FeaturedPeer Reviewedஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்கட்டுரைகள்

(Peer Reviewed) கம்பராமாயணம் மிதிலைக் காட்சிப் படலத்தில் அகத்திணை மரபும் மாற்றமும்

முனைவர் ஹெப்ஸி ரோஸ் மேரி.அ
உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை,
கேரளப் பல்கலைக்கழகம்,
திருவனந்தபுரம்

கம்பராமாயணம் மிதிலைக் காட்சிப் படலத்தில் அகத்திணை மரபும் மாற்றமும்

கம்பர் முத்தமிழ்த் துறை வித்தகர், உத்தமக் கவிஞர்.  அவர் இயற்றிய இராமாயணம், வால்மீகி ராமாயணத்தைத் தழுவி எழுதியதாக இருப்பினும் அதில் தமிழர் மரபும் பண்பாடும் காப்பியம் முழுமையும் விரவிக் கிடப்பதைக் காணலாம். கம்பர், வால்மீகி ராமயணத்தினின்று மாறுபட்டு படைத்துக் கொண்டுள்ள சிறந்த பகுதியாகக் கருதப்படுவது இராமனும் சீதையும் மணந்து கொண்ட வரலாறாகும். சங்க இலக்கிய மரபில் வந்த புலவரான கம்பர், இப்பகுதியைத் தமிழ் அகப்பொருள் மரபைத் தழுவி புதுமையாகப் படைத்துக் கொள்கிறார். தொல்காப்பியரது அகத்திணை மரபுகள்,  கம்பராமாயணத்தில் பயின்று வருமாற்றையும் அவற்றினின்று விலகி வருவனவற்றையும் இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

அவத்தைகள்

“கலந்த பொழுதும் காட்சியும் அன்ன (தொல்.பொரு18)”

என்ற நூற்பா உரையில் இளம்பூரணர் கலந்த பொழுது என்பது தலைமகளைக் கண்ணுற்றவழி மன நிகழ்ச்சி உளதாங்காலம்: அக்காட்சி, பின்னர்க் குறிப்பறியும் துணையும் நிகழும் நிகழ்ச்சி. காட்சியாவது தலைவியை எதிர்படுதல். குறிப்பறிந்த பின்னர்ப் புணருந்துணையும் நிகழும் முன்னிலை யாக்கல் முதலாயின புணர்தல் நிமித்தம். இவை அந்நிகரனவன்றி பொதுப்பட நிற்றலின் வேறு ஓதப்பட்டன. அன்ன என்பது (இவையும்) ஓர் இடத்து நிகழும் உரிப்பொருள் என்றவாறு. ஓரிடமாவது கைக்கிளை. அதாவது காட்சி முதலிய நான்கும் கைக்கிளையாமன்றிப் புணர்தல் நிமித்தமாகா என்பதற்கு இதனால் விளக்கம் தந்துள்ளார். ஏனைய தொல்காப்பிய உரையாசிரியர்கள் குறிப்பிடாத ஒன்று. ஏனையோர் இதனை உரிப்பொருள் மயக்கம் என்று கூறுகின்றனர். இளம்பூரணர் காட்சி ஐயம் துணிவு குறிப்பறிதல் ஆகிய நான்கும் இயற்கைப் புணர்ச்சிக்கு நிமித்தம் எனவும் இவை கைக்கிளையாம் எனவும் கூறுவார். ஆராயின் இது கைக்கிளையின் பாற்படும்.

தொல்காப்பியரது கருத்துப்படி இயற்கைப்புணற்சிக்கு முன்பு தலைவன் தலைவியர்
ஒருவரையொருவர் கண்டு காதல் கொள்ளும் நிகழ்ச்சி உண்டு என்பதை உணரலாம்.
அத்தகைய காட்சியைக் கம்பரும் ராமாயணத்தில் காட்டுகிறார். விசுவாமித்திரர், இராம இலக்குவர் இம்மூவரும் மிதிலை மாநகரின் காட்சிகளைக் கண்டுகொண்டே செல்கின்றனர். இவர்கள் கண்ட காட்சிகளை ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஆடலரங்கு கண்டார், உலாவக் கண்டார், உதயங்கண்டார், எனப் பாடியுள்ளார். அவ்வாறு பல காட்சிகளைக் கண்டவர்கள், சீதையைக் கண்டதும்,

”கன்னிம் மாடத் தும்பரின் மாடே களிபேடோ
டன்னம் மாடு முன்னுறை கண்டங் கயனின்றார். (மிதிலை. கா.ப 23)”

என்று குறிப்பிடுகிறார்.

அதாவது பொன்னினது ஒளியும், வண்டுகள் உண்ணும் தேனினது இனிய சுவையும் திருத்தமான சொற்களாலமைந்த பாட்டினது இன்பமும் ஆகியவை அனைத்தும் ஓர் உருக்கொண்டு விளங்குவது போல சீதையைக் கண்டு பிரமித்து அவளைக் கண்ட இடத்திலேயே நின்றனர். அங்கே சீதையை இராமன் கண்ட காட்சியை,

”எண்ணரு நலத்தினாளினைய நின்றுழிக்
கண்ணொடு கண்ணிணை கெளவி ஒன்றையொன்று
உண்ணவு நிலைபெறா துணர்வும் ஒன்றிட
அண்ணலு நோக்கினான் அவளும் நோக்கினாள்” (மி.கா.ப. 35)

ஒருவர் பார்வையோடு ஒருவர் பார்வை ஒன்றையொன்று பற்றி விழுங்கினது போல இருவர் உணர்வுகளிலும் தத்தம் இடத்து நிலைபெறாமல் ஒன்றையொன்று நாடி ஒன்றாய்க் கூடிக் கலக்கும் காதற் பார்வையாக இராமனும் சீதையும் கண்டனர். இருவருடைய உள்ளங்களும் ஒன்று கலந்தன. (மி.கா.ப.100) என்று இராமன் சீதை களவுக் காதலைப் பாடுகின்றார் கம்பர்.

அவர்களது உள்ளப் புணர்ச்சியை எடுத்துரைக்கிறார்.

காட்சி முதல் இயற்கைப் புணர்ச்சி நிகழும் காலம் வரையுள்ள இடைப்பட
நிலையிலுள்ள மன நெகிழ்ச்சியைத் தொல்காப்பியர்,

வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்
ஆக்கஞ் செப்பல் நாணுவரை இறத்தல்
னோக்குவ எல்லாம் அவையே போறல்
மறத்தல் மயக்கஞ் சாக்காடு என்றிச்
சிறப்புடை மரபினவை களவென மொழிப (தொல்.பொரு 97)

என்கிறார்.

வேட்கை- பெறல் வேண்டும் என்ற உள் நிகழ்ச்சி, ஒருதலை உள்ளுதல் – இடைவிடாது
நினைத்தல், மெலிதல்- உண்ணாமையால் உடல் இளைத்தல், ஆக்கம் செப்பல்- உறங்காமை போன்ற நிலையை வர்ணித்தல், நாணும் வரை இறத்தல் –நாணம் நீங்குதல், நோக்குவ எல்லாம் அவையே போறல்- தன்னால் காணப்பட்டதெல்லாம் தான் கண்ட உறுப்புப் போலத் தோன்றுதல், மறத்தல்- தினசரி மறவி – பித்தாதல், மயக்கம்—மோகித்தல் வெறித்தனமாக நினைத்து மயங்குதல், சாக்காடு- மரணம் – சாதல். இவையெல்லம் களவுகாலத்து நிகழ்பவை. இவற்றைக் கைக்கிளை பாற்படும் என்று உரைக்கிறார். இதற்கு இளம்பூரணர் அவத்தைகள் என்று விளக்கம் தருகிறார்.

கைக்கிளை என்பது ஒருதலைக் காமம். ஒருவரது காதலை எடுத்துக் கூறும் வரையுள்ள மன நிலையையும் ஒருதலைக் காமமாகக் கொள்ளலாம். இராமன் – சீதை இருவரிடையே நிகழும் களவின்போது தொல்காப்பியர் கூறிய பத்து அவத்தைகளுள் பல நிகழ்வதைக் காணலாம். பின்வரும் பகுதி, அவற்றை எடுத்துரைக்கிறது.

காட்சிக்குப் பின் ஐயம் நிகழும் (தலைவியைக் கண்டதும் ஐயம் ஏற்படும்). இதனை விளக்குவதற்குத் திருக்குறளை எடுத்துக் காட்டியுள்ளனர், தொல்காப்பிய உரையாசிரியர்கள்.

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கிம் மூன்று முடைத்து                       (குறள்-1085)

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு                 (குறள்-1081)

இவ்வாறு ஐயம் கொள்ளும் காட்சி, கம்பராமாயணத்திலும் பயின்று வந்துள்ளது. இராமன், சீதையைக் கண்டு துயில் கொள்ளாது மாடத்தில் வைத்து புலம்பும் பகுதி இதனைத் தெளிவு செய்கிறது.

விண்ணி நீங்கிய மின்னுரு விம்முறை
பெண்ணின் அன்னலம் பெற்றதுண்டோ? (மி. கா.ப. 58)

கை கால் முதலிய அவயவப் பகுப்பில்லாத மின்னுருவம் கண நேரத்தில் மறைந்து ஒழிவதல்லது நிலையானதாய் இவ்வாறு அவயவப் பகுப்புடைய பெண் போலச் சிறந்த அழகு பெற்றதுண்டோ? நான் காண்கின்ற இவ்வுரு மின்னுருவோ அல்லது பெண்ணுருவோ? என்று ஐயம் கொள்கின்றான். ’இவ்வாறு நிகழும் ஐயம் தலைமகன் மாட்டுதான் நிகழும், தலைமகள் மாட்டு நிகழாது. தலைமகள் ஐயப்படாது ஏனெனில், அவள் ஐயப்படுங்கால் தெய்வமோ என்று ஐயுறல் வேண்டும். அவ்வாறு ஐயுற்றால் அச்சம் வரும். அஃது ஏதுவாகக் காம நிகழ்ச்சி உண்டாகாது என்று இளம்பூரணர் குறிப்பிடுகிறார்.”

ஆனால், இதற்கு மாறாக, கம்பராமாயணத்தில் சீதையும் ஐயப்படுதல் காணப்படுகிறது. இராமனைக் கண்ட சீதை, காமம் ஆற்றப்பெறாளாய் ,

பொருப்புறழ் தோள்புணர் புண்ணி யத்தது
கருப்புவில் லன்றவன் காம நல்லனே (மி.கா.ப. 54)

என் நெஞ்சினுள் பிரவேசித்து நிறையையும் பெண் தன்மையையும் நெகிழச் செய்து அவற்றை என் உயிரோடு கவர்ந்து கொண்டு போனவனுடைய மலை போன்ற தோள்களைச் சேரும் பாக்கியத்தைப் பெற்று விளங்கும் வில் கரும்பு வில்லன்று ஆதலால் அவன் காமன் அல்லன் என்று கூறுவதிலிருந்து சீதை இராமனைக் காமன் என ஐயுற்று அவது வில்லைவைத்து காமனல்லன் எனத் தெளிவுறுகிறாள். இங்கு கம்பர், தொல்காப்பிய மரபிலிருந்து விலகிச் செல்வதையும் காணலாம்.

வேட்கை

பத்து அவத்தைகளுள் ஒன்று, வேட்கை. பெறல் வேண்டு என்ற உள்ள நிகழ்ச்சி. கம்பராமாயணத்தில் இருவருக்கும் இவ்வேட்கை உணர்வு மேலிட்டதைக் கம்பர்
எடுத்துரைத்துள்ளார். சீதையும் இராமனும் ஒருவரையொருவர் கண்டு காதல் கொண்ட பின்பு, ஒருவரையொருவர் நினைத்துப் புலம்பும் காட்சிகள் அனைத்து வேட்கையின்பாற்படும். சீதை இராமனை நினைத்து வெதும்புகிறாள் நிலவின் கதிர்கள் அவள்மேல் விழுந்ததால் தளர்வடைந்து சோர்ந்தாள், தோழியர் சந்தனக் குழம்பை அள்ளிப் பூசப் பூச உலர்ந்தது. மற்ற நோய்க்கு மருந்திருத்தல் போல ஆசை நோய்க்கு மருந்துண்டோ என்று ஆசிரியர் கேட்கிறார்.

இராமனும் சீதை தன் உள்ளத் தாமரையில் வீற்றிருப்பதாகக் கூறுகிறான் . இவை
தொல்காப்பியர் கூறிய வேட்கையாகும்.

ஒருதலையுள்ளுதல்

ஒருதலையுள்ளுதல் என்பது இடைவிடாது நினைத்தல். மாலைப் பொழுது வந்ததும்
சீதை,

பெண்வழி நலனோடும் பிறந்த நாணோடும்
எண்வழி உணர்வு நானெங்கும் காண்கிலேன் (மி.கா.ப. 55)

பெண் நலங்களையும் அவற்றுள் தோன்றிய நாணத்தையும் அறிவையும் என் அகத்தே தேடியும் காண்கிலேன், இராமன் அவற்றைக் களவாடியதாகக் கூறுகிறாள். இந்திர நீலத்தை ஒத்த நிறமும், தாழ்ந்த கைகளும், பூரண சந்திரனையொத்த முகமும் நீல மலையொத்த தோள்களும் சீதையின் உயிரை உண்டதாகக் குறிப்பிடுகிறார். மாரழகினும் தாளழகினும் அதிகமாக நடையழகு மனதில் நிலைத்திருப்பதாகக் கூறுகிறார். இவ்வரிகளிலிருந்து சீதை, ராமனை இடைவிடாது நினைத்தலை உணரலாம்.

மெலிதல்

மெலிதல் என்பது காம நோய் காரணமாக உண்ணாமையால் உடல் நலிதலாகும்.

மாலுற வருதலு மனமு மெய்யுந்தான்
நூலுறு மருங்குல் போனுடங்கு வாணெடுங்
காலுறு கண்வழி புகுந்த காத நோய்            (மி.கா.ப. 41)

இராமன் மீது கொண்ட காதலால் மனமும் தேகமும் இடைபோல மெலிவுற்றது என்று
கூறுகிறார்.

ஆக்கஞ் செப்பல்

ஆக்கஞ் செப்பலுக்கு இளம்பூரணர் உறங்காமையும் உறுவது ஓதல் முதலாயின என்று உரையெழுதுகிறார். சீதை இராமன் காதலிலும் இத்தகைய அவத்தை பயின்று வந்துள்ளது. சீதை மாலைப் பொழுதையும் சந்திரனையும் பழிக்கும் காட்சிகள் அனைத்தும் இதன்பாற்படும். இராமனும் தூக்கம் வராமல் உலாவும் காட்சியை வர்ணிக்கிறார்.

நோக்குவயெல்லாம் அவையே போறல்

தன்னால் காணப்பட்ட அனைத்தும் தான் நினைத்ததாகவே தோன்றுதல். இக்காட்சியும் முழுமையாக இராமாயணத்தில் காணக் கிடைக்கின்றது.

ஆல முலகிற் பரந்ததோ வாழி கிளர்ந்த தேவர்தன்
நீல நிறத்தை யெல்லாரு நினைக்க வதுவாய் நிரம்பியதோ (மி.கா.ப.67)

இரவு வந்ததும் அவ்விரவு நீல நிறம் போன்று எங்கும் காட்சியளிக்கிறது. ஆலம் உலகத்தில் பரவியதோ. சமுத்திரம் மேலோங்கி எங்கும் பெருகியதோ அவர் நீல நிறத்தை நினைக்க அதுவாய் பரவியதோ என்றும் கூறும் பகுதியிலிருந்து சீதை காணும் காட்சியனைத்தும் இராமனாகவே தோன்றுவதாகக் குறிப்பிடுகிறார். இராமனும்

தெருளிலாவுலகிற் சென்று நின்றுவாழ்
பொருளெலாமவள் பொன்னுரு வானவே ( மி.கா.ப. 123)

என்னும் வரிகளில் உலகில் காணும் அனைத்து பொருட்களிலும் சீதையது அழகிய வடிவம் காட்சியளிப்பதாக இராமன் கூறுகிறார்.

கம்பர், வால்மீகியைத் தழுவி ராமாயணத்தை அமைத்தாலும் தமிழ் மரபிற்கேற்பவே
இதனை அமைத்துள்ளார். தொல்காப்பியர் களவுக்கு ஆமென்று வகுத்த பத்து அவத்தைகளுள் பெரும்பான்மையானவை சீதாராமன் களவிலும் பயின்று வந்து சிறப்பித்துள்ளன என்றும் சில இடங்களில் விலகியும் சென்றுள்ளன என்பதை இதினின்று அறிந்துகொள்ளலாம்.

பயன்பட்ட நூல்கள்

 • கம்பராமாயணம் பாலகாண்டம், இராவ் சாகிப், வெ.ப.சு. நூல் நிலையம், மதுரை,1995
 • தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணர் உரை, திருவரங்கம் அச்சகம், சென்னை,1974
 • தொல்காப்பியத்தில் மணமுறைகள், செல்வராசு.சிலம்பு. நா , காவ்யா, சென்னை,2010
 • காப்பிய நோக்கில் கம்பராமாயணம், பாண்டுரங்கன்.அ, நியூ செஞ்சுவரி புக் ஹவுஸ், சென்னை

படத்திற்கு நன்றி: விக்கிப்பீடியா

================================================================

ஆய்வறிஞர் கருத்துரை (Peer review):

ஆய்வாளர், கம்பராமாயணத்தின் பால காண்டத்தில், மிதிலைக் காட்சிப் படலத்தில்  காணப்படும் அகத்திணை மரபுக் கூறுகளை ஆய்ந்து அவற்றை அம் மரபுக்கு இயைய பொருத்திக் காட்டியிருக்கிறார். கட்டுரை சிறப்பாக அமைந்திருக்கிறது. எடுத்துக்கொண்ட தலைப்புக்கிணங்க, பால காண்ட நிகழ்வுகளை வைத்து ஆய்ந்திருக்கிறார். சுந்தர காண்டம் காட்சிப் படலத்திலும் இந்தக் கூறுகள் காணக் கிடைக்கின்றன. ஆய்வாளர், பால காண்டத்தோடு நிறுத்திக்கொண்டிருக்கிறார் எனினும் சிறப்பாகச் செய்திருக்கிறார். கட்டுரையின் நடை, கடுமையாக இருக்கிறது. இன்னும் எளிமையாக எழுதுவது, வாசகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும்.

================================================================

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (1)

 1. Avatar

  எனது கட்டுரையைப் பொருத்தமான படங்களுடம் வெளியிட்டமைக்கு நன்றி. எனது நடை கடினமாக உள்ளதாகக் கூறினீர்கள். வரும் கட்டுரைகளில் நடையை எளிமைப்படுத்த முயல்கிறேன்.
  நன்றியுடன்
  ஹெப்சி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க