தொல்காப்பியப் பொருளதிகாரம் – தொடக்க கால ஆய்வுகளும் போக்குகளும் (1902 – 1950)

-முனைவர் கல்பனா சேக்கிழார்

தொடக்க கால ஆய்வுகளும் போக்குகளும் (1902 – 1950)

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறிமுக நிலையில் அறியப்பட்ட தொல்காப்பியம் பொருளதிகாரம், 20ஆம் நூற்றாண்டில் தமிழ்ச்  சமூகத்தின் வரலாற்றுப் பிரதியாக, பண்பாட்டுப் பிரதியாக, மொழிப் பிரதியாக, தமிழிரின் அடையாளத்தைக் கொண்டுள்ள தொல்பழம் பிரதியாக உருப்பெறுகிறது. அதன் காரணமாகத் தொல்காப்பியம் தேடித்தேடி மூலப் பதிப்புகளும், உரையோடு கூடிய பதிப்புகளும் பெருமளவு பதிப்பிக்கப்படுகிறன. அதன் தொடர்ச்சியாகப் பதிப்பித்த பிரதியின் மீதான விவாதங்களும் தொடங்குகின்றன.

இதனை மூன்று வகையாக நாம் பிரித்து நோக்கலாம்.

 1. இதழ்களில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்
 2. தொல்காப்பியம் குறித்த ஆய்வு நூல்கள்
 3. தொல்காப்பியம் தொடர்பாகக் கல்விப்புலங்களில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள்

இதழ்களில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்

சி.வை. தாமோதரன் பிள்ளையால் 1885-இல்  வெளியிட்டப்பட்ட, பொருளதிகார உரைப்பதிப்பு முழுதும் நச்சினார்க்கினியருரையல்ல, பின்னான்கு இயல்கள் பேராசிரியரால் உரை எழுதப்பட்டது, என்னும் விவாதத்தை இரா. இராகவையங்கார் 1902-இன் இறுதியில், முதல் இதழாக வெளிவந்த செந்தமிழ் இதழில் அச்சிட்ட தொல்காப்பியச் செய்யுளியலுரைகாரர் பேராசிரியரென்பது என்னும் தலைப்பில் பதிவு செய்கிறார்.

அச்சிடப்பட்ட தொல்காப்பியச் செய்யுளியலுரைக்காரர் பேராசிரியர் என்பது என்னும் கட்டுரை தொடங்கி தொல்காப்பிய உரை குறித்த கருத்தாடலைத் தொடர்ந்து ரா. ராகவையங்கார் முன்வைக்கிறார். இதுவே தொல்காப்பியம் பொருளதிகாரத்திற்குக் கிடைக்கும் நச்சினார்க்கினியர் உரை முதல் ஐந்து இயலுக்கும் செய்யுளியலுக்கும் கிடைக்கிறது என்பதும், பின்னான்கு இயலுக்குப் பேராசிரியர் உரை கிடைக்கிறது என்பதும் அறிய வருகிறது. இந்த புரிதல் இல்லாது பதிப்பித்த சி.வை.தா.வை அவர் எங்கும் விமர்சனம் செய்யவில்லை.  அத்துடன் இன்னும் நச்சர். பேராசிரியர் உரை இல்லாது பழைய உரையொன்று தொல்காப்பியத்திற்குக்(பொருளதிகார செய்யுளியலுக்கு) கிடைக்கிறது என்று ஆராய்ச்சி கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இதுகாறும் வெளிவராத தொல்காப்பியச் செய்யுளியற் பழைய உரையொன்று இச் சங்கத்திற்கியான் ஏடு தேடிச் சென்றபோது கிடைத்து. அதனை யுற்று நோக்கின் இத்தகைய வேற்றுமை பெரிதும் புலனாவது. அவ்வுரை பேராசிரியர், நச்சினார்க்கினியருரைகளின் வேறாகும். இவ்விரண்டாசிரியர்களாலும் குறிப்பிடப்படாத பேதங்கள் அப்பழைய வுரைக்கண்ணே காணப்படுகின்றன[1]

இதனைத் தொடர்ந்து தொல்காப்பிய நூலின் அமைப்பு, அதன் ஆசிரியர், காலம், சமயம், உரையாசிரியர் மரபு ஆகியன குறித்த விவாதங்கள் மேலெழுப்பப்பட்டன. செந்தமிழ் இதழோடு 1923 – இல் தொடங்கப்பட்ட செந்தமிழ்ச் செல்வி இதழும் 1925 – இல் தொடங்கப்பட்ட தமிழ்ப்பொழில் இதழும் தொல்காப்பிய ஆய்வை வளப்படுத்தின.

இம்மூன்று இதழ்களிலும் இரா. இராகவையங்கார், மு. இராகவையங்கார், அ. குமாரசாமிபிள்ளை, நாராயணயங்கார், டி. என். அப்பனையங்கார், எஸ். வையாபுரிப் பிள்ளை, வே. முத்துசாமி ஐயர், ந.மு. வேங்கடசாமி நாட்டார், கே.எஸ். நவநீதகிருஷ்ணபாரதி, மயிலை சீனி. வேங்கடசாமி, நாராயணயங்கார், டி.என். அப்பனையங்கார், பி.சா.சுப்பிரமணியம், தி.வை. சதாசிவ பண்டாரத்தார், நீ. கந்தசாமிப்பிள்ளை உள்ளிட்ட பலரும் மேற்கொண்ட ஆய்வுகள் தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வில் புதிய பாதைகளை உருவாக்கித்தந்தன.

1904–இல் செந்தமிழ் இதழில் அச்சிட்ட தொல்காப்பிய மரபியலுரை என்னும் தலைப்பில் ரா. ராகவையங்கார் தொடர்ச்சியாக நச்சர் உரை அல்ல வேறு உரை என எழுதுகிறார்.

வே. முத்துசாமி ஐயனும், மு. இராகவையங்காரும் தொல்காப்பியம் பொருளதிகாரம் ஆராய்ச்சி என்னும் தலைப்பில் தொடர் கட்டுரையாக 1912-இலிருந்து எழுதியுள்ளனர். அவை தொல்காப்பியப் பொருளதிகாரத்தைத் தமிழ்அறிவு புலத்தில் அறிவதற்கான கட்டுரைகளாக அமைகின்றன. அன்று பதிப்பிக்கப்பட்ட உரைகளிலிருந்தும், பின் வந்த இலக்கண நூல்களிலிருந்தும் விளக்கமாக உரைநடை வடிவிலும், தேவைப்படும் இடங்களில் நூற்பாக்கள் எடுத்தாளப்பட்டும் எழுதப்பெற்றன.

1919–இல் செந்தமிழ் இதழில் தொகுதி-18, பகுதி – 3 – இல் அ. குமாரசாமிப் பிள்ளை உவமப் போலி என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுகிறார். அதே ஆண்டு அடுத்த இதழில் திரு. நாராயண அய்யங்கார் பிள்ளை அவர்கள் காட்டிய உவமைப்போலி பக்கப்போலிகளின் பெயர்களிலும் உரைகளிலும் உள்ள பிழைகளைத் திருத்தியும், பெயர்கள் அளவிலேயே விடுப்பட்டவைகளை உதாரணங்காட்டி விளக்கியும், உரை வேறுபாட்டிற்குச் சமாதானம் கூறியும் தெளிவுபடுத்தியுள்ளார்.

தொல்காப்பிய அகத்திணை, உவமை, யாப்பு, தொல்காப்பியரின் சமயம் குறித்து எனச் செந்தமிழில் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தொல்காப்பியத்தை அடிப்படையாக கொண்டு தமிழிரின் வாழ்வியல் முறைகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியாக, தமிழ் இலக்கணமும் தமிழ் நாட்டின் இல்லற வாழ்க்கையும், பண்டைய தமிழர் மணமுறை, இன்பச்சுவை, தொல்காப்பியக் கடவுள், தமிழ்நெறி விளக்கவாராய்ச்சி, புறப்பொருள் மக்கள் என்னும் நிலைகளில் தமிழ்ப்பொழிலில் கட்டுரைகள் அமைந்துள்ளன. செந்தமிழ்ச் செல்வியில் பெரும்பான்மையான கட்டுரைகள் இளவழகனார் கட்டுரைகளாக அமைந்துள்ளன. அவை அகப்புறத் துறைகளை ஆய்வு செய்வனவாக அமைந்துள்ளன. ஒருவழித்தணத்தல், பாங்கற் கூட்டம், பொருள்வயிற் பிரிவு, மடற்திறம், மதியுடம்படுத்தல், சேட்படை, நொச்சித்திணை, பாடாண்திணை, வஞ்சித்திணை, பொதுவியல், தும்பைத்திணை, வெட்சித்திணை, கரந்தைத்திணை, காஞ்சித்திணை, கைக்கிளைத்திணை என்பனவாகும்.

பூரணலிங்கம் பிள்ளை அவர்களால் 1927-இல் செந்தமிழ்ச்செல்வி சிலம்பு – 5, பரல்-9 இல் பொருளதிகாரம் என்னும் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.  பொருளதிகாரம் ஒன்பது இயல்களின் அமைப்பு குறித்து விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

தொல்காப்பியம் குறித்த ஆய்வு நூல்கள்

தொடக்கக் காலத்தில் தொல்காப்பியப் பொருளதிகாரம் குறித்து திரு. முத்துசாமி ஐயன், பெயர் தெரியாத ஒருவர், திரு. மு. இராகவையங்கார், பேராசிரியர் கா.சு. பிள்ளை, திரு. தி.சு. பாலசுந்தரம் பிள்ளை ஆகியோர் விவரணை நிலையில் தங்களுடைய ஆய்வுகளை முன்னெடுத்தனர். இவ் ஆய்வுகள் தொல்காப்பியத்தின் ஒரு பகுதியாக அமைந்த பொருளதிகாரத்தினைத் தமிழர் வாழ்வியலோடு இணைத்து விவாதிப்பதாக அமைந்துள்ளன. மு. இராகவையங்கார் செந்தமிழில் எழுதிய தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி என்னும் தொடர்கட்டுரை 1922 – இல் நூலாக்கம் பெற்றது.

கொழும்பினைச் சேர்ந்த கு. ஸ்ரீகாந்தன் 28.8.1012 – இல் மு. இராகவையங்காருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடித்தில், அறிவிப்புப் படி மு. இராகவையங்காரின் தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி என்னும் நூலில் சில மாதங்களுக்குமுன் பத்திரிகைகளிற் பிரசுரஞ்செய்திருந்தபடி, எனக்கு வந்த தொல்காப்பியப் பொருளதிகார வியாசங்களைத் தக்க மத்தியஸ்தர்களைக்கொண்டு ஆராய்ந்து பார்த்ததில் தாங்கள் எழுதியதே முதன்மை பெற்று விளங்குவதாகத் தெரிந்தமையின், முன்பு பரிசு கொடுப்பதாக வாக்குத்தத்தஞ்செய்திருந்த ரூ. 200 – ஐயும் இன்று மணியாடர் மூலந் தங்களுக்கு அனுப்பியிருக்கிறேன்[2] என்று எழுதியுள்ளார். தொல்காப்பியம் பொருளதிகாரம் குறித்து விவரண நிலையில்  எழுதப்பட்ட அந்நூல் 1922-இல் வெளிவருகிறது அதன் முகவுரையில்…

”நான் எழுதி முடித்து பத்து வருஷங்களாகியும், இதுவரை அச்சிடப்படாமல் தாழ்க்கும்படி நேர்ந்தது என் துரதிருஷ்டமே. இவ்வாறு தாமதிக்க நேர்ந்ததற்கு – இதனை எழுதுவித்த பிரபுவினிடம் இருந்த சுத்தப் பிரதியை அவர் நண்பரொருவர் பார்வையிடும் பொருட்டு இட்டாலி தேசத்திற்குக் கொண்டுபோகும்படி நேர, அப்போது ஐரோப்பிய மகாயுத்தம் தொடங்கி அத்தேசத்தையும் பீடித்ததே முக்கியகாரணமாகும். அப்பெரும்போர் முடிந்த பின்னே இதன் கையெழுத்துப் பிரதியை அவர்கள் பெறும்படியாயிற்று. பிரதி கிடைத்ததும் என் விருப்பத்திற்கிணங்கி யானே அச்சிட்டுக்கொள்ளுமாறு அப்பிரபு அவர்கள் அன்பு கூர்ந்து அதனை அனுப்பினார்கள்[3] என்று குறிப்பிடுகிறார்.

இந்நூலுள் மூலப்பிரதியுடன் சில திருத்தங்கள் செய்தும், நூல் வெளியீட்டின் போது இளம்பூரணர் எழுதிய அகத்திணை, புறத்திணைப் பகுதிகள் வெளிவந்திருந்த காரணத்தால், அவ்வுரையில் காணப்பட்ட சிறப்புக் குறிப்புகளை இணைத்தும் வெளியிட்டுள்ளார். இந்நூல் பற்றிக் குறிப்பிடும்போது,

பரிசுத்தொகைக்காக 100 பக்கங்களுக்குள் அனுப்பப்பட்டது என்றும், சி.வை.தா அவர்கள் பதிப்பித்த பொருளதிகாரப் பதிப்பினையும் அந்நூற்பாக்களின் வரிசை எண்ணையும் இந்நூலுக்குப் பயன்படுத்திக் கொண்டதாகத் தெரிவிக்கிறார். இந்நூலுள் அகப்பொருள் குறித்து வெவ்வேறு இயல்களில் எழுதப்பட்டுள்ளவற்றை தொகுத்தும் எளிதில் விளங்குமாறு எழுதியுள்ளார். புறப்பொருள் குறித்து விரிவாகவும், உவமையியல், மெய்ப்பாட்டியல், செய்யுளியல் குறித்து சுருக்கமாகவும் எழுதியுள்ளார். அத்துடன் இறுதியல் பொருட்குறிப்பு அகராதியும் தரப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, 1928 – இல் இரண்டாம் பதிப்பு வெளிவருகிறது. அதன் முன்னுரையில்,

இற்றைக்குப் பதினாறாண்டுகளுக்குமுன் என்னால் எழுதப்பெற்ற தொல்காப்பியப் பொருளதிகாரவாராய்ச்சி வெளிவந்தது முதல் தமிழ் மக்களால் அது விருப்புடன் ஏற்றுப் படிக்கப்பெற்று வருவதற்கும், சென்னைச் சருவகலாசங்கத்தாரால் உயர்தர ஆங்கிலப்பரீக்ஷைகட்கும் வித்துவான்பரீக்ஷைக்கும் பலமுறை பாடமாக வைத்துக் கௌரவிக்கப்பெற்று வருவதற்கும் நான் பெரிதும் உவப்பும் ஊக்கமும் அடைகிறேன். இதன் முதற்பதிப்பு முழுவதும் செலவாயினமையால், இரண்டாம் முறையாக இப்பதிப்பு இப்போது வெளியிடப்பெறுகிறது. பெரிய மாற்றங்களின்றிப் பெரும்பான்மை முன்னமைந்த முறையே இப்பதிப்பு கொண்டுள்ளது. ஆயினும், இன்றியமையாத திருத்தங்களும், புதிய செய்திகளும், கீழ்க்குறிப்புகளும் ஆங்காங்கு அமைத்துள்ளேன். இறுதியில் உள்ள பொருட்குறிப்பகராதி புதிதாகவே சித்தஞ்செய்யப்பட்டது[4] என்னும் குறிப்பிலிருந்து, இந்நூல் அன்று பாடசாலைகளில் பாடமாகவிருந்ததும், தொல்காப்பியப் பொருளதிகாரத்தைத் தமிழ் மக்களின் வாழ்வியல் நூலாகவும் கற்றனர் என்பதையும் அறியமுடிகிறது. பேராசிரியர் க. வெள்ளைவாரணன் இந்நூல் பற்றி கூறும்பொழுது, நச்சினார்கினியர் அடியொற்றி விளக்கியுரைக்கப்பட்டு, வடமொழி சார்புடைத்து என்று கூறியிருந்தாலும் அன்றைய சூழலில் தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்திய நிலையில் இந்நூல் முக்கியம் வாய்ந்ததாகவே உள்ளது.

வே. முத்துசாமி ஐயன் அவர்கள் செந்தமிழில் எழுதிய தொல்காப்பியம் பொருளதிகார ஆராய்ச்சி என்னும் தலைப்பில் தொடர்கட்டுரை நூலாக்கம் பெறவில்லை. ஆனால் அவருடைய கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.  அக்கட்டுரையில் தொல்காப்பியத்தின் சிறப்பு பொருளதிகாரத்தின், அப் பொருளிலக்கணம் இத்தகைத்து என்பதும், அப் பொருளிலக்கணம் கருவியாக அறியப்பெறும் பண்டைக்காலத்தாரது வழக்கங்களும் நடையுடை பாவனை முதலியவைகளும் இவைஇவை என்பதும் மற்றும் இவைபோல் நுணுகி அறியப்படுவன இன்ன இன்ன என்பதும், பிறவும் ஒருவாறு இவ் வியாசத்தின்கண்ணே விளக்கிக்காட்டப்படும்[5] என்று குறிப்பிடுட்டுள்ளார்.

வேங்கடராஜலு ரெட்டியாரின் இலக்கணக் கட்டுரைகளில் செய்யுளியலில்  உறுப்புகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. அசை, சீர் இவற்றை ஆராயும்போழ்து இளம்பூரணருரையும் படிக்க எண்ணினேன். அக்காலத்தில் (1922) அவ்வுரை அச்சாகவில்லை. ஆயின், அதன் திருத்தமான ஏடு திருவாளர் S.வையாபுரிப்பிள்ளையிடம் (தமிழ் லெக்ஸிகன் பதிப்பாசிரியர்) இருந்ததையறிந்து, அவர்களை வேண்டிக்கொண்டேன். அவர்கள் அவ்வுரைப் பிரதியை அன்புடன் உவந்துதவினார்கள்[6].

1938–இல் வெளிவந்த இளவழகனாரின் இன்பவொழுக்கம் அல்லது தொல்காப்பியம் அகத்திணையியல் விளக்கம் என்னும் நூலின் அணிந்துரையில் பேராசிரியர் கா.சு. பிள்ளை அவர்கள், இந்நூலின் பொருளதிகாரத்தை யாவர்க்கும் எளிதாக விளங்கும் பொழிப்புரையுடனும் செவ்விய கருத்து விளக்கத்துடனும் கண்கவர் வனப்புடைய, கைக்கு அணியாதற்குரிய பத்துச் சிறு புத்தகத் தொகுதியாக வெளியிடுவதற்குப் பொருளுதவி புரிய முன்வைத்துள்ளவர் சேலம் செவ்வாய்ப்பேட்டை சைவத் திருவாளர் ஆ. மாணிக்க செட்டியாரவர்களாவர். வணிகத் துறையிற் சிறந்து தமிழன்பே உருவாயிலங்கும் அவ் வீரர் கூலவணிகன் சாத்தனாரை இற்றை நாளில் நினைவுறுத்துஞ் சீர் வாய்ந்தவராவர். அவர்கட்குத் தமிழுலகம் என்றும் நன்றி பாராட்டுங் கடப்பாடுள்ளது[7] என்று குறிப்பிடுகிறார்.

இந்நூல் அகத்திணையியல் நூற்பாக்கள் அவற்றுக்கு விளக்கம், அகத்திணையியலின் கருத்துக்கள், உயர்ந்த இன்ப வாழ்க்கை, அகத்திணையால் அறியப்படுகிற தமிழ்நாட்டுக் குறிப்புகளிற் சில, அகத்திணையியல் அகராதி என்னும் நிலையில் அமைந்துள்ளது. இக்கருத்துக்களின் மையம் தொல்காப்பியப் பொருளதிகாரம் தமிழ் மக்களின் வாழ்வியலை நாகரிகத்தை முன்வைப்பதாக வாதிடுகிறது. அதற்கான  சான்றுகள் விவரணைகளுடன் அமைகிறது.

1939இல் கா. சுப்பிரமணிய பிள்ளையின் பழந்தமிழர் நாகரிகம் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து என்னும் நூல்  ஆ. மாணிக்கம் அவர்களால் தமிழ்நெறி விளக்கப் பதிப்பகத்தின் வெளியீடாக வந்தது. மறுபதிப்பாகச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1968-இல் வெளியிட்டுள்ளது.

இதன் முன்னுரையில் சிறப்பு வாய்ந்த நூலாகிய தொல்காப்பியமானது இக்காலத்தில் எளிதிற் பொருள் விளங்கப் பெறாமையால் கற்கப்படுவது இல்லை. அதன் சிறந்த கருத்துகளனைத்தையும் இது தொல்காப்பியப் பெருநூலைக் கற்றறிவதற்கும், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க இலக்கியங்களை ஆய்தறிவதற்கும் தக்க தோற்றுவாயாக அமைந்துள்ளது[8] என விளக்கமளிக்கிறார்.

நூலின் தொடக்கத்தில் சேர்க்கை என்று திருக்கோவையாரில் உள்ள 24 துறைகள் குறித்த துறைவிளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குத் தொல்காப்பியப் பொருளதிகார அகப்பொருட் சார்பான இயல்களில், துறை வரிசை கூறப்படாது, தலைவன் தலைவி முதலியோர் கிளவி நிகழும் இடங்களே தொகுக்கப்பட்டிருத்தலின், அவற்றைக் கற்பதற்கு முன், துறை வரிசை அறிதல் அவசியம். திருச்சிற்றம்பலக் கோவையாருள் காணப்படும் துறை வரிசையைக் கற்றுக்கொள்ளுவது போதிய துணைபுரியும் ஆகலின், அவ்வரிசைகளை இங்கே தொகுத்துத் தருகிறேன்[9] என்று விளக்கம் தருகிறார்.

இப்பிரதியுள் தொல்காப்பியம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள், தொல்காப்பியக் காலம் குறித்த செய்திகளைக் கொடுப்பதுடன், தொல்காப்பியத்தின் சில பகுதிகள் பிற்காலத்தவென்னில், அப்பகுதிகள் பிற்காலத்தே சேர்க்கப்பட்டனவென்று கொள்ளுவதே பொருத்தமாகும் என்ற கருத்தும் சுட்டப்பட்டுள்ளது.  பொருளிளக்கணத்தின் சிறப்புகள் கூறப்பட்டப்பிறகு, அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமயியல், செய்யுளியல், மரபியல், புறத்திணையியல் என்னும் வரிசையில் ஒவ்வோர் இயல் குறித்த விளக்கம் கூறப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் நூற்பாக்களையும் உரையாசிரியர்கள் கருத்துகளையும் எடுத்துக்காட்டியும், சான்றுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

1945–இல் பண்டைய தமிழர் இன்பியல் வாழ்க்கை என்னும் தலைப்பில் இளவழகனார்  எழுதியுள்ளார். நூல் எழுதப்பட்டதற்கான காரணம் குறித்து, தமிழெனவொரு தனிமொழி யுளதா வெனக் கேட்கப்படும் காலம் மாறி தமிழும் உயர் தனிச் செம்மொழியே என்றும் உயர்தனிச் செம்மொழிகள் யாவற்றினும் தமிழ் தலை சிறந்தது என்றும்,  உலக மொழிகளனைத்திற்கும் தமிழ் தாய்மொழி என்றும் உவந்து கூறுங் காலமன்றோ விது. இற்றைநாள் ஆராய்ச்சியாளர் இம்முடிவுக்கு வர ஏதுவாயிருந்தன புதைபொருளும், மொழிமூல ஆய்வுமேயாகும். தண்டமிழ்ப் பண்டைப் பனுவல்களும், இவ்வாய்வுக்கு மேற்கொள்ளப்படின் பெரிதும் சிறக்கும். ஆகவே, பண்டைத் தமிழ்மக்களின் நாகரிக வாழ்வை மக்கட்குக் காட்டுதற் பொருட்டாம், பண்டைத் தமிழ்நாடு, மக்கள், மொழி ஆய்வுகட்குப் பண்டைத் தமிழ்ப் பனுவல்கள் பெரிதும் பயன்படும் என்பதை விளக்குதற் பொருட்டும், பண்டைத் தமிழ்நூல்கள் கற்கும் அவாவை மக்கட்கு ஊட்டுதற் பொருட்டும், அவை கற்பதற்கு இஃது ஓர் ஏணியாக உதவுதற் பொருட்டும் இந்நூல் எழுதப்பெற்றுள்ளது[10] எனப் பகர்கிறார்.

இந்நூலூள், இயற்கைப் புணர்ச்சி, பாங்கற் கூட்டம், மதியுடம்படுத்தல், மடற்றிறம், சேட்படை, பகற்குறி, இராக்குறி, ஒருவழித்தணத்தல், அறத்தொடு நிற்றல், திருப்பொன்னூசல், பொருள்வயிற் பிரிவு, இல்லற வாழ்க்கை எனப் பன்னிரண்டு தலைப்புகளில் விளக்கப்பட்டுள்ளது. நூல் தொடக்கத்தில் 12 தலைப்புத் தொடர்பான சித்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இலக்கண இலக்கியங்களை ஆய்ந்து கோவைப்படுத்தி தொகுத்து ஆராயப்பட்டுள்ளது. இளவழகனார் அவர்களால் செந்தமிழ்ச் செல்வியில் எழுதப்பட்ட கட்டுரைகளை அரிய திருத்தங்களுடனும், அவ்வத் தலைப்புகளை விளக்கும் குறிப்புகளுடனும் வெளியிடப்பட்டுள்ளது.

தொல்காப்பியம்  பொருளதிகாரம் ஆய்வேடு

1942–இல் அ. சிதம்பரம் செட்டியார் அவர்கள் தொல்காப்பியப் பொருளதிகாரம் செய்யுளியலை அடிப்படையாகக் கொண்டு, ADVANCED STUDY IN TAMIL PROSODY என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வேட்டினை வழங்கியுள்ளார். 2015–இல் இவ்வாய்வேட்டின் மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. இவ்வாய்வேடே தமிழில் யாப்பியல் குறித்து நிகழ்த்தப்பட்ட முத்ல முனைவர்பட்ட ஆய்வேடாகும்.  தொல்காப்பியம் செய்யுளியலை அடிப்படையாகக் கொண்டு பின்வந்துள்ள இலக்கண நூல்களுடன் ஒப்பிட்டு ஆராயப்பெற்றுள்ளது.

தொல்காப்பியப் பொருளதிகார இடைக்கால ஆய்வுப்போக்குகளைக் கீழ்க்கண்டவாறு தொகுத்துக்கொள்ளலாம்.

 • 1902-இல் தொடங்கப்பட்ட தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வுகள், தொடர்ச்சியாக ஆய்வுநிலைகளில் வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் உள்ளன.
 • தொடக்கத்தில் பதிப்பு குறித்த ஆய்வுகளாக இருந்தாலும், அகத்திணைக் குறித்தும், புறத்திணை குறித்தும், செய்யுளியல் குறித்துமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாய்வுகள் அனைத்தும் தொல்காப்பியத்தைப் புரிந்துகொள்ளுதலும், முன்வந்துள்ள ஆய்வுகளை மறுப்பதும் போன்ற நிலைகளில் காணப்படுகின்றன. அவ்வக் காலங்களில் அச்சுப் பதிப்பில் கிடைத்த பொருளதிகார உரையாசிரியர்களின் உரையடிப்படையில் விவாதங்கள் நிகழ்ந்துள்ளன.
 • 1912 – இல் தொல்காப்பியப் பொருளதிகாரம் குறித்த புரிதலைச் தமிழ்ச் சமூகத்திற்கு உணர்த்தும் விதமாக மு. இராவையங்கார் செந்தமிழில் தொடர்ச்சியாகக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
 • 1922 – இல் அப்பொழுது கிடைத்த இளம்பூரணர் உரையும் ஒப்பிட்டு நூலாக்கம் செய்கிறார். இந்நூல் தொல்காப்பிய உரையாசிரியர்களின் கருத்துக்களை உள்வாங்கி, அகம், புறம் குறித்த புரிதலை உருவாக்குவதற்கான நூலாகவும், கல்வித் தளத்தில் புழங்கும் நூலாகவும் அமைந்துள்ளது. வே. முத்துசாமி ஐயன் செந்தமிழில் எழுதிய தொல்காப்பியப் பொருளதிகாரம் குறித்த கட்டுரைகள் அகம் குறித்த அறிமுகநிலையில் அமைந்துள்ளன.
 • 1939 – இல் கா.சு. பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட பழந்தமிழர் நாகரிகம் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து திருக்கோவையார் கூறும் அகத்துறைகளை முன்னிறுத்தி, தொல்காப்பியத்தை அணுகியுள்ளார். உரையாசிரியர்களின் கருத்துக்களையும் உள்வாங்கியும், பழந்தமிழர் வாழ்வியல் முறைகளுக்கு ஒவ்வாத சில சூத்திரங்களை எடுத்துக்காட்டி வேறுபாடம் இருக்கலாம் என்பதனையும், பொருந்தாத சில சூத்திரங்கள் பிற்காலத்தில் இடைச்செருகலாக இருக்கலாம் என்றும் கூறுகிறார். மட்டுமல்லாமல் அவர் சார்ந்த சைவக் கொள்கைகள் அடிப்படையில் பல சூத்திரங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் அன்றைய சூழலுக்கு தமிழர் அறியாத பழந்தமிழ் நாகரிகத் துறைகளை எளிதில் அறிந்து கொள்ளுமாறு தெளிவாக எடுத்துரைத்துள்ளார் என்று கருதலாம்.
 • 1945 – இல் வெளிவந்த பண்டையத் தமிழர் இன்பியல் வாழ்க்கை என்னும் நூல் அகத்துறையை மட்டும் பன்னிரண்டு தலைப்புகளில் விளக்கியுள்ளது. அதற்குத் துணையாகத் தொல்காப்பிய உரையாசிரியர்களின் உரைகளைப் பயன்படுத்தி, அனைவரும் அகத்திணை குறித்து அறியும் நோக்கில் எழுதப்பட்டதாக அமைகிறது.
 • 1942 இல் யாப்பு குறித்து நிகழ்த்தப்பெற்ற ஆய்வே முதல் தமிழ் முனைவர்ப்பட்ட ஆய்வாக அமைகிறது. இவ்வாய்வு தமிழியல் யாப்பு குறித்த அறிமுகநிலையிலும் ஒப்பிட்டுநிலையிலும் அமைந்துள்ளது.

உசாத்துணை:

 1. இராகவையங்கார் இரா. 1917. தொல்காப்பியம் செய்யுளியல் நச்சினார்க்கினியருரை உரையாசிரியருரையுடன், மதுரை: தமிழ்ச் சங்க முத்திராசாலைப் பதிப்பு.
 2. இராகவையங்கார் மு. 1929, தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, மதுரை: தமிழ்ச்சங்கம்.
 3. இளவழகனார்.,1938. இன்பவொழுக்கம் அல்லது தொல்காப்பியம் அகத்திணையியல் விளக்கம், சேலம்: தமிழ்நெறி விளக்கப் பதிப்பகம்.
 4. இளவழகனார்.,1956. பண்டைத் தமிழர் இன்பவியல் வாழ்க்கை, சென்னை: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
 5. கனகசபாபதி பிள்ளை எஸ். ( ப.ஆ ) 1934, தொல்காப்பியம் பொருளதிகாரம் முதற்பாகம் ( நச்சினார்க்கினியம்) சென்னை: சாது அச்சுக்கூடம்.
 6. கனகசபாபதி பிள்ளை எஸ். ( ப.ஆ ) 1935, தொல்காப்பியம் பொருளதிகாரம் இரண்டாம் பாகம் ( நச்சினார்க்கினியம்) சென்னை: சாது அச்சுக்கூடம்.
 7. சிதம்பரம் பிள்ளை வ.உ. ( ப.ஆ ) தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம் அகத்திணையியல் புறத்திணையியல், சென்னை.
 8. சிதம்பரம் பிள்ளை வ.உ. ( ப.ஆ ) தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம் களவியல், கற்பியல், பொருளியல், சென்னை: இராமஸ்வாமி சாஸ்த்ருலு அண்ட்ஸன்ஸ்.
 9. சுப்பிரமணிய பிள்ளை கா. 1968. பழந்தமிழர் நாகரிகம் அல்லது பொருளதிகாரக் கருத்து, சென்னை: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
 10. நாகமணி ம.ஆ. 1935. தொல்காப்பியப் பொருளதிகார மேற்கோள் விளக்க அகராதி முதலியன, முதற்பதிப்பு, சென்னை: சாது அச்சுக்கூடம்.
 11. பரமசிவானந்தம் அ.மு. 1944. பழந்தமிழ் கவிதைகளின் வளர்ச்சி, சென்னைப்பல்கலைக்கழகம்.
 12. பவானந்தம் பிள்ளை ச. ராவ் பஹதூர். ( ப.ஆ ) 1916, தொல்காப்பியம் பொருளதிகாரம், நச்சினார்க்கினியம் (அகத்திணையியல், புறத்திணையியல்), சென்னை: மினெர்வா அச்சுக்கூடம்.
 1. பவானந்தம் பிள்ளை ச. ராவ் பஹதூர். ( ப.ஆ ) 1916, தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம்      ( களவியல், கற்பியல் ), சென்னை: மினெர்வா அச்சுக்கூடம்.
 1. பவானந்தம் பிள்ளை ச. ராவ் பஹதூர். ( ப.ஆ ) 1917, தொல்காப்பியம் பொருளதிகாரம்.
 2. பேராசிரியம்    (மெய்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் ), சென்னை: மினெர்வா அச்சுக்கூடம்.

*****

கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்
தமிழியல்துறை
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தொல்காப்பியப் பொருளதிகாரம் – தொடக்க கால ஆய்வுகளும் போக்குகளும் (1902 – 1950)

 1. மிகவும் சிறப்பு அம்மா. வாழ்த்துகள்.💐⭐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *