Tag: துஷ்யந்தி

  • கவிஞன்!

    -துஷ்யந்தி, இலங்கை

    விழியென்னும் தடாகமதில்
    மொழியெல்லாம் உயிர் பெற்றுச்
    சிந்தனைச் செடிகளாய்
    கவியிதழ் பூக்களாய்
    தமிழ்க் கோத்த மாலையாய்
    பிறந்திடும்  அவன் பார்வையிலே!

    தூய்மையின் நிறம் சொல்லும்
    வெண் கடுதாசி ஏடுகளும்
    அவன் பேனாவின் மைபடப்
    பேரழகு பெற்றிடும் – இன்னும்
    சில துளிக் கவிக்காய்
    ஏங்கியே நின்றிடும் – அவன்
    பாக்களின் சொல்லாலே!

    மாயத்திரையை நுகர்ந்து
    மனதிலே அழகிய கோலமிட்டு
    யதார்த்த வரிகளாய் அமைத்து
    ரசிக்கும்படியாய் அமைத்து
    சொற்களோடு விளையாடும்
    அவன் அழகிய எண்ணங்களே!

    எளிமையாய் வாழ்ந்திடும்
    அமைதியை நேசித்திடும்
    உறவுகளை மதித்திடும்
    உணர்வுகளை ரசித்திடும்
    உள்ளங்களைப் படித்திடும் – அவன்
    இயல்பான வாழ்க்கையே!

    வீசும்தென்றல் கூட அவனிடம்
    பேசிடும்  மொழிகள்…
    இருளின் சுவடுகள் அவனிடம்
    காட்டிடும் கவிதைகள்…
    அந்திவானமோ அவனிடம்
    தூவிடும் சிந்தனைகள்…
    கொட்டும் மழையோ அவனை
    நனைத்திடும் தேன் தமிழாலே…
    ஏனெனில்,
    அவனோ இயற்கை அன்னை
    தன் கைகளாலே செதுக்கிவிட்ட
    குழந்தையே….!!!

     

    Share