திவாகர்
தை மாதம் வந்தாயிற்று.. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஏனெனில் தைமாதம் புதுநெல் அறுவடையில் கிடைக்கும் உழவர் பெருமக்கள் யாவரும் புதுநெல்லைத் தந்து ஆண்டு முழுவதற்குமான தங்கள் வயிற்றுச் சோறைப் பெறும் மாதம். உழவர்கள் மனதில் மகிழ்ச்சி பொங்க, அந்தப் பொங்கும் மகிழ்ச்சியை மங்கலமாகக் கொண்டாட வழி வகுத்த மாதம். தாம் மட்டுமல்லாமல் தம்மால் ஆதரிக்கப்பட்டுவரும் கால்நடைகளையும் சிங்காரித்து அழகுபார்த்து ஆராதனை செய்து சந்தோஷத்தை அனைத்து ஜீவராசிகளுக்கும் பகிரும் மாதம். உழவர்களின் பொன்னான மாதம்.
இப்படித்தான் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இந்த இருபது-இருபத்தொன்றாம் நூற்றாண்டில் வந்த பசுமைப் புரட்சி உலகின் வயல் வளத்தையே புரட்டிப் போட்டு விட்டது. இயற்கையாகவே வரவேண்டிய தானிய உணவுகள், காலம் பார்த்துக் கிடைக்கவேண்டி பயிரிட வேண்டிய உணவுப் பயிர்கள் பெருகி வரும் மக்கள் பெருக்கத்தைக் கணக்கில் கொண்டும் வளர்ந்து வரும் நாகரீக உலகின் வசதிக்கேற்பவும், சுலபமாகவும் அதே சமயத்தில் மிக அதிக அளவில் உற்பத்திப் பெருக்கத்தையும் ரசாயனப் பொருட்கள் உதவியின் மூலம் பெற்றுக்கொண்டு வருவதை உலகெங்கும் கண்டு வருகிறோம். நிச்சயமாக உழவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு கொண்ட நாடாக நம் நாட்டை அறிவித்துக் கொள்ளலாம். மகிழ்ச்சியான விஷயம்தானே.. ஆனால் அப்படி இல்லைதான். உற்பத்தி அதிகமானாலும் உழவர்களுக்கு உற்பத்திக்கான செலவு வகைகள் அதிகரித்துள்ள காரணத்தினால் உழவர் சமுதாயம் மிகவும் துன்பத்தில் ஆழ்த்தப்படுகின்ற காலங்கள் இவை.
இதைப் பற்றி நிறைய எழுதலாம். உற்பத்திச் செலவை சமாளிக்க முடியாமல் கடன் வாங்கி, கடனைத் திருப்பமுடியாமல் உழவர்கள் நாடெங்கும் தற்கொலை செய்துகொள்வதைக் கேட்டுக் கண்ணீர் வடிக்காமல் இருக்கமுடியாது. இத் தருணத்தில் உழவர்களைப் போற்றுவோம் என்று நமக்கு உறுதியாகச் சொன்னதோடு மட்டுமல்லாமல் உழவர்களைப் போற்றும் குறட்பாக்களை எழுதி பொருளையும் அழகாக விவரித்துப் பதிவிட்ட திண்டுக்கல் தனபாலன் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். இதோ அவரது பதிவின் சுட்டி.
http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-2.html.
படித்துப் பாருங்கள். உழவின் அருமை புரியும். ஆதிகாலத்திலேயே சொல்லப்பட்ட கருத்துகள் இன்றும் பொருந்தும் வகையில் இருப்பதற்காக ஒரு பெருமையும், அதே சமயத்தில் இந்த உழவர் பெருமக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நாமும் உதவி செய்து கை கொடுக்கவேண்டிய உந்துதலும் கிடைக்கும்
திரு தனபாலன் உழவர்களுக்கு மட்டும் தோழரல்ல. அவர் எல்லாப் பதிவர்களுக்கும் தோழர். எங்கெங்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைத் தானே வலிய வந்து உதவும் பண்பாளரான திரு தனபாலன் அவர்களை இந்தத் தைமாதத்து வாரத்தில் வல்லமையாளராக வந்தமைக்கு வாழ்த்துகள்.
கடைசி பாரா: திருமதி காயத்ரி பாலசுப்ரமணியம்:
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அதிக பணம் தருவதைக் குறைத்துக் கொண்டால், அவர்கள் வழி தவறாமல் இருப்பார்கள். மாணவர்கள் உங்கள் சக்தியை அதிகரிக்க சத்தான உணவு வகைகளை உண்டு வாருங்கள். சோர்வின்றி கல்வி பயில முடியும். பணியில் இருக்கும் பெண்கள் குடும்ப விஷயங்களை வெளிப்படையாக பேசாமலிருந்தால், பிரச்னைகள் மேலும் பெரிதாகாமலிருக்கும்.
