ஸிட் எனும் நிகழ்வின் தாக்கத்தை மட்டுப்படுத்த முயல்கிறார் பிரதமர். பிரதமருக்கு பாராளுமன்றத்தில் இருக்கும் பெரும்பான்மையோ மிகவும் பலவீனமானது. ஒருபுறம் பிரெக்ஸிட் கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என வாதிடும் அவரது கட்சிப் பாராளுமன்றப் பிரதிநிதிகள் ஒருபுறமும், ப்ரெக்ஸிட் கொள்கையை மெதுமையானதாக்க வேண்டும் என வாதிடும் அவரது கட்சிப் பாராளுமன்ற பிரதிநிதிகள் மறுபுறமும் அவரது நிலையை மிகவும் சிக்கலுக்குள்ளாக்கி விட்டார்கள். 17,18ஆம் திகதிகளில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட இரு முக்கிய பிரெக்ஸிட் சம்பந்தமான சட்டமூலங்கள் பத்து வாக்குகளுக்கும் குறைவான பெரும்பான்மையினால் நிறைவேறியது. பெருமூச்சு விட்டார் பிரதமர்.
வந்ததே சந்தது பாருங்கள் பாராளுமன்றத்துக்கான சம்மர் விடுமுறை தப்பி விட்டார் பிரதமர் செப்டெம்பர் மாதம் வரைக்கும், பொறுத்திருந்து பார்ப்போம் அரசியலில் இரண்டு வாரங்களே மிகப்பெரிய சவால் அல்லவா ?
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan