Tag: சந்தர் சுப்பிரமணியன்

  • கருணைக்காவல்

    சந்தர் சுப்பிரமணியன்

     

    குறுகலான சாலை.

    ‘அதன்மேல் யாரேனும் காலை வைத்து விடுவார்களா?’
    கவலை என்னைப் பிடுங்கித்தின்ன ஆரம்பித்தது.
    கதவைத் திறந்துவைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

    விர்ரென்று ஸைரனுடன் விரையும் ஆம்புலன்ஸ்,
    கொக்கிக்கொக்கி அரைப்பெடல் அடித்தவாறு சைக்கிளில் வரும் பேப்பர்பையன்,
    தெருவையே அதிரவைத்தபடி வரும் பால்காரனின் மின்வண்டி,
    எதையோ துரத்தியபடி ஓடும் தெருநாய்களின் கும்பல்,
    பழைய பேப்பர் வாங்குபவனின் மூன்று சக்கர வண்டி,
    குப்பை எடுத்துச்செல்லும் லாரி,

    – கண்கொட்டாமல் நானும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

    வீட்டுக்கு உள்ளிருந்து அம்மாவின் குரல் கேட்டது:
    ‘ஏன்டி, கோலம் போட்டுட்டு வர இவ்வளவு நேரமா?’

    Share
  • ஊமைச் சங்கிலிகள்

    சந்தர் சுப்பிரமணியன்

     

    உறவினரின் வீட்டில் விஷேசம்.

    ‘அடையாளமே தெரியலையே’
    ‘கண்டிப்பா வீட்டுக்கு வாப்பா’
    ‘உன்னையெல்லாம் பார்த்தே ரொம்ப நாளாச்சு’
    ‘மதுரைக்கு வந்த வாப்பா’
    ‘என் பையன் உன்னைப் பத்தித்தான் ரொம்ப பேசிட்டே இருப்பான்’
    ‘மீசையும் அதுவுமா, பெரிய ஆளாயிட்டியே’
    ‘ஏன்டா, எங்க முகமெல்லாம் மறந்தே போச்சா?’
    ‘உங்க மாமா போனபோதும் நீ வரலியா?’
    ‘அப்பப்போ வந்து பாத்துட்டுப் போப்பா’
    ‘கிருஷ்ணன் தெரு, அந்த முக்கு வீட்டுலேதான இன்னும் இருக்கே?’

    – மீண்டு, வீடுவந்துசேர மாலை ஆயிற்று.

    அவசர அவசரமாகக் கதவைத் திறந்து,
    தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கினேன் –
    தொடர்கதை ஆரம்பித்துவிட்டிருப்பான்.

    Share
  • பழைய வீதி

    சந்தர் சுப்பிரமணியன்

     

    பாதி திறந்த சன்னலில்
    சதாசர்வ காலமும்
    தெரியும் கிழவியின் முகம்:

    ‘பாட்டி, பூக்காரன் போய்ட்டானா?’
    ‘இல்லை, இன்னும் போகலைம்மா’

    ‘பாட்டி, பால்காரன் வந்தா எங்க வீட்டிலே பால் ஊத்தச்சொல்லுங்க’
    ‘அவன் போயி அரை மணிநேரம் ஆவுது தாயி’

    ‘பாட்டி, கோவில் தேர் இந்த பக்கம் வந்தாச்சா?’
    ‘இல்லைம்மா, அதுக்காகத்தான் காத்திட்டு இருக்கேன்’

    ‘பாட்டி எங்க வீட்டுச்சுவரிலே யார் போஸ்டர் ஒட்டினாங்க தெரியுமா?’
    ‘கூழ் ஊத்தற பசங்க தாயி’

    பாட்டிக்குத் தெரியாமல்
    ஒருவரும் அந்தத் தெருவைக் கடந்ததில்லை –
    அவள் சாவுஊர்வலத்தைத் தவிர.

    Share
  • கவிஞாயிறு தாராபாரதி கவிமலர்

    சந்தர் சுப்ரமணியன்

    images (7)

    அவருக்குள் தமிழ்மணக்கும், அறிந்தே முன்னர்
    அன்னைபெயர் புட்பமென அமைந்த தாமோ?
    குவளைக்குள் பூகம்பம்! கொடையாய்ச் செந்தீ!
    கொடுங்காலூர் வரையெழுந்து கொதித்த செந்நா!
    திவளைக்குள் பொறியேற்றுத் தீயைச் சேர்த்துத்
    திரையாக்கிச் செந்தமிழாய்த் தெறிக்கும் தாரா!
    இவருக்கோர் கவிமலரை இயற்றி வந்தேன்!
    இவரெழுத்தை என்குரலில் இயம்பு கின்றேன்! (1)

    காவியங்கள் பாடவில்லை; காதல் என்னும்
    கற்பனைக்குள் கரையவில்லை; கானல் நீரைத்
    தூவிநஞ்சை வளர்க்கவில்லை; சொல்லால் பொய்யைத்
    தொடுத்தளிக்கும் கவிதையில்லை; சொகுசு வாழ்க்கை
    மேவுதற்காய் மாறவில்லை; மேன்மை கொன்று
    மேனிலையை அடையவில்லை; மேடை வேண்டிப்
    பாவையெங்கும் பாடவில்லை; பசப்புச் சொற்கள்
    பகன்றுநிற்கும் பழக்கமில்லை; பகட்டு மில்லை! (2)

    பாடுகின்ற பழக்கமுண்டு; பாட்டில் கீழோர்ப்
    பாடுகளைப் பகர்வதுண்டு; பழமை எண்ணம்
    சாடுகின்ற வழக்கமுண்டு; சாதிப் பூசல்
    தனையெதிர்க்கும் நெஞ்சமுண்டு; சமத்து வத்தைத்
    தேடுகின்ற தாகமுண்டு; சிறப்பாய்ப் பெண்டிர்
    சேமமுறச் சிந்தையுண்டு; செயலில் தூய்மை
    நாடுகின்ற நேர்மையுண்டு; நலிந்தோர் வாழ்வில்
    நலம்சேர விழைவதுண்டு; நியாயம் உண்டு! (3)

    துண்டமிலாச் சமுதாயம் தொடங்க வேண்டி,
    செந்தமிழா! ஒருவார்த்தை செப்பிச் சென்றார்!
    கண்டதெலாம் அறிவியலால் கணக்கால் ஆயக்
    கைப்பிடிக்குள் அடங்குமவை காண்போம்; வான
    மண்டலமும் விரலசைவில் நடக்கும்! பூவாய்
    மாரியும்நம் குரல்கேட்டுச் சுரக்கும்! இங்கே
    விண்டதெலாம் விளைவிக்கும் வேகம் கொண்டால்
    விடிகின்ற வேளைவரும்! விரைக வென்றார்! (4)

    அல்லுலகை ஆள்கின்ற அந்தப் போதில்
    ஆதவன்காண் கிழக்கிந்த அன்னை பூமி!
    புல்வெளியைப் பூக்காடாய்ப் புதுக்கி எங்கும்
    புன்னகையைப் புழங்கவிட்ட புதுமை தேசம்!
    சொல்லுலவுங் கவிபடைத்துச் சொந்த நாட்டின்
    தூய்நெறியைத் தீந்தமிழால் சொல்லிச் செல்வோர்
    நல்லுலகில் அன்றமைந்த நாற்றங் காலாய்
    நடைபயின்ற பாரதத்தை நயந்து நின்றார்! (5)

    சேய்மையதும் அண்மையதும் தொலைந்தே ஒன்று
    செய்வினையைச் செயப்பாட்டு வினையைச் செய்தார்!
    தாய்மையெனத் தமிழ்மொழியின் தன்மை தன்னைத்
    தமதாக்கி முன்னிலையில் படர்க வென்றார்!
    ஆய்தம்போல் தனிநிலையை அடையச் செய்ய
    அகச்சுட்டு புறச்சுட்டென் றறிவைச் சுட்டி
    வாய்மையெனும் ஒன்றன்பால் வளர்க என்றார்!
    மற்றெவையும் பயனிலைதான் எழுவாய் என்றார்! (6)

    சாதியெனும் அமைப்புகளேன்? சங்கம் வைத்துச்
    சந்தையென மனிதரையேன் தரம் பிரித்தாய்?
    போதைநிலைப் பொய்க்கணக்கின் போக்கில் இன்று
    பொதுநிலையே மனக்கணக்காய் போன திங்கு!
    தீதெனினும் தொடர்கின்ற தீயாய்ச் சாதி!
    தேசத்தின் கறையிவைதான்! தெரிந்தி வற்றை
    வீதியிலே தூக்கியெறி! மெய்யாய் நல்ல
    வேள்விக்கோர் தேதிகுறி! விடியும் என்றார்! (7)

    மண்புழுவாய்ப் பிறந்திருந்தால் மண்ணைத் தின்னும்
    மந்திரம்தான் தெரிந்திருக்கும்; மனிதர்க் கெங்கே?
    எண்ணளவில் அதிகரிக்கும் ஏழை மக்கள்!
    இதைத்தானா சுதந்திரத்தின் ஏற்றம் என்றோம்?
    கண்ணெதிரே தெருவிலிவர்! காசு கொண்டோர்
    காலமாயும் காணிநிலம் காண்பர்!; ஆயுள்
    தண்டனைதான் பசியிவர்க்கு! சனத்தில் பாதி
    தவித்திருக்கப் பாரதமோர் ஏழைச் சந்தை! (8)

    பொய்யுரையை முதலீடாய்ப் போட்டு நாட்டின்
    பொதுசனத்தை விற்கின்ற புதிய சாதி!
    கையிரண்டு போதாது கயமைக் கென்றே
    கைந்நூறு வேண்டிவிழும் கடவுள் தாளில்!
    மெய்ந்நெறியை மறைத்துயர்தல் மேன்மை என்ற
    ‘மெய்ப்பொருளை’ அரசியலாய் விற்கும் கூட்டம்!
    செய்கையிலே தன்மானம் சிதைத்தோர் தம்மைச்
    சேர்த்தீன்ற கருப்பையும் சினந்து நாணும்! (9)

    வெறுங்கரங்கள் என்செய்யும்? வினவு வோர்க்கு,
    விரல்பத்தும் மூலதனம்! விளங்க வேண்டும்!
    நொறுங்கட்டும் மதிமயக்கும் நோயாம் சோம்பல்!
    நோகாமல் இலக்கடையும் நுட்பம் இல்லை!
    சிறுங்கற்கள் சேர்ந்தெழுந்த சிகரம் போலே
    சிந்தனைகள் சேருமெனின் தெரியும் வெற்றி!
    குறுஞ்செயல்கள் நமையாங்கே கொண்டு செல்லும்!
    கொண்டசெயல் வேலையல்ல வேள்வி என்றார்! (10)

    மண்ணதற்குள் அழிந்தொழியும் மனிதம் என்னும்
    மறைகின்ற இலக்கணத்தை மாற்றிக் காட்டு!
    திண்மையினைக் கொண்டுயர்ந்த திறனால் என்றும்
    திரும்பாத சரித்திரத்தில் திளைத்து வாழ்நீ!
    உண்மையிதே! உன்னளவில் உயர்வு வேண்டி
    உடைமைதேடி உலகுழல்தல் உயர்வே அன்று!
    திண்ணைதனை இடித்தங்கோர் தெருவை ஆக்கு!
    தெருவாங்கே விரியுமதில் தேசம் காண்பாய்! (11)

    பள்ளத்து மண்புழுவைப் பாம்பாய் மாற்றிப்
    படமெடுக்க வைக்குமவர் பாக்கள்! பூக்கள்
    அள்ளித்தான் அவர்தெளித்தார்! அனைத்தும் தீமை
    அழிப்பதற்காய்த் தீயுமிழும் நாக்கள்! தீக்குள்
    தெள்ளுந்தேன் அவர்கவிதை! தெறிக்கும் போதே
    சிந்தனையின் சுடரேற்றும் தீக்கள்! மக்கள்
    உள்ளத்தை உலுக்கும்பொய் உதறச் செய்தே
    உயர்வுக்காய் வழிகாட்டும் ஊக்கப் பூப்பே! (12)

    அண்ணல்கை வில்லதுவே அன்னை சீதை
    அகமெரிக்கும் விறகெனவாய் ஆன தின்று!
    கண்ணீரில் சீதனங்கள் கடத்தி வந்து
    கல்யாணச் சிறைபுகுந்த கைதி பெண்டிர்!
    மண்ணெண்ணெய் விளக்கெரிக்கும் வழக்கம் எல்லாம்
    மாண்டுவிட்ட கதையாகி மறைந்த நாளில்
    பெண்ணெண்ணெய் எரிக்கின்ற பேய்கள் கூட்டம்!
    பெயருக்காய்த் திருமணங்கள்! பிணமாய்ப் பெண்மை! (13)

    தெருவளைவின் சந்தையதில் தேர்ந்து வாங்க
    தெருப்பொருளா கால்நடையா தையல் இன்னும்?
    பொருளளித்துப் பொருள்பெறுதல் பொதுவில் மெய்ம்மை!
    பொருள்கொடுத்துப் பெண்கொடுக்கும் பொய்ம்மை தீமை!
    கருவறைக்குள் போற்றுன்றன் கருணை தன்னை!
    கயவரெனின் காட்டுன்றன் கண்ணில் தீயை!
    புருவமிலை மீசையது! புலியாய் மாறு!
    புதியகீதை பாடுலகைப் புரட்டிப் போடு! (14)

    பேரிருளில் தீச்சுடராய்ப் பொலிந்து நன்மை
    புரிகின்ற பிறப்பதுவே பெண்மை! உண்மை!
    ஈரமிலா இயல்பேற்ற இரும்புத் தன்மை,
    இதயத்தில் நல்லெண்ண மின்மை வன்மை!
    பாரதனில் மங்கையரின் பங்கு தம்மைப்
    பாடலினால் அவர்விரித்தார்! பன்மை மென்மை
    சேருமெனில் தோள்புடைக்கச் சேரும் திண்மை!
    செந்தமிழில் தெரிவித்தார் தெண்மை! நுண்மை! (15)

    வேருக்கு நீருழவன் விடுவ தாலே
    விளைவிங்கே வருகிறது! விழலே நாமும்!
    பாருக்குள் தெய்வதத்தைப் பாராப் போதும்
    பயிரெல்லாம் அவன்சிரிப்பைப் படைத்து நிற்பான்!
    ஏருக்கே அவன்கால்கள் என்ற போதும்
    இதயத்துள் உலவியவன் எண்ணில் நிற்பான்!
    ஊருக்கே உலைவாய்தான்! உழைப்பால் உண்டி
    உவந்தளிக்கும் எழுவாயே உழவன் தானே! (16)

    கள்ளத்தின் போக்காலே காற்றின் தூய்மை
    காணாமல் போனதுபார்! கழிவே எங்கும்!
    அள்ளத்தான் நீரில்லை! ஆற்றின் தூய்மை
    அதற்கின்னும் வழியில்லை! அடுத்து வாழும்
    பிள்ளைக்கோர் நல்லுலகைப் பேணிக் காக்கும்
    பெருங்கடமை உனக்கிலையோ? பிழைகள் தீர
    உள்ளத்தின் பரப்பதனில் வெள்ளை தீட்டு!
    ஓசோனைத் தைப்பதற்கோர் ஊசி தேடு! (17)

    விண்ணதனை மின்னல்கள் வெட்டும் போக்கின்
    விளைவாக விரிசல்கள் வாரா தென்றும்!
    மண்ணதன்மேல் கலப்பையினை மடக்கி ஓட்ட
    மண்ணுக்கே புண்ணாகும் வழக்கம் உண்டோ?
    கண்ணதனை இமையுரசக் காயம் உண்டோ?
    கண்ணீரால் கொப்பளிக்கும் கன்னம் உண்டோ?
    பெண்ணுளத்தின் ஊடலதைப் புரிய வைக்கப்
    பெருங்கவிஞன் சொன்னதிவை! புதுமை அன்றோ? (18)

    சொல்லுக்குள் கருத்தடைத்த தோட்டா சீறும்
    துப்பாக்கி அவர்கவிதை! துளைத்த போதும்
    மல்லுக்காய் முன்நிற்க மயங்கும் நெஞ்சம்!
    மரணத்தில் புதுநெறியை மலர வைக்கும்!
    வில்லுக்கு வளைகின்ற நாணைப் போலே
    வளையாது தலையெனினும் விரட்டும் அம்பை!
    அல்லுக்குள் வெளிச்சத்தின் ஆற்றல் காட்டும்
    அறிவுப்பூப் பூகம்பம்! அமைதிப் பூதம்! (19)

    கவிதைக்கென் றுதித்தாரா? கவிழ்ந்தோர் தம்மைக்
    கரைசேர்க்கச் செனித்தாரா கவிஞர் தாரா?
    புவியோர்க்காய்ப் பிறந்தாரா? பொதுமை தாராப்
    பொய்யகற்றப் புதுநெறியைப் போதித் தாரா?
    செவிசேர்க்கத் தீங்கவிகள் தெரிந்த தாரா,
    தெவிட்டாதக் கவியாறா? செல்வத் தாரா?
    அவைகேட்க அளித்தாரா? அகிலம் தாரா
    அறமழையைப் பொழிந்தாரா? அதுநம் பேறா? (20)

    கவிமொந்தை! கருத்துடந்தை! கள்ளார் சிந்தை!
    கால்மறக்கும் மனமந்தை! கனவுச் சந்தை!
    செவியுந்தும் தமிழ்ச்சிந்தும்! தேனைத் தந்தும்
    திகட்டாத ஒருபந்தம்! தெரியா தந்தம்!
    புவியெங்கும் புதுக்கந்தம்! புதிதாய் வந்தும்
    புதிரவிழ்க்கும் அவர்சிந்தும்! புலமை முந்தும்!
    அவையெங்கும் புகழ்தங்கும்! அவருட் பொங்கும்
    அறிவொளியில் இருள்மங்கும்! அவர்பாச் சிங்கம்! (21)

    அமிலத்தில் கரைத்தெடுத்த அமுதச் சாற்றை
    அளிக்கின்ற பாற்கடல்தான் அவர்தம் பாக்கள்!
    கமலத்தின் கள்ளூற்றில் கரைந்த தீப்பூ!
    கவிதைக்குள் குறுவாளாய்க் கரந்த சொற்கள்!
    விமலத்தின்* வெளிப்பாடு! வெளிச்சத் தேடல்! (*சுத்தம்)
    விடியல்கள் அவர்கவிகள்! வேரால் பொய்ம்மை
    இமயத்தைப் பொடியாக்க எழுந்த ஆல்கள்!
    இதயத்தைக் குடைகின்ற எழுத்துப் பூச்சி! (22)

    எழுத்துக்குள் வேள்வித்தீ ஏற்றி வைத்தே
    எளியோரின் ஏற்றத்துக் கிலக்கை வைத்தார்!
    பழமைக்குள் புதுமைதனைப் பகுத்து வைக்கப்
    பாட்டுக்குள் காட்டுத்தீப் பதுக்கி வைத்தார்!
    விழுதுக்குள் புதுக்கருத்தை விளைய வைத்து
    விளைவாகும் ஞானத்தை விருந்தாய் வைத்தார்!
    முழத்துக்குள் இவ்வுலகை முடக்கும் தாரா
    மொழிகின்ற கவியென்றும் வாழ்க! வாழ்க! (23)

    Share