மூல ஆசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
மலையாளத்திலிருந்து தமிழில்: முனைவர் நா.தீபா சரவணன்

ஆஃப்டர் கேர்ஹோமிற்கு முன்னால் உள்ள பைன் மரங்களுக்கிடையில் ரோஸியும் மாத்யூவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். டிசம்பர் மாதம். ஒரு மாலை நேரம் வெப்பமற்ற குறைந்த வெயில்.

மாத்யூ ரோஸியை பார்க்க வந்திருந்தான்.

ரோஸி ஆஃப்டர் கேர் ஹோமில் தங்கியிருந்தாள்.
அதற்கு முன்பு புவர்ஹோம் சொசைட்டி நடத்துகின்ற அனாதை இல்லத்திலிருந்தாள். பதினெட்டு வயதான பிறகு ஆஃப்டர்கேர் ஹோமிற்கு மாறிவிட்டாள். அவளைப் பார்க்கச் செல்லும் போதெல்லாம் அவளது மனதைத் தொடுமளவிற்கு ஏதாவது கூறவேண்டும் என்று மாத்யூ நினைப்பான். ஆனால் பேருந்தை விட்டிறங்கி பைன் மரங்கள் நிறைந்த நடைபாதையை அடைவதற்குள் அவன் நினைத்ததெல்லாம் மறந்திருப்பான்.

ரோஸியும் ஏதேதோ சொல்லவேண்டும் என நினைப்பாள். ஆனால் வார்த்தைகள் வெளியில் வராது.

வார்த்தைகள் பயன்படவில்லையெனில் தான் சொல்ல வந்த எண்ணங்களை கண்களால் வெளிப்படுத்த முடியும் என்ற எண்ணத்தில் அவள் மாத்யூவை உற்றுப்பார்த்தாள்.

ஆஃப்டர்கேர் ஹோமின் மேல்நிலையிலிருந்து ஜன்னலுக்கருகில் ஒன்றாக நின்று பலரும் அவர்களை கவனித்துக் கொண்டிருந்தனர். சிலர் அன்புடன், சிலர் ஆசையுடன்.

தாங்கள் கவனிக்கப்படுகிறோமென்று கட்டடங்களைப் பார்க்காமலேயே மாத்யூவுக்கும் ரோஸிக்கும் தெரிந்திருந்தது. அப்பார்வைகள் அவர்களைத் தொந்தரவு செய்யவில்லை. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றனர்.

ஒன்றும் பேசவில்லை. சொல்லப்போனால் பேசுவதற்கோ நிறைய இருந்தது.

ரோஸியின் கண்கள் திடீரென ஈரமாயின

மாத்யூ செய்வதறியாது அவளுடைய தோள்களில் கை அமர்த்தினான். அவளை சமாதானப்படுத்த என்ன சொல்வதென்று அறியாமல் அவன் தயங்கினான். கவலைப்படவேண்டாம் என்றும் எல்லாம் சரியாகிவிடும் என்றும் கூற அவன் விரும்பினான். அவர்களுக்கிடையில் பைன் மரங்களின் வழியே காற்று நுழைந்தது.

“அவங்க என்ன பேசியிருப்பாங்க?”

ஆஃப்டர்கேர் ஹோமின் மேல்நிலையில் இடப்புறத்தின் கடைசியில் ஜன்னலுக்கருகில் நிற்கின்ற ‘நோர்மா’ அருகில் நிற்கும் ப்ரஜித்தாம்மாவிடம் கேட்டாள்.

ப்ரஜித்தம்மாவோ கீழே இருக்கும் ரோஸியையும், அவளைப் பார்க்க வந்த மாத்யூவையும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ரெண்டு தேவதகளைப் பார்க்கற மாதிரி இருக்கு”.
அவள் திரும்பிப்பார்க்காமல் கூறினாள்.

பின்னாலொரு அறையிலிருந்து கிறிஸ்டீனா என்ற பெண் வயலின் வாசிக்கத் தொடங்கினாள். அறையில் கிறிஸ்டீனா தனியாக இருந்தாள். அவள் வயலின் வாசித்துக்கொண்டே அறையில் மெதுவாக நடந்தாள். ஜன்னலுக்கருகில் நின்று கொண்டிருந்த காத்ரின் பரிதாபத்தோடு அவளைப் பார்த்தாள். அவள் யாரையும் கவனிக்காமல் கண்களைப் பாதி மூடினாள். வயலினுடன் அறையில் நடந்தாள்.

பைன்மரங்களுக்கிடையில் மாத்யூவும், ரோஸியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆஃப்டர்கேர் ஹோமின் மேல்நிலையின் ஜன்னல்கள் வழி பலவிதமானப் பார்வைகள் அவர்களின் மேல் விழுந்து கொண்டிருந்தது.
—————————————————–

முனைவர்.நா.தீபா சரவணன்
உதவிப் பேராசிரியர்
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *