-துஷ்யந்தி

சுடர் விளக்கினைப்போல் – உள்ளே
இருள் குகைதனைப் போல்
உள்ளம் இருக்கக் கண்டேன் – மனிதர்
எண்ணம் இதுவென உணர்ந்தேன்!

ஈயாதவன் தனை வௌவி – நல்ல
இரவலர்க்கு ஈயும் புரவலர் போல
வேண்டும் மனநிலை என்று – மனது
நித்தம் சொல்லக் கேட்டேன்!

வாழ்வை இழந்த குழந்தை – பலர்
கைநீட்டி வீதியோரமாக
வாடி நிற்பதைக் கண்டேன் – உள்ளம்
வெறுத்துத் துடிப்பதை யுணர்ந்தேன்!

கல்வி சிறிதும் காணா – குழந்தை
வாழ்வில் உயர்வதெப்படி?
கையை நீட்டாத மனிதர் – உலகில்
சரித்திரம் படைப்பது எப்படி?

நல்ல உள்ளம் படைத்தான் – அதில்
இரக்கக் குணத்தை நிறைத்தான்
கல்லைப் போல மனிதா – நீயும்
கரையாது இருப்பதும் ஏனோ?

உதவும் கரங்கள் வேண்டும் – பிறர்
உள்ளம் புரிந்திட வேண்டும்
மடமை ஓட்டிட வேண்டும் – இளைஞர்
மகுடம் சூடிட வேண்டும்!

காணும் இடத்திலெல்லாம்- பல
கல்விச் சாலைகள் வேண்டும்
யாவரும் கற்றவராக – மண்ணில்
மிளிரும் நிலை வர வேண்டும்!

நாட்டில் உற்பத்தி வேண்டும் – பிற
நாடு செல்லா நிலை வேண்டும்
நாடும் பொருளையெல்லாம் – இங்கு
நாமே உற்பத்தி செய்ய வேண்டும்!

கனவு நனவாக வேண்டும் – கலாம்
சொன்னது பலித்திட வேண்டும்
தோல்வி நம்மிடம் தோற்று – வெற்றிப்
பாதைக்கு வழிவிடல் வேண்டும்!

கைகள் கோர்த்தெழுவோம் – சிறுவர்
கல்விக்கு வழிவகுப்போம்
கனவான தேசத்திலே – புதுக்
கவிதைகள் நாமாகுவோம்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.