Tag: துஷ்யந்தி

  • வாழ்விதுவே!

    -துஷ்யந்தி

    மண் மீது நாம் கண்டதெல்லாம்
    நிலைப்பதில்லை என்றபோதும்
    விண்ணைத்தொடும் ஆசைகள் பல
    நுழைகின்றது மனதிலே…
    இல்லை இல்லை போலி தான்
    என்றெடுத்துச் சொல்லியும்
    புரிந்துகொள்ள முயலுவதில்லை
    மாயை சூழ்ந்த மனமே!

    கிடைத்ததை மற்றவரோடு பகிர்ந்து
    வாழும் நற்பண்பு நம்மிடத்திலே
    என்றுமே இருக்க வேண்டும்
    என்னருமைச் செல்வமே…
    ஒற்றுமை என்ற சொல்லோடு நாம்
    ஒருமித்து வாழ்ந்துவிட்டால்
    பெற்றதில் பெரும் செல்வம்
    அதுவே இந்தப் பூமியிலே!

    பொன் சேர்த்துப் பொருள் சேர்த்துச்
    சுகபோகம் அனைத்தும் சேர்த்து
    நிம்மதியை இழந்து தவிப்போர்
    எத்தனை இந்த மண்ணிலே?
    அன்பென்ற தாரக மந்திரம் நம்
    உள்ளங்களில் விதைத்துவிட்டால்
    துன்பங்கள் தொடருவதில்லை நம்
    அன்றாட வாழ்வுதனிலே!

     

    Share
  • பிரியா விடை

    –துஷ்யந்தி.

    பாலர் வகுப்பிலிருந்தே சுகந்தனும் ரவியும் இணைபிரியா நண்பர்கள். காரணம் அவ்களின் பெற்றோரும் நட்பிலே இணைந்தவர்கள். ஒரே பள்ளிக்கூடத்திலேயே இருவரும் ஒன்றாகவே கல்வியைத் தொடர்ந்தனர். கலைமகள் கண்பார்வையில் பூத்த மலர்களாய் திறமையில் கொஞ்சமும் இருவரும் சளைத்ததில்லை. மாலை நேரம் கைகோர்த்து விளையாட்டில் ஈடுபடும் அதேவேலை, வீட்டுப் பாடங்களையும் செவ்வனே செய்து முடிப்பதில் இருவரும் என்றும் முதன்மையே.

    சின்னதாய் செல்லச் சண்டையிடுவதும், சிறிது நேரத்தில் சேர்ந்துகொள்வதும் வழமையாகிப்போனது அவர்களினிடையே. ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளி பெற்று இருவரும் பாடசாலைக்கு நற்பெயர் வாங்கித்தந்து, நகரத்துப் பெரிய பாடசாலைக்குத் தெரிவாகினர். அங்கும் திறமையில் குறையாமல் பயின்று சாதாரண தரப் பரீட்சை வரை சென்று பரீட்சையை எதிர்நோக்கினர். அங்கேயும் வெற்றி அவர்களை விட்டுவைக்கவில்லை. தொடர்ந்து இருவருக்கும் சிறந்த பெறுபேறுகள். இருவரும் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று உயர்தரத்தில் காலடி எடுத்து வைத்தனர்.

    பெற்றோருக்கு தாங்கொனா மகிழ்ச்சி வெள்ளம் மனதிலே. ரவியையும் சுகந்தனையும் பாராட்டிச் சேர்த்தனர் உயர்தரத்தில். இருவரும் ஒருமனதோடு விஞ்ஞானப் பிரிவைத் தெரிவு செய்தனர். வைத்தியர்களாவதே இருவரினதும் கனவாக இருந்தது அன்று. பேரானந்தத்துடன் உயர்தரத்தில் கல்வி கற்கத் தொடங்கினர். விசேட வகுப்புக்களையும் குழுவகுப்புககளையும் தொடர்ந்து கற்றதோடு , தெரியாத கேள்விகளை தம் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவாக்கிக்கொள்ள இருவரும் என்றும் பின்வாங்கியதில்லை. “முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்” என்ற பெரியோரின் வாக்கிற்கமைய உயர்தரப் பரீட்சையை சிறப்பாக எழுதி முடித்தனர். பரீட்சை முடிந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் இருவரும் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி பல கற்பனைகளை பகிர்ந்துகொண்டனர்.

    இப்படி நடவடிக்கைகள் ஓடிக்கொண்டிருக்கையில், ரவியின் தந்தை சற்று சுகவீனமுற்றார். வைத்தியப் பரிசோதனைகள் செய்தனர். பரிசோதனைகளின் முடிவில் இதயத்தின் மூன்று வால்வுகள் “கொலஸ்டரோல்” அடைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. தாமதித்தால் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படுமென வைத்தியர் குழு தெரிவித்தனர்.

    இருள் சூழ்ந்த நிலையில் ரவியின் குடும்பம் … ரவியின் குடும்பத்தில் ஐந்துபேர். மூத்தவன் ரவி. தாய் தந்தை மற்றும் இரண்டு இளைய தங்கைகள். அனைவரின் பொறுப்பும் ரவியின் கையிலே. குடும்ப சுமையை சுமந்த தந்தை நினைவின்றி படுக்கையிலே இருக்கும் நிலை பார்த்து இடிந்துபோன நிலையிலே நிற்கின்றான் ரவி. நண்பன் சுகந்தனின் அன்பான வார்த்தைகளாலே ஒரளவு தெளிவு பெற்றான்.

    வைத்தியக்குழுவோ சத்திரசிகிச்சைக்கான திகதியை முடிவு செய்தது. பணத்தை எல்லோருமாக சேர்ந்து தேடி ஒருமாதிரியாகக் கட்டிவிட்டனர். அதற்கு ரவியின் பாடசாலை மற்றும் நகரத்து வணிகர்கள் சிலர் என உதவியும் செய்தனர். இறைவனை வேண்டிக்கொண்டு குறித்த நாளில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் ரவியின் தந்தை. இதற்கிடையில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் நாளும் நெருங்கியது. எதுவுமே ரவியின் மனதில் நினைவில் இல்லை. தந்தையைக் காப்பாற்றுவதே ஒரே நோக்கமாக இருந்தது. கவலையிலேயே அன்றைய தினம் முடிந்தது. மறுநாள் அவசர அழைப்பொன்று வைத்தியசாலையிலிருந்து கிடைத்தது.

    உடனே ரவியும் சுகந்தனும் அவசர அவசரமாக எழுந்து ஓடோடிச் சென்றனர் வைத்தியசாலைக்கு. அங்கே ஓர் பேரதிர்ச்சி! தந்தை வைத்திய சிகிச்சைப் பலனின்றி காலமானார் என்ற செய்தி ….. இடிந்துபோனான் ரவி. உலகமே இருள் சூழ்ந்தது. துயரம் சொல்லில் அடங்கவில்லை. ஒருவாறு தந்தையின் இறுதிச் சடங்குகளை செய்து முடித்தனர். ரவியின் குடும்பம் நிர்க்கதியான நிலைக்குள்ளானது. இரண்டு மூன்று தினங்களின் பின் பெறுபேறுகள் வெளியாகின. ரவியும் சுகந்தனும் உயர்தரத்தில் உயர் புள்ளிகள் பெற்று மருத்துவப் பீடம் தெரிவாகினர். பேராதனைப் பல்கலைக்கழகம் இவர்கள் இருவருக்கும் கிடைத்தது. ஒருபக்கம் மகிழ்ச்சி, மறுபக்கம் துக்கம்.

    இதற்கிடையில் ரவி தவித்துப்போனான். குடும்ப சுமையை சுமக்க வழி தெரியாது தடுமாறினான். அப்போது பத்திரிக்கையில் வெளியான ஒர் விளம்பரத்தைப் பார்த்தான் ரவி.”வேலை ஆட்கள் தேவை” தனியார் வெளிநாட்டு நிருவனமொன்றின் விளம்பரமது. உடனே விண்ணப்பிக்கின்றான். இது பற்றி சுகந்தனிடமும் சொல்கின்றான். சுகந்தனுக்கு ஒன்றுமே செய்யமுடியவில்லை. நண்பனுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்வதைத் தவிர. சில நாட்களில் வேலையும் கிடைத்தது. உடனே வருமாறு வெளிநாட்டுத் தூதரகம் பணித்தது. வறுமையை தன்மேல் சுமையாக்கிக்கொண்டு வெளிநாடு போக ரவி முடிவு செய்தான். கண்களில் கண்ணீர் நிறைய பெற்ற பெறுபேறுகளையும் விட்டுவிட்டு வெளிநாடு போக தயாராகினான். பிரிவின் ரணம் அவனை கொஞ்சம் கொஞ்சமாய் வாட்டத் தொடங்கியது. ரவியின் ஆசிரியர்களும் சுகந்தனும் அவனை மருத்துவ பீடம் போகச் சொல்லி கட்டாயப்படுத்தினர். இருந்தும் அவன் அதற்கு உடன்படவில்லை. குடும்பத்தை காப்பாற்றுவதே கடமை என நினைத்தான். நண்பன் சுகந்தனை அழைத்தான்.

    “நல்லதோர் வைத்தயனாக வெளியேறுவாய் என் நண்பனே” என்று அவனிடம் கூறிவிட்டு தன் பொதிகளை அடுக்கத் தொடங்கினான். சுகந்தன் கண்ணீரோடு ரவிக்கு பிரியாவிடை வைக்க ஒழுங்கு செய்தான். மனதில்சுமையோடு ரவியும் இதற்கு ஒத்துக்கொண்டான். மறுநாள் சுகந்தனின் வீட்டுக்கு ரவி வந்தான். சுகந்தனின் வீட்டில் எல்லோரும் ரவிக்கு வாழ்த்துச் சொன்னார்கள். நண்பன் சுகந்னின் கண்களில் கண்ணீர் மழை. நண்பனை கட்டித் தழுவி உயிரையே இழந்ததாய் “ஓ ” வென்று கதறி அழுதான். இருவருக்கும் தாங்களை சுதாகரித்துக் கொள்ள முடியவில்லை.

    இரு உள்ளங்களும் பிரியாதே வார்த்தைகளால் விடைகொடுத்துக் கொண்டனர். சுகந்தனின் நினைவுச் சின்னமாக அழகிய கைக் கடிகாரமொன்றை பரிசாகக் கொடுத்தான். “ஓடுவது முற்களில்லை நண்பா உன்னை நான் மீண்டும் காண்பதற்கான கால இடைவெளி” என்று கூறி அவன் கையிலே கொடுத்தான். இன்று இரவு முழுதுமே ரவியின் ஞாபகம் தான் சுகந்தனுக்கு. அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு ரவி வீட்டைவிட்டு புறப்பட்டான். முதல் முறை பிரிவை சந்திப்பதில் என்ன செய்வதென்று புரியவில்லை அவனுக்கு. மீண்டும் ரவியும் சுகந்தனும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக்கொண்டனர். ரவியின் தாயும் தங்கைகளும் கண்ணீரோடு நின்றனர். ரவி இப்போது உள்ளே பொதிகளை சரி பார்க்கச் சென்றாகவேண்டும். ஒன்றாய்த் தட்டி ஓசை வந்த இரு கைகளும் பிரியாவிடை கொடுத்தன. தொலைவில் கையசைத்த நண்பனின் விம்பம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்தது.

    Share
  • ஒன்றிணைவோம்!

    -துஷ்யந்தி

    சுடர் விளக்கினைப்போல் – உள்ளே
    இருள் குகைதனைப் போல்
    உள்ளம் இருக்கக் கண்டேன் – மனிதர்
    எண்ணம் இதுவென உணர்ந்தேன்!

    ஈயாதவன் தனை வௌவி – நல்ல
    இரவலர்க்கு ஈயும் புரவலர் போல
    வேண்டும் மனநிலை என்று – மனது
    நித்தம் சொல்லக் கேட்டேன்!

    வாழ்வை இழந்த குழந்தை – பலர்
    கைநீட்டி வீதியோரமாக
    வாடி நிற்பதைக் கண்டேன் – உள்ளம்
    வெறுத்துத் துடிப்பதை யுணர்ந்தேன்!

    கல்வி சிறிதும் காணா – குழந்தை
    வாழ்வில் உயர்வதெப்படி?
    கையை நீட்டாத மனிதர் – உலகில்
    சரித்திரம் படைப்பது எப்படி?

    நல்ல உள்ளம் படைத்தான் – அதில்
    இரக்கக் குணத்தை நிறைத்தான்
    கல்லைப் போல மனிதா – நீயும்
    கரையாது இருப்பதும் ஏனோ?

    உதவும் கரங்கள் வேண்டும் – பிறர்
    உள்ளம் புரிந்திட வேண்டும்
    மடமை ஓட்டிட வேண்டும் – இளைஞர்
    மகுடம் சூடிட வேண்டும்!

    காணும் இடத்திலெல்லாம்- பல
    கல்விச் சாலைகள் வேண்டும்
    யாவரும் கற்றவராக – மண்ணில்
    மிளிரும் நிலை வர வேண்டும்!

    நாட்டில் உற்பத்தி வேண்டும் – பிற
    நாடு செல்லா நிலை வேண்டும்
    நாடும் பொருளையெல்லாம் – இங்கு
    நாமே உற்பத்தி செய்ய வேண்டும்!

    கனவு நனவாக வேண்டும் – கலாம்
    சொன்னது பலித்திட வேண்டும்
    தோல்வி நம்மிடம் தோற்று – வெற்றிப்
    பாதைக்கு வழிவிடல் வேண்டும்!

    கைகள் கோர்த்தெழுவோம் – சிறுவர்
    கல்விக்கு வழிவகுப்போம்
    கனவான தேசத்திலே – புதுக்
    கவிதைகள் நாமாகுவோம்!

     

    Share
  • தமிழா தமிழில் பேசு!

    -துஷ்யந்தி

    எதையடா இழந்துவிட்டாய்
    இன்பத் தமிழை மறப்பதற்கு?
    நவீனத்துடன் ஓடுகின்றாய்
    நாயாய்ப் பேயாய் அலைகின்றாய்!

    உறக்கத்தைத் தொலைத்தாய்
    உறவுகளையும் தொலைத்தாய்
    அந்நியன் ஆக்கித்தந்த
    ஆங்கிலத்தைப் பேசுகின்றாய்!

    அரைகுறையாய் ஆடைகளையும்
    மாற்றித்தான் பார்க்கின்றாய்
    சர்வதேசம் என்ற பேரில்
    சாக்கடை நோக்கிப் பயணம்!

    “அம்மா” என்ற அழகிய தமிழை
    “மம்மி” என்று மரணக் கல்லறை
    ஆக்கிவிட்டாய்!
    தமிழின் இனிமையைக் கொச்சை
    படுத்திக் காட்டுகின்றாய்!

    போதும் அறியாமையை நிறுத்திடு
    அமுதத் தமிழை உணர்ந்திடு
    சர்வதேச மொழி – அது உலகின்
    சவால்களை எதிர்கொள்ள மட்டுமே!

    தாய் தந்த மொழி – அது தரணியில்
    பிறவி முடியும்வரை
    எமது தனித்துவத்தை எதற்காகவும்
    விற்காதீர் வீரத் தமிழினத் தோழர்களே!!

     

    Share
  • ஏன் இப்படியாச்சு?

    -துஷ்யந்தி

    மனிதனின் உள்ளத்தில்
    சுயநலம் புகுந்தாச்சு
    இயற்கையை எண்ணிப்பார்க்க
    நேரம் குறைந்தாச்சு!                                  dhushyanthi

    பசுமையான நிலமெல்லாம்
    பாலைவனமாய் மாறியாச்சு
    பூமியிலே புதிதாக
    ஓசோன் ஓட்டையாச்சு!

    பூமிக்குள்ளே ஊதாக்கதிரின்
    வருகை கூடிப்போச்சு
    புதுப்புது நோயெல்லாம்
    இதனால் உருவாச்சு!

    பச்சை நிறத்தின் பசுமைபோய்
    தூசு படிந்தாச்சு
    சுவாசிக்கும் காற்றுகூட
    விஷக்காற்றாகிப் போச்சு!

    வானிலை வட்டமெல்லாம்
    சுற்று மாறிப்போச்சு
    பூகம்பமாயும் வெள்ளமாயும்
    பூமியைத் தாக்கியாச்சு!

    மக்களெல்லாம் அநாதையாய்
    அலையவேண்டியதாச்சு
    களவும் கொள்ளையும்
    தலை மீறலாச்சு!

    மனிதத்தின் தனித்துவம்
    மண்ணில் அழிந்துபோச்சு
    தலைக்குமேல் வெள்ளம் போன
    நிலைக்கு தள்ளலாச்சு!

    சந்ததியின் எதிர்காலம்
    கேள்விக்குறியாச்சு
    கேள்விக்கு விடைதேட
    அவசரம் வந்தாச்சு!

    ஆளுக்கொரு மரம் நடணுமென
    எண்ணம் தோன்றியாச்சு
    அழகான பூமிக்கு
    அத்திவாரம் தோன்றியாச்சு!

     

    Share
  • வாழத் தகுதியுண்டோ!

     

    துஷ்யந்தி
    **************************

    ஒரு விரல் சுட்டிக்காட்ட
    மறு விரல் தன்னைக்காட்ட
    குற்றங்கள் சொல்வாரடி- கிளியே
    குற்றம் நிறைந்தாரடி.!

    கண்கள் இரண்டிருந்தும்
    காணும் திறனிருந்தும்
    பிறர் பசியை உணராரடி- கிளியே
    உவமானம் இவர்க்கேதடி.!

    பெண்மை வாழ்க என்றே
    பெரிதாய் சட்டங்கள் அமைத்தும்
    வன்புணர்வில் இன்பம் காண்பாரடி -கிளியே.!
    மன்னிப்பு இவர்க்கேதடி..!

    கூட்டம் கூட்டி வைத்து
    தோற்றமாய் மேடையேறி
    சாட்டையாய் கருத்துரைப்பாரடி-கிளியே
    அடுத்த கனம் மறப்பாரடி..!

    அடுக்கடுக்காய் மாடி கட்டி
    ஆடம்பரப் பொருள் சேர்த்து
    செல்வந்தராவாரடி- கிளியே
    கல் நெஞ்சம் கொண்டாரடி..!

    பச்சிளம் குழந்தையொன்று
    பசியினால் பிச்சை கேட்க
    துஷ்பிரயோகம் செய்தாரடி- கிளியே
    பேசிப் பயனென்னடி..!

    அல்லும் பகலுமாய்
    ஆண்டவன் கோயில் சென்று
    பூஜைகள் செய்வாரடி- கிளியே
    பிறர்கு உதவ மறந்தாரடி.!

    பெற்றவரை மற்றவருக்காய்
    அலட்சியம் செய்துவிட்டு
    காப்பகத்தில் கைவிட்டாரடி- கிளியே
    உண்மை அறியாரடி..!

    போதைக்கு அடிமையாகி
    போகும் பாதை தெரியாது
    வாழ்வை வீண் செய்வாரடி- கிளியே
    வாழ்வில் உயர்வேதடி..!

    மாறும்உலகத்திலே
    மனிதத்தை மறந்துவிட்டு
    வாழப் பழகினாரடி – கிளியே
    இவருக்கு வாழத் தகுதியுண்டோ???

     

    Share
  • போய்விடு போதையே!

    -துஷ்யந்தி

    சுதந்திர நாட்டில் சுதந்திரம் பறிக்க
       ஏவினாய் விதை தூவினாய்
    தலையை ஆட்டும் மந்தையாய் எமை
       மீட்டினாய் ஆசை யூட்டினாய்!

    அற்பமாய் மனதிலேபல ஆசைகள்
        காட்டினாய் பழி ஈட்டினாய்
    கற்பினை அழிக்கக் கயவர்கள் சிலரைத்
       தோற்றினாய் புன்மை ஆக்கினாய்!              intoxication

    போதைக்கு அடிமையா யிருத்தல்
        நியாயமோ இது தேவையோ?
    சிந்தனை செய்யா மனிதனேயிது
        நீதமோ பிடி வாதமோ!

    உன்னதவாழ்வின் அழகிய நொடிகள்
          மாறுமோ வீண் போகுமோ
    புத்தி கூறிநல் வழிப்படுத்தல்
          பாபமோ மனஸ் தாபமோ?

    பெற்றதாய்க்கு இல்லை பிள்ளையெனப்
       போகவோ நாங்கள் சாகவோ?
    குற்றம் செய்வித்துச் சிறைக்குள்ளே
       தள்ளுவாயோ பழி கொள்ளுவாயோ!

    நல்ல மரத்திலே புல்லுருவியாய்நீ
       தொற்றுவாயோ கைப் பற்றுவாயோ
    வெற்றி வாகை சூடும்நேரம்
      தாழ்த்துவாயோ எமை வீழ்த்துவாயோ?

    புற்றுநோயாய்த் தொற்றி உயிர்குடிக்க
       வந்திட்டாய் சமூகம் அழித்திட்டாய்
    இன்னும்நீ செய்யும் கொடுமைக்கு
       மலைவுறோம் சித்தம் கலைவுறோம்!

    வந்தவழிதனில் திரும்பிப் பார்க்காது
       போய்விடு எம்மை வாழவிடு!
    நாளைய நாட்கள் வாசனைமலராய்
       மலரட்டும் யுகம் புலரட்டும்!

     

    Share
  • உறவுகளும் விரிசல்களும்!

    -துஷ்யந்தி

    இன்னும் இருக்கின்றோம்
    உண்மை உணராதவர்களாய்!

    உறவென்று நினைத்தவர்கள்
    நம்மை –
    பொருட்படுத்துவதே இல்லை                         relationship and breakups
    வாசல்வரைவந்து  அவ்வப்போது
    காலைவாரி விடுபவர்கள்!

    புதிய உறவுகள் வந்து
    பெரிதாய்க் கிழித்துவிடும்
    என்றிருக்க,
    பொய்களுக்குக் கூட
    அவர்கள் முலாம்
    பூசிவிட்டார்கள்!

    ஏமாறுவது – எங்கள்
    இரத்தத் துணிக்கையாய்!

    உண்மைகள் ஏராளம்
    கட்டுப் படுத்துகையில்-

    மனிதாபிமானம் எமக்குள்
    உன்னிப்பாய் இருக்கையில்-

    இயற்கையைச் சிலநேரம்
    மலைக்க வைக்கும் போது-

    மாறிவிட்டேன்
    மறந்துவிட்டேன்- என
    உறவுகள் கொஞ்சம் தலைகாட்டும்!

    மாங்காய்க் கொட்டைக்குள்
    பத்திரமாய் அடங்கிக் கிடக்கும்
    வித்தின் பருப்பு போல,
    தேசியக் கடலுக்குள்
    இணையப்படாத கிணறாக,
    சின்னச் சுகங்களிலே
    சந்தோஷம் கண்டுகொண்டு
    இன்னும் இருக்கிறோம்
    உண்மை உணராதவர்களாய்
    உறவுகளில் விரிசல்களாய்!!

    ***

    படத்திற்கு நன்றி: கவிதை வயல்

     

    Share
  • இணையத் தமிழே இனி!

    -துஷ்யந்தி

    உலகினில் ஆயிரம் மொழிகள் – அவை
       என்னுயிர்த் தமிழ்போல் இல்லை
    உலகினில் இதனைச் சொல்ல – கணினி
      இணையதளத்திற்கு ஈடு இல்லை!

    மூன்று குலத்தமிழ் மன்னர் – அன்று
        ஆண்ட கதைதனைக் கேளீர்
    அவர் ஆற்றிய பணிகள் எல்லாம் – இன்று
       காட்டிடும் தமிழ் இணையம் பாரீர்! 

    வள்ளுவன் கம்பன் போல – தமிழை           inaiyathamizh
       போற்றியவர் யாரும் உண்டோ?
    இறவாத புகழுடைய நூல்கள் – இன்றும்
       இணையத்தில் காணலாம் வாரீர்!

    ஆங்கில மோகத்தில் திளைத்து – உலகில்
         அழிந்திடும் நிலை நம் மொழிக்கு
    அவை யாவையும் இன்று தடுக்க – வந்த
        தமிழ் இணையங்களைப் பாரீர்!

    மொழிதனைப் பயிலும் குழந்தை – அதை
        முறையாய்த் தொடரலாம் இங்கு
    இலக்கண நூல்களும் தமிழகராதியும் – அதற்கு
      இணையத்தில் மென்பொருளாகக் காணீர்!

    பிறநாட்டு நல்லறிஞர்கூட – தமிழை
       சுவைபட உணர்ந்தனர் இன்று
    தேமதுரத் தமிழோசையை – உலகில்
      பரப்பிய பெருமை இணையத்திற்கே!

    ஆய்வுகள் எத்தனை செய்தோம் – இன்று
       சான்றுடன் இணையத்தில் கண்டோம்
    மாறிடும் வாழ்வில் இனி என்றும் – தமிழ்
        மாண்டிடாது காத்திடும் இணையம்!

    சமூக வலைத்தளங்கள் கண்டோம்- அதில்
       அறிஞர் பலரை நட்பால் இணைத்தோம்
    ஒரு தாய் வீட்டுப் பிள்ளையாய் – இன்று
       கருத்துக்கள் பரிமாறிக் கொண்டோம்!

    தாய்த்தமிழ் மாறுவதில்லை – இனி
            தாகத்திற்கு இடமுமில்லை
    மொழியின் தேவைகள் யாவையும் – இன்று
         வழங்கிடும் நிலையில் இணையம்!

     

    Share
  • களைந்த கனவுகள்!

    -துஷ்யந்தி

    காத்திருந்து கன்னியிவள்
    கரம்பிடித்தாள் மன்னவனை
    நிலையில்லாத வாழ்க்கையாய்
    ஆனதிந்த வாழ்க்கையே…!

    தோற்றுவிட்ட கனவுகளாய்                             faded dreams
    எண்ணமெல்லாம் மாறிவிடப்
    பேதையிவள் என்செய்வாள்?
    வாடியே நின்றிடுவாள்…!

    விதவையென பெயர்தந்து
    வெண்ணிற உடை தந்து
    கை வளைகள் தானுடைத்துக்
    கைவிலங்கு போட்டுவைக்க
    என்பிழை இவள் செய்தாள்?

    கன்னியிவள் காலங்கள்
    தன்னந்தனியாய்க் கழிந்ததனால்
    உலகிவளுக்குத் தந்தபெயர்
    முதிர்கன்னி என்றிருக்க…

    கல்யாணக் கோலம் கண்ட
    பின்னே நேர்ந்த விபத்தால்
    இவள் கணவன் உயிரிழக்க
    இப்போது இவள் பெயர்
    விதவையென்றானதோ?

    ஏற்றுக்கொள்ள முடியாத
    காரணங்கள் பல சொல்லி
    மூலையிலே ஒதுக்கிவிட்ட
    சாக்கடைச் சமுதாயமே!

    சுமங்கலியை அமங்கலியாய்
    மாற்றியதும் நீரல்லவா…?
    அவள் எதிரிலே வருதல்
    ஆகாதென்று காரணம்
    சொல்வதும் நீரல்லவா…?

    போற்றுவதும் தூற்றுவதும்
    பெரிதில்லை உமக்கெல்லாம்
    மனம் பட்டிடும் பாட்டை
    எவரும் கொஞ்சம் நினைத்தீரோ…?

    சாத்திரங்களும் சம்பிரதாயங்களும்
    வகுத்துத்தந்த உண்மைகளை
    வாய்க்கு வந்தாற்போல
    சொல்வதை நிறுத்திடுவீர்…!

    மாயவன் தந்த உடல்
    பூமிக்குப் போகும் வரை
    அவன் பார்வையிலே யாவரும்
    சமமென்று உணருங்கள்!

    வாழ்விலே சாதனைகள்
    என்செய்தோம் என்பதனை
    யாவரும் ஒருமுறை
    தனக்குள்ளே கேட்டுடுவீர்!

    அதனால் தோன்றிடும் விடைகளே
    விருட்சங்களை உருவாக்கும்
    அன்று அனைவரின் மனதிலும்
    ஒரே எண்ணம் உருவாகும்!

     

    Share
  • முட்களும் சொற்களும்!

    -துஷ்யந்தி

    சொற்களுக்கும் முட்களுக்கும்
    சொல்லிலடங்கா ஒற்றுமைகள்
    உண்டென்று கண்டுகொண்டேன்
    இன்று உன் வார்த்தைகளில்…                              thorns and words

    ரோஜாவென்று வாசம்காட்டி
    இன்பம்காட்டி உள்ளமெல்லாம்
    இன்னிசை மழை பொழிய
    வைத்ததுவும் நீதானே…!

    இல்லாத ஒன்றுக்காய்
    இன்பங்கள் அத்தனையும்
    கண்ணிமைக்கும் நேரத்தில்
    தகர்த்ததுவும் உண்மைதானே…!

    மெல்லிய ஸ்பரிசமாய்
    என்னுள்ளே நினைவானாய்
    உள்ளத்தில் நீங்காத ரோஜா
    வாசனை நீயானாய்…!

    மென்மையும் வெண்மையும்
    தைத்ததில் என்னுள்ளே
    இன்னமும் கசிகின்றது
    இதயத்துள் வலிகளாய்…

    சிக்கிக்கொண்ட வார்த்தைகள்
    சீர்திருத்தி மீண்டு வர
    எத்தனை நாள் காத்திருக்க?
    சொல்லிவிடு இன்றெனக்கு…!

    முட்களில் பிறந்த ரோஜா
    சிக்கியதில்லை முட்களில்
    அப்படித்தான் நினைத்திருந்தேன்
    மாய உலகில் உன்னையும்

    வார்த்தைகளில் வலைவிரித்து
    வாஞ்சையாய்ப் பேசவைத்து
    மீண்டிடா ரணம்கொடுக்க
    உன்னால் எப்படி முடிந்தது??

     

    Share
  • சிந்தையை மாற்றும் சினம்!

    -துஷ்யந்தி

    எனக்குள் இருக்கும்
    உன்னையும்
    உனக்குள் இருக்கும்
    என்னையும்                                                         anger
    பிரிய நினைத்தும் கூட
    இயற்கையெம்மை
    பிரிய விட்டதே இல்லை!

    உணர்வுகளில் ஓர்
    உந்தம்…
    நரம்புகளில் ஓர்
    கதிர்த் தாக்கம்…
    வார்த்தைகளில் ஓர்
    வன்மை…
    என் தோற்றத்தில்
    ஓர் கடுமை…
    மொத்தத்தில் ஓர்
    அந்நியனாய்!

    எதனால் என்னில்
    தோன்றினாய்…?
    எப்படி என்னை
    இயக்குகின்றாய்…?
    இதனைத் தேடி
    ஓய்ந்தவனாய்…
    இருக்கின்றேன் நானும்
    மண்ணிலே!

    மாற நினைக்கிறேன்
    மீண்டும் வருகிறாய்!
    என் முயற்சிகளில்
    முற்று வைக்கிறாய்!
    போதும் உன்னால்
    விளைந்தவை!

    உன்னால் எனக்கு
    அழிவே…
    உன் பிரிவால் கிடைக்கும்
    தெளிவே…
    மாற்றம் கண்டது என்
    அறிவே…
    புதுத் தோற்றம் பெற்றது என்
    உடலே!

    மறையோன் என்னில்
    இருக்கிறான்…
    உன் மாய வலைக்குள்
    விட்டிடான்…
    புத்தம் புதிதாய் என்னை
    மாற்றுவான்…
    அதனால்,
    மறந்துங்கூட என்னில்
    மீண்டும்
    மலர்ந்திடாதே கோபமே!

     

    Share
  • உடல் ஓர் ஆலயம்!

    -துஷ்யந்தி

    இன்பத்தையும் துன்பத்தையும்
    தாங்கிக் கொள்ளும்
    சுமைதாங்கி!

    என்புகளே அத்திவாரம்
    சதையெனும் சீமெந்து பூசப்பட்ட
    கட்டடம்!

    இதயமெனும் கிரீடம்
    இணைக்கப்பட்ட நாடி நாளங்கள்
    வர்ண ஒளிவிளக்காய்
    இரத்தவோட்டம்!

    தலைமைப் பீடமாய் மூளை
    எண்ணிலடங்கா மடிப்புக்கள்
    கணனியையும் மிஞ்சிடும்
    அற்புதச் சேமிப்பகம்!

    கண்களெனும் காட்சிப் பீடம்
    காதுகளெனும் கேள்விப் பீடம்
    வாயெனும் வாக்குப் பீடம்
    கை கால்களாய் செய்கைப் பீடம்
    அங்கங்களால் ஆன
    பல்கலைக்கழகம்!

    உள்வாங்கும் உணவுகளை
    இயந்திரமின்றி உடைத்தெறிந்து
    அகத்துறிஞ்சும் களஞ்சியம்!

    பல்வேறு தொகுதிகளைத்
    தொடராய்க் கொண்ட
    தொழிற்சாலை!

    ஆன்மா ஒளிந்திருக்கும்
    இருள் சூழ்ந்த மண்டபம்
    பக்தி எனும் தீபம், பாதை காட்ட
    நவீன உலகுடன் போட்டியிடும்
    அங்கீகாரமில்லாச்  சாதகன்
    இறைவனால் ஆக்கப்பட்ட
    அற்புதக் கலையகம்!

    உடலுக்கு நன்மை செய்
    உனக்கு நன்மை செய்திடும்!
    தூய்மை காத்திடு
    அது உன் சிந்தையைத்
    தூய்மையாக்கிடும்!
    காரணம் உடல் ஓர் ஆலயம்!!

     

    Share
  • இயற்கையின் கோலம்!

    -துஷ்யந்தி, இலங்கை

    வாழ்க்கையை ரசிக்க
    வைகறையைத் தேடிவந்தேன்
    வருடிச்சென்றது என் மேனியில்
    சில்லென்ற காற்று…!                                        nature

    சிலிர்ந்தது என் மேனி
    குளிர்ந்தது உள்ளம்
    தெளிந்த நதியின் நடையில்
    தொலைகின்றது என் மனம்!

    பஞ்சணைப் படுக்கையாய்
    புல்லினங்கள் மேனி தடவ
    ஏதேதோ எண்ணங்கள்
    அரவணைக்கக் கண்டேன்…!

    பாடித்திரியும் பறவைகள்
    காதிலே காதல் கானம் சொல்ல
    வண்டினங்கள் பூவை வட்டமிட்டு
    ரீங்காரமிட…
    காதலின் கோலத்தைக்
    கணப்பொழுதில் கண்டேன்…!

    நதி நீரில் மீனினங்கள்
    மேலேழுந்து பாய்கையில்
    நானும் கூட மீனினமாக
    பிறக்கவில்லையே…என்று
    கற்பனையில் ஓர் ஆதங்கம்!

    அந்திவானம் ஒளியிரங்க
    நதிநீரில் கதிரவனின் மேனிபடப்
    பறவைகள் வானத்தில் வட்டமிடக்
    கங்கையின் கோலத்தை
    என்னவென்று சொல்ல…!

    பட்டாம்பூச்சியாய் நானும் மாறி
    நதிநீரை முகத்தில் தெளிக்க
    நினைவுகளும் மறந்துபோக
    மயங்கிவிட்டேன் இயற்கையில்!!


    Share
  • நாம் பெற்ற உரிமை!

    -துஷ்யந்தி, இலங்கை

    பாரதிகண்ட புதுமைப் பெண்
    ஆணுக்குச் சரிநிகர் சரி பாதி
    என்றதோடு நின்றிடவில்லை
    ஒருபடி மேல் சென்றுவிட்டாள்!

    நீர் மேல் நிலையில்லா
    நீர்க்குமிழியாம் வாழ்க்கை
    அதில் காற்றோடு ஒட்டிய
    தூசுகளே பந்தங்கள்!

    நீரின் மேல் வள்ளம் போல்
    பந்தங்களோடு தடை தாண்டி
    வெற்றி இலக்கை அடைவதே
    வாழ்வின் உண்மைத் தத்துவம்!

    உரிமை பெற்றோம் என
    ஒதுங்கி வாழ்ந்திடாது
    இன்ப துன்பங்களில்
    தோள் கொடுப்போம் – வரும்
    விளைவுகளைச் சமமாய்
    முகம் கொடுக்கக் கற்றிடுவோம்!

    இணைந்த கைகள் எழுப்பும் ஒலி
    தனித்த கையில் வருவதில்லை
    ஆணவம் நம்மிடை இருக்கும்வரை
    வெற்றி நம்மிடம் வருவதில்லை!!

     

    Share