Tag: சுரேஜ்மீ

  • சிகரம் தொடுவோம்

    நம் வல்லமை வலைத்தளத்தில் 28 வாரங்களாக வெளிவந்த ‘சிகரம் நோக்கி’ எனும் கட்டுரைகள், இனிய நண்பர் மணிமேகலை பிரசுர மேலாண்மை இயக்குனர் திருவாளர் ரவி தமிழ்வாணன் அவர்கள் உதவியுடன் ஒரு அழகிய புத்தகமாக வெளிவந்திருக்கிறது.

    அதன் வெளியீட்டு விழா, மஸ்கட்டில் சீரோடும் , சிறப்போடும் கடந்த 20-11-2017 திங்கள் கிழமை மாலை நடைபெற்றது. இதோ உங்களுக்காக…

    அன்புடன்
    சுரேஜமீ

    சிகரம் தொடுவோம் – புத்தக வெளியீடு

    SPT_5185

    ஓமான் தலைநகர் மஸ்கட்டில்’ சிகரம் தொடுவோம்’ புத்தக வெளியீடு, ஓமனுக்கான இந்திய தூதர் மேதகு இந்திரமணி பாண்டே அவர்களால் கடந்த 20-11-2017 திங்கள் கிழமை மாலை 7 மணி அளவில் சிறப்பாக நடை பெற்றது.

    மேதகு இந்திரமணி பாண்டே அவர்கள் நிகழ்ச்சியைக் குத்துவிளக்கு ஏற்றி, நம் மரபுப் படித் தொடக்கி வைத்தார். மஸ்கட் தமிழ்ச் சங்கத் தமிழாசிரியைகள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர்.

    SPT_5315

    திருமதி. ரேவதி சுந்தர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் ஸ்ரீனிவாசன் தலைமை தாங்கினார்.

    மேதகு இந்தியத் தூதர் அவர்கள் நூலை வெளியிட,

    திருமதி. சித்ரா நாராயண் அவர்கள் (Director, Middle East Nursery) , திரு. குமார் மஹாதேவன் (Director & Advisor – Oman Sharpooji Co ), திரு. P .R .ராமகிருஷ்ணன் (CEO, Vision Insurance), திரு. T .கணேஷ் (CFO, Bank Muscat ), திரு. சங்கர் சர்மா (CFO, Bank Dhofar), திரு. P .S .லக்ஷ்மணன் (CFO, National Drilling & Services Co), திரு. ஸ்ரீதர் நாரணசாமி (Ex – Chariman, ICAI-Muscat Chapter), திரு. J. ராஜேந்திரன் (GM, National Steel Fabricators) மற்றும் முனைவர். T . தங்கமணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

    SPT_5241

    விழாவில் மேதகு. இந்திரமணி பாண்டே அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார். திருமதி. சித்ரா நாராயண் அவர்கள் சிறப்புரை கவித்துவமாக இருந்தது.

    ஏனைய சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துரை வழங்க, நூலாசிரியர் சுரேஜமீ அவர்கள் ஏற்புரை வழங்கினார்.

    மஸ்கட் தமிழ்ச் சங்கப் பொருளாளர் திருமதி. விஜயலக்ஷ்மி சந்திர சேகர் நன்றி கூற, விழா இனிதே முடிந்தது.

    நிகழ்சசியை மஸ்கட் தமிழ்ச் சங்கப் பொருளாளர் திருமதி. விஜயலக்ஷ்மி சந்திர சேகர் தொகுத்து வழங்கினார்.

    இவ்விழாவில் மஸ்கட் வாழ்த் தமிழர்கள் மட்டுமல்லாது, பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.​

    Share
  • சிகரம் நோக்கி . . . . . (19)

    சுரேஜமீ

    திட்டமிடல்

     

    peak1

    வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணம் பண்ணிப் பார்!

    என்ற பழமொழி யாவரும் அறிந்த ஒன்றே. ஏன் இவை இரண்டும் மட்டும் நம் சமூகத்தில் மிகப் பெரும் சவால் களாகக் கருதப்பட்டன? ஏதோ ஒரு காரணமில்லாமல், இந்தப் பழமொழி வந்திருக்க வாய்ப்பில்லை. சற்று யோசித்துப் பார்த்தால், ஒரு திருமணத்தை நடத்துவதற்கோ அல்லது ஒரு வீட்டைக் கட்டுவதற்கோ அதிகப் படியான உழைப்பு தேவைப்படுகிறது. உழைப்பு மட்டும் போதுமா? எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்ற முன் யோசனை தேவைப்படுகிறது.

    வேறென்னலாம் தேவை என்று ஒரு பட்டியலிட்டால்;

    1. பணம்
    2. இடம்
    3. பணியாளர்கள் தேர்வு
    4. கொள்முதல் தொடர்பான செயல்கள்
    5. ஒன்றோடு ஒன்று தொடர்புடைய பணிகள்
    6. காலம் கருதிச் செய்யும் பணிகள்

    என அவரவர் தகுதிக்கேற்ப பட்டியல் நீண்டுகொண்டே போகும். ஆனால், இவையெல்லாம் தெரிந்தோ, தெரியாமலோ , அனேகமாக அனைவர் வாழ்விலும் நிச்சயம் ஒரு முறையேனும் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

    இதை நிறைவேற்ற நாம் எடுக்கும் முயற்சிகளுக்கும், அது தொடர்பான நேரமேலாண்மைக்கும்,

    மேலாண்மையியல் கொடுத்த பெயர் ‘திட்டமிடல்’!

    ஆக ‘திட்டமிடல்’, என்ற பதம் நமக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால், இற்றை நாட்களில் திட்டமிடுதல் இல்லாமல் ஒரு பயணம் கூட நம்மால் மெற்கொள்ள இயலாது எனும்போது

    வாழ்க்கையில் வெற்றி பெற திட்டமிட வேண்டாமா?

    ஆங்கிலத்தில் சொல்வார்கள்….

    ‘நாம் திட்டமிடத் தவறுகிறோம் என்றால்; தவறுதலுக்குத் திட்டமிடுகிறோம்’ என்று!

    அப்படியானால் ‘திட்டமிடுதல்’ என்பது என்ன? அதை எப்படிக் கையாள்வது? அதன் மூலம் வெற்றியைத் தொடமுடியுமா?

    முடியும் என்கிறார் திருவள்ளுவர்! ஆம்! இதோ அதற்கான சாட்சிக் குறள்!

    ‘ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
    கருதி இடத்தாற் செயின்!”

    இன்றைக்கு எதை வேண்டுமானாலும் காசாக்க முடியும் என்ற உலகத்தில், ஒன்றும் தெரியாத அப்பாவிகளாக, எந்த ஒரு முயற்சிக்கும் இடம் கொடாமல்,

    யாராவது சொல்ல மாட்டார்களா? ஏதாவது எளிய வழி இருக்காதா? என்று எத்தனை பயிலரங்கங்கள்? கருத்தரங்கங்கள்? பயிற்சிப் பட்டறைகள் என ஊடகங்கள் வாயிலாக அறிந்து,

    உடனே முதல் ஆளாகப் பதிவு செய்கிறோம்?

    இதில் இருக்கும் ஆர்வத்தை, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கவனம் செலுத்தினால்,

    நம் தந்தை எப்படி ஒவ்வொரு விடயத்தையும் கையாள்கிறார்; நம் ஆசிரியர் என்ன செய்கிறார்? வீட்டில் உள்ள முதியவர்கள் எப்படி ஒரு பிரச்சினையைக் கையாள்கிறார்கள் என்று உற்று நோக்கக் கற்றுக் கொண்டால்,

    நிச்சயமாக ஒரு திட்டமிடுதலின் அடிப்படை மேலாண்மை நமக்கு எளிதில் புலனாகும்!

    சாகச வார்த்தைகளைக் கண்டு அச்சம் கொள்ளாமல், எந்த வார்த்தையையும் நம் வாழ்க்கையோடு ஒப்பீடு செய்யக் கற்றுக் கொள்ளும் அடுத்த கணம்,

    வாழ்வின் வெற்றிக்கான ரகசியம் நம் வசம் வந்துவிட்டதை உணர முடியும்.

    திட்டமிடுதல் என்ற சொல்லின் அடிப்படை , ஒரு செயல் செய்வதற்கு முன்னால், அதன் தேவையை, அதனால் ஏற்படக் கூடிய நன்மையை, அந்த செயலைச் செய்வதற்கு நம்மைத் தயார் செய்வது எப்படி என்ற அணுகுமுறையை முதலில் வரைவாக்கம் செய்தல் அவசியம்.

    உதாரணமாக, குடும்பச் சுற்றுலா ஒன்றைத திட்டமிடுகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள். அதற்கான தேவைகள் என்ன எனப் பார்ப்போமா?

    1. அழைக்கப்படும் நபர்கள் பட்டியல்
    2. கால அளவு
    3. மாதம் மற்றும் தேதி விவரங்கள்
    4. உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை
    5. செல்லும் இடம் தீர்மானித்தல்
    6. பயணத்திட்டம்
    7. முன் பதிவு செய்தல்
    8. தங்குமிடம் தேர்ந்தெடுத்தல்
    9. பயணத் தேவைகள் பட்டியலிடல்
    10. இன்ன பிற

    சற்றே யோசித்தால், ஒரு பயணச் சுற்றுலாவுக்கு நாம் செய்யக் கூடிய, மிகச் சாதரணமான செயல்பாடுகள்தான், இங்கு பட்டியலிடப் பட்டிருக்கின்றன.

    எனவே, திட்டமிடல் என்பது நமக்குத் தெரியாமலே, நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருந்தாலும், நாம் அதற்கு ஒரு மெருகூட்ட வேண்டிய ஒரு கட்டாயச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால் மிகையாகாது.

    எழுந்தது முதல் உறங்கும் வரை ஒரு நாளில் நாம் செய்யக் கூடிய செயல்களைத் திட்டமிடத் தொடங்குவோமேயானால்,

    செயல்கள் ஒன்று வெற்றியில் முடிய வேண்டும்; அல்லது ஒரு வெற்றிக்குத் தளமாக அமைய வேண்டும்!

    இவை தவிர வேறொன்றுக்கு வாய்ப்பே இல்லை! எதிர்மறை சிந்தனைகளுக்கு ஒரு போதும் இடம் கொடுக்காதீர்கள்.

    திட்டமிடல் என்பது எதேச்சையாக நடக்கக் கூடியது அல்ல; சற்று முன்யோசனையுடன் செய்யக் கூடியது என்பதை அறிவோம். அந்த வகையில், திட்டமிடல் நமக்கு பல வாய்ப்புகளை உருவாக்கும். சரியாகத் திட்டமிடக் கற்றுக்கொண்டால், நம் முன் இருக்கக்கூடிய வாய்ப்புகளைச் சீர்தூக்கிப் பார்த்து, சிறந்த முடிவுகளை மேற்கொள்ள முடியும்!

    பிறகென்ன……வெற்றியாளர்கள் பட்டியலில் உங்கள் பெயர் இணைந்திருக்கும்!

    இல்லத்தில் தொடங்கும் வரவேற்பு, இமயம் வரை சென்றால்,

    சிகரம் கூடச் சற்றே உயரமாகும்…..உங்களைத் தொடுவதற்கு!

    சிந்திப்போம்………………

    அன்புடன்
    சுரேஜமீ

    Share
  • இடி விழுந்தது போல் இரண்டு செய்திகள் இரவில் வந்தன!

    நண்பர்களே, மிகுந்த வருத்தத்தோடு இப்பதிவினை உங்கள் கண்கள் முன் நிறுத்துகிறேன்!

    unnamed

    இறப்பு மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது; இன்னும் சொல்லப் போனால், இருப்பை இறுதி செய்வதே இறப்பு என்று சொல்லுவேன். ஆனால், என்னவோ என் இனம் மட்டும், ஒவ்வொரு இறப்பையும் ஒரு வெற்றிடமாக்குகிறதே என்பது தான் என் மன வேதனைக்குக் காரணம்!
    என்ன சொல்ல? இடி விழுந்தது போல் இரண்டு செய்திகள் இரவில் வந்தன! இனிவரும் ஆண்டுகள் இருளில் மூழ்கும் அளவிற்கு அச்செய்தியின் தாக்கம், தமிழினத்திற்கு இருக்கும் என்பதில், இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது!

    செய்திகள் கேட்டவுடன், செவிகளில் ரீங்காரமிடுவதே, இறைவனிடம் கையேந்துங்கள் எனும் பாடல் வரிகள்தான்! மீண்டும், மீண்டும், மாண்டவர் மீண்டு வர என் மனம் ஏங்கும் நிலையில் இருக்கிறது நண்பர்களே! இந்தக் குரலையெல்லாம், உணர்வோடு ரசித்த கடைசிச் சமுதாயம் நாம் என்பது என் வயது ஒத்தவர்களுக்கு நன்கு புரியும்!

    மதங்களைத் தாண்டி மானுடம் வரம் கேட்ட பாடல் வரிகள்தான்

    ‘இறைவனிடம் கையேந்துங்கள்……
    இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்
    ஈடு இணையில்லாத கருணையுள்ளவன்
    இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்
    எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்………

    எவ்வளவு அற்புதமான வார்த்தைகளைத் தன் குரலால், தமிழ் பேசும் உள்ளங்களுக்குக் கொண்டு சென்றவர்!

    அன்னாரின் ஆன்மா, இறைவனின் நிழலில் இளைப்பார, மண்டியிட்டு வேண்டுகிறேன்!

    அடுத்து எழுத்துலகக் கண்ணதாசன் என்பேன் இவரை! வீரத்தின் விளை நிலம்! பேனா முனையும் ஒருவனைக் கொல்லும் என்றால், அது ஜெயகாந்தன் எனும் மை கொண்டு, எழுதி இருக்க வேண்டும்! தனக்குச் சரி என்று பட்டதை, எதிரியின் இதயத்தைத் துளைக்கும் அளவுக்கு, எழுத்தால் ஈட்டி கொண்டு எறியும் போராளி!

    இதையெல்லாம் மிஞ்சியது அவர் தன்மானம்! எழுத்தாளன் எனும் இறுமாப்பு! தமிழ்த்தாயின் கிரீடம் அலங்கரித்த எவனுக்கும் இருக்கும் கர்வம்தான், அவருக்கும் இருந்தது என்பேன்! சர்ச்சைகளின் உச்சத்திற்கே செல்பவர். இன்னும் என்ன சொல்ல?

    இவை இரண்டும் தனி மனித இழப்பல்ல! தமிழின் இழப்பு! நண்பர்களே, சற்று சிந்தியுங்கள் நம் தற்கால வாழ்வின் முறையை! நான் சொல்லுவது உங்களுக்குப் புரியும்!

    இவர்களுக்கு இணையாக, கடந்த 30 ஆண்டுகள் எவரையேனும் தந்திருந்தால், நாம் குறைந்த பட்சம், நம் தலைமுறை நிமிரும் என அமைதி கொள்ளலாம்! அது இல்லையே என்ற வருத்தம் என்னை நடுங்க வைக்கிறது!

    இறப்பே உன்னிடம் கெஞ்சுகிறேன்
    என் சமூகம் விழித்தெழும் வரை
    எஞ்சியிருக்கும் சொச்சம் பேரையாவது
    விட்டுவை என்று!!

    இன்று ஒரு கருப்பு நாள் எனக்கு!
    என் கண்ணீர் என் சென்னீரில் கலந்தது போல், ஒவ்வொரு தமிழனின் சென்னீரிலும் கலக்கட்டும்!

    வருத்தத்துடன்,
    சுரேஜமீ

    Share