Tag: தவம்

  • (Peer Reviewed) தவத்தால் வாழ்க்கை பிரகாசிக்கும்

    (Peer Reviewed) தவத்தால் வாழ்க்கை பிரகாசிக்கும்

    க.ரங்கநாதன்,      

    முனைவர் பட்ட ஆய்வர்

    யோகமும் மனித மாண்பும் துறை

    பாரதியார் பல்கலைக்கழகம்

    கோவை

    முனைவர் பெ.சுந்தரமூர்த்தி

    நெறியாளர்

    யோகமும் மனித மாண்பும் துறை

    விஷன் ஸ்கை ஆராய்ச்சி மையம்

    ஆழியாறு, பொள்ளாச்சி

    சுருக்கம்:

    உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல நோக்கங்களை தமக்குள் அமைத்துக் கொள்கின்றனர். தனது இலக்கிற்கு ஏற்ப செயல்பாடுகளை வகுத்துக் கொள்வதுதான் சிறப்பான வாழ்க்கையாகும். பலருக்கு செல்வத்தைச் சேமித்துக் கொள்வதாக அமைகின்றது. சிலருக்குக் கல்வியில் ஆர்வம் கொண்டு கற்றுணர்ந்து தேர்ந்து படைப்பாளியாவது நோக்கமாகின்றது. வெகுசிலருக்கே தவம் பயின்று ஆன்மீகத்தில் முன்னேறுவது ஆர்வமாகின்றது. அனைத்து மதங்களிலும், தன்னை அறிந்து இயற்கையின் பேரறிவை உணர்ந்துகொள்ள யோகப் பயிற்சிகள் அவசியமாகின்றன.

    (கலைச் சொற்கள்: அன்னமயகோசம் – மனம் உணவைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பது,     பிரத்தியாகாரா   – பற்றற்ற மனநிலை, தாரணா     -ஒருநிலைப்படுத்துதல்,         ஏழு ஆதாரங்கள் – மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம்,  விசுக்தி, ஆக்கினை, துரியம், மானோமனநிலை – புலன் வயப்பட்ட மனநிலை)

    முன்னுரை:

    தவம் என்பது மனத்திற்கான பயிற்சி ஆகும். நீண்ட காலமாக மனித குலம் மனத்திற்கு முறையான பயிற்சிகளைக் கொடுத்து மனத்தைச் செம்மையாக்கி வருகிறது. முற்காலத்தில் குருகுலத்தில் மாணாக்கர்களுக்கு சுவாசப் பயிற்சிகளோடு தியானம் கற்றுத் தரப்பட்டது. ஆதிகாலத்தில் மகளிர் தவமுறைகளை கற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்படவில்லை. தற்காலத்தில் வேதாத்திரி மகரிஷி அவர்களால் தீட்சை முறையில் மகளிருக்கும் கற்றுத் தரப்படுகின்றன.

    அன்னமய கோசத்திலே மனம் சுழன்று வாழ்ந்து வரும் மக்கள், புலன் இச்சைக்கு உட்பட்டு, வேண்டாத அறுகுணங்களில் மூழ்கி விடுகின்றனர். அதனால் ஏற்படும் பிராராப்த வினைகளிலிருந்து மீட்டுக்கொள்ள தவங்களை மேற்கொள்வது அவசியமாகிறது. ஆசானின் உயிராற்றலையும் தன் உயிராற்றலோடு இணைத்துக்கொண்டு தவப்பயிற்சிகள் அளிக்கப்பட்டன. யோகியர் பிரத்தியாகார மற்றும் தாரணா பயிற்சிகளுடன் உயர்ந்து சமாதி நிலையை அடைந்தனர்.

    மனத்தை ஓரிடத்தில் நிலை நிறுத்துவதே தவம் எனப்படுகின்றது. தவம் மற்றும் அதைச் சார்ந்த யோகப் பயிற்சிகளுக்கு மனமே பயிற்சிக் கூடமாகவும், விளை நிலமாகவும் அமைகின்றது. விளக்குச் சுடரின் மீதோ ஒரு புள்ளியின் மீதோ தனது பார்வையைச் செலுத்துவதே ஒருமைப்படுத்துதல் ஆகும். உடலையும் உயிரையும், உயிரையும் மனத்தையும், மனத்தையும் அறிவையும், அறிவையும் பேரறிவோடும் இணைத்து லயமாவது தியானத்தின் சிறப்பம்சங்களாகும். ஒரு தியான ஆசனத்தில் அமர்ந்து இரு கண்களும் மூடிய நிலையில் சுவாசத்தை ஒழுங்குபடுத்தி நிலைத்து நிற்பதே தவத்தின் முக்கிய அம்சமாகும்.

    “யோகத்தைப் பயில, தனிமையான இடத்திற்குச் சென்று நிலத்தில் தர்ப்பைப் புல்லைப் பரப்பி அதனை மென்மையான துணியால் மறைக்க வேண்டும். இந்த ஆசனம் புனிதமான இடத்தில் அமைந்திருக்க வேண்டும். பின்னர் இதன்மேல் ஸ்திரமாக அமரந்து மனம், புலன்கள் மற்றும் செயல்களைக் கட்டுப்படுத்தி மனத்தை ஒருமுகப்படுத்தி இதயத்தைத் தூய்மைப்படுத்த, யோகியானவர் யோகத்தைப் பயில வேண்டும்.”

                      “பகவத் கீதை அத்தியாயம் ஆறு – தியானயோகம் பதங்கள் 11-12”;

    உடலில் உள்ள ஏழு ஆதாரங்களும் தியானத்தால் இணைக்கப்படுகின்றன. இதனால் ஏழு நாளமில்லாச் சுரப்பிகளுக்கும் உயிராற்றல் அதிகப்படுத்தப்பட்டு சுரப்பிகளின் பணி ஊக்கவிக்கப்படுகின்றன. வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் மன அலைச் சூழலை உணர்ச்சி அலை என்றும் அல்லது பீட்டா அலை எனவும் அது குறைந்து வரும்போது அமைதி அலை, நுண்ணலை, அறிதுயில் அலை எனவும்   ஆங்கிலத்தில் ஆல்பா அலை, தீட்டா அலை, டெல்டா அலை எனவும் அழைக்கப்படுகின்றன.

    1 பீட்டா அலை உணர்ச்சி அலை 40-14 சுற்றுகள் :வினாடி
    2 ஆல்பா அலை அமைதி அலை 13-8 Rw;Wfs; :வினாடி
    3 தீட்டா அலை நுண்ணலை 7-4 Rw;Wfs:வினாடி
    4 டெல்டா அலை அறிதுயில் அலை 3-1 சுற்றுகள் :வினாடி

    ஆழ்ந்து தவம் செய்கின்ற போது மனம் 3-1 சுற்றுகள்ஃவினாடி என்ற அளவிற்கு குறைந்து அறிதுயில் அலைக்கு வருகின்ற போது மனிதனின் சிற்றறிவு, பேரறிவோடு இணைகின்றது. பிறவித் தொடராக வந்த சஞ்சித கர்மமும் மூன்று வயதுக்குப் பின் நாம் செய்த வினைகளான பிராராப்த கர்மமும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய புகுவினையான ஆகாமிய கர்மமும் மறைந்து, பிறவி சுழற்சியிலிருந்து விடுதலை கிட்டுகிறது.

    “தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

    வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

    போய பிழையும் புகுதருவா நின்றனவும்

    தீயினில் தூசாகும் செப்பலோ ரொம்பாவாய்”.

                                        -ஆண்டாள் பாசுரம். பாடல்-5 – டி.ஜி.ராமையா, மாருதி வெளியீடு.

    கருமைய களங்கங்கள் அழிக்கப்பட்டு, நான் யார்? எனும் வினாவிற்கு இறைவனே தானாக இருப்பது உணரப்படுகிறது.

    சுவாசத்தை மனத்தோடு ஒன்றிணைத்து, சாதனம் செய்யும் போது தவமானது வெற்றி அடைகின்றது. பிராணன் எனப்படும் மூச்சுக்குக் காற்றை ஒழுங்குபடுத்திச் செய்யும் பயிற்சிக்கு பிராணாயாமம் எனப்படுகின்றது. உடல், புலன்கள், மனம், மூச்சுக்காற்று ஆகியவற்றை ஒன்றிணைத்துச் செய்யும் தியானமானது சிறப்பானதாக அமைகின்றது.

    நாடி சுத்தி  எனும் பிராணாயாமப் பயற்சியில் இடநாசி, வலநாசி இரண்டையும் ஒருங்கே இயக்கி நுரையீரலைத் தூய்மைப்படுத்துவதன் மூலம் இதயத்தின் செயலாற்றல் அதிகப்படுத்தப்படுகிறது. இரு நாடிகளையும் தூய்மைப்படுத்துவதால் சுழுமுனை எனும் நாடி சக்கரங்களின் வழியாக மேலேறி துரியம் சென்று தவத்தினைத் திறம்படச் செய்வற்குப் பேருதவியாக உள்ளது. உடலில் புத்துணர்ச்சி மேலோங்கி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது. மனம் எச்செயலைச் செய்தாலும் அதற்கு நுட்பம் நிலைத்திருக்கிறது.

    முக்குணங்களில் ரஜோ, தாமச குணங்களின் வீரியம் குறைகின்றது. எந்த உயிருக்கும் துன்பம் தராத செயல்களைச் செய்து, துன்பப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்யும் மனநிலையைப் பெறமுடிகின்றது. மானோ மனநிலையில் தோன்றுகின்ற ஆறு தீய குணங்களும் படிப்படியாகக் குறைகின்றன.

    தீய குணங்கள் நல்ல குணங்கள்
    பேராசை                 (காமம்) நிறைமனம்
    கடும்பற்று                (லோபம்) ஈகை
    முறையற்ற பால்கவர்ச்சி      (மோகம்) கற்பு நெறி
    உயர்வு தாழ்வு மனப்பான்மை  (மதம்) நேர்நிறை உணர்வு
    வஞ்சம் (மாச்சரியம்) மன்னிப்பு

    தவத்தால் நல் வாழ்விற்குத் தேவையான ஆறு நற்குணங்கள் மானுடத்தில் மாற்றி   அமைக்கப்படுகின்றன மற்றும் அறநெறி வாழ்க்கை மேற்கொள்ள முடிகின்றது. குடும்பத்தில் அன்பும் கருணையும் ஓங்கி இன்புற்று வாழ முடிகின்றது.

    வேதாத்திரி மகரிஷியின் பஞ்சபூத நவகிரக தவம்:

    அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம். அண்டத்தில் உள்ள பஞ்சபூதங்களே நம் உடலிலும் இயற்கையால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    நிலம் எலும்பு
    நீர் இரத்தம்
    நெருப்பு உடல்சூடு
    நிலம் காற்று, மூச்சு
    ஆகாயம் உயிர்

    பஞ்ச பூதங்களின் விகிதாச்சாரம் மாறும்போது உடலின் பஞ்ச பூதத்தன்மைகளும் மாறுபடுகின்றன. இதனால் உடலில் இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம் மற்றும் காற்றோட்ட உயர்வு தாழ்வுகளால் நோய்கள் வரக் காரணமாகின்றன.

    பிரபஞ்சத்திலுள்ள கோடானு கோடி நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள், ஒன்றை ஒன்று மோதிக்கொள்ளாமல் தங்களது பாதைகளில் உலவிக்கொண்டிருகின்றன. இவற்றின் காந்த அலைகள் பூமியில் வாழும் உயிரினங்களோடு தொடர்பு கொண்டிருகின்றன. சூரிய குடும்பத்திலிருந்து வரும் காந்த அலைகள், மனிதனின் உடலோடும் உயிரோடும் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளன. ஒன்பது கோள்களோடு நட்புறவு கொள்வதனால் உடலில் உள்ள சிற்றறைகளும் உறுப்புகளும் பலம் பெறுகின்றன. மேலும் மன அமைதி, மன மகிழ்ச்சி, மனவலம், தைரியம், உயர் நட்பு ஆகியன பெற, நவகிரக தவம் துணை புரிகிறது.

    நவகிரகங்களின் உடல் தொடர்பு:

    சூரியன்          –           எலும்பு

    புதன்               –           தோல்

    வெள்ளி          –           வித்து சக்தி

    சந்திரன்          –           இரத்தம்

    செவ்வாய்      –           மஜ்ஜை

    வியாழன்       –           மூளைச்செல்

    சனி                 –           நரம்பு

    இராகு,கேது  –           ஓஜஸ்

    முடிவுரை:   

    எட்டு வித அங்கங்கள் கொண்ட அஷ்டாங்க யோகத்தால் மனித இனம் நன்மையே பெறுகின்றது. தவப் பயிற்சிகளை மேற்கொள்ள அமைதியான மனநிலை தேவைப்படுகின்றது. உள்ளதை உணர்ந்து, அல்லதை விடுத்து, நல்லதைச் செய்து வாழ, தவங்கள் மிகவும் துணைபுரிகின்றன. துன்பத்தில் உழலும் மக்கள் தவப்பயிற்சிகள் செய்வதால் அமைதி, பேரின்பம் பெற்று வாழ்க்கை பிரகாசமாகும்.

    மேற்கோள் நூல்கள்:

    1)         உயிர் வளமும் மனவளமும்: யோகமும் மனிதமாண்பும், முதுகலைப்பட்டம் முதலாம் ஆண்டு, தாள் – 33, வேதாத்திரி உள்ளுணர்வுக் கல்வி நிலையம், ஆழியாறு 11ஆம் பதிப்பு, மே – 2018

    2)         மனவளக் கலை தொகுப்பு – 1, வேதாத்திரி மகரிஷி 30ஆம் பதிப்பு – சூன் – 2007

    3)         பகவத் கீதை, உண்மையுருவில், சுவாமி.பிரபுதாதர் இரண்டாம் வெளியீடு.

    4)         திருப்பாவை – திருவெம்பாவை – டி.ஜி.ராமையா, மாருதி வெளியீடு.

    =========================================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தவத்தால் வாழ்க்கை பிரகாசிக்கும் என்னும் கட்டுரை, தவத்தின் மேன்மையினையும் சிறப்பினையும் எடுத்துரைக்கின்றது. உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை ஒழுங்குபடுத்த, தவம் என்பது எவ்வாறு பயன்படுகிறது என்பதைச் சான்றுகளுடன் எடுத்துரைக்கிறது. கட்டுரையில் ஒரு தொடர்ச்சி இல்லை. ஆய்வின் முடிவுகளுக்கும் கட்டுரையின் கருத்துகளுக்கும்  நெருக்கமான தொடர்பு இருக்கவேண்டும். மேற்கோள்கள் பல ஆய்வுக் கட்டுரையில் இடம்பெற வேண்டும். கட்டுரை ஆய்வுக் கட்டுரையாக மாறவேண்டும் எனில் இவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

    =========================================================================

    Share
  • தகுதி யாருக்கு?

    தகுதி யாருக்கு?

    ஒரு அரிசோனன்

     அந்த பாலசன்னியாசி மிகவும் சக்தி மிக்கவர், அவர் முகத்தைப் பார்த்தாலே எல்லாக் கஷ்டங்களும் பறந்துபோகும், அப்படி ஒரு சாந்தமான முகம், அவர் முன்னால் இருந்தாலே போதும், உலக நினைப்பே மறந்து போகிறது, அவர் பேசவே வேண்டாம், அவர் பார்வையிலேயே துயரங்கள் கதிரவன் முன் மறையும் பனிபோல மறைந்துபோகும் என்று பேசிக்கொண்டார்கள்.

    அது காளிமுத்து காதிலும் விழுந்தது.

    என் துயரத்திற்கும், எனது மனச்சுமைக்கும், ஆற்றாமைக்கும் இந்தப் பாலசன்னியாசியால் ஒரு முடிவு வருமா என்று அவர் மனதில் ஒரு எண்ணம் எழுந்தது.  அவரை ஒரு நடை சென்று பார்த்துவிட்டுத்தான் வருவோமே என்று நினைத்துக்கொண்டார்.

    எப்பொழுது அவரைச் சென்று பார்ப்பது?

    நாமென்ன பெரிதாக வெட்டியாமுறித்துக்கொண்டா இருக்கிறோம், உடனே சென்று பார்த்துவிடுவோமெ என்று உடனே முடிவெடுத்தார் காளிமுத்து.

    ஒரு சந்நியாசியைப் பார்க்கப் போகிறோம், வெறுங்கையுடனா செல்வது என்று நினைத்தவர், எதிரில் உள்ள கடையில் ஒரு சீப்பு வாழைப்பழங்களை வாங்கி எடுத்துக்கொண்டார்.  வேகுவேகென்று நடந்து பாலசன்னியாசியின் ஆசிரமத்தை அடைந்தார்.

    அங்கு ஒரே கூட்டம்.  மக்கள் இங்குமங்கும் புற்றீசல்கள்போல நடைபயின்றுகொண்டிருந்தனர்.  அனைவரின் முகத்திலும் ஒரு ஏமாற்றம் குடிகொண்டிருந்தது.

    அதைப் பார்த்ததும், பரிவுடன் ஒருவரிடம், “என்ன ஆச்சு?  ஏன் எல்லாப்பேரும் இப்பிடி ஒரு நிலைகொள்ளாம உலாத்திக்கிட்டு இருக்கீக?  உங்க முகமெல்லாம் சூம்பிக் கெடக்கே?  என்னாங்க அது?” விசாரித்தார்.

    அவரைத் திரும்பிப் பார்த்து, “அதுவுங்களா!  இன்னிக்கு பாலசன்னாசி, திடுதிப்புன்னு மவுன விரதத்துலே ஆழ்ந்துட்டாராம்.  ஆரையும் பாத்துப் பேசாம இருக்காராம்.  அவருகிட்டப் பேசி, தங்க தும்பத்தைச் சொல்லனுமிண்டு வந்த அத்தினி பேருக்கும் ஏமாத்தமாப் போயிடுச்சு.  அவரு எப்ப வாயத் திறந்து பேசறது, இவுக எப்ப அவருகிட்ட தங்க குறையச் சொல்லறது, அவரு எப்ப இவுகளுக்கு ஒரு வழியச் சொல்லறது?  அதுதான் கதி கலங்கி, என்ன செய்யனுமிண்டு தெரியாம உலாத்திக்கிட்டு இருக்காக.” என்று அவரும் தன் வழியைப் பார்த்து நடக்க ஆரம்பித்தார்.

    காளிமுத்துவின் தலையில் புழுக்குடைந்தது.

    இன்று பாலசன்னியாசியைப் பார்க்கவே முடியாது போய்விடுமா?

    “என்னாங்க, அப்ப பாலசாமியைப் பாக்க முடியாதா?” என்று சென்றவரைத் துரத்திச்சென்று விசாரித்தார்

    .two indian villagers talk on the roadside , india

    “ஏம் முடியாது?  வேணுங்கற வரைக்கும் பாலசாமி இருக்கற எடத்துலே ஒக்காந்துக்கிட்டு இருக்கலாம்.  பாலசாமி மவுனவிரதத்துலே ஒக்காந்துட்டா நாள்கணக்குலே, ஏன் வாரக்கணக்குலகூடப் பேசமாட்டாரு. போங்க, போய் பாலசாமியைப் பாத்துட்டு வாங்க.  அவரு பேசினாத்தான் அதிசயம்.”  என்று நடக்க ஆரம்பித்தார்.

    காளிமுத்து தயங்கியவாறு பாலசன்னியாசி அமர்ந்திருக்கும் கூடத்திற்குள் நுழைந்தார். நூறிலிருந்து நூற்றிருபத்தைந்து பேர்கள் இருக்கக்கூடிய அக்கூடத்தில் இருபது, இருபத்தைந்து பேர்களே அமர்ந்திருந்தனர்.  ஓரிருவர் எழுந்திருந்து வெளிவரத் துவங்கினர்.  அவர்களுக்கு வழிவிட்டவாறு உள்ளே நுழைந்தார் காளிமுத்து.

    வயது பதினாறு-பதினேழு இருந்தாலும் குழந்தை போன்ற முகவெட்டு, மிகவும் அமைதியான, தனக்குள்ளே ஆனந்தத்தை உணர்வதுபோன்ற ஒரு முகபாவம்.

    திடுமென்று, உலகத்திலேயே பாலசன்னியாசியும், தானும் ஆகிய இருவர் மட்டும் இருப்பதைப்போல உணர்ந்தார் காளிமுத்து.

    இங்கே வா என்று அந்தப் பாலசன்னியாசி தன்னை அழைப்பதைப்போல உள்ளுணர்வு தூண்டவே,  அவரது கால்கள் அவரையும் அறியாமல் முன்னே இழுத்துச் சென்றன.

    கைகள் வாழைப்பழச் சீப்பை அவரிடம் நீட்டின.

    நீயே வாழைப்பழத்தை உரித்து எனக்கு ஊட்டிவிடக்கூடாதா என்று தன்னை வினவுவதுபோல உணர்ந்தார்.

    அவரது விரல்கள் ஒரு வாழைப்பழத்தைப்பிய்த்து, அதை உரித்து நீட்டின.

    திறந்த பாலசன்னியாசியின் வாயில் வாழைப்பழத்தைச் சிறிது சிறிதாக விண்டு ஊட்டினார் காளிமுத்து. உதடுகளின் ஓரத்தில் நின்ற சிறு துகளைத் தன் மேல்துண்டால் ஒத்தி எடுத்தார்.

    மேலும் இரண்டு வாழைப்பழங்கள் ஊட்டப்பட்டன.  தோலிகளைத் தனது மேல்துண்டுகளில் முடிந்துவைத்துக்கொண்டார்.

    தலையசைப்பு கிடைக்கவே, அருகில் அமர்ந்துகொண்டார்.

    “என்ன வேண்டும்?” என்பது போல பாலசன்னியாசியின் புருவங்கள் உயர்ந்தன.

    “சாமிக்கு மவுனவிரதம் இல்லையா!  என்கிட்ட பேச முடியுமா?” என்று கேட்கத் தோன்றியது.  நா புரளமறுத்தது.

    “உன் மனதிலேயே சொல்லு.  எனக்குப் புரியும்.” என்று காளிமுத்துவின் காதுகளில் சொற்கள் ஒலித்தன.

    “சொல்றேன்!” என்று மனதிற்குள் எண்ணத்துவங்கினார் காளிமுத்து.

    “சாமி!  என் சொந்த ஊரு திருமயத்துக்கு ரெண்டு கல்லு கெழக்கால இருக்கற கடியாபட்டிங்க.  நான்தான் வீட்டுக்கு மூத்த புள்ளைங்க.  என்கூடப் பொறந்தது எட்டு பேருங்க. அடுத்தடுத்து ஆறு பொட்டப்புள்ளங்க, கடசியா ரெண்டு தம்பிங்க.  இத்தன கூடப்பொறந்தவங்க இருக்கறச்சே நாந்தாங்க விட்டுக்கொடுத்துப் போகணுங்க.

    “ஆறு தங்கச்சிடா ஒனக்கு, அப்பாருகூட ஒழச்சு நீதான் அதுங்களைக் கரையேத்தணும், தம்பிகளை நீதாண்டா நல்லாப் படிக்கவச்சு நல்லா வாழவைக்கனுமிண்டு ஆத்தா சொல்லுவாங்க. அதுனால பத்து வயசுலே பள்ளிக்கூடத்துக்கு புள்ளி வச்சுட்டு, நாயனாவோட கொல்லுப்பட்டறைக்கு வந்து சுத்தியும், சம்மட்டியும் புடிக்க ஆரம்பிச்சேனுங்க

    .

    “எங்க சக்திக்கு ஏத்தபடி மூணு தங்கச்சிகளுக்கு கண்ணாலம் செஞ்சு கொடுத்தொமுங்க.  ஒருநாள், ஒலைல நான் வேலை செஞ்சுக்கிட்டு இருக்கறபோது, ‘டேய் காளி, நெஞ்சு அடைக்குதுடா, கொஞ்சம் தண்ணி கொடுடா!’ன்னு நாயனா தீனமான கொரல்ல கூப்படறது கேட்டுச்சுங்க.  எதுவும் எங்கிட்ட கேக்காத மனுசனாச்சே, தண்ணி வேணுமிண்டு கேக்குறாகளே, நெஞ்சவேற அடைக்குதுங்களாகறளே அப்படீன்னு பதறிப்போயி, ஒலைக்கு காத்தடிக்கறதை விட்டுப்போட்டு ஓடிவந்து பாத்தா, நாயனா சாஞ்சு கேடந்தாருங்க.  மூச்சுபெச்சில்லே.

    ‘வண்டிலே எத்தி, ஆசுபத்திரிக்கு ஏத்திட்டுப்போறதுக்குள்ளே அவரு காலம் முடிஞ்சுபோச்சுங்க.

    “ரொம்பக் கசுட்டப்பட்டு இன்னும் ரெண்டு தங்கச்சிமாருக்கு கண்ணாலம் பண்ணி வக்கரதுக்குள்ளே என் தாவு தீந்து போச்சுங்க.

    “அப்ப பாத்து, என் ஆத்தா டேய் காளி, ஒனக்கும் முப்பது வயசத் தாண்டிடுச்சு.  எனக்கும் தள்ளாட்டமாப் போயிட்டு வருது அப்பாரும் போயிட்டாருடா காளி, நான் கண்ணை மூடறதுக்குள்ள .நீயாத்தாண்டா ஒரு கண்ணாலம் கட்டிக்கவோணும்னு கெஞ்சினாங்க.  நாலு பசங்க இருக்கறபோது நான் எப்படி கண்ணாலம் கட்டிக்க்கினு, புள்ளகுட்டி பெத்துக்கறதுங்க?  ஆனா தளந்துபோன ஆத்தாவைப் பாத்துக்க பொறுப்புள்ள பொட்டப்புள்ள வூட்டுல வேணாமுங்களா? தங்கச்சிமாரு இருக்காகளேன்னு நீங்க கேக்கலாம்.  ஆனா, அவுக இன்னூத்தன் வூட்டுக்குப் போறவுகதானே சாமி!  அதுனால நானு தூரத்து உறவுல அனாதையா இருந்த ஒரு போட்டப் புள்ளயக் கண்ணாலாம் கட்டிக்கிட்டேன்.

    “அதுகிட்டே கண்டிசனாச் சொல்லிப்புட்டேன் சாமி, ‘ஏய் புள்ளே, தங்கச்சியைக் கரையேத்திப்புட்டு, ரெண்டு தம்பிகளுக்கும் வழி பண்ணினாத்தான் நமக்கு குழந்த குட்டி எல்லாம்.  அதுவரை அந்த நெனப்பே உனக்குக் கூடாது!’ அப்பிடீன்னு.  அது பத்தரமாத்துத் தங்கம் சாமி.  எதுத்து ஒரு வார்த்த பேசலே.  ஒங்க இஸ்டம்தான் என் இஸ்டம் அப்படீன்னுட்டா.

    “என் கடமைய முடிக்க ஏழெட்டு வருசம் ஆயிப்போயிட்டுது, சாமி.  நமக்குன்னு ஒரு குளந்தை வேணாங்களா அப்பிடீன்னு அப்பத்தான் எனக்கு நாபகப்படுத்தினா அவ, சாமி.  குழந்தையும் பொறந்துச்சு.  அதை என் கையில தூக்கிக் கொடுத்துட்டு, இதையும் நீ காப்பாத்துடா காளின்னு அவ பூவும் போட்டுமா போய்ச் சேந்துட்டா.

    “மொத தபா நான் அசந்துபோயி ஒக்காந்துட்டேன்.” காளிமுத்துவின் மனம் மனைவி மறைந்த துக்கத்தை எண்ணிப் பார்த்துச் சிறிது அமைதி காத்தது.

    “பிறகு என்ன ஆயிற்று?”  என்று அவர் காதில் ஒலித்த சொற்கள் நின்றுபோன அவர் நினைவோட்டத்தைத் தூண்டின.  மௌன உரையாடல் மீண்டும் துவங்கியது.

    “எத்தனை நாளுதான் சொம்மா ஒக்காந்துக்கிட்டு இருக்கறது, சாமி?  மெதுவா மனசத் தேத்திக்கிட்டு, பிசாசு மாதிரி கொல்லுப்பட்டறைலே உழைச்சேன்.  ஆனா சாமி, எந்தத் தங்கச்சிகளுக்காகவும், எந்தத் தம்பிகளுக்காகவும் நானும் எங்க நாயனாவும் உழைச்சோமோ, எவுங்களைக் கரையேத்தனுமின்னு நானும், எம்பொஞ்சாதியும், ஏழெட்டு வருசமா ஒரே வூட்டுல இருந்து தனிச்சு நின்னோமோ —  அவுக யாரும் எம்பச்சப்புள்ளைக்கு ஒருவேளை கஞ்சி காச்சி ஊத்தலே சாமி.

    “நான்தான் அவனை அப்பனாவும், ஆத்தாவாவும் இருந்து வளத்தேனுங்க.  நானு இருக்கற எடந்தான் – அது என் குடிசையோ, கொல்லுப்பட்டறையோ – அதுதான் அவனுக்கு வீடா இருந்துச்சுங்க!  கூடப் பொறந்ததுதான் இல்லேன்னு ஆயிப்போச்சு, மலை மாதிரி ஒரு ஆம்பள சிங்கம் எனக்குப் புள்ளையாப் பொறந்திருக்கான், வயசான காலத்துல என்னவச்சுக் கஞ்சி ஊத்துவான்னு பேய் மாதிரி ஒழச்சேனுங்க.  ஏதோ நான் கும்படற கடியாபட்டி தலைவிரிச்சான் காளியம்மன் புண்ணியத்துல அவனும் நல்லபடியா வளந்து, நல்லாப் படிச்சானுங்க.  காரைக்குடி காலேசிலே படிக்க கவர்மின்ட்டு ஒதவித்தொகைகூட கெடச்சுதுங்க, சாமி.

    “நல்லாப் படிச்சு, காரைக்குடியிலே பெரிய வேலைலே சேந்தானுங்க.  அங்கேயே காலேசில கூடப்படிச்ச வேறசாதி புள்ள ஒருத்தியைக் கண்ணாலம் பண்ணிக்கறேன்னு சொன்னானுங்க.  நானும், சாதியென்ன சாதி, கூடப் பொறந்ததுகூட  வுட்டுட்டுப் போயிட்டுதுங்களே, அவனாச்சும் இசுட்டப்பட்ட பொண்ணைக் கண்ணாலம் கட்டிக்கிட்டு, சந்தோசமாக இருந்தாச் சரிதான்னு நெனச்சேனுங்க.

    “அது பணக்கார வூட்டுப்புள்ளைங்க.  அவங்களுக்கு காரைக்குடிலே பெரிய ஊடுங்க.  காரு, டிரைவர்னு,  வேலைக்காரங்க, சமயக்காரங்க அப்புடீன்னு – எனக்கு ஒரே மலைப்பா இருந்துதுங்க.  அவங்க ஒரு நாளைக்குச் செலவு பண்ணற துட்டை நானு ஒரு மாசம் உசுரைக் கொடுத்து கொல்லுப்பட்டறையிலே ஒழச்சாலும் சம்பாதிக்க வழியில்லைங்க.  அந்த பொண்ணு போடற துணி ஒண்ணை வாங்கிக் கொடுக்கக்கூட எனக்கு வக்கு இல்லீங்க.

    “கண்ணாலத்துக்கு அப்பால ஒங்க புள்ள எங்க வூட்டுலதான் இருக்கணும்னு கண்டிப்பாச் சொன்னாங்க.  எம்புள்ளகூட கொஞ்சம் சொணக்கம் காட்டினானுங்க.  நான்தான் அவனாவது என்னமாதிரி தும்பப்படாம, நல்ல சொகப்பட்டாச் சரிதான்னு நெனச்சேனுங்க.  ஒரு வார்த்தைக்குக்கூட நீங்களும் எங்ககூட இருங்க ஐயான்னு அவிகளும் ஒரு சொல்லு சொல்லலீங்க, எம்மயனும் நாயனா, நீங்களும் எங்ககூட வந்துடுங்கன்னு கூப்படலீங்க.  அவுக வூட்டு நாய்க்குப் போடற தீனில பத்துல ஒரு பங்கு தீனியா நானு தின்னுடுவேனுங்க, சொல்லுங்க சாமி, பாப்போம்!

    “ஆனா, எம்பொறவிதான் ஒழச்சு ஓடாப்போறதுக்குன்னே இருக்கு, அவனாவது சொகமா இருக்கட்டும்னு நெனச்சு சரின்னு சொல்லிட்டேனுங்க.”

    காளிமுத்துவின் கண்களில் நீர் தாரையாக வழிந்தது.  மேலே எண்ண இயலாமல் நெஞ்சை அடைத்தது.

    “ஏன் நிறுத்திவிட்டாய்?  சொல்லத்தானே, உன் துன்ப மூட்டையை என்னிடம் இறக்கிவைக்கத்தானே வந்தாய்!  ஏன் முழுச் சுமையையும் இறக்கிவைக்காமல் இன்னும் சுமந்து திரிய ஆசைப்படுகிறாய்?”  என்று பாலசன்னியாசியின் கண்கள் அவரை வினவின.

    “முடியலீங்க சாமி, முடியலே!”  மனதிற்குள் அழுதார் காளிமுத்து.

    “இவ்வளவு தூரம் சொல்லிவிட்டாய்.  மீதியையும் சொன்னால்தானே அமைதி கிடைக்க வழிபிறக்கும்?  உன் மனச்சுமை நீங்கும்!  கடைசி ஒருசில அடிகளை உன்னால் எடுத்துவைக்க முடியாதா?  மேலே செல்!  இன்னும் சொல்!” என்று அவரைத் தூண்டின பாலசன்னியாசியின் சொல்லாத சொற்கள்.

    “கண்ணாலம் பெரிசா நடந்து முடிஞ்சுச்சு, சாமி.  எம்மயனும் அவன் பொஞ்சாதி, மாமனார், மாமியார், அவங்க சொந்தக்காரங்ககூட காரேறிப் போயிட்டானுங்க.  நாயனா, நீ கடியாபட்டிக்கு எப்பப் போவே, எப்படிப் போவே அப்படீன்னு ஒரு வார்த்தைகூட கேக்கலீங்க.  மனசு ஒடிஞ்சு போச்சுங்க.

    “நான் அஞ்சு கிளாசுக்கு மேல படிக்காத பொறம்போக்குதாங்க.  ஆனா, என் குடும்பத்துக்கு, கூடப்பொறந்ததுகளுக்கு, எனக்குப் பொறந்ததுக்கு என் உசிரக்கொடுத்துதான் ஒழச்சேனுங்க.  என்னவச்சுக் கஞ்சி ஊத்துவான்னு நம்பினவன்கூட என்னைக் கடைசீல கருவேப்பல மாதிரித் தூக்கிப் போட்டுடுப்போனதுதாங்க மனசு தாங்கலே.  அவனுக்கு புள்ள – அதுதாங்க எனக்குப் பேரப்புள்ள பொறந்ததுன்னு கேள்விதானுங்க.  அவனும் நாயனா, ஒம்பேரப்புள்ள இதுதான்னு கொண்டுவந்து காட்டலீங்க, வந்து பாருங்கன்னு சொல்லவும் இல்லீங்க சாமி.

    “கண்ணாலத்துலதாங்க நான் அவனைக் கடைசியாப் பாத்தது.  அப்பறம் பாக்கவே இல்லீங்க, சாமி!  மருமகப் பொண்ணும் எனக்கு ஒருவேளைச் சோறு போடலீங்க சாமி”

    அமைதியாகிவிட்டார் காளிமுத்து.

    “என்னைக் கேட்கவந்த கேள்வியைக் கேட்காமல் நிறுத்திவிட்டாயே, கேள்!” என்று மௌனஒலி மீண்டும் அவர் உள்ளத்தில் ஒலித்தது.  அமைதிப்புன்னகை தவழும் பாலசன்னியாசியின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.

    “கேக்கறேன் சாமி, கேட்டுப்புடறேன்.  அதுக்குத்தானே உங்களைப்பாக்க வந்தேன்.” என்று மனதுள் கேள்வியை எழுப்பினார் காளிமுத்து.

    “சாமி, நான் அல்லாருக்கும் நன்மையத்தானே செஞ்சேன்?  அதுக்குப் பர்த்தியா காசு பணமா கேட்டேன்?  இல்லையே சாமி!  நாலு வார்த்தை அன்பாப் பேசுங்கனுதானே நானு நெனச்சேன்.  அது தப்பா சாமி?  அண்ணே, நல்லா இருக்கீகளா, மாமா நல்ல இருக்கீகளா, பெரியப்பு நல்லா இருக்கீகளா, தாத்தா நல்லா இருக்கீகளானு இன்னிக்கு வரை ஒரு சொல்லுகூட ஒரு தபா என் காதுல விழலயே சாமி!  அப்பிடி நான் என்ன பெரிய பாவத்தைச் செஞ்சிட்டேன்?  பத்து வயசுலேந்து மத்தவகளுக்காத்தானே நானு கொல்லுப்பட்டறைலே வெந்தேன். அங்கே காஞ்சுபோன மனசுக்கு குளிர்ச்சியா, காதுக்கு இனிமையா ஏன் சாமி ஒரு சொல்லு நான் கேக்கலே?  இதுதான் சாமி என் கேள்வி!  எனக்குப் பணம், காசு, சொத்து எதுவும் வேணாம்.  நல்ல சொல்லுதான் சாமி வேணும்.   எது எப்ப சாமி கெடைக்கும்?”

    மௌனம் கலைந்தது.

    “வேளை வந்துவிட்டது.  அதுவும் இப்போதே வந்துவிட்டது!”

    கணீர் என்ற குரல் அவர் காதுகளில் கேட்டது. தலைகுனிந்து நின்றிருந்த அவர் முதலில் கவனித்தது, தான் இருக்கும் இடம், கூடத்தின் நுழைவாயில் அருகே என்பதும், பாலசன்னியாசி அருகே தான் செல்லவில்லை என்பதும்தான்.

    அப்படியானால்..

    இதுவரை நடந்ததாகத் தாம் நினைத்தது, பாலசன்னியாசிக்கு அருகே சென்று வாழைப்பழத்தை ஊட்டியது, அவர் தன்னிடம் பேசியதாக உணர்ந்தது, தான் மனத்தளவில் அவருடன் அளவளாவியது – இது எல்லாம் தனது நினைப்புதானா, தனது ஏக்கத்தின் பிரதிபலிப்புதானா?

    தன்னை யாரோ தழுவிக்கொள்ளும் உணர்வு ஏற்பட்டதும் முழுவதும் கண்களைத் திறந்து பார்த்தார் காளிமுத்து.  பாலசன்னியாசிதான் அவரைத் தழுவியபடி நின்றுகொண்டிருந்தார்.

    உரத்த, அனைவரையும் ஈர்க்கும், அமைதியில் ஆழ்த்தும் குரலில் பேச ஆரம்பித்தார் பாலசன்னியாசி.

    சுற்றி இருந்த அனைவரும் அவர் சொல்வதை கவனத்தைச் சிதறவிடாமல் கேட்டனர்.

     “என்னருகில் வந்ததாக இவர் நினைத்தார்;  ஆனால் நான்தான் இவர் அருகில் வந்து நின்றேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.  இவர் எனக்கு வாழைப்பழத்தை ஊட்டிய அன்பையும், தன் மேல்துண்டில் தோலியை முடிந்துவைத்த பண்பையும் நீங்கள் கண்டீர்கள்.  எனது மௌனத்தைக் கலைத்து இவருடன் நான் உரையாடியதையும்,  நான் கேட்ட கேள்விக்கு இந்த முதியவர் சொன்ன பதிலையும் நீங்கள் அனைவரும்தான் கேட்டீர்கள்!

    “இவ்வுலகப் பற்றைத் துறந்து, தனித்திருந்து, தவவாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்று இருந்த என்னை இதுவரை சம்சாரியாக, நிறையப் பேர்களுடன் இருக்க வைத்துவிட்டான் எம்பெருமான்.  ஓட நினைக்கும் என்னைத்தேடி நீங்கள் இத்தனை பேர் வருகிறீர்கள்!  அமைதியைத் தேடும், அன்பை விரும்பி வரும் அனைவருக்கும் அதைக் கொடுக்க பற்றை விட முயலும் எனக்கு என்ன தகுதி இருக்கிறது?

    “உழைத்து ஓடாய்த் தேய்ந்த இந்த மனிதர் அன்பைத் தவிர வேறு எதையும் யாருக்கும் கொடுக்கவில்லை. இன்னும் அனைவருக்கும் குறையாத அன்பைக்கொடுக்கவே இவர் விரும்பி நிற்கிறார்.  இந்த இடத்தில் இவரை அன்றி வேறு யார் உங்களுக்கு உண்மையான, எடுக்க எடுக்க, அள்ளஅள்ளக் குறையாத அன்பைக் கொடுத்துவிடப்போகிறார்கள்?

    “ஆக, ஓட நினைக்கும் நான் இங்கு இருப்பது முறையல்ல.  என்னை விட்டுவிடுங்கள்.  இங்கு இருந்து அன்பைத் தேடி வருபவர்க்கு அன்பை நல்கத் தகுதி உள்ளவர் இவர் ஒருவர்தாம்.”

    காளிமுத்துவின் கைகளைப்பற்றி அழைத்துச் சென்று, தான் அமர்ந்திருந்த பீடத்தில் அமர்த்திவிட்டு, “உங்கள் கேள்விக்கு விடை இப்பீடம்தான்.  இங்கு இருந்து, அன்புக்கு ஏங்கித்தவித்து வரும் அனைவருக்கும் உங்கள் அன்பைக்கொடுத்து, அன்பே சிவமாக இருங்கள்!” என்று வெளியே நடந்தார் பாலசன்னியாசி.

    **********************

    Share