பிரியா விடை

–துஷ்யந்தி.

பாலர் வகுப்பிலிருந்தே சுகந்தனும் ரவியும் இணைபிரியா நண்பர்கள். காரணம் அவ்களின் பெற்றோரும் நட்பிலே இணைந்தவர்கள். ஒரே பள்ளிக்கூடத்திலேயே இருவரும் ஒன்றாகவே கல்வியைத் தொடர்ந்தனர். கலைமகள் கண்பார்வையில் பூத்த மலர்களாய் திறமையில் கொஞ்சமும் இருவரும் சளைத்ததில்லை. மாலை நேரம் கைகோர்த்து விளையாட்டில் ஈடுபடும் அதேவேலை, வீட்டுப் பாடங்களையும் செவ்வனே செய்து முடிப்பதில் இருவரும் என்றும் முதன்மையே.

சின்னதாய் செல்லச் சண்டையிடுவதும், சிறிது நேரத்தில் சேர்ந்துகொள்வதும் வழமையாகிப்போனது அவர்களினிடையே. ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளி பெற்று இருவரும் பாடசாலைக்கு நற்பெயர் வாங்கித்தந்து, நகரத்துப் பெரிய பாடசாலைக்குத் தெரிவாகினர். அங்கும் திறமையில் குறையாமல் பயின்று சாதாரண தரப் பரீட்சை வரை சென்று பரீட்சையை எதிர்நோக்கினர். அங்கேயும் வெற்றி அவர்களை விட்டுவைக்கவில்லை. தொடர்ந்து இருவருக்கும் சிறந்த பெறுபேறுகள். இருவரும் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று உயர்தரத்தில் காலடி எடுத்து வைத்தனர்.

பெற்றோருக்கு தாங்கொனா மகிழ்ச்சி வெள்ளம் மனதிலே. ரவியையும் சுகந்தனையும் பாராட்டிச் சேர்த்தனர் உயர்தரத்தில். இருவரும் ஒருமனதோடு விஞ்ஞானப் பிரிவைத் தெரிவு செய்தனர். வைத்தியர்களாவதே இருவரினதும் கனவாக இருந்தது அன்று. பேரானந்தத்துடன் உயர்தரத்தில் கல்வி கற்கத் தொடங்கினர். விசேட வகுப்புக்களையும் குழுவகுப்புககளையும் தொடர்ந்து கற்றதோடு , தெரியாத கேள்விகளை தம் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவாக்கிக்கொள்ள இருவரும் என்றும் பின்வாங்கியதில்லை. “முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்” என்ற பெரியோரின் வாக்கிற்கமைய உயர்தரப் பரீட்சையை சிறப்பாக எழுதி முடித்தனர். பரீட்சை முடிந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் இருவரும் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி பல கற்பனைகளை பகிர்ந்துகொண்டனர்.

இப்படி நடவடிக்கைகள் ஓடிக்கொண்டிருக்கையில், ரவியின் தந்தை சற்று சுகவீனமுற்றார். வைத்தியப் பரிசோதனைகள் செய்தனர். பரிசோதனைகளின் முடிவில் இதயத்தின் மூன்று வால்வுகள் “கொலஸ்டரோல்” அடைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. தாமதித்தால் உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்படுமென வைத்தியர் குழு தெரிவித்தனர்.

இருள் சூழ்ந்த நிலையில் ரவியின் குடும்பம் … ரவியின் குடும்பத்தில் ஐந்துபேர். மூத்தவன் ரவி. தாய் தந்தை மற்றும் இரண்டு இளைய தங்கைகள். அனைவரின் பொறுப்பும் ரவியின் கையிலே. குடும்ப சுமையை சுமந்த தந்தை நினைவின்றி படுக்கையிலே இருக்கும் நிலை பார்த்து இடிந்துபோன நிலையிலே நிற்கின்றான் ரவி. நண்பன் சுகந்தனின் அன்பான வார்த்தைகளாலே ஒரளவு தெளிவு பெற்றான்.

வைத்தியக்குழுவோ சத்திரசிகிச்சைக்கான திகதியை முடிவு செய்தது. பணத்தை எல்லோருமாக சேர்ந்து தேடி ஒருமாதிரியாகக் கட்டிவிட்டனர். அதற்கு ரவியின் பாடசாலை மற்றும் நகரத்து வணிகர்கள் சிலர் என உதவியும் செய்தனர். இறைவனை வேண்டிக்கொண்டு குறித்த நாளில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் ரவியின் தந்தை. இதற்கிடையில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் நாளும் நெருங்கியது. எதுவுமே ரவியின் மனதில் நினைவில் இல்லை. தந்தையைக் காப்பாற்றுவதே ஒரே நோக்கமாக இருந்தது. கவலையிலேயே அன்றைய தினம் முடிந்தது. மறுநாள் அவசர அழைப்பொன்று வைத்தியசாலையிலிருந்து கிடைத்தது.

உடனே ரவியும் சுகந்தனும் அவசர அவசரமாக எழுந்து ஓடோடிச் சென்றனர் வைத்தியசாலைக்கு. அங்கே ஓர் பேரதிர்ச்சி! தந்தை வைத்திய சிகிச்சைப் பலனின்றி காலமானார் என்ற செய்தி ….. இடிந்துபோனான் ரவி. உலகமே இருள் சூழ்ந்தது. துயரம் சொல்லில் அடங்கவில்லை. ஒருவாறு தந்தையின் இறுதிச் சடங்குகளை செய்து முடித்தனர். ரவியின் குடும்பம் நிர்க்கதியான நிலைக்குள்ளானது. இரண்டு மூன்று தினங்களின் பின் பெறுபேறுகள் வெளியாகின. ரவியும் சுகந்தனும் உயர்தரத்தில் உயர் புள்ளிகள் பெற்று மருத்துவப் பீடம் தெரிவாகினர். பேராதனைப் பல்கலைக்கழகம் இவர்கள் இருவருக்கும் கிடைத்தது. ஒருபக்கம் மகிழ்ச்சி, மறுபக்கம் துக்கம்.

இதற்கிடையில் ரவி தவித்துப்போனான். குடும்ப சுமையை சுமக்க வழி தெரியாது தடுமாறினான். அப்போது பத்திரிக்கையில் வெளியான ஒர் விளம்பரத்தைப் பார்த்தான் ரவி.”வேலை ஆட்கள் தேவை” தனியார் வெளிநாட்டு நிருவனமொன்றின் விளம்பரமது. உடனே விண்ணப்பிக்கின்றான். இது பற்றி சுகந்தனிடமும் சொல்கின்றான். சுகந்தனுக்கு ஒன்றுமே செய்யமுடியவில்லை. நண்பனுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்வதைத் தவிர. சில நாட்களில் வேலையும் கிடைத்தது. உடனே வருமாறு வெளிநாட்டுத் தூதரகம் பணித்தது. வறுமையை தன்மேல் சுமையாக்கிக்கொண்டு வெளிநாடு போக ரவி முடிவு செய்தான். கண்களில் கண்ணீர் நிறைய பெற்ற பெறுபேறுகளையும் விட்டுவிட்டு வெளிநாடு போக தயாராகினான். பிரிவின் ரணம் அவனை கொஞ்சம் கொஞ்சமாய் வாட்டத் தொடங்கியது. ரவியின் ஆசிரியர்களும் சுகந்தனும் அவனை மருத்துவ பீடம் போகச் சொல்லி கட்டாயப்படுத்தினர். இருந்தும் அவன் அதற்கு உடன்படவில்லை. குடும்பத்தை காப்பாற்றுவதே கடமை என நினைத்தான். நண்பன் சுகந்தனை அழைத்தான்.

“நல்லதோர் வைத்தயனாக வெளியேறுவாய் என் நண்பனே” என்று அவனிடம் கூறிவிட்டு தன் பொதிகளை அடுக்கத் தொடங்கினான். சுகந்தன் கண்ணீரோடு ரவிக்கு பிரியாவிடை வைக்க ஒழுங்கு செய்தான். மனதில்சுமையோடு ரவியும் இதற்கு ஒத்துக்கொண்டான். மறுநாள் சுகந்தனின் வீட்டுக்கு ரவி வந்தான். சுகந்தனின் வீட்டில் எல்லோரும் ரவிக்கு வாழ்த்துச் சொன்னார்கள். நண்பன் சுகந்னின் கண்களில் கண்ணீர் மழை. நண்பனை கட்டித் தழுவி உயிரையே இழந்ததாய் “ஓ ” வென்று கதறி அழுதான். இருவருக்கும் தாங்களை சுதாகரித்துக் கொள்ள முடியவில்லை.

இரு உள்ளங்களும் பிரியாதே வார்த்தைகளால் விடைகொடுத்துக் கொண்டனர். சுகந்தனின் நினைவுச் சின்னமாக அழகிய கைக் கடிகாரமொன்றை பரிசாகக் கொடுத்தான். “ஓடுவது முற்களில்லை நண்பா உன்னை நான் மீண்டும் காண்பதற்கான கால இடைவெளி” என்று கூறி அவன் கையிலே கொடுத்தான். இன்று இரவு முழுதுமே ரவியின் ஞாபகம் தான் சுகந்தனுக்கு. அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு ரவி வீட்டைவிட்டு புறப்பட்டான். முதல் முறை பிரிவை சந்திப்பதில் என்ன செய்வதென்று புரியவில்லை அவனுக்கு. மீண்டும் ரவியும் சுகந்தனும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக்கொண்டனர். ரவியின் தாயும் தங்கைகளும் கண்ணீரோடு நின்றனர். ரவி இப்போது உள்ளே பொதிகளை சரி பார்க்கச் சென்றாகவேண்டும். ஒன்றாய்த் தட்டி ஓசை வந்த இரு கைகளும் பிரியாவிடை கொடுத்தன. தொலைவில் கையசைத்த நண்பனின் விம்பம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.