Tag: சோழகக்கொண்டல்

  • யாளியும் அன்னமும்

    -சோழகக்கொண்டல்

    விசையுற்று விரிந்த சிறகு
    அசைவற்று உறைந்த கணத்திலேயே
    ஆயிரம் ஆண்டுகளாய் நிற்கிறது
    இந்த அன்னம்!

    அதன் முதுகின்மேல்
    துருத்திய கண்களோடும்
    தூக்கிய கால்களைப்
    பிளந்து முளைத்த
    தும்பிக்கையோடும் விழிக்கிறது
    ஒரு யாளி!

    இரண்டுக்குமிடையில்
    எதிர்த்தூண் மன்மதன்
    எய்யும் மலர் அம்புக்காய்க்
    காலங்காலமாய்க்
    காத்துநிற்கிறாள்
    ரதி!

    மலர்க்கணை துளைக்கையில்
    இவள் மார்பு சுரக்கும்பாலைத்
    தனித்துப்பருகவே
    தவமிருக்கும் அன்னம்
    இதன் உன்மத்த வெப்பம் மேலேறி
    ஊறி உறைகிறது மதநீர்
    மண்டபத்தைத் தாங்கிநிற்கும்
    யாளியின் மண்டைக்குள்!

    இந்த நித்தியகாம நெடுந்தவத்தின்
    எதிர்ப்புறத்தில் நிற்கிறான்
    மூக்குடைபட்ட மன்மதன்!
    நீண்டு வளைந்திருக்கும்
    அவன் கரும்பு வில்லில்
    கணைகள் ஏதும் மீதமில்லை
    கண்டீரா?

     

    Share
  • சொல்லிச்செல்பவன் இல்லாத கதைகள்!

    -சோழகக்கொண்டல்

    சொல்லிச்செல்பவனின்
    குரல் இல்லாமல்
    தானே நிகழும் கதைகளைக்                      banyan_tree
    கேட்டபடியே நிற்கிறது
    காலத்தை அசைபோடும்
    இந்த ஆலமரம்!

    இரவுக்குள் தலை நுழைக்கிறது வானம்
    இருளுக்குள் உயிர் கொள்கின்றன கிளைகள்
    கிளிகள் குயில்கள்
    காகங்கள் கொக்குகள்
    இன்னும் ஆயிரம் சத்தங்கள்
    இனிக்கும் ஆயிரம் முத்தங்கள்!

    ஒலிகள் மொழிகள் ஆக்கப்படாமல்
    ஒலிகளாகவே பேசப்பட்டு
    ஒலிகளாகவே கேட்கப்படுகின்றன
    எண்ணங்கள் எழுத்துகள் ஆகாமல்
    எண்ணங்களாகவே எண்ணப்பட்டு
    எண்ணங்களாகவே சேமிக்கப்படுகின்றன!

    உணர்ச்சிகள் வாக்கியங்களில் எழுதப்படாமல்
    உணர்ச்சிகளாலேயே உந்தப்பட்டு
    உணர்ச்சிமிகும் செயல்கள்வழியே
    கடத்தப்படுவதால்
    ஓயாமல் நிகழ்ந்தபடியே இருக்கும்
    இந்த களத்தின் கதைகளில்
    சொல்லிச்செல்பவனின் குரலை
    ஒருபோதும் தனித்துக் கேட்டதில்லை
    இந்த மரம்!

     

    Share