Tag: முனைவர் கல்பனா சேக்கிழார்

  • திருக்குறள் பரிதியார் உரை

    முனைவர் சே.கல்பனா

    உதவிப்பேராசிரியர்

    தமிழியல்துறை

    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

     தமிழ் சூழலில் இடையறவு படாமல் வாசிக்கப்பட்டு, ஆய்வுகள் செய்யப்பட்ட/ செய்யப்படும் பிரதியாக விளங்குவது திருக்குறள். இடைக்காலமாகிய 9 ஆம் நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை தமிழ்ப் பனுவல்களுக்கு உரைகள் பல தோன்றின. இடைக்காலத்தை உரையெனும் கயிற்றால் பிணிக்கப்பட்ட காலம் என்பர் வ.சுப. மாணிக்கனார். திருக்குறளுக்கு எழுந்த முதலுரை/கிடைத்த உரை மணக்குடவர் உரை. இருப்பினும் பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டுகளில் பல பதிப்புகளைக் கண்டதும் மிகுதியாக வாசிக்கப்பட்டதும், உரைக்கே பல உரை தோன்றியதும் பரிமேலழகர் உரை. பரிமேலழகருக்கு முந்தைய உரையாளர்கள் ஒவ்வொரு அதிகாரத்துள்ளும் குறள் வைப்புமுறையைத் தங்கள் வாசிப்புக்குத் தக மாற்றி வாசித்திருந்தாலும் இன்று நாம் பரிமேலழகர் குறள் வைப்பு முறையினையே பின்பற்றுகின்றோம்.

    ஆய்வுலகில் புதிய புதிய முறைமைகளைப் பயன்படுத்தும் இற்றை நாட்களில் பழம் பிரதிகளை மறு வாசிப்பிற்கு உட்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அந்நிலையில் பரிமேலழகருக்கு முன் திருக்குறளுக்கு உரையெழுதிய பரிதியாரைப் பற்றிய உரையாடல் அவசியமாகின்றது.

    பரிதியின் உரையில் இலக்கணச் செறிவோ, இலக்கிய நுட்பமோ இருப்பதைப் பார்க்க முடியாது. ஆனாலும் இவர் உரையினை வாசிக்கப் புகும் வாசகன் அவ்வுரையில் ஒரு எளிமைத் தன்மை இருப்பதை உணரலாம். பரிதியார் வைதீகப் பின்னணியில் சைவ சமயம் சார்ந்த கருத்தாடலைக் குறள் விளக்கத்திற்குப் பயன்படுத்துகின்றார். இவரது உரை பொழிப்புரை போன்றோ விளக்கவுரை போன்றோ அமையாமல் குறள் கருத்தினையறிந்து கொண்டு தம் விருப்பத்திற்கேற்ப, மிகுத்தும் குறைத்தும் பொருள் கூறுகின்றார். மேலும் சில குறள்களுக்கு விளக்கம் தரும்போது ஒற்றை வரியிலும், சில குறள்களுக்குப் புராணக் கதைகளை மேற்கோளாகவும், பிரசங்கம் போலவும், காணப்படுகிறது. சில இடங்களில் குறளுக்கும் பொருளுக்கும் தொடர்பு இல்லாத நிலையிலும் உள்ளது. வடசொற்களும், வழக்குச் சொற்களும் மிகுந்து காணப்படுகின்றன. குறளையும் இவரது உரையையும் ஒற்றுமைப்படுத்தி அறிந்து கொள்ளுதல் ஒரு கயிற்றலாகிய பாலத்தில் காவிரியைக் கடக்க நினைத்தலை ஒக்கும் என்பர் ச.தண்டபாணி தேசிகர். இவரது உரையில் பாலின் தொடக்கத்தில் விளக்கவுரையோ, இயல் பிரிப்புப் பற்றிய ஆராய்ச்சியோ இல்லை. அதிகார முறை வைப்பைத் தொடர்ப்புபடுத்திக் காட்டல், ஒரே அதிகாரத்திற்குள் குறட்பாக்களைப் பொருள் நோக்கிப் பிரித்து அமைத்தல் ஆகிய முறைகளும் இல்லை.

    பெயர் விளக்கம்

    பருதியார், பரிதியார் என இவர் அழைக்கப்பெறுகின்றார். பரிதி பருதி இரண்டுமே வட்டதைக் குறித்து ஞாயிற்றைக் குறிக்கும் பெயர்கள். பரிதியார் என்னும் பெயர் பாடலின் எதுகை நோக்கி பருதியார் என வழங்கப்பட்டது எனலாம்.

    பரிதியார் என்னும் பெயரினைக் கொண்டு இவர் ஊர் தஞ்சைக்கு அருகில் உள்ள திருப்பரிதி நியமமாகயிருக்கலாம் என மு.வை. அரவிந்தன் கருதுகின்றார். இக்கோயில் பாடல் பெற்ற தலமாக அமைந்துள்ளது. திருஞான சம்பந்தர் தேவாரப் பாடலில் இவ்வூரைப் பண்கொண்ட வண்டினம் பாடியாடும் பரிதி நியமம் எனக் குறிப்பிடுகின்றார்.

    பரிதியார் உரை – பதிப்பு

    1812 – இல் திருக்குறள் மூலநூல் அச்சேற்றப்படுகின்றது. அதன் பிறகு பரிமேலழகர் உரையுடன் பலமுறை அச்சேற்றப்பட்டது. பரிதியின் உரை 1935- இல் பதிப்பிக்கப்பட்டதாக ச.தண்டபாணி தேசிகரும் 1938- இல் பதிப்பிக்கப்பட்டதாக ச.மெய்ப்பன் வள்ளுவம் இதழிலும் குறிப்பிடுகின்றனர். பதிப்பித்தவர் துடிசைகிழார் என்னும் குறிப்பும் காணப்பெறுகிறது. பதிப்பினைத் துடிசைகிழார் கிருஷ்ண விலாச பிரஸ், கோயம்புத்தூரில் பதிப்பித்துள்ளார். இப்பதிப்பு மறைமலையடிகள் நூலகத்தில் 14 அதிகாரத்துக்கு மட்டும் கிடைத்துள்ளது. இப் பதிப்பில் பரிதியாரின் குறள் வைப்பினைப் பின்பற்றி, மணக்குடவர், பரிமேலழகர் வைப்பு முறைகளின் எண்ணைக் குறிப்பிட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதன் முகப்புப் பக்கத்தில் திருக்குறள் – பரிதியுரை By துடியைகிழார் என்றும் கிருஷ்ண விலாசபிரஸ், கோயம்புத்தூர் என்ற குறிப்பு மட்டும் காணப்படுகின்றது. ஆண்டு பற்றிய எந்த குறிப்பும் குறிப்பிடப்படவில்லை.

    இதன் பிறகு பரிதியார் உரை தனித்துப் பதிப்பிக்கப்பட்டாதாகத் தெரியவில்லை. 1951- இல் திருக்குறள் பழைய உரைகள் தொகுப்புகளாகத் தொகுக்கப்பட்ட போது பரிதியின் உரையும் தொகுக்கப்பட்டுள்ளது.

    ச.தண்பாணி தேசிகர் 1951 – இல் தொகுத்த திருக்குறள் உரைவளம் பதிப்பு முன்னுரையில்,

    இப்பதிப்பு வெளிவர ஒப்புநோக்கக் கிடைத்த ஏடுகள் பல செய்யாமற் செய்த உதவியையுடைய ஏடு தேடித் தந்த இன்றமிழ்ப் பெருமக்களை மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன்.

    1. வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் பரிதியுரை 1
    2. வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் காலிங்கர் உரை 1
    3. இலக்கண விளக்கம் சோமசுந்தர தேசிகர் வீட்டுப் பிரதி பழைய உரை 1
    4. தரும்புர ஆதீனத்துப் புத்தகசாலைப் பிரதி, பரிமேலழகர் உரை

    இங்ஙனம் ஏடுகள் அளித்துத் தமிழாக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் அடியேன் செய்யும் கைமாறு யாதுளது என்று குறிப்பிடுகின்றார்.

    இதனைத் தொடர்ந்து 1963 – இல் கோவை இராம கிருஷ்ணா மடம் வெளியிட்ட திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு என்னும் தொகுப்பிலும், 1969 – இல் திருப்பனந்தாள் காசிமடம் வெளியிட்டுள்ள திருக்குறள் உரைக்கொத்திலும் பரிதியின் உரை தொகுத்து பதிப்பிக்கப் பட்டுள்ளது. ச. தண்டபானி தேசிகர் 1981 – இல் மீண்டும் மதுரைப் பதிப்பகத்தின் வழி திருக்குறள் உரைக் களஞ்சியம் என்னும் தொகுப்பினைக் கொண்டு வந்துள்ளார்.

    காலம்

    பரிதியாரின் காலத்தைச் சில அகப் புறச் சான்றுகளின் வழி அறியலாம். கி.பி. 13 – ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த விசய கண்ட கோபாலன் என்னும் தெலுங்கு சோழனின் 22 – ஆம் ஆட்சியாண்டில் கி.பி (1271) கிடைத்த கல்வெட்டு ஒன்று வண் துவரப் பெருமாளான பரிமேலழகிய பெருமாள் தாதன் என்னும் பெயரைக் குறிப்பிடுகின்றது. இப்பெயர் பரிமேலழகரையே குறிக்கிறது என்பர். பெருந்தொகைப் பாடல் ஒன்று,

    செவ்வி முப்பாலுக்கு

    ஒர்உரை யின்றி ஒன்பது சென்றும்

    ஐயுற வாக நையுறு காலை

    குறட்பாத் தமிழ்மனு நூலிற்கு

    விழுபொருள் தோன்ற விரித்தினிது உரைத்தனன்

    பரிமேலழகன் எனப் பெயர் படைத்துத்

    தரைமேல் உதித்த தலைமை யோனே

    எனக் குறிப்பிடுவதால், பரிமேலழகருக்கு முன் ஒன்பது உரையாசிரியர்கள் இருந்துள்ளனர் என்பதும் அவர்களுள் பரிதியாரும் ஒருவர் என்பதும் தெளிவாகின்றது. அத்துடன் தனிப்பாடலும் பரிமேலழகருக்கு முன் பரிதியாரைக் குறிப்பிடுகின்றது. மேலும்,

    இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்

    குலனுடையான் கண்ணே உள (223)

    என்ற குறளுக்கு யான் வறியவன் என்று இரப்பான் சொல்லும் இளிவரவைத் தான் பிறர்கண் சொல்லாமையும், அதனைத் தன்கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும், இவை இரண்டும் உளவாவன குடிப்பிறந்தான் கண்ணே என்று விளக்கம் கூறிய பின்னர், பரிமேலழகர் இனி இலனென்னும் எவ்வம் உரையாமை என்பதற்கு அவ்விளிவரவை ஒருவன் தனக்குச் சொல்வதற்கு முன்னே அவன் குறிப்பறிந்து கொடுத்தல் எனவும், அதனைப் பின்னும் பிறனொருவன்பால் சென்று அவன் உரையா வகையில் கொடுத்தல் எனவும் உரைப்பார் உளர் என மணக்குடவர் மற்றும் பரிதியின் உரைகளை எடுத்துக்காட்டுவர். அதே போல்

    நகையும் உவகையும் கொல்லும் சினத்திற்

    பகையும் உளவோ பிற (304)

    என்னும் குறளுக்கு முகத்தில் சிரிப்பும் மனத்தில் களிப்பும் கொல்லுகின்ற சினத்திலும் எனப் பரிதியார் உரையைப் பின்பற்றி பரிமேலழகர் முகத்தின்கண் நகையும், மனத்தின்கண் உவகையும் கொன்று கொண்டு எழுகின்ற சினம் என உரைக்கின்றார்.

    பரிதியார் அவருக்கு முன் வாழ்ந்த காலிங்கரின் உரையைச் சில குறளில் அப்படியே எடுத்து ஆண்டுள்ளார். ஒழுக்காறாக் கொள்க(616), கொடுப்பது அழுக்கறுப்பான்(163), அவ்வித்து அழுக்காறு(167),பல்லார் முனிய(191),நயனிலன்(193) நயன்சாரா(194) அதேபோல குறள் வைப்பு முறையிலும் காலிங்கரும் பரிதியும் பெரிதும் ஒத்துக்காணப்படுகின்றனர்.

    புறப்பொருள் வெண்பா மாலையில் குறிப்பிடப்படும் எண்வகை மாலையினையும், ஆண்டாள் குறிப்பிடும் மார்கழி நீராடலையும் பரிதியார் தமது உரையினில் குறிப்பிடுவதால் அவர்களுக்குப் பின் வாழ்ந்தவர் என அறியமுடிகின்றது

    பரிமேலழகருக்கு முன் ஒன்பது உரையாசிரியர்கள் இருந்துள்ளனர் என்பதும், பரிமேலழர் உரையில் பரிதியார் உரையை எடுத்துக்காட்டியும் அவர் உரையைப் பின்பற்றி உரை எழுதியுள்ளமையிலிருந்தும் பரிதியார் அவருக்கு முன் வாழ்ந்த காலிங்கரின் உரையை பின்பற்றுவதாலும். ஐயனாரிதனார், ஆண்டாள் பாடல்களில் காணப்படும் எட்டுவகை மாலை மார்கழி தீர்த்தம், பற்றி பரிதியார் உரையில் குறிப்பிடுவதில் இருந்தும், பரிதியார் கி.பி 13 – ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர் எனக் கருதலாம். எனவே பரிதியாரின் காலம் பரிமேலழகருக்கு  காலத்திற்கு முன், அதாவது 13 – ஆம் நூற்றாண்டின் முற்பகுதி எனக் கொள்ளலாம்.

    சமயம்

    பரிதியார் சைவ சமயம் சார்ந்தவர் என்பதற்கு இவரது உரையிலேயே பல சான்றுகள் உள்ளன. கடவுள் வாழ்த்தில் கற்றதனாலாய என்னும் குறளுரையில் நற்றாள் என்பதற்குச் சிவன் ஸ்ரீபாதம் என்று பொருள் உரைக்கின்றார். மலர் மிசை ஏகினான் என்பதற்கு, பக்தசனங்களிட்ட புஷ்பத்தின் மேல் எழுந்தருளியிருக்கும் சிவன் ஸ்ரீபாதம் எனவும் இறைவன் பொருள் சேர் புகழ் என்பதற்குச் சிவகீர்த்தி என்றும் அறவாழி அந்தணன் என்பதற்கு, தன்மம் என்னும் சமுத்திரமாகவுள்ள பரமேசுவரன் என்றும் பொருள் கூறுகின்றார். கோளிற் பொறியில் குணமிலவே (9) என்னும் குறளில் எண்குணத்தான் என்பதற்கு எட்டுகுணமாவன அனந்த ஞானம், அனந்த வீரியம், அனந்த குணம், அனந்த தெரிசனம், நாம மின்மை, கோத்திரமின்மை, அவா வின்மை, அழியா இயல்பு எனச் சைவ சமயச் சார்பாக விளக்கம் தருகின்றார்.

    வாய்மை அதிகாரத்தில் உள்ள பொய்யாமை அன்ன என்னும் குறளில்(269) எல்லா அறமும் தரும் என்பதற்குச் சிவபுண்ணியம் எல்லாம் உண்டாம் என்கிறார்.

    பொருட்பாலில் முறைசெய்து என்னும குறளுரையில்(388) மக்கட்கு இறை என்று வைக்கப்படும் என்பதற்கு உலகத்தை இரட்சிக்கின்ற பரமேஸ்வரன் என்று எண்ணப்படும் என்றும் யான் எனது(310) என்னும் குறளுரையில் துறந்தார் என்பதற்கு, தொண்ணூற்றாறு தத்துவத்தையும் உடலோடே துறந்தார் என்றும் பொருள் கொள்கிறார்.

    உரையில்  மணிப்பிரவாளம் நடை

    மலர்மிசை (3) – பக்த சனங்களிட்ட புஷ்பத்தின்மேல் எழுந்தருளி இருக்கும் சிவன் ஸ்ரீபாதத்தை மனசிலே பற்ற வைத்தார் பூமியின் கண் சகல பாக்கியமும் அனுபவிப்பார்.

    வீழ்நாள் படாஅமை(35) – அவமே நாட்போகாமல் தன்மமே செய்க. அது இனிமேல் சென்மமே இல்லாமல் சென்ம வழியை அடைக்கும் கல்.

    புகழ்புரிந்(59) – இன்னாள் பதிவிரதை என்று சொல்லும் சொல் பெறாத மடவாரை மனையாளாகவும் உடையான். தன்னை வேண்டார் முன்னே இன்னார் ரிஷபம் போல திரிகிறான் என்று ஏசுதற்கு இடமாவான்.

    இடிப்பாரை(447) – அடிச்சுப் புத்தி சொல்லுகின்ற பெரியோரையல்லாமல் தன் விபரீத புத்தியினாலே மிகுந்த மன்னவன், கெடுப்பார் இல்லாத போதும் தானே கெடுவான்.

    இருநோக்கு(1091)  இரண்டு பார்வை உண்டு நாயகிக்கு ஒரு பார்வை விரகம் தரும். ஒரு பார்வை விரகத்துக்கு மருந்தாகிய அமுதப் பார்வை கொடுக்கும்.

    உரையில் வழக்குச் சொல்

    நானாபதார்த்தம்(52),வேணும்(116) கனவிலும் பிறவாது(139) எப்படி என்றால்(140)வயிறு வளர்ப்பது(183) சுட்டுப்போடும்(202),பூமிவெட்டுகிற பேரையும் தாங்கும்(151) தன்ஆன்மா ஈடேறப் பார்பானை(268) சுட்டசோறு, மண்ணினால் பண்ணின பொம்மை(407) சிரிக்கச் சொல்லிக் கெடுக்காமல், அடிச்சு புத்தி சொல்லுகின்ற பேர்(447)

    கதையுடன் கூடிய உரை

    பெற்றார் பெறின் பெறுவர் பெண்டிர் பொருஞ்சிறப்புப்

    புத்தேளிர் வாழும் உலகு(58)

    பர்த்தாவும் பூலோகமும் இவன் பதிவிரதை என்னும் மனமகிழ்ந்த கற்பினால் பெறுவள், தேவர்கள் செய்யும் சிறப்பை. இதற்கு ஒப்புமையாகக் கண்ணகியாளைக் கண்டு கொள்க.

    கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

    ஆற்றல் தலைப்பட் டவர்க்கு(269)

    தலையெழுத்து முடிந்துவர அப்போது கூற்றுவனையும் வெல்லலாம். தவத்திற் பெரியர்க்கு அதற்கு நந்திகேசுவர தேவனையும் மார்கண்டேயனையும் கண்டு கொள்க.

    யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

    வாய்மையின் நல்ல பிற(300)

    ஆத்மாவைச் சென்னத்திலே தள்ளாமல் திருவடியிலே சேர்ப்பது சத்தியவாக்கியம் அன்றி, வெறொன்று கண்டிலேம்; அசத்தியம் சொன்ன தரும்புத்திரன் நரகங்கண்டான் சத்தியம் சொன்ன அரிச்சந்திரன் ஸ்ரீ பரமேஸ்வரன் பாதம் கண்டு சிவலோகம் சேர்ந்தான்.

    பிரசங்கம் போன்ற உரை

    நோயெல்லாம் நோய்செய்தார் மேலாவாம் நோய்செய்யார்

    நோயின்மை வேண்டு பவர்(326)

    ஒருவருக்குத் தான் செய்த விதனம், பின்பு தனக்கு வருகின்ற படியினாலே ஒருவருக்கும் தாங்கள் விதனஞ் செய்யார். அஃது எப்படி என்றால், பிரம்மராட்சதன் ஒரு ராசாவின் மகளைப் பற்றி நின்று சந்தியாவதனம் செய்ய ஆற்றங்கரையிலே வந்து நின்றளவில், பிராமணப் பிள்ளையின் பிள்ளை வாசிக்கிறவனுக்கு அன்றையிற் பாடம் இந்தக் குறள் ஆகையால் அவன் முகசுத்தி பண்ண வந்தான். இதைப் பிரம்மராட்சதன் கேட்டுத் தானொரு பிராமணவடிவாய், இந்தப் பிள்ளை வாய்பாடத்தை இரண்டு பிரகாரங் கேட்டு , நாம் இராசாவின் மகளை நோய் செய்தோமே, நமக்கு அந்த விதனம் பிறகே வரும் என்று பயப்பட்டு, இந்தப் பிள்ளை முன்னிலையாக இராச குமாரத்தியை விட்டுப்போச்சு .

    கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

    போக்கு அதுவிளிந் தற்றே(332)

    சந்தையிற் கூட்டம் நாலுபேரும் ஆறுபேரும் வந்து சந்தையில் காரியங்கண்டு மீண்டும் போவார்கள். அப்படி அல்ல செல்வம் எப்படி என்றால், கூத்தாடல் பார்க்க நாலு பேரும் ஆறுபேரும் வந்து கூத்துக்கண்டு, கூத்துக் குலைந்த போது ஒருகாலே பிரிந்து ஒடுவார்கள். அதற்கு ஒக்குமே செல்வத்தின் கூட்டம், எப்படி என்றால் இவன் செய்த புண்ணியத்திற்குத் தக்கதாக இலட்சுமி இருப்பாள், இவன் தவசு மாறி இலட்சுமி போன பின்பு அக்கினி, கள்ளார், இராசா, ஆறு இவையிற்றினாலே செல்வம்போம், இஃது அறிந்து உள்ளபோதே தன்மம் செய்வான் என்றவாறு?

    உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

    அனைத்தே புலவர் தொழில்

    நல்லோரும் நல்லோரும் மனப்பூரணமாகக் கூடியிருந்து. பிரிகிறபோது ஒருவரை ஒருவர் அனவரதகாலமும் நினைத்திருப்பர்.அதுபோல,கற்கும்போது பிரியத்துடனே கற்க, கற்றுவிட்டால் கற்ற கல்வியை மறவாது அதிகரிக்க.

    குறளினும் சுருங்கியபொருள்

    ஏரி னூழார்அ ருழவர் புயலென்னும்                       

    வாரி வளங்குன்றிக் கால்

    உழவர் ஏருழார் ; மேகம் மழை பெய்யாவிடில்

    அகனமர்ந்து செய்யா ளுரையு முகனமர்ந்து

    நல்விருந் தோம்புவா னில்(82)

    மனமகிழ்ந்து விருந்து செய்வானிடத்தில் லட்சுமி உறையும்

    உறங்கு வதுகோலும் சாக்காடு உறங்கி

    விழிப்பது போலும் பிறப்பு(339)

    நித்திரை போல மரணம் விழிப்பது போல பிறப்பு

    வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை

    ஆரஞர் உற்றன கண்(907)

    நாயகர் வாராக்காலும் நித்திரை இல்லை ; வந்தாலும் கலவியினால் நித்திரை இல்லை.

    சமூக நிலை

    பொறை ஒருங்கு(733(கேடறிய(736)ஆங்கமை(740) என்னும் குறள்களில் வேந்து, இறை என்னும் சொல்லுக்குப் பிற உரையாசிரியர்கள் அரசன், வேந்தன், காவலன் என்று உரையெழுத பரிதியார் நாட்டாமைகாரண் என்றே எழுதுகிறார்.

    தெய்வம் தொழாஅள்(55)  இதற்குக் குலதெய்வம் கும்பிட்டாள் தன் பர்த்தாவை தெய்யவமென்று தொழுதபடியால் அவள் சொல்ல மழைபொழியும் மார்கழித் தீர்த்தம், மகா தீர்தம் ஆடல் என்றும் யாண்டுச்சென் றியாண்டும்(895) என்பதற்கு எங்கு சென்றாலும் எனப் பிற உரையாசிரியர்கள் உரையெழுத எந்த தேசத்தில் போய் பல தீர்த்தம் ஆடினாலும் என உரை வரைகின்றார்.

    வறியார்க்கொன்(221) இதற்கு வறியார்க்குக் கொடுப்பதே கொடை மற்றெல்லாம் வட்டிக்குக் கொடுப்பதை ஒக்கும் என்றும் உள்ளத்தா லுள்ளலுந்த தீதே(282)  என்னும் குறளுக்குத் தவஞ்செய்வார்க்குப் பக்தர்கள் இரங்கிக் கொடுக்கும் பொருள் அன்றியிலே ஒரு திருப்பணி போலே காட்டி வாங்குதல். தன்னுயிர் நீப்பினும்(237) என்பதற்குத் தன்னுயிர் துறக்கும் காலமாகினும் இது பிழைக்கும் என்று ஆடு, கோழி, பன்றியினைப் பிராத்தனைச் செய்வான்  என்றும் விளக்கமளிக்கிறார்.

    பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

    அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து (738)

    என்னும் குறளுக்கு விளைவு என்பதற்கு விளைவுடமை என மணக்குடவரும், பரிப்பெருமாளும்

    பொருளுரைக்க, விளைநுகர் பொருளெனக் காலிங்கரும்  பரிமேலழகர் விளைச்சல் என்றும் கூறப் பரிதியார் பதினாறு தானிய விளைவு என்று கூறுகின்றார் நெல், புல், வருகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இருசி, எள்ளு, கொள்ளு, பயறு, உளுந்து, அவரை, கடலை, துவரை, மொச்சை சந்தை குறித்த செய்தி பதிவுசெய்கிறார். பரிதியார் தாம் வாழும் காலத்து நடைமுறைகளில் இருந்த சில பழக்கவழக்கங்களைத் தமது குறள் விளக்கத்திற்குப் பயன்படுத்தியுள்ளார்.

    குறள் வைப்புமுறை

    பரிதியார் பால் குறித்த விளக்கங்களோ, குறள் வைப்புமுறை குறித்த ஆராய்ச்சியோ செய்யவில்லை. அதிகாரத்திற்கு விளக்கம் சுருங்கிய வடிவில் கூறுகிறார். 36 அதிகாரங்களுக்கு விளக்கம் கிடைக்கவில்லை. தெரிந்து தெளிதல் என்னும் அதிகாரத்திற்கு விளக்கம் கூறுகையில் யாதொரு காரியமும் பதறாமல் விசாரித்துச் செய்யவேணும் எனக் கூறுவது, மணக்குடவரும் பரிமேலழகரும் அமைச்சர் முதலாயினரை ஆராய்ந்து தெளிதல் என்று கூறும் விளக்கத்தினும் செய்யும் வினையை ஆராய்ந்து செய்யவேண்டும் எனக் கூறுவது சிறப்புடையதாக உள்ளது.

    குறள் வைப்பு முறையில் உரையாசிரியர்கள் பலரும் முதற் குறளில் 22 அதிகாரங்களிலும், இறுதிக் குறளில் ஒன்பது அதிகாரங்களிலும் ஒன்றுபடுகின்றனர். சிலருக்குத் தொடக்கக் குறளாக அமைந்தது பிறருக்கு முடிவாவும், பிறர் முடிவாகக் கொண்ட குறள் மற்றவருக்குத் தொடக்கமாகவும் அமைந்துள்ள தன்மையினைக் காணமுடிகின்றது. முதற்குறளில் பரிதியும் காலிங்கரும் பெரும்பான்மை ஒத்துச் செல்கின்றனர்.

    பாடவேறுபாடு

    பரிதியார் பிறர் கொண்ட மூலப்பாடத்திலிருந்து 21 குறட்பாக்களில் 22 இடங்களில் வேறுபடுகின்றார்.

    பாடவேறுபாட்டுக்கான காரணம்

    1. ஏடெழுதுவோர் பிழைபட எழுதுதல்
    2. ஏடுபடிப்போர் பிழையாகப் படித்தல்.
    3. ஏடுபடித்து சுவைப்போர் பாடங்களை மாற்றுதல்
    4. ஏடுகளைப் பதிப்போர் திருத்தியும், புதுக்கியும் வெளியிடுதல்.

    பரிதியார் – பரிமேலழகர்

    1.துப்பாற்குத், துப்பார்க்குத்(12)

    2.கணமேனும், கணமேயுங்(29)

    3.தீண்டில், தீண்டல்(65)

    4.சொற்கேட்கில், சொற்கேட்டல்(65)

    5.இமைப்பிற்கெடும், நினைக்கப்படும்(169)

    6.நன்மையும்நீங்கும், நன்மையின் நீங்கும் (194)

    7.நல்லார் எனினும், நல்லாறு எனினும்(222)

    8.ஆகும், ஆளும்(251)

    9.கொள்வேம், கள்வேம்(282)

    10.தனத்தொடு, தவத்தொடு(295)

    11.அனைய, அனையர்(310)

    12.இன்னாசெய்யாமை, மாணாசெய்யாமை(317)

    13.நலன், இலன்(314)

    14.செவிக்குணர்வு, செவிக்குணவு(412)

    15.செவியுணர்வின், செவியுணவின்(413)

    16.கேள்வியஃதில்லார், கேள்வி அல்லார்(419)

    17.கைதீமை, கலந்தீமை(1000)

    18.தானைக் ண்டன்ன, தானைக்கொண்டன்ன(1082)

    19.பேரமர்க்கட்பட்டு ,பேரமர்க்கட்டு(1083)

    20.விழியுமென், விளியுமென்(1209)

    21.அழியின்மை ,அளியின்மை(1209)

    22.நோவேல் அவரைக், நோவேம் இவர்தம்(1236)

    மேற்கண்ட பட்டியலில் பாடம் வேறுபாடு, மூலபாடத்தில் சில எழுத்துகளை மட்டும் மாற்றி உள்ளார் (‘ர்’ ‘ற்’ ’ங்’ ‘ம்’),  அதுபோலவே ஒரே பொருளைத் தரக்கூடிய நிகரன் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார் இமைப்பிற்’ நினைக்கப்படும்) எனவும் ஒரூஉ நடைகேற்ற பாடம் ‘மனத்தொடு’ ‘தனத்தொடு’ எனவும் அமைந்துள்ளதைக் காணலாம்.

    நயமுடைய பாடம்

    கொள்வேம் எனப் பாடங் கொண்டு திருப்பணி போலே காட்டி வாங்குதல் எனப் பொருள் விளக்கம் செய்கின்றார். இவ்விளக்கம் உலகியலுக்கு ஒதத்தாகக் காணப்படுகின்றது. அதுபோல நல்லார், தனத்தொடு, கேள்வியல்லாதில்லார் எனக் கொள்ளும் பாடங்களும் நயமுடையதாக இருக்கின்றது.

    பொருந்தாப் பாடம்

    அனைய, நலன், கைதீமை, தானைக்கண்டன்ன எனப் பாடங்கொண்டு உரையெழுதும் இடங்கள் பொருத்த முடையதாக அமையவில்லை.

    உரைவேறுபாடு

    பரிதியார் 25 இடங்களில் பிற உரையாசிரியர்கள் உரையிலிருந்து வேறுபடுகின்றார்.

    உரை வேறுபடுவதற்கான காரணங்களாக,

    1. பாடவேறுபாடு
    2. சொற்பிரிப்பு
    3. கொண்டுகூட்டு
    4. காலமரபு
    5. இலக்கண வேறுபாடு
    6. தொகைப்பெயர் விளக்கம்
    7. ஒரு சொல்லுக்குப் பலபொருள்
    8. நயம் கூறல்
    9. விளக்கம் கூறல்
    10. பிற இலக்கியச் செய்தியைப் புகுத்துதல்
    11. கதையைப் பொருத்துதல்
    12. கொள்கை முனைப்பு

    எனப் பேரா. இரா. சாராங்கபாணி பட்டியலைக் கொடுக்கிறார். இதனடிப்படையில் பரிதியார் உரையை நோக்குழி,

    அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்

    பற்றிலர் நாணார் பழி(506)

    இக்குறளில் அற்றார் என்பதற்கு ஒழுக்கம் அற்றார் என மணக்குடவர் உரையெழுதுகின்றார். பரிதியார் பொருளும் கிளையும் கல்வியும் அற்றாரை என விளக்கமாகப் பொருளுரைக்கின்றார்.

    மணக்குடவர் கூறும் ஒழுக்கம் அற்றார் என்பதில் ஒழுக்கம், நற்குணம், நற்செயல் அனைத்தும் பொது சொல். ஆனால் பிரிதியார் கூறும் விளக்கம் பொருளற்றார் வறுமையாலும், கிளையற்றார் உலகில் ஒரு பற்றுக்கோடும் இல்லாமையானும் கல்வியற்றார் அறியாமையினாலும் தீய செயல்கள் செய்வாராகலின் அவரை நம்பாதே என்று கூறுவது மணக்குடவர் உரையினும் சிறப்புடையது.

    மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

    உயிர்நீப்பர் மானம் வரின்(969)

    என்னும் குறளுக்கு மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர்,பரிமேலழகர் ஆகியோர் ஒரு மயிர் நீங்கினால் கவரிமான் உயிர் விடும் என்ற ஒரே கருத்தைக் கூறுகின்றனர். பரிதியார் ஒரு மயிர் சிக்கினாலே என்று பொருள் கொள்கின்றார். மயிர் திரள்களில் ஒன்று சிக்கிய மாத்திரத்திலேயே உயிர் விடும் கவரிமான். தன் வாழ்க்கையில் மனத்தைப் பாதிக்கும் நிகழ்ச்சி ஒன்று ஏற்படுமாயின் உயிர்விடுவர் சான்றோர் என்பதைக் குறிப்பிட மயிர்ச்சிக்கலைக் கூறுகின்றார் .இக்க்ருத்து பிற உரையாசியரினும் வேறுபட்டு நுட்பமாக உள்ளது.

    ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்(69)  என்னும் குறளுக்கு, தான் பெற்ற காலத்தினும் மகிழும் என மணக்குடவரும் மற்றிவனைத் தான் முன்னம் ஈன்றெடுத்த அப்பொழுதினும் பெரிதும் மனமகிழும் எனக் காலிங்கரும் யாதும் அறியாத பெண்டிரும் மகிழ்வர் எனப் பரிப்பெருமாளும் தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மனம்மகிழும் எனப் பரிமேழகரும் பொருளுரைக்க ஈன்ற காலத்தில் ஆண்பிள்ளை என்று சொல்லக் கேட்ட மகிழ்ச்சியிலும் எனப் பரிதியார் பொருள் உரைக்கின்றார்.

    பிறர் கூறா விளக்கங்கள் பரிதி உரையில் மட்டும் காணப்படுபவை

    மனத்தது மாசாக மாண்டார் நீராடி(278) – மார்கழி தீர்த்தம், மகா தீர்த்தம்

    நாளது ஒன்றுபோற் காட்டி(334) – ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று தோன்றும் நாள்

    எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்(435) நெருப்பின் முன்னர் வைக்கோற் போர் பட்டது போலவும், தூறு போலவும் கெடும்.

    கண்டு கேட்டு உண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்(1101) – விளக்குக் கண்டு அழிந்த விட்டிலும், யாழ் கேட்டு அழிந்த அசுணமும், இரை கண்டு அழிந்த மீனும், சென்பக மணம் உண்டு அழிந்த வண்டும்,   மெய்யின்பம் கண்டு அழிந்த யானையும் ஒவ்வொரு புலனால் அழிந்தன.

    உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலால்(1106) – தென்றற் கொடுமையாலும் சந்திரன் கொடுமையாலும் வற்றின சரீரத்தை நாயகி தீண்டச் தளிர்கையினாலே

    சிறப்பான உரைப் பகுதி

    ஆண்மை(148) – சமர்களத்தில் வெட்டி மீண்டு வருகின்ற ஆண்மையல்ல, பிறர்மனை நோக்காமை இருத்தலே ஆண்மை.

    வன்மை(153) – வன்மையாவது மலையின் உச்சியின் மேலே ஒரு கல்லை ஏற்றுதல் கடுகிலே கடலை அடக்குதல் முதலியன.

    பயன்மரம்(216) – பயன்படு மாமரம், பலாமரம், பனைமரம்

    துறந்தார்(310) – தொண்ணூற்றாறு த்த்துவத்தையும் உடலோடு இருக்கையிலே புளியம்பழம் ஓடும் போலே துறந்தார்.

    எழுபிறப்பு(62) – தேவர், மனிதர், மிருகம், ஊர்வன, நீர்வாழ்வன, பட்சி, தாவரம்

    கோட்டுப்பூ (1313) – செண்பகப் பூ, பாதிரிப்பூ, புன்னைப்பூச் சூடினும்.

    பொருந்தா உரைகள் போல் தோன்றுவன

    பீலீபெய் சாக்காடும் அச்சிறும் பண்டம்

    சாம மிகுத்துப் பெயின்(475)

    இக்குறள் வலியறிதல் அதிகாரத்தில் மாற்றானின் வலியறிதலைப் பற்றி பேசுகின்றது அதனை அதிகார விளக்கத்தில் வலியறிதலாவது மாற்றான் சத்துவத்தை அறியவேண்டுமெனப் பரிதியாரும் பிற உரையாசிரியர்களும் பொருளுரைக்கின்றனர். இக்குறளுக்கு எளியவர் என்று பலரோடு பகை கொள்வான் தான் வலியனேயாயினும் பலர் தொக்கவழி வலியழியும் () என்று பொருள்படும்படிப் பரிமேலழகர் கூற, பரிதியார் நொய்ய பீலியாகிலும் கனமாக ஏற்றினால் வண்டி அச்சு முறியும்; அதுபோலப் பெலமில்லாதார் பலர் கூடினாலும் சத்துவமாம்; ஆகையால் அரசன் வீரராகாத பேரையும் கனம்பெறக் கூட்டிக் கொள்ளுவான் என அரசன் வலிமையில்லாதவர்களையும் தன் படையில் சேர்த்துக்கொள்ளவான் எனப் பொருள்பட உரையெழுதுகின்றார்.

    இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா

    உவகையும் ஏதம் இறைக்கு (432)

    வேண்டும் வழி பொருள் கொடாமையும் நன்மையினீங்கிய மானமும் அளவிறந்த வுவகையும் அரசனுக்கு குற்றம் எனப் பரிமேலழகர் உரைக்க பரிதி குற்றம் என்றதும் தன் பேரிலே வராமல் அழகு உண்டாக நடப்பானாகில், இறையென்று சொல்லப்பட்ட சிவனும் இவனைப் பிரியமாக மனத்துக்குள்ளே கண்டிருப்பர் என விளக்கும் உரையில் இறையென்று சொல்லப்படும் சிவனும் இவனைப் பிரியமாக மனத்துள்ளே கண்டிருப்பார் என்று கூறுவது பொருத்தமாக அமையவில்லை.

    நுனிக்கொம்ப ரேரினா ரஃதிறந் தூக்கி

    னுயிர்க்கிறுதி யாகி விடும்(476)

    அடிப்பனையில் நின்று மரத்தில் பழம் பறிக்காமல் நுனிக்கொம்பிலே ஏறினார் போல, கெட்ட புத்தியை எண்ணாமல் உறுதியான காரியத்தை விசாரிக்கில் அக்காரியம் பலிக்கும் எனப் பரிதியார் கொள்ளும் உரையில் கிளையில்லாத பனையைக் காட்டி உரை வகுத்தமை பொருந்தாது.

    தும்மச் செறுப்ப வழுதா ணுமருள்ள

    லெம்மை மறைத்திரோ வென்று(1318)

    தும்மல் உண்டாகக் கண்ட நாயகி அழுதாள்; உமது நாயகி வாழ்த்தத் தும்முவ தன்றி இவள் வாழ்த்துத் தும்ம ஒண்ணாது என்று ஊடினாள். செறுப்ப என்பதற்று உண்டாக என்னும் பரிதியின் பொருள் எம்மை மறைத்திரோ என்னும் வரும் தொடரோடு இயையவில்லை. அதற்கு அடக்க என்னும் பொருளே பொருந்தும்.

    பொருள்கோடல்

     பரிதியார் திருக்குறளைப் புரிந்துகொள்ளுவதற்கு /பொருள் கொள்வதற்கு அடிப்படையாக சைவசமயத்தையும, புராணகதைகளையும், வழக்கில் பயன்பாட்டில் இருக்க கூடிய கதைகளையும் உவமைகளையும், வழக்குச் சொற்களையும கொண்டு, குறளின் கருத்தினை அறிந்து கொண்டு மேற்சொன்னவைகளை அடிப்படையாகக் கொண்டு பொருள்விளக்கம் செய்கின்றார்.

    நிறைவாக

    பரிதியாரின் உரையைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது,

    • பரிதியார் 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்.
    • திருக்குறளை சைவசமயம் சார்ந்து கட்டமைக்கின்றார்.
    • திருக்குறளை பொதுஜன தளத்திற்கு கொண்டுசெல்லும் விதமாக மிக எளிய

    முறையில் உரைவரைகிறார்.

    • வடசொல் மிகுதியாக ஆளுகிறார்.
    • பிற உரையாசிரியர்கள் கொண்ட குறள் வைப்புமுறை, பாடம் கொள்ளும் முறை இருந்தும் சிற்சில இடங்களில் உரையிலிருந்து வேறுபட்டும் ஒன்றுபட்டும் அமைந்துள்ளது.
    • வழக்கில் உள்ள புராணீகக் கதைகளையும் அவர் காலத்தில் புழக்கத்தில் உள்ள சொற்களையும் சமூக பழக்கவழக்கங்களையும் தமது உரையில் பயன்படுத்தியுள்ளார்.
    • இவருடைய உரைகள் சில பொருத்தமாகவும், பிறர் கூறும் உரையிலிருந்து சிறப்பாகவும் அமைந்திருக்கிறது.
    • ஆனால் சில குறளுக்கு விளக்கம் கூறுமிடத்துக் குறளுக்கும் பொருளுக்கும் பொருந்தவனவாக இல்லை என்பதை அறியமுடிகிறது.  ஒரு காலத்தின் தேவையைக் கருதியே ஒரு பிரதி வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.  அவ்வாசிப்பில் உருப்பெற்ற விளக்கங்களின் வழியே அக்கால சமூக முறைமைகளை அறிய இயலும். அந்த வகையில் பரிதியின் உரை  தவிர்க்க இயலாத திருக்குறள் வாசிப்பு .

    உசாத்துணை

    1. தண்டபாணி தேசிகர், 1981,1983,1986, 1990. திருக்குறள் உரைக் களஞ்சியம், மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.
    2. சாரங்கபாணி, இரா.1989,1992. திருக்குறள் உரைவேற்றுமை, அண்ணாமலை நகர்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
    3. சே. கல்பனா, 2009.பரிதியார் உரை, சென்னை: தமிழ்மண் பதிப்பகம்.
    Share
  • இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்களில் சங்க இலக்கியத் தாக்கம் – ஒரு திறனாய்வு

    -முனைவர் கல்பனா சேக்கிழார்
    உதவிப்பேராசிரியர், இவ்வாய்வேட்டின் திறனாய்வாளர்
    தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

    திறனாய்வுக்கான ஆய்வேட்டின் தலைப்பு:
    இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்களில்   சங்க இலக்கியத் தாக்கம் 

    ஆய்வாளர்: கோ. வாசுகி,
    தமிழியல்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம். முனைவர் பட்டத்திற்காக அளிக்கப்பெற்ற  ஆய்வேடு இது.

    *****
    சங்க இலக்கியங்கள் முன்வைக்கும் அகம் புறம் மரபுகளின் தாக்கம் இல்லாமல் பிற்கால இலக்கியங்கள் தோன்றவில்லை. தமிழ் இலக்கிய வரலாற்றில்  இலக்கிய வடிவங்களில் மாற்றம் நிகழ்ந்திருந்தாலும் உள்ளடக்கத்தில் பெரும் மாறுதல்கள் நிகழவில்லை என்றே கூறலாம். பாரதியுடன் தொடங்கும் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக் காலகட்ட  இலக்கியங்களிலும் அகம் புறம் மரபின் தாக்கம் தொடர்வதை அவதானிக்கலாம். அரசியல் பொருளாதாரம், அறிவியல் மற்றும் சமூகக் காரணங்களால் மனித வாழ்வு மாற்றம் அடைந்தாலும், அன்பு, அறம், மறம், ஈகை முதலிய பண்பாட்டுக் கூறுகளில் பழங்கால வாழ்வியல் தாக்கம் இடம் பெற்றுள்ளது என்பதைக் ஆய்வுக் கருதுகோளாகக்  கொண்டு ,மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாய்வேடு ஐந்து இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.

    1. சங்க இலக்கியங்கள் உணர்த்தும் அகச்செய்திகள்
    2. பாரதி, பாரதிதாசன் கவிதைகளில் அக இலக்கியத் தாக்கம்
    3. சங்க இலக்கியங்கள் உணர்த்தும் புறச்செய்திகள்
    4. பாரதி, பாரதிதாசன் கவிதைகளில் புற இலக்கியத் தாக்கம்
    5. பாரதி, பாரதிதாசன் கவிதைகளும் சங்க இலக்கியங்களும் – ஒப்பீடு

    முதல் இயலில் அகத்திணை ஒழுகலாறுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. களவு, கற்பு குறித்தும் களவுக்காலத்தில் மேற்கொள்ளப்படும் ஒழுக்கம் குறித்தும், இயற்கைப்புணர்ச்சி, வரைவுகடாதல், தோழியிற் புணர்வு, பாங்கொடு தழால் எனத் தொல்காப்பியர் பகுத்துள்ளவற்றைச் சங்க இலக்கியங்களில் பின்பற்றப்பட்டுள்ள திறம், களவுக்காலத்தில் மேற்கொள்ளப்படும் குறியிடங்கள், இற்செறிப்பு, அலர், வெறியாட்டு, நொதுமலர் வரைவு, அறத்தொடு நிற்றல், உடன்போக்கு போன்ற நிகழ்வுகள் தொகுத்துக் கூறப்பெற்றுள்ளன. கற்பிற்குப் பிறகான வாழ்க்கை முறை, வினையினை நோக்கமாகக் கொண்டு தலைவன் செயல்பட்டுள்ளதையும், பெண் இல்லத்தைப் பேணி பாதுகாப்பவளுமாக எவ்வாறு விளங்கினர் என்பது சங்க இலக்கியப் பாடல்களை எடுத்துக்காட்டி விளக்கப்பட்டுள்ளது.

    இரண்டாம் இயலில் சங்க இலக்கியங்களில் காணப்படும் கைக்கிளைக் காதல், அன்பின் ஐந்திணைக் காதல், பெருந்திணைக் காதல் ஆகியவை குறித்துப் பாரதி, பாரதிதாசன் பாடியுள்ளனர் என்பதும், காதலின் வலிமையை, மேன்மையை, இவ்வுலக இயக்கமாக இருப்பதை இருவருமே எடுத்துக்காட்டியுள்ளனர் என்பதும்  ஆராயப்பட்டுள்ளது. களவுக் குறித்த பாடல்கள் இருவர் படைப்புகளிலும் காணப்படுவது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாரதியார் பழைய மரபுப்படி காதலர்கள் ஊழின் வலியாகச் சந்திப்பதாகப் பாடுவதையும், திராவிட இயக்கக் கோட்பாட்டை உள்வாங்கிய பாரதிதாசன், ஈர்ப்பினால் இருவரும் இணையும் சூழல் உருவாவதும் ஆராயப்பட்டுள்ளது. தோழன், தோழியர் காதலருக்கு உதவுவது பற்றியும் அலர், இற்செறிப்பு ஆகியவற்றையும் பாரதி, பாரதிதாசன் பாடியுள்ளது விளக்கப்பட்டுள்ளது. சங்க அக இலக்கியக் கூறுகள் பாரதி, பாரதிதாசனின் பாடல்களில் காணப்படும் நிலை எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

    தொல்காப்பியம் வரையறுத்துள்ள புறத்திணை விதிகள் சங்க இலக்கியங்கள் கூறும் புற வாழ்வியல், போர் சார்ந்த வாழ்க்கை முறையியல், போரில் கடைப்பிடிக்கப்பட்ட நெறிமுறைகள், அது சார்ந்த நம்பிக்கைகள், அரசன், அரசாட்சிமுறை, நாட்டிற்காக மக்களின் கடமை உணர்வு, பெண்களின் கடமைகள் போன்றவை குறித்து மூன்றாவது இயலில் ஆராயப்பட்டுள்ளது.

    நான்காம் இயலில் சுதந்திரப்போராட்ட காலத்தில் வாழ்ந்த பாரதி பாரதிதாசன் பாடல்களில் புறம் சார்ந்த பாடல்களின் தாக்கம் எவ்வாறு நிகழ்ந்துள்ளது என்பது குறித்து  விவாதிக்கப்பட்டுள்ளது. இவர்களின் பாடல்கள் அடிமைப்பட்டுக்கிடக்கும் நாட்டு மக்களின் உள்ளத்தில் வீர எழுச்சியை ஊட்டக்கூடியதாக அமைந்துள்ளன என்பதும் திணை அடிப்படையில் போர் நிகழவில்லை என்றாலும் மண்ணாசை, எல்லைப் பிரச்சனை, தாய்நாட்டு உரிமை, அரசியல், சமூகப் பொருளாதாரக் காரணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் போர் ஏற்பட்டாலும் திணை அடிப்படையில் பொருந்தி வருவதும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

    சங்க கால மன்னர்கள் வஞ்சின மொழியினைக் கூறியுள்ளது போலவே பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலியை பாரதத் தாயாக உருவகித்து வஞ்சினம் கூறியதும், பாண்டியன் பரிசில் கண்ணுக்கினியாள், அன்னம் வஞ்சினம் பேசியதும் கூறப்பட்டுள்ளது. போர் அறங்கள் குறித்தும் காந்தியடிகள் மேற்கொண்ட அறவழிப் போராட்டம் குறித்தும் பேசப்பட்டுள்ளது. முடியாட்சி முறையை வெறுத்து மக்களாட்சி முறையை இருவரும் முன் வைக்கின்றனர். வீறு கொண்ட இளைய சமூகம் நாட்டிற்குத் தேவையென வற்புறுத்துகின்றனர். போருக்கு வழியனுப்புபவர்களாக மட்டும் பெண்கள் இல்லாமல் பங்கேற்பவர்களாகவும் படைத்துக்காட்டுகின்றனர் அச்சம், மடம், நாண் தவிர்த்த புதுமைப் பெண்களே நாட்டிற்குத் தேவையெனப் பாடுகின்றனர் என்பது புலப்படுத்தப்பட்டுள்ளது.

    ஐந்தாம் இயலில் சங்க இலக்கியத்தில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் அடிப்படையாக வைத்து, பாடல்கள் புனைந்தது போலவே பாரதியாரும் பாரதிதாசனும் காதல் குறித்த பாடல்களைப் பாடும் பொழுதும் பாடியுள்ளனர் என்பது விளக்கப்பட்டுள்ளது. சாதி, சமயம், உயர்வு, தாழ்வு போன்றவை சங்க இலக்கயத்தில் காணப்படவில்லை அதுபோலவே பாரதி பாரதிதாசன் பாடல்களிலும் இவற்றின் தாக்கம் காணப்படவில்லை. சங்க காலக் காதல் இயல்பான ஒன்றாக இருந்தாலும், தற்காலத்தில்  அவ்வாறு பார்ப்பதில்லை என்பதை வேதனையோடு பதிவு செய்கின்றனர். சங்க கால வீர வாழ்க்கை போன்று தற்காலத்திலும் இளைஞர்கள் வீர வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும் என்பதைப் பாடுகின்றனர். சங்க இலக்கியத்தில் பாடப்பட்ட கொடை குறித்தும் இருவர் பாடல்களிலும் காணப்படுகின்றது என்பவை குறித்து விளக்கயுரைக்கப்பட்டுள்ளது.

    இருபதாம் நூற்றாண்டில் சமூக, அரசியல், பொருளாதார நிலைகள் சங்க காலத்தில் இருந்து வேறுபட்டிருந்தாலும், அகம், புறம் சார்ந்த பாடல்களைப் புனையும்பொழுது சமகால நிலையினை உட்செறித்தும், மரபினை உள்வாங்கியும் ஆக்கப்பட்டுள்ளதை இவ்வாய்வேட்டின் மூலம் அறியமுடிகின்றது. நாடு அடிமைப்பட்டுக் கிடந்த சூழலில் சுதந்திர வேட்கையை மக்களுக்கு ஊட்டவேண்டிய நிலையிருந்தாலும் மரபு வழுவாமல் அவற்றை மக்களுக்குக் கொண்டு செல்வதில் பாரதியார், பாரதிதாசன் இருவரும் வெற்றிபெற்றுள்ளனர். ஆனாலும் பெண் குறித்து, தொல் சமூகம் முன்வைக்கும் விதிகளில் இருந்து வேறுபட்டுப் புதுமைப் பெண்களே நவீன சூழலுக்குத் தேவை என்பதை முன்வைக்கின்றனர்.

    பெண்ணுக்கான வெளி இல்லத்தோடு முடிவடைவதில் இருவரும் விருப்பம் கொண்டிலர். சமூக வெளியிலும் பெண் மதிப்புமிக்கவளாக விளங்கவேண்டிய தேவையுள்ளதை இருவரும் தங்களது படைப்பின் வழி வெளிப்படுத்தியுள்ளதை இவ்வாய்வு எடுத்துக்காட்டியுள்ளது. சங்க இலக்கியம் முன்வைக்கும் அகம், புறம் சார் மதிப்பீடுகளோடு, இருபதாம் நூற்றாண்டு பாரதியார், பாரதிதாசன் பாடல்களோடு ஒப்பிட்டு  நிகழ்த்தப்பட்டுள்ள இவ்வாய்வு ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றியுள்ள இலக்கியங்களில்  தொல்சீர் மரபின் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை ஆய்வு செய்யத் துணைசெய்யும்.

     

     

    Share
  • செம்பதிப்பு வரிசையில் ஐங்குறுநூறு

    கல்பனா சேக்கிழார்

    உதவிப்பேராசிரியர்

    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

    காலத்தை வென்று நிற்பவை சங்கப் பனுவல்கள். அவை தமிழ் மொழியின் அடையாளமாய், பண்பாட்டுக் கருவூலமாய்த் திகழ்வதால் காலம் தோறும் வெவ்வேறு வாசிப்புக்கு உட்பட்டுள்ளன. சுவடியில் இருந்தவை, அச்சு ஊடக வருகைக்குப் பிறகு மூலமாகவும், உரையோடு இணைத்தும் பல்வேறு பதிப்புகள் வெளிவந்துள்ளன. இருப்பினும்  செம்பதிப்பு (மூலப்பாடத் திறனாய்வு) அடிப்படையில் பதிப்பிக்கும் நோக்கில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் திட்டத்தினை வகுத்து, தமிழ் அறிஞர் பெருமக்களிடம் அப்பணியை ஒப்படைத்தது. அந்த வரிசையில் சங்கத் தொகை நூல்களுள் ஒன்றான ஐங்குறுநூறு, பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியம் அவர்களைப் பதிப்பாசியராகக் கொண்டு வெளிவந்துள்ளது.

    இப் பதிப்பு தொகுத்தோர், தொகுப்பித்தோன், ஐங்குறுநூறு – பதிப்பும் உரையும், மூலம், பாடத் தேர்வு, சுவடி விளக்கம், பதிப்பு விளக்கம், பாடல் – சிதைவும் முறிவும், கூற்றுகள் – சிதைவும் முறிவும், பாடல்கள் – சுவடித் திறப்பு, கூற்றுகள் – சுவடித் திறப்பு, பாடல்கள் – பிழைப்பாடப் பட்டியல், கூற்றுகள் – பிழைப்பாடப் பட்டியல், சங்க இலக்கியம் தொடரொப்புமை, பிற பதிப்புகள் – ஒப்பீடு, சொல்லடைவு, தொடரடைவு, கலைச் சொற்கள், கூற்றுகள் – பாடல் தொகை, பழைய உரை இடம் பெறாத பாடல்கள், மெய்ப்பாடுகளும் பயன்களும், தொல்காப்பிய இயைபுகள், மன்னர்களும் நாடுகளும் என்னும் தலைப்புகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுப்பிலும் அதற்கான தரவுகள் தொகுத்து தரப்பட்டுள்ளன.

    இவற்றுள் பாடத்தேர்வு என்னும் பகுதி அரிதின் முயன்று பல்வேறு சுவடிகளுடனும், கையெழுத்துப் பிரதிகளுடனும் ஒப்பிட்டு, பாடவேறுபாட்டில் எப்பாடம் சரியானது எனத் தேர்ந்து சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. சான்றாக ஐங்குறுநூற்றின் பதினோராவது பாடலின் முதலடியில் ‘மனைநடு’ ‘மனைநெடு’ என இரு வேறுபட்ட பாடம் உள்ளது. இப்படத்தினை எடுத்துக்காட்டி, மனைநடு வயல் என்பது மனைக்கண் நடப்பெற்ற வயலைக் கொடி என்னும் பொருளுடையது. சங்க இலக்கியங்களில் பதினோரு இடங்களில் வயலை இடம்பெறுகிறது. இஃது இல்லத்தில் நட்டு வளர்க்கப்படும் கொடியாகும். வேலியிலும் பந்தரிலும் படர்வது. மேற்கண்ட நூல்களில் இல்லெழு வயலை, மனைநெடு வயலை, மனைநடு வயலை என்றே பாடங்கள் உள்ளன. தழையாடையகச் சுற்றிக் கொள்ளுவதற்குரிய இக்கொடி தலைவியால் இல்லத்தில் நடப்பெற்று வளர்க்கப்பெறுவது. இங்கு நெடுமைப் பொருளினும், நடு வயலை என்னும் வினைப் பொருண்மையே, செய்யுளில் உள்ளுறை அமையப் பொருந்தும். மனையின்கண் நட்ட வயலை புறத்தே சென்று வேழக் கரும்பைச் சுற்றினாற் போல மனைக்கு உரியனாகிய தலைவன் பரத்தையரைச் சார்ந்தான் என்ற உள்ளுறையை, நடு வயலை என்னும் பாடமே அளித்தலின் இதுவே ஏற்புடையது எனத் தரவுகளின் வழியாகவும் இலக்கண குறிப்பு அடிப்படையிலும், வாழ்வியலோடு இயைத்துப் பார்த்தும் இது சரியானப் பாடம் என நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு திணைக்கும் நூறு நூறு பாடல்களைக் கொண்டுள்ள ஐங்குறுநூற்றிணை, திணைவாரியாக ஐந்து பகுதிகளாகப் பிரித்து ஐந்து நூலாகப்  பதிப்பிக்கப்பட்டு, ஒவ்வொரு நூலும் 700 பக்க அளவில் அமைந்துள்ளன. ஆய்வு நிலையில் இப்பதிப்பு ஆகச் சிறந்த பல்வேறு  பதிப்பு நுட்பங்களை உள்வாங்கியப் பதிப்பாக அமைந்துள்ளது.

    ஐந்து தொகுதிகள்

    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

    எண் 40, நூறடிச் சாலை, தரமணி

    சென்னை – 600113

    2017

    Share
  • தொல்காப்பியப் பொருளதிகாரம் – தொடக்க கால ஆய்வுகளும் போக்குகளும் (1902 – 1950)

    -முனைவர் கல்பனா சேக்கிழார்

    தொடக்க கால ஆய்வுகளும் போக்குகளும் (1902 – 1950)

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறிமுக நிலையில் அறியப்பட்ட தொல்காப்பியம் பொருளதிகாரம், 20ஆம் நூற்றாண்டில் தமிழ்ச்  சமூகத்தின் வரலாற்றுப் பிரதியாக, பண்பாட்டுப் பிரதியாக, மொழிப் பிரதியாக, தமிழிரின் அடையாளத்தைக் கொண்டுள்ள தொல்பழம் பிரதியாக உருப்பெறுகிறது. அதன் காரணமாகத் தொல்காப்பியம் தேடித்தேடி மூலப் பதிப்புகளும், உரையோடு கூடிய பதிப்புகளும் பெருமளவு பதிப்பிக்கப்படுகிறன. அதன் தொடர்ச்சியாகப் பதிப்பித்த பிரதியின் மீதான விவாதங்களும் தொடங்குகின்றன.

    இதனை மூன்று வகையாக நாம் பிரித்து நோக்கலாம்.

    1. இதழ்களில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்
    2. தொல்காப்பியம் குறித்த ஆய்வு நூல்கள்
    3. தொல்காப்பியம் தொடர்பாகக் கல்விப்புலங்களில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள்

    இதழ்களில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்

    சி.வை. தாமோதரன் பிள்ளையால் 1885-இல்  வெளியிட்டப்பட்ட, பொருளதிகார உரைப்பதிப்பு முழுதும் நச்சினார்க்கினியருரையல்ல, பின்னான்கு இயல்கள் பேராசிரியரால் உரை எழுதப்பட்டது, என்னும் விவாதத்தை இரா. இராகவையங்கார் 1902-இன் இறுதியில், முதல் இதழாக வெளிவந்த செந்தமிழ் இதழில் அச்சிட்ட தொல்காப்பியச் செய்யுளியலுரைகாரர் பேராசிரியரென்பது என்னும் தலைப்பில் பதிவு செய்கிறார்.

    அச்சிடப்பட்ட தொல்காப்பியச் செய்யுளியலுரைக்காரர் பேராசிரியர் என்பது என்னும் கட்டுரை தொடங்கி தொல்காப்பிய உரை குறித்த கருத்தாடலைத் தொடர்ந்து ரா. ராகவையங்கார் முன்வைக்கிறார். இதுவே தொல்காப்பியம் பொருளதிகாரத்திற்குக் கிடைக்கும் நச்சினார்க்கினியர் உரை முதல் ஐந்து இயலுக்கும் செய்யுளியலுக்கும் கிடைக்கிறது என்பதும், பின்னான்கு இயலுக்குப் பேராசிரியர் உரை கிடைக்கிறது என்பதும் அறிய வருகிறது. இந்த புரிதல் இல்லாது பதிப்பித்த சி.வை.தா.வை அவர் எங்கும் விமர்சனம் செய்யவில்லை.  அத்துடன் இன்னும் நச்சர். பேராசிரியர் உரை இல்லாது பழைய உரையொன்று தொல்காப்பியத்திற்குக்(பொருளதிகார செய்யுளியலுக்கு) கிடைக்கிறது என்று ஆராய்ச்சி கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

    இதுகாறும் வெளிவராத தொல்காப்பியச் செய்யுளியற் பழைய உரையொன்று இச் சங்கத்திற்கியான் ஏடு தேடிச் சென்றபோது கிடைத்து. அதனை யுற்று நோக்கின் இத்தகைய வேற்றுமை பெரிதும் புலனாவது. அவ்வுரை பேராசிரியர், நச்சினார்க்கினியருரைகளின் வேறாகும். இவ்விரண்டாசிரியர்களாலும் குறிப்பிடப்படாத பேதங்கள் அப்பழைய வுரைக்கண்ணே காணப்படுகின்றன[1]

    இதனைத் தொடர்ந்து தொல்காப்பிய நூலின் அமைப்பு, அதன் ஆசிரியர், காலம், சமயம், உரையாசிரியர் மரபு ஆகியன குறித்த விவாதங்கள் மேலெழுப்பப்பட்டன. செந்தமிழ் இதழோடு 1923 – இல் தொடங்கப்பட்ட செந்தமிழ்ச் செல்வி இதழும் 1925 – இல் தொடங்கப்பட்ட தமிழ்ப்பொழில் இதழும் தொல்காப்பிய ஆய்வை வளப்படுத்தின.

    இம்மூன்று இதழ்களிலும் இரா. இராகவையங்கார், மு. இராகவையங்கார், அ. குமாரசாமிபிள்ளை, நாராயணயங்கார், டி. என். அப்பனையங்கார், எஸ். வையாபுரிப் பிள்ளை, வே. முத்துசாமி ஐயர், ந.மு. வேங்கடசாமி நாட்டார், கே.எஸ். நவநீதகிருஷ்ணபாரதி, மயிலை சீனி. வேங்கடசாமி, நாராயணயங்கார், டி.என். அப்பனையங்கார், பி.சா.சுப்பிரமணியம், தி.வை. சதாசிவ பண்டாரத்தார், நீ. கந்தசாமிப்பிள்ளை உள்ளிட்ட பலரும் மேற்கொண்ட ஆய்வுகள் தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வில் புதிய பாதைகளை உருவாக்கித்தந்தன.

    1904–இல் செந்தமிழ் இதழில் அச்சிட்ட தொல்காப்பிய மரபியலுரை என்னும் தலைப்பில் ரா. ராகவையங்கார் தொடர்ச்சியாக நச்சர் உரை அல்ல வேறு உரை என எழுதுகிறார்.

    வே. முத்துசாமி ஐயனும், மு. இராகவையங்காரும் தொல்காப்பியம் பொருளதிகாரம் ஆராய்ச்சி என்னும் தலைப்பில் தொடர் கட்டுரையாக 1912-இலிருந்து எழுதியுள்ளனர். அவை தொல்காப்பியப் பொருளதிகாரத்தைத் தமிழ்அறிவு புலத்தில் அறிவதற்கான கட்டுரைகளாக அமைகின்றன. அன்று பதிப்பிக்கப்பட்ட உரைகளிலிருந்தும், பின் வந்த இலக்கண நூல்களிலிருந்தும் விளக்கமாக உரைநடை வடிவிலும், தேவைப்படும் இடங்களில் நூற்பாக்கள் எடுத்தாளப்பட்டும் எழுதப்பெற்றன.

    1919–இல் செந்தமிழ் இதழில் தொகுதி-18, பகுதி – 3 – இல் அ. குமாரசாமிப் பிள்ளை உவமப் போலி என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுகிறார். அதே ஆண்டு அடுத்த இதழில் திரு. நாராயண அய்யங்கார் பிள்ளை அவர்கள் காட்டிய உவமைப்போலி பக்கப்போலிகளின் பெயர்களிலும் உரைகளிலும் உள்ள பிழைகளைத் திருத்தியும், பெயர்கள் அளவிலேயே விடுப்பட்டவைகளை உதாரணங்காட்டி விளக்கியும், உரை வேறுபாட்டிற்குச் சமாதானம் கூறியும் தெளிவுபடுத்தியுள்ளார்.

    தொல்காப்பிய அகத்திணை, உவமை, யாப்பு, தொல்காப்பியரின் சமயம் குறித்து எனச் செந்தமிழில் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தொல்காப்பியத்தை அடிப்படையாக கொண்டு தமிழிரின் வாழ்வியல் முறைகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியாக, தமிழ் இலக்கணமும் தமிழ் நாட்டின் இல்லற வாழ்க்கையும், பண்டைய தமிழர் மணமுறை, இன்பச்சுவை, தொல்காப்பியக் கடவுள், தமிழ்நெறி விளக்கவாராய்ச்சி, புறப்பொருள் மக்கள் என்னும் நிலைகளில் தமிழ்ப்பொழிலில் கட்டுரைகள் அமைந்துள்ளன. செந்தமிழ்ச் செல்வியில் பெரும்பான்மையான கட்டுரைகள் இளவழகனார் கட்டுரைகளாக அமைந்துள்ளன. அவை அகப்புறத் துறைகளை ஆய்வு செய்வனவாக அமைந்துள்ளன. ஒருவழித்தணத்தல், பாங்கற் கூட்டம், பொருள்வயிற் பிரிவு, மடற்திறம், மதியுடம்படுத்தல், சேட்படை, நொச்சித்திணை, பாடாண்திணை, வஞ்சித்திணை, பொதுவியல், தும்பைத்திணை, வெட்சித்திணை, கரந்தைத்திணை, காஞ்சித்திணை, கைக்கிளைத்திணை என்பனவாகும்.

    பூரணலிங்கம் பிள்ளை அவர்களால் 1927-இல் செந்தமிழ்ச்செல்வி சிலம்பு – 5, பரல்-9 இல் பொருளதிகாரம் என்னும் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.  பொருளதிகாரம் ஒன்பது இயல்களின் அமைப்பு குறித்து விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

    தொல்காப்பியம் குறித்த ஆய்வு நூல்கள்

    தொடக்கக் காலத்தில் தொல்காப்பியப் பொருளதிகாரம் குறித்து திரு. முத்துசாமி ஐயன், பெயர் தெரியாத ஒருவர், திரு. மு. இராகவையங்கார், பேராசிரியர் கா.சு. பிள்ளை, திரு. தி.சு. பாலசுந்தரம் பிள்ளை ஆகியோர் விவரணை நிலையில் தங்களுடைய ஆய்வுகளை முன்னெடுத்தனர். இவ் ஆய்வுகள் தொல்காப்பியத்தின் ஒரு பகுதியாக அமைந்த பொருளதிகாரத்தினைத் தமிழர் வாழ்வியலோடு இணைத்து விவாதிப்பதாக அமைந்துள்ளன. மு. இராகவையங்கார் செந்தமிழில் எழுதிய தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி என்னும் தொடர்கட்டுரை 1922 – இல் நூலாக்கம் பெற்றது.

    கொழும்பினைச் சேர்ந்த கு. ஸ்ரீகாந்தன் 28.8.1012 – இல் மு. இராகவையங்காருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடித்தில், அறிவிப்புப் படி மு. இராகவையங்காரின் தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி என்னும் நூலில் சில மாதங்களுக்குமுன் பத்திரிகைகளிற் பிரசுரஞ்செய்திருந்தபடி, எனக்கு வந்த தொல்காப்பியப் பொருளதிகார வியாசங்களைத் தக்க மத்தியஸ்தர்களைக்கொண்டு ஆராய்ந்து பார்த்ததில் தாங்கள் எழுதியதே முதன்மை பெற்று விளங்குவதாகத் தெரிந்தமையின், முன்பு பரிசு கொடுப்பதாக வாக்குத்தத்தஞ்செய்திருந்த ரூ. 200 – ஐயும் இன்று மணியாடர் மூலந் தங்களுக்கு அனுப்பியிருக்கிறேன்[2] என்று எழுதியுள்ளார். தொல்காப்பியம் பொருளதிகாரம் குறித்து விவரண நிலையில்  எழுதப்பட்ட அந்நூல் 1922-இல் வெளிவருகிறது அதன் முகவுரையில்…

    ”நான் எழுதி முடித்து பத்து வருஷங்களாகியும், இதுவரை அச்சிடப்படாமல் தாழ்க்கும்படி நேர்ந்தது என் துரதிருஷ்டமே. இவ்வாறு தாமதிக்க நேர்ந்ததற்கு – இதனை எழுதுவித்த பிரபுவினிடம் இருந்த சுத்தப் பிரதியை அவர் நண்பரொருவர் பார்வையிடும் பொருட்டு இட்டாலி தேசத்திற்குக் கொண்டுபோகும்படி நேர, அப்போது ஐரோப்பிய மகாயுத்தம் தொடங்கி அத்தேசத்தையும் பீடித்ததே முக்கியகாரணமாகும். அப்பெரும்போர் முடிந்த பின்னே இதன் கையெழுத்துப் பிரதியை அவர்கள் பெறும்படியாயிற்று. பிரதி கிடைத்ததும் என் விருப்பத்திற்கிணங்கி யானே அச்சிட்டுக்கொள்ளுமாறு அப்பிரபு அவர்கள் அன்பு கூர்ந்து அதனை அனுப்பினார்கள்[3] என்று குறிப்பிடுகிறார்.

    இந்நூலுள் மூலப்பிரதியுடன் சில திருத்தங்கள் செய்தும், நூல் வெளியீட்டின் போது இளம்பூரணர் எழுதிய அகத்திணை, புறத்திணைப் பகுதிகள் வெளிவந்திருந்த காரணத்தால், அவ்வுரையில் காணப்பட்ட சிறப்புக் குறிப்புகளை இணைத்தும் வெளியிட்டுள்ளார். இந்நூல் பற்றிக் குறிப்பிடும்போது,

    பரிசுத்தொகைக்காக 100 பக்கங்களுக்குள் அனுப்பப்பட்டது என்றும், சி.வை.தா அவர்கள் பதிப்பித்த பொருளதிகாரப் பதிப்பினையும் அந்நூற்பாக்களின் வரிசை எண்ணையும் இந்நூலுக்குப் பயன்படுத்திக் கொண்டதாகத் தெரிவிக்கிறார். இந்நூலுள் அகப்பொருள் குறித்து வெவ்வேறு இயல்களில் எழுதப்பட்டுள்ளவற்றை தொகுத்தும் எளிதில் விளங்குமாறு எழுதியுள்ளார். புறப்பொருள் குறித்து விரிவாகவும், உவமையியல், மெய்ப்பாட்டியல், செய்யுளியல் குறித்து சுருக்கமாகவும் எழுதியுள்ளார். அத்துடன் இறுதியல் பொருட்குறிப்பு அகராதியும் தரப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, 1928 – இல் இரண்டாம் பதிப்பு வெளிவருகிறது. அதன் முன்னுரையில்,

    இற்றைக்குப் பதினாறாண்டுகளுக்குமுன் என்னால் எழுதப்பெற்ற தொல்காப்பியப் பொருளதிகாரவாராய்ச்சி வெளிவந்தது முதல் தமிழ் மக்களால் அது விருப்புடன் ஏற்றுப் படிக்கப்பெற்று வருவதற்கும், சென்னைச் சருவகலாசங்கத்தாரால் உயர்தர ஆங்கிலப்பரீக்ஷைகட்கும் வித்துவான்பரீக்ஷைக்கும் பலமுறை பாடமாக வைத்துக் கௌரவிக்கப்பெற்று வருவதற்கும் நான் பெரிதும் உவப்பும் ஊக்கமும் அடைகிறேன். இதன் முதற்பதிப்பு முழுவதும் செலவாயினமையால், இரண்டாம் முறையாக இப்பதிப்பு இப்போது வெளியிடப்பெறுகிறது. பெரிய மாற்றங்களின்றிப் பெரும்பான்மை முன்னமைந்த முறையே இப்பதிப்பு கொண்டுள்ளது. ஆயினும், இன்றியமையாத திருத்தங்களும், புதிய செய்திகளும், கீழ்க்குறிப்புகளும் ஆங்காங்கு அமைத்துள்ளேன். இறுதியில் உள்ள பொருட்குறிப்பகராதி புதிதாகவே சித்தஞ்செய்யப்பட்டது[4] என்னும் குறிப்பிலிருந்து, இந்நூல் அன்று பாடசாலைகளில் பாடமாகவிருந்ததும், தொல்காப்பியப் பொருளதிகாரத்தைத் தமிழ் மக்களின் வாழ்வியல் நூலாகவும் கற்றனர் என்பதையும் அறியமுடிகிறது. பேராசிரியர் க. வெள்ளைவாரணன் இந்நூல் பற்றி கூறும்பொழுது, நச்சினார்கினியர் அடியொற்றி விளக்கியுரைக்கப்பட்டு, வடமொழி சார்புடைத்து என்று கூறியிருந்தாலும் அன்றைய சூழலில் தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்திய நிலையில் இந்நூல் முக்கியம் வாய்ந்ததாகவே உள்ளது.

    வே. முத்துசாமி ஐயன் அவர்கள் செந்தமிழில் எழுதிய தொல்காப்பியம் பொருளதிகார ஆராய்ச்சி என்னும் தலைப்பில் தொடர்கட்டுரை நூலாக்கம் பெறவில்லை. ஆனால் அவருடைய கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.  அக்கட்டுரையில் தொல்காப்பியத்தின் சிறப்பு பொருளதிகாரத்தின், அப் பொருளிலக்கணம் இத்தகைத்து என்பதும், அப் பொருளிலக்கணம் கருவியாக அறியப்பெறும் பண்டைக்காலத்தாரது வழக்கங்களும் நடையுடை பாவனை முதலியவைகளும் இவைஇவை என்பதும் மற்றும் இவைபோல் நுணுகி அறியப்படுவன இன்ன இன்ன என்பதும், பிறவும் ஒருவாறு இவ் வியாசத்தின்கண்ணே விளக்கிக்காட்டப்படும்[5] என்று குறிப்பிடுட்டுள்ளார்.

    வேங்கடராஜலு ரெட்டியாரின் இலக்கணக் கட்டுரைகளில் செய்யுளியலில்  உறுப்புகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. அசை, சீர் இவற்றை ஆராயும்போழ்து இளம்பூரணருரையும் படிக்க எண்ணினேன். அக்காலத்தில் (1922) அவ்வுரை அச்சாகவில்லை. ஆயின், அதன் திருத்தமான ஏடு திருவாளர் S.வையாபுரிப்பிள்ளையிடம் (தமிழ் லெக்ஸிகன் பதிப்பாசிரியர்) இருந்ததையறிந்து, அவர்களை வேண்டிக்கொண்டேன். அவர்கள் அவ்வுரைப் பிரதியை அன்புடன் உவந்துதவினார்கள்[6].

    1938–இல் வெளிவந்த இளவழகனாரின் இன்பவொழுக்கம் அல்லது தொல்காப்பியம் அகத்திணையியல் விளக்கம் என்னும் நூலின் அணிந்துரையில் பேராசிரியர் கா.சு. பிள்ளை அவர்கள், இந்நூலின் பொருளதிகாரத்தை யாவர்க்கும் எளிதாக விளங்கும் பொழிப்புரையுடனும் செவ்விய கருத்து விளக்கத்துடனும் கண்கவர் வனப்புடைய, கைக்கு அணியாதற்குரிய பத்துச் சிறு புத்தகத் தொகுதியாக வெளியிடுவதற்குப் பொருளுதவி புரிய முன்வைத்துள்ளவர் சேலம் செவ்வாய்ப்பேட்டை சைவத் திருவாளர் ஆ. மாணிக்க செட்டியாரவர்களாவர். வணிகத் துறையிற் சிறந்து தமிழன்பே உருவாயிலங்கும் அவ் வீரர் கூலவணிகன் சாத்தனாரை இற்றை நாளில் நினைவுறுத்துஞ் சீர் வாய்ந்தவராவர். அவர்கட்குத் தமிழுலகம் என்றும் நன்றி பாராட்டுங் கடப்பாடுள்ளது[7] என்று குறிப்பிடுகிறார்.

    இந்நூல் அகத்திணையியல் நூற்பாக்கள் அவற்றுக்கு விளக்கம், அகத்திணையியலின் கருத்துக்கள், உயர்ந்த இன்ப வாழ்க்கை, அகத்திணையால் அறியப்படுகிற தமிழ்நாட்டுக் குறிப்புகளிற் சில, அகத்திணையியல் அகராதி என்னும் நிலையில் அமைந்துள்ளது. இக்கருத்துக்களின் மையம் தொல்காப்பியப் பொருளதிகாரம் தமிழ் மக்களின் வாழ்வியலை நாகரிகத்தை முன்வைப்பதாக வாதிடுகிறது. அதற்கான  சான்றுகள் விவரணைகளுடன் அமைகிறது.

    1939இல் கா. சுப்பிரமணிய பிள்ளையின் பழந்தமிழர் நாகரிகம் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து என்னும் நூல்  ஆ. மாணிக்கம் அவர்களால் தமிழ்நெறி விளக்கப் பதிப்பகத்தின் வெளியீடாக வந்தது. மறுபதிப்பாகச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1968-இல் வெளியிட்டுள்ளது.

    இதன் முன்னுரையில் சிறப்பு வாய்ந்த நூலாகிய தொல்காப்பியமானது இக்காலத்தில் எளிதிற் பொருள் விளங்கப் பெறாமையால் கற்கப்படுவது இல்லை. அதன் சிறந்த கருத்துகளனைத்தையும் இது தொல்காப்பியப் பெருநூலைக் கற்றறிவதற்கும், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க இலக்கியங்களை ஆய்தறிவதற்கும் தக்க தோற்றுவாயாக அமைந்துள்ளது[8] என விளக்கமளிக்கிறார்.

    நூலின் தொடக்கத்தில் சேர்க்கை என்று திருக்கோவையாரில் உள்ள 24 துறைகள் குறித்த துறைவிளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குத் தொல்காப்பியப் பொருளதிகார அகப்பொருட் சார்பான இயல்களில், துறை வரிசை கூறப்படாது, தலைவன் தலைவி முதலியோர் கிளவி நிகழும் இடங்களே தொகுக்கப்பட்டிருத்தலின், அவற்றைக் கற்பதற்கு முன், துறை வரிசை அறிதல் அவசியம். திருச்சிற்றம்பலக் கோவையாருள் காணப்படும் துறை வரிசையைக் கற்றுக்கொள்ளுவது போதிய துணைபுரியும் ஆகலின், அவ்வரிசைகளை இங்கே தொகுத்துத் தருகிறேன்[9] என்று விளக்கம் தருகிறார்.

    இப்பிரதியுள் தொல்காப்பியம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள், தொல்காப்பியக் காலம் குறித்த செய்திகளைக் கொடுப்பதுடன், தொல்காப்பியத்தின் சில பகுதிகள் பிற்காலத்தவென்னில், அப்பகுதிகள் பிற்காலத்தே சேர்க்கப்பட்டனவென்று கொள்ளுவதே பொருத்தமாகும் என்ற கருத்தும் சுட்டப்பட்டுள்ளது.  பொருளிளக்கணத்தின் சிறப்புகள் கூறப்பட்டப்பிறகு, அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமயியல், செய்யுளியல், மரபியல், புறத்திணையியல் என்னும் வரிசையில் ஒவ்வோர் இயல் குறித்த விளக்கம் கூறப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் நூற்பாக்களையும் உரையாசிரியர்கள் கருத்துகளையும் எடுத்துக்காட்டியும், சான்றுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

    1945–இல் பண்டைய தமிழர் இன்பியல் வாழ்க்கை என்னும் தலைப்பில் இளவழகனார்  எழுதியுள்ளார். நூல் எழுதப்பட்டதற்கான காரணம் குறித்து, தமிழெனவொரு தனிமொழி யுளதா வெனக் கேட்கப்படும் காலம் மாறி தமிழும் உயர் தனிச் செம்மொழியே என்றும் உயர்தனிச் செம்மொழிகள் யாவற்றினும் தமிழ் தலை சிறந்தது என்றும்,  உலக மொழிகளனைத்திற்கும் தமிழ் தாய்மொழி என்றும் உவந்து கூறுங் காலமன்றோ விது. இற்றைநாள் ஆராய்ச்சியாளர் இம்முடிவுக்கு வர ஏதுவாயிருந்தன புதைபொருளும், மொழிமூல ஆய்வுமேயாகும். தண்டமிழ்ப் பண்டைப் பனுவல்களும், இவ்வாய்வுக்கு மேற்கொள்ளப்படின் பெரிதும் சிறக்கும். ஆகவே, பண்டைத் தமிழ்மக்களின் நாகரிக வாழ்வை மக்கட்குக் காட்டுதற் பொருட்டாம், பண்டைத் தமிழ்நாடு, மக்கள், மொழி ஆய்வுகட்குப் பண்டைத் தமிழ்ப் பனுவல்கள் பெரிதும் பயன்படும் என்பதை விளக்குதற் பொருட்டும், பண்டைத் தமிழ்நூல்கள் கற்கும் அவாவை மக்கட்கு ஊட்டுதற் பொருட்டும், அவை கற்பதற்கு இஃது ஓர் ஏணியாக உதவுதற் பொருட்டும் இந்நூல் எழுதப்பெற்றுள்ளது[10] எனப் பகர்கிறார்.

    இந்நூலூள், இயற்கைப் புணர்ச்சி, பாங்கற் கூட்டம், மதியுடம்படுத்தல், மடற்றிறம், சேட்படை, பகற்குறி, இராக்குறி, ஒருவழித்தணத்தல், அறத்தொடு நிற்றல், திருப்பொன்னூசல், பொருள்வயிற் பிரிவு, இல்லற வாழ்க்கை எனப் பன்னிரண்டு தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளது. நூல் தொடக்கத்தில் 12 தலைப்புத் தொடர்பான சித்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இலக்கண இலக்கியங்களை ஆய்ந்து கோவைப்படுத்தி தொகுத்து ஆராயப்பட்டுள்ளது. இளவழகனார் அவர்களால் செந்தமிழ்ச் செல்வியில் எழுதப்பட்ட கட்டுரைகளை அரிய திருத்தங்களுடனும், அவ்வத் தலைப்புகளை விளக்கும் குறிப்புகளுடனும் வெளியிடப்பட்டுள்ளது.

    தொல்காப்பியம்  பொருளதிகாரம் ஆய்வேடு

    1942–இல் அ. சிதம்பரம் செட்டியார் அவர்கள் தொல்காப்பியப் பொருளதிகாரம் செய்யுளியலை அடிப்படையாகக் கொண்டு, ADVANCED STUDY IN TAMIL PROSODY என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வேட்டினை வழங்கியுள்ளார். 2015–இல் இவ்வாய்வேட்டின் மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. இவ்வாய்வேடே தமிழில் யாப்பியல் குறித்து நிகழ்த்தப்பட்ட முத்ல முனைவர்பட்ட ஆய்வேடாகும்.  தொல்காப்பியம் செய்யுளியலை அடிப்படையாகக் கொண்டு பின்வந்துள்ள இலக்கண நூல்களுடன் ஒப்பிட்டு ஆராயப்பெற்றுள்ளது.

    தொல்காப்பியப் பொருளதிகார இடைக்கால ஆய்வுப்போக்குகளைக் கீழ்க்கண்டவாறு தொகுத்துக்கொள்ளலாம்.

    • 1902-இல் தொடங்கப்பட்ட தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வுகள், தொடர்ச்சியாக ஆய்வுநிலைகளில் வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் உள்ளன.
    • தொடக்கத்தில் பதிப்பு குறித்த ஆய்வுகளாக இருந்தாலும், அகத்திணைக் குறித்தும், புறத்திணை குறித்தும், செய்யுளியல் குறித்துமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாய்வுகள் அனைத்தும் தொல்காப்பியத்தைப் புரிந்துகொள்ளுதலும், முன்வந்துள்ள ஆய்வுகளை மறுப்பதும் போன்ற நிலைகளில் காணப்படுகின்றன. அவ்வக் காலங்களில் அச்சுப் பதிப்பில் கிடைத்த பொருளதிகார உரையாசிரியர்களின் உரையடிப்படையில் விவாதங்கள் நிகழ்ந்துள்ளன.
    • 1912 – இல் தொல்காப்பியப் பொருளதிகாரம் குறித்த புரிதலைச் தமிழ்ச் சமூகத்திற்கு உணர்த்தும் விதமாக மு. இராவையங்கார் செந்தமிழில் தொடர்ச்சியாகக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
    • 1922 – இல் அப்பொழுது கிடைத்த இளம்பூரணர் உரையும் ஒப்பிட்டு நூலாக்கம் செய்கிறார். இந்நூல் தொல்காப்பிய உரையாசிரியர்களின் கருத்துக்களை உள்வாங்கி, அகம், புறம் குறித்த புரிதலை உருவாக்குவதற்கான நூலாகவும், கல்வித் தளத்தில் புழங்கும் நூலாகவும் அமைந்துள்ளது. வே. முத்துசாமி ஐயன் செந்தமிழில் எழுதிய தொல்காப்பியப் பொருளதிகாரம் குறித்த கட்டுரைகள் அகம் குறித்த அறிமுகநிலையில் அமைந்துள்ளன.
    • 1939 – இல் கா.சு. பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட பழந்தமிழர் நாகரிகம் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து திருக்கோவையார் கூறும் அகத்துறைகளை முன்னிறுத்தி, தொல்காப்பியத்தை அணுகியுள்ளார். உரையாசிரியர்களின் கருத்துக்களையும் உள்வாங்கியும், பழந்தமிழர் வாழ்வியல் முறைகளுக்கு ஒவ்வாத சில சூத்திரங்களை எடுத்துக்காட்டி வேறுபாடம் இருக்கலாம் என்பதனையும், பொருந்தாத சில சூத்திரங்கள் பிற்காலத்தில் இடைச்செருகலாக இருக்கலாம் என்றும் கூறுகிறார். மட்டுமல்லாமல் அவர் சார்ந்த சைவக் கொள்கைகள் அடிப்படையில் பல சூத்திரங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் அன்றைய சூழலுக்கு தமிழர் அறியாத பழந்தமிழ் நாகரிகத் துறைகளை எளிதில் அறிந்து கொள்ளுமாறு தெளிவாக எடுத்துரைத்துள்ளார் என்று கருதலாம்.
    • 1945 – இல் வெளிவந்த பண்டையத் தமிழர் இன்பியல் வாழ்க்கை என்னும் நூல் அகத்துறையை மட்டும் பன்னிரண்டு தலைப்புகளில் விளக்கியுள்ளது. அதற்குத் துணையாகத் தொல்காப்பிய உரையாசிரியர்களின் உரைகளைப் பயன்படுத்தி, அனைவரும் அகத்திணை குறித்து அறியும் நோக்கில் எழுதப்பட்டதாக அமைகிறது.
    • 1942 இல் யாப்பு குறித்து நிகழ்த்தப்பெற்ற ஆய்வே முதல் தமிழ் முனைவர்ப்பட்ட ஆய்வாக அமைகிறது. இவ்வாய்வு தமிழியல் யாப்பு குறித்த அறிமுகநிலையிலும் ஒப்பிட்டுநிலையிலும் அமைந்துள்ளது.

    உசாத்துணை:

    1. இராகவையங்கார் இரா. 1917. தொல்காப்பியம் செய்யுளியல் நச்சினார்க்கினியருரை உரையாசிரியருரையுடன், மதுரை: தமிழ்ச் சங்க முத்திராசாலைப் பதிப்பு.
    2. இராகவையங்கார் மு. 1929, தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, மதுரை: தமிழ்ச்சங்கம்.
    3. இளவழகனார்.,1938. இன்பவொழுக்கம் அல்லது தொல்காப்பியம் அகத்திணையியல் விளக்கம், சேலம்: தமிழ்நெறி விளக்கப் பதிப்பகம்.
    4. இளவழகனார்.,1956. பண்டைத் தமிழர் இன்பவியல் வாழ்க்கை, சென்னை: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
    5. கனகசபாபதி பிள்ளை எஸ். ( ப.ஆ ) 1934, தொல்காப்பியம் பொருளதிகாரம் முதற்பாகம் ( நச்சினார்க்கினியம்) சென்னை: சாது அச்சுக்கூடம்.
    6. கனகசபாபதி பிள்ளை எஸ். ( ப.ஆ ) 1935, தொல்காப்பியம் பொருளதிகாரம் இரண்டாம் பாகம் ( நச்சினார்க்கினியம்) சென்னை: சாது அச்சுக்கூடம்.
    7. சிதம்பரம் பிள்ளை வ.உ. ( ப.ஆ ) தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம் அகத்திணையியல் புறத்திணையியல், சென்னை.
    8. சிதம்பரம் பிள்ளை வ.உ. ( ப.ஆ ) தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம் களவியல், கற்பியல், பொருளியல், சென்னை: இராமஸ்வாமி சாஸ்த்ருலு அண்ட்ஸன்ஸ்.
    9. சுப்பிரமணிய பிள்ளை கா. 1968. பழந்தமிழர் நாகரிகம் அல்லது பொருளதிகாரக் கருத்து, சென்னை: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
    10. நாகமணி ம.ஆ. 1935. தொல்காப்பியப் பொருளதிகார மேற்கோள் விளக்க அகராதி முதலியன, முதற்பதிப்பு, சென்னை: சாது அச்சுக்கூடம்.
    11. பரமசிவானந்தம் அ.மு. 1944. பழந்தமிழ் கவிதைகளின் வளர்ச்சி, சென்னைப்பல்கலைக்கழகம்.
    12. பவானந்தம் பிள்ளை ச. ராவ் பஹதூர். ( ப.ஆ ) 1916, தொல்காப்பியம் பொருளதிகாரம், நச்சினார்க்கினியம் (அகத்திணையியல், புறத்திணையியல்), சென்னை: மினெர்வா அச்சுக்கூடம்.
    1. பவானந்தம் பிள்ளை ச. ராவ் பஹதூர். ( ப.ஆ ) 1916, தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம்      ( களவியல், கற்பியல் ), சென்னை: மினெர்வா அச்சுக்கூடம்.
    1. பவானந்தம் பிள்ளை ச. ராவ் பஹதூர். ( ப.ஆ ) 1917, தொல்காப்பியம் பொருளதிகாரம்.
    2. பேராசிரியம்    (மெய்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் ), சென்னை: மினெர்வா அச்சுக்கூடம்.

    *****

    கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்
    தமிழியல்துறை
    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

     

    Share
  • அற இலக்கியங்கள் கட்டமைக்கும் பெண்ணும் பெண்சார் மதிப்பீடுகளும்

    -முனைவர் கல்பனா சேக்கிழார்

    பெண்ணை ஒடுக்குதல் என்பது நம் நாட்டில் மட்டும் நடந்த நிகழ்வு அன்று. உலகம் முழுதும் நடைபெற்ற நிகழ்வு. ஆதியில் பெண்வழி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருந்தது. குடும்பம் என்னும் அமைப்பு உருவாகாத காலத்தில் பெண்கள் தலைமையேற்று  அனைத்தையும்   நிர்வகிப்பவர்களாக இருந்தனர். காலப்போக்கில் உடைமைச் சமூகமும் அதன்வழி உருவான வாரிசுமையும் தோன்றியவுடன், பெண்களை அடிமைப்படுத்துதல் என்பது தொடங்கிவிட்டது. அத்துடன் மட்டுமல்லாமல் பெண்கள், வைசியர், சூத்திரர் பாவ யோனியில் பிறந்தவர்கள் (பக.கீதை:அத்.9, சுலோகம்.32) என அவர்களை இரண்டாம் தரமான சமூக மதிப்பீட்டையும் உருவாக்கியது. இதனை இது வலுக்கட்டாயமாக நிகழ்த்தப்பட்டதன்று, அதாவது வெற்றி பெற்றவர்களுக்கு முடிசூட்டும் வேலையைத் தோல்வி பெற்றவர்கள் தாராளச் சிந்தனையுடன் சூட்டி மகிழ்ந்தார்கள் என எங்கல்ஸ் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகிவற்றின் தோற்றம் என்னும் நூலில் குறிப்பிடுவதுபோல் பெண்களுக்கான கருத்துகள் உருவாக்கப்பட்டு அவர்கள் ஏற்றுக்கொள்ளும் சூழலை எல்லாச் சமூகங்களுமே உருவாக்கியுள்ளன. அக்கருத்துக்களைப் பரப்பும் ஊடகங்களாக இலக்கியங்களைப் பயன்படுத்திக்கொண்டனர்.

    இலக்கிய, இலக்கணங்களின் வழியாகவே தொல்சமூகம் குறித்தான புரிதலையும், சமூக மதிப்பீடுகளையும் நாம் தொகுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. நமக்குக் கிடைத்துள்ள பழைமைப் பனுவல்கள் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள்.  இப்பிரதிகள் நாகரிகம் அடைந்த தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாகவே உள்ளன. இவை தமிழ் நிலப்பரப்பினுள் வந்துகலந்த வைதிகப் பண்பாட்டுக்கூறுகளையும் உள்வாங்கியுள்ளன. அதன் தொடர்ச்சியாக வரக்கூடிய பதினெண் கீழ்க்கணக்கு வைதிகக் கருத்தியலோடு, சமணக்  கருத்தியல்களையும் உள்வாங்கியப் பனுவலாக  உருப்பெற்றுள்ளன.

    சங்க இலக்கியத்தில் பெண்ணிக்கிருந்த நெகிழ்வு அற இலக்கியங்களில் இறுக்கமாகவே இருக்கிறது. 40க்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் சங்க இலக்கியத்துள் பாடியுள்ளனர் . ஆனால் பதினென் கீழ்க்கணக்கில்  பெண்பாற் புலவர்கள் ஒருவரும் இலர். இதனைப் பார்க்கும் பொழுது, அறம் சார்ந்த சிந்தனைகள் பெண்ணுக்கு இல்லையா என்னும் கேள்வியெழுகிறது. மேலும் பதினெண் கீழ்கணக்குத் தொகுக்கப்பட்டதன் பின்னுள்ள  அரசியலும் அறிய இயலவில்லை.  இத்தொகுப்பினுள் உள்ள 11 அறநூல்களும் பண்பாட்டின் அடையாளமாக அதனைக் கட்டிகாப்பவளாகப் பெண்ணையே முன்னிருத்துகிறது.

    பெண்களை வெறும் நுகர்பொருளாகவும், பாலியல் இயந்திரமாகவும் பயன்படுத்தியதோடு, அவர்களுடைய புழங்குவெளியையும் வரையறுத்து அதனைச் சட்டமாகவும் உருவாக்கினர். பெண்கள் அதிலிருந்து மீள்வதற்கான முயல்வுகளைக் காலந்தோறும் நிகழ்த்தியுள்ளனர். அவற்றை அடக்கியும் ஒடுக்கியும் வைப்பதற்கான வேலைகளை ஆண் மையச் சமூகம் மோற்கொண்டது. அவளுக்கான விதி இதுதான் என மூளைச் சலவையும் செய்யப்பட்டது. 15-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு புதிய அறிவியல் கண்டுப்பிடிப்புகள், தொழில் வளர்ச்சி, உற்பத்திப் பெருக்கம் போன்றவை சமூகத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. அச்சூழலில் பெண் தன்னுடைய இருப்புநோக்கிச் சிந்திக்கத் தொடங்கினாள். அதன் விளைவாகப் பெண்ணியச் சிந்தனைகள் மேற்குலகில் உருப்பெற்று, தராள வாதப்பெண்ணியம், சமதர்மப் பெண்ணியம் தீவிரவாதப்

    பெண்ணியம், தலித்தியப் பெண்ணியம் எனப் பல்வேறு நிலைகளில் போராடத்தொடங்கினர். இந்தியாவிலும் இதன் தாக்கம் ஏற்படத்தொடங்கியது. தமிழகத்திலும் அது சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    எலைன் ஷோவால்டர்,

    • பெண்மை நிலை (Feminine Phase) – பண்பாடு சார்ந்தது
    • பெண்ணிய நிலை (Feminist Phase) – அரசியல் சார்ந்தது
    • பெண்நிலை (Female Phase) – உயிரியல்

    என மூன்று நிலைகளில் இலக்கியங்கள் பெண்களைக் கட்டமைப்பதாகக் கூறுகிறார். இதனடிப்படையில் அற இலக்கியங்கள் பெண்ணுக்கான வெளியையும்  குடும்ப சமூக மதிப்பீடுகளையும் எவ்வாறு உருவாக்கியுள்ளன என்பதை அறிய இக்கட்டுரை முயல்கிறது.

    சமூகத்தின் அனைத்துத் தளத்திலும் பெண்ணைச் சக உயிரியாகப் பாவிக்காமல்,  ஒரு சமூகத்தின் கட்டுமானப் பண்பாட்டுக் கூறுகள் யாவும் பெண் மீதே சுமத்தப்பெறுகின்றன. ஆண்வழிச் சமூகம் சுமத்தியுள்ள பண்பாட்டுக் கூறுகளைப் பேணுகின்றவர் ஒழுக்கமானவர் என்றும், அப்பண்பாட்டு நடத்தையிலிருந்து விலகிச் செல்பவர் ஒழுக்கம் கெட்டவர் என்றும், கற்புக்கோட்பாட்டின் வழி சமூக மதிப்பீடுகளை உருவாக்கி வைத்திருக்கிறது. இவ்வாறான ஆண்வழிச் சமூக அமைப்பின் ஒழுங்கிற்கும் நியதிகளுக்கும் உட்பட்டு, ஆணின் அதிகார எல்லைக்குள் ஓர் அடிமை போன்ற வாழ்வை மேற்கொண்டு ஆணுக்கு எல்லா வகையிலும் சேவகம் புரிவதையே பெண்ணுக்கான அறம் என்பதாகச் சமூகம் கற்பித்து வைத்திருக்கிறது (2010: 80).  வினையை ஆடவருக்கு உயிராகவும், பெண்களுக்கு அவ்வாடவரே உயிராகவும் ( குறுந்தொகை, 135) பெருமையும் வீரமும் ஆணுக்குரியதாகவும், அச்சம், மடம், நாணம் பெண்ணுக்குரியதாகவும் (தொல்காப்பியம், களவியல் 7,8) ஆண் அதிகாரம்/பெண் அடங்கிபோதல் என்ற பண்பாட்டு நிலையிலே இலக்கியங்கள் கட்டமைக்கின்றன.

    பாண்பாட்டுத் தளத்தில் கட்டமைக்கப்பட்ட கருத்தியல் அடிப்படையிலான அறங்கள் அணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறானவையாக அமைந்தன.

    ஆணுக்குப் பெருமை, வலிமை, அழகு, புகழ், அறிவு, கடமை, ஆள்வினை, உரிமை, செயலூக்கமான பாலியல், ஆட்சி அதிகாரம், செல்வம் ஆகியவை உயர் அறங்கள். பெண்ணுக்கு உடலின் மென்மை, அழகு, பணிவு, அடக்கம், அடங்கிய பாலியல், அச்சம், நாணம், மடம், கற்பு ஒழுக்கம், பொறுமை, சேவை, தியாகம் ஆகியவை உயர் அறங்கள்.

    பெண் என்பவர்

    பெண்ணை, இலட்சிய வாழ்க்கைத் துணைவி என்றோர் அசாதாரணமான சித்திரத்தை அறநூல்கள் வழங்குகின்றன. தாயுரிமை தூக்கி எறியப்பட்டது. பெண்ணினம் உலக வரலாற்று ரீதியில் பெற்ற தோல்வியாகும். ஆண் வீட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றினான்; பெண் இழிநிலைக்குத் தள்ளப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டாள். இவை முழுதும் ஏடறியா வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த நிகழ்ச்சியாகளாகும். இவை மெய்யாகவே நிறைவேற்றப்பட்டன என்பதற்குப் பாஹொஃபென் திரட்டியுள்ள தாயுரிமை பற்றிய ஏராளமான எச்சங்களே சாட்சியாகும் என்பது ஏங்கல்ஸ் கூற்று.     

    மென்மை

    வை யெயிற்று ஐயள் மடந்தை (நற்றிணை,2) அனிச்சம் பூவை உவமையாக 1111,1120ஆம் குறட்பாக்களில் மோந்தாலே வாடிவிடும் மென்மைமிக்க பூவினும் மென்மையானவளாக பெண்ணைப் படைக்கிறார் வள்ளுவர். உடற் கூற்றியல் அடிப்படையில் ஆணைவிடப் பெண்ணே வலிமையானவராக இன்றைய அறிவியல் கூறுகிறது. 

    அழகு

    சங்க இலக்கியங்கள் அழகு என்பது பெண்ணுக்குரியதாகவே அவர்களின் புற அழகிற்கு முதன்மைக் கொடுத்து (பெண்களின் ஒவ்வொரு உறுப்பையும்) வருணிக்கின்றன. வள்ளுவரும் ஒளி பொருந்திய நுதல்(1088) மான் போன்ற அழகிய பார்வை (1089) அழகிய மயில் (1081) அமிழ்தின் இயன்ற தோள் (1106) முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேல் உண்கண் வேய்த்தோள்(1113) மதியும் மடந்தை(1116) எனப் பெண்ணின் உடலுக்கு கொடுக்கும் முதன்மை பெண்ணின் அறிவுக்கு வழங்கவில்லை. 

    உடைமை

    பெண்ணின் இயல்புகளான குணங்கள் மறுக்கப்பட்டு உடைமைச் சமூகத்துக்கு ஏற்ற பெண்ணாக வள்ளுவம் கட்டமைக்கிறது. குறள் 1007  – இல் பொருள் இல்லாத வறியவருக்குப் பொருள் கொடுத்து உதவாதவனைக் கூறவந்தவர் மிக்க அழகு பொருந்திய பெண் தனிமையில் வாழ்ந்து முதுமையுற்றது போன்றது என்று எடுத்துக்காட்டுகிறார். ஒரு பெண் என்பவள் ஆணுக்குப் பயன்படுபவளாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். 

    கற்பு என்பது

    மனைவியாக அமைந்தவள் மாண்பினை உடையவளாகவும், கணவனின் வளத்திற்குத் தக்கவளாகவும் அமையவேண்டும். குடும்பத்திற்குத் தக்க சிறப்பில்லாத பெண் இல்லை என்றால் என்ன சிறப்பு இருந்தும் வீண். பெண்ணின் பெருமை கற்புடன் இருப்பது. கணவனைத் தொழுபவளுக்கு (வணங்குதலுக்கும் தொழுதலுக்கும் வேறுபாடு உண்டு, தாளை வணங்காத் தலை (9) , கொல்லான்…கைகூப்பி எல்லா உயிரும் தொழும் (260) வணங்குதல் – தலையின் செயல், தொழுதல் – கையின் செயல்) இயற்கையே கட்டுப்படும். தன்னையும் காத்து, கணவனையும் காத்து குடும்பப் புகழையும் காத்து ஓம்பவேண்டும். பெண் தன் கற்பினைத் தானே காக்க வேண்டும், சிறந்த மனைவியைப் பெறுவதே எல்லாவற்றையும் விடச் சிறப்பானது என வாழ்க்கைத்துணை நலம் கூறுகிறது.

    கற்புடை மனைவி இருக்கும் வீடே வீடாகும்; செல்வம் முதலியவற்றை விட இல்லக் கிழத்தியின் நற்குணமே இல்வாழ்க்கைக்கு முதன்மையானது (நாலடியார், 383) கற்புடைய பெண்களுக்கு நாணம் முதலியவை பெண்மையியல்புகள் அணிகளாகும் (நாலடி, 385); கற்புடைய மனைவி தூயர் ( நாலடி, 387); கற்புடைய மகளிர்க்கு தங் கணவர் மாட்டு அன்பு எந்நிலையிலும் குறையாது (நாலடி, 389). வினைத் திறன் அறியாத ஆண் மகனைக் காட்டிலும் கற்பமைந்த பெண்டிர் நல்லவர் ( நான்மணிக் கடிகை) தாரம் என்பவள் கணவன் குறிப்பறிந்து நடக்க வேண்டும் (முதுமொழிக் காஞ்சி,5, திரிகடுகம்,96, சிறுபஞ்ச மூலம், 15).

    உடைமை பொருள்

    பிறனில் விழையாமையில் பெண்ணைப் பிறன் பொருளாகக் (141) கூறுகின்றார் வள்ளுவர். மேலும் பிறன் இயலாள் என்றும் பிறன் வரையாள் என்றும் உடைமைப் பொருளாகவே பெண்ணைப் பதிவு செய்கிறார்.

    நிலைத்த மனம் இல்லார்

    கூடா நட்பு குறித்துக் கூறும்பொழுது உண்மையில்லாதவரிடம் கொள்ளும் நட்பு பெண்ணின் மனம் போல வேறுபடும் என்று கூறுகிறார். வரைவின் மகளிரில் பொருட்பெண்டிர் என்றும் அன்பில்லாதவர்கள், பண்பற்றவர்கள், நெஞ்சத்தை நிறுத்தியாளும் திறன் அற்றவர்கள், மாய மகளிர் என வரையறுக்கிறார். 

    காத்திருப்பவள்

    கணவன் பிரிவை எண்ணிக் கலங்கி  அழகு கெட காத்திருப்பவளாக(1157,1234) படைக்கிறார். 

    பெண் கொல்லும் படை

    ஆண்மகனை எதிர்த்து நிற்கும் பெண் எமன், அதிகாலையில் சமையல் அறைக்குச் செல்லாதவள் ஒருவனுடைய நோய், சமைத்ததைக் கணவனுக்கு எடுத்துப் படைக்காதவள் பேய், இப்படிப்பட்ட குணங்களை உடையவள் கணவனைக் கொல்லும் படை (நாலடி, 363) மனையாள் இல்லாத வீடு வீடன்று (நாலடி, 361)  கற்புடைய மகளிருக்குக் கடமை விருந்தோம்பல், இல்லத்தைக் காத்தல், மக்களைப் பெறல் இம்மூன்றும் (திரிகடுகம், 64). 

    முயன்று வினையாற்றாள்

    ஊழ் கூட்டாதவிடத்தும், அரிய காரியங்களைச் செய்தலில் தளர்வின்றிருந்து முயலும் ஆண்மை தாளாண்மையாகும். ஊழ் கூட்டி முடிப்பது பெண்டிரின் செயல் (194). 

    ஆண் செய்யக் கூடாதவை

    கற்புடைய மகளிரை அடித்தல் மனிதனின் அறியாமை (திரிகடுகம், 3) விருப்பம் இல்லாத பெண்களிடம் ஆண்கள் இன்பம் துய்ப்பது அருந்துயர் கொடுக்கும் (திரிகடுகம், 5). பெண்வழிச் சேரலில் பத்துக் குறளிலும் மனைவின் சொற்படி நடக்கும் ஒருவன் வாழத் தகுதியில்லாதவனாக உருவாக்கியுள்ளார் வள்ளுவர். 

    அறிவும் வேண்டும்

    அழகோடு, வாழ்க்கையை நடத்தும் நல்லறிவும் உடையவள் இல்வாழ்க்கைக்குரிய துணைவி ( நான்மணிக்கடிகை,54) பெண்ணிடம் அழகு இல்லாவிட்டாலும் மாட்சிமையுடைய இயல்புகள் இருக்கும் (திரிகடுகம்,64)

    ஆணும் பெண்ணும் எண்ணும் எழுத்தும் அறிந்திருக்கவேண்டும் என நாலடியாரும் ஏலாதியும் கூறுகின்றன.

    குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
    மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
    நல்லயாம் என்னும் நடுவு நிலைமையால்
    கல்வி யழகே அழகு (நாலடியார், 14) 

    இடைவனப்பும் தோள்வனப்பும் ஈடின் வனப்பும்
    நடைவனப்பும் நாணின் வனப்பும் – புடைசால்
    கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோடு
    எழுத்தின் வனப்பே வனப்பு (ஏலாதி – 74) 

    பெண் – மதிப்பீடு

    மதிப்பு என்பதற்கு அளவிடுகை, கௌரவிக்கை, உவமைச் சால மதிப்பொழிந்த வல்லமார் மாண்டார் (தேவாரம்,1014) கருத்து, மண்ணுலகாளும் மதிப்பை யொழித்தே (பிரமோத்.8, 99) (தமிழ் லெக்ஸிகன், பகுதி,5,பக்.3057) மதிப்பீடு என்பது ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றிக் கொண்டிருக்கும் கண்ணோட்டம் அல்லது கருத்து (க்ரியா அகராதி.பக்.1071)  எனவும் அகராதிகள் விளக்கம் அளிக்கின்றன.

    ஆண்கள் படைத்துள்ள படைப்புகளில் பெண் குறித்தான மதிப்பீடுகள் பற்றிய ஆய்வை நிகழ்த்திய மேரி எல்மான் எழுதிய பெண்களைப் பற்றிய சிந்தனை என்ற நூலில் ஆண்கள் படைத்துள்ள படைப்புகளில் பெண்கள் என்போர் அடங்கிப் போகும் குணமுடையவர்களாக (passivity) உருவமற்றவர்களாக (formlessness) மன உளைச்சலுக்கு ஆட்பட்டவராக (instability) கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்களாக (confinement) கடமையுணர்வு உடையவர்களாக (piety) பொருள் பற்றுடையவர்களாக (materiality) ஆன்மீக நம்பிக்கை உடையவர்களாக (spirituality) பகுத்றிவுக்கு மாறானவர்களாக (irrationality) கவர்ச்சி மற்றும் சூன்யம் உடையவர்களாக (witch) அடங்காப் பிடாரிகளாக (shrew) குறை கூறுபவர்களாக (compliancy) என்ற முரண்பட்ட குணமுடையவர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். சமூகம், பண்பாடு அரசியல் மற்றும் தனிப்பட்ட சூழல் என்று எல்லா நிலைகளிலும் ஆண் மேலாதிக்கம் வேரூன்றியிருப்பதால், அவர்கள் படைத்த இலக்கியங்களிலும் அதற்கு விதிவிலக்காக அமையவில்லை என்றார் எல்மன் ( 2010; பக்.81).

    அற இலக்கியங்கள் கூறிய கற்பு, காவல், கணவன்வழிபாடு ஆகியவை கட்டுப்பாடுகளும் பெண்ணின் பாலியல் செயல்பாட்டை அவளது கணவனை மட்டும் சார்ந்திருக்க அவளை ஒழுங்குபடுத்துகின்றன. பாலியலில் நடைமுறைப்படுத்தப்பட்ட இச்சார்பு நிலை பெண்களை, சிறு வயது முதல் சாகும் வரை ஆணைச் சார்ந்து வாழும் இயல்புடையவர்களாக ஆக்கியது. பெண்ணின் பாலியல் அறம் காவலால் சாத்தியமாகவும், அவர்களே நிறையாக இருக்கவேண்டும் என்றும் அற இலக்கியங்கள் வற்புறுத்துகின்றன.

    அற இலக்கியங்கள் முன்வைக்கும் பெண் குறித்தான மதிப்பீட்டைக் கீழ்க்கண்டவாறு வரையறுத்துக் கொள்ளலாம்.

    • இல்லறத்தை நல்லறமாகப் போற்றுபவர்
    • இல்லத்திற்கு இன்றியமையாதவர்கள்
    • கற்புடையோர் பெய்யென்றால் மழையும் பெய்யும்
    • விருந்தோம்பும் பண்புடையவர்கள்
    • கணவன் எவ்வழியோ அவ்வழி நடப்பவர்கள்
    • கணவனைத் தெய்வதிற்கு மேலாக உயிரைவிட மேலாகப் போற்றுபவர்
    • மென்மையுடையவர்கள்
    • பிரிவுத் துயரில் உழல்பவர்கள்
    • திருமணமே முதற்கடமை
    • உடைமைப் பொருள்
    • குடும்பத்தில், பொதுவெளியில் தம் கருத்தைக் கூற இயலாதவர்கள்
    • உறுதியான மனம் இல்லாதவர்கள்
    • கணவனை இழந்தால் வாழ்வே இல்லை என்று எண்ணுபவர்கள்
    • கணவனுக்குத் தேவையானதைச் செய்யாதவர்கள் கொல்லும் படை போன்றவர்கள்

    அற இலக்கியங்கள் கட்டமைக்கும் பெண்கள் ஆண் மையச் சமூகத்தில் ஆணுக்கான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யபவர்களாகவும், தம் விருப்பங்களை மனதுள் வைத்து பூட்டியவர்களாகவும் இருக்கிறார்கள். குடும்ப அமைப்பில் அவர்களுக்கான இடம் குறித்து மிகவும் சுருக்கப்பட்டதாவே அமைந்திருக்கிறது. சமூகவெளியில் அவர்களுடைய செயல்பாடுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சிலவிடத்துப் பெண் அறிவு சார்ந்த சிந்தனையும் வெளிப்பட்டுள்ளது.  வால்கா முதல் கங்கை வரை நூலில் வங்க எழுத்தாளர் ராகுல சாங்கிருத்தியாயன் தாய்வழிச் சமூகம் இருந்துள்ளதை தக்க சான்றுடன் எடுத்துரைப்பார். அந்த வகையில், 

    பெண்ணே அருகில் வா, நான் கூறுவதைக் கேள், பயனுள்ள விசயங்கள் மீது ஒருமுறை உனது ஆர்வத்தைத் திருப்பு. இயற்கை உனக்கு வழங்கிய இச்சமூகம் தட்டிப் பறித்த ஆதாயங்களைக் கருதிப்பார். நீ ஆணுடைய கூட்டாளியாகப் பிறந்து எப்படி அவனுடைய அடிமையானாய் என்பதை அறிவதற்கு அருகில் வா, செயற்கையான நிலைமைகளை எவ்வாறு இயற்கை என்று நினைத்து நீ அதனை விரும்பத் தொடங்கினாய் என்பதை அறிந்திட வா. நீண்ட கால அடிமைப் பழக்கம் உன்னைக் கீழ்மைப்படுத்தியதை அறிந்திட வா. சுதந்திரம், புகழ் ஆகியவற்றின் மேன்மைகள் கடினமானவை என்று ஒதுக்கிவிட்டுச் சொகுசான இழிவுகள் போதுமென்று எவ்வாறு தெரிவு செய்தாய் என்பதை அறிந்திட வா. நான் வரைகின்ற இந்தச் சித்திரம் உன்னை உன் கட்டுக்குள் வைக்கும் என்றால், இது பற்றி உணர்ச்சி கலவாமல் உன்னால் சிந்திக்க முடியும் என்றால் பயனற்ற உனது வேடிக்கை விளையாட்டுகளுக்குத் திரும்பிப் போய்விடு. இதற்கு மருந்து ஏதுமில்லை, இழிவுகள் பழகிவிட்டன (2010; பக்.23,24). 

    என்னும் கூற்றுக்கிணங்கப் பெண்கள் மெல்ல மெல்லத் தமக்கான இயல்பைவிட்டு ஆண் மையச் சமூகம் உருவாக்கிய கருத்திற்குள் தம்மைப் பழக்கிக்கொண்டு அதனை வழக்கமாக்கிக் கொண்டனர்.  எலைன் ஷோவால்டர் கூறுவதுபோலப் பெண்ணைச் சக உயிரியாகப் பாவிக்காமல், பெண்மை என்னும் பண்பாட்டு அடிப்படையிலேயே அற இலக்கியங்களைப் பெண்ணுக்கான புற உருவத்தைக் கட்டமைத்து, அவர்களின் அகத்தைப் புறந்தள்ளியுள்ளது.

    உசாத்துணை

    1. பக்தவசல பாரதி, சம்பத் இரா., (ப.ஆ) 1998. பெண்ணிய ஆய்வுகள், முதற்பதிப்பு, புதுச்சேரி: புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்.
    2. பக்தவசல பாரதி, 2011, பண்பாட்டு மானிடவியல், முதல் பதிப்பு, திருச்சி: அடையாளம் பதிப்பகம்.
    3. மகாராசன், 2010. பெண்மொழி இயங்கியல், முதற்பதிப்பு, சென்னை: தோழமை வெளியீடு.
    4. முருகேசபாண்டியன் ந., 2014. அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில், முதல் பதிப்பு, சென்னை: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்.
    5. ஜர்மெய்ன் கிரீர், ராஜ்கௌதமன் (தமிழில்) 2011. பாலற்ற பெண்பால் பெண்பால் நபும்சகம், கோவை: விடியல் பதிப்பகம்.

    *****

    கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்
    தமிழியல்துறை
    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
    அண்ணாமலை நகர் – 608002
    Mail – kalpanasekkizhar@gmail.com

         

    Share