-செண்பக ஜெகதீசன்

கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க்
காற்றாதா ரின்னா செயல். (திருக்குறள்-894:பெரியாரைப் பிழையாமை)

புதுக் கவிதையில்…

எப்போது அழைத்தாலும்
எமன் வருவான்,
அப்படிப்பட்டவனைக்
கைதட்டி அழைத்தல் போன்றதே
ஆற்றல்மிக்க பெரியோர்க்கு
அல்லல் கொடுப்பதும்!

குறும்பாவில்…

உயிர் பறிக்கும் எமனை
உவந்து அழைத்தல் போன்றதே,
உயர்ந்த பெரியோர்களைத் துன்புறுத்துதலும்!

மரபுக் கவிதையில்…

எருமை மீது பவனிவரும்
–எமனை எப்போ தழைத்தாலும்
உரிமை யோடு வந்திடுவான்
–உயிரைக் கொண்டு சென்றிடுவான்
பெருமை மிக்கப் பெரியோர்கள்
–புண்படத் தீங்கு செய்திடுதல்
அருகில் எமனை அழைத்தேதான்
–அழிந்து போதல் போல்தானே!

லிமரைக்கூ…

செய்யாதே பெரியோரைத் துன்புறுத்தும் தீங்கு,
செயலிது, சென்றிடும் எமனைக்
கைதட்டி அழைத்திடுதல் போன்றதே ஆங்கு!

கிராமிய பாணியில்…

குடுக்காத குடுக்காத
தொல்லயேதும் குடுக்காத,
தளந்தவயிசுப் பெரியவுகளுக்குத்
தும்பம்ஏதும் குடுக்காத
அது,
எங்கயோபோற எமனத்தான்
இங்கவாண்ணு கூப்புட்டதுபோல,
கையத்தட்டி கூப்புட்டதுபோல..

அதால,
குடுக்காத குடுக்காத
தொல்லயேதும் குடுக்காத,
தளந்தவயிசுப் பெரியவுகளுக்குத்
தும்பம்ஏதும் குடுக்காத!

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “குறளின் கதிர்களாய்…(83)

  1. வயதில் அறிவில் முதிர்வில் பெரியாரை  மதிப்பது  முறைந்துவருங்காலத்தில் 
    உங்களின் பலபரிமாண கவிதைகள் படித்தாலாவது புரிந்தால் சரி.

  2. கருத்துரை வழங்கிச் சிறப்பித்த 
    நண்பர் சத்தியமணி அவர்களுக்கு மிக்க நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *