Tag: கே.எஸ்.சுதாகர்

  • பொறி

    -கே.எஸ்.சுதாகர்

    என்னுடைய வீட்டிற்கு ஒவ்வொரு வருடமும் யூன் மாதமளவில் ஒரு எலி தவறாமல் வந்து போகும். யூன் மாதம் இங்கே குளிர் காலம்.

    எலியைப் பற்றி பல எழுத்தாளர்கள் கவிதை கதைகளைப் படைத்திருந்தாலும், சிறுவயதில் படித்த ‘The Pied Piper’ என்ற கதைதான் ஞாபகத்திற்கு வருகின்றது. சங்ககால இலக்கியங்களில் எலியைப்பற்றி யாரும் எழுதியிருக்கின்றார்களோ தெரியவில்லை.

    குட்டி எலி. அதன் உடம்பு நடுவிரல் நீளம் இருக்கும். அவருக்கு எங்கள் வீடு மிகவும் பிடித்திருக்கவேண்டும். நாங்கள் அமைதியாக இருக்கும் தருணங்களில் அவர் சுறுசுறுப்பாகிவிடுவார். வீடு முழுவதும் ஓடித் திரிந்து இம்சை செய்வதுடன் குறுணிக்குறுனிப் புளுக்கைகளை எங்குமே வீசிவிடுவார். அதன் தொல்லையோ தாங்க முடிவதில்லை.

    குளிர் காலம் அதன் இனப்பெருக்க காலம் என்றாலும்கூட – ’ஒரு’ எலி என்ற கணக்கு எனக்கு சந்தேகத்தைக் கொடுத்தது. கடந்த மூன்று வருடங்களாக வந்து போகும் எலி, போன வருஷத்துடன் ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அதுதான் நடக்கவில்லை. இந்த வருடமும் வந்துவிட்டது.

    நேற்று நள்ளிரவு ஒரு சத்தம். மெதுவாக நித்திரையில் இருந்து எழுந்து பார்த்தபோது, ஹோலிற்குள் ஒரு ‘சிப்ஸ் பைக்கற்’ நகர்ந்து கொண்டிருந்தது. ஆளரவம் கேட்டு பாய்ந்து ஓடினார் எலிப்பிள்ளையார்.

    |உங்களுக்கு எப்படித் தெரியும் ஒரு எலிதான் வந்து போகின்றது?| என்று நீங்கள் கேட்கக்கூடும்.

    நான் ஒருபோதும் ஒன்றுக்கு மேற்பட்ட எலிகளை ஒன்றாகக் காணவில்லை என்பதைத் தவிர வேறெந்தச் சான்றுகளையும் என்னால் தரமுடியாது.

    எப்ப கலைத்தாலும் அங்கு இங்கு என்று எங்களைச் சூக்காட்டி கடைசியில் ஹோலிற்குள் இருக்கும் காஸ் ஹீற்றருக்குள் (Heater) போய் ஒளிந்து கொள்ளும். பின்பு அந்தப் பாதையினூடாகத் திரும்பி வருவதில்லை. ஹீற்றருக்குள்ளால் ஏதாவது கள்ளப்பாதை வைத்திருக்க வேண்டும்.

    போன வருடம் ஒருநாள் – தொல்லை தாளாமல் ’அது’ வருவதற்கு சற்று முன்னதாக ஹீற்றரைப் போட்டு நன்றாகச் சூடாக்கிவிட்டுக் காத்திருந்தேன். வெளியே வந்தது. சொல்லி வைத்தால் போல நாங்கள் எல்லாரும் சத்தமிட்டபடியே கதகளி குச்சுப்புடி ஆடினோம். அவர் எமது நிகழ்ச்சியைப் பார்த்து மிரண்டு போகாமல், தான் வகுத்த வழியே ஓடி ஹீற்றருக்குள் நுழைந்தார். பின்னர் தன்னுடைய பாஷையில் ‘ஐயோ’ எனக் கத்தியபடி அங்கேயே சங்கமமாகினார். ஹீற்றர் எலியைச் சரிவர உள்வாங்கியிருந்தால் இந்தமுறை அது வந்திருக்க முடியாது. ஆனால் கரட்டாக யூன் மாதம் வந்து காட்சி தந்தது எமக்கு ஆச்சரியமாக இருந்தது.

    இந்தத் தடவை எலி வந்தால் அயலவருடன் கதைப்பது என்று முடிவு செய்திருந்தேன். வெள்ளை இனத்தவரான டேவிட் வீடு சென்று எனது எலி பற்றிய சந்தேகத்தைக் கேட்டேன். அவர் நாடியில் கை வைத்து, எலி ஒன்று பதுங்கி நிற்பதுபோல நின்றார். தீவிர தேடுதலின் பின்னர், “யெஸ்… கரெக்ட்…. என்னுடைய வீட்டிற்கும் ஒவ்வொரு வருஷமும் எலி ஒன்று தவறாது வந்து போகின்றது” என்ற தனது கண்டுபிடிப்பையும் வெளியிட்டார்.

    அடுத்து வந்த சனி ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லா வேலைகளையும் தள்ளி வைத்துவிட்டு இரண்டு விஷயங்கள் செய்யவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.

    ஒன்று : ஒரு எலியைப் பிடிப்பதற்காக நிறைய எலிப்பொறிகள் வாங்கி வீடு முழுவதும் வைத்துவிட வேண்டும்.

    இரண்டு : செக்யூரிட்டிக் கமராவைப் பார்ப்பது.

    எலிப்பொறி வாங்க பணிங்ஸ் (Bunnings) என்ற கடைக்குச் சென்றேன். குட்டிக் குட்டி எலிப்பொறிகளாக பத்துப்பொறிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும்போது என் கைகளிற்கு மேலால் எலி ஒன்று பறந்தோடியது.

    வீட்டிற்கு வந்து பொறிகளில் சீஸ் வைத்து வரிசையாக அடுக்கி வைத்தேன். செக்யூரிட்டிக் கமராவை ஒருவாரம் பின்னோக்கி நகர்த்திவிட்டு ஒவ்வொரு நிமிடமாகப் பார்க்கத் தொடங்கினேன். வெள்ளிக்கிழமை இரவு மூன்று மணி இருக்கும். ஒரு மனிதர் கையில் ஒரு தூக்குப்பெட்டியுடன் வருகின்றார். வீட்டிற்கு முன்னால் நின்று பெட்டியைத் திறப்பதும் மூடுவதுமாக இருக்கின்றார். அப்படியே ஒவ்வொரு வீடாகச் சென்று எலி விநியோகம் செய்கின்றார். எனது கமராவில் மூன்று வீடுகள் பதிவாகி இருந்தன.

    அப்போது ஏதோவொன்று என் மூளைக்குள் மின்னலென அடித்தது. கடந்த வாரம் என் தபால்பெட்டிக்கு வந்த துண்டுப்பிரசுரங்களை எடுத்து அலசி ஆராய்ந்தேன். ஒரு கவர்ச்சிகரமான விளம்பரம் என் கண்ணில் பட்டது.

    || Be “SPIDER FREE” this winter, 23 areas of your property treated, be 100% delighted or the job is FREE.

         As s “SPECIAL BONUS” we will treat a second pest at a heavily reduced price and a third pest (Mice &

           Rodents) for “FREE”

       Call now Mark (Your Local Pest Control Experts ||

    விளம்பரம் சொன்னது இதுதான். மேலும் விளம்பரதாரரின் ரெலிபோன், முகவரியும் அதில் அடங்கியிருந்தது. அவர்களின் முகவரி எமது வீட்டிற்கு அடுத்த தெருவில் இருந்தது.

    எலி இலவசமா? அதற்கான மருந்து இலவசமா?

    விளம்பரத்தை எடுத்துக் கொண்டு டேவிட் வீடு சென்றேன். வீட்டை விட்டுப் புறம்படும்போதுதான் ஒன்றைக் கவனித்தேன். அடுக்கி வைத்த பத்துப் பொறிகளில் ஒன்றினைக் காணவில்லை. இருவரும் அந்த முகவரி தேடிப் போனோம். அவரின் வீடு பொலிசாரினால் ‘சீல்’ வைக்கப்பட்டிருந்தது.

    வீட்டின் முன்னால் ‘Mark – Pest Control Expert’ என்று ஒரு பலகையில் எழுதி இருந்தது. அதற்குக் கீழே ‘யாரும் உள்ளே போக வேண்டாம்’ என்று ஒரு பேப்பரில் எழுதி ஒட்டி இருந்தது. நாங்கள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு மனிதர் எங்களை நோக்கி வந்தார்.

    Iஇந்த வீட்டு மனிதர் சில பிராணிகளை தந்திரமாக றெயினிங் எல்லாம் குடுத்து வளர்த்து வருகின்றார். இரவில் அவற்றைக் கொண்டு போய் வீடுகளில் விட்டு விடுகின்றார். பகலில் அவற்றிற்கான மருந்துகளை விற்கின்றார். இப்ப சரியான றிச்சன் பீரியட் (Recession period) எண்டதாலை இந்த வேலைகளைச் செய்கின்றார்| என்றார் அந்த மனிதர்.

    Share
  • “சென்றிடுவீர் எட்டுத்திக்கும்” – நூல்விமர்சனம்

    எம்.ஜெயராமசர்மா.

    சென்றிடுவீர் எட்டுத்திக்கும்பல்வேறு காரணங்களால் தமிழர்கள் தமது நாட்டைவிட்டு அன்னிய நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். நாட்டைவிட்டு வாழ்ந்து வந்தபோதிலும் அவர்களில் பலர் தங்களது மொழியை கலாச்சாரத்தை மறக்காமல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சம் எனலாம். அவர்களின் வாழ்க்கை என்னவோ அன்னிய நாட்டிலே அமைந்துவிட்டாலும் கூட அவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இடத்தையோ, அங்கிருக்கும் உறவுகளையோ மறக்காமலும் இருக்கிறார்கள். அவர்களைப்பற்றிய சுகங்கள் துக்கங்கள் எல்லாம் அன்னிய நாட்டில் வாழ்கின்றவர்மனத்தில் ஏதோ ஒரு பக்கத்தில் இருக்கத்தான் செய்கிறது. அந்த எண்ணம் அவர்களைவிட்டு என்றுமே அகலமாட்டாது. இதைத்தான் தொப்புள் கொடி உறவு என்பதா? அல்லது பாசப்பிணைப்பு என்பதா? எப்படியும் எடுத்துக் கொள்ளலாம்தானே!

    இந்தளவு விளக்கம் ஏன் என்று நீங்கள் எண்ணுவது எனக்குப் புரியாமல் இல்லை. ஒரு முக்கிய விஷயத்தை தொட விரும்பியதால்தான் இந்த விளக்கம் எல்லாம். புலம்பெயர் வாழ்க்கையை நடத்தும் திரு கே.எஸ்.சுதாகர் ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’  என்னும் சிறுகதைத்தொகுதியை எங்கள் கைகளிலே தவழ விட்டிருக்கிறார். அந்தத் தொகுதியில் உள்ள கதைகளை வாசிப்பவர்களுக்காகவேதான் இந்தவிளக்கம் சொல்ல நேர்ந்தது.

    பன்னிரெண்டு சிறுகதைகள் கொண்டதே இந்தத்தொகுதி. இதில் இலங்கையைக் களமாகக் கொண்ட கதைகள், இலங்கையையும் அன்னியநாட்டையும் களமாக இணைத்து நிற்கும் கதைகள், அன்னிய நாட்டை மட்டும் களமாகக் கொண்ட கதைகள் என இக்கதைகள் எழுதப் பட்டிருக்கின்றன.

    ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ சிறுகதைத்தொகுதிக்கு ஒரு விமர்சனம் தேவைதானா? என்னுள் எழுந்து நின்ற கேள்வி! நல்ல விஷயத்தை வாசித்தால், நல்ல விஷயத்தைப் பார்த்தால், அதைப்பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவே வேண்டும். சுவையான ஒரு உணவை உண்ணுகின்றோம். அதனைப்பற்றிக் கட்டாயம் நம் கருத்தைச் சொன்னால் குறைந்தா போய்விடுவோம். ஆனால் பலபேர் எந்தவிதமான அவிப்பிராயமும் அற்றவர்களாக இருந்துவிடுவதும் உண்டு. பிடித்தால் பிடித்திருக்கிறது. ஏன் பிடித்திருக்கிறது? என்ன என்ன விதத்தில் சுவையை ஏற்படுத்தித் தந்திருக்கிறது? இதை மனம் திறந்து சொல்லிப் பாருங்கள்! சமைத்தவரும் சந்தோஷப்படுவார். சுவைத்தவர்களும் சுகத்தை அடையலாம்தானே!

    கதைத்தொகுதியைப் பற்றிச்சொல்ல வந்துவிட்டு சாப்பாடுபற்றிச் சொல்லுகிறேன் என்று மனத்துள் நினைக்காதீர்கள்! கதைகளும் எங்களுக்கு நல்ல சுவையான உணவுதானே! “செவிக்கு நல்ல உணவு கிடைத்தால்“ அது மகிழ்ச்சிதானே! அந்த மகிழ்ச்சிதான் என்னுள் எழுந்த விமர்சனம் ஆகும்.

    கே.எஸ்.சுதாகரை விமர்சனம் செய்வதா அல்லது அவரது கதைகளை விமர்சனம் செய்வதா? வள்ளுவரை விமர்சனம் செய்தால் குறளை விமர்சனம் செய்தமாதிரி. குறளை விமர்சனம் செய்தால் வள்ளுவரும் அதில் வந்துவிடுவார். ஆனால் நான் — சுதாகரைப் பற்றியும் சொல்லப்போகிறேன். அவரது கதைகளைப் பற்றியும் சொல்ல ஆசைப்படுகின்றேன். சுதாகர் கலைத்துறை சம்பத்தப்பட்டவர் அல்ல. அவர் படித்தது பொறியியல் துறை. பெரும்பாலும் கலைத்துறை சார்ந்தவர்களே எழுத்துத் துறையில் புகுந்து வெளுத்துக்கட்டுவார்கள். ஆனால் விதிவிலக்கானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சுஜாதாவை தமிழ் எழுத்துலகில் மறந்துவிடமுடியாது. அவர் விஞ்ஞானத்துறையைச் சார்ந்தவர். பேராசிரியர் நந்தி, பேராசிரியர் சிவசேகரம், டாக்டர் இந்திரகுமார், டாக்டர் ஞானசேகரன் இவர்கள் துறை வேறாக இருந்தபோதும் அவர்களும் கலை இலக்கியத்துறையில் தம்மை இணைத்துக் கொண்டவர்களாகவே விளங்குகிறார்கள். இவர்களது வரிசையிலே பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியான சுதாகரும் இணைந்து கொள்கின்றார்.

    சுதாகரை நேரே பார்ப்பார்களுக்கு—இவரா இக்கதைகளை எல்லாம் எழுதியிருப்பார்? என்னும் ஐயம் கூட ஏற்பட்டுவிடும். அந்த அளவுக்கு ஒன்றுமே தெரியாதவர் போல இவரின் தன்மை காணப்படும். அந்த அளவுக்கு அடக்கமானவர். “அடக்கமுடையார் அறிவிலர் என்றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டாம்“ என்பது இவரைப் பார்த்தால் பொருத்தமாக இருக்கும் என்றே தோன்றும்.

    அநேகமான நூல்கள் வரும்பொழுது அதில் இடம்பெறும் ஏதாவது ஒரு விஷயத்தின் பெயரே தலைப்பாகப் போடுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால் சுதாகரின்  ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்னும் பெயரில் எந்தக்கதையையும் நீங்கள் உள்ளே காணவே முடியாது. இது ஒரு வித்தியாசமான சிந்தனை. பொறியியலாளராக இருந்து பொறுமையுடன் நல்ல கதைகளைத் தந்தமைக்கு ஒரு பாராட்டு. புதியமுறையில் தலைப்பைத் தேர்ந்து வைத்தமைக்கு மேலும் ஒரு பாராட்டு.

    சுதாகரின் கதைகளைப்பற்றி விமர்சனம் செய்வதற்கு முன் …. அவரது தமிழ் பற்றியும் அதனை அவர் எவ்வாறு கையாண்டுள்ளார் என்பதைப்பற்றியும் சொல்லியே ஆகவேண்டும். அவர் படித்தது ஆங்கிலத்தில். ஆனால் அவரின் தமிழ்நடையோ நல்லதோர் தமிழ்ப்புலமை கொண்டவரது நடைபோன்று அமைந்திருக்கிறது. இது அவரின் தமிழ் வாசிப்பால்ல வந்ததோ அல்லது அவர் வாழ்ந்த குடும்பச் சூழலாலோ எனத் தெரியாது. இதுவும் அவரின் வெற்றிக்கு ஒரு காரணம் எனலாம்.

    வாசிக்கின்றவர்கள் மனத்தில் அலுப்புத்தட்டாமல் செய்கிறது அவரது தமிழின் போக்கு. சம்பவங்களை அவர் சொல்லும் பொழுது வாசகர்களையும் கூடவே கூட்டிச் சென்று விடுகிறார். அவரின் கதை மாந்தர்கள் அழுதால் நமக்கும் அழுகை வருகிறது. அவர்கள் கோபப்பட்டால் நமக்கும் கோபம் வந்து விடுகிறது. அவர்களது — சிரிப்பு, அவலம், அன்பு, பாசம், பரிவு — எல்லாம் எங்களுடனும் வந்து ஒட்டிக்கொள்கிறது. கதையல்ல … நிஜம் என்னும் ஒரு வித உள்ளுணர்வை ஏற்படுத்திவிடுகிறது. இந்த மாயத்துக்குக் காரணம் சுதாகர் கையாண்ட எழுத்து நடையாகும்.

    கதைக்கு, கவிதைக்குக் கட்டாயம் கற்பனை வேண்டும். ஆனால் கற்பனையே முழுவதும் ஆகிவிட்டால் அந்தக்கதை உயித்துடிப்பு சற்றுக்குறைந்தது போலக்கூட ஆகிவிடலாம். சுதாகரும் கற்பனை வளம் மிக்கவரானாலும் அவரின் கதைகளில் அவரும் வருகின்றார். அவர் அனுபவித்த வாழ்க்கையும் வந்து நிற்பதையும் காணலாம். நடந்த சம்பவங்கள் நல்ல எழுத்தாளின் கற்பனையில் கலக்கும் பொழுது யாவரையும் தன்னுள் ஈர்க்கும் வல்லமையைப் பெற்றுவிடும். அப்படி ஒரு ஈர்ப்பை தனது கதைகள் வாயிலாக சுதாகர் வரச்செய்துள்ளார். இது அவரது எழுத்து ஆளுமையையே காட்டி நிற்கிறது எனலாம்.

    புலம் பெயர்ந்து வருபவர்கள் படும் சோதனையும், வேதனையும், விரக்தியும்… சுதாகரின் கதைகளில் நாம் பார்க்கலாம். புலம்பெயர்வால் … உறவுகளின் இன்பத்திலோ, துன்பத்திலோ, கூடப் பங்கு கொள்ள முடியாதநிலை ஏற்படத்தான் செய்யும். அப்படி ஏற்படும் பொழுது அதற்குள் அகப்பட்டவர் மனம்படும் பாட்டை சுதாகர் காட்டும் பாங்கு அவருக்கே உரித்தான உத்தியாகும்.

    புலம்பெயர்ந்தவர்கள் அந்த நாட்டவரைப்பார்த்து பயப்படுவது இயல்புதானே! அது மட்டுமல்ல அவர்களை முழுவதுமாக நம்பியும் விடுவார்கள். இதனால் அங்குள்ளவர்கள் நேர்மையின் பிறப்பிடம், இருப்பிடம், எனவும் எண்ணியும் விடுகிறார்கள். ஆனால் அவர்களும் நம்மைப்  போன்றவர்கள்தான். நிறத்தால் வேறுபட்டு இருந்தாலும் எல்லாரும் ஒன்றுதான். ஏமாற்றுதல், பணம்பண்ணுதல், பித்தலாட்டம் செய்தல், யாவும் எங்கும் உள்ள இயல்பான குணங்கள்தான். இதனைக் காட்டுகிறது ’விளக்கின் இருள்’ என்னும் முதலாவது கதை. ‘ரியல் எஸ்டேட்‘ வியாபாரம் ஆஸ்திரேலியாவில் கொடிகட்டிப்பறக்கிறது. மக்களை எப்படியெல்லாம் மயக்குமொழி பேசி மடக்க முடியுமோ அப்படியெல்லாம் மடக்கி தமது வலைக்குள் விழப்பண்ணிவிடுவார்கள். வீடுவாங்கியவர்கள் பின்னர் படும் அவஸ்த்தையினை கண்டுகொள்ளவே மாட்டார்கள். வீடு வாங்கிய பகுதிகளில் ஏதாவது விபரீதங்கள் ஏற்பட்டாலும் வியாபாரம் செய்தவர்களோ அல்லது அது சம்பத்தப்பட்ட அதிகாரிகளோக் கூட காணாததுபோலவே இருந்தும் விடுவார்கள். வாங்கிய வீட்டில் இருக்கவும் முடியாமல், அதனை விற்கவும் முடியாமல் வாங்கியவர்கள் படும் வேதனையை நரகவேதனை என்றுதான் எடுக்கவேண்டும். அந்த வேதனையினை வெளிப்படுத்தும் பாங்கில்த்தான் “ விளக்கின் இருள் “ கதை எழுதப்பட்டிருக்கிறது.

    வீடு வாங்கினாலே எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் வீடுவாங்கிய சிலநாளில் …. அங்கு வசிப்பதே பெரிய ஆபத்து என்று வந்தால் எப்படி இருக்கும்? கஷ்டப்பட்டு உழைத்துச் சேமித்த பணத்தை வைத்து வங்கியில் கடன் பட்டு வீடு வாங்கியவர்கள் படும், பட்ட, மனக் குமுறலை — உண்மையின் அடிப்படையில் சொல்லி நிற்கும் கதைதான் “ விளக்கின் இருள் ‘ கதையாகும். என்ன என்ன புதைத்தார்களோ தெரியாது. எப்படி முன்னர் இருந்ததோ தெரியாது. ஆனால் வீடுகளைக் கட்டிக்குவித்து விடுவது நடைமுறையாக இருக்கிறது. அதனை வியாபாரம் செய்கின்றவர்களும் கொஞ்சமேனும் — அதனைக் கருத்தில் கொள்ளாமல் செயல்படுகின்றனர். மாட்டிக்கொள்பவர்கள் வீடுகளை வாங்கியவர்கள்தான்.

    இந்தக்கதை அறிவு பூர்வமான அணுகுமுறை கொண்ட ஒரு கதையாகும். இனிமேல் வீடு வாங்க இருப்பவர்களுக்கு நல்ல ஒரு அறிவுறுத்தலைத் தரும் வகையில் இக்கதை எழுதப்பட்டிருக்கின்றது. மிகச்சிறந்த கதை என இதனை எடுத்துக் கொள்ளலாம். இந்தப் புத்தகத்தின் முதற்கதையாக அதாவது திறவு கோலாக இக்கதையை முதல் வைத்தமைக்குக் கட்டாயம் சுதாகரைப் பாராட்டியே ஆகவேண்டும்.

    பேராதனைப் பல்கலைக்கழகம் படிப்பின் உச்சமாயும் இருக்கும். மற்றும் பலவேளை இடிப்பின் உச்சமாயும் மாறிவிடும். இனத்துவேஷம் கல்விக்குள் நுழையக்கூடாது. நுழைந்துவிட்டால் அது ஒரு புற்று நோய்தான். அன்றும் இருந்தது. இன்றும் அது அங்கு இருக்கிறது.

    பல்கலைக்கழகம் என்றாலே கிண்டலும் கேலியும் மலிந்து காணப்படுவது இயல்பு. அவற்றை “இரண்டு சம்பவங்களில்“ அனுபவித்து சுதாகர் வெளிப்படுத்தி இருகிறார். பல்கலைகழக மாணவர்கள் ஒன்று சேர்ந்தால் பேசும் வார்த்தைகள் கூட வில்லங்கமானதாகவே இருக்கும். அவையெல்லாம் அனுபவமாக பரவிக்கிடக்கிறது. சண்டைக்காரன் கூட சமயத்தில் மாறி உதவிக்கரம் நீட்டுவதும் உண்டு என்பதை மிகவும் நயத்தோடு காட்டியிருப்பதை படிப்பவர்கள் கண்டுகொள்ளலாம். இக்கதையை வாசித்ததும் — முன்பு பல்கலைக்கழகத்தில் இருந்த காலமே படமாக மனத்தில் ஓடியது. தங்களின் அரசியல் ஆதாயத்துக் காக அன்று முதல்  இன்றுவரை படிக்கும் மாணவர்களைப் பகடைக் காயாக்குவது அரசியல் வாதிகளின் ஒரு ராஜதந்திரமாகவே இருந்து வருகிறது. அதனை ”இரு சம்பவங்களில்” சுதாகர் சுட்டிக்காட்டுகின்றார்.

    புலம்பெயர்ந்தவர்களுக்கு வேலை தேடும் படலம் என்பதே ஒரு திருவிளையாடற் படலம்தான். முன் அனுபவம், பின் அனுபவம், உள்ளூர் அனுபவம் என்று வேலை தேடுபவர்களை கதிகலங்கச் செய்துவிடுவார்கள் வேலை கொடுக்கும் நிலையில் உள்ளவர்கள். அதனை அனுபவித்தரால்தான் இப்படி ஒரு கதையை எழுதமுடியும். அந்தக் கதைதான் “இருவேறுபார்வைகள்“.  இந்தக்கதையை நகர்த்திச்செல்லும் பொழுது அதனை நோயாளி ஒருவர் வைத்தியரோடும் வைத்திய நிலையத்தோடும் படும் அவதிகளைத் தொடுத்து–  வேலைக்கான அனுபவத்தை விளக்கிக்காட்டும் பாங்கை ரசிக்காமால் இருக்கவே முடியாது. இது நல்ல ஒரு உத்தியாக அமைகிறது.

    இலங்கையும் புலம்பெயர் பகுதியும் கதைக்களமாக அமையும் கதைதான் “காட்சிப்பிழை”. இடம் மாறினாலும் வயது ஏறினாலும் .. இருக்கும் நிலையில் மாற்றம் வந்தாலும் இயற்கைக் குணம் என்பது மனிதனை விட்டு மாறவே மாட்டாது. அது நல்லதாக இருந்தால் அதனை வரவேற்கலாம். ஆனால் அது ஆணவநிலை ஆனால் எப்படி அனுமதிப்பது? இலங்கையில் இருந்த குணம் எங்கு போனாலும் மாறிவிடவில்லை. தான் என்னும் முனைப்பு சாகும் தறுவாயில்கூட மாறமறுப்பதையும் — அதே நிலையில்த்தான் இளமையும் மாறாது இறுமாப்புடன் நிற்பதையும் இக்கதை காட்டி நிற்கிறது.

    ஒவ்வொருவரும் காணும் காட்சி அவரவர் பிழைகளை அடையாளப்படுத்தியே விடும். அப்படி ஒரு நிலையைத்தான் “காட்சிப்பிழை“ தெரிவிக்கிறது. அதில் வரும் “தெமட்டக்கொட” அங்கிள்கள் இன்னும் நம்மிடையே இருக்கின்றார்கள். அவர்கள் இக்கதையைப் படிக்கட்டும். ஏன் … பாலகிருஷ்ணர்களும் படித்தாலும் நல்லதுதானே!
    இலங்கையின் துயரம் —- எவ்வளவு தூரத்துக்குப் போனாலும் நம்மனதை விட்டு அகலே மாட்டாது. கண்ணீரும், கம்பலையும், கலந்த சோகம்தான் பலரது வாழ்வாகி விட்டது தமிழர் வாழ்வில். அந்தச் சோகத்தைச் சொல்லவே முடியாது என்றாலும் ஒரு துளியை துணிவாக சொல்லிவிடுகிறார் சுதாகர். அதுதான் “ஒர்கடிதத்தின் விலை”. தமிழ்த்தாயின் வேதனை, சோதனை இக்கட்டான சூழ்நிலை … யாவற்றையும் இக்கதை மிகவும் திறம்பட எடுத்துச் சொல்கிறது. வாசித்துப் பாருங்கள்! அழாமல் இருக்கவே மாட்டீர்கள்.

    கண்டபாவனையில் கொண்டைமுடித்தல், கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி பொல்லாச் சிறகை விரித்தாடிய நிலை, இதைப்பற்றி நாம்ள் அறிந்திருப்போம்.இப்படி இருப்பவர்கள் நம்மில் அநேகம் பேர். விடுப்புப் பார்ப்பதும், மற்றவர் எதைச் செய்தாலும் அதற்கு எதிராகப் போட்டி போடுவதும், பின்பு தேவையில்லாமல் மூக்கு உடைபடுவதும்  காணக்கூடிய சம்பவங்களே. இதில் தெரியாதவர்கள் சிக்கல் பல்பட்டாலும் அதை வேறுவிதமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நெருக்கமான குடும்பங்களே ஏட்டிக்குப் போட்டியாக எண்ணம் கொண்டு செயல்பட நினைப்பதும் அந்த நினைப்பால் சிலவேளை அவமானமும், மனக்குமுறலும், வந்து சேருவதையும் … நகைச்சுவையோடு தரும் கதைதான் ’சேர்ப்பிறைஸ் விசிட்’.  கதை முழுவதும் சிரிப்பாய்க் குவிகிறது. இதனை ஒரு நகைச்சுவைக் குறும்படமாக எடுத்தாலும் மிகச்சிறந்த வரவேற்பைப் பெறும்.

    நிர்ப்பந்தம் காரணமாக வெளிநாடுவருபவர்கள் ஒரு வகையினர். வேலையைத் தேடிக்கொண்டு வெளிநாடு வருபவர்கள் மற்றொருவகயினர். நாட்டின் அசாதாரண  நிலையினால் தம்நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடு வந்தவர்கள் தாம் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் தங்களது குடும்பத்தாருடன் படும் சோகவரலாறு சொல்லுந்தரமன்று. அந்தச் சோகவரலாற்றை தனக்கே உரித்தான பாணியில் ஓரளவு உண்மையும் கற்பனையும் கலந்து சொல்லுவதுதான் “பறக்காத பறவைகள்“ எந்த வேலை கிடைத்தாலும் அதனை ஏற்றுச்செய்யும் மனோ நிலை வந்தேயாக வேண்டும் என்று இக்கதையைப் படிப்பவர்கள் அறிந்துகொள்வார்கள்.

    காலநிலை முற்றிலும் மாறுபட்டது. அதனைச் சமாளித்தே ஆகவேண்டும். பேப்பர்  போடுவது தொடக்கம் பாரம் தூக்குவது வரை எதையும் எப்போதும் செய்வதற்குத் தயாரானால்த்தான் தன்னையும் பார்த்துக் குடும்பத்தையும் பார்க்கமுடியும். இதில் ரோஷம், மானம், பார்க்கவே கூடாது. எனது படிப்பென்ன நானிருந்த நிலை என்ன  என்ற எண்ணம் அந்த நேரத்திலும் வந்துவிடவே கூடாது. அப்படி வந்தால் வருமானம் பாடு திண்டாட்டம்தான். அரசாங்கம் கொடுக்கும் உதவிப்பணத்தில் அடங்கி ஒடுங்கிப் போகவேண்டியதுதான். இதுதான் வெளி நாட்டு உண்மை வாழ்க்கை நிலை என்பதை தனக்கே உரித்தான தமிழ்நடையைக் கையாண்டு காட்சிப்படுத்துகின்றார் சுதாகர்.

    வேலைதேடும் படலம், வேலைகிடைத்ததும் அதில் வரும் அடுத்தபடலம், அந்தவேலை கூடநிரந்தரமற்றது என்று ஏங்கவைக்கும் பரிதாபப் படலம், இவற்றுக்கிடையே …..  பிள்ளை பற்றியோ, மனைவி பற்றியோ, ஏன் தன்னைப்பற்றியோ எண்ணமுடியாத ஒரு சிக்கலான நிலை அத்தனையும் சொல்லிநிற்பதுதான்  “பறக்காதபறவைகள்”. ஆசைமகள் அன்போடு கேட்ட பறவை பற்றி சொல்ல மறந்த– சொல்லவே முடியாமல் உருவாகிய இக்கட்டான நிலைதான் இந்தக்கதை. பறக்க முடியாப் பறவைகள் ஆகிவிட்டோம் என்று குடும்பத்தின் தலைவன் சொல்லும் பொழுது கூடவே நாமும் அந்தக்குடும்பத்துக்குள் நுழைந்துவிடுகிறோம்

    வெளிநாட்டில் வாழ்ந்தால் சந்தோஷமாக வாழலாம் என்பதும் ஒருவித கனவுதான். அந்தக்கனவு உண்மையானது அல்ல. இங்கும் பல் உருவங்களில் பிச்சுப்  பிடுங்கல் களும் வரத்தான் செய்யும். பெரும்பாலும் பொருளாதாரம் சம்பந்தப்பட்டதாகவே இந்தச் சச்சரவுகள் ஏற்படுகின்றன. கணவன் வேலைசெய்ய மனைவி வேலை செய்யாது வீட்டில் இருக்கும் பொழுது தேவையற்ற செலவுகள் செய்யக் கணவன் சம்மதியான். மனைவிக்குத் தேவையானது என நினைப்பது கணவனுக்குத் தேவை அற்ற ஒன்றாக கண்ணில்படும். அங்கே வாக்குவாதம் வரும். அது சிலவேளை விஸ்வரூபம் எடுத்தாலும் ஆச்சரியம் அல்ல. அப்படி ஒரு விஸ்வரூபம் எடுத்த நிலையைத்தான் “ ஒருவகை உறவு “ கதை காட்டுகிறது.

    கணவன் மனைவி உறவு இறுக்கமானது. அந்த உறவுகூட பொருளாதாரம் சம்பந்தம் படும் பொழுது எப்படி முறுக்கமாக மாறுகிறது என்பதை அனுபவமாக்கி தரும் கதைதான் “ ஒருவகைஉறவு”. கணவன் மனைவி முறுகல் முற்றி கடைசியில் குடும்பமே இரண்டுபட்டு நிற்கும் நிலையை சுதாகரின் எழுத்து படமாக்கித்தருகிறது. சிவாஜியும் பத்மினியும் போட்டி போட்டு நடித்த பல நல்ல தமிழ்ப்படங்கள் வந்திருக்கின்றன. அதில் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காது பாத்திரமாகவே வாழ்ந்து ( நடிப்பால் ) காட்டியிருப்பார்கள். அப்படித்தான் இந்தக் கதையின் நாயகியும் நாயகனும் சுதாகர் என்னும் கைதேர்ந்த எழுத்தாளரால் உருவாக்கப் பட்டிருக்கிறார்கள். நடைமுறை வாழ்க்கையின் தோற்றம் இப்படித்தான் இருக்கும் என்பதை காட்டி இருக்கும்  இக்கதையும் ஒரு முத்துத்தான். பெரும்பாலான ஆண்களும் பெண்களும் சமயத்தில் இப்படி ஆகிவிடுகிறார்கள் என்பதை மிகவும் அற்புதமாகச் சித்திரித்துள்ளார் சுதாகர் அவர்கள்.

    இலங்கையும் வெளிநாடும் சங்கமிக்கும் சோகக்கதைதான் “அசலும் நகலும்“ இது நடந்து முடிந்த கதையல்ல. இப்போதும் இக்கதை ஈழத்தைப் பொறுத்தவரை தொடர்கிறது என்றுதான்  சொல்ல வேண்டும்.

    வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லாம் இருந்தும் …. பல வேளைகளில் எதுவுமே இல்லாதவர்கள் ஆகியும் விடுவார்கள். ஆனால் வெளிநாட்டில் உள்ள உறவுகளின் நட்புகளும், சுற்றி இருப்போரும் — சோகத்தைக்கூட சுறு சுறுப்பான கேளிக்கையாக்கியும் விடுவார்கள். அதையே நவநாகரிகம் என்று எடுத்தும் கொள்வார்கள். அவர்கள் மத்தியில் எல்லாமே ஒருவித நாடகம்தான். ஆனால் ஊரில் இருப்பவர்களோ பழைய பஞ்சாங்கங்கள் ஆகவே இருந்துவிடுவார்கள். எல்லாமே கானல் நீர்தான் என்பதை “ அசலும் நகலும் “ சொல்கிறது. நன்மைக்கோ தின்மைக்கோ ஊருக்கு வரமுடியாத ஒரு சோகமும் ஊரில் உள்ளவர்கள் அங்குள்ள அசாதாரண சூழலில் சிக்குண்டு சாவிலும் கூட — தனிமைப்படுத்தப்பட்டுத் தத்தளிக்கும் பரிதாபமும் படமாக ஓடுகிறதுதான் “ அசலும் நகலும் “ கதையாகும்.

    கிண்டலும் கேலியுமாக ஆரம்பித்து சீரியசாகி நிற்கும் கதைதான் “கற்றுக் கொள்வதற்கு” கற்றுக்கொள்வதற்கு — என்று தலைப்பு வைத்ததுகூட மிக மிகப் பொருந்தம்தான். சிலரை நாம் சாதாரணமாக எடை போட்டுவிடுவோம். ஆனால் அவர்களோ நம் நினைவுக்கு அப்பால் செயற்படுபவர்களாக இருப்பார்கள் அதைப் பார்க்கும் பொழுது நம்மையே நாம் நம்பமுடியாத ஒரு நிலைக்குள் வந்து நிற்போம். அப்படி ஒரு நிலையைத்தான் இக்கதையில் காண்கின்றோம். பின்தங்கியவர்கள் படிப்பறிவற்றவர்கள், என்று ஒதுக்கிவிட முடியாது. அவர்களும் சில விஷயங்களில் நம்மைவிடத் தீவிரமானவர்களாக இருந்தும் விடுவார்கள். அப்பொழுது நாம் நினைப்போம் … இவர்களிடம்  கற்றுக்கொள்வதற்கு .. நிறைய இருக்கிறது … என்ற உண்மை நிலையாகும். கதைக்களமும், கருப்பொருளும் , புதிதாக இருப்பதால் இந்தக் கதை ஒரு புதுக்கதைதான். ஏனென்றால் நாங்கள் அனைவரும் நல்லபடி “ கற்றுக் கொகோள்வதற்கு”.

    அக்கா என்பவள் குடும்பத்தின் அம்மாதான். அருமையான, அன்பான, பாசமான, பரிவான,பு ரிந்த உணர்வுள்ள, அக்கா வாய்த்தால் –அதைவிட மேலான குடும்பம் இருக்கவே முடியாது. அப்படியான ஒரு அக்காவை தேடிக்கொண்டுவந்து விடுகிறார் சுதாகர்.” எதிர்கொள்ளல்” கதையில்தான் அந்த அக்கா வருகிறார். அக்காவை பன்மையில் சுட்டுவதற்குக் காரணம் அவர் தாயாக, தந்தையாக, உற்றநல்ல  துணையாக வருவதே காரணமாகும்.

    பழனி என்றொரு தமிழ்ப் படம் வந்தது. அதைப்பார்த்தால் அழதாவர்கள் இருக்கவே முடியாது. அதே போல் துலாபாரம் என்றொரு படமும் வந்தது மனத்தை அழவைத்தபடம். அதே போன்ற ஒரு உணர்வுதான் “ எதிர்கொள்ளல் “ கதையை வாசித்ததும் வரும். பாசமிக்க அக்காவும் — பரிதவிக்கும் தம்பியும்– கதிகலங்கி நிற்கும் கணவனும்… நஎம்முடனே வந்துவிடுகிறார்கள். தம்பியாலும் எதிர் கொள்ள முடியவில்லை. அக்காவின் கணவனாலும் எதிர் கொள்ள முடியவில்லை. படிக்கும் எங்களாலும் அந்தச் சோகத்தை எதிர்கொள்ளும் தைரியமும் வரவே இல்லை.

    நாட்டுச்சூழல் வாட்டுவதும், துன்பத்தைக் கூட கிட்ட நின்று பார்க்க முடியாத வெளி நாட்டு வாழ்க்கையின் பரிதாபமும், “ எதிர்கொள்ளல்” கதையிலே சங்கமிக்கிறது. அதே நேரம் அக்கறையான செய்தி ஒன்றையும் இக்கதை வாயிலாக நமக்கெல்லாம் சொல்லி நிற்கிறார் சுதாகர். தம்பியும் அழுகிறான். அத்தானும் கலங்குகிறார். வாசிக்கும் நாம் எம்மாத்திரம். நாங்களும் கண்கலங்குகின்றேம். அப்படி ஒரு உருக்கத்தைக் காட்டுவதுதான் “எதிர்கொள்ளல்” கதையின் சிறப்பாகும்.

    இந்தக் கதைத் தொகுப்பில் நிறைவாக இருக்கும் கதைதான் “புதியவருகை”. வெளி நாட்டில்  நடக்கும் பிரசவம் பற்றி இவ்வளவு சுவையாகவும் விஸ்த்தாரமாகவும் எப்படித்தான் சுதாகரால் சொல்ல முடிந்ததோ என நினைக்கையில் பிரமிப்பே ஏற்படுகிறது. ஒரு மருத்துவரோ அல்லது  மகப்பேற்றுத் தாதியோ சொல்லுவது போல இந்தக் கதையின் போக்கு செல்கிறது. ஒரு பிரசவத்தைப் பார்த்த உணர்வுதான் ஏற்படுகிறது. குழந்தை பற்றியும், பிரசவம் பற்றியும் உள்ள கருத்து நிலையும் சூசமாகச் சொல்லப் படுகிறது. கதையோடு நாங்களும் போகிறோம். பிள்ளைகள் பற்றியும், குடும்பம் பற்றியும் ஒப்பீடும் நடத்தப்படுகிறது.

    ஒரு புதுக்கரு இக்கதையில் உருவாகி நிற்கிறது. ஏனென்றால் இது பிரசவம் பற்றிய நோக்குத்தானே! வெள்ளைக்கார மாது ஒரு நல்ல பாத்திரம். அந்தப்பாத்திரம் கதையோடு ஓடிவரும் விதம் சுதாகரின் நகாசுவேலை என்றுதான் சொல்ல வேண்டும். வெள்ளைக்கார மாது இந்தக்கதையில் ஏன் என்று எண்ணும் பொழுது … அந்த மாதுதான் கதையை நிறைவு செய்யும் கைங்கரியத்தில் பங்கேற்கிறார் என்பதும் புலப்படுகிறது.

    புதுக்கரு. புதுக்கதை. புதிய முடிவு. இதுதான் “புதிய வருகை” பன்னிரெண்டு முத்துக்களைக் கொண்டு கோர்க்கப்பட்ட அழகிய — இலக்கியம் என்னும் ஆரம்தான் சுதாகரின் “சென்றிடுவீர் எட்டுத்திக்கும் “ என்ற கதைத் தொகுதியாகும். பன்னிரெண்டும் பலவற்றை சொல்லி நிற்கின்றன.

    இலக்கியம் படைப்பது என்பது ஒரு பிரசவம்தான். கருவைச் சுமப்பதும், அதனை நல்ல முறையில் பெற்றெடுப்பதும் சாதாரண காரியமல்ல. அப்படியொரு பிரசவம்தான் இக்கதைத் தொகுதியும். கருவைச் சுமந்து அதை நல்லமுறையில் காத்து அழகிய பிள்ளையாக அனைவருக்கும் விரும்பக் கூடிய பிள்ளையாகத் தந்த சுதாகரை மனமாரப் பாராட்டியே ஆகவேண்டும்.

    அவசரம், அவசரம், எதற்குமே நேரம் போதவில்லை என்ற நிலையில் உள்ள சூழலில் பொறுமையாக பொருள்பொதிந்த கதைகளை எப்படித்தான் இவரால் எழுதமுடிந்ததோ என்பதே ஆச்சரியம்தான் என்றாலும் கிடைத்த நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தி நல்ல கதைகளை தந்த எழுத்து மன்னன் சுதாகரை வாழ்த்துகிறேன். அவர் இன்னும் இது போன்ற பல நல்ல படைப்புகளைப் படைக்கவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி மீண்டும் எனது மனம் உவந்த வாழ்த்துக்களைக் கூறி நிறைவு செய்கின்றேன்

    Share
  • வடு

    கே.எஸ்.சுதாகர்

    சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, தற்செயலாகத்தான் அவரைக் கண்டேன். தன்னந் தனியாக ஒரு மேசையில் அமர்ந்திருந்தார். வழுக்கைத் தலை, வெள்ளை வெளேரென்ற ஆடைக்குள் புதைந்திருக்கும் தளர்ந்த உடல். முகத்தில்கூட சுருக்கங்கள் விழுந்து விட்டன. மூக்குக் கண்ணாடியினூடாக மேசையை உற்றுப் பார்த்தபடி இருந்தார்.

    அவரை எங்கேயோ பார்த்திருப்பதாக மனம் சொன்னது.

    வர்ண ஜால விளக்குகளின்கீழ், வட்ட வட்ட ரேபிள்களில், ஆண்களும் பெண்களுமாகச் சுற்றிச் சூழ இருந்து உணவருந்தும் அந்த ரம்மியமான காட்சியிலிருந்து அவரது ரேபிள் வேறுபட்டுக் காணப்பட்டது. அவர் ஏன் அப்படித் தனித்துப் போனார்?

    “அட தயாளன்! என்ன அவரையே உற்றுப் பார்த்தபடி இருக்கிறாய்? ஆர் எண்டு தெரியுதா?” என்றபடி குணசேகரன் என்னை நோக்கி வந்தான். குணசேகரன் மணப்பெண்ணின் அண்ணன். என்னுடன் பாடசாலையில் ஒன்றாகப் படித்தவன். அவனுக்காகத்தான் நான் கடல் கடந்து, அவுஸ்திரேலியாவில் இருந்து இங்கே வந்திருக்கின்றேன்.

    “எங்கட இரத்தினசிங்கம் மாஸ்ரடா!”

    இரத்தினசிங்கம் மாஸ்டர்!

    ஒரு காலத்தில் எப்படிக் கொடிகட்டிப் பறந்தவர். அந்த ஒரு சம்பவத்தின் பின்பு, எல்லோருக்கும் வேண்டாதவராகிப் போய் விட்டார்.

    “பூச்சி இருந்திருந்தானெண்டா – இப்ப எங்களைப் போல – குழந்தை குட்டியளோடை நல்லா இருந்திருப்பான். என்ன குணம்?”

    “நடந்து முடிஞ்சதுகளைப் பற்றிக் கதைச்சு இனிப் பிரயோசனம் இல்லை. நீ வடிவாச் சாப்பிடு தயாளன். சாப்பிட்ட பிறகு ஒருக்கா மாஸ்டரோடையும் போய்க் கதை!” மறப்பதும் மன்னிப்பதும் மனிதகுணம் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டு அடுத்த ரேபிளுக்குத் தாவினான் குணசேகரன்.

    ********  *********  ********

    அப்பொழுது நாங்கள் நாலாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தோம். இரத்தினசிங்கம் மாஸ்டர் பாடசாலையில் மிகவும் பொல்லாதவர். எங்களுக்கு சமூகக்கல்வி பாடம் படிப்பிப்பார். அவர் மூக்குப்பொடி போடும் காட்சி பார்ப்பதற்கு மிகவும் பயமாக இருக்கும். இரண்டு மூக்கின் துவாரங்களையும் அகல விரித்து ‘ம்’ என்று ஒரே இழுவையாக பொடியை உள்ளே இழுப்பார். பன்றியள் மூக்கை விரித்தால் போல் இரண்டு கறுப்பு வட்டங்கள் விரிந்து சுருங்கும்.

    இரத்தினசிங்கம் மாஸ்டரின் வாயிலிருந்து நல்ல வார்த்தைகள் வருவது மிகவும் அருமை. அநேகமாக அவரின் எல்லா வகுப்புகளின் போதும் பயந்தபடியே காலத்தைக் கழித்தோம்.

    பள்ளிக்கூடத்தின் ஒருபக்க வேலியை மருவியபடி இருக்கும் பாதையில் இருந்துதான் பூச்சி வருவான். அவனும் அவனது நான்கு சகோதரர்களும் வயதுக்கேற்ற உருவங்களில் ஏழ்மையின் அவலம் தெரிய அணிவகுத்து வருவார்கள். சிலவேளைகளில் அவர்களுடன் தந்தையாரும் சைக்கிளை உருட்டிக் கொண்டு கூட வருவார். சைக்கிள் கரியரில் மண்வெட்டி, புல்லு செதுக்கும் உழவாரம், கடகம் என்பவை ஒய்யாரமாக வீற்றிருக்கும்.

    செல்வகுமாரனுக்கு ‘பூச்சி’ என்பது காரணப்பெயர். எந்த நேரமும் சதா புத்தகமும் கையுமாகவே இருப்பான். அதனாலொன்றும் அவன் படிப்பில் படு சுட்டி அல்ல. ‘லஞ்’ இடைவேளையின் போது கூட புத்தகத்துடனே இருப்பான். அல்லாவிட்டால் மேசை மீது குனிந்து படுத்து விடுவான். விளையாட்டில் நாட்டமில்லாத கலகலப்பற்ற சோம்பேறி.

    ஒருமுறை மேசைமீது படுத்திருக்கும் போது, அவனது காதிற்குள் யாரோ ஒரு பூச்சியைப் பிடித்து விட்டுவிட்டார்கள். அலறிக் கொண்டு எழும்பினான் செல்வகுமாரன். “புத்தகப்பூச்சியின்ர காதுக்குள்ளை பூச்சியை விட்டுட்டான்களடா” என்று சத்தமிட்டுக் கொண்டு சிலர் ஓடினார்கள். எங்கள் வகுப்பு ரீச்சர் வந்து நல்லெண்ணெயைக் காதிற்குள் விட்டுப் பார்த்தா. பூச்சி சொல்வழி கேட்கவில்லை. பிறகு உப்புத் தண்ணீர். பூச்சி மெதுவாக வெளியே வந்து மருண்டபடி உலகை எட்டிப் பார்த்தது. ரீச்சர் அதை ஒரே அமுக்காக அமுக்கி நசுக்கிக் கொண்டா. அவன் வேதனையில் துடித்தாலும் அழாமல் இருந்தது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

    இரத்தினசிங்கம் மாஸ்டர், சிலவேளைகளில் காற்றோட்டம் கருதித் தனது படிப்பித்தலை ஒரு மர நிழலின்கீழ் வைத்துக் கொள்ளுவார். மரத்தின் கீழ் ஒரு கதிரையைப் போட்டு ஒரு குறுநில மன்னனாக நடுவில் இருப்பார். சுற்றிச் சூழ மாணவர்கள் ஒரு வட்டப் பாதையில் நிற்க வேண்டும். அவர் தலையில் பறவைகள் எத்தனை தடவைகள் எச்சமிட்டாலும் அவர் அந்த இடத்தை மாற்றமாட்டார். அவருக்கு என்றுமே நிழல். எங்களில் பாதிப்பேருக்கு வெய்யில். மாஸ்டரின் அருகில் நிழல் இருந்தாலும் – அவரின் கொடூரம் உணர்ந்து அந்த வேகாத வெய்யிலில் நிற்பதற்குத்தான் நாங்கள் முண்டியடிப்போம். அவரின் கற்கை நெறியில் ‘கேள்வி’களின் வகிபாகம் மூண்டின் கீழ் நாலு. கேள்விகள் அவரை மையம் கொண்டு, கடிகாரத்தின் திசையிலே அல்லது அதற்கு எதிராகவோ கடுகதி வேகத்தில் புறப்படும். கேள்விகளைவிட அவரது கையிலிருக்கும் பிரம்பு வீரியம் கொண்டது. சிலவேளைகளில் சரியான விடைகளுக்கும் அடி சரமாரியாக விழுந்திருக்கிறது.

    அன்று ஒரு விசித்திரமான கேள்வி. கேட்டுவிட்டு இயற்கை உபாதையைக் கழிக்க மரத்தின் பின்னால் ஒதுங்கினார்.

    “N P K என்றால் என்ன?”

    எல்லாரும் “என் பீ, என்பீ” என்று கே.பி.சுந்தராம்பாள் பாணியில் ராகமிழுத்தார்கள்.

    மாஸ்டர் திரும்பி வந்து கதிரையில் அமரும் போது, குணசேகரன் அவரைப் பார்த்து சிரிப்பது போல அவருக்குப் பட்டது. ஈரம் பட்ட வேட்டியை ஒரு தடவை குனிந்து பார்த்துவிட்டு, “எங்கை குணசேகரா நீ சொல்லு” என்று அவனை நோக்கிப் பிரம்பை நீட்டினார். மாஸ்டர் ஏதோ ஒன்றைத்தான் இப்படிப் ‘பொடி’ வைத்துக் கேட்கிறார் என நினைத்தான் அவன்.

    “வீட்டிலை சேர்!” என்றான் குணசேகரன். மாஸ்டருக்கு ஒன்றும் விளங்கவில்லை.

    “அப்பிடியில்லாட்டி பனை வடலிக்கை சேர்!”

    சிறுத்தை மானைப் பிடிப்பதற்கு பதுங்குவது போல பதுங்கி, பின் துள்ளி எழுந்தார் மாஸ்டர். குணசேகரன் வட்டத்தின் வழியே “இல்லை சேர். இல்லை சேர்” என்று தவளைப்பாய்ச்சல் பாய்ந்து ஓடத் தொடங்கினான். மூன்றாவது ரவுண்டிலே கலைத்துப் பிடித்தார் மாஸ்டர். சற்றே மூச்சை உள்ளே இழுத்துவிட்டுக் கொண்டு கடகடவென்று காலுக்குக் கீழே போட்டுத் தள்ளினார். அவன் ‘ஐயோ ஐயோ’ என்று கத்திக் கொண்டிருக்கும் போது, காத்திராப் பிரகாரமாக அவனது கமக்கட்டினுள் கையை விட்டு அந்தரத்திலே அவனைத் தூக்கினார். ‘ஐயோ ஐயோ’ என்ற சத்தம் பூமியிலிருந்து வானுக்குக் கிழம்பியது. அங்கிருந்தபடியே தொப்பென்று குணசேகரனைக் கீழே போட்டார்.

    “போய் நடுவிலை வெறுங்குண்டியோடை இரு. பாடம் முடியும் வரையும் எழும்பக்கூடாது.”

    குணசேகரன் காற்சட்டையை மெதுவாக நெகிழ்த்தி சுடுமண்ணில் குந்தினான்.

    இந்த அடிகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில்தான் நான் அநேகமாக பெண்பிள்ளைகளுக்குப் பக்கத்தில் நிற்பேன். அதுவும் பாலசுந்தரிக்குக் கிட்ட நின்றால் கேட்கத் தேவையில்லை. அவள் இரத்தினசிங்கம் மாஸ்டருக்கு உறவு. அவளும் நான் பக்கத்தில் நிற்பதைத்தான் விரும்புவாள். சிலவேளைகளிலை நாகநாதனும் போய் நிற்கப் பார்ப்பான். ‘ஓடு’ என்று அவனைக் கலைச்சுப் போட்டு ‘நீ வா’ என்று என்னைத்தான் கூப்பிடுவாள் அவள்.

    இவ்வளவு கலாட்டாவும் நடந்து கொண்டிருக்கும்போது, செல்வகுமாரன் மூச்சிரைக்க – மாடு நுரை தள்ளும் கோலத்தில் – அங்கே வந்து நின்றான். மாஸ்டர் அவனைக் கண்டும் காணாதது மாதிரி முகத்தை திருப்பி வைத்துக் கொண்டார்.

    “சேர் உள்ளே வரலாமோ?”

    “N P K எண்டால் தாவரங்கள் வளருவதற்குத் தேவையான மிக முக்கியமான கனியுப்புக்கள் என்பது அர்த்தமாகும். நைதரசன் பொசுபரசு பொட்டாசியம் என்பவற்றையே அந்த மூன்று எழுத்துகளும் குறிக்கின்றன” மாஸ்டர் விளக்கம் தந்தார்.

    “சேர் உள்ளே வரலாமோ? வரலாமோ சேர்?” விடாமல் சிணுங்கியபடி நின்றான் செல்வகுமாரன்.

    இரத்தினசிங்கம் மாஸ்டரின் காது விரிந்து சுருங்கியது. செல்வகுமாரனின் இடைவிடாத ரீங்காரம் அவரின் காதுகளை இம்சை செய்திருக்க வேண்டும். மூக்குப்பொடியை எடுத்து அதீதமாக உள்ளிழுத்ததில் காது மடலிற்குள் செருகியிருந்த பென்சில் கீழே விழுந்தது.

    “போ! போய் அந்த மண் கும்பானுக்குக் கிட்ட வெய்யிலிலை நில்” கர்ச்சித்தார் சிங்கம். செல்வகுமாரன் தலையைக் குனிந்தபடி போய் மண்மேட்டிற்குக் கிட்ட நின்றான். சூரிய ஒளி நேரே அவன் முகத்தில் விழுந்தது. கண்கள் கூசியது. வெப்பம் அதிகமாக தலை மெல்ல சுற்றுவது போல இருந்தது அவனுக்கு.

    புத்தகத்தை மாணவன் ஒருவன் வாசிக்க, காது குடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தார் மாஸ்டர்.

    ‘ஆ!’ என்றொரு மெல்லிய சத்தம். சுற்றுமுற்றும் பார்த்தான் குணசேகரன். மண் திட்டியில் நின்ற செல்வகுமாரனைக் காணவில்லை.

    “சேர்! செல்வகுமாரன் விழுந்திட்டான் சேர்” கத்திக் கொண்டே காற்சட்டையைத் தூக்கிக் கொண்டு எழும்பினான் குணசேகரன். மண் திடலிற்குப் பின்புறமாக, மண்டை அடிபட விழுந்து கிடந்தான் செல்வகுமாரன். கூரிய கல்லொன்று அவனது தலையைக் குத்திக் கிழித்திருந்தது. மயங்கிப் போன நிலையில் இருந்த அவனைத் தூக்கிக் கொண்டு இரத்தினசிங்கம் மாஸ்டர் ஒஃபீஸ் நோக்கி ஓடினார். அவரது வேட்டி சட்டை எல்லாம் இரத்தமயமாகிக் கிடந்தது. செல்வகுமாரனுடைய தலை கவிழ்ந்து தொங்கியது.

    நாங்கள் செய்வதறியாது திக்கொன்றாய் ஓடினோம்.

    அதிபரின் அறையின் முன்னால் வாங்கொன்றில் அவனைக் கிடத்தியிருந்தார்கள்.

    “ஆராவது கெதியிலை போய் கந்தசாமியின்ரை காரைப் பிடிச்சுக் கொண்டு வாங்கோ. மேற்குப் புற கோயில் வீதியிலை கந்தசாமி நிற்பான்” அதிபர் சத்தம் போடுகின்றார். பாடசாலைக்கு முன்பாக நிறையப் பேர் கூடிவிட்டார்கள். தியாகராஜா மாஸ்டர் சைக்கிளை எடுத்துக் கொண்டு பாடசாலை வளவை விட்டு வெளியேறுகின்றார்.

    “உவர் இனி நத்தை மாதிரி ஊர்ந்து போய் வாறதுக்குள்ளை எல்லாம் முடிஞ்சிடும்.”

    சைக்கிள் பெரலிலை காலை வைச்சுக் கொண்டு கெந்தி ஏறும்போதே தியாகராஜா மாஸ்டர் விழப் பாத்திட்டார். பத்தாம் வகுப்புப் படிக்கும் யோகன் அதிபருடன் கதைத்துவிட்டு, சைக்கிளை எடுத்துக் கொண்டு தியாகராஜா மாஸ்டரையும் உன்னிக் கொண்டு விண்ணெண்று பறக்கின்றான்.

    இருவரும் போய்க்கொண்டிருக்கும் போதே மறுபுறத்திலிருந்து கந்தசாமியின் கார் வந்தது. யாரோ தகவல் குடுத்திருந்தார்கள். கந்தசாமி காரின் பின்புறம் திறந்து, துணிகளை எடுத்துவந்து சீற்றினில் பரப்பினான். இரத்தினசிங்கம் மாஸ்டர் கந்தசாமியின் உதவியுடன் செல்வகுமாரனைத் தூக்கிக் கொண்டு காரின் பின்புறம் ஏறினார். அதிபர் யாருடனோ தொலைபேசியில் கதைத்துவிட்டுக் காருக்குள் ஏறினார். கார் வைத்தியசாலை நோக்கிப் பறந்தது.

    அதன்பிறகு செல்வகுமாரனின் தந்தையும் தாயும் தலையிலடித்துக் குழறியபடி வந்தார்கள். அவர்களின் மற்றப்பிள்ளைகளும் பெற்றவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். பாடசாலை வளவிற்குள் நெடுநேரமாக ஆக்கள் நின்று கதைத்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் எல்லாரையும் வகுப்பறைக்குள் போய் இருக்கும்படி உப அதிபர் சொன்னார்.

    எங்கள் புத்தகம் கொப்பிகள் மரத்தடியில் போட்டபடி கிடந்தன. அவற்றை எடுப்பதற்காக மரத்தடிக்குப் போனேன். மண் திடலிற்குக் கிட்ட பாலசுந்தரி குனிந்து எதையோ பார்த்துக் கொண்டு நின்றாள். அவள் நெஞ்சு விம்மித் தணிகிறது. நான் பின்னாலே சென்று பார்த்தேன். கூரான கல்லில் இரத்தக்கறை படிந்திருந்தது. கல்லுக்குப் பக்கத்தில் உடைந்த மண்டையோட்டின் துண்டு ஒன்றை எறும்புகள் மொய்த்தவண்ணம் இருந்தன. அவள் கண்கள் கலங்கியபடி குந்தியிருந்தாள். ‘வா வகுப்புக்குப் போவம்.’ அவள் அழத் தொடங்கினாள். அவளையும் கூட்டிக் கொண்டு வகுப்பறைக்கு வந்து சேர்ந்தேன். அதன் பிறகு எங்களுக்குப் படிப்பு நடக்கவில்லை.

    மதியம் கழிந்த நிலையில் – அதிபர் ஹொஸ்பிட்டலில் இருந்து பாடசாலைக்குத் தொலைபேசி எடுத்தார். பூச்சி இறந்து போய் விட்டதாக தகவல் சொன்னார். காரில் போகும் போது, இடைவழியில் கண் முழித்து ஒரு தடவை ‘அம்மா’ என்று கூப்பிட்டதாகவும், ஹொஸ்பிட்டல் போய் சேர்வதற்குள் அவன் இறந்து போய் விட்டதாகவும் பேசிக் கொண்டார்கள்.

                                ********  ********  *******

     இரத்தினசிங்கம் மாஸ்டருக்குப் பக்கத்தில் போய் நின்றேன்.

    “சேர்! என்னைத் தெரியுதா சேர்”

    “தம்பியை மட்டுக் கட்டேலாமல் கிடக்கு.”

    “என்ரை பெயர் தயாளன். உங்களிட்டைப் படிச்சனான்.”

    “என்ரை கண் பார்வையும் இப்ப மங்கிப் போச்சு. எந்த ஆண்டு மட்டிலை என்னட்டைப் படிச்சிருப்பீர்?”

    “சேருக்குப் பூச்சியை நினைவிருக்கா? செல்வகுமாரன் எண்டு பெயர். சின்ன வயசிலேயே தவறிப் போனான்.”

    மாஸ்டரின் முகம் சுருங்கிப் போனது.

    “அதடா தம்பி என்ரை வாழ்க்கையிலை நடந்த ஒரு கெட்ட கனவு. அப்படியே மனசில ஆழமாப் பதிஞ்சு கிடக்கு. ஒரு மாறாத வடுப் போல. உம்முடைய பெயர் என்ன சொன்னனீர்? தயாளனோ? இப்படி ஒருக்காக் கொஞ்சம் திரும்பும் பார்ப்போம்.”

    நான் அவரை நோக்கித் திரும்பினேன்.

    “உம். இப்ப தெரியுது” பெருமூச்சு விட்டார் மாஸ்டர்.

    இப்பொழுது எப்படி என்னை அடையாளம் கண்டு கொண்டார்? எனக்கு வியப்பாக இருந்தது.

    “மண்ணிலை பிறக்கேக்கை எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகத்தான் பிறக்கினம் எண்டு சொல்லுவினம். எனக்கு அதிலை நம்பிக்கை இல்லை. ஒரு சிலர் குறைகளோடையும் வந்து பிறந்து விடுகிறார்கள். நான் அடங்காத கோபத்தோடை வந்து பிறந்து விட்டேன். என்னுடைய குடும்பத்திலை என்னைப் போல இப்படியான குணத்தோடை ஒருத்தரும் இல்லையெண்டுதான் சொல்லுகினம். அம்மா கூடச் சொல்லுவா – இந்தச் சண்டாளனைப் போல ஒருத்தரும் எங்கடை பரம்பரையிலை இல்லையெண்டு. ஆனாத் தம்பி, எங்கையோ ஒரு அடி ஆழத்திலை – எங்கட பரம்பரையிலை – என்னைப் போல ஒரு ஆள் இருந்திருக்க வேணும். அது பரம்பரை அலகுகளுக்கூடாக என்னை வந்து சேர்ந்திருக்க வேணும்.

    இப்ப உம்மையே எடுத்துக் கொள்ளுவம். உம்முடைய காதைப் போல – சுளகுக் காதோடை ஆராவது உம்முடைய குடும்பத்திலை இருக்கினமா?”

    பிள்ளையார் காது! சுளகுக்காது!! இதை வைத்துத்தானா என்னை அவர் அடையாளம் கண்டு கொண்டார்!

    “சேர் என்னுடைய அம்மா சொல்லுறவா, என்னுடைய அம்மம்மாவின் தம்பி ஒருவருக்கும் இப்படிக் காது இருந்ததாம்.”

    “பார்த்தீரா தம்பி! மனிதனுடைய உடற்கலங்களிலை இருக்கிற நிறமூர்த்தங்களிலை உள்ள பரம்பரை அலகுகள் செய்யிற வேலையை. எப்பவோ ஒருக்கா அது தன்னுடைய வேலையைக் காட்டிப் போடுது. உடலிலை ஏற்படுகிற இந்தக் குறைபாடு ஒருவருடைய வாழ்நாளிலை மாற்றமடைகிறதில்லை. ஆனா உள்ளத்திலை ஏற்படுகிறது சிலருக்கு காலத்தோடை குறைஞ்சு போய் மறைந்து விடுகிறது” மாஸ்டர் சலித்துக் கொண்டார்.

    என்னுடைய நண்பர்கள் – மாஸ்டரிடம் படித்தவர்கள் ஒவ்வொருவராக வந்து என் பின்னே நிற்கின்றார்கள்.

    “தம்பி தயாளன், என்ரை கழுத்திலை இருக்கிறதை ஒருக்கா தடவிப் பாரும்” சிரித்தபடியே கழுத்தை என் முன்னே நீட்டினார்.

    அவருடைய கழுத்திலே ‘கோல்ஃ போல்’ (Golf ball) அளவிற்கு ஒரு உருண்டை திரண்டு இருந்தது. அது பந்து போல அங்கும் இங்கும் உருண்டு ஓடியது.

    “சேர் இதை ஒப்பரேஷன் செய்யலாமே!”

    “செய்யலாம்தான். செய்தால் செத்துப் போவன். இந்த வயதிலேயே சாகிறதுக்குப் பயப்பிடுகிற எனக்கு, ஒரு பையனைக் கொல்லுறதுற்கு மனம் வருமா? பிள்ளையள் ஒழுங்காகப் படிக்கவேணும் எண்டதுக்காகத்தான் வாத்திமார் அடிக்கிறவை. கோபம் கொள்ளுறவை. என்ரை இரண்டு பிள்ளையளுக்கும்கூட படிப்பிலை கவனம் செலுத்தாத வேளையிலை அடி போட்டிருக்கிறன். என்ன கொஞ்சம் கண் மண் தெரியாமல் அடிச்சுப் போடுவன்.

    என்னவோ விதித்தபடிதான் எல்லாம் நடக்கும். அந்தப் பையனின் பெற்றோர் சகோதரர் நண்பர்களுக்கு இருக்கும் வலி என்னவென்று புரிகிறது. இந்தக் கோபத்தை நிறுத்துகிறதுக்கு நான் நேராத கோயில் இல்லை. செய்யாத வைத்தியமில்லை. யோகா கூட செய்து பாத்தனான். குறைந்ததேயொழிய முற்று முழுதாக என்னை விட்டுப் போகவில்லை. கோபம், வெறி எல்லாம் காலம் என்ற நீட்சியுடன் மூப்பை நோக்கி நகர பரிணாமமடைந்து முற்று முழுதாக மறைந்து விடுகிறது. இப்ப எனக்கு எதுவுமே இல்லை.”

    “சேர் உங்கடை கழுத்திலை இருக்கிற அந்தக் கட்டி எப்பிடி வந்தது சேர்?” பின்னாலே நின்றவர்களில் ஒருவன் கேட்டான்.

    “நல்ல கேள்வி. சொல்லுறன். செல்வகுமாரன் இறந்து ஒரு கிழமை இருக்கும். நான் தெருவாலை போய்க் கொண்டிருக்கேக்கை ஒரு மாணவன் பனை வடலிக்குள்ளை இருந்து எனக்குக் கல்லால் எறிந்தான். அதாலை வந்த காயம் இது. என்னுடைய கோபம் குறையக் குறைய இது பெருத்துக் கொண்டே போகிறது” இரத்தினசிங்கம் மாஸ்டர் புன்முறுவல் செய்கின்றார்.

    எனது நாத் தழுதழுக்கிறது. ஓவென்று அழுது விடுவேனோ என்று பயமாக இருக்கிறது.

    “சேர்! சேர்!!”

    “சொல்லும். சொல்லும் தம்பி.”

    “அந்தக் கல்லை எறிந்தது நான்தான் சேர்!”

    “எனக்கும் தெரியும்!” என்றார் மாஸ்டர் – ஒரு குழந்தையைப் போல.

    Share
  • லப் ரொப் – லப் டப்

    கே.எஸ்.சுதாகர்

    asusசனிக்கிழமை மதியம். சாப்பாடு வாங்குவதற்காக ‘கே.எஸ் ஸ்ரோர்’ போயிருந்தேன். அந்தப் பல்பொருள் அங்காடியில் உணவு வகைகளும் செய்து விற்கின்றார்கள். காரை நிற்பாட்டுவதற்கு ஒரு தரிப்பிடம் தேடிப் போதும் என்றாகிவிட்டது. பொதுவாக சனிக்கிழமை என்றால் எங்கும் சனக்கூட்டம். காரைவிட்டு இறங்கியதும், என் பின்னாலே இரண்டு ஆப்பிரிக்கர்கள் வந்து நின்றார்கள்.

    “லப் ரொப் வேண்டுமா சேர்?” இரண்டு பேருமே ‘ரை’ கட்டிக் கச்சிதமான ஆடைகளுடன் தோற்றமளித்தார்கள். இந்த இடத்தில் இப்படிப்பட்ட வியாபாரம் நடப்பது சகஜம்தான். இரண்டு வாரங்களுக்கு முன்னர் எனது நண்பன் ஒருவன் இதே இடத்தில் ஒரு ’ஐ போன்’ வாங்கியிருந்தான். இன்னமும் அதைப் பற்றியே சொல்லிப் புளுகிக் கொண்டிருப்பான்.

    “எவ்வளவு காசு?”

    “150 டொலர்கள்!”

    பர்ஸ்-ல் 45 லொடர்கள் மாத்திரம் இருந்தன.

    “பாவித்ததா…புதிசா?”

    “பிறாண்ட் நியூ சேர்” சொல்லிக் கொண்டே கையில் வைத்திருந்த பார்சலின் ஒரு நுனியைப் பிரித்து பெட்டியைக் காட்டினான் ஒருவன். பெட்டியில் பளிச்சென ’அசுஸ்’ என்ற எழுத்துகள் தெரிந்தன.

    பார்த்த மாத்திரத்தில் அதை வாங்கிவிட வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. இன்றைய நிலவரப்படி 600 டொலர்கள் தேறும்.

    “இதிலேயே நின்று கொள்ளுங்கள். காசு கொஞ்சம் குறைகின்றது. கடையில் என் நண்பர்கள் வேலை செய்கின்றார்கள். அவர்களிடம் வாங்கி வருகின்றேன்.”

    “நாங்கள் நிற்கமாட்டோம். இது பொலிஸ் நடமாட்டம் உள்ள இடம். நீங்கள் காசுடன் வந்து காருக்குக் கிட்ட நில்லுங்கள். அதன் பின்னர் நாங்கள் வருகின்றோம்” சொல்லிவிட்டு ஓடி ஒளிந்து கொண்டார்கள்.

    கடைக்குச் சென்று சாப்பாட்டிற்கு ஓடர் கொடுத்தேன். சாப்பாட்டிற்கு கிறடிற் கார்ட்டைப் பாவிக்கலாம். 100 டொலரை இரண்டு நண்பர்களிடம் ஐம்பது ஐம்பதாகக் கறந்து கொண்டேன். நண்பர்களுக்கு விஷயத்தைச் சொல்லவில்லை.  கார் நிற்குமிடம் வந்து சுற்றுமுற்றும் உற்று நோக்கினேன். சொன்ன வாக்கைக் காப்பாற்றுபவர்கள் போல இருவரும் வந்து சேர்ந்தார்கள்.

    “ஐந்து டொலர்கள் குறைகின்றன!”

    “அதனாலென்ன பரவாயில்லை. குட் லக்.”

    காசும் பொருளும் இடம் மாறின. எப்பவும் கேட்ட விலையில் இருந்து சிறிதளவாவது குறைத்துக் குடுத்தால்தான் மனதுக்குத் திருப்தி. அந்தத் திருப்தியுடன் காருக்குள் ஏறிக் கதவுகளை லொக் செய்துவிட்டு பார்சலைப் பிரித்தேன். காரின் ஜன்னலைத் தட்டினார்கள். அவர்கள் இந்நேரம் போய்ச் சேர்ந்திருப்பார்கள் என நான் நினைத்திருந்தேன்.

    கண்ணாடியை நீக்கினேன்.

    “இங்கே வைத்துப் பாராதீர்கள். பொலிஸ் உங்களை அப்பிவிடும்” சொல்லிவிட்டு விரைந்து சென்றார்கள். அவர்கள் சொல்வதும் சரிதான்.

    லப் ரொப்பை காரின் பின்னே வைத்துவிட்டு, ஓடர் கொடுத்த சாப்பாட்டைப் போய் எடுத்து வந்தேன். காரை எடுத்துக் கொண்டு வேகமாக வீடு சென்றேன். 600 டொலர் பெறுமதியான லப் ரொப்பை 145இற்கு வாங்கிய மகிழ்ச்சி காரின் வேகத்தில். எவ்வளவு காசிற்கு வாங்கியதாக மனைவி பிள்ளைகளுக்குச் சொல்லலாம்? அவர்களிடம் முதலில் அதன் விலையை உய்த்துணரச் சொல்லவேண்டும். பின்னர் 300 டொலருக்கு வாங்கியதாகச் சொல்லுவோம். அப்பவும் லாபம் தானே! லப் ரொப்பை பார்ப்பதற்கு மனம் துடித்தது. இதயம் ‘லப் டப்’ என அடித்தது.

    பிரதான வீதியில் காரை எங்குமே நிறுத்த முடியாது. பார்க் ஒன்றிற்கு அண்மையாக மரமொன்றின் பக்கமாக நிறுத்திக் கொண்டேன்.

    அவசர அவசரமாக பெட்டியைச் சுற்றியிருந்த பேப்பரைக் கிழித்து எறிந்தேன். அழகான புத்தம் புதிய ‘அசுஸ்’ பெட்டி. பெட்டியைத் திறக்க உள்ளேயிருந்து விழுந்தன இரண்டு ‘செங்கட்டிகள்’.

    இதயம் ஒரு அளவுக் கணக்கின்றி ‘லப் டப்…லப் டப்…’ என அடிக்கத் தொடங்கியது.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    மே 12, 2014

    சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர் …

    இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு

    திரு. கே.எஸ்.சுதாகர் அவர்கள்

    Untitleda

    ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர் திரு. கே.எஸ்.சுதாகர் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக சிறுகதை, கவிதை, கட்டுரை, பத்தி எழுத்து, விமர்சனம் போன்ற துறைகளில் எழுதி வருகின்றார். பொறியியல் பட்டதாரியான இவர் சுருதி, கதிரொளியான் என்னும் புனைபெயர்களிலும் எழுதுவதுண்டு.

    இலங்கை, இந்தியா, மலேஷியா, இங்கிலாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா எனப் பலநாடுகளில் வெளியிடப்படும் பத்திரிக்கைகளிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. குறிப்பாகப் மரத்தடி, திண்ணை, திசைகள், பதிவுகள், கீற்று, ஈழநேசன், வல்லினம், அப்பால் தமிழ், அக்கினிக்குஞ்சு, தமிழ்முரசு, எதுவரை? வல்லமை எனப் பல இணைய தமிழ் மின்னிதழ் தளங்களிலும் இவரது கட்டுரைகளையும் கதைகளையும் இவர் எழுதியதால் தமிழ் இணைய வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்.

    கே.எஸ்.சுதாகரின் சிறுகதைகள் பெரும்பாலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப் பெற்றவை. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், ஞானம் சஞ்சிகை, நார்வே தமிழ்ச்சங்கம், ஈழம் தமிழ்ச்சங்கம் (ஆஸ்திரேலியா), பூபாள ராகங்கள் (இங்கிலாந்து), மரத்தடி இணையம், தென்றல் (அமெரிக்கா), தாய்த் தமிழ்ப்பள்ளி (ஆஸ்திரேலியா), வல்லமை உட்பட மொத்தம் 20 சிறுகதைப்போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். ‘எங்கே போகின்றோம்’ ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்ற சிறுகதைத்தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினரான கே.எஸ்.சுதாகர் தற்போது இந்த அமைப்பின் நிதிச் செயலாளராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

    சென்றவாரம் இவர் வல்லமை வாசகர்களுடன் அவருடைய “அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும்” என்ற சிறந்த கட்டுரை ஒன்றினைப் பகிர்ந்து கொண்டார்.

    அக்கட்டுரையில் கருத்தைக் கவர்ந்த ஒரு சிறு பகுதி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இரு பகுதிகளாக வெளிவந்த இக்கட்டுரையின் சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும் – 1

    அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும் – 2

    ……பண்டைய தமிழர்கள் ஓடித் தப்பிப்பவர்களைப் பிடிப்பதற்கு ‘வளரி’ என்ற ஆயுதத்தைப் பாவித்தார்கள். சங்க கால இலக்கியமாகிய புறநானூற்றுப் பாடலில் (பாடல் எண் 233) வரும் ‘திகிரி’ என்னும் பதம் இந்த ‘வளரி’யையே குறிக்கின்றது.

    பாடல் எண். 233 – பொய்யாய்ப் போக!
    பாடியவர் : வெள்ளெருக்கிலையார்

    “பொய்யா கியரோ! பொய்யா கியரோ!
    பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்
    சீர்கெழு நோன்றாள் அகுதைகண் தோன்றிய
    பொன்புனை திகிரியின் பொய்யா கியரோ!”

    என்று செல்கின்றது அந்தப்பாடல்.

    ‘வளைதடி’ என்று தமிழில் சொல்லப்படும் இந்த ‘வளரி’ என்ற ஆயுதம் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டது. இந்த வளரியைப் போன்று அவுஸ்திரேலியா ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட ஆயுதம் ‘பூமராங்’ (boomerang) ஆகும். எனவே இந்த ஆயுதம் தமிழருக்கும் அவுஸ்திரேலியா ஆதிவாசிகளுக்கும் பொதுவானதாகின்றது. இது ஒருமுனை கனமாகவும் மறுமுனை இலேசாகவும் கூராகவும் ஒரு பிறை வடிவில் மரத்தினால் அல்லது உலோகத்தினால் செய்யப்படுகிறது. இதை ஆதிவாசிகள் ஒரு இலக்கை நோக்கி எறிவார்கள். இலக்கு தவறும் பட்சத்தில் அந்த பூமராங் எறிந்தவரின் கைகளுக்குத் திரும்பி வந்து விடும். இதை ஆதிவாசிகள் வேட்டையாடுவதற்கு உபயோகித்தார்கள்.

    மத்திய அவுஸ்திரேலியாவில் இருந்த பழங்குடிகளின் இனத்தின் பெயர்களாக (Tribes Names) – வாகை (Waagai), சிங்காலி (Chingali), இளம்பிறை (Ilpirra), வால்பாறை (Walpari), அருந்தா (Aruntha) போன்ற பெயர்கள் இருப்பதைக் காணலாம். Alice Springs போன்ற இடங்களில், சிறுசிறு குழுக்களாக பரந்த அளவில் ‘அருந்தா’ இனக்குழுவினர் உள்ளனர். மேலும் இவர்கள் விலங்குகள், மரங்களின் பெயர்களைக் கொண்டும் வகைப்படுத்தப்படுகின்றனர். ஏமு மனிதன் (Emu man), கங்காரு மனிதர்கள் (Kangaroo men), பிளம் மர மக்கள் (‘Plum tree’ people) போன்றவறை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

    பழங்குடி மக்களின் பெரும்பாலான உரையாடல்களில் தமிழின் உச்சரிப்பைக் காணலாம். ‘Ten Canoes’ என்ற அவுஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட அபரிஜினல் மக்களைப் பற்றிய படத்தைப் பார்க்கும்போது உங்களுக்கும் இந்த அனுபவம் ஏற்படலாம். அவர்கள் பாவிக்கும் சில சொற்களிற்கும் தமிழ்ச் சொற்களுக்கும் ஒற்றுமைகள் இருப்பதைக் காணலாம்.

    சிட்னியில் ‘விண்மலே’, ‘காக்காடு’ என இரு இடங்கள் இருக்கின்றன. ஆகாயமும் (விண்) மலையும் ஒட்டி நிற்பதைப் போல இருக்கும் அந்த அற்புதமான இடத்திற்கு winmalle (விண்மலை) என்று பெயர். ‘கா’ என்றால் சோலை, காடு என்றால் வனம். உண்மையிலே சோலைவனம் போல ஏராளமானவர்களைக் கவர்ந்திழுக்கும் அந்த இடத்திற்கு kakadu என்று பெயர் வழங்குகின்றது. மேற்கு அவுஸ்திரேலியாவில் மதுர (Madura) என்று இன்னொரு இடம் இருக்கின்றது. இன்னொரு ஆதிவாசி இனம் அதிகம் பாவிக்கும் சொற்றொடர் ‘பூனங்கா யிங்கவா’. அதன் அர்த்தம் ‘பெண்ணே இங்கே வா’. ‘பூ நங்கையே இங்கே வா’ என்பதியே அவர்கள் இப்படிச் சொல்கின்றார்கள்.

    ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட மனிதர்கள் தெற்குப்பக்க கடற்கரை வழியாக வந்து இந்தியாவினூடாக அவுஸ்திரேலியாவை அடைந்திருக்கக்கூடும் என்று ஒரு பொதுவான கருத்து நிலவுகின்றது. இந்தக்கருத்தை இந்தியாவிலுள்ள Dr Raghavendra Rao என்பவருடைய ஆய்வு உறுதி செய்கின்றது. இவரது குழுவின் மனிதவர்க்கசாஸ்திர ஆய்வின்படி (Anthropological Survey), திராவிடப்பழங்குடிமக்களிற்கும் தற்போதைய அபரிஜினல் இனத்தவருக்கும் பொதுவான DNA மரபணு மூலக்கூறுகளைக் கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. இவர்களின் கருத்துப்படி 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் அபோர்ஜினமக்கள் தென்னிந்தியா வழியாக அவுஸ்திரேலியாவிற்கு வந்து குடியேறியதாகவும், தற்போதைய அபரிஜினமக்களுக்கும் இந்தியக்குடிமக்களுக்கும் பொதுவான முன்னோர்கள் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்கள்……..

    தமிழர்களின் பரவலுக்கு சான்றாக அமையக்கூடிய கருத்துக்களை தனது கட்டுரையின் வழியாகப் பகிர்ந்து கொண்ட திரு. கே.எஸ்.சுதாகர் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    **************************************************************************************

    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!

    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட

    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    Share
  • அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும் – 2

    – கே.எஸ்.சுதாகர்

    தமிழ்மொழியின் காலத்துக்கு சாட்சியாக தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள் (கிறிஸ்துவுக்கு முன் 31 ஆண்டு) போன்ற நூல்கள் உள்ளன.

    |பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
    குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள|
    – சிலப்பதிகாரம் (மதுரைக்காண்டம்)

    இந்தப்பாடலின் மூலம் இன்றைய கன்னியாகுமரிக்குத் தெற்கே பஃ றுளி ஆறும், பல மலைத்தொடர்களும், குமரிமலையும் கடலில் மூழ்கியது உறுதியாகின்றது. இங்கேதான் பாண்டியர் தலைநகரான மதுரை (இன்றிருக்கும் மதுரை வேறு) இருந்துள்ளது. இங்கேதான் முதற்சங்கம் இருந்தது. இந்த மதுரையும் கடற்கோளால் அழிந்தபின், கிழக்குக் கரையோரத்தில் இருந்த கபாடபுரம் பாண்டியரின் தலைநகராகியது. இங்கு இடைச்சங்கம் (இரண்டாம் தமிழ்ச்சங்கம்) உருவானது. இலக்கியங்கள் தோன்றின. பின்னர் இதுவும் அழிந்தபின்னர் கடலே இல்லாத வைகை நதிக்கரை மதுரை பாண்டியரின் தலைநகராகியது. கடைச்சங்கம் நிறுவப்பட்டது.

    இந்துமாகடலை ஆய்வு செய்த ரஷ்யவிஞ்ஞானிகள் (Prof Bezrucov) வெளியிட்ட அறிக்கையில் ஆதிமனிதனின் பிறப்பிடமாகக் குமரிக்கண்டம் (Lemuria) இருக்கலாம் என்கின்றனர். Ice Age காலத்தில் கடல்மட்டம் 500 – 600 அடி தாழ்ந்திருந்தன. அப்போது ஜாவா, சுமாத்ரா ஆகிய நிலப்பரப்புகளும் நியூகினித்தீவுகளும் அவுஸ்திரேலியாவின் வடபகுதி நிலப்பரப்புகளும் மெல்லிய அளவில் இணைந்திருந்தன.

    Pic 2 - lemuriya 4Pic 1 - lemuriya 1உலகின் தொன்மையான தமிழினத்திற்கும், அவுஸ்திரேலிய அபரிஜினல் இனத்திற்குமிடையே பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அபரிஜினல் இனமக்களின் மொழி, கலாசாரம், பண்பாடு என்பவற்றுடன் உருவ அமைப்பும்கூட தமிழரோடு ஒப்புவமையாக உள்ளது. இந்தியாவின் குமரிக்கண்டம் கடலில் மூழ்கியபோது அங்கிருந்த தமிழினமக்கள் கிழக்கே அவுஸ்திரேலியாவிற்கும், மேற்கே ஆப்பிரிக்காவிற்கும் பரவினார்கள் என்பது செய்தி.

    அவுஸ்திரேலியாவில் இப்போதும் கூட களரி ஆட்டம் எனப்படும் நடனம் உள்ளது. பழங்குடிகள் பலவகையான நடனங்களை ஆடுகின்றார்கள். நெற்றியிலே ஒரு கண்ணை வரைந்து கொண்டு, இவர்கள் ஆடும் அந்த ஆட்டத்திற்கு ‘சிவா நடனம்’ (Shiva Dance) என்று பெயர். உடல் எங்கும் மூன்று கோடுகளாக வெள்ளை வர்ணத்தைப் பூசிக்கொள்கின்றார்கள். நெற்றியிலே மாத்திரம் கிடையாகப் பூசிக்கொள்கின்றனர். Spencer, Killan என்பவர்கள் எழுதியுள்ள The Native Tribes of Central Australia (Dover Publications, Inc., New York, 1968) என்ற புத்தகத்தில் இதற்கானபுகைப்படங்கள் ஆதாரமாக (படங்கள் 128, 129 / பக்கங்கள் 621, 622) உள்ளன.

    pic 9பண்டைய தமிழர்கள் ஓடித் தப்பிப்பவர்களைப் பிடிப்பதற்கு ‘வளரி’ என்ற ஆயுதத்தைப் பாவித்தார்கள். சங்க கால இலக்கியமாகிய புறநானூற்றுப் பாடலில் (பாடல் எண் 233) வரும் ‘திகிரி’ என்னும் பதம் இந்த ‘வளரி’யையே குறிக்கின்றது.

    பாடல் எண். 233 – பொய்யாய்ப் போக!
    பாடியவர் : வெள்ளெருக்கிலையார்

    ” பொய்யா கியரோ! பொய்யா கியரோ!
    பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்
    சீர்கெழு நோன்றாள் அகுதைகண் தோன்றிய
    பொன்புனை திகிரியின் பொய்யா கியரோ!”

    என்று செல்கின்றது அந்தப்பாடல்.

    ‘வளைதடி’ என்று தமிழில் சொல்லப்படும் இந்த ‘வளரி’ என்ற ஆயுதம் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டது. இந்த வளரியைப் போன்று அவுஸ்திரேலியா ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட ஆயுதம் ‘பூமராங்’ (boomerang) ஆகும். எனவே இந்த ஆயுதம் தமிழருக்கும் அவுஸ்திரேலியா ஆதிவாசிகளுக்கும் பொதுவானதாகின்றது. இது ஒருமுனை கனமாகவும் மறுமுனை இலேசாகவும் கூராகவும் ஒரு பிறை வடிவில் மரத்தினால் அல்லது உலோகத்தினால் செய்யப்படுகிறது. இதை ஆதிவாசிகள் ஒரு இலக்கை நோக்கி எறிவார்கள். இலக்கு தவறும் பட்சத்தில் அந்த பூமராங் எறிந்தவரின் கைகளுக்குத் திரும்பி வந்து விடும். இதை ஆதிவாசிகள் வேட்டையாடுவதற்கு உபயோகித்தார்கள்.

    மத்திய அவுஸ்திரேலியாவில் இருந்த பழங்குடிகளின் பரம்பலைக் கீழேயுள்ள படத்தில் காணலாம். இந்த இனத்தின் பெயர்களாக (Tribes Names) – வாகை (Waagai), சிங்காலி (Chingali), இளம்பிறை (Ilpirra), வால்பாறை (Walpari), அருந்தா (Aruntha) போன்ற பெயர்கள் இருப்பதைக் காணலாம். Alice Springs போன்ற இடங்களில், சிறுசிறு குழுக்களாக பரந்தளவில் ‘அருந்தா’ இனக்குழுவினர் உள்ளனர். மேலும் இவர்கள் விலங்குகள், மரங்களின் பெயர்களைக் கொண்டும் வகைப்படுத்தப்படுகின்றனர். ஏமு மனிதன் (Emu man), கங்காரு மனிதர்கள் (Kangaroo men), பிளம் மர மக்கள் (‘Plum tree’ people) போன்றவறை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

    Pic 3 - The native tribes of Central Australiapic 4

    pic 5pic 6

    pic 7pic 8

    பழங்குடி மக்களின் பெரும்பாலான உரையாடல்களில் தமிழின் உச்சரிப்பைக் காணலாம். ‘Ten Canoes’ என்ற அவுஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட அபரிஜினல் மக்களைப் பற்றிய படத்தைப் பார்க்கும்போது உங்களுக்கும் இந்த அனுபவம் ஏற்படலாம். அவர்கள் பாவிக்கும் சில சொற்களிற்கும் தமிழ்ச் சொற்களுக்கும் ஒற்றுமைகள் இருப்பதைக் காணலாம் ( * பின்னிணைப்பு 1 ).

    சிட்னியில் ‘விண்மலே’, ‘காக்காடு’ என இரு இடங்கள் இருக்கின்றன. ஆகாயமும் (விண்) மலையும் ஒட்டி நிற்பதைப் போல இருக்கும் அந்த அற்புதமான இடத்திற்கு winmalle (விண்மலை) என்று பெயர். ‘கா’ என்றால் சோலை, காடு என்றால் வனம். உண்மையிலே சோலைவனம் போல ஏராளமானவர்களைக் கவர்ந்திழுக்கும் அந்த இடத்திற்கு kakadu என்று பெயர் வழங்குகின்றது. மேற்கு அவுஸ்திரேலியாவில் மதுர (Madura) என்று இன்னொரு இடம் இருக்கின்றது. இன்னொரு ஆதிவாசி இனம் அதிகம் பாவிக்கும் சொற்றொடர் ‘பூனங்கா யிங்கவா’. அதன் அர்த்தம் ‘பெண்ணே இங்கே வா’. ‘பூ நங்கையே இங்கே வா’ என்பதியே அவர்கள் இப்படிச் சொல்கின்றார்கள்.

    Vadlamudi Raghavendra Rao
    Vadlamudi Raghavendra Rao

    ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட மனிதர்கள் தெற்குப்பக்க கடற்கரை வழியாக வந்து இந்தியாவினூடாக அவுஸ்திரேலியாவை அடைந்திருக்கக்கூடும் என்று ஒரு பொதுவான கருத்து நிலவுகின்றது. இந்தக்கருத்தை இந்தியாவிலுள்ள Dr Raghavendra Rao என்பவருடைய ஆய்வு உறுதி செய்கின்றது. இவரது குழுவின் மனிதவர்க்கசாஸ்திர ஆய்வின்படி (Anthropological Survey), திராவிடப்பழங்குடிமக்களிற்கும் தற்போதைய அபரிஜினல் இனத்தவருக்கும் பொதுவான DNA மரபணு மூலக்கூறுகளைக் கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. இவர்களின் கருத்துப்படி 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் அபோர்ஜினமக்கள் தென்னிந்தியா வழியாக அவுஸ்திரேலியாவிற்கு வந்து குடியேறியதாகவும், தற்போதைய அபரிஜினமக்களுக்கும் இந்தியக்குடிமக்களுக்கும் பொதுவான முன்னோர்கள் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறுகின்றார்கள்.

    1974 இல் Mungo Lake (NSW) பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு ஒன்றினை ஆராய்ந்தபோது அது இந்தியப்பழங்குடியினரின் சாயலை ஒத்திருந்ததாக விஞ்ஞானிகள் சொல்லியிருக்கின்றார்கள்.

    pic 10* பின்னிணைப்பு 1
    Macquarie (Aboriginal words) என்ற புத்தகத்தில் உள்ளபடி,

    Father – papa (Tor/17.2), paapaa(Ngi/2.2) – அப்பா Pg 622
    Mother – Ama (Tor/17.2) – அம்மா Pg 660
    Fire – thum (Wik/16.6) Pg 624
    Hill – Muli (Bun/1.7) மலை Pg 640
    Jaw – thakal (Ngi/2.1) தாடை Pg 646
    Leg – kar (Wem/6.1) கால் Pg 650
    Moon – pira (Diy/11.8) பிறை Pg 659
    Nose – Muruh (Bun/1.1) மூக்கு Pg 665
    Old Woman – aka (Tor/17.3) அக்கா Pg 666
    Person – arelhe (Arr/13.3) ஆள் Pg 671
    Thirsty – yarka (Paa/3.2) தாக Pg 705
    Sky – alkere (Arr/13.8) ஆகாயம், karkanya (Paa/3.8) ககனம் Pg 690
    Stone – karnu (paa/3.7), karul (Ngi/2.7) கல் Pg 698
    Tree – madhan (Wir/5.14) மரம் Pg 709
    Tease – ngaiyandi (Kau/8.27) நையாண்டி Pg 703
    You – nhii, nhe (Dat/12.33) நீ Pg 723
    Before – muna (Kau/8.25) முன்பு Pg 588
    Come – wara (wem/6.17), wapa (Paa/3.17) வா Pg 605
    Wind – yartu (Paa/3.8) காற்று Pg 720
    Face – mulha (Diy/7.1) முகம் Pg 621

    பின்னிணைப்பு 2
    Arr – Arrernte – Aruntha (Central Australia)
    Bun – Bundjahing (NSW)
    Dat – Datiwuy (Northern Territory)
    Diy – Diyari (South Australia)
    Kau – Kaurna (South Australia)
    Ngi – Ngiyampaa (NSW)
    Paa – Paakantyi (NSW)
    Tor – Torres Strait Creole (Queensland)
    Wem – Wembawemba (Victoria)
    Wik – Wik – Mungkan (Queensland)
    Wir – Wiradjuri (NSW)

    References
    1. Aboriginal Australia – Robyn Hodge

    2. Macquarie (Aboriginal words) – A dictionary of words from Australian Aboriginals & Torres Strait Islander- Nick Thieberger
    & William Mcgregor

    3. The Native Tribes of Central Australia – Baldwin Spencer and Francis James Gillen, Dover Publications, Inc., New York,
    1968 ( Originally published by Macmillan & Co. Ltd, London in 1899)

    4. வியக்க வைக்கும் தமிழர் அறிவியல் – மாத்தளை சோமு

    5. ABC article ‘DNA confirms coastal trek to Australia’ by Nicky Phillips – 24.07.2009

    Share
  • அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும் – 1

     

    – கே.எஸ்.சுதாகர்

    ஒரு நாட்டின் மூலமான மக்களை சுதேசிகள் (Indigenous people) என்கின்றோம். மூத்தகுடிகள், பூர்வீகக்குடிகள் என்றும் சொல்லலாம். அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை ஆதிவாசிகள் (Aboriginals), தீவுவாசிகள் (Torres Strait Islanders) என்ற இரண்டு வகையான மக்களை அப்படிச் சொல்கின்றார்கள். இவர்களுக்கிடையே ஏராளமான வித்தியாசமான பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், மொழியினைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.

    Australian Census 2011 demographic map – Australia by SLA – BCP field 0051 Indigenous Persons Both Aboriginal and Torres Strait Islander Persons [wikipedia.org]

    அவுஸ்திரேலியாவில் உள்ள மக்கள் தொகையில் இவர்கள் 2% ஆவார்கள். இது ஏறக்குறைய 400,000. இதில் ஆதிக்குடிகள் 357,000. ஐரோப்பியர்களின் வருகைக்கு (1788) முன்னர் ஏறத்தாழ 600 – 700 இனக்குழுவினர் (tribal groups) இருந்திருக்கின்றார்கள். அப்போது ஏறக்குறைய 250 விதமான மொழியைப் பேசியிருக்கின்றார்கள்.

    இதில் ஆதிக்குடிகள் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியாவில் இருந்தும், தீவுவாசிகள் Torres Strait (400ற்கும் மேற்பட்ட தீவுகள்) இலிருந்தும் வந்தவர்கள் ஆவார். ஆதிகாலத்தில் அவுஸ்திரேலியாவும் ஆசியாவும் ஒன்றாக இருந்ததாகவும் (ஆழமற்ற கடல் பரப்பு இவை இரண்டையும் இணைத்திருந்தது) பின்னர் இவையிரண்டும் பிரிந்ததாகவும் சொல்லப்படுகின்றது. இற்றைக்கு 50,000 – 130,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள தீவுகளிலிருந்து, இந்த ஆழமற்ற கடல்பரப்பினூடாக முதன்முதலாக அவுஸ்திரேலியாவிற்கு ஆதிக்குடிகள் வந்து சேர்ந்தார்கள் என நம்பப்படுகிறது. இவர்கள் அவுஸ்திரேலியாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள கடற்கரையோரங்களில் முதலில் குடியேறினார்கள். விஞ்ஞானிகளின் ஆய்வின்படி, 56,000 – 78,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் பெறப்பட்டுள்ளன.

    சுதேசிகள் தாம் வாழ்ந்த இடங்களைக் கொண்டு பின்வருமாறு அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
    Nyoogar (மேற்கு அவுஸ்திரேலியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ளவர்கள்)
    Murri (நியூ சவுத்வேல்ஷின் வடக்குப்புறம் மற்றும் குவீன்ஸ்லாந்தின் தென்கிழக்கு)
    Yolngu (Nothern Territory இன் வடக்குப்புற நிலமான Arnhem)
    Palawa (ரஸ்மேனியா – Tasmania)
    Nungah (தெற்கு அவுஸ்திரேலியா)
    Koori (நீயூ சவுத் வேல்ஸ்)
    Koorie (விக்டோரியா)

    733px-Alexander_Schramm_-_A_scene_in_South_Australia_-_Google_Art_Project

    1770 ஆம் ஆண்டு பிரித்தானியாவிலிருந்து கப்டன் ஜேம்ஸ் குக் என்பவர் தனது Endeavour என்ற கப்பலின் மூலம் Botany Bay என்ற இடத்தை வந்தடைந்தான். அதன்பிறகு 18 வருடங்கள் கழித்து குடியிருப்பதற்காக பிரிட்டனில் இருந்து வந்தார்கள். பழங்குடிகளின் நிலங்கள் பறிக்கப்பட்டன. சில ப்ழங்குடிக்குழுக்கள் கொல்லப்பட்டனர். 1789 இல் பிரித்தானியமக்கள் கொண்டுவந்த சின்னம்மை மூலம் சிட்னியைச் சூழவிருந்த ஆதிக்குடிகள் கொல்லப்பட்டனர். ஒருபோதும் இந்த வருத்தத்தைச் சந்தித்திராத அவர்களுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி இருக்கவில்லை.

    ஆதிக்குடிகளின் பிள்ளைகள் அவர்களிடமிருந்து பலவந்தமாகப் (STOLEN GENERATION) பிரித்தெடுக்கப்பட்டார்கள். இந்தப்பிரித்தெடுப்பு 1970 ஆம் ஆண்டுவரை நடந்தது. எத்தனை பிள்ளைகள் இப்படிப் பிரித்தெடுக்கபட்டார்கள் என்ற சரியான தரவுகள் கிடைக்கவில்லை. தரவுகள் அழிக்கப்பட்டன, தொலைந்துவிட்டன. ஏறத்தாழ 1910 இலிருந்து 1970 வரை 10% ஆன பிள்ளைகள் பிரித்தெடுக்கப்பட்டார்கள்.

    Australian Aboriginal Flag [wikipedia.org]

    ஆதிக்குடிகளுக்கென ஒரு கொடி Harold Thomas இனால் உருவாக்கப்பட்டு 1971 இல் அடிலயிட்டில் (Adelaide) பறக்கவிடப்பட்டது. கொடியின் மேற்பகுதியான கறுப்பு நிறம் ஆதிக்குடிகளையும், கீழ்ப்பகுதியான சிவப்புநிறம் ஆதிக்குடிகளுக்கும் நிலத்துக்குமான தொடர்பையும், நடுவே இருக்கும் மஞ்சள் நிறத்திலான வட்டம் சூரியனையும் குறிக்கிறது. உலகைப் படைத்தவர்கள் முன்னோர்கள் எனவும், அவர்களே நிலத்தைப் படைத்து அதிலே மலைகள் ஆறுகள் மரங்கள் என்பவற்றை உருவாக்கினார்கள் எனவும் ஆதிவாசிகள் நம்புகின்றார்கள்.

    1981 Arnhemland Aboriginal Performance on Open Air Theatre [wikipedia.org]

    டிடிஜிறிடு (Didjeridu) என்ற வாத்தியக்கருவியும் பூமராங்கும் (Boomerang) ஆதிக்குடிகளின் சின்னங்களாகக் கருதப்படுகின்றன.

    1960 ஆம் ஆண்டுவரையும் வாழ்வாதாரத்துக்கான (கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவை) உரிமைகள் மறுக்கபட்ட நிலையில் ஆதிக்குடிகள் இருந்துள்ளார்கள். 1965 ஆம் ஆண்டுமுதல் vote போடும் உரிமை பெற்றார்கள். 1967 முதல் குடித்தொகை மதிப்பீட்டில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். 7 கோடி 618 இலட்சம் சதுர கிலோமீட்டரைக் கொண்ட அவுஸ்திரேலிய நிலப்பரப்பில் ஆதிவாசிகளுக்கென ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பு 9 இலட்சத்து 20 ஆயிரம் சதுரகிலோமீட்டர்கள் ஆகும்.

    Aboriginal boys and men in front of a bush shelter [wikipedia.org]

    1972 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா தினத்தன்று, ஆதிக்குடிகள் கன்பராவில் உள்ள பாராளுமன்றத்திற்கு முன்னால் உள்ள Ngunnawal என்ற நிலத்தில் ஒரு கூடாரம் அமைத்து தமது கொடியைப் பறக்கவிட்டார்கள். ‘அவுஸ்திரேலியா அரசு தங்களை ஒரு வெளிநாட்டுப்பிரஜைகள் போல நடத்துவதால், வெளிநாட்டு மக்களுக்கு இருக்கும் Embassy போல தங்களுக்கும் ஒன்று தேவை’ என அறிவித்து அந்தக்கூடாரத்தை ஆதிக்குடிகளின் Embassy என அறிவித்தார்கள். அவுஸ்திரேலியா அரசு அதை அகற்றுவதற்கு முயற்சித்த போதிலும், அது மீண்டும் கட்டப்பட்டு 1992 முதல் நிரந்தரமாக அங்கே உள்ளது.

    ஐரோப்பியரின் வருகைக்கு முன்னர் ஏறக்குறைய 250 ஆதிக்குடிகளின் மொழிகள் (Alngith, Antakarinya, Bandjalang, Bayungu, Darling, Dirari, Iwaidja, Kamu, Kanju, Thawa, Yorta Yorta) இருந்தன. காலப்போக்கில் இவை அழிந்து கொண்டு வருகின்றன. ஆதிக்குடிகள் பேசிவந்த barramundi, billabong, boomerang, kangaroo, kookaburra, dingo, koala, wombat போன்ற பல சொற்கள் இன்று அவுஸ்திரேலியர்களின் ஆங்கிலச்சொற்களுடன் கலந்துவிட்டன.

    Share
  • கண் திறந்தது

    கே.எஸ்.சுதாகர்.

    ஜய வருடம் பிறந்தது. சிவா – விஷ்ணு கோவிலுக்குச் சென்றோம். சுவாமி கும்பிட்டு அருச்சனை செய்து வெளியே வர மணி பன்னிரண்டரை ஆகிவிட்டது.

    அன்னதானத்திற்கு ’ கோவில்’ மண்டபத்தைச் சுற்றி பெரிய வரிசை காத்திருந்தது. சின்னஞ்சிறிசுகள் முதல் முதியோர்கள் வரை நிரையில் நின்றார்கள். நாங்களும் அந்த வரிசையில் இணைந்து கொண்டோம். வரிசை மெதுவாக ஊர்ந்தது. பொறுமையைச் சோதிக்கும் வண்ணம் கோடை வெய்யில். அனல் காற்று அடித்தது. எங்களுக்கு முன்னால் மெல்பேர்னின் பிரபல வைத்தியர் ஒருவரும், வர்த்தகர் ஒருவரும் குடை ஒன்றின் கீழ்.

    ’கன்ரீனிலை காசு குடுத்துச் சாப்பிடலாம்” சொல்லியபடி ஒருசிலர் வரிசையிலிருந்து விலகிச் சென்றார்கள்.

    வைத்தியரும் வர்த்தகரும் அவர்களை உற்றுப் பார்த்தார்கள். வரிசையில் உள்ளவர்களிடம் காசு இல்லை என்பது அதன் அர்த்தம் அல்ல. வருடப்பிறப்பு தினத்தில் கோயிலில் சாப்பிடவேண்டும் என்று ஒரு இறை உணர்வுதான்.

    “நீங்கள் சுவாமியைச் சந்திக்கவா இதிலை நிற்கின்றீர்கள்?” என ஒருவர் வந்து திடீரென்று என்னைக் கேட்டார். அருகே நின்றவர்கள் உதட்டிற்குள் சிரித்தார்கள். என்ன கேட்கின்றார்? சுவாமியைச் சந்திக்கவா? ஒருவாறு ஊகித்து ‘இல்லை. இது அன்னதானத்திற்கான கியூ’ என்றேன்.

    எங்களுக்குப் பின்னால் ஒரு பெண் தன் சுட்டிப்பையனுடன் நின்றாள். அவர்களுக்கும் பின்னால் ஆறேழு வயது மதிக்கத்தக்க மூன்று வாண்டுகள். உனக்கு என்ன வயது? என்றான் ஒரு சிறுவன்
    – பத்து வயது என்றான் அவன்.
    – பத்து வயது மாதிரித் தெரியேல்லையே!
    – ஏன் பத்து வயது ஆள் குட்டியாக இருக்கக்கூடாதோ?
    – இண்டைக்கு இரவு கோயிலிலை தேர் ஓடும்
    – தேர் எண்டா என்ன?
    – உனக்கு இன்னும் தேர் தெரியாதா?
    அவர்களின் கலகலப்பான உரையாடலிலும் வேடிக்கைகளிலும் வரிசை நகர்ந்தது தெரியவில்லை.

    சுட்டிப்பையன் வரிசையை விட்டு வெளியே போய் விளையாடுவதும் பின்னர் அம்மாவுடன் சேர்வதுமாக இருந்தான். அந்தப்பெண் எங்களைப் பார்த்து புன்முறுவல் செய்தாள். அதில் ஒரு சோகம் கலந்திருந்தது. ’அவளை முன்பு எங்கேயோ பார்த்திருக்கிறேன்’ மனம் சொன்னது.
    அந்தப் பெண்ணிற்கு ஒரு ரெலிபோன் வந்தது.
    “கோயிலில் தான் நிற்கின்றேன்” அவளின் முகம் கறுத்தது. பரபரபுடன் அங்கும் இங்கும் பார்த்தாள்.

    நான் எதிர்பார்க்காத நேரத்தில் அந்தச்சிறுபையன் வந்து என் கால்களைக் கட்டிப் பிடித்தான். வாஞ்சையுடன் கால்களைப்பற்றியபடி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடினான். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மனைவி என்னைப் பார்த்தாள்.

    “உன்னைத் தூக்க வேணுமா… வா” என்று சொல்லிக் கொண்டே அந்தப்பெண் அவனை என்னிடமிருந்து விடுவித்துத் தூக்கிக் கொண்டாள்.

    அன்னதானம் குடுக்குமிடம் நெருங்கிவிட்டோம். நான்கு மனிதர்களின் இடைவெளி தூரம். அந்தச் சிறுபையன் அன்னதானம் குடுக்குமிடத்திற்கு முன்பாக நின்று அன்னதானம் குடுப்பவர்களைப் பார்த்தபடி நின்றான். அவனுக்குப் பசியை அடக்க முடியவில்லை.

    அப்பொழுதுதான் அவன் வந்தான். கிழிந்த சட்டை, அழுக்கான ஜீன்ஸ், கலைந்த கேசம். அந்தப் பெண்ணிடம் நெருங்கி ஏதோ கதைத்தான். அவள் வாயிற்குள் முணுமுணுத்தாள். அவளின் கன்னத்தில் பளார் என ஒரு அறை விட்டான். எல்லாரும் திகைத்துப் போனோம். அவளை வரிசையிலிருந்தும் கரகரவென்று இழுத்துப் போனான். பையன் அம்மாவின் சட்டையைப் பற்றியபடி நிலத்துடன் இழுபட்டுக் கொண்டிருந்தான்.

    எல்லாரும் அந்தக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் அது நடந்தது. மேடும் பள்ளமுமான அந்த நிலத்தில் கால் இடறுப்பட்டு அவன் விழுந்தான். விழுந்தவன் பின்னர் எழுந்திருக்கவில்லை. அந்தப்பெண் ‘ஹெல்ப் ஹெல்ப்’ என்று கத்தினாள்.

    சிலர் ஓடிச்சென்று அவனைத் தூக்கினார்கள். கோவில் மண்டபத்திற்கு முன்னால் இருந்த, சிறுவர்கள் விளையாடும் இடத்திற்கு அவனைத் தூக்கிச் சென்றார்கள். அங்கேயிருந்த வாங்கொன்றின்மீது அவனைப் படுக்க வைத்தார்கள். அங்கு நின்றவர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள்.

    நானும் மனைவியும் அங்கே போனபோது அவனுக்கு யாரோ நீர் பருக்கிக் கொண்டு நின்றார்கள். அவனின் மனைவி கொப்பி ஒன்றினால் அவனிற்கு விசுக்கிக் கொண்டு நின்றாள். அவளின் அருகே எங்கள் நண்பரும் அவரின் மனைவியும் நின்றுகொண்டிருந்தார்கள். எங்களைக் கண்டதும் கூட்டத்திலிருந்து வெளியே வந்தாள் நண்பரின் மனைவி.
    “யார் இவர்கள்?” என்றாள் என் மனைவி.
    “எங்கள் வீட்டு பேர்த்டே பார்டிகளில் அந்தப்பெண்ணைக் கண்டிருப்பீர்களே! அவன் ஒரு குடிகாரன். வேலைக்கும் ஒழுங்காகப் போவதில்லை. மனைவியையும் ஒரு இடத்திற்கும் கூட்டிச் செல்வதில்லை. எந்த நேரமும் அவளுக்கும் பிள்ளைக்கும் அடித்தபடி இருப்பான்.”

    “பேசாமல் டிவோர்ஸ் செய்திட்டுப் போறதுதானே!” என்றேன் நான்.

    “அவள் ஒரு கிறாட்யுவட். அவளுக்குக் கீழை இரண்டு தங்கைச்சிமார் கலியாணம் செய்யாமல் யாழ்ப்பாணத்திலை இருக்கினம். அதுதான் பொறுமையா இருக்கிறாள். பிறகு எல்லாம் வடிவாச் சொல்லுறனே!” சொல்லிவிட்டு கூட்டத்தை விலத்தியபடி உள்ளே சென்றாள்.

    உள்ளே அந்த மனிதன் வாங்கிலே எழுந்திருந்தான். அவன் நெற்றியில் விபூதி சந்தணம். காதிலே பூ. அவனுக்கு கோயில் அன்னதானத்தை ஊட்டிக் கொண்டிருந்தாள் அவன் மனைவி. சிறுபையன் அவன் மடிமீது இருந்தான். அவன் மலங்க மலங்க சுற்றுமுற்றும் உள்ளவர்களைப் பார்த்தான்.

    அவனின் ‘கண் திறந்தது’.

     

     படம் உதவி: http://www.chandigarhtamilsangam.in/Karthik_Mandir/Photos/2012-kumbhabhisegam/Annadhanam/1.JPG

    Share
  • பாசம் பொல்லாதது – குறும் கதை

    கே.எஸ். சுதாகர்

    சிவசம்பு தனது தங்கையின் திவசதினத்திற்குப் போக வேண்டும் என்ற நினைப்பில் அயர்ந்து தூங்கி விட்டார். சிவசம்புவிற்கு அறுபத்தைந்து வயதாகிறது. தனது மகன் மருமகளுடன் இருக்கின்றார். கடந்த வருஷம் அவரது தங்கை பரமேசு அகால மரணமடைந்துவிட்டாள். உறக்கத்தில் சிவசம்புவிடம் தங்கை கதைத்தாள்.

    “அண்ணா! உங்கை இருந்து என்ன செய்யுறாய்? நீயும் கெதியிலை மேலை வாப்பா. சும்மா ஜாலியா பாக்கு வெத்திலையும் போட்டுக் கொண்டு ஊர்க்கதையள், வயல்வம்புகள் கதைச்சுக் கொண்டு இருக்கலாம்.”
    “அது சரி. எப்படி வாழ்ந்த குடும்பம் நாங்கள்! நான் இப்ப உங்கை வாறதா உத்தேசமில்லை. பேரப்பிள்ளையளின்ர சடங்குகளையும் முடிச்சுக் கொண்டுதான் வருவன்.”
    கதவு தட்டும் சத்தம் கேட்டது.

    “அப்பா திவசத்துக்கு வரேல்லையே?” மகன் கேட்டான்.

    “வாறன், வாறன்” என்றபடியே இரண்டாவது ஃப்ளோரிலிருந்து தரைக்குக் கீழிறங்கினார். அவருக்கு இப்போது செத்தவீடு, திவசதினங்களுக்கெல்லாம் போவதற்கு விருப்பமில்லை. இந்தக் கொண்டாட்டங்களிலை மனம் ஈடுபட்டால் கெதியிலை உலகவாழ்க்கையைத் துறக்க நேரிடும் எனப் பயந்தார்.

    திவசம் வலு தடல் புடலாக நடந்தது. ஐயர் மந்திரங்கள் ஓதினார். போனதடவை அஸ்தியை தண்ணீரிலை கரைக்கேக்கை சிவசம்பு கால் தவறி ஆற்றுக்கை விழப் பாத்திட்டார். அது முதல் கொண்டு பயம் இரட்டிப்பாகிவிட்டது.

    “இவள் பரமேசு என்னை இழுக்கப் பாத்திட்டாள். நல்லகாலம். தப்பி வந்திட்டன்” என்பார்.

    திவசம் முடியும் தறுவாயில் மெல்ல நழுவி வீட்டிற்குப் போகப் பார்த்தார் சிவசம்பு.

    “திவசத்துக்கு வந்தால் கட்டாயம் சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேணும்” என்று அடாத்துப் பிடியாக சிவசம்புவைப் பிடித்து விட்டார்கள். சாப்பிடுவதற்கு முன்பு ஐயரிட்டைப் போனார்.

    “ஐயா! எனக்கொரு நூல் ஓதிக் கட்டிவிடுங்கோ. அடிக்கடி பரமேசு கனவிலை வாறாள்” நூல் ஒன்றைக் கையிலே கட்டிக் கொண்டார். நூலையும் சாப்பாட்டையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே சாப்பாட்டில் ஒரு பிடி பிடித்தார்.

    வீட்டிற்குப் போகும்போது வாசலில் பரமேசுவின் அழகிய படம் •பிறேம் போட்டுக் குடுத்தார்கள். அதை வாங்கி அருகே இருந்த மேசைமீது வைத்து அழகு பார்த்தார். அதைக் குடுத்துக் கொண்டிருந்த இரு இளம்பெண்களும் அவரை வியப்புடன் பார்த்தார்கள். இன்னும் இரண்டு படம் தாருங்கள் என்று கேட்டு வாங்கினார்.

    “பாத்தியேடி! தங்கைச்சியிலை எவ்வளவு பாசம் எண்டு. ஒண்டுக்கு மூண்டு படம் எடுக்கிறார்” என்றாள் ஒருத்தி.

    “மனிசன் இவ்வளவு பாசத்தை வச்சுக்கொண்டு பயப்பிடுது” தூரத்தில் சிவசம்புவின் செய்கைகளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மகன்.

    வீட்டிற்கு வந்ததும் கத்திரிக்கோல், ஸ்குறூட் றைவர் சகிதம் அங்குமிங்குமாக ஓடித் திரிந்தார் சிவசம்பு. தனது படுக்கை அறைக்குள் போய் நேற்று வந்த தனது மகளின் ஜேர்மன் கடிதத்தை எடுத்து வந்தார். மேசைமீது தான் கொண்டுவந்த தங்கையின் படங்களைப் பரப்பி பிஷியாகிப் போனார். ஃபிறேமை நோண்டி நோண்டிப் பிடுங்கினார். தங்கையின் படங்களை அதனின்றும் கழட்டி எடுத்தார். ஜேர்மன் கடிதத்துடன் வந்த தனது மூன்று பேரப்பிள்ளைகளின் படங்களையும் அந்த ஃபிறேமிற்குள் மாட்டினார். தங்கையின் படங்களை குப்பைத் தொட்டிக்குள் போடுவதற்காகப் போன அவர், பின்பு ஏதோ எண்ணம் கொண்டவராக மேசை லாச்சியை இழுத்து அதற்குள் அந்தப்படங்களை தள்ளி விட்டார். ரி.விக்கு முன்னால் இருந்த மகன் கடைக்கண்ணால் அவரது செய்கைகளைப் பார்த்தபடி இருந்தான்.

    சற்று நேரத்தில் மகன் அவரின் படுக்கை அறையின் கதவை மெதுவாகத் திறந்து எட்டிப் பார்த்தான். அவரது மேசையில் மூன்று பேரப்பிள்ளைகளின் படங்களும் அழகாக சிரித்தபடி இருந்தன. சிவசம்பு குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார்.

    Share
  • கருணையினால் அல்ல!


    கே.எஸ்.சுதாகர்

    உச்சி வெய்யில். ஒரே சனம். கோவில் ஒன்று புதிதாகக் கட்டப்பட்டு பூஜைகள் நடக்கின்றன. கடைசிநாள் பூசை. ஒலிபெருக்கியில் இடைவிடாது மந்திரங்கள் ஒலிக்கின்றன.

    ஈழத்து-சிதம்பரம்-3

    கோயிலின் உள்ளே நகரமுடியாதிருந்தது. ஒரு கர்ப்பிணிப்பெண் கஸ்டப்பட்டு உள்ளே புகுந்து சென்றாள். ‘வழி! வழி!!” என்று சத்தமிட்டபடியே ஐயர் ஒருவர் போனார். கோயிலின் உள்ளே அர்ச்சனைக்காக ஒரு சிறிய வரிசையும், வெளியே அன்னதானத்திற்காக ஒரு நீண்ட வரிசையும் காத்திருந்தன. சாப்பாட்டை எடுத்துக் கொண்டு நிழலுக்காக இடம் தேடி, தற்காலிகமாகப் போடப்பட்டிருந்த பந்தலுக்குள் ஒதுங்கினேன்.

    திடீரென்று சலசலப்பு. வயது முதிர்ந்த ஒருவர் மயங்கி விழுந்து விட்டார். அவருடன் கூட வந்தவர் அவரை ஒரு வாங்கில் கிடத்திவிட்டு, தனது கைத்தொலைபேசியில் யாருடனோ கதைத்துக் கொண்டிருந்தார். சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒருசிலர் கிழவரைச் சூழ்ந்து கொண்டனர். நான் சாப்பாட்டை அருகேயிருந்த பிளாஸ்ரிக் கதிரையொன்றில் வைத்துவிட்டு செய்வதறியாது இருந்தேன். சிலர் இன்னமும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

    சற்று நேரத்தில் கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் எல்லாரையும் இடித்துத் தள்ளிக் கொண்டு வந்தார். வெறுமையாய்க் கிடந்த கதிரைகள் ஒவ்வொன்றாக நிலத்தில் விழுந்தன. எனது அன்னதானம் மணலிற்குள் விழுந்து சங்கமமாகியது.

    “என்ன நடந்தது? என்ன நடந்தது? அம்புலன்ஸ்சைக் கூப்பிடுங்கோ”

    ரெலிபோனில் கதைத்துக் கொண்டிருந்தவரிடமிருந்து ரெலிபோனை பறிக்க எத்தனித்தார் அந்த நிர்வாகி.

    “இஞ்சை தாருங்கோ போனை. இது என்ன இது? இத்தினூண்டு. இதிலை காதை எங்கை வைக்கிறது? வாயை எங்கை வைக்கிறது?”

    “இது ‘மொபைல் போன் பெரியவரே!”

    “அது தெரியுது. நீர் எமர்ஜென்சி எண்டு சொல்லும்”

    “கோயில் ரெலிபோன் நம்பர் என்ன எண்டு சொன்னனியள்?”

    “9363 1134 இல்லை இல்லை 1164”

    “என்ன பெரியவரே நீங்களே கோயில் நம்பரை மறந்து போனா….”

    “நீர் ஏன் தம்பி கோயிலுக்கு வயது போனவரைக் கூட்டி வந்தனீர்? அதை முதலிலை சொல்லும். இந்தாரும் இந்த அட்றசிற்கு வரச் சொல்லும். ஏர்ஜண்ட்.  ஏர்ஜண்ட் எண்டு சொல்லும்” கோபத்தில் கத்தினார். வயது முதிர்ந்தவருடன் வந்தவர் செய்வதறியாது திகைத்தார். கோபம் மற்றைய மனிதர்கள் பக்கம் திரும்பியது.

    “இஞ்சை ஒரு வயது முதிர்ந்தவர் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறியளா?

    “அன்னதானம் பெரியவரே. அதுதான் சாப்பிடுறம்.”

    “அன்னதானம் ஆறிப்போனா சாப்பிடமாட்டியளோ?”

    அவர் சண்டை பிடித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய மனைவி அங்கு வந்து சேர்ந்தாள். அவரைச் சமாதானப்படுத்த எத்தனித்தாள்.

    “ஏனப்பா இப்படிப் பெரிசா சத்தம் போடுறியள்?

    “நான் இந்தக் கோயிலைக் கட்ட எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பன் எண்டு தெரியுந்தானே! அதுவும் கும்பாபிஷேசக் கடைசி நாளண்டு ஆராவது கோயிலிலை செத்துக் கித்துப் போனா?”

    படத்திற்கு நன்றி

    http://www.siruppiddy.net/?p=6515

    Share
  • புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்

    கே.எஸ்.சுதாகர்

    [புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் நாவல்கள் எனும்போது அவர்கள் தாயகத்தில் இருக்கும்போது எழுதி வெளியிட்ட நாவல்களை இங்கு நான் கருத்தில் கொள்ளவில்லை. மேலும் இங்கே குறிப்பிடும் எல்லா நாவல்களையும் வாசிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டவில்லை. இருப்பினும் தரவிற்காக அவற்றையும் சேர்த்துள்ளேன்.]

    உலகில் எத்தனையோ நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள், சமகால தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கிய கூறாக இருக்கின்றன. காலத்துக்குக் காலம் மக்கள் பல்வேறு காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்துள்ளார்கள். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் தமிழர்கள் படைக்கும் படைப்புகளை ‘புலம்பெயர் தமிழ் இலக்கியம்’ எனவும் ‘புகலிட தமிழ் இலக்கியம்’ எனவும் இரு தொடர்களால் அழைக்கின்றோம். இதில்கூட சில மாற்றுக்கருத்துகள் நிலவுவதைக் காணலாம். திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன், ‘புலம்பெயர்ந்தோர் இலக்கியம்’ என்று கூறுவது தவறு என்றும், அதை ‘அந்தந்த நாட்டு தமிழ் இலக்கியம்’ என்று சொல்லலாம் என்றும் சொல்கின்றார். அவர் கூறும் சொற்றொடர் ஓரளவிற்கு ‘புகலிட தமிழ் இலக்கியம்’ என்பதையே சுட்டி நிற்கின்றது.

    ‘புலம்பெயர்ந்தோர் இலக்கியம்’ என்னும்போது அதில் ‘மக்கள்’ முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். ‘புகலிட இலக்கியம்’ என்னும்போது அதில் ‘வாழ்விடம்’ முன்னிலைப்படுத்தப்படுகின்றது.

    புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் எனப்படுபவர்கள் யார்? ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருபவர்களை, சிலர் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் என்று தவறாகச் சொல்லிவிடுகின்றார்கள். ‘புலம்பெயர் எழுத்தாளர்களே! எங்கள் அவலங்களை உங்கள் இருப்புக்காகப் பயன்படுத்தாதீர்கள்’ என்கின்றார் செங்கை ஆழியான். ‘புலம்பெயர் இலக்கியம், புலம்பல் இலக்கியம்’ என்கின்றார் ஜெயகாந்தன். ‘பிரச்சனைகளுக்குப் பயந்து பிறந்த நாட்டையும் வாழ்ந்த வீட்டையும் இனசனங்களையும் விட்டு ஓடும் காகக்கூட்டம்’ என்கின்றார் டொமினிக் ஜீவா. மேலும் கம்பவாரிதி ஜெயராஜும் இவர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளார். ‘புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுள் மருத்துவர்கள் பொறியியலாளர்கள் இன்னும் பலதுறை விற்பன்னர்களும் வந்துகொண்டிருக்கும் வேளையில் எழுத்தாளர்களும் உருவாகியிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது’ என்று தெளிவாகவே சொல்லிவிடுகின்றார் சுஜாதா.

    அக, புற நெருக்கடிகளான சமூக அரசியல் பொருளாதாரக் காரணங்களால் தமது வாழ்விடங்களை விட்டுப் புதிய இடங்களை நோக்கிச் சென்றவர்களை புலம்பெயர்ந்தவர்கள் என சுருக்கமாகச் சொல்லலாம். அவர்களின் படைப்புகளை ‘புலம்பெயர்ந்த தமிழ்படைப்பாளிகளின் படைப்புகள்’ என்று சுருக்கமாகச் சொல்லலாம்.

    உண்மையில் மன்னர் காலத்திலிருந்தே இந்தப்புலம்பெயர்வு ஆரம்பமாகிவிட்டது. அதன்பின்னர் திரைகடலோடி திரவியம் தேடப் புறப்பட்டவர்களும், காலணியாட்சியாளர்களால் தமது தேவைக்காக இழுத்துச் செல்லப்பட்டவர்களுமாக மக்களைப் புலம்பெயர வைத்தது. இந்தியாவைப் பொறுத்தவரை சாதிய ஒடுக்குமுறை, பஞ்சம், பொருளாதாரச் சுரண்டல்களிலிருந்து விடுபடும் நோக்கில் அடித்தட்டுத் தமிழர்களில் பெருண்பான்மையானவர்கள் கப்பலேறியதாகவும், இழுத்துச் செல்லப்பட்டதாகவும் தரவுகள் சொல்கின்றன. மலேசியாவில் பினாங்கிற்கும், இலங்கையில் மலையகத்திற்கும் மற்றும் சிங்கப்பூர், பர்மா, மொரிஷியஸ், தென்னாபிரிக்கா, ·பிஜி போன்ற நாடுகளுக்கும் இந்தியத்தமிழர்கள் புலம்பெயர்ந்தார்கள். அடுத்து சுயமாக – வேலை தேடி சீக்கியர்கள் மலையாளிகள் தெலுங்கர்கள் செட்டியார்கள் முஸ்லிம் வணிகர்கள் மற்றும் ஆங்கிலம் தெரிந்த இலங்கைத் தமிழர்களும் குடியேறினார்கள். ஈழத்துமக்கள் புலம் பெயர்ந்தமைக்கும் இந்தியமக்கள் புலம்பெயர்ந்தவைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஈழத்துமக்கள் அரசியல் மற்றும் பொருள் தேடும் காரணங்களால் புலம் பெயர்ந்தார்கள். 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்னர்தான் இலங்கைத்தமிழர்கள் பெருமளவில் புலம்பெயர்ந்தார்கள். வசதி வாய்ப்புப்பெற்றவர்கள் ஐரோப்பியநாடுகள் கனடா அவுஸ்திரேலியா செல்ல, ஏனையோர் தமிழ்நாடு சென்றார்கள்.

    மலேசியாவின் முதல் தமிழ் நாவல் எழுதியவர்களாக தமிழகத்தின் வெங்கடரத்தினமும் புலோலியூர் க.சுப்பிரமணியம் என்ற ஈழத்தவரும் சொல்லப்படுகின்றார்கள். அடுத்து மலேசியாவின் புலம்பெயர்வாழ்வைச் சித்தரிக்கும் நூல்களாக ப.சிங்காரம் எழுதிய ‘புயலிலே ஒரு தோணி'(1962) , ‘கடலுக்கு அப்பால்'(1950) என்ற நாவல்களும் ஆர்.சண்முகம் எழுதிய ‘சயாம் மரண ரயில்’, ரங்கசாமியின் ‘லங்கா நதிக்கரையில்’, குமரனின் ‘செம்மண்ணில் நீல மலர்கள்’, இளம்வழுதியின் ‘லட்சியப்பாதை’ என்பவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள் ‘புயலிலே ஒரு தோணி’ தமிழுக்கு வளம் சேர்க்கும் நாவல்களில் ஒன்று எனலாம். தாயகம் பற்றிய கனவுகளுடன் வாழும் ஒருவனை இரண்டாவது உலகமகாயுத்தம் எப்படிச் சுவீகரித்துக் கொள்கின்றது என்பதையும், யுத்தத்தின் வெற்றி தோல்விகள் அப்பாவி மக்களின் தினசரி வாழ்க்கையை எப்படிப் பாதிக்கின்றன என்பதையும் எழுதியுள்ளார் சிங்காரம். 1942இல் ஜப்பான்நாடு சயாமிலிருந்து (தாய்லாந்து) பர்மா வரையிலும் மலை காடுகளூடாக ஒரு ரயில்பாதையை நிர்மாணித்தனர். இதில் 15000 போர்க்கைதிகளுடன் மலேசியாவிலுள்ள ரப்பர் தோட்டங்களில் வேலை பார்த்த ஆசியத்தொழிலாளர்களும் ஈடுபட்டனர். கடும் உழைப்பு, உணவின்மை, தொற்றுநோய் காரணமாக பலர் இறந்தனர். இவற்றைப் பின்னணியாகக் கொண்டது ‘சயாம் மரண ரயில்’ நாவல். மலேசியாவில் இன்று ரெ.கார்த்திகேசு, கே.பாலமுருகன் போன்றோர் நாவல் எழுதி வருகின்றனர்.

    சிங்கப்பூரிலிருந்து இளங்கோவன், ஜெயந்தி சங்கர் போன்றவர்கள் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். பர்மா, மொரிஷியஸ், தென்னாபிரிக்கா, ·பிஜி போன்ற நாடுகளிற்குச் சென்றவர்களின் வாரிசுகள் இன்று தமிழே தெரியாமல் தமிழ் அடையாளங்களுடன் வாழ்கின்றார்கள். இந்த நாடுகளில் வாழும் தமிழ்ப்படைப்பாளிகளின் இலக்கியப்பதிவுகள் எப்படியிருக்கின்றன என்பதைப்பற்றித் தெரியவில்லை. இலங்கையின் மலையகத்திற்கு கோப்பி, தேயிலை, ரப்பர் தோட்டங்களை நிறுவுவதற்காக எண்ணற்ற தமிழர்கள் பிடித்துச் செல்லபட்டார்கள். இவர்கள் படைக்கும் இலக்கியங்களையும் புலம்பெயர் இலக்கியம் என்ற வகைக்குள்தான் அடக்கவேண்டும்.

    தமிழரின் புலம்பெயர்ந்த இலக்கியம் என்றதும் எல்லோருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது ஈழத்தமிழர்களின் எழுத்துகள்தான். இலங்கை அரசியல் நிலவரம், இராணுவத்தாக்குதல்கள், இயக்கங்களிடையேயான சகோதரச் சண்டைகள் காரணமாக பலர் தமிழகத்திற்கும் பிரான்ஸ், கனடா, நோர்வே, ஜெர்மனி, சுவிஸ், டென்மார்க், அவுஸ்திரேலியாவிற்கும் புலம் பெயர்ந்தனர்.

    கனடா நாவலாசிரியர்களில் தேவகாந்தன், அ.முத்துலிங்கம், கதிர்.பாலசுந்தரம், வ.ந.கிரிதரன், அகில், கே.எஸ்.பாலச்சந்திரன், குரு.அரவிந்தன் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

    தேவகாந்தன் ஈழப்பிரச்சினையை மையமாகக் கொண்டு 1981 இல் இருந்து 2001 வரையான இருபதுவருடகாலத்தை ‘திருப்படையாட்சி'(1998), ‘வினாக்காலம்'(1998), ‘அக்னி திரவம்'(2000), ‘உதிர்வின் ஓசை'(2001), ‘ஒரு புதிய காலம்'(2001) என்ற ஐந்து பாகங்கள் கொண்ட ‘கனவுச்சிறை’ என்ற நாவலாகத் தந்திருக்கின்றார். இவரது ‘யுத்தத்தின் முதாலாம் அத்தியாயம்’  என்ற நாவல் 1981 இற்கு முற்பட்ட காலத்தைச் சொல்கின்றது.

    ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்ற படைப்பை அ.முத்துலிங்கம் எழுதியுள்ளார். எண்ணற்ற பல நல்ல சிறுகதைகளைத் தந்த முத்துலிங்கத்தின் இப்படைப்பு நாவலெனச் சொல்லப்பட்டாலும் உண்மையில் இது ஒரு புனைவு சார்ந்த சுயசரிதைக்குறிப்பு என்றே சொல்லவேண்டும்.

    ‘மறைவில் ஐந்து முகங்கள்’ (2004), ‘கனடாவில் சாவித்திரி’ (2003), ‘சிவப்பு நரி’ (2004) என்பன ‘மனித உரிமைவாதி’ எனக்கூறும் கதிர்.பாலசுந்தரத்தின் தமிழ் நாவல்கள். ஐந்து தமிழ்தேசியவாத இயக்கங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட ‘மறைவில் ஐந்து முகங்கள்’ தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பானது. இவரது ‘Blood and Terror’ (2006), ‘His Royal Highness, The Tamil Tiger’ (2012) ஆங்கில நாவல்களில் முதலாவது நாவல் ‘மறைவில் ஐந்து முகங்கள்’ நாவலை ஒட்டியது. அமெரிக்க பிரபல நூல் வெளியீட்டு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள இரண்டாவது ஆங்கில நாவல் விடுதலைப்புலிகளின் சமாதான கால வரி வசூலிப்பை கருவாகக் கொண்டது. வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் – ஆசிரியர் – மாணவிகளை மையமாகக் கொண்ட ‘சிவப்பு நரி’ நாவல் கதையைத் தழுவியது. உள்நாட்டு போர்க்கால அரசியல் புயலும், மனித அவலங்களும் நாவல்களின் சதையும் உயிருமாயுள்ளன.

    மற்றும் ‘மண்ணின் குரல்’, அமெரிக்கத் தடுப்பு முகாம அனுபவத்தை விபரிக்கும் ‘அமெரிக்கா’ ,  தப்பிப்பிழைத்தலுக்கான அமெரிக்க அனுபவங்களை விபரிக்கும்‘குடிவரவாளன் (AN IMMIGRANT)’   என்ற நாவல்களை எழுதிய வ.ந.கிரிதரன் –

    ‘திசை மாறிய தென்றல்’, ‘கண்ணின் மணி நீயெனக்கு’ நாவல்களை எழுதிய அகில் –

    ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்’ (2009) எழுதிய கே.எஸ்.பாலசந்திரன் –

    ‘உன்னருகே நான் இருந்தால்’, ‘எங்கே அந்த வெண்ணிலா’ (2006), ‘உறங்குமோ காதல் நெஞ்சம்’ (போர்க்காலச் சூழ்நிலையைக் கொண்டது), விகடனில் வெளிவந்த ‘நீர் மூழ்கி நீரில் மூழ்கி’ போன்ற படைப்புகளைத் தந்த குரு.அரவிந்தன் போன்றவர்கள் கனடாவில் நாவல் படைப்போராக உள்ளனர்.

    ஜேர்மனியிலிருந்து நாவல்கள் எழுதியவர்களில் பார்த்திபன், பொ.கருணாகரமூர்த்தி குறிப்பிடத்தகுந்தவர்கள்.

    பார்த்திபனின் படைப்புகளும் பெரும்பாலும் சாதிப்பிரச்சினை, சீதனப்பிரச்சினைகளை மையப்படுத்தியே உள்ளன. புகலிடத்தில் குழந்தை வளர்ப்பு பற்றி எழுதிய ‘பாதி உறவு’ என்ற குறுநாவலுடன் வித்தியாசப்படும் வித்தியாசங்கள், ஆண்கள் விற்பனைக்கு(1988), கனவை மிதித்தவன், சித்திரா போன்ற நாவல்களை இவர் எழுதியுள்ளார்.

    பொ.கருணாகரமூர்த்தி புதிய முயற்சிகளுடன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர். மூன்று குறுநாவல்கள் கொண்ட ‘ஒரு அகதி உருவாகும் நேரம்’ என்ற படைப்பைத் தந்திருக்கின்றார்.

    பிரான்ஸ்

    நாகரத்தினம் கிருஷ்ணா—தமிழகத்துப் படைப்பாளி—‘நீலக்கடல்'(2005), ‘மாத்தாஹரி'(2008) என்ற நாவல்களையும் ‘காதலன்'(2008), ‘வணக்கம் துயரமே’ என்ற பிரெஞ்சு மொழிபெயர்ப்பு நாவல்களையும் தந்துள்ளார். ‘நீலக்கடல்’ நாவல் 18ஆம் நூற்றாண்டில் மொரிஷியஸ் தீவுகுப் பிரெஞ்சுக்காரர்கள் அடிமைகளாகக் கொண்டு சென்ற தமிழர்களின் துயரவாழ்க்கையைச் சொல்கின்றது.

    ஷோபாசக்தி – கதைக்களத்தில் மட்டுமல்லாது புனைவிலும் வித்தியாசத்தைக் கொண்டிருக்கும் ‘கொரில்லா’ நாவல், போராட்ட இயக்கங்களின் முரண்பாட்டினைச் சொல்கிறது. ஆயுதம் ஏந்திப் போராடுவதற்காக இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட 15 வயதுச் சிறுவனாகிய ஷோபாசக்தியின் துயரங்களைச் சொல்லும் இந்த நாவல் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இவரின் அடுத்த நாவல் ‘ம்’. வெலிக்கடை சிறைக்கொலைகள், மட்டக்களப்பு சிறையுடைப்பு என்பவற்றுடன் தொடர்புபடும் நேசகுமாரன் என்ற பாத்திரமும், புலம்பெயர்ந்தநாட்டில் அவனின் பதின்ம வயது மகள் நிறமியின் கர்ப்பத்தையும் இணைக்கும் பின் நவீனத்துவப் போக்குக் கொண்ட நாவல் இது.

    தூயவன் – யுத்த காண்டம்(2006)

    மா.கி.கிறிஸ்ரியன் – உள்ளத்தில் மட்டும்(1998), புயலுக்குப் பின்

    சுவிற்சலாந்து

    இந்த வருடம் வந்த நாவல்களில், சயந்தனின் ‘ஆறா வடு’ பெரிதாகப் பேசப்படுகின்றது. தமிழினி பதிப்பகமாக வந்திருக்கும் இந்த நாவலில் புதிதாக ஒன்றும் சொல்லப்படவில்லை என்றாலும் நடுநிலமையுடன் அங்கதச்சுவை கொண்டு எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலைகொண்ட காலத்து(1987) சம்பவங்கள் தொடக்கம் 2002 சமாதான காலம் வரை நடந்த சம்பவங்கள் பற்றி பேசும் வரலாற்று நாவல் இது.

    நோர்வேயில் வாழும் படைப்பாளியான இ.திஜாகலிங்கம் அழிவின் அழைப்பிதழ்(1994), நாளை(1999), பரதேசி(2008), திரிபு(2010), எங்கே(2011), வரம்(2009) என்று பல நாவல்களைத் தந்திருந்தபோதிலும் இவை எதுவுமே பரவலாகப் பேசப்படவில்லை.

    டென்மார்க்கிலிருந்து எழுதும் ஜீவகுமாரன் – மக்கள்… மக்களால்… மக்களுக்காக… (2009), கடவுச் சீட்டு (2013) என்ற நாவல்களையும்,  சங்கானைச் சண்டியன்(2010) என்ற குறுநாவலையும் எழுதியுள்ளார். அ.பாலமனோகரன் ‘தாய்வழி தாகங்கள்’ என்றொரு நாவலை வெளியிட்டுள்லார்.

    லண்டனில் புலம்பெயர்ந்து வாழும்

    ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ‘ஒரு கோடை விடுமுறை’, ‘தேம்ஸ் நதிக்கரையில்’, ‘அம்மா என்றொரு பெண்’, ‘தில்லையாற்றங்கரையில்’, ‘உலகமெல்லாம் வியாபாரிகள்’ போன்ற பல நாவல்களை எழுதியிருக்கின்றார். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் பல மாறுபாடான கருத்துகளைக் கொண்ட ‘ஒரு கோடை விடுமுறை’ பலராலும் பேசப்பட்ட நாவலாகும்.

    வவனியூர் இரா.உதயணன் சுருதி பேதமடைகிறது (2008), விதி வரைந்த பாதையிலே(2009), நூல் அறுந்த பட்டங்கள் (2009), பனி நிலவு (2010), உயிர்க்காற்று (2010) என்ற நாவல்களை எழுதியுள்ளார். இதில் பனி நிலவு, உயிர்க்காற்று இரண்டும் இலங்கையின் உள்நாட்டுப் போருக்குப் பின்னதான அவலங்களை எடுத்துக் காட்டுகின்றன. அங்கவீனமான ஒரு இளம்விதவை தன்னையும் பிள்ளைகளையும் எவ்வாறு போரின் வடுக்களிலிருந்து மீட்டு சமூகத்துக்கும் தேசத்துக்கும் முன்னுதாரணமாகச் செயற்படமுடியும் என்பதைப் பனிநிலவு நாவல் சொல்கின்றது. இது இலங்கையின் வழங்கப்படும் கொடகே விருது மற்றும் இந்தியாவில் வழங்கப்படும் சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதைப் பெற்றது.

    இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த விமல் குழந்தைவேல் எழுதிய ‘வெள்ளாவி’ நாவல் சலவைத்தொழிலாளர்கள் பற்றிப்பேசுகின்றது. இதுவும் விடுதலைப்புலிகளால் தடைசெய்யபட்டது. இவரது இன்னொருநாவல் ‘கசகறணம்’, தமிழ் முஸ்லிம் மக்களின் அன்பு கலந்த வாழ்வை ஆயுதக்குழுக்கள் எப்படிச சிதைத்தார்கள் என்பதைச் சொல்கிறது. இனத்தகராறில் எரிக்கபட்ட அக்கரைபற்றுச் சந்தையில் வியாபாரம் செய்யும் நான்குபேரைச் சுற்றிச் செல்லும் கதை.

    மற்றும் முடிந்த கதை தொடர்வதில்லை(1999) என்ற நாவலை எழுதிய முல்லை அமுதன் (இ.மகேந்திரன்) எழுதியிருக்கின்றார்.

    அவுஸ்திரேலியா தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்

    அவுஸ்திரேலியாவில் எஸ்.பொ, மாத்தளை சோமு, முருகபூபதி, என்.எஸ்.நடேசன், தெ,நித்தியகீர்த்தி, மனோ.ஜெகேந்திரன், கபிலன் வைரமுத்து என்போர் நாவல் எழுதியிருக்கின்றார்கள்.

    எஸ்.பொ எவரும் எழுதத்துணியாத படைப்புகளைத் தந்தவர். இலங்கை அரசியலில் பிரதான பாத்திரம் வகித்த தமிழ் சிங்கள அரசியல் தலைவர்களைப் பின்னிப்படரும் நாவல் மாயினி(2007). இதில் சில அரசியல்தலைவர்களின் அந்தரங்க வாழ்க்கை அலசப்படுகின்றது.

    மாத்தளை சோமுவின் பேசப்படும் படைப்புகளாக ‘அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்’, ‘எல்லை தாண்டா அகதிகள்’, ‘மூலஸ்தானம்’, ‘நான்காவது உலகம்’ என்பவற்றைச் சொல்லலாம். இவர் நாவலுக்காக இலங்கை சாகித்திய விருது, இலங்கை சுதந்திர இலக்கிய அமைப்பு விருது என்பவற்றைப் பெற்றுக் கொண்டவர்.

    முருகபூபதியின் நாவல் பறவைகள்(2001). சாகித்திய விருது பெற்றது. ‘என்னதான் பறவைகள் ஆகாயத்தில் வட்டமிட்டுப் பறந்தாலும் ஆகாரத்திற்காக தரைக்கு வந்துதான் ஆகவேண்டும்’ என்ற உள்ளார்ந்த அர்த்தத்தைக் கொண்டிருக்கும் நாவல் இது.

    என்.எஸ்.நடேசனின் வண்ணாத்திக்குளம்(2003) 80-83 ஆண்டு அரசியல் பின்னணியில், ஒரு தமிழ் இளைஞனுக்கும் ஒரு சிங்களப் பெண்ணுக்குமிடையே நடக்கும் காதலைச் சொல்லும் குறுநாவல். ஆசிரியரின் பல அனுபவங்களைத் தொட்டுச் செல்லும் மேம்போக்கான படைப்பு. உனையே மயல் கொண்டு(2007) / ஈழத்து அரசியலின் இருண்டவாழ்வினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், மகப்பேறின் பின்னர் பைபோலர்(bipolar) நோயினால் பாதிப்படைதல், அவளிற்கும் கணவனுக்குமிடையே ஏற்படும் உடலின்பம் சார்ந்த பிரச்சினை, புகலிடத்தில் ஏற்படும் நிம்மதியற்ற வாழ்க்கை இவற்றைக் கருப்பொருளாகக் கொண்டது. இதுவரை புலம்பெயர் இலக்கியத்தில் சொல்லப்படாத பல புதிய அனுபவங்களைச் சொன்னாலும் ஆழமற்ற அகலப்பாங்கான படைப்பாகவே உள்ளது. இவற்றுள் வண்ணாத்திக்குளம் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் (Butterfly Lake – Samanala Weva) மொழிபெயர்க்கப்பட்டது. உனையே மயல் கொண்டு ஆங்கிலத்தில் (Lost In You) மொழிபெயர்க்கப்பட்டது. மற்றும் ‘அசோகனின் வைத்தியசாலை’ (2013) – முழுமையாக அவுஸ்திரேலியாவைக் களமாகக்கொண்டு ஒரு மிருக மருத்துவரின் வாழ்வனுபங்களையும் வெள்ளை இனத்தவர்களின் கலாச்சாரம் அதிலிருக்கும் சிக்கல்கள்  முடிச்சுகள் பற்றி பேசும் நாவல்.

    கபிலன் வைரமுத்துவின் படைப்பு ‘உயிர்ச்சொல்'(2011) மருத்துவம் சம்பந்தமான தமிழுக்கு அறிமுகமில்லாத இன்னொரு கதைக்கரு. இயற்கையாகக் குழந்தை பிறக்க சாத்தியமில்லாத தம்பதிகள் fertility treatment மூலம் கருத்தரிக்கின்றார்கள். குழந்தை பிறக்கும்போது தாய் post natal depression ஆல் பாதிப்படைகின்றார். குடும்பத்தில் நிகழும் குழப்பத்திற்கு இணையாக தமிழகத்து அரசியல் குழப்பத்தையும் இணைத்து நாவல் செல்கின்றது.

    மறைந்த எழுத்தாளர் தெ.நித்தியகீர்த்தியின் தொப்புள்கொடி உறவு –  பிறந்த நாட்டினைவிட்டு தொலைதூரம் கடந்து வந்த பின்னும், தாய் நாட்டுடனான தொப்புள்கொடி உறவு விடவே இயலாத உறவாக தொடர்ந்து வரும் என்பதைச் சொல்கிறது. எது புனைவு? எது நிஜம்? என்று தெரியாத வகையில் நிஜமனிதர்களின் உண்மைச்சம்பவங்கள் கொண்ட நாவல் இது.

    மற்றும் மனோ ஜெகேந்திரன் எழுதிய நல்லதோர் வீணை செய்தே(2000), பாமினி செல்லத்துரை எழுதிய ‘சிதறிய சித்தார்த்தன்’ North, South & Death (2000) என்ற நாவல்களும் அவுஸ்திரேலியாவில் வந்துள்ளன. ஆங்கில வாசகர்களிடையே பரவலாகப் பேசப்படும் நிரோமினி டி சொய்சாவின் Tamil Tigress (2001) ஆங்கில நாவல்—நாவல் மணம் பட்டும்படாமலும் வீசுகின்ற ஞாபகப் பதிவுகள்—பதினேழு வயதில் யாழ் சுண்டிக்குழி மகளிர் கல்லூரியிலிருந்து தலைமறைவாகி விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்து, இரு ஆண்டுகளைக்கூடப் பூர்த்தி செய்யாமல் வீடு திரும்பும் மேட்டுக்குடி கத்தோலிக்க போராளியின் ஆக்கமாகும்—யதார்த்த நாவல் என்று சொல்வாருமுண்டு. ஓய்வுக்குத் தூக்கிப் போடாமல் வாசிப்பதற்குப் பொருத்தமான முதல் ஐம்பது நூல்களில் ஒன்றாக அவுஸ்திரேலியாவில் தெரிவுபெற்ற ஆக்கம். ‘நல்லதையும் கெட்டதையும் பேசுகின்றது’ என்று வி.சூரியநாராயணன் சொல்கின்றார். இங்கிலாந்து அமெரிக்க நாடுகளில் 2012இல் மீள் பதிப்பாக வெளிவந்துள்ள ஆக்கத்தின் பிரகாசமான வரலாற்றுத் தவறுகள் அதன் உன்னத உயிரோட்டத்தைப் பாதிக்கின்றன.

    புலம்பெயர்ந்த படைப்பாளிகளின் நாவல்கள் கொண்டிருக்கும் உட்கருத்துகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

    1. தாய்நாட்டுப் பிரச்சினைகள் / நினைவுகள்

    2. அகதி நிலை

    3.என்றாவது ஒருநாள் தாயகம் திரும்பி வாழ்வோம் என்ற மனநிலையில் உள்ளவர்களுக்கும் – புதிய சூழலோடு இயைபாக்கமடைந்து வாழும் அவர்களின் இளைய சந்ததியினருக்குமிடையே முரண்பாடுகள்

    4. தாயகத்திற்கும் புகலிடத்திற்குமிடையேயான குடும்ப உறவுகள், உணவுப்பழக்கங்கள், காலநிலை வேறுபாடுகள், மொழி, ஆண் – பெண் உறவுகள், பெண்ணியம் தொடர்பானவற்றை ஒப்பீடு செய்தல்

    5. அறிவியல், தகவல் தொழில்நுட்பம் சார்ந்தவை

    புலம்பெயர்ந்த தமிழர்களின் இரண்டாவது மூன்றாவது தலைமுறையினரின் படைப்புகள் எப்படியிருக்கப் போகின்றன? இவர்கள் தமிழ்மொழியில் எழுதும் வல்லமை உடையவர்களாக இருப்பார்களா அல்லது பிரெஞ், டொச் அல்லது நோர்வேஜியமொழிகளில் எழுதுவார்களா? புலம்பெயர்ந்து சென்ற கலாமோகன், சுசீந்திரன், பாலமனோகரன்(Bleedings Hearts) போன்றவர்கள் ஆங்கிலம் தவிர்ந்த, தாம் வாழும் நாட்டு மொழிகளிலும் எழுதக்கூடியவர்களாக உள்ளனர்.

    கனடாவில் வாழும் இலங்கையரான சியாம் செல்வதுரை, கதிர் பாலசுந்தரம், அவுஸ்திரேலியாவில் வாழும் நிரோமினி டி சொய்சா ஆங்கிலத்தில் எழுதும் வல்லமையுடையவராக இருக்கின்றனர். தமிழ்ப்படைப்பாளிகளின் ஆங்கில ஆக்க இலக்கியங்களை, தமிழர் இலக்கிய வரலாற்றின் ஒரு கிளை என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சிலர் சொல்லி வருகின்றனர். அதேபோல தமிழிலே பரிச்சயமில்லாமல் பிரெஞ், டொச், நோர்வேஜிய மொழிகளில் எழுதும் தமிழ்ப்படைப்பாளிகளின் படைப்புகளையும் தமிழர் இலக்கிய வரலாற்றின் ஒரு கிளை என்று ஏற்றுக் கொள்ளலாமா?

    அநேகமான ஈழத்து எழுத்தாளர்கள் 1983ஆம் ஆண்டிற்குப் பின்னர்தான் புலம்பெயர்ந்து சென்றார்கள் என்று வைத்துக் கொண்டால், இன்று அவர்களின் புகலிடப்படைப்புகளுக்கு முப்பது வயது வந்துவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்களில் சிலருக்கு தாம் தாயகத்தில் வாழ்ந்த காலத்தைவிட புகலிடத்தில் நீண்ட காலங்கள் வாழ்ந்துவிட்டார்கள். இன்னும் அதிக அளவில் புகலிடப் படைப்புகள் அல்லது அறிவியல் புதினங்கள் வந்திருக்கவேண்டும். உண்மையில் புலம்பெயர்ந்தநாடுகளில் கிடைக்கும் புதிய சூழல், சுதந்திரம், வாய்ப்புவசதி போன்றவற்றை வைத்துக் கொண்டு நல்ல புகலிடப் படைப்புகள் வந்திருக்க வேண்டும். ஆனால் இன்னமும் சாதிப்பிரச்சினை, சீதனக்கொடுமை, ஈழத்து அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றையே நாவல்கள் சுற்றி வருகின்றன. புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் தமது பார்வையை வேறு திசைகளுக்குத் திருப்பாதவரைக்கும் வளம் சேர்க்கும் நாவல்களைக் காண்பது மிகவும் அரிதாகவே இருக்கும்.

    Share
  • ‘ஸ்மாட் போன்’ கதை.

    – கே..எஸ்.சுதாகர்

    வேகமாக வளரும் தொழில் நுட்பத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் நானும் எனது கைத்தொலைபேசியை மாற்றுவதென முடிவு செய்து கொண்டேன்.

    I – Phone ஒன்றை வாங்குவதற்காக வியட்நாமியக் கடையொன்றிற்குப் போயிருந்தேன்.

    “அப்பா…. காலத்துடன் நாங்கள் பயணம் செய்யவேண்டும்!

    கார் இடையிலை நிண்டா… காட் அற்றாக் வந்தா ” என்று ஐந்து வருடங்களுக்கு முன்பு ஐந்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த என் மகன் பெரியதொரு பட்டியலிட்டு என்னைப் பயப்படுத்தியிருந்தான். அதற்கு முன்னர் என்னிடம் கைத்தொலைபேசி இருக்கவில்லை. அவனது அட்வைசிற்கு கட்டுப்பட்டு மிகக்குறைந்த விலையில் ஒரு கைத்தொலைபேசி ஒன்றை வாங்கியிருந்தேன். இப்போது அதை மாற்றுவதற்குரிய காலம் வந்துவிட்டது.

    மனைவி பிள்ளைகளுடன் போனால் பெரியதொரு ‘பிளானி’ற்குள் என்னைத் தள்ளிவிடக்கூடும் என நினைத்து தனியே கடைக்கு வெளிக்கிட்டிருந்தேன்.

    நண்பன் ஒருவன் மலிவான கடையென ஒன்றை அறிமுகம் செய்திருந்தான். அங்கே வந்திருந்த கஸ்டமர்ஸ் எல்லாரிடமும் புதிது புதிதான கைத்தொலைபேசிகள் விதவிதமான நாதமெழுப்பிய வண்ணம் இருந்தன. அவர்களுடன் வரிசையில் நின்றுகொண்டேன். கவுண்டரில் மூன்றுபேர்கள் நின்றார்கள். எனது முறை வந்ததும் அவர்க்ளிடமிருந்த பிளான்கள் பற்றிக் கதைத்தேன். நான் தற்போது பாவிக்கும் ரெலிபோனைப் பார்க்க முடியுமா என்று அவன் கேட்டான். பொக்கற்றுக்குள்ளிருந்த பழைய நோக்கியா போனை வெளியே எடுத்து அவனிடம் நீட்டினேன். அவன் பாம்பைக் கண்டுவிட்டவன் போல திடுக்கிட்டு, இரண்டு அடிகள் பின் நகர்ந்து மெதுவாக நழுவி உள்ளே ஓடினான். நான் எனது போனை உடனடியாக எனது பொக்கற்றுக்குள் செருகிக்கொண்டேன். கவுண்டரில் நின்ற மற்ற இருவரும் உதட்டிற்குள் புன்னகை ஒன்றைத் தவழவிட்டார்கள்.

    அந்தப்புன்னகை எனக்கா, அல்லது உள்ளே சென்றவனுக்கா என்று தெரியாமல் மலங்க விழித்தேன்.

    சற்று நேரத்தில் உள்ளே இருந்து ஒரு பெண் வந்து அந்தக்கவுண்டரில் நின்று கொண்டாள். அருகேயிருந்த ஒரு இருக்கையைக் காட்டி என்னை அதிலே அமரும்படி சொன்னாள்.

    நேரம் நகர்ந்தது. ஒருவரும் என்னைக் கவனிப்பதாக இல்லை. என்னைக்கண்டு மிரண்டு உள்ளே சென்றவன், கதவொன்றை மெதுவாக நகர்த்தி நான் போய்விட்டேனா என்று பார்த்தான். கடைக்கு அவர்கள் இனத்தவர்கள் வருகின்றார்கள், போகின்றார்கள்.

    “அவங்கடை கடை. வருவார்கள்…. போவார்கள். இதிலே நமக்கென்ன வேலை?” எழுந்து கொண்டேன். இன்னொருநாள் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன் நடையைக் கட்டினேன்.

    உடுப்புக்கடையொன்றிற்கு முன்னால் ராசன் அண்ணன் தனது காரை எடுத்து இடம் மாற்றிக் கொண்டு நிற்கின்றார். கார்க்கண்ணாடியூடாக எனக்குக் கையைக் காட்டினார். ராசன் அண்ணை எனது ஊரவர். அவருடைய அம்மா கைராசி இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா வந்திருக்கின்றார் என்று அறிந்திருந்தேன். அவ வந்து இரண்டு மாதங்கள் இருக்கும். இன்னமும் நாங்கள் அவரைப்போய் பார்க்கவில்லை.

    இக்கணம் ராசன் அண்ணை பேசப்போகின்றார். அவர் தொடங்குவதற்கு முன்னால் நானே தொடங்கிவிட வேண்டும்.

    “அண்ணை! இன்னும் உங்கடை அம்மாவை வந்து பார்க்கேல்லை. மகளின்ரை படிப்பு. ஒரே பிஷி”

    “எனக்குத் தெரியும்தானே தம்பி. அதைப்பற்றி நான் ஒண்டும் குறையா நினைகேல்லை. அம்மா உள்பட எல்லாரும் உடுப்புக்கடைக்குள்லைதான் நிக்கினம். ஒரு மணித்தியாலமாபோச்சு. இன்னும் உடுப்பு வாங்கினபாடில்லை. அதுதான் ஒருக்கா காரை மாத்தி விடுவோமெண்டு வந்தனான். இல்லாட்டி உடுப்புக்கு மேலாலை ஃபைன் கட்டவேண்டி வந்திடும்.”

    “அப்ப நல்லதாப்போச்சு. அம்மாவைப் பாத்து ஒரு ஹலோ சொல்லுவோம்.”

    இரண்டுபேருமாக கடைக்குள் நுழைந்தோம்.

    இந்த இடத்திலை கைராசியக்காவைப்பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். இப்ப அவவுக்கு எண்பது தாண்டியிருக்கும். அப்ப அம்பது இருக்கேக்கை அது நடந்தது. சின்னனிலை ஒருமுறை சரியான இருமலாலை படுக்கையாக இருந்தேன். பத்துப்பன்னிரண்டு வயதிருக்கும். அப்ப ஒருநாள் அவ எங்கடை வீட்டுக்கு வந்தா. அம்மா எனது வருத்தம்பற்றி அவவிடம் ஆலோசனை கேட்டார். உடனே கைராசியக்கா ஒரு மண்வெட்டியைத் தூக்கிக் கொண்டு எங்கடை வீட்டுத்தோட்டப்பக்கம் போனா. கொஞ்ச மண்புழுக்களைப் பிடித்துக் கொண்டு வந்தா. துடிக்கத் துடிக்க அவற்றை நறுக்கி தாச்சிச்சட்டிக்குள்ளை போட்டு வறுக்கத் தொடங்கினா. பிறகு அதுக்குள்ளை நீரை விட்டுக் காய்ச்சி, அந்தக் கசாயத்தை வடித்தெடுத்துக் கொண்டு வந்தா. நான் மூண்டுமுறை வீட்டைச் சுத்தி ஓட்டம் பிடித்துவிட்டு பனை வடலிக்குள்ளை ஓடி ஒளிச்சிட்டன். ஒவ்வொரு பனை பனையா ஒளிச்சிருந்து கடைசியிலை என்னை அமுக்கிப் பிடிச்சே விட்டா. பிறகென்ன… வாயை இழுத்துப் பிடிச்சு ஒரே அமுக்காக மருந்தை விட, மூக்குக்குள்ளாலை கொஞ்சம் வர வாயுக்குள்ளை மிச்சம் முழுவதும் போய்ச் சேர்ந்தது. அந்த ஒருமுறை மருந்தோடை இருமல் பறந்து போச்சு. ஆனா கைராசியக்கா பற்றின பயம் தொற்றிக் கொண்டது.

    உடுப்புப்போட்டுப் பார்க்கும் இடத்திற்கு முன்னால் எல்லாரும் குழுமி இருந்தார்கள். கைராசியக்காவைக் காணவில்லை.

    “எங்கே கைராசியக்கா?”

    “அப்பம்மா உள்ளுக்கை உடுப்புபோட்டுப் பார்த்துக் கொண்டு நிக்கின்றா” என்றாள் ராசன் அண்ணையின் கடைசி மகள். பேர்த்தியும் உரிச்சு வைச்சாப்போல கைராசியக்கா மாதிரித்தான். சூரியோதயத்திற்காகக் காத்து நிற்பவர்கள்போல அதைச் சூழ்ந்து எல்லாரும் நின்றார்கள்.

    ”இஞ்சை மீனாச்சியக்காவினரை மகன் சிவயோகன் உங்களைப் பாக்கவெண்டு வந்து நிக்கின்றார்” ராசன் அண்ணை குரல் கொடுத்தார்.

    “ஏன் என்னைப் பாக்கிறதுக்கு இதுதானோ அவருக்குக் கிடைச்சிருக்கிற இடம்?”

    கைராசியக்காவின் குரல் உள்ளிருந்து கேட்டது. தொடர்ந்து கதவை நீக்கியபடி கைராசியக்கா காக்ரா சோளியுடன் வெளியே வந்தார். சூரிய உதயம்!

    “அப்பம்மாவுக்கு நல்ல வடிவா இருக்கு. இதையே வாங்குவம்” என்றாள் பேர்த்தி.

    அவவைப் பார்க்க சோளக்கொல்லை பொம்மைக்கு சொக்காய் புதுசா மாட்டினமாதிரி இருந்தது.

    ”போகிற போக்கிலை குண்டியிலை தட்டினா லைற் எரியுறமாதிரிச் சீலை இருந்தாத் தாங்கோ எண்டு கைராசி அக்கா கேட்டாலும் கேட்பா”

    “என்ன கைராசியக்கா மொடேர்ணா நிக்கிறியள்?” எனது கேள்வி அவவைக் கோபப்பட வைத்திருக்க வேண்டும்.

    “உனக்கடா வெளிநாடு வந்து திமிர் கூடிப்போச்சு. உனக்கொண்டு சொல்லிறன் கேள். ’காக்காய்ச்சோளி’ போடவேண்டுமெண்டது என்ரை சின்ன வயசு ஆசை. இப்பதான் நிறைவேறியிருக்கு. அப்ப ஒரு பத்துப்பன்னிரண்டு வயசிருக்கும். என்ரை அப்பனிட்டைக் கேட்டன். என்னை மரத்தோடை கட்டி விளாசு விளாசெண்டு விளாசிப்போட்டான். பிறகு என்ரை புருஷனைக் கேட்டன். உஷூம்… பிறகு பிள்ளை! ஆர் உவன் ராசன் தான். உவனாலும் முடியாமல் போச்சு. இப்ப எத்தினையோ தலைமுறை கடந்து பேத்தி வாங்கித் தாறாள். ஒரு பெட்டைச்சியாலை முடியிற காரியம் ஆண்வர்க்கத்தாலை முடியாமல் போச்சுது எண்டதுதான் இப்ப என்ரை கவலை”

    “அம்மா. உது வடிவா இருக்கு. உதையே வாங்குவம்” என்றான் ராசன். எல்லாரும் ஒத்துக் கொண்டார்கள்.

    “நான் இந்த உடுப்போடையே வரப்போறன். நீ போய் கவுண்டரிலை காசைக் குடுத்திட்டு வா. நான் இந்தத் தம்பியோடை கதைச்சுக் கொண்டு நிக்கிறன்”

    “நல்லா இருக்கு கைராசியக்கா…. இப்ப உங்களைப் பாக்க சிம்ரன் மாதிரி இருக்கு” கைராசியக்காவுடன் கதைத்துக் கொண்டிருக்கும்போது எனது ரெலிபோன் கிணுகிணுத்தது. மனைவிதான்.

    ரெலிபோனைக் கையிலெடுத்து ஒரு ஹலோ சொல்லவில்லை. எனது ரெலிபோனைப் பறித்து அருகே இருந்த குப்பைக்கூடைக்குள் எறிந்தா கைராசியக்கா.

    “எட அறுவானே! உனக்கு ஒரு ரெலிபோன் வாங்க வக்கில்லை. என்னோடை கதைக்க வந்திட்டாய். உதாலை ஒரு படம் எடுக்கலாமோ சொல்லு… இந்தாபிடி… இதிலை கதை!” என்றபடியே தனது மார்புக்குள் செருகியிருந்த கைத்தொலைபேசியை எடுத்து நீட்டினா கைராசியக்கா.

    அது ஒரு ’ஐ போன் 5’ என்று உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை.

    Share
  • தாய்மொழி தமிழ்.

     

    -கே.எஸ்.சுதாகர்

     

    மனோகரன் மாலை நேரங்களில்தான் அங்கு போவான். விரிவுரைகள் இல்லாத புதன், வியாழன் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவனுக்கு அங்கு வேலை காத்திருக்கும். பெரியதொரு வளவிற்குள் அந்த வீடு தனிமையில் இருக்கும். காரை கேற்றுக்குச் சமீபமாக நிறுத்திவிட்டு கொழுவியிருக்கும் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே போனால், முற்றத்திலே சாய்வணைக்கதிரையில் சரிந்தபடி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நியூமன் இருப்பார். நியூமன் (Robert Newman) ஒரு வெள்ளைக்காரன். கேற்றிலிருந்து வீட்டின் வாசல்வரை செல்லும் பாதையின் இருமருங்கிலும் அழகாக புல் வெட்டப்பட்டிருக்கும். சாய்வணைக்கதிரைக்குப் பக்கத்தில் ஒரு குட்டி மேசையும், இவனுக்கான கதிரையும் இருக்கும். மேசைக்குக்கீழே விரிக்கப்பட்டிருக்கும் பொலித்தீன் கடதாசி மீது சில தட்டுமுட்டுச் சாமான்களுடன் நாலைந்து புத்தகங்களும், அன்றைய புதினப்பத்திரிகையும் வாசிப்புக்காக இருக்கும்.

    இன்று நியூமனைக் காணவில்லை. மனோகரனுக்கான கதிரை போடப்பட்டிருந்தது. தயங்கியபடியே அதற்கண்மையில் போய் நின்று, சுற்றுமுற்றும் பார்த்தான். வீட்டுக்கதவு திறந்து கொண்டது. நியூமன் வெளியே வந்தார். இவனுக்காகவே ஜன்னலிற்குள்லால் பார்த்துக் கொண்டு நின்றிருப்பார் போலும்.

    “அமருங்கள். சீக்கிரம் வந்து விடுகின்றேன்” சொல்லிக்கொண்டே மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தார் நியூமன்.

    நியூமனிற்கு வாசித்துக் காட்டுவதுதான் மனோகரனுடைய வேலை. இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் வாசிக்க வேண்டும். தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும் என்பதில்லை. பலதும் பத்தும் இடையிடையே கதைத்துக் கொள்ளுவார்கள். பத்திரிகையை எடுத்து தலைப்புப்செய்திகளைப் படிப்பான். நியூமனிற்குப் பிடித்திருந்தால் அந்தப்பகுதியை முழுவதும் வாசிக்க வேண்டும். இல்லாவிடில் அடுத்த தலைப்பிற்குத் தாவி விடுவான். பத்திரிகை முடிந்து நேரம் இருந்தால் இலக்கியப்புத்தகங்கள் வரலாற்றுநூல்கள் படித்துக் காட்ட வேண்டும். 16ஆம் 17ஆம் நூற்றாண்டு காலத்திற்கு அவர்களின் உரையாடல் போய் வரும். நியூமனிற்கு புனைவு இலக்கியம் (fiction) பிடிப்பதில்லை. அபுனைவு இலக்கியத்தில்தான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பார்.

    மனோகரனின் ஆங்கில உச்சரிப்பு அற்புதம் என்று சொல்லுவார். மனோகரன் அவுஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த காரணத்தால் ஆங்கிலத்தை சரளமாக எழுதவும் பேசவும் முடிகிறது.

    ஆனால் தாய்மொழி தமிழ்? கேள்விக்குறியாகிவிட்டது.

    சிறுவயதில் நான்கு வருடங்கள் மனோகரன் தமிழ் படித்தான். தமிழ் படித்த போது புதிய எழுத்துகள், செய்திகளை அறிந்து கொண்டான். 4ஆம் வகுப்பு வரை சென்ற அவனை தொடர்ந்து கூட்டிச் செல்ல பெற்றோருக்கு வசதி வரவில்லை. இப்போதும் இனிமையாகத் தமிழ் கதைப்பான். ஆனால் சரளமாக எழுதவோ வாசிக்கவோ அவனால் முடியாது. சிட்னியில் இருப்பதுபோல மெல்பேர்ணில் எந்தவொரு அரச பாடசாலையிலும் தமிழ் சொல்லிக் கொடுப்பதில்லை. சனி ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் கொம்மியூனிற்றிக் கிளாசில்தான் (Community class) போய்தான் படிக்க வேண்டும்.

    அந்தப்பெரிய பங்களாவில் நியூமன் மாத்திரமே இருந்தார். அவரின் மனைவி இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. நியூமனிற்கு மூப்பு காரணமாக கண்பார்வை குறைந்திருந்தாலும் தனக்குரிய வேலைகளைத் தானே செய்து வருகின்றார். மனோகரன் அங்கிருக்கும் சிலதருணங்களில் ஒரு வைத்தியர் அங்கு வந்து போவதைக் கண்டிருக்கின்றான். தவிரவும் அருகே இருக்கும் நண்பர் ஒருவர் கடையில் சில பொருட்களை வாங்கி வந்து கொடுப்பார், நியூமனுடன் உரையாடுவார்.

    சிலவேளைகளில் வாசிப்பிலும் நியூமன் ஆர்வம் காட்டமாட்டார். மனோகரனுடன் கதைத்துக் கொண்டிருப்பதைத்தான் பெரும்பாலும் அவர் விரும்புகின்றார். தனிமையில் இருப்பவருக்கு மனோகரன் ஒரு நண்பன்.

    மனோகரன் கடந்த இரண்டு மாதமாக இங்கே வந்து போகின்றான். அவனுக்கு முதல் ஒருசிலர் அங்கே வந்து போயிருக்கின்றார்கள். அவர்கள் பற்றுதலுடன் வேலை செய்யவில்லை. காசிலேதான் குறியாக இருந்தார்கள். மனோகரன் நியூமனை எப்படிச் சந்தித்தான் என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டும். பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது சில பகுதி நேர வேலைகளுக்கு மனோகரன் போவதுண்டு. அப்படித்தான் ஒருநாள் அந்த விளம்பரத்தைப் பார்த்தான். ‘ஆங்கிலம் நன்கு கதைக்க வாசிக்கத் தெரிந்த ஒருவர், வாரத்தில் 3 அல்லது 4 நாட்களுக்கு தேவை.’ இதுதான் மனோகரன் பார்த்த விளம்பரம்.

    “இன்று நான் ஹொஸ்பிற்றல் போயிருந்தேன். வரும்போது நூல்நிலையம் சென்று வந்ததால் நேரம் பிந்திவிட்டது” என்று சொல்லிக்கொண்டே நியூமன் வந்து தனது இருக்கையில் அமர்ந்தார். வழமைபோல வாசிப்பு ஆரம்பமாகியது. சற்று நேரத்தில் கீழே குனிந்து, அடுக்கி வைத்திருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்தார். கண்ணை அகலத்திறந்து ஒருசேர உற்று அதைப் பார்த்தார். புத்தகத்தின் விளிம்பில் பெருவிரலைப் பதித்து வேகமாக விசிறி பக்கங்களைப் புரட்டிவிட்டு,

    “இன்று நூல்நிலையத்தில் இருந்து எடுத்து வந்தேன். பெரிய எழுத்துக்கள் கொண்ட புத்தகங்கள். large printed materials என்று இதைச் சொல்வார்கள். கண்பார்வை குறைந்த என்போன்றவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். உங்களது தாய்மொழியிலும் இப்படிப்பட்ட புத்தகங்கள் இருக்கின்றனவா?” என்று மனோகரனைப் பார்த்துக் கேட்டார்.

    அவை சாதாரண புத்தகங்களைவிட நீளமாக இருந்தன. தமிழில் இப்படியான பெரிய எழுத்துகள் கொண்ட புத்தகங்களை மனோகரன் இதுவரை காணவில்லை. சிலவேளைகளில் இருக்கலாம்.

    “உமக்கொரு செய்தியொன்று நான் சொல்ல வேண்டும். இன்றிலிருந்து உமக்குரிய ஒவ்வொருகிழமைச் சம்பளத்தையும் முன்னதாகவே தந்துவிடுவேன்” திடீரென வாசிப்பின் நடுவே பீடிகை போட்டார் நியூமன். மனோகரனுக்கு அவர் என்ன சொல்கின்றார் என்று புரியவில்லை. நியூமனின் முகத்தை உற்று நோக்கினான் அவன்.

    “எப்பவாகிலும் நீர் இங்கு வரும்போது, சிலவேளை நான் இங்கு இருக்கமாட்டேன்!”

    “ஏன் எங்காவது வெளிநாடு போகப் போகின்றீர்களா?” என்று வியப்புடன் மனோகரன் கேட்டான். புன்முறுவல் பூத்தபடியே நியூமன் தனது இரண்டு கைகளையும் உயர்த்தி மேல் நோக்கிக் காட்டினார். மனோகரன் திடுக்கிட்டுப் போனான். அவனின் நெஞ்சு சற்று வேகமாக அடித்தது. என்ன கதைப்பது என்று தெரியாமல் திக்குமுக்காடினான். திடீரென்று கேட்ட அந்த அதிர்ச்சி தரும் செய்தியை சொல்லில் விளக்கிவிடமுடியாது. அவனது திடீர் மாறுதலைக் கண்ட நியூமன் தானே பேச்சைத் தொடர்ந்தார்.

    “நான் ஒரு கான்சர் நோயாளி. சிலவேளை சொல்லாமல் கொள்ளாமல் உங்களைவிட்டுப் பிரிந்து விடக்கூடும்.”

    மனோகரன் நிலத்தை நோக்கிக் குனிந்தபடி இருந்தான். அவனால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. அழுதுவிடுவேனோ என்று பயந்தான். அவனது நிலமையறிந்த நியூமன் 15 நிமிட இடைவேளை விட்டார். வீட்டிற்குள் சென்று இரண்டுபேருக்குமாக தேநீர் தயாரித்து, ஒரு பிளேற்றில் கொஞ்ச பிஸ்கற்றும் அடுக்கி எடுத்து வந்தார். இருவருமாக பிஸ்கற்றைச் சாப்பிட்டு தேநீர் பருகிக் கொண்டார்கள்.

    “முதலில் எனக்கு ஒருவருடம் என்று சொன்னார்கள். இன்று எட்டுமாதங்கள்தான் என்று சொல்லிவிட்டார்கள். குருதிப்புற்றுநோய் வேகமாகப் பரவிவிட்டது.”

    அருகேயிருந்த ஒரு கொப்பியை நீட்டி, மனோகரனின் தொலைபேசியையும் முகவரியையும் அதில் எழுதும்படி நியூமன் சொன்னார். அவனது விபரங்களை அவர் ஏற்கனவே தெரிந்திருந்தாலும், அது ஒரு பிரதித்தியேகமான கொப்பி என்பதை மனோகரன் அறிந்துகொண்டான். அதில் ஏறக்குறைய பத்துப்பேரின் முகவரிகள் இருந்தன.

    அங்கிருந்து வீட்டிற்குத் திரும்பும்போது கவலை தோய்ந்த முகத்துடன் வெளியேறினான் மனோகரன். நியூமனை ஒருதடவையேனும் திரும்பிப் பார்க்காமல் காரை நோக்கி வேகமாக நடந்தான். அவன் போவதைப் பார்த்தபடி நியூமன் புன்முறுவலுடன் நின்றிருந்தார்.

    அவன் சிந்தனை குழம்பியது. காரை ஓட்டுவதில் கவனம் சிதறியது.

    “கெடு குறிக்கப்பட்ட ஒருவரா இத்தனை புத்தகங்களையும் அன்றாட தினசரிகளையும் வாசிக்கின்றார்!”

    மனோகரனால் நம்ப முடியவில்லை. இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்களா?

    இரவு ஒன்பது மணியளவில் மனோகரன் வீடு திரும்பினான். அவனது அப்பா டைனிங் ரேபிளில் அவனுக்காகக் காத்திருந்தார். வேலையிலிருந்து ஓய்வு பெற்றதன் பின்னர், தினமும் அவன் வரும் வரையும் காத்திருந்து அவனுடன் இரவுச்சாப்பாட்டை சாப்பிடுவதுதான் அவரது வழக்கம். மாலை வீட்டை விட்டுப் புறப்படும் போது எப்படி இருந்தாரோ – அதே கோலத்தில் மகனுக்காகக் காத்திருந்தார். அம்மா படுக்கைக்கு நேரத்துடனே போய்விடுவார். அவர் இன்னமும் றெஸ்ற்ரோரன்ற் ஒன்றில் பகுதி நேரமாக வேலை செய்து வருகின்றார். சிலவேளைகளில் இவர்களின் அரவம் கேட்டு எழுந்து வருவார்.

    “அப்பா சாப்பிட்டீர்களா?” – “ஓம்.”

    “பொய் சொல்லாதீர்கள். அம்மாவுக்கும் உங்களுக்கும் சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன்.”

    “அம்மா இனிச் சாப்பிட மாட்டா. நாங்கள் இருவரும் சாப்பிடுவோம்.”

    இருவரும் டைனிங் ரேபிளுக்குப் போனார்கள். மனோகரன் ஒரு கதிரையில் அமர்ந்து கொண்டான். அப்பா நடப்பதை அவதானிக்கின்றார். சாப்பாட்டை இரண்டு தட்டுகளிற்குள்ளும் பிரிக்கின்றான் மனோகரன். ‘வைன்’ போத்தல் ஒன்றை உடைத்து, கப்பிற்குள் ஊற்றி அப்பாவிற்கு நீட்டுகின்றான். சாப்பிடத் தொடங்குகின்றார்கள்.

    “அப்ப இனி நீ ஒரு டொக்ரர் என்ன?”

    மனோகரன் சிரிக்கின்றான்.

    “அப்பா நான் உங்களிடம் ஒருவிஷயம் விஷயம் கதைக்க வேண்டும்”

    “சொல்லு?”

    “நான் தமிழ் படிக்கப் போகின்றேன்”

    அப்பா மகனை ஆச்சரியமாகப் பார்க்கின்றார்.

    “இனி எப்படி நீ சின்னப்பிள்ளையளோடை போய் இருந்து தமிழ் படிக்கப் போகிறாய்?”

    “படிப்புக்கு வயது ஏது அப்பா?”

    தமிழ் படிக்காததையிட்டு மனோகரனுக்கு இதுவரைகாலமும் கவலை இருந்ததில்லை. கவலை எல்லாம் பெற்றவர்களுக்குத்தான். எத்தனையோ வீடுகளில் பலபேரின் பாட்டா, பாட்டிமார்கள் – தங்கள் பேரப்பிள்ளைகளை – கழுத்திலே தண்ணீர்ப்போத்தலை தொங்கவிட்டு, அவர்களின் புத்தகப்பொதியை சுமந்து சென்று அவர்களுக்கு தங்களின் தாய் மொழியைக் கற்பித்தார்கள். அந்த நேரத்தில் இவர்களுக்கு மொழி பற்றிய பிரக்ஜை இருந்தபோதும் வசதி இருக்கவில்லை.

    மனோகரனை நினைத்தபடியே தந்தை சாப்பிடத் தொடங்கினார். சாப்பாட்டை மூக்கு முகம் என எல்லா இடங்களிலும் அப்பிப் பிரட்டினார். ‘வைன்’ உதடுகளில் இருந்து மகிழ்ச்சிப் பிரவாகத்தில் வழிந்தது. மனோகரன் அவரது வாயைச் சுட்டிக் காட்டி சிரிக்கத் தொடங்கினான். நீண்ட நாட்களின் பின்னர் அந்த வீட்டிலிருந்து கிழம்பிய மகிழ்ச்சியும் சிரிப்பும் அது. கதவை மெதுவாக நீக்கி பெட் ரூமிலிருந்து அம்மா எட்டிப் பார்க்கின்றாள். அவளின் அந்தப்பார்வை – அந்தக்காட்சி – இரவு என்பதையும் மறந்து அவர்கள் இருவரையும் மேலும் சிரிக்கத் தூண்டியது. அம்மா இவர்களை நோக்கி வருகின்றாள். அவர்கள் இருவருக்குமாக ‘நியூமன்’ என்ற மனிதரின் கதை காத்துக் கிடக்கின்றது.

     

     

     

    Share
  • வீணாகப் போகும் மருந்துகள்

    கே.எஸ்.சுதாகர்

    ஒருமுறை எனது குடும்ப வைத்தியர் Prednisolone என்ற மருந்தை எழுதித் தந்துவிட்டு அதை எப்படி பாவிப்பது என்று ஒரு சூத்திரத்தையும் போட்டுத் தந்தார். முதல் 3 நாட்களும் ஒவ்வொரு நாளும் 3 குளிசைகள் வீதமும், அடுத்த 2 நாட்களும் ஒவ்வொரு நாளும் 2 குளிசைகள் வீதமும், அடுத்த 2 நாட்களும் ஒவ்வொரு நாளும் 1 குளிசை வீதமும், அடுத்த 2 நாட்கள் ஒவ்வொரு நாளும் பாதிக்குளிசை வீதமும் எடுக்க வேண்டும். அந்த மருந்தின் பக்கவிளைவுகள் பற்றியும் திகிலூட்டினார். எப்படித்தான் கூட்டினாலும் மொத்தம் 16 குளிசைகள்தான் எனக்குத் தேவைப்படும். மருந்துக் கடையில் 60 குளிசைகள் கொண்ட மருந்துப் போத்தல்தான் இருந்தது. மிகுதியை என்ன செய்வது? வைத்திருந்து மீண்டும் தேவைப்படும்போது பாவியுங்கள் என்றார் அங்கிருந்த மருந்துக் கடையில். போத்தலில் முடிவு திகதி (expiry date) ஒரு வருடம் என்றிருந்தது. பிறகு எனக்கு அது தேவைப்படவில்லை. expiry date வரும் வரையும் வைத்திருந்துவிட்டு எறிந்துவிட்டேன். மருந்துகளின் விலை இப்போது எக்கச்சக்கம். என்ன செய்வது? தேவைப்படும் அளவுக்கு மருந்து வாங்கமுடியாததால் மருந்தும் காசும் வீண் விரயமாகின்றன.

    எனது ஊரைச் சேர்ந்த ஒருவர் பல் மருத்துவராக வேலை பார்க்கின்றார். அவர் என்னை எங்கு கண்டாலும் தெரியாதமாதிரிப் போய்விடுவார். அதிகம் கதைக்கமாட்டார். அவரிடம் பல்லுப் பிடுங்கப் போனதும், முரசிற்குள் விறைப்பிற்கான ஊசியைப் போட்டவுடன் கதைக்க ஆரம்பித்துவிடுவார். பிறகு புகையிரதம் போவது மாதிரி ‘கடக்கடா புடக்கடா’ என்று நிறுத்தவே மாட்டார். நாங்கள் வாயே திறக்கமாட்டோம் என்ற தைரியம் அவருக்கு. அவர் சொல்லும் எல்லாவற்றையுமே கேட்கவேண்டியதுதான். “நீர் என்ன சிவில் இஞ்சினியரோ? ஒரு வீடு அல்லது பாலம் கட்டும்போது அத்திவாரம் எவ்வளவு உறுதியாக இருக்கவேணுமோ அப்பிடித்தான் பல்லும். பல்லுப் போனா சொல்லுச் போச்சு எண்டு பழமொழி இருக்கல்லோ! பல்லை அடிக்கடி கிளீன் பண்ணவேணும். எத்தனை வருஷ்ம் கிளீன் பண்ணி. பாளம் பாளமா வருது?” கன்னங்கரிய நிறத்திலிருக்கும் அவர் தனது வாயைத் திறந்து ஈ என்று காட்டுவார். மின்னல் ஒன்று அடிச்சாப்போல அறை பிரகாசிக்கும். எல்லாவற்றையும் ம் ம் என்று கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். விறைப்பு நீங்கும்போது அவரும் தனது கதையை நிறுத்தியிருப்பார்.

    இப்போது அவரின் ஞாபகம் வரக்காரணம், நேற்று என்னுடைய நண்பர் ஒருவர் அவரிடம் போயிருந்தார். அவரும் யான் பெற்ற அனுபவத்தைப் பெற்றிருப்பார். பல்லைப்பிடுங்கியபின் அதன் வலி போக மருந்து ஒன்றை எழுதிக் கொடுத்திருந்தார். மருந்தை மூன்றுவேளை பாவித்தால் போதும் என்று கூறியிருந்தார். நண்பர் பார்மசிக்கு முன்னால் நின்றபடி, எதிரே தெரியும் மது பானக்கடையை வெறித்துப் பார்த்தபடி தீவிர யோசனையின் நின்றார். என்ன விஷயம் என்றேன். “பல்லுப் பிடுங்கியிருக்கின்றேன். பல மருத்துவர் 3 மாத்திரைகள் போட்டால் போதும் என்றார். பார்மசியில் 3 மாத்திரைகள் கேட்டால் ஒரு பெட்டியை எடுத்து நீட்டுறான். பெட்டியிலை 30 இருக்கு. விலையும் 45$. மிச்சத்தை நான் என்ன செய்வது? அதுதான் இந்த மருந்தைப்பற்றி கொஞ்சம் யோசிக்கிறேன்” என்று எதிரே தெரியும் மதுபானக் கடையைக் காட்டினான். சொல்லிவிட்டு எனது பதிலுக்குக் காத்திராமல் அதை நோக்கி நடந்தான். நடப்பதை ஓரமாக நின்று அவதானித்தேன். சற்று நேரத்தில் ஒரு போத்தலுடன் கடைக்குள்ளிருந்து வெளியே வந்தான். கடைக்கு முன்னாலேயே நின்று அதை உடைத்தான். அண்ணாந்து போத்தலுடன் வாயிற்குள் சரித்தான். பிறகு அதன் மூலமே வாயைக் கொப்பளித்தான். இன்று அவனைச் சந்தித்தபோது, “அது மச்சான் ஒரு 25 டாலரோடு எல்லாக் கொதி வலியும் போச்சுது” என்றான்.

    படத்திற்கு நன்றி:

    http://news.bbc.co.uk/2/hi/health/606983.stm

    Share
  • இருவேறு பார்வைகள்

     

    கே.எஸ்.சுதாகர்

     

    இன்று காலை 11 மணிக்கு எனக்கொரு ஹொஸ்பிட்டல் அப்பொயின்மன்ற் இருந்தது. தேநீர் குடித்துவிட்டு அவசர அவசரமாகப் புறப்படுகின்றேன். இந்தத்தடவை இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்காமல் ஹொஸ்பிட்டலைவிட்டு நான் திரும்பப் போவதில்லை.

    மூன்றாவது தடவை ஒப்பரேஷன்.

    முதன்முதலில் இந்த வைத்தியசாலைக்கு வந்தபோது, ‘Fistula’ என்று அந்த இளம் டாக்டர் சொன்னதும் நான் சிரித்துவிட்டேன். பென்குவின் போன்ற உதடுகளைக் கொண்ட அந்த பிலிப்பீன்ஸ் நாட்டுப்பெண், ஏதோ தனது பாஷையில் சொல்கின்றாளாக்கும் என நினைத்துக் கொண்டேன். ஆனால் சிரிப்பதற்கு இதில் எதுவும் இல்லை என்று பின்னர் புரியலாயிற்று. பயந்து விடாதீர்கள். ‘பிஸ்ரியூலா’ என்பது ஒரு வருத்தத்தின் பெயர். இந்தமாதிரி ஒரு வருத்தம் எமது நாடுகளில் வந்திருந்தால், அதைக் குணப்படுத்த எடுக்கும் செலவை ஈடு செய்ய வாழ்நாள் முழுக்க உழைக்க வேண்டியிருந்திருக்கும். இங்கு அவுஸ்திரேலியாவில் எல்லாமே இலவசம். வருத்தங்களும் இலவசம். அது எனக்கு எப்படி வந்தது என்பதை உங்களுக்கு நான் சொல்லியாக வேண்டும். அது ஒரு சிறு சரித்திரம்.

    ஒருமுறை எனது ஆசனவாயிலுக்கு அண்மையாக ஒரு கட்டி வந்தது. சாதாரணமாகத் தோன்றி மறையும் கட்டி போலத்தான் ஆரம்பத்தில் அது இருந்தது. நாளடைவில் அது பெருத்து ஒரு குண்டுமணி போலாகிவிடது. நாட்டுமருந்தான ‘கறுப்புக்கழியை’த் தேடி கடை கடையாக அலைந்தேன். வெள்ளைக்காரன்ரை கடையிலை அது கிடைக்காது என அறிந்ததும், வியட்நாம் ‘சைனீஸ்’ கடைகளை நோக்கி நடையைத் திருப்பினேன். தென்படும் குட்டிப்போத்தல்கள் ரின்களை ஆராய்ச்சி செய்து மருந்து ஒன்றைப் பெற்றுக் கொண்டேன். பூசி சிலநாட்களில் கட்டி உடைந்தது. மாறி வருவது போன்று மாயை காட்டி, பின்னர் மீண்டும் உருக் கொண்டது. நாளாக அது ‘நாட்பட்ட புண்’ என்று பெயர் எடுத்துகொண்டது. வெட்கத்தில் டாக்டருக்குக் காட்டாமல் இருந்தது பெரியதொரு சங்கடத்தை உருவாக்கிவிட்டது. இப்போது திறந்தே கிடக்கும் புத்தகம் போலாகிவிட்டேன்.

    புலம்பெயர்ந்து வந்த காலம். அப்பொழுதெல்லாம் வேலைக்கு மனுப் போட்டால் நேர்முகப் பரீட்சைக்குக் கூப்பிடுவதில்லை. அதற்கான பதிலும் கிடைப்பதில்லை. ரெலிபோன் செய்து விசாரித்த போது சில விஷயங்கள் புரிந்தன.

    “நீங்கள் அவுஸ்திரேலியாவிற்கு வந்து சிறிது காலம் வேலை செய்திருக்கவேண்டும். உங்களுக்கு அவுஸ்திரேலியாவில் வேலை செய்த முன் அனுபவம் இருக்க வேண்டும்”

    “முன் அனுபவம் என்பது ஏதாவது ஒரு வேலை சம்பந்தமானது. அது சுப்பர்மார்க்கெட்டாகவோ அல்லது ஏதாவதொரு தொழிற்சாலையாகவோ இருக்கலாம். நீங்கள் உங்களது சொந்தநாட்டில் செய்த வேலையாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. அதன் பிறகுதான் உங்களை நேர்முகத் தேர்வுக்குக் கூப்பிடுவோம்” என்று விளக்கம் தந்தார்கள்

    முதலில் ஒரு சுப்பர்மார்க்கெட் சென்று விசாரித்துப் பார்த்தேன். அவர்கள் சொன்ன பதில் எனக்கு மேலும் வியப்பைத் தந்தது.

    “உங்களுக்கு அவுஸ்திரேலியாவில் ஏதாவது வேலை செய்த முன் அனுபவம் உண்டா? சுப்பர்மார்க்கெட் என்று இல்லை. ஏதாவது … யோசித்துப் பாருங்கள்” அதே உரையாடலைத் திருப்பிப் போட்டார்கள். அவர்கள் உரையாடுவதில் கில்லாடிகள். சொன்னதையே நோகாமல் திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளைகள். எங்கு சென்றாலும், “அவுஸ்திரேலியாவில் …” என்று ஆரம்பித்து விடுவார்கள்.

    யார் அந்த அனுபவத்தை எனக்குத் தந்து என்னை அசர வைக்கப் போகின்றார்கள்?

    ஒரு வேலையைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் அத்தனையையும் செயற்படுத்தினேன். விடாமுயற்சி. தன்னம்பிக்கை. தீவிர தேடுதல். Yellow Pagesஐப் பார்த்து எண்ணற்ற இடங்களுக்கு Resumeயுடன் Covering letterஐயும் இணைத்து அனுப்பினேன். கடித உறையின் மூலையில் சந்தணம் குங்குமமும் பூசத் தவறவில்லை.

    கை மேல் பலன் கிட்டியது. சண்சைன் என்ற இடத்திலிருந்த ‘டயமண்ட் பிறஸ்’ என்னை வரவேற்றது. பாருங்கள் பெயர்களை – சண்சைன்(Sunshine), டயமண்ட் பிறஸ்(Diamond Press). ஆரம்பமே அசத்தலாக இருந்தது. வேலை! – free wayஇல் வாகனங்கள் விரைந்து செல்லும் வேகம். ‘அந்த’ வேகத்தில் சீனத்துப்பெண்கள், வியட்நாமியப்பெண்கள் எல்லாம் என்னமாய் வேலை செய்கின்றார்கள்! ஒருவேளை அவர்கள் தாய்நாட்டில் இருந்த போது இதைவிட இன்னமும் கடினமாக உழைத்திருப்பார்களோ?

    அங்குதான் எனக்கு இந்த வியாதி ஆரம்பமாகியிருக்க வேண்டும். எந்தவொரு சரீரத் தொழில்களும் செய்து பழக்கப்படாத எனக்கு தொடர்ச்சியாக உடம்பை வருத்தியதில் உருவாகியிருக்கலாம். ஆபரேஷன் செய்யப் போனபோது பெரியதொரு விளக்கம் காத்திருந்தது. Anal Glands எனப்படும் சுரப்பிகள் அடைபடும்போது, அதிலிருந்து வெளிப்படும் வழவழப்பான நீர் வெளிப்படாமல் கிருமிகள் பாதிப்பதால் இந்த சீழ்க்கட்டிகள் ஏற்படுகின்றன. அந்தக் கட்டிகள் வெடித்த உடனே பெளத்திரமாக (Fistula) மாறிவிடும். அந்த வெடிப்பு உட்புறமாக வெடித்தால் complicated Fistula என்றும் வெளிப்புறமாக வெடித்தால் Low Fistula என்றும் சொன்னார்கள். நல்லவேளை எனக்கு வெளிப்புறமாக வெடிப்பு நிகழ்ந்திருந்தது. சத்திரசிகிச்சை மிகவும் எளிமையானது என்று வெளிநோயாளர் பிரிவு டாக்டர் சொல்லியிருந்தார். வெளிநோயாளர் பிரிவில் இருக்கும் டாக்டர்கள் சர்ஜரி (surgery) செய்வதில்லை. அவர்கள் consultation செய்யும் டாக்டர்கள். வெளிநோயாளர் பிரிவில் இருந்த டாக்டரை இரண்டு தடவைகள் சந்தித்து ஆலோசனைகள் பெற்றிருந்தேன். இருந்தும் எனக்கு ஆபரேஷன் செய்யவிருக்கும் டாக்டரைச் சந்திக்க முடியவில்லை. அவர் ஹொஸ்பிற்றலில் மிகவும் பிரபலம் ஆனவர். ஓய்வின்றி வேலை செய்பவர். 65 வயதைத் தாண்டிய அனுபவசாலி. அவர் செய்த ஆபரேஷன்களில் தொண்ணூறு வீதத்திற்கும் மேல் சக்ஸஸ் என்றார்கள்.

    எனக்கு ஒரு புதன்கிழமை சத்திரசிகிச்சை. ஏழு மணிக்கு வைத்தியசாலையில் நிற்க வேண்டும். அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து விட்டோம். உச்சக்கட்ட குளிர்காலம். தெருக்கள் எல்லாம் பனிப்புகாரில் மூழ்கியிருந்தன.

    படிவங்களைப் பூர்த்தி செய்தோம். ‘இரவு 12 மணிக்குப் பிறகு எதுவுமே சாப்பிடவோ குடிக்கவோ இல்லை’ என்பதை உறுதி செய்து கொண்டார்கள். என்னதான் ஏழுமணிக்கு வரச் சொன்னாலும் எல்லாமே ஒன்பது மணிக்குப் பிறகுதான் ஆரம்பமாகியது. என்னைப்போல சிலர் முன்பே வந்திருந்தாலும், பலர் அனுபவப்பட்டவர்களாகவே இருந்தார்கள். மனைவி கவுண்டரில் இருந்த பெண்ணிடம் டாக்டரின் திறமை பற்றி மீண்டும் விசாரித்தாள். அவள் தன் பெருவிரலை உயர்த்திக் காட்டி ‘சுப்பர்’ என்றாள். பின்னர் நானும் மனைவியும் கதிரைகளில் அமர்ந்து ரெலிவிஷன் பார்க்கத் தொடங்கினோம். ரெலிவிஷனில் குழந்தைகளின் கார்ட்டூன் போய்க்கொண்டிருந்தது

    தீய சக்திகள் எம்மை நெருங்காமல் இருக்க, மந்திரம் ஓதி நூல் கட்டுவது போல – என் பெயர், பிறந்த திகதி, பதிவு எண் எல்லாம் கொண்ட ஒரு பட்டி என் மணிக்கட்டில் கட்டப்பட்டது. காதிற்குள் வெப்பமானி புகுந்து உடலின் உஷ்ணத்தைக் காட்டியது. எடை பார்த்து, எனிமா தந்தார்கள். ஆடை களைந்து அவர்கள் தந்த வெள்ளை ஆடைக்குள் புகுந்து கொண்டேன். நான் பயந்தது எல்லாம் அனித்தீசியாவுக்குத்தான். அனித்தீசியாவிற்குப் பிறகு எனக்கு இந்த வெள்ளை ஆடைக்கும் பயம்.

    “மனைவிக்கு கை காட்டிவிட்டு, யம் பண்ணி பெட்டில் ஏறிக் கொள்ளுங்கள்” என்றார் ஸ்ரெச்சரை உருட்டி வந்தவர்.

    அனித்தீசியா தரும் மனிதரின் முகம் எந்த நேரமும் சிரித்தபடி இருந்தது. அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். அவர் தனது பெயரை வாயிற்குள் முணுமுணுத்தபோது ‘சித்ர புத்ர’ என்று எனக்குக் கேட்டது. சேர்ஜரி டாக்டர் யமனாக இருக்கும்பட்சத்தில் அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும். Dr. Death (Jayant Patel) என்றொருவர் குவீன்ஸ்லண்டைக் கலக்கிவிட்டுப் போன பின்னர், எந்த சேர்ஜரி டாக்டரைப் பார்த்தாலும் ஒரு பயம் வரத்தான் செய்கிறது. Dr. Death ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஏராளமான நோயாளிகளை வெட்டிக்கொத்தி மேலுலகம் அனுப்பியவர். குவீனஸ் புத்தகத்தில் அவர் பெயர் வந்ததா என்று தெரியவில்லை. சித்ரபுத்ர, எனது பூர்வீகம் இன்ன பிற அவுஸ்திரேலிய நடப்புக்களை விசாரித்தவாறே தனது காரியத்தைத் தொடங்கினார். அவருடன் கதைத்துக் கொண்டிருக்கும் போது நேரம் பத்துமணியைத் தாண்டியிருந்தது. மீண்டும் விழித்துக் கொண்டபோது மணி பிற்பகல் ஒன்றரை. “Can you hear me? Can you hear me? What is your name?” என்று ஒருவர் என்னைத் தட்டி சளைக்காமல் கேட்டபடி இருந்தார். அனித்தீசியா மயக்கத்தை அவர் சோதிக்கின்றார். சோதனைக்கு ஒரு அளவு வேண்டாம்…! என்னுடைய பெயர் தெரியாமலா இவ்வளவு நேரமும் எனக்கு ஒப்பரேஷன் செய்தார்கள்?

    வைத்தியசாலையில் இருந்த நாள் முழுவதும் அங்கிருந்த அழகிய •பிஷியோதிரபிஸ்ட் பெண்கள் அனைவரும் முரட்டுப்பெண்கள் போல நடந்து கொண்டார்கள்.

    வீட்டிற்கு வந்த இரண்டாவது நாள், பார்பரா கிறகாம் (Barbara Graham) என்ற டிஸ்றிக் நேர்ஸ் (district nurse) ஒரு தூக்குப்பெட்டியுடன் வீட்டிற்கு வந்தார். அவரைப்பற்றி ஒரு ‘வைர’ வரியில் சொல்வதென்றால், ‘அவர் ஒரு புளோரிங் நைட்டிங்கேல்.’ தன்னுடைய பரம்பரை மருத்துவத்துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்று பெருமையாகச் சொல்லுவார். மிகவும் அழகானவர். அவளின் மூக்கு சற்றுத் தூக்கலாக இருக்கும். நோயாளிகளைக் கண்ட மாத்திரத்தில் அவரின் மேலுதடு தானாக எழுந்து மூக்கின் துவாரங்களை மூடிக்கொள்ளும். ஆதியில் ஒட்டகச்சிவிங்கிகளுக்கு கழுத்து நீண்டதற்கு கூர்ப்புதான் காரணம் என்றால், பார்பராவின் மூக்கு மேல் நோக்கிச் சரிந்து கொண்டு செல்வதற்கும் கூர்ப்புதான் காரணம் என்பேன்.

    பார்பராவிற்கு ஈடாக என் மனைவியையும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. தினமும் அவர் வருவதற்கு முன்னர் salt bath எடுக்க வேண்டும். இருந்தும் இருவரது பணிவிடைகளும் பலன் தரவில்லை. மூன்றாவது வாரம் அடைகாத்திருக்கும் முட்டை ஓட்டை, முட்டி மோதும் குஞ்சு போல வெளித் தள்ளியது பெளத்திரம்.

    முதாவது ஒப்பரேஷன் முடிந்து, லீவில் மூன்று வாரங்கள் வெற்றிகரமாக நின்றுவிட்டு மீண்டும் வேலைக்குப் போனேன். மேலுக்கு வரும்படி மனேஜர் சைகை செய்தார். அவரது அறை இரண்டாவது மாடியின் தொங்கலில் இருந்தது. நடப்பதற்குக் கஸ்டப்பட்டு மேலேறுவதைக் கண்ட டேவிட் “நில்லும்… நில்லும்” என்று  சத்தமிட்டபடி கீழிறங்கி வந்தார். வந்தவர் என்னுடைய வருத்தத்தைப் பற்றிக் கேட்கவில்லை; சுகத்தை விசாரிக்கவில்லை.

    “நீர் இலங்கையில் இருந்த போது என்ன வேலை செய்தீர்?” என்றார். மூன்றுவாரங்களாக அவர் இந்தக் கேள்வியை மனதில் தேக்கி வைத்திருக்க வேண்டும். கேள்வியின் தொனி அப்படியிருந்தது.

    “ஆர்கிடெக்ட் (Architect) ஆக இருந்தேன்” என்றேன் நான்.

    “அப்ப இங்கு என்ன செய்கின்றீர்?”

    “அவுஸ்திரேலியா அனுபவம் தேடுகின்றேன்.”

    “நான் உமக்கு reference letter தருகின்றேன். பொருத்தமான வேலைக்கு அப்ளை பண்ணும்.”

    அடுத்தநாள் வேலைக்குப் போன எனக்கு அதிசயம். Reference letter உடன் வேலையிலும் சிறு மாற்றம் காத்திருந்தது. கணக்கியல் பிரிவில் ஒரு புது வேலை

    இரண்டுமாத காலங்களின் பின்பு மீண்டும் வைத்தியசாலை. மீண்டும் வெள்ளை ஆடை. அதே டாக்டர்கள், நேர்ஸ்மார். இப்பொழுதெல்லாம் இரத்தம் குத்தி எடுக்கும்போது பயம் வருவதில்லை. இறைக்கின்ற கிணறுதானே ஊறும். என்னதான் மனதளவில் தைரியம் இருந்தாலும் உடல் வலுவிழந்துவிட்டது. காலை பத்து மணிக்கு ‘ஜம்’ பண்ணி ஸ்ரெச்சரில் ஏறிய நான் கண் விழிக்கும் போது மாலை ஐந்து மணியாகி விட்டது.

     

    மறுபடியும் பார்பரா வரத் தொடங்கினார். இந்தப்புனிதமான தொழிலுக்கு முகம் சுழிக்காத புன்னகை கொண்ட பார்பரா மிகவும் பொருத்தமானவர். வந்த முதல்நாள் றெஸ்ஸிங் செய்யும் போது கெக்கட்டம் விட்டுச் சிரித்தார். “இதென்ன இது? ஒரு வால் ஒன்று நீண்டு கொண்டு நிற்கின்றது? இத்தனைகால சர்வீசில் இப்படி ஒரு வால் முளைத்து நான் பார்த்ததில்லை” என்றார் பார்பரா. அன்று முழுவதும் அவர் சிரிப்பு அடங்கவில்லை. தடவிப் பார்த்ததில் பிளாஸ்ரிக் போன்றதொரு நாடா உடம்பிற்குள்ளிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. “மறந்து போய் விட்டு விட்டார்களோ?” என்ற மனைவியின் கேள்விக்கு, “எனக்கும் தெரியவில்லை!” என்று சொல்லிக் கொண்டே வைத்தியசாலைக்கு ரெலிபோன் செய்தார் பார்பரா.

    “அது Penrose drain tube. அதை நாங்கள்தான் வைத்தோம். காயமுள்ள இடத்திலுள்ள தேவையற்ற நீரை அகற்றுவதற்கும், அதன் தடத்தின் வழியே சென்று சரியான இடத்தைக் கண்டு பிடித்து ஒப்பரேஷன் செய்வதற்குமாக அதை வைத்திருக்கின்றோம்” என்று வைத்தியசாலையிலிருந்து பதில் தந்தார்கள். இங்கே கேட்டதற்கு மாத்திரம்தான் பதில் சொல்வார்கள். தேவையில்லாமல் ஒரு அங்குலம்தன்னும் கூட்டிச் சொல்லமாட்டார்கள்.

    “இன்னுமொரு ஒப்பரேஷனா?” அதிர்ந்துவிட்டேன்.

    “அந்த வாலை வைப்பதற்காகவா ஆறுமணி நேரம் ஒப்பரேஷன் செய்தார்கள்” மனைவி வியந்தாள். அந்த வாலின் நீளம் கூடியும் இடம் மாறியும் இருந்திருந்தால் பரிணாமத்தின் உச்சத்தைத் தொட்டிருப்பேன்.

    ஒவ்வொருதடவை ஒப்பரேஷன் செய்த போதும் மூன்று கிழமைகள்தான் வேலையிலிருந்து விடுப்புத் தந்திருந்தார்கள். இந்தத் தொழிலும், தொழில் சாராததுமான ஆறுமாத அவுஸ்திரேலிய அனுபவத்தோடு, வேலைகளுக்கு மனுப் போடத் தொடங்கினேன்.

    இப்பொழுதெல்லாம் இல்லாத பொல்லாததெல்லாம் எழுதி, ஒரு புளுகுமூட்டையை வேலைக்கு மனுப்போடும்போது அனுப்பி வைப்பேன். அந்தக் கவரிங் லெட்டர் என்னைக் ‘கவர்’ பண்ணக்கூடியமாதிரி இருக்கும். ஆர்கிடெக்ட் தொடர்பான நேர்முகப் பரீட்சை வந்தது. கதவைத் திறந்து நீங்களாகவே உள்ளே செல்லுங்கள் என்றார்கள். அதில் ஏதோ சூட்சுமம் இருந்திருக்க வேண்டும். கதவைத் திறக்க முடியாமல் இருந்தது. அத்தகைய கனம் கொண்ட கதவை திறந்து இழுக்க, விட்ட இடத்திலிருந்து என்னையும் இழுத்துக் கொண்டு சென்றது கதவு. கதவுடன் தொங்கியபடியே சென்றேன். பலசாலியாகவே உள்ளே சென்ற நான் மிகவும் நன்றாக இன்ரர்வியூ அற்றெண்ட் பண்ணியிருந்தேன். வெளியே வரும்போது மேலும் இருவர் கதவை இழுக்கக் காத்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் 5 வருடங்களும் மற்றவர் 12 வருடங்களும் அவுஸ்திரேலியாவில் ஆர்கிடெக்ட்டாக வேலை செய்திருந்தார்கள். என்ன எக்ஸ்பீரியன்ஸ்? அவுஸ்திரேலியாவில் வேலை எடுப்பதற்கு ‘வாய்ச்சொல்’ ஒன்றே மூலதனம் என்பார்கள்.

    மூன்றாவது தடவையாக ஒப்பரேஷனிற்கு நாள் குறித்துவிட்டார்கள். அதற்கு முன்னோடியாக வெளிநோயாளர் பிரிவிற்கு வந்து சந்திக்கும்படி கடிதம் போட்டிருந்தார்கள். அதற்காகத்தான் இப்பொழுது வந்து கொண்டிருக்கின்றேன்

    காலை 11 மணியிலிருந்து காத்திருக்கின்றேன். இந்தத்தடவை எனக்கு சத்திரசிகிச்சை செய்த வைத்தியரைச் சந்திக்காமல் போவதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். எனக்கு ஒப்பரேஷன் செய்தவரை சந்திப்பது மிகவும் கடினம் என்றார்கள். ஒவ்வொரு வார்ட்டிற்கும் அவர் சென்றுவர பிற்பகல் 3 மணியாகும் என்று சொன்னார்கள். பரவாயில்லை, காத்திருக்கின்றேன் என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டேன். காத்திருப்பு வீண் போகவில்லை. 4 மணியளவில் டாக்டர் வந்தார். மிகவும் குண்டாகவும் வாட்ட சாட்டமாகவும் 40- 45 வயதிற்குள் மதிக்கக்கூடியவராகவும் இருந்தார்.

    “என்னுடைய டாக்டர் வயது முதிர்ந்தவர். நான் அவரைத்தான் சந்திக்க வேண்டும். அவர் மிஸ்டர் பரகர்” என்றேன். வந்தவர் என்னைப்பார்த்து ஆச்சரியப்பட்டார்.

    “இல்லை… இல்லை. நான் தான் உமக்கு ஒப்பரேஷன் செய்தேன். என்னுடைய பெயர் சாகிடி. நீங்கள் குறிப்பிடும் டாக்டர் என்னுடைய பொஸ்.”

    “ஐயா… டாக்டர் ஐயா… இந்தமுறை எனக்கு மூன்றாவது தடவை ஒப்பரேஷன். தொடர்ந்தும் இப்படி இருந்தால் பவுல் கான்சர் (Bowel Cancer) வரும் என்று சொல்கின்றார்கள்” பயந்தபடியே நான் சொல்ல, டாக்டர் சாகிடி அங்குமிங்கும் பார்த்தார். பின்னர் எழுந்து நின்று தனது கதிரையை எனக்கு அண்மையாக நகர்த்திவிட்டு அதில் அமர்ந்தார்.

    “இந்த ஒப்பரேஷனை மிகவும் அவதானமாகச் செய்ய வேண்டும். ஏதாவது சிறுபிழை நேர்ந்தால்கூட தொடர்ச்சியாக மலம் சலம் கழிக்க நேரிடலாம். நீங்கள் பிறைவேற் ஹெல்த் இன்சூரன்ஸ் (Private Heath Insurance) வைத்திருக்கின்றீர்களா? அப்படியாயின், நீங்கள் டாக்டர் பரகருக்கு வெளியே சனல் பண்ணிக் காட்டிவிட்டு, இங்கேயே ஹொஸ்பிட்டலில் தங்கி நின்று சர்ஜரி செய்து கொள்ளலாம். அப்படித்தான் வசதி படைத்தவர்கள் எல்லாரும் செய்கின்றார்கள்” காதிற்குள் கிசுகிசுத்தார்

    “நான் அவுஸ்திரேலியா வந்து ஆறுமாதங்கள்தான் ஆகின்றது. என்னிடம் லைவ் இன்சூரன்ஸ்கூட இல்லையே!” என்றேன் ஏக்கத்துடன்.

    என்னைப் பொறுமையாக இருக்குப்படி சொல்லிவிட்டு உள்ளே சென்றார். சற்று நேரத்தில் ஒரு வயது முதிர்ந்த டாக்டருடன் வந்தார்.

    “I am Faragher” என்றபடியே அந்த ஒடிசலான எனது டாக்டர் வந்தார். என்னைக் கதிரையில் அமரும்படி சொன்னார். மூச்சை இழுத்து விட்டார். “நடந்தவற்றைக் கூறுகின்றேன்” என்றார். அவர் குரல் இனிமையான சங்கீதம் போல இருந்தது

    “உங்களுக்கு இரண்டு தடவைகளும் இவர்தான் ஒப்பரேஷன் செய்தார். இவர் மிஸ்டர் சாகிடி (Zahedi). எனது அஷிஸ்டென்ற்” பரகர் என்னுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போதே சாகிடி எங்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார்

    “தயவுசெய்து இந்தத்தடவை நீங்கள்தான் எனக்கு ஒப்பரேஷன் செய்ய வேண்டும்! நீங்கள் அனுபவம் மிகுந்தவர்!!”

    “முதன்முறையாக அந்த ஒப்பரேஷனை சாகிடி சுயமாகச் செய்தார். இரண்டாவது தடவை என்னுடைய மேற்பார்வையின் கீழ் செய்தார். பாருங்கள் எனக்கு இப்போது 65 வயதாகின்றது. நாளைக்கு எனக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் இந்த ஒப்பரேஷனைச் செய்வதற்கு இந்த ஹொஸ்பிட்டலில் யார் இருக்கின்றார்கள்? எல்லாருக்கும் அனுபவம் வாய்ந்த டாக்டர்தான் ஒப்பரேஷன் செய்ய வேண்டுமென்றால், இவர்களைப் போன்ற டாக்டர்மார் எப்போது ஒப்பரேஷன் செய்து பழகுவது? ஒரு டாக்டர் படித்து முடித்து வர குறைந்தது பத்து வருடங்கள் ஆகின்றது. டாக்டர் சாகிடிக்கு 45 வயதாகின்றது. அவரைப் போல இன்னும் இரண்டு டாக்டர்கள் என்னுடன் வேலை செய்கின்றார்கள்” அவர் சொல்வதை நான் உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

    “சற்று நேரம் அமர்ந்து கொள்ளுங்கள். சீக்கிரம் வந்துவிடுவேன்” சொல்லிவிட்டு உள்ளே சென்றார் டாக்டர் பரகர்.

    “உவன் சாகிடி என்னை சாகடிச்சுப்போட்டான். என்ரை உடம்பைக்கீறி விளையாடி இருக்கிறான்.”

    சக டாக்டர்களுடன் உரையாடிவிட்டு சிரித்த முகத்துடன் திரும்பினார் டாக்டர் பரகர்.

    “உங்களுக்கு ஒரு குட் நியூஸ். இந்தத்தடவை உங்களுக்கு நான்தான் ஒப்பரேஷன் செய்யப் போகின்றேன். திருப்திதானே!” என் கையை இறுகப்பற்றிக் குலுக்கினார். அவரது அனுபவம் எனக்கு நம்பிக்கையைத் தந்தது. நம்பிக்கைதானே வாழ்க்கை!

    இரண்டொரு இளம் டாகடர்களுக்கு, என்னுடைய உடலை அனுபவமாக கற்றுக்கொள்வதற்குக் கொடுத்திருக்கின்றேன் என்ற மகிழ்ச்சியில் அங்கிருந்து வெளியேறுகின்றேன். அப்படியே என்னுடைய தொழில் சார்ந்த அனுபவத்தைப் பயிற்சி செய்ய எனக்கும் யாராவது வேலை தரக்கூடும்.

    ஹொஸ்பிட்டலைவிட்டு வெளியேறும்போது என் கைத்தொலைபேசி கிணுகிணுத்தது. கடைசியாகப் போயிருந்த நேர்முகப்பரீட்சை சம்பந்தமான தொலைபேசி அழைப்பு அது.

    “நீங்கள் இந்தத்தடவை நேர்முகப்பரீட்சையில் வெற்றி பெறவில்லை. நீங்களும் நன்றாகச் செய்துள்ளீர்கள். ஆனால் உங்களைவிட அனுபவம் வாய்ந்த ஒருவரைத் தெரிவுசெய்துள்ளோம். தொடர்ந்தும் முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்.”

     

    Share