நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் -29
-நாங்குநேரி வாசஶ்ரீ
நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 29 – கள்ளாமை
குறள் 281:
எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு
அடுத்தவங்க எளக்காரமா பாக்கக்கூடாது னு நெனைக்கவன் மத்தவங்க பொருள மனசால கூட களவாங்க நெனைய கூடாது.
குறள் 282:
உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வே மெனல்
மத்தவம் பொருள அவனுக்குத் தெரியாம களவாங்கணும் னுமனசால நெனைக்குததே தப்புதான்.
குறள் 283:
களவினா லாகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும்
களவாங்கதுனால வர சொத்து அதிகமாகுதது போல தோணுச்சினாலும் பொறவு முன்ன அவங்கிட்ட இருந்ததயும் சேத்து அழிச்சுப்போடும்.
குறள் 284:
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்
அடுத்தவம் பொருள களவாங்குத ஆச களவாண்ட பொறவு அழியாத துன்பத்த கொடுக்கும்.
குறள் 285:
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்
மத்தவன் எப்ப அசருவான் களவாங்கலாம்னு நேரம் பாத்து இருக்கவன் கிட்ட அருள் கருதி நேசமா நடக்குத கொணம் இருக்காது.
குறள் 286:
அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்
சிக்கனத்த கடபிடிச்சி வாழ்க்க வாழாதவங்கதான் அடுத்தவம் பொருள களவாண்டு வர ஆசப் படுவாங்க.
குறள் 287:
களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்க ணில்
அளவறிஞ்சு வாழ்க்க நடத்துதவங்ககிட்ட அடுத்தவம் பொருள களவாங்குதது ங்குத கெட்ட புத்தி கெடையாது.
குறள் 288:
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சில் கரவு
அளவறிஞ்சு வாழுதவங்க மனசுக்குள்ள அறம் நிக்குதது போல களவாண்டு பழக்கப்பட்டவன் மனசுக்குள்ள வஞ்சம் நிக்கும்.
குறள் 289:
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்
அடுத்தவம் பொருள களவாங்குதது தவித்து வேற ஒண்ணும் தெரியாதவங்க ஆக்கங்கெட்ட செயல செஞ்சு அப்பமே கெட்டழிஞ்சு போவாங்க.
குறள் 290:
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு
களவாங்குதவங்கள அவங்க உசிரே வெறுத்துபோயிடும். களவாங்காம இருக்கவங்கள தேவர் ஒலகமும் வெறுக்காது.