Tag: வாழ்க்கை நலம்

  • வாழ்க்கை நலம் – 46

    குன்றக்குடி அடிகள்

    46. வேண்டாம் சினம்!

    சினம் – கோபம் தீமையுள்  தீமை. கோபத்தால் விளையும் தீமை பலப்பல. கோபத்தால்  இரத்த நாளங்கள் சூடேறி உடலைக் கெடுக்கிறது. ஏன் கோபம் வருகிறது? எதனால் கோபம் வருகிறது? கோபம் தோன்றும் களங்கள் எவை? எவை? விருப்பு வெறுப்புக்களால் தாக்கப் பெற்றுள்ள மனித மனத்தில் தான் கோபம் எழும்!

    காலம் காட்டும் கருவி – கடிகாரத்தை உற்று நோக்குங்கள்! ஓயாது ஓடிக்கொண்டிருக்கிறது. எந்த சூழ்நிலையிலும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. கடிகாரங்களைச் சூழ்நிலை பாதிப்பதில்லை. அதுபோல நமது வாழ்க்கையும் ஓர் இயக்கம்.

    எந்தச் சூழ்நிலையிலும் திகைப்பும் அச்சமும் கொள்ளாமல் தொடர்ந்து செயல் செய்தல் வேண்டும். கோபத்தினால் இழப்பேயாம். ஒரு பொழுதும் ஆக்கம் இல்லை. கோபம், ஆக்கப்பணிக்கு  அடக்கி வைக்கப் பெற்ற வெப்பம் எரிசக்தியாக மாறுவதைப் போல, அடக்கி வைக்கப்பட்ட கோபம் ஊக்கத்தைத் தரும்.

    பணிகள் தொடர் நிலைத் தன்மையுடையன. படிப்படியாக வளரும் தன்மையதே மனிதவியல் திறன். முதலில் செய்ய இயன்றதைச் செய்க! அதன் தொடர்ச்சியாகச் செய்ய முடியாததையும் செய்யும் திறன் உருவாகும்.

    திருவள்ளுவர் வெகுளாமை என்று பத்துக் குறள்களை ஓதுகிறார். வெகுளி, மனிதனின் நகையைக் கொல்லும்; வகையைக் கெடுக்கும்; இனத்தை சுட்டெரிக்கும்; தோழமையைக் கெடுத்துப் பிரிக்கும் என்றெல்லாம் வெகுளியினால் வரும் கேட்டினை விவரிக்கின்றார். திருவள்ளுவர் வெகுளியை மறந்துவிட வேண்டும் என்று கூறுகின்றார்.

    ஆம்! வெகுளியை மறந்து விடவேண்டும். தன்னைச் சேர்ந்தாரைக் கொல்லும் வெகுளி என்றும் கூறுகின்றார். வெகுளியை மறந்து விடுக! வெகுளியை யார் மாட்டும் மறந்து விடுக! யார் மாட்டும் வெகுளி வேண்டாம்.

    வெகுளியை மறந்தால் எண்ணியவைகளையெல்லாம் அடையலாம்! கால தாமதமில்லாமல் உடனடியாக உன் விருப்பத்தை அடையலாம்! எப்போதும் அடையலாம். உள்ளத்தில் உள்ளியதை அடையலாம்.  அதலால் வேண்டாம் வெகுளி; விடுமின் வெகுளி!

    மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
    பிறத்தல் அதனான் வரும்.
    (திருக்குறள் –  303)

    உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
    உள்ளான் வெகுளி யெனின்.
    (திருக்குறள் –  309)

     

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

    Share
  • வாழ்க்கை நலம் – 45

    குன்றக்குடி அடிகள்

    45. வாய்மையே பேசுக!

    சத்தியம், உண்மை என்ற சொற்களால் உணர்த்தப் பெறும் ஒன்றைத் திருக்குறள் ‘வாய்மை’ என்று கூறுகிறது. “சத்” என்ற சொல்லுக்குப் பொருள் “உள்ளது” என்பது.  உள்ளது என்ற சொல் உண்மை என்ற பொருளை மட்டும் தரும்.

    உண்மை கூறுதல் என்பது உள்ளது உள்ளவாறே (The Principle of Sincerely) என்ற பொருளில் வழங்கப் பெறுகிறது, கடவுள் தமது இரண்டு கரங்களில் ஒன்றில் உண்மையையும் பிறிதொன்றில் உண்மையைத் தேடும் ஆர்வத்தையும் தாங்கியிருக்கிறான் என்ற அனுபவ உரை ஒன்று உண்டு.

    எனவேதான் “சத்தியமே கடவுள்” என்ற கொள்கையுடைய அண்ணல் காந்தியடிகள் சத்தியத்தைத் தேடுவதிலும் சத்தியத்தைத் தமது வாழ்க்கையில் சோதிப்பதிலும் செலவழித்தார்.

    உண்மை கூறுதல் என்ற அடிப்படையில் உள்ளதை உள்ளவாறு கூறலாமா? அங்ஙனம் கூறுவது மனித குலத்திற்கு நலம்பயக்குமா? பல சமயங்களில் உள்ளதை உள்ளவாறு கூறுதல் நலம் பயப்பதில்லை என்பதே வாழ்வியல் உண்மை.  மாறாக எதிர் விளைவுகளையே உருவாக்கி வந்துள்ளன.

    உள்ளதை உள்ளவாறே  கூறுதல் பற்றி, மகாவீரர், “நீ உண்மை பேசுவதினால் ஒருவர் மனம் நோகும். உன் பேச்சு ஒருவனுக்குப் பிடிக்காது பிற உயிர்களுக்குத் துன்பம் நேரும் என்றால் அதைப் பேசாதிருத்தல் நலம்.  அது உண்மையாக இருந்தாலும் உனக்குப் பாவமே நல்கும்” என்று கூறுவதை அறிக.

    ஆதலால், உண்மையை உள்ளவாறே கூறுதல் நலம் பயப்பதில்லை என்பதையறிந்த திருவள்ளுவர், திருக்குறளில், சத்தியம், உண்மை என்ற சொற்களைப் பயன்படுத்தாமல் “வாய்மை” என்ற சொல்லைப் பயன் படுத்துகிறார்.

    வாழ்க்கையின் நோக்கு, தீமைகளைப் புறங்கண்டு நலங்காண்பதேயாகும். தீமை கொடிது. எந்த ஒன்றையும் விடத் தீமைக் கொடிது. ஆதலால் உள்ளதை உள்ளவாறே கூறுகிறோம் என்று, தொற்றுநோய் பரப்பும் கிருமிகளைப் போலச் செய்திகளை வதந்திகளைப் பரப்பும் மனிதர்கள் காலராவை விடக் கொடியவர்கள்.

    ஒருவர் பிறிதொருவரைபற்றித் தகாதன சொன்னாலும் அதை அப்படியே மற்றவரிடம் சொல்லிக் கோபத்தையும், கலகத்தையும் வளர்ப்பது உண்மையன்று; பொய்; சின்னத்தனம். எனவே, திருக்குறள்,

    “வாய்மை யெனப்படுவது யாதெனின் யாதொன்றும்
    தீமை யிலாத சொலல்”
    (திருக்குறள் –  291)
    என்று கூறுகிறது.

    வாய்மை என்று கூறப்படுவது யாது? எவ்வுயிர்க்கும் எந்தவிதத் தீமையையும் செய்யாததே வாய்மை. எவ்வுயிர்க்கும் தீமையைத் தராததே வாய்மை. வாய்மையல்லாதன கூறுபவர்களையும் நல்லன பல சொல்லித் தேற்றுவோம்.

    நம் செவிக்கு வரும் செய்திகளில் உள்ள வாய்மையைத் தேறித் தெளிய வேண்டும்.  செவிப்புலனுக்கு வரும் செய்திகளில் வாய்மையினைக் கண்டுணராமல் கோபித்தலும் பகை கொள்ளலும் நட்பு பாராட்டலும் நன்றல்ல.  ஆதலால் எவ்வுயிர்க்கும் நல்லன தருவதே வாய்மை.

    வாய்மையே பேசுக. எந்தச் சொல்லிலும் பொருளை மட்டும் நாடாமல் வாய்மையை நாடுக. நமக்கும் பிறருக்கும் ஒரு தீங்கும் இல்லாத நலம் தரும் சொற்களையே கூறுக.

     

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

    Share
  • வாழ்க்கை நலம் – 44

    குன்றக்குடி அடிகள்

    44. உண்மையான தவம்

    இந்த உலகத்தில் இயற்கை, ஒருவருக்கொருவர் உதவி என்ற நியதியில்தான் இயங்குகின்றது. வாழ்க்கையின் நோக்கமே உதவி செய்வதுதான். ஒருவருடைய வாழ்க்கை முழுமை அடைவதும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுதுதான்.  ஏன் உயிரியக்கத்தின் நோக்கம் உதவி செய்தல்தான்!

    இங்ஙனம் உதவி செய்யும் முறையில் வாழ்வியல் அமையாது போனால் வாழ்க்கைத் துன்பச் சுமையாகத் தோன்றும். “ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதற்காகவே, நாம் வாழ்கின்றோம். வேறு எதற்காகவும் இல்லை” என்றார் எலியட்.

    ஒருவர் நம்மை நாடி வந்து கேட்ட பிறகு செய்வது சிறந்த உதவியாகாது. நாமாகவே தேடிச் சென்று செய்யும் உதவியே உதவி. அபிதாவூது என்ற பெரியார், “நீ பிறருக்காகச் செலவு செய்தால் நான் உனக்காக செய்து கொண்டிருப்பேன்” என்று அல்லா அருளியுள்ளதாகக் கூறியுள்ளார்.

    உதவி என்ற அச்சில் உலகியல் இயங்குகிறது. அது மட்டுமின்றிப் பிறருக்குத் தன்முனைப்பின்றி, விளம்பரமின்றி உதவி செய்வதில் இதயம் அன்பால் நிறைகிறது; அடக்கம் வந்தடைகிறது; பலர் சுற்றமாகச் சூழ்வர்.

    இன்றைய உலகில் சமய நோன்புகளை நோற்பது பெருமையாகப் பேசப்படுகிறது. அதாவது உண்ணாமல் நோற்பது. பலர் உண்ணாமல் நோற்கின்றனர். அதனால் பெயரும் புகழும் அடைகின்றனர்.  வரலாற்று நிகழ்வில் உண்ணா நோன்பை அறிமுகப்படுத்தியவர் அப்பரடிகள் ஆவார்.  பின் அரசியல் போராட்டங்களுக்கு அண்ணல் காந்தியடிகள் உண்ணா நோன்பைக் கருவியாகக் கையாண்டார்.

    இன்று மிகச் சாதாரணமான ஒரு நிகழ்ச்சியாக உண்ணா நோன்பு வந்துவிட்டது. பசியைத் தாங்கிக் கொள்வது, உண்ணாது நோற்பது ஆற்றல் மிக்க தவம் என்று சமய நூல்கள் கூறும்.  ஆனால் திருவள்ளுவர் பசியைப் பொறுத்துக் கொள்பவரின் ஆற்றலைவிட மற்றவர் பசியை உணவளித்து அகற்றுவார் ஆற்றல் பெரிதென்று கூறுகின்றார்.

    தமக்குற்ற பசியைத் தாங்கி, பொறுத்துக் கொண்டு தவம் செய்வது ஒரு வகையில் ஆற்றல்தான்.  ஆயினும், மற்றவர் பசியை மாற்றுவார் ஆற்றலை நிகர்த்த ஆற்றல் அல்ல அது என்று கருதுகிறார் திருவள்ளுவர். ஏன்? தமக்குற்ற பசியைத் தாங்கிக் கொள்வது, காலத்தில் இடர்பாடாக இருப்பினும் பழகிய நிலையில் பசி வருத்தாது; துன்பம் செய்யாது.

    மற்றவர்களுடைய பசியை மாற்ற வேண்டுமாயின் உழைப்பு தேவை. மெய்வருந்த உழைத்துப் பொருளீட்டினால்தான்  மற்றவர்க்கு உதவ இயலும். உழைத்துப் பொருளீட்டிய நிலையில், பொருளிடத்துப் பற்று வருதல் இயற்கை. உழைத்து ஈட்டிய பொருளிடத்துப் பற்று மிகாது, மற்றவர் பசி நீக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுதல் அருமையிலும் அருமையாகும். தன் பசி தாங்குவதில் தாங்கும் திறன் மட்டுமே காணப்படுகிறது.  அதுவும், பழகிப் போனால் திறனாகாது.

    மற்றவர் பசியை மாற்றும் பணியில் உதவி செய்யும் வகையில் கைவருந்தி உழைக்கும் உழைப்பு அமைகிறது; பொருட் பற்றுடன் பொருளீட்டி, பின் பொருட்பற்று விட்டு உதவி செய்யும் குலநல ஆக்க மாற்றங்களாக அமைகின்றது. தன் பசி தாங்கலில் துறவியல் பண்பு முகிழ்ப்பதற்கு வாய்ப்பு இல்லை.

    வறுமையாளர் கூடப் பசியை தாங்கிக் கொள்ளவே செய்கின்றனர், வேறு வழியில்லாமல்! மற்றவர் பசியை மாற்றுதற்குரிய உதவியைச் செய்கிறவர்கள் பொருட்பற்றினின்று நீங்கியே உதவி செய்கின்றனர்.

    பசியைப் பொறுத்தலினும் – மற்றவர் பசியை மாற்றும் ஆற்றலே ஆற்றல்! இத்தகைய ஆற்றலைப் பெருக்கி வளரும் நாடு என்றும் வளரும்; வாழும்.

    ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
    மாற்றுவார் ஆற்றலின் பின்.
    (திருக்குறள் –  225)

     

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

    Share
  • வாழ்க்கை நலம் – 43

    குன்றக்குடி அடிகள்

    43. கோள் கேளற்க; சொல்லற்க!

    மானுடம் உறவுகளால் ஆயது; உறவுகளால் வளர்வது, உறவுகளுக்காகவே மானுடம் அமைந்தது. சமூக அமைப்பு மானுடத்தினிடையில் வளரும் – உறவுகளால் அமைந்தது; வளர்ந்து இயங்குவது; வாழ்வது.

    உறவுக்கு எதிரான பகை, தீயது; பகை தீயது; “யாரொடும் பகை கொள்ளற்க” என்பது இராம காதை தரும் அறிவுரை. உறவு முறிந்து பகை வளர வாயில்கள் பல உண்டு. சொத்துரிமையின் காரணமாக உறவுகள் முறியக்கூடும். இஃது அருகிய வழக்கே!

    நம்பிக்கையின்மை காரணமாக உறவுகள் முறியும். இந்த வகையில் பிரிவும் பெரும்பான்மையல்ல. ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையில் இருக்கும் உறவு, பகையாக மாறுவது மூன்றாவது மனிதரின் தலையீடு. அதுவும் கோள் சொல்லுதல் மூலம் தலையீடு.

    கைகேயி உத்தமத்தாய். ஆனால், கூனியின் தலையீட்டால் அந்தத் தூய அன்பு திரிந்தது. அதனால் ஒருவரைப் பற்றி அவர் இல்லாதபோது நமக்கு ஆயிரம் நலம் பயக்கும் செய்திகளை முன்னுரையாகக் கூறி, உடன் அந்த மூன்றாம் மனிதரைப் பற்றிச் சொல்லும் செய்திகளைக் கேளற்க! ஒரோவழி கேட்டாலும் பொருளாகக் கொள்ளற்க.

    காற்றுப் புகாத நெருக்கமிக்க உறவுகளுக்கிடையிலும் கோள் சொல்லுவோர் புகுந்து விளையாடுவர்; பிரித்து விடுவர். நமக்கு நன்மை போலச் சொல்வர். நீதிச் சார்புடையன போலச் சொல்லுவர்! நயத்தக்க நாகரீகம் என்பர். ஆன்றோர், சான்றோர் நெறி என்பர். அவ்வளவும் பச்சைப் பொய். தாம் கூறும் கோள் விலை போக இவ்வளவு நடிப்பு! கவனமாக இருக்க வேண்டும்; விழிப்பாக இருக்க வேண்டும்.

    மற்றவர்களைப் பற்றி ஒருவரிடம் பேசாதே; எதுவும் கூறாதே; கோள் சொல்லுதலும் தீது. ஆதலால் நாம் யாதொரு கோளும் யாரைப் பற்றியும் கூறக் கூடாது. பிறர் சொல்லும் கோளைக் கேட்கவும் கூடாது.

    கோள் தற்சார்பு இனிப்பு மூடிய கொடிய நஞ்சு. இதய வலிமையுடையோரைக் கூட எளிதில் வீழ்த்தும் இயல்பு கோளுக்கு உண்டு. ஒரு நன்மையே விளையுமென்றாலும் கோள் வாயிலாக அந்த நன்மை வளரவேண்டாம்.

    கோளுக்கு உடன் வரும் தோழமைச் சொல் முகமன் (முகஸ்துதி). இதையும் தவிர்த்து விடுக. கோள் சொல்லுபவன் நச்சுத்தேள். கோள் சொல்வோர் உறவே வேண்டாம். ஒவ்வொரு நாளும் உறவுகளைக் காண்க; வளர்த்துக்கொள்க; வையகத்தில் வாழ்வாங்கு வாழ்க!

     

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

     

     

     

    Share
  • வாழ்க்கை நலம் – 42

    குன்றக்குடி அடிகள்

    42. இரத்தல் தீது

    நமது வாழ்க்கையில் நாம் ஒன்றைச் செய்யும்போது அச்செயலைச் சார்ந்து சில பண்புகளும் திறன்களும் வளர்கின்றன. அதுபோலவே செய்யத்தகாதனவற்றைச் செய்யும் பொழுதும் திறமைக் குறைவுகளும் தீய குணங்களும் வந்தடைகின்றன. சான்றாக நமது வாழ்வு நுகர் பொருள்களைச் சார்ந்து அமைகின்றது. அப்பொருள்களை வழங்கும் பண வசதி அடிப்படை இன்றியமையாதது ஆகிறது.

    நாம் ஒவ்வொருவரும் உழைத்துப் பொருளீட்டி நுகர்ந்து வாழ்தலே முறையான வாழ்க்கை. உழைத்துப் பொருளீட்டி வாழும் வாழ்வியலில் சார்பின்றித் தனித்து வாழும் பேறு கிடைக்கும். நாமே பொருளீட்டி வாழும் வளமான வாழ்வு தொடர் வரலாறாக நீடிக்கும்.

    உழைப்பின் வழி அறிவறிந்த ஆள்வினை செயல் திறன் கைகூடும்! அறிவு வளரும்; ஆற்றல் பெருகி வளரும். ஆதலால், உழைத்துப் பொருளீட்டி உண்டு வாழ்தலே வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை.

    அங்ஙனமின்றி நமக்குத் தேவையானவைகளை மற்றவர்களிடம் வங்கி வாழும் இரத்தல் வாழ்வு வளராது. தன்னம்பிகையுடையதாக விளங்காது. உழைப்பாற்றல் வற்றி, சோம்பலில் வாழும் வாழ்க்கை அறிமுகமாகும்! அறிவும் வளராது. ஆதலால், இரத்தலும் நல்லதே என்றால் வாழ்வு வளராது; பயனுடையதாக அமையாது.

    “நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
    இல்லெனினும் ஈதலே நன்று”

    (திருக்குறள் – 222)

     

     
    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

     

     

    Share
  • வாழ்க்கை நலம் – 41

    குன்றக்குடி அடிகள்

    41. கூட்டுறவு

     

    ‘உலகத்தில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றமெல்லாம் கூட்டுறவின் அடிப்படையில் தோன்றியனவாகும். தோல்விகள் எல்லாம், வாழ்க்கையையும் நடவடிக்கையையும் உண்டாக்கும் பொருள்களிடையே கூட்டுறவு காணப்பட்டதால் நேர்ந்தவைகளாகும்’ என்றார் – எஸ். கே. டே. “கூட்டுறவு இயக்கம் மிக முக்கியத்துவம் ஆகிவிட்டதை எல்லாரும் புரிந்து கொண்டதாகச் சொல்வதற்கில்லை” என்றார் மாமேதை லெனின்.

    கூட்டுறவு, மக்கள் இயக்கமாக விளங்க வேண்டும். கூட்டுறவு அமைப்புகளில் அரசியல் கட்சிகள் தலையீடும், அரசின் அதிகாரங்களும் ஊடுருவுதல் கூடாது. கூடவே கூடாது. இதனால் அரசின் தொடர்போ – மேற்பார்வையா, தணிக்கையோ கூடாது என்பதல்ல. அரசின் அணுகுமுறைகள் கூட்டுறவை பொருத்தவரையில் குடியரசின் அடிப்படையான குடிமக்களின் நல்லிணக்க வாழ்க்கைக்கும், கூட்டுறவுப் பொருளாதார வளர்ச்சித் துறைக்கும் நிர்வாகத் துறைக்கும் பயிற்ருவித்து வழிகாட்டக் கூடியதாக அமைய வேண்டும்.

    எந்தக் காரணத்தை முன்னிட்டும் கூட்டுறவு அமைப்புகளின் நிர்வாகக் குழுவைக் கலைத்தல் – தனி அலுவலர் நியமித்தல் போன்றவற்றைச் செய்யக்கூடாது. இங்ஙனம் செய்வது மனித உரிமைகள் அடிப்படையிலும், அறநெறி அடிப்படையிலும் முற்றிலும் தவறானது.

    ஏனெனில் கூட்டுறவில் அதன் உறுப்பினர்கள் தங்களுடைய நிதி ஆதாரங்களைப் பங்குகளாக இட்டு வைத்துள்ளார்கள். அவர்களுடைய பொருளாதார வளர்ச்சியை அந்தக் கூட்டுறவு அமைப்பு உறுதி செய்துள்ளது. இந்நிலையில் கூட்டுறவு அங்கத்தினர்களை – கூட்டுறவு நிர்வாகிகளை விலக்குவது மரபல்ல.

    மக்களும் கூட்டுறவைத் தங்களுடையதாகவும் பொதுநலத்திற்கு உரியதாகவும் கொண்டு ஒத்திசைந்து வாழ்தல் வேண்டும். கூட்டுறவில் தனி நலத்திற்கும் பொது நலத்திற்கும் இடையே மோதல் ஏற்படும்போது, பொது நலத்திற்கே முதன்மை இடம் வழங்கப் பெறுதல் வேண்டும். ஏனெனில் தன்னலத்தில் பொது நலம் அடங்காது. பொது நலத்தில் தனி மனித நலம் அடங்கும். மேலும் பத்திரமாகவும் இருக்கலாம்.

    “ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
    செத்தாருள் வைக்கப் படும்.”

    (திருக்குறள் – 214)

     

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

     

     

    Share
  • வாழ்க்கை நலம் – 40

    குன்றக்குடி அடிகள்

    40. ஒப்புரவு வாழ்க்கை

     

    சமுதாய அமைப்பில் ஒவ்வொருவரும் மற்றவர்களைச் சார்ந்து வாழ்கின்றனர். ஆதலால், ஒவ்வொருவரும் பிறிதொருவருக்குச் சமுதாயத்தில் பலருக்குக் கடமைப்பட்டிருக்கின்றனர். இந்தக் கடமைப்பாட்டினை அறிந்து கொண்டு ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் இசைந்து கூடி நட்புறவுப் பாங்கில் வாழ்தல் வேண்டும்.

    தம்தம் நிலையை வற்புறுத்தாமல் மற்றவர்கள் நிலையறிந்து அவர்களுடன் கூடி வாழ்தல் ஒத்தறிந்து வாழ்தல். பூத பௌதிக மாற்றங்களால் உடல் நலம் கேடுறாது பார்த்துக் கொள்வதுபோல நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களை நமது உணர்வு, ஒழுங்கு, ஒழுக்கங்களுக்குப் பாதிப்பு ஏற்படாமலும் மற்றவர்களுடைய நலனுக்குப் பாதிப்பு ஏற்படாமலும் வாழ்தல் ஒத்தறிந்து வாழும் வாழ்க்கை; ஒப்புரவு வாழ்க்கை, தீமை பயக்கும் வாயில்களை அடைத்துவிடும். நல்வாழ்க்கைக்குரிய இயல்புகளை குணங்களைத் தந்து ஊக்குவிக்கும்.

    ஊருணி, ஊராருக்கு உண்ணும் தண்ணீர் தருவதால் “ஊருணி” என்று பெயர் பெற்றது. ஊரார் ஊருணித் தண்ணீரை அள்ளிக் குடிப்பதால் “ஊருணி” என்று புகழ் பெற்றது.

    பல ஊருணிகளில் ஊற்று வளம் இருப்பதில்லை. அதுபோல் அறிவுடையானிடம் செல்வம் இருப்பின் அச்செல்வம் ஊராருக்குப் பயன்படும். ஆயினும் அறிவறிந்த ஆளுமை இன்மையால் செல்வம் அவனிடம் ஊற்றுப் போலப் பெருகி வளராது. இருக்கும் வரையில் கொடுப்பான். பின் அவனும் ஓர் இரவலனாகி விடுவான். அதனால்தான் நம் நாட்டில் வாழ்ந்த புலவர்கள் வறுமையில் வாழ்ந்தார்கள் போலும்!

    ஊருணியை ஊர் பயன்படுத்தாது போனால் மேலும் ஊருணி கெடும். அதுபோல அறிவுடையோனின் செல்வம் வழங்கப் பெறாது போனால் அழிந்து போகும். ஆதலால், ஊருணி நீரைப் போல இழந்து போகாமல் மேலும் செல்வ வளம் பெற உழைப்பு வேண்டும். அறிவறிந்த ஆள்வினைதான் செல்வத்தை வளர்க்கும்; பாதுகாக்கும்! மற்றவர்க்கு வழங்கி வாழ்வதில் உலகந்த்ழீஇய புகழ் கிடைக்கும்.

    இந்த உலகத்தில் எல்லாரும் உண்டு உடுத்து மகிழ்ந்து வாழ இயலும். ஆனால் நம் ஒவ்வொருடைய பேராசையின் காரணமாக இருந்து வரும் இல்லாத நிலை ஏன்? பேராசைதான் காரணம்! பேராசை இழப்பில்தான் மகிழ்ச்சி தொடங்குகிறது. ஆதலால், எல்லாரும் வாழ உரிமை உடையவர்கள் என்ற கருத்து முதலில் ஏற்கப் பெறுதல் வேண்டும்.  பாவேந்தன் பாரதிதாசன் சொன்ன,

    “உலகன் உண்ண உண்! உடுத்த உடுத்து!”
    என்ற பெருநெறியே, ஒப்புரவு நெறி!

    இந்த ஒப்புரவு நெறி சார்ந்த வாழ்க்கைக்கு ஈடாக ஒரு வாழ்க்கை நெறி இந்த உலகத்திலும் இல்லை! தேவர் உலகத்திலும் இல்லை! ஆம்! ஒருவரை ஒருவர் சார்ந்தும் இணைந்தும் உறவு கொண்டாடி வாழ்தலே ஒப்புரவு வாழ்க்கை!

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

    Share
  • வாழ்க்கை நலம் – 39

    குன்றக்குடி அடிகள்

    39. தீயினும், தீமை தீது!

     

    நல் வாழ்க்கை அமைய, தீமை தரும் செயல்களைச் செய்யாதிருத்தல் வேண்டும். நல்லன செய்தல் வாழ்க்கையின் குறிக்கோள். நல்லன செய்தல் நன்று.

    நல்லன செய்வது ஒருபுறம் இருக்கட்டும். தீமையைச் செய்யாது இருத்தல் வேண்டும். தீமையாவன வெறுப்பு, அகங்காரம், பொறாமை, பகைமை, பயம், தூற்றுதல் முதலியன.

    இத் தீமைகளிலிருந்து வாழ்க்கை முற்றாக விலக வேண்டும். யாரொருவரையும் வெறுத்தல் கூடாது. நான் என்ற அகங்கார உணர்வு மேலிடுதல் கூடாது. யார் மாட்டும் எவர் மாட்டும் அழுக்காறு கொள்ளுதல் ஆகாது. யாரோடும் பகை கொள்ளுதல் கூடாது. பயம், அதாவது அச்சம் அறவே ஆகாது! மற்றவர்களுடைய சிறுமையை, குற்றங்களைத் தூற்றக்கூடாது. இவை தீமைகள். இவை தம்மைச் சார்ந்தாரை அழிக்கும்.

    தீயைவிடத் தீமை கொடிது. தீ சார்ந்ததை மட்டும் எரித்து அழிக்கும். தீமை தோன்றும் இடத்தையும் அழிக்கும். சேரும் இடத்தையும் அழிக்கும் தீ, ஒரோ வழி பயன்படும். தீமை பயன்படாது; அறவே தீது; முற்றிலும் தீது. ஆதலால், தீயன சொல்லற்க. தீயன செய்யற்க. தீமை செய்தலைத் தவிர்த்திட ஒரே வழி நல்லன செய்தலேயாம்.

    தீயவை தீய பயத்தலால் தீயவை
    தீயினும் அஞ்சப் படும்.

    (திருக்குறள் 202)

     

     

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

     

    Share
  • வாழ்க்கை நலம் – 38

    குன்றக்குடி அடிகள்

    38. பயனுடைய சொல்லையே சொல்லுக!

     

    இந்த உலக படைப்புகள் எல்லாம் பயனை மையமாகக் கொண்டனவேயாம். பயன்படுத்தப்படாதன கழிகின்றன. தவறாகப் பயன்படுத்தப்படுவன தீமையை விளைவிக்கின்றன. இந்த உலகில் ஆற்றல் வாய்ந்தவைகளில் “சொல்” தலையாயது. சொல்லப்படுவது சொல். அறிந்து ஆராய்ந்து சொல்லப்பெறும் சொற்கள் பயனைத்தரும்.

    பயனுடைய சொற்களே சொல். பயனற்றவைகள் ‘சொல்’ என்று கணக்கில் எடுத்துக்கொள்ளப் பெறுதல் இல்லை. வறுமை, பொருள் சார்ந்தது மட்டுமல்ல. சொற்களிலும் வறுமை உண்டு என்பது இளங்கோவடிகள் கருத்து. “வறுமொழியாளர்” என்று சிலம்பு கூறுகிறது. பயன் மிகுதியும் இல்லாத சொற்கள் என்பது சிலம்பின் கருத்து. “வெற்றெனத் தொடுத்தல்” என்று இலக்கணம் கூறும்.

    தீய சொற்கள் அவற்றைச் சொல்வோருக்குத் தீமை விளைவிப்பதும் உண்டு. திருக்குறள், சொற்களில் அதிகக் கவனம் செலுத்துகிறது. இனியவை கூறல், புறங்கூறாமை போன்ற அதிகாரங்கள் மூலம் விளக்கியுள்ளது. இவை போக “பயனில் சொல்லாமை” என்று தனியே விரித்தும் கூறியது. பயனில்லாத சொற்களையும் சொல்லக்கூடாது என்பதேயாகும்.

    வாழ்க்கை, பயனைக் குறிக்கோளாக உடையது. வாழ்க்கையின் குறிக்கோளை அடைதற்குரிய கருவிகளில் ஒன்று சமூகம். சமூக அமைப்பும் உறவும் சொற்களால் இயக்குவிக்கப்படுகின்றன. சமூகத்தில் இயங்கி நம்முடைய வாழ்க்கைக்கும் ஆக்கம் தரும் நெறிகளைப் பற்றி அறிவது “அரும் பயன்” ஆகும்.

    அற்ப மகிழ்ச்சி; சிறுபொழுது இன்பக் கிளர்ச்சிகளுக்காகச் சொற்களைப் பயன்படுத்தக்கூடாது. நீண்ட நெடிய பயன் வேண்டும். அரிய பயனாக இருந்தால் மட்டும் போதாது. திருவள்ளுவருக்குக் கொள்ளை ஆசை! பெரும் பயன் வேண்டும் என்கிறார்.

    வாழ்க்கையின் அருமைக்குரிய பயன்களை ஆராய்ந்து அறிக! அந்த, அறிய பயன்களைத் தரக்கூடிய சொற்களைத் தேர்வு செய்க. அச்சொற்களையே சொல்லுக.

    “அரும்பய  னாயும் அறிவினார் சொல்லார்
    பெரும்பய னில்லாத சொல்.”

    (திருக்குறள் 198)

     

     

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • வாழ்க்கை நலம் – 37

    குன்றக்குடி அடிகள்

    37. புறம் கூறல் தீது!

     

    புறங் கூறல்  – அதாவது ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிய குற்றம் குறைகளைப் பேசுதல், மேலும் அவர் முன்னே முகமனாகப் பாராட்டுதல்; புகழ்தல், அப்புறம் அந்த நபரை அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிய பழிகளை மட்டும் கூறுதல் புறங்கூறுதலாகும்.

    சிலர் புறங்கூறுதல் என்ற தீமையை, நன்மை கருதிச் சொல்வதாகக் கூறுவர்.  ஆனால் புறங்கூறித்தான் நன்மையைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. எல்லாரும் நேரிடையாக நன்மையை எடுத்துச் சொன்னால் மறுப்பார் யார்? அறம் சொல்லுவார்போல் நடித்துப் புறம் சொல்லுதல் தீய பழக்கம்.

    சிலர் வாயிலிருந்து சொற்கள் வருவதில்லை.  “எரியும் நெருப்பு கனலே வீசுகிறது” என்று ஒரு பழமொழி உண்டு, நன்மையையே சொன்னாலும் புறத்தே சொல்லுதலை நன்மையென எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இதனால் பகையே வளரும், மானம்  – அவமானச் சிக்கல்கள் தோன்றும். புறஞ்சொல்லுதல் ஒரு பயனையும் தராததால் புன்மை என்றார் திருவள்ளுவர். “குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும்” என்று திருமுறை கூறும்.

    ஒருவர் இல்லாத இடத்தில் அவர்தம் நற்குணங்களைப் பற்றி மட்டுமே கூற வேண்டும். அவர் முன்னே குற்றங்களை எடுத்துக் கூறலாம். புறங்கூறுதலால் பிணக்கும் பகையும் வளர்ந்து பிரிவினைகள் உருவாகும். இதனால் புறம் பேசுதலில் ஒரு நன்மையையும் இல்லை. தீமை மட்டுமே தரும்.

    குற்றங்களையே எண்ணிப் பேசுதலால் காலப்போக்கில் குற்றங்கள் நம் மீதே சாரும் என்பதையும் அறிக! குற்றங்களைப் பொறுத்தாற்றும் உணர்வோடு ஏற்றுக்கொண்டு பழகும் அனுபவம் இருந்தால் குற்றங்கள் தொடரா.

    நல்லனவற்றை நேரில் கூறுக. புறங்கூறுதல் அளவிறந்த தீமை தரும். அதனால் ‘புன்மை’ என்று ஏளனம் செய்யப் பெறுகிறது.

    புறங்கூறும் பழக்கமுடையவர்களுக்கு மற்றவர்களின் குணங்களும் அருமைப்படும் தெரியாது, குற்றங்குறைகளையே காண்பர்; விமர்சிப்பர்; ஏசுவர்; பழிதூற்றுவர் இதனால் பகை வளரும்.  ஆதலால் புறங்கூறுதல் தீது. நன்மையை நோக்கிக்கூடப் புறங்கூறக் கூடாது.

    அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
    புன்மையாற் காணப் படும்.
    (குறள் – 185)

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • வாழ்க்கை நலம் – 36

    குன்றக்குடி அடிகள்

    36. நடுவின்றி நன்பொருள் விரும்பற்க!

     

    வெஃகல் – பிறர் பொருளுக்கு ஆசைப்படுதல், அதாவது தனக்கு உரியன அல்லாதனவற்றிற்கு ஆசைப்படுதல் என்பது பொருள்! ஆம்! ஒருவர் மற்றவருடைய பொருளை விரும்புதல் களவுக்குச் சமம்! இதனால் வாழ்க்கை நிலைகளும் மாறிக் களவு, காவல் என்ற இழி நிலைகள் தோன்றும். பூட்டுக்கள் பெருகலாம். ஆனாலும் களவு நின்றபாடில்லை ஏன்? பொருள் என்பது உழைப்பின் பயன். உழைப்பாலன்றிப் பொருள் ஈட்ட விரும்புபவன் அறநெறி நிற்பவன் அல்லன். அதுமட்டுமன்றிப் பிறர் பொருளை விரும்புபவன் தனது அறிவை இழக்கின்றான்.  ஆற்றலை இழக்கின்றான். காலப்போக்கில் மானத்தையும், பெருமையையும் இழக்கின்றான்; பழியைத் தேடிக் கொள்கின்றான்.

    உழைத்துப் பொருள் ஈட்டாது பிறன் பொருளை விரும்புபவர்கள் பொருளுடையாரைத் துன்புறுத்துவதும் செய்வர். ஈரநெஞ்சினை அறவே இழந்து வெறித்தனமாக நடந்து கொள்வர். அன்பும் அருளும் இவர்களுடைய பண்புகளாக அமைந்து விளங்கா.

    இங்ஙனம் பிறன் பொருளுக்கு ஆசைப்படுபவர்கள் அதனால் அடையும் துன்பமும்  பலப்பல. யாருடைய பொருளை விரும்புகிறார்களோ, அவரிடமிருந்தும் துன்பம் வரும். பிறர் கைப்பொருளை நம்பி வாழ்ந்தமையால், தாம் பொருளீட்டும் முயற்சியின்மையின் காரணமாக அவலம் வளரும், ஆதலால் பிறர் பொருள் மாட்டு உள்ள விருப்பம் இன்பத்தைத் தருவது இல்லை; மாறாகத் துன்பம் தருகிறது.

    பொருளியல் நியதிகளைச் சார்ந்தே ஒழுக்கங்கள் வளர்கின்றன. அறிவு, ஆற்றல்கள் வளர்க்கின்றன. சமுதாயத்தினரிடையில் நம்பிக்கையும், நல்லெண்ணமும் வளர்கின்றன. ஆதலால் உழைத்து வாழ்தலே வாழ்வு. பிறர் பொருளை எடுத்துக்கொள்ள விரும்புதல்  – உதவியாகப் பெறுதல், இனாமாகப் பெறுதல் ஆகியனவும்கூட வெறுக்கத் தக்கனவேயாம்.

    பிறர் பொருள் ஒரே வழி நம் கையகப்படினும் கூடச் சிறிது பொழுதே இன்பந்தரும்.  அந்த இன்பத்தினைத் தொடர்ந்து பெருந்துன்பம் வரும் என்பதறிக. நல்வாழ்வின் முன் இன்மை என்பது ஒரு பெரிய குற்றமன்று. இன்மையும் கூட மன்னிக்கப்பெறும். ஆனால் நடுவின்றிப் பொருள் வெஃகுதல் தாம் பிறந்த குடியையே அழிக்கும். மேலும் பல குற்றங்களையும் தரும்.

    ஆதலால், பிறர் பொருளை எந்த வகையிலும் அடைய விரும்பற்க! உழைத்துப் பொருளீட்டி வாழ்தலையே விரும்புக.

    “நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
    குற்றமும் ஆங்கே தரும்”
    (குறள்  –  171)

     

     

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

     

    Share
  • வாழ்க்கை நலம் – 35

    குன்றக்குடி அடிகள்

    35. பொறாமை கொள்ளற்க!

     

    அழுக்காறு  – அழுக்கு நிறைந்த வழி. அதாவது நன்மையும் இன்பமும் இல்லாத வழி. இத்தகு அழுக்கு வழியில் வாழ்தல் வளர்ச்சிக்குத் துணை செய்யாது. இனியவை கூறல் பற்றிப் பல குறட்பாக்கள் இயற்றிய திருவள்ளுவர். “அழுக்காறு என ஒரு பாவி” என்று அழுகாற்றினைத் திட்டுகிறார்.

    ஆம்! அழுக்காறு ஒரு பொழுதும் நன்மை பயக்காது.  மாறாகத் தீமையைத் தரும். இந்த அழுக்காறு தான் மக்கள் மத்தியில் “பொறாமை” என்று பேசப்படுகிறது. அதாவது மற்றவர்களின் ஆக்கத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமை பொறுத்துப் போற்ற முடியாமை அழுக்காறு ஆகும்!

    ஆனால் இன்று பலர் நல்லவைகளில்   – கல்வியில் பொறாமைப்படலாம். தீமையன்று என்று அறியாமல் கூறுகின்றனர். இது தவறு. ஒருவர் நன்மை செய்வதில் அழுக்காறு கொள்பவன், நன்மை செய்ய முனைப்புக் கொள்ள மாட்டான். அழுக்காறு நிறைந்த உள்ளத்தியல்பும், நன்மை செய்வதில் ஊக்கம் காட்டாது என்றே திருக்குறள் கூறுகிறது.

    நஞ்சு, அமுதாவது ஏது? சாக்கடை நன்னீராவது ஏது! அதுபோலவே தான் நல்ல மதிப்பெண் வாங்கும்  மாணவனைப் பார்த்து குறைந்த மதிப்பெண் வாங்குபவன் அழுக்காறு கொண்டால் கூடுதல் மதிப்பெண் வாங்கும் முயற்சியில் ஈடுபடமாட்டான். அதற்கு மாறாக அதிக மதிப்பெண் வாங்கியவன் மீது குற்றங்களை, குறைகளைக் கற்பித்துக் கூறுவான். ஏன் ‘காப்பியடித்து’ விட்டான் என்றே கூறுவான்.  மேலும் ‘மோசமாகி’ ஆசிரியர், கையூட்டுப் பெற்றுவிட்டார் என்று கூடக் கூறுவான்.  ஆதலால், எந்த வகையிலும் அழுக்காறு தீதே.

    அழுக்கற்றை அகற்றும் வழி, நல்லவர்களை  – வாழ்பவர்களைப் பாராட்டி மகிழ்வதுதான். அதோடு பெற்றவைகளைக் கொண்டு மகிழும் மனம் வேண்டும். பெறாதவைகளைப் பெறும் முயற்சியும் வேண்டும். உப்பரிக்கைகளைப் பார்த்துப் புழுங்குதலைத்  தவிர்த்து குடிசைகளில் வாழ்பவரை நோக்கி இரக்கங் கொள்ளுதல் வேண்டும். இத்தகு மனப்பான்மை வாழ்க்கைக்கு ஆக்கம் தரும்.

    எப்போதும் நல்லவனவற்றையே நாடுதல், நல்லனவற்றைப் பற்றியே பேசுதல் அழுக்கற்றிலிருந்து தப்பும் ஒரு வழி. எங்கும் எதிலும் எவரிடத்திலும் குற்றம்  – குறைகள் இருக்கும்.  எல்லாரும் கடவுளா என்ன? நாம் அவர்களிடத்தில் உள்ள குணங்களையே  எடுத்துக் கொள்ள வேண்டும். நல்லவைகளைப் பாராட்ட வேண்டும். நாம் ரோசாச் செடியில் முட்களை எடுக்கக் கூடாது. மலர்களையே எடுக்க வேண்டும்.

    அழுக்காறு என்ற தீய குணத்திலேயே மனித குலம் ஒன்றுபட்டு வாழ முடியவில்லை. பகையில் சிக்கித் தவிக்கிறார்கள். அழுக்காறு தனித்தும் நிற்காது. அழுக்காற்றின் படை அவா, வெகுளி இன்னாதன சொல்லல், கலகம் எல்லமேயாம்.

    ஆதலால் அழுக்காறு கொண்ட மனிதன் வளர்தல் அரிது; வாழ்தல் அரிது; அதனாலேயே ‘திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும்’ என்றது திருக்குறள். தேளின் கொடுக்கு, நஞ்சாம் தன்மைபோல அழுகாறுடையார் உள்ளம் நஞ்சாகும்.

    அழுக்காறு கொள்ளற்க! மற்றவர் வாழ்வதைக்கண்டு மகிழ்க! நீயும் வாழ முயல்க!  நல்லனவற்றையே காண்க! நல்லனவற்றையே பேசுக. மற்றவர்கள் ஆற்றலை, அறிவைப் பாராட்டி மகிழ்க! எவரோடும் பழகுக! தோழமை கொள்க! மறந்தும் மற்றவர்களைப் பற்றிப் புழுக்கம் கொள்ளற்க!

     

     

     

     

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

     

    Share
  • வாழ்க்கை நலம் – 34

    குன்றக்குடி அடிகள்

    34. பொறுமை ஆக்கம் தரும்!

     

    நிலம் கொத்துதல், உழுதல், தோண்டுதல் ஆகிய செயல்களின் வழி, துன்புறுத்துப்படுவது. உலகில் மாந்தர் வாழ்வியலுக்குரிய செயற்பாடு. ஆனால், நிலம் கொத்தப்பட்டும், வெட்டப்பட்டும் துன்புறுத்தப் படுவதனால்தான் நிலம், நிலத்தின் தன்மையை இழக்காமல் பாதுகாத்துக் கொள்கிறது.

    கொத்தி உழப்பெறாத நிலம் மண் அரிப்பு நோய்க்கு இரையாகும். அது மட்டுமின்றி நிலம் உழப்பெற்றாலே வான் மழையின் நீரை வாங்கித் தன் மடியில் வைத்துக் கொள்ளும் ஆற்றலைப் பெறுகிறது; பசுமைப் புரட்சி செய்யும் ஆற்றலைப் பெறுகிறது.

    உலகுயிர்க்கெல்லாம் உணவு அளித்துக் காப்பாற்றும் வேள்வியை நிலம் செய்ய முடிகிறது. நிலம் தன்னை அகழ்ந்து தரும் துன்பத்தினையே தனக்கு ஆக்கமாக மாற்றிக் கொள்கிறது; உழுவாரையும் வாழ்விக்கிறது. நிலத்தின் பொறுமை, ஆக்கமாகிறது; உயிர்க்குலத்தின் வாழ்வாகிறது.

    மனிதனும் பொறுத்தாற்றும் பண்பு காத்தல் வேண்டும். பொறுத்தாற்றுவோரை அறியாதார் கோழை என்று ஏளனம் செய்வர். அதனால் என்ன? தீமை வராது; நன்மையே பெருகி வளரும்! கூளம் குப்பைதான் தீக்கு ஆக்கம்  – தீமையுடையார் தான் தீமைக்கு ஆக்கம்.  பொறையுடையோர் முன் தீமை அழியும். நம்மில் வலியோர் தூற்றினால் பொறுத்துக் கொள்வது போலவே நம்மில் கீழோர் தூற்றினாலும் பொறுத்துக் கொள்வதே உண்மையான பொறையுடைமை; பொறுத்தாற்றும் பண்பு.

    பிரார்த்தனைக்கு ஈடானது பொறுத்தாற்றும் பண்பு. எல்லை கடந்த நிலையில் நமக்குப் பிறர் இன்னாதான செய்யும் பொழுது காட்டப்படுவதே பொறுத்தாற்றும் பண்பு  – ஏன்? பொறுத்தாற்றும் நெறியின் வழி விதியைக் கூட வெல்லலாம். தீமைக்கும் தீவினைக்கும் வாயில் சினமே!

    சினம் தவிர்த்துப் பொறுமை மேற்கொண்டொழுகின் தீயவினையும் அதாவது போகூழையும் ஆகூழாக மாற்றலாம். பொறுத்தாற்றும் பண்பு வெற்றிகளைத் தரும். நிலத்தினைப் பார்ப்போம். நிலத்தின் பொறுத்தாற்றும் பண்பை நமது அணியாக ஏற்போம்! நமக்கு இன்னாதான செய்வோரையும் ஏற்போம்! நமக்கு இன்னாதன செய்வோரையும் ஏற்போம்! வாழ்விப்போம்!

    அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

    – திருக்குறள்

     

     

     

     
    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

     

     

     

     

    Share
  • வாழ்க்கை நலம் – 33

    குன்றக்குடி அடிகள்

    33.  பொறுத்தாற்றும் பண்பு

    பொறுத்தாற்றல், பண்புகள் அனைத்திற்கும் மேம்பட்ட பண்பாகும். பொறுத்தாற்றல் பண்பால் பகைமை தடுக்கப்படுகிறது; திருத்தங்கள் காண்பதற்குரிய வாயில்கள் தோன்றுகின்றன; வலிமையும் தகுதியும் வளர்கின்றன. மகிழ்ச்சியின் திறவுகோலாகப் பொறுத்தாற்றும் பண்பு விளங்குகிறது.

    உணர்ச்சிவசப்படுதல், அளவுக்கும் அதிகமான தன்மானம், பெருமை ஆகியன பற்றிக் கவலைப்படுதல், தேவையில்லா ஒரு மதிப்புபுணர்ச்சியைத் தமக்குத்தாமே உருவாக்கிக் கொள்ளுதல் ஆகியன பொறுத்தாற்றும் பண்புக்குத் தடையானவை.  சில நாள் பொறுத்திருந்தாலே பல சாதனைகள் செய்யலாம். காலம் கருதிக் காத்திருப்பின் சல்லடையில்கூடத் தண்ணீர் எடுத்துச் செல்ல இயலும்.  ஆம்! தண்ணீர் பனிக்கட்டியாக உறையும்வரை காத்திருக்க வேண்டும்.

    வாழ்க்கையின் இயல்பே கூடிச்சேர்ந்து வாழ்தல்தான் அதுவே மானுட சாதியினுடைய படைப்பின் நோக்கம்.  கூடிவாழ்தல் எளிதான செயலா? அம்மம்ம! உயிர்க்குலம் அனைத்தினோடும் கூடக் கூடி வாழ்தல் இயலும்.  பாம்பினைப் பழக்கிடலாம்.  ஆனால், மனிதர்களுடன் சேர்ந்து வாழ்வது எளிமையான காரியமன்று!

    மானுட ஜாதி தன் பயணத்தைத் தொடங்கிய நாளிலிருந்தே சண்டை போடுதலைத்  தொடங்கிவிட்டது. ஆம்! கலகங்களையும் சண்டைகளையும் நேரிடும் அவமானங்களையும் கண்டு வருந்துதல் கூடாது. திருத்தங்கள் காண முயலவேண்டும். குற்றங்களுக்குத் திருத்தம் காணும் முயற்சியிலேயே கூட்டுறவு வெற்றிபெற இயலும். திருத்தம் காண இயலாது போனால், பொறுமையாக இருந்தாக வேண்டும். சண்டைபோட்டுக் கொள்வதும் பிரிவதும் விரும்பத்தக்கதல்ல.

    பொறுத்தாற்றும் பண்பை வளர்த்து உறுதிபடுத்துவது நம்மை வளர்த்துக் கொள்வதேயாகும். வலிமை, தூய்மை யாரிடம் இருக்கிறதோ அவர்களை எந்த இழிவும் சென்றடையாது.  அவதூறுகள் நெருப்பிடை வீழ்ந்த உமியெனக் கருகிப்போம். சிலர் கோழை என்று கூறி ஆறுதல் பெறுவார். அதனால் நமகென்ன குறை?

    குப்பை கூளம் இல்லாத இடத்தில் நெருப்பு பற்றி எரியுமா என்ன? ஆதலால் பொருத்தாற்றும் பண்பைப் பெற வலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்; தூய்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தகுதிகள் பலவற்றையும் முயன்று அடைய வேண்டும்.

    இப்படி வளர்ந்த நிலையில் காட்டும் பொறுமைதான் பொறுமை; வலிமை சார்ந்த பொறுமை.  தகுதி மிகுதியும் உடையோரின் பொறுமையே வாழ்வளிக்கும்; வையகத்தின் வரலாற்றை இயக்கும் திருக்குறள்,

    “மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
    தகுதியான் வென்று விடல்.”

    என்று கூறி வழிநடத்துகிறது.

    ஆம்! மற்றவர் பழிதூற்றினால் அதனால் உண்மையில் விளைவது; தகுதியில்லாதவராக இருந்தால் சினம், பகை, கலகம்; தகுதிமிகுதியும் உடையோராக இருந்தால் திருத்தம் காண முயற்சி செய்வர்; பழிதூற்றுவாரையும் வாழ்த்துவர்.

    பரபரக்க வேண்டாம்; உணர்ச்சி வேண்டாம்; தேர்ந்து தெளிக! குப்பைகள் அகற்றப்பட வேண்டியவையே! குப்பைகள் உடைய இடங்கள் அகற்றப்படுவன அல்ல; அகற்றவும் இயலாது.  குற்றங்களைத் திருத்துக. பயன் கொள்ள முயலுக. இவ்வழி பொறுத்தாற்றும் பண்பு வளரும்; நாளும் குற்றங்களிலிருந்து விடுதலை பெறுக; வளர்க! வலிமை பெற்றுயர்ந்திடுக; தகுதிகள் பலவும் பெற்று உயர்ந்திடுக; எல்லாரும் அணைவர். கூடி வாழ்ந்திடலாம். கோடி நன்மை பெறலாம்.

     

     

     

     

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • வாழ்க்கை நலம் – 32

    குன்றக்குடி அடிகள்

    32. ஒழுக்கமுடைமை

    மனிதனை வளர்ப்பது ஒழுக்கம். மனிதனை உயர்த்துவது ஒழுக்கம். ஒழுக்கம் என்ற சொல் மக்கள் மன்றத்தில் பரவலாகப் பேசப்பெறுவதே. தீய பழக்கங்கள் வேறு; ஒழுக்கம் வேறு. தீய பழக்கங்களை ஒழுக்கதிற்குள் அடக்கலாம். ஆனால் ஒழுக்கதிற்குள் தீய பழக்கம் வராது. கள்ளுண்ணல் முதலிய குற்றங்கள் தீயபழக்கங்கள் இந்தக் குற்றங்கள் ஒழுக்கக் கேடுகள் அல்ல.

    ஒழுக்கம் – ஒழுகுதல். மற்றவர்களுடன் மோதாமல் மற்றவர்களுக்குத் தீங்கு நேராமல் நடப்பது – வாழ்வது ஒழுக்கமுடைமை. “உலகத்தோடு ஒட்ட ஒழுகல்” ஒழுக்கம் என்றும் திருக்குறள் கூறுகிறது. மனிதன் ஒரு சமூகப் பிராணி. மனித வாழ்வு ஒரு சமூக வாழ்வு. மனிதனின் சமூக வாழ்வுக்குத் தீங்கு செய்வனவெல்லாம் தீய பழக்கம். ஒழுக்கக்கேடு தவிர்க்கத்தக்கது.  மனிதனைச் சமூக வாழ்வில் நிலைபெறச் செய்வனவெல்லாம் ஒழுக்கமுடைமை.

    “உலகம் வேண்டுவது ஒழுக்கமே!
    சுயநலம் தீய ஒழுக்கம்!
    சுயநலம் அற்றதே நல்லொழுக்கம்!”

    என்றார் விவேகானந்தர். சுயநலம் தீய ஒழுக்கம். பொது நலத்திற்கு எதிரான சுயநலம் தீய ஒழுக்கம், பொது வாழ்வைச் சிதைக்கும் சுயநலம் தீய ஒழுக்கம்.

    நாம் தமிழர்கள், நாம் இந்தியர்கள், நாம் மனிதர் என்ற நியதிக்கேற்ப ஒழுகத் தவறுதல் கூடாது. தமிழர்களாகவும் இந்தியர்களாகவும் மனிதர்களாகவும் வாழ்வதே நல்லொழுக்கம்.

    நாடுகள் சுதந்திரம் பெற்றபின் “குடிமைப் பயிற்சி” என்பது மலிந்து வருகிறது. குடிமைப் பண்பு என்றால் என்ன? ஒருவர் வாழும் ஊரோடு ஒத்திசைந்து வாழ்தல் குடிமைப் பண்பு. இனம், மொழி, சாதி, மதச் சண்டைகள் போடுதல் தீயொழுக்கமாகும். எல்லோரும் ஒரு குலம்; எல்லோரும் ஓர் இனம் என்று எண்ணுதல் நல்லொழுக்கமாகும்.

    நல்லொழுக்கம் நாட்டின் குடிகளைத் தழீஇயதாக விளங்கும். நல்லொழுக்கத்தை ஒருமைப்பாடு என்று கூறினாலும் கூறலாம். மனிதகுல ஒருமைப்பாடே நல்லொழுக்கம். எல்லா உயிர்களிடத்திலும் எத்துணையும் பேதமுறாது, மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்த்து ஒழுகுதலே ஒழுக்கம்.

    குடிமைப் பண்பிலாதார்,ஒருமைப்பாட்டுணர்வு இலாதார்.  உலகந்தழீஇய செந்தண்மை இலாதார் ஒரு நாட்டின் குடிமக்களாதல் இயலாது. ஏன்? அவர்கள் மனிதக் கணக்கில்கூட வரமாட்டார்கள். அவர்களை இழிந்த பிறப்பு என்று ஏசுகிறார் திருவள்ளுவர்.

    ஒன்றே குலம்; எல்லோரும் ஒருகுலம்; எல்லோரும் ஓர் இனம். ஒப்புரவுடன் ஒத்திசைந்து வாழ்தல், உலகம் உண்ண உண்ணல், உலகம் உடுத்த உடுத்தல், வாழ்வித்து வாழ்தல் – இதுவே ஒழுக்கம்.

    இந்த ஒழுக்கம் வளர, உழைத்து உண்ணுதல். உண்பித்து உண்ணுதல் என்ற நடைமுறை துணை செய்யும்.

    இந்த நல்லொழுக்கதிற்குப் பகையான ‘பிறர் பங்கைத் திருடுதல்’, பிறர் வருந்த வாழ்தல் ஆகியன தவிர்க்கப் பெறுதல் வேண்டும்.

    ஒழுக்கமே மானுடத்தின் விழுப்பம்; சிறப்பு. ஒழுக்கமுடைய உலகம் வளரும்! வாழும்!

     

     

     

     

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share