சு. கோதண்டராமன்

கோவில் உண்டியல் காணிக்கைக்குக்
            காசினை எடுக்கையில் அறிவு தடுத்தது
            “பற்பல கோவிலில் உண்டியல் திருட்டு,
            அறங்காவலரால் ஆலயம் சூறை,
            என நிதம் படிக்கிறோம் செய்தித்தாளில்.

            நேரே  நல்லோர்க் கீவாய்” என்றது.

            தீபத்தட்டுடன் குருக்கள் வந்தார்-
            வைரக்கடுக்கன் வகை வகை மோதிரம்
            “இவர்க்கேன் எந்தன் அற்பக்காசு?
            தனிகர்க் களித்தல் தருமம் அல்ல.”

           
            வறுமையின் உருவமாய் வந்தார் பணியாள்
            “ஐயகோ! இவனொரு குடியன் அன்றோ?
            ஆலயப் பணியின் புனிதம் மறந்து
            அறவழி பிறழும் இவனும் வேண்டாம்.”

            வெளியே பலபேர் பிச்சை எடுத்தனர்
            எஃகினைப்போன்ற உடலினைக் கொண்டோர்
            உழைக்கா துண்பதில் தனிச்சுகம் காண்போர்
            “இவர்க்கு ஈந்தால் சோம்பல் வளரும்,
     எனக்கோர் சமூகக் கடமையும் உண்டு.”

தெருவில் இறங்கி நடந்தபோது
எதிரில் சுவரில் இருந்ததிவ் வாசகம்
“கடமையைச் செய்யவே உனக்குளதுரிமை,
பலனை அலசுதல் மாபெரும் மடமை.”

காசினை அங்கே வைத்து நகர்ந்தேன்
கனமிலா மனத்துடன் இல்லம் வந்தேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *