பவள சங்கரி

சைவத் திருமுறை நூல்கள் மொத்தம் 12. அதில் பத்தாம் திருமுறையாக வருவது திருமூலர் எழுதிய திருமந்திரம். 3000 பாடல்களைக் கொண்டது திருமந்திரம். அத்துணையும் நம் வாழ்வியலுக்குத் தேவையான முத்து முத்தான பாடல்கள்! பக்திப்பனுவல் என்ற வகையில் சேர்க்க இயலாத மெய்யியல் ஞானம் அருளும் பதிகங்கள் அனைத்தும். உண்மை நெறியைக் கண்டறியும் தவம் என்றே கூறலாம்!

இதோ ஒரு பானை சோற்றின் ஒரு பருக்கை ……

நெறியைப் படைத்தான்; நெருஞ்சில் படைத்தான்!
நெறியில் வழுவின் நெருஞ்சில் முள்பாயும்!
நெறியில் வழுவாது இயங்கவல் லார்க்கு
நெறியில் நெருஞ்சில்முள் பாயகி லாவே! (திருமந்திரம், 1617)

 

இதுதான் பாதை, இதுதான் பயணம் என்று கொள்கை வகுத்துக்கொண்ட பின்னால் அதில் தொய்வில்லாமல் பயணம் நடத்திவிடு அப்போதுதான் உன் வெற்றி உன்னைச் சேரும் என்ற அறிவியல் தத்துவம் பொருத்தமான ஒன்றுதானே?

ஆனால் செல்லும் பாதையில் தடை இல்லாமல், சிரமம் ஏற்படுத்தாமல் பாதையோரங்களில் மட்டும் விரவிக்கிடந்த அந்த நெருஞ்சில் முட்கள் உன் பாதையிலேயே படரத் தொடங்கி உன் பயணத்திற்குத் தடை விதித்தால் நீ என்ன செய்ய முடியும்? ஒன்று உன் வழியில் விரவிக்கிடக்கும் அந்த முட்புதர்களை நீக்கிவிட்டுக் கொண்டே பண்படுத்தப்பட்ட அந்த பாதையில் உன் பயணத்தைத் தொடர வேண்டும் அல்லது ஒருவேளை பண்படுத்தவே இயலாத பாதை என்று உன் அறிவு உன்னை இடித்துக்கூறினால் இனி பயன்படாத அந்தப் பாதையில் கால விரயம் செய்வதைவிட நெருஞ்சி முட்களால் ஏற்படும் தடைகள் களைய அப்பாதையை விட்டு விலகுவதுதானே அறிவார்ந்த செயல்? இப்படித்தான் நம் முன்னோர்கள், ஆன்றோர்கள், சித்தர் பெருமக்கள் ஆன்மீக அறிவியலை அதீதமாக புகட்டிச் சென்றுள்ளார்கள்! இந்த விதைகளை சரியாக நமக்குள் ஊன்ற முடிந்தால் நம் வாழ்வு பட்டொளி வீசும் என்பதில் ஐயமேது?

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மெய்யியல் ஞானம்!

 1. நெறிகள் நிறைந்த வாழ்வே நம்மை மெய்யியலுக்கு
  இட்டுச்செல்லும். அத்தகைய நெறிதனை புகட்ட
  நம் தமிழில் பல பனுவல்கள் உள்ளன. இதனை
  வளரும் சிறுவர்களுக்கு கற்பிப்பது நமது தலையாய கடமை.தவறினால் நல்ல சமுதாயம் உருவாகாது.
  திருமந்திரத்தின் சிறப்பினை கூறிய ஆசிரியருக்கு
  என் நன்றி
  திருமதி ராதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *