இடி விழுந்தது போல் இரண்டு செய்திகள் இரவில் வந்தன!

0

நண்பர்களே, மிகுந்த வருத்தத்தோடு இப்பதிவினை உங்கள் கண்கள் முன் நிறுத்துகிறேன்!

unnamed

இறப்பு மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது; இன்னும் சொல்லப் போனால், இருப்பை இறுதி செய்வதே இறப்பு என்று சொல்லுவேன். ஆனால், என்னவோ என் இனம் மட்டும், ஒவ்வொரு இறப்பையும் ஒரு வெற்றிடமாக்குகிறதே என்பது தான் என் மன வேதனைக்குக் காரணம்!
என்ன சொல்ல? இடி விழுந்தது போல் இரண்டு செய்திகள் இரவில் வந்தன! இனிவரும் ஆண்டுகள் இருளில் மூழ்கும் அளவிற்கு அச்செய்தியின் தாக்கம், தமிழினத்திற்கு இருக்கும் என்பதில், இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது!

செய்திகள் கேட்டவுடன், செவிகளில் ரீங்காரமிடுவதே, இறைவனிடம் கையேந்துங்கள் எனும் பாடல் வரிகள்தான்! மீண்டும், மீண்டும், மாண்டவர் மீண்டு வர என் மனம் ஏங்கும் நிலையில் இருக்கிறது நண்பர்களே! இந்தக் குரலையெல்லாம், உணர்வோடு ரசித்த கடைசிச் சமுதாயம் நாம் என்பது என் வயது ஒத்தவர்களுக்கு நன்கு புரியும்!

மதங்களைத் தாண்டி மானுடம் வரம் கேட்ட பாடல் வரிகள்தான்

‘இறைவனிடம் கையேந்துங்கள்……
இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்
ஈடு இணையில்லாத கருணையுள்ளவன்
இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்
எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்………

எவ்வளவு அற்புதமான வார்த்தைகளைத் தன் குரலால், தமிழ் பேசும் உள்ளங்களுக்குக் கொண்டு சென்றவர்!

அன்னாரின் ஆன்மா, இறைவனின் நிழலில் இளைப்பார, மண்டியிட்டு வேண்டுகிறேன்!

அடுத்து எழுத்துலகக் கண்ணதாசன் என்பேன் இவரை! வீரத்தின் விளை நிலம்! பேனா முனையும் ஒருவனைக் கொல்லும் என்றால், அது ஜெயகாந்தன் எனும் மை கொண்டு, எழுதி இருக்க வேண்டும்! தனக்குச் சரி என்று பட்டதை, எதிரியின் இதயத்தைத் துளைக்கும் அளவுக்கு, எழுத்தால் ஈட்டி கொண்டு எறியும் போராளி!

இதையெல்லாம் மிஞ்சியது அவர் தன்மானம்! எழுத்தாளன் எனும் இறுமாப்பு! தமிழ்த்தாயின் கிரீடம் அலங்கரித்த எவனுக்கும் இருக்கும் கர்வம்தான், அவருக்கும் இருந்தது என்பேன்! சர்ச்சைகளின் உச்சத்திற்கே செல்பவர். இன்னும் என்ன சொல்ல?

இவை இரண்டும் தனி மனித இழப்பல்ல! தமிழின் இழப்பு! நண்பர்களே, சற்று சிந்தியுங்கள் நம் தற்கால வாழ்வின் முறையை! நான் சொல்லுவது உங்களுக்குப் புரியும்!

இவர்களுக்கு இணையாக, கடந்த 30 ஆண்டுகள் எவரையேனும் தந்திருந்தால், நாம் குறைந்த பட்சம், நம் தலைமுறை நிமிரும் என அமைதி கொள்ளலாம்! அது இல்லையே என்ற வருத்தம் என்னை நடுங்க வைக்கிறது!

இறப்பே உன்னிடம் கெஞ்சுகிறேன்
என் சமூகம் விழித்தெழும் வரை
எஞ்சியிருக்கும் சொச்சம் பேரையாவது
விட்டுவை என்று!!

இன்று ஒரு கருப்பு நாள் எனக்கு!
என் கண்ணீர் என் சென்னீரில் கலந்தது போல், ஒவ்வொரு தமிழனின் சென்னீரிலும் கலக்கட்டும்!

வருத்தத்துடன்,
சுரேஜமீ

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.