(Peer Reviewed) தவத்தால் வாழ்க்கை பிரகாசிக்கும்

க.ரங்கநாதன்,
முனைவர் பட்ட ஆய்வர் யோகமும் மனித மாண்பும் துறை பாரதியார் பல்கலைக்கழகம் கோவை |
முனைவர் பெ.சுந்தரமூர்த்தி
நெறியாளர் யோகமும் மனித மாண்பும் துறை விஷன் ஸ்கை ஆராய்ச்சி மையம் ஆழியாறு, பொள்ளாச்சி |
சுருக்கம்:
உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல நோக்கங்களை தமக்குள் அமைத்துக் கொள்கின்றனர். தனது இலக்கிற்கு ஏற்ப செயல்பாடுகளை வகுத்துக் கொள்வதுதான் சிறப்பான வாழ்க்கையாகும். பலருக்கு செல்வத்தைச் சேமித்துக் கொள்வதாக அமைகின்றது. சிலருக்குக் கல்வியில் ஆர்வம் கொண்டு கற்றுணர்ந்து தேர்ந்து படைப்பாளியாவது நோக்கமாகின்றது. வெகுசிலருக்கே தவம் பயின்று ஆன்மீகத்தில் முன்னேறுவது ஆர்வமாகின்றது. அனைத்து மதங்களிலும், தன்னை அறிந்து இயற்கையின் பேரறிவை உணர்ந்துகொள்ள யோகப் பயிற்சிகள் அவசியமாகின்றன.
(கலைச் சொற்கள்: அன்னமயகோசம் – மனம் உணவைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பது, பிரத்தியாகாரா – பற்றற்ற மனநிலை, தாரணா -ஒருநிலைப்படுத்துதல், ஏழு ஆதாரங்கள் – மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்கினை, துரியம், மானோமனநிலை – புலன் வயப்பட்ட மனநிலை)
முன்னுரை:
தவம் என்பது மனத்திற்கான பயிற்சி ஆகும். நீண்ட காலமாக மனித குலம் மனத்திற்கு முறையான பயிற்சிகளைக் கொடுத்து மனத்தைச் செம்மையாக்கி வருகிறது. முற்காலத்தில் குருகுலத்தில் மாணாக்கர்களுக்கு சுவாசப் பயிற்சிகளோடு தியானம் கற்றுத் தரப்பட்டது. ஆதிகாலத்தில் மகளிர் தவமுறைகளை கற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்படவில்லை. தற்காலத்தில் வேதாத்திரி மகரிஷி அவர்களால் தீட்சை முறையில் மகளிருக்கும் கற்றுத் தரப்படுகின்றன.
அன்னமய கோசத்திலே மனம் சுழன்று வாழ்ந்து வரும் மக்கள், புலன் இச்சைக்கு உட்பட்டு, வேண்டாத அறுகுணங்களில் மூழ்கி விடுகின்றனர். அதனால் ஏற்படும் பிராராப்த வினைகளிலிருந்து மீட்டுக்கொள்ள தவங்களை மேற்கொள்வது அவசியமாகிறது. ஆசானின் உயிராற்றலையும் தன் உயிராற்றலோடு இணைத்துக்கொண்டு தவப்பயிற்சிகள் அளிக்கப்பட்டன. யோகியர் பிரத்தியாகார மற்றும் தாரணா பயிற்சிகளுடன் உயர்ந்து சமாதி நிலையை அடைந்தனர்.
மனத்தை ஓரிடத்தில் நிலை நிறுத்துவதே தவம் எனப்படுகின்றது. தவம் மற்றும் அதைச் சார்ந்த யோகப் பயிற்சிகளுக்கு மனமே பயிற்சிக் கூடமாகவும், விளை நிலமாகவும் அமைகின்றது. விளக்குச் சுடரின் மீதோ ஒரு புள்ளியின் மீதோ தனது பார்வையைச் செலுத்துவதே ஒருமைப்படுத்துதல் ஆகும். உடலையும் உயிரையும், உயிரையும் மனத்தையும், மனத்தையும் அறிவையும், அறிவையும் பேரறிவோடும் இணைத்து லயமாவது தியானத்தின் சிறப்பம்சங்களாகும். ஒரு தியான ஆசனத்தில் அமர்ந்து இரு கண்களும் மூடிய நிலையில் சுவாசத்தை ஒழுங்குபடுத்தி நிலைத்து நிற்பதே தவத்தின் முக்கிய அம்சமாகும்.
“யோகத்தைப் பயில, தனிமையான இடத்திற்குச் சென்று நிலத்தில் தர்ப்பைப் புல்லைப் பரப்பி அதனை மென்மையான துணியால் மறைக்க வேண்டும். இந்த ஆசனம் புனிதமான இடத்தில் அமைந்திருக்க வேண்டும். பின்னர் இதன்மேல் ஸ்திரமாக அமரந்து மனம், புலன்கள் மற்றும் செயல்களைக் கட்டுப்படுத்தி மனத்தை ஒருமுகப்படுத்தி இதயத்தைத் தூய்மைப்படுத்த, யோகியானவர் யோகத்தைப் பயில வேண்டும்.”
“பகவத் கீதை அத்தியாயம் ஆறு – தியானயோகம் பதங்கள் 11-12”;
உடலில் உள்ள ஏழு ஆதாரங்களும் தியானத்தால் இணைக்கப்படுகின்றன. இதனால் ஏழு நாளமில்லாச் சுரப்பிகளுக்கும் உயிராற்றல் அதிகப்படுத்தப்பட்டு சுரப்பிகளின் பணி ஊக்கவிக்கப்படுகின்றன. வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் மன அலைச் சூழலை உணர்ச்சி அலை என்றும் அல்லது பீட்டா அலை எனவும் அது குறைந்து வரும்போது அமைதி அலை, நுண்ணலை, அறிதுயில் அலை எனவும் ஆங்கிலத்தில் ஆல்பா அலை, தீட்டா அலை, டெல்டா அலை எனவும் அழைக்கப்படுகின்றன.
1 | பீட்டா அலை | உணர்ச்சி அலை | 40-14 சுற்றுகள் :வினாடி |
2 | ஆல்பா அலை | அமைதி அலை | 13-8 Rw;Wfs; :வினாடி |
3 | தீட்டா அலை | நுண்ணலை | 7-4 Rw;Wfs:வினாடி |
4 | டெல்டா அலை | அறிதுயில் அலை | 3-1 சுற்றுகள் :வினாடி |
ஆழ்ந்து தவம் செய்கின்ற போது மனம் 3-1 சுற்றுகள்ஃவினாடி என்ற அளவிற்கு குறைந்து அறிதுயில் அலைக்கு வருகின்ற போது மனிதனின் சிற்றறிவு, பேரறிவோடு இணைகின்றது. பிறவித் தொடராக வந்த சஞ்சித கர்மமும் மூன்று வயதுக்குப் பின் நாம் செய்த வினைகளான பிராராப்த கர்மமும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய புகுவினையான ஆகாமிய கர்மமும் மறைந்து, பிறவி சுழற்சியிலிருந்து விடுதலை கிட்டுகிறது.
“தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவா நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பலோ ரொம்பாவாய்”.
-ஆண்டாள் பாசுரம். பாடல்-5 – டி.ஜி.ராமையா, மாருதி வெளியீடு.
கருமைய களங்கங்கள் அழிக்கப்பட்டு, நான் யார்? எனும் வினாவிற்கு இறைவனே தானாக இருப்பது உணரப்படுகிறது.
சுவாசத்தை மனத்தோடு ஒன்றிணைத்து, சாதனம் செய்யும் போது தவமானது வெற்றி அடைகின்றது. பிராணன் எனப்படும் மூச்சுக்குக் காற்றை ஒழுங்குபடுத்திச் செய்யும் பயிற்சிக்கு பிராணாயாமம் எனப்படுகின்றது. உடல், புலன்கள், மனம், மூச்சுக்காற்று ஆகியவற்றை ஒன்றிணைத்துச் செய்யும் தியானமானது சிறப்பானதாக அமைகின்றது.
நாடி சுத்தி எனும் பிராணாயாமப் பயற்சியில் இடநாசி, வலநாசி இரண்டையும் ஒருங்கே இயக்கி நுரையீரலைத் தூய்மைப்படுத்துவதன் மூலம் இதயத்தின் செயலாற்றல் அதிகப்படுத்தப்படுகிறது. இரு நாடிகளையும் தூய்மைப்படுத்துவதால் சுழுமுனை எனும் நாடி சக்கரங்களின் வழியாக மேலேறி துரியம் சென்று தவத்தினைத் திறம்படச் செய்வற்குப் பேருதவியாக உள்ளது. உடலில் புத்துணர்ச்சி மேலோங்கி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது. மனம் எச்செயலைச் செய்தாலும் அதற்கு நுட்பம் நிலைத்திருக்கிறது.
முக்குணங்களில் ரஜோ, தாமச குணங்களின் வீரியம் குறைகின்றது. எந்த உயிருக்கும் துன்பம் தராத செயல்களைச் செய்து, துன்பப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்யும் மனநிலையைப் பெறமுடிகின்றது. மானோ மனநிலையில் தோன்றுகின்ற ஆறு தீய குணங்களும் படிப்படியாகக் குறைகின்றன.
தீய குணங்கள் | நல்ல குணங்கள் |
பேராசை (காமம்) | நிறைமனம் |
கடும்பற்று (லோபம்) | ஈகை |
முறையற்ற பால்கவர்ச்சி (மோகம்) | கற்பு நெறி |
உயர்வு தாழ்வு மனப்பான்மை (மதம்) | நேர்நிறை உணர்வு |
வஞ்சம் (மாச்சரியம்) | மன்னிப்பு |
தவத்தால் நல் வாழ்விற்குத் தேவையான ஆறு நற்குணங்கள் மானுடத்தில் மாற்றி அமைக்கப்படுகின்றன மற்றும் அறநெறி வாழ்க்கை மேற்கொள்ள முடிகின்றது. குடும்பத்தில் அன்பும் கருணையும் ஓங்கி இன்புற்று வாழ முடிகின்றது.
வேதாத்திரி மகரிஷியின் பஞ்சபூத நவகிரக தவம்:
அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம். அண்டத்தில் உள்ள பஞ்சபூதங்களே நம் உடலிலும் இயற்கையால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நிலம் | எலும்பு |
நீர் | இரத்தம் |
நெருப்பு | உடல்சூடு |
நிலம் | காற்று, மூச்சு |
ஆகாயம் | உயிர் |
பஞ்ச பூதங்களின் விகிதாச்சாரம் மாறும்போது உடலின் பஞ்ச பூதத்தன்மைகளும் மாறுபடுகின்றன. இதனால் உடலில் இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம் மற்றும் காற்றோட்ட உயர்வு தாழ்வுகளால் நோய்கள் வரக் காரணமாகின்றன.
பிரபஞ்சத்திலுள்ள கோடானு கோடி நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள், ஒன்றை ஒன்று மோதிக்கொள்ளாமல் தங்களது பாதைகளில் உலவிக்கொண்டிருகின்றன. இவற்றின் காந்த அலைகள் பூமியில் வாழும் உயிரினங்களோடு தொடர்பு கொண்டிருகின்றன. சூரிய குடும்பத்திலிருந்து வரும் காந்த அலைகள், மனிதனின் உடலோடும் உயிரோடும் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளன. ஒன்பது கோள்களோடு நட்புறவு கொள்வதனால் உடலில் உள்ள சிற்றறைகளும் உறுப்புகளும் பலம் பெறுகின்றன. மேலும் மன அமைதி, மன மகிழ்ச்சி, மனவலம், தைரியம், உயர் நட்பு ஆகியன பெற, நவகிரக தவம் துணை புரிகிறது.
நவகிரகங்களின் உடல் தொடர்பு:
சூரியன் – எலும்பு
புதன் – தோல்
வெள்ளி – வித்து சக்தி
சந்திரன் – இரத்தம்
செவ்வாய் – மஜ்ஜை
வியாழன் – மூளைச்செல்
சனி – நரம்பு
இராகு,கேது – ஓஜஸ்
முடிவுரை:
எட்டு வித அங்கங்கள் கொண்ட அஷ்டாங்க யோகத்தால் மனித இனம் நன்மையே பெறுகின்றது. தவப் பயிற்சிகளை மேற்கொள்ள அமைதியான மனநிலை தேவைப்படுகின்றது. உள்ளதை உணர்ந்து, அல்லதை விடுத்து, நல்லதைச் செய்து வாழ, தவங்கள் மிகவும் துணைபுரிகின்றன. துன்பத்தில் உழலும் மக்கள் தவப்பயிற்சிகள் செய்வதால் அமைதி, பேரின்பம் பெற்று வாழ்க்கை பிரகாசமாகும்.
மேற்கோள் நூல்கள்:
1) உயிர் வளமும் மனவளமும்: யோகமும் மனிதமாண்பும், முதுகலைப்பட்டம் முதலாம் ஆண்டு, தாள் – 33, வேதாத்திரி உள்ளுணர்வுக் கல்வி நிலையம், ஆழியாறு 11ஆம் பதிப்பு, மே – 2018
2) மனவளக் கலை தொகுப்பு – 1, வேதாத்திரி மகரிஷி 30ஆம் பதிப்பு – சூன் – 2007
3) பகவத் கீதை, உண்மையுருவில், சுவாமி.பிரபுதாதர் இரண்டாம் வெளியீடு.
4) திருப்பாவை – திருவெம்பாவை – டி.ஜி.ராமையா, மாருதி வெளியீடு.
=========================================================================
ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
தவத்தால் வாழ்க்கை பிரகாசிக்கும் என்னும் கட்டுரை, தவத்தின் மேன்மையினையும் சிறப்பினையும் எடுத்துரைக்கின்றது. உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை ஒழுங்குபடுத்த, தவம் என்பது எவ்வாறு பயன்படுகிறது என்பதைச் சான்றுகளுடன் எடுத்துரைக்கிறது. கட்டுரையில் ஒரு தொடர்ச்சி இல்லை. ஆய்வின் முடிவுகளுக்கும் கட்டுரையின் கருத்துகளுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கவேண்டும். மேற்கோள்கள் பல ஆய்வுக் கட்டுரையில் இடம்பெற வேண்டும். கட்டுரை ஆய்வுக் கட்டுரையாக மாறவேண்டும் எனில் இவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
=========================================================================