Featuredஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்கட்டுரைகள்

சங்க இலக்கியச் சடங்குகளும் நம்பிக்கைகளும்

-த. ஆதித்தன்

உலகில் தாம் வாழும் சூழ்நிலைகளுக்கேற்ப ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்களும் சில பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் கொண்டுள்ளனர்.  ஒரே பகுதியில் வெவ்வேறு இனக்குழுக்களைச் சார்ந்த மக்கள் சேர்ந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருவதைக் காண்கிறோம். அவ்வாறு வெவ்வேறு சமுதாய மக்கள் சேர்ந்து நெடுங்காலம் வாழ்ந்து வரும்போது அப்பகுதி மக்களின் நம்பிக்கைகளிலும் சடங்குகளிலும் சில பொதுமைக் கூறுகள் ஏற்படுவதுண்டு.  இருப்பினும் சமுதாயம் சார்ந்த சில நம்பிக்கைகளை அவர்கள் தனித்தன்மையோடு பின்பற்றி வருவதையும் அறிய முடிகிறது.  சமூகத்தோடு பின்னிப் பிணைந்துள்ள மக்களின் நம்பிக்கைகளும் அதைச்சார்ந்த சடங்குகள் பலவும் ஏதேனும் ஒரு வடிவத்தில் மக்களால் இன்றும் கடைப்பிடிக்கப்படுகின்றன.  இச்சடங்குகள் குறித்து, “வாழ்வின் தகுதிப் பெயர்வினை அடையாளப்படுத்தும் வகையில் நிகழ்த்தப்படும் முறையான செயல் முறைகளே சடங்குகள்.  இச்செய்முறைகள் ஒவ்வொரு தகுதிப் பெயர்வின் போதும் பல்வேறுவிதமான காரணங்களை நிலை நிறுத்திச் செல்கின்றன.  முன்னோரிடமிருந்து பெற்ற ஒவ்வொரு சடங்கும் அடுத்தடுத்த தலைமுறைக்காக மாற்றியளிக்கப்படுகின்றது.

இம்மண்ணில் பிறக்கும் குழந்தைக்கு முன்னோர் மேற்கொண்ட பழக்கங்களைப் பெற்றோர் செய்வதும் பின்னர் அக்குழந்தை வளர்ந்து தான் புரிந்து கொண்டவற்றைத் தன் சந்ததிகளுக்குக் கற்றுக் கொடுப்பதும் மாறாத செய்முறையாகவே தொடர்கின்றது.  குழந்தை பிறந்தது தொடங்கி ஒவ்வொரு பருவ மாற்றத்தின்  அடையாளமாக அதன் உடல் வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் தொடர்புடைய சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.  பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு என ஓர் உலகம் நேர்க்கோட்டில் சென்று ஒட்டுமொத்தமாக அழிந்து விடுவதில்லை.  மாறாகப் பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு, மீண்டும் பிறப்பு… எனச் ‘சுழலேணி’ முறையில் வட்டமிட்டு உயர்ந்து செல்லும் இயங்கியலைக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை வட்டச் சடங்குகள் அனைத்தும் தம் குலங்கள் தழைத்து வாழவேண்டும் என்ற மனித வளத்தை முதன்மைப்படுத்தியே செய்யப்படுகின்றன.  அதனால்தான் மனிதனின் பிறப்பையும், வாழ்தலையும் மையமாகக் கொண்டு வாழ்க்கை என்ற வினைச்சொல் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது”1 என்று க.அ. ஜோதிராணி குறிப்பிடுகிறார்

பொதுவாக மனிதன்,  பிறந்தது முதல் இறப்பது வரையிலும் பல்வேறு வகையான சடங்குகளைப் பின்பற்றுகிறான்.  அச்சடங்குகளைச் சமய நம்பிக்கை சார்ந்த சடங்குகள், வாழ்வியல் பழக்கவழக்கங்கள் சார்ந்த சடங்குகள் என இருவகையாகப் பிரிக்கலாம்.  இத்தகைய சடங்குகளும், நம்பிக்கைகளும் அந்த அந்தக் காலக் கட்டத்தில் தோன்றும் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டு வருவதைக் காணலாம்.  அவ்வகையில்  நமது சங்க இலக்கிய நூல்களில் இருந்து சில சடங்குகளையும், நம்பிக்கைகளையும்  எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

நம்பிக்கைகள்

பழங்காலம் தொட்டே மக்கள் பல்வேறு வகையான நம்பிக்கைகளைக்  கொண்டிருந்தனர். இயற்கையைப் போற்றி வழிபடுவதும் அந்த நம்பிக்கையின் பால்பட்டதே.  தொடர்ந்து மனித மனம் நம்புபவையே காலப்போக்கில் நம்பிக்கைகளாகவும் சடங்குகளாகவும் மாறிவிடுகின்றன.  இந்நம்பிக்கை குறித்த செய்திகள் சங்ககாலம் தொட்டு இன்று வரையிலும் இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன. இந்நம்பிக்கைகள் குறித்து, “ஒவ்வொரு மனிதனும் ஆயிரக்கணக்கான நம்பிக்கைகளின் குவியலாகக் காணப்படுகின்றான்.  நன்மையைத் தேடும் மனதின் பற்றுக்கோடாக நம்பிக்கை துணைநிற்கிறது.  கடலிலே அகப்பட்டுத் தவிக்கும் ஒருவனுக்குக் கையில் கிடைத்த சிறிய மரக்கட்டையும் தெப்பமாகத் தெரியும்.  அதுபோல் அலைக்கழிக்கப்படும் மனது, நம்பிக்கைகளைப் பற்றிக் கொள்ளும்பொழுது புத்துணர்ச்சி பெறுகிறது”2 என்கிறார் எஃப் பாக்கியமேரி.

இந் நம்பிக்கை தொடர்பான செய்திகள் சங்க இலக்கியங்கள் முதல் இன்று வரையிலான இலக்கியங்கள் வரை காணக் கிடைக்கின்றன. அவற்றுள் ஒன்று கடவுள் நம்பிக்கை.  உலகின் மிகத் தொன்மையான காலத்தில் இயற்கை வழிபாடே இருந்திருக்க வேண்டும்.  அதாவது இயற்கையின் சீற்றங்களுக்குப் பயந்த மனிதன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள எண்ணி அவ்வியற்கையை வழிபடத் தொடங்கினான் என்பர்.  சூரிய வழிபாடு, பிறைவழிபாடு போன்றவையும் இத்தகைய இயற்கை வழிபாட்டின் கூறுகளே ஆகும்.  சங்க இலக்கிய நூல்களுள் ஒன்றான குறுந்தொகையிலும் பிறைவழிபாடு குறித்த குறிப்பு இடம் பெற்றுள்ளது.

“வளை உடைத்தனையது ஆகி, பலர் தொழ
செவ்வாய் வானத்து ஐயெனத் தோன்றி
இன்னாப் பிறந்தன்று, பிறையே; அன்னோ,”3 என்னும் பாடல் குறுந்தொகையில் அமைந்துள்ள கடம்பனூர்ச் சாண்டிலியனின் பாலைத் திணைப்பாடல் ஆகும்.  இப்பாடலில் பிறைத்திங்களுக்கு வண்ணத்தாலும் வடிவாலும் ஒத்ததாக உள்ள உடைந்த சங்குவளை உவமையாகச் சொல்லப்பட்டுள்ளது.  இத்தகைய பிறைநிலா மாலையில் செவ்வானத்தில் தோன்றும். அப்பொழுது பலராலும் தொழப்பெறும் பெருமையுடையது என்று கூறப்பட்டுள்ளது.  இதன் மூலம் பிறை நிலவை வழிபடும் நம்பிக்கை பழங்காலத்திலேயே தமிழ் மக்களிடம் இருந்துள்ளதை அறிய முடிகிறது.

முற்பிறப்பு மற்றும் விதி என்பன மீதும் மக்களுக்குப் பரவலாக நம்பிக்கை உள்ளது.  இன்று தலைவிதி என்று கூறப்படுவதையே அன்றைய காலத்தில் ஊழ் என்று குறிப்பிட்டுள்ளனர் எனலாம்.  நல்வினை நல்ல ஊழினை அதாவது விதியினைக் கொடுக்கும் என்றும் தீவினை தீய விதியினைக் கொடுக்கும் என்றும் மக்கள் நம்பி வருகின்றனர்.  இந்நம்பிக்கை அன்று முதல் இன்றுவரை மக்களிடையே காணப்படுகிறது.

பதினெண் மேற்கணக்கு நூல்கள், பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் மட்டுமன்றிச் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி போன்ற காப்பியங்களிலும் இத்தகைய செய்திகள் இடம்பெற்றுள்ளன.  முற்பிறப்புப் பற்றியும் ஊழ்பற்றியும் இடம்பெற்றுள்ள செய்திகளை மட்டும் தனி ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என்கிற அளவிற்குப் பல செய்திகள் இடம் பெற்றுள்ளன.

சிறுவயதில் பகைவர்கள் போன்று இருந்தவர்கள் தலைவனும் தலைவியும், வளர்ந்த பின்னர் அவர்களுள் காதல் உருவாக ஊழ்வினையே காரணம் என்னும் கருத்தமைந்த பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.

“இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன்
புன்தலை ஓரி வாங்குநள் பரியவும்,
காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது
ஏதில் சிறுசெரு உறுப மன்னோ;
நல்லைமன் றம்ம பாலே- மெல் இயல்
துணைமலர்ப் பிணையல் அன்ன இவர்
மணம்மகிழ் இயற்கை காட்டி யோயே”4

தலைவன் தலைவி இருவரும் இளம் வயதில் தெருவில் விளையாடும்போது அவளின் ஐவகையாகப் பின்னப்பட்ட தலைமுடியினை அவள் அறியாதவாறு அவன் பிடித்து இழுப்பான்.  அதனை அறிந்து அவள் அவனின் வெட்டப்பட்ட தலைமுடியினை வளைத்துப் பிடித்த வண்ணம் ஓடுவாள்.  இவ்வாறு அவர்கள் அயலாரைப் போன்று பகைபாராட்டி நிற்பர்.  அவர்கள் மீது அன்பு கொண்ட செவிலியர் அவர்களின் சண்டையை விலக்குவர்.

இப்பொழுது இவர்கள் உள்ளத்தால் வெறுத்ததை அறவே மறந்து தொடுக்கப்பட்ட மாலை போல இணைந்து மகிழ்ச்சியுடன் இருப்பது விதியே என்பதாக மோதாசனார் குறுந்தொகையில் கூறியுள்ளார்.

இதேபோன்று பல்லியின் ஓசையை வைத்துப் பலன்களைக் கணிக்கும் பழக்கமும் மக்களிடையே தொன்மையான நம்பிக்கையாக உள்ளது.  காகம் கரைந்தால் விருந்தினர் வருவார்கள் என்பதும் அத்தகைய நம்பிக்கையே ஆகும்.  இத்தகைய ஏராளமான நம்பிக்கைகள் உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே காணப்படுகின்றன.  அவை தொடர்ந்து மரபு வழியாகத் தொடரும் போது சடங்குகளாக மாறிவிடுகின்றன எனலாம்.

திருமணச் சடங்கு

திருமண அறிவிப்புத் தொடங்கித் திருமணம் முடியும் வரையிலும் பல சடங்குகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.  இவை குறித்த செய்திகள் சங்க இலக்கியங்களிலும் காணப்படுகின்றன.

தம் மகள் திருமணத்தை ஊரார் அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காகப் பெற்றோரால் செய்யப்படும் சடங்கு ஒன்று கயமனார் பாடியுள்ள அகநானூற்றுப்  பாடலில் இடம் பெற்றுள்ளது.

“ நனைவிளை நறவின் தேறல் மாந்தி,
புனைவினை நல்இல் தருமணல் குவைஇ,
‘பொம்மல் ஓதி எம்மகள் மணன்’ என,
‘வதுவை அயர்ந்தனர் நமரே; அதனால்,அரும்புகளில் இருந்து பெறப்பட்ட கள்ளின் தெளிவை உண்டு மகழ்ந்திருந்தனர்.  வீடானது நன்றாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.  நல்ல சிறந்த வேலைப்பாடுகள் அமைந்தாகவும் அவ்வீடு காணப்பட்டது.  அங்குப் புதிதாகக் கொண்டு வரப்பட்ட மணலைக் குவித்துப் பரப்பி வைத்திருந்தனர்.  பொலிவான கூந்தலை உடைய தமது மகளுக்குத் திருமணம் என்ற உறுதியை அறிவிக்கும் விழாச் சடங்கு அவ்விடத்தில் நிகழ்ந்தது என இவ் அகநானூற்றுப் பாடல் தெரிவிக்கின்றது.

 கலித்தொகைப் பாடல் ஒன்று திருமணம் நடைபெறப்போகும் வீடு குறித்தும் அங்கு அமைக்கப்பட்டிருந்த மணப்பந்தல் குறித்தும்,

      “தருமணல் தாழப்பெய்து, இல் பூவல் ஊட்டி,
      எருமைப் பெடையோடு, எமர் இங்கு அயரும்
                       பெரு மணல் எல்லாம்…”6 என்று குறிப்பிடுகின்றது அதாவது கொண்டு வந்து குவிக்கப்பட்டிருந்த புதிய மணலைத் தரை முழுவதும் நன்றாகப் பரப்பினர்.  வீடு செம்மண்ணால் பூசப்பட்டிருந்த்து.  பெண் எருமையின் கொம்பினைத் தெய்வமாக வைத்து வழிபாடும் செய்யப்பட்டது.  இவ்வாறாகத் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது என இக்கலித்தொகைப் பாடல் தெரிவிக்கிறது.

இறப்புச் சடங்கு

உலகில் தோன்றிய உயிர்கள் அனைத்தும் உயிர் துறப்பது இயற்கை.  விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் தனது கூட்டத்தைச் சார்ந்த உயிரின் மறைவைக் கண்டு துயரப்படுவதைக் காணமுடிகிறது.  மனித சமூகமும் அதற்கு விதிவிலக்கல்ல.  ஒவ்வொரு பகுதியிலும் வாழ்கின்ற மனிதர்கள் இந்த இறப்பினை ஒட்டி ஒவ்வொரு வகையான சடங்குகளைப் பின்பற்றி வருகின்றனர்.  இவை பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளன.

சங்க இலக்கியங்களுள் மிகச் சிறந்த வரலாற்று ஆவணமாகப் போற்றப்படுவது புறநானூறு ஆகும்.  அதில் சிறுகுழந்தைகள் மரணம் அடைந்தால் உடலை வாளால் பிளந்து அடக்கம் செய்தல், வீரர்களின் மரணத்தைப் போற்றும் வகையில் நடுகல் அமைத்தல் போன்ற பல மரணச் சடங்குகள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை போரில் தோல்வியடைந்தான்.  வெற்றி பெற்ற சோழன் செங்கணான், சேரனைக் குடவாயில் கோட்டத்துச் சிறையில் அடைத்தான்.  அப்பொழுது கடுமையான நீர்த்தாகத்தால் சிறைக்காவலரிடம் தண்ணீர் கேட்டான் இரும்பொறை.  அவன் காலம் தாழ்த்தித் தண்ணீர் கொண்டு வந்ததால் வருந்திய சேரன் தண்ணீர் அருந்தாமலேயே உயிர் நீத்தான் அப்போது தன்னுடைய நிலைக்குத் தானே இரங்கிப் பாடியதாக இப் புறநானூற்றுப் பாடல் அமைந்துள்ளது.

“குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்;
தொடர்ப் படுஞமலியின் இடர்ப்  படுத்து இரீஇய
கேள் அல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி, வயிற்றிதுத் தீத் தணிய,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ, இவ் உலகத்தானே?”7

இப்பாடல் பழங்காலத்தில் மன்னர்கள் போரின்போது விழுப்புண்பட்டு மடிவதையே பெருமையாகக் கருதினர் என்பதற்குத் தகுந்த சான்றாகத் திகழ்கிறது.  மேலும் சேரன் கணைக்கால் இரும்பொறையின் மானமிகு வாழ்வையும் எடுத்தியம்புகிறது.

பாடலில், ‘பிள்ளை  இறந்து பிறந்தாலும் – தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் – அல்லது பிறந்த குழந்தை இறந்தாலும் அதனையும் ஒரு நபராகவே கருதி உயர்வு தருவர்.  அந்த இறந்த குழந்தையின் உடலையும் வாளால் பிளந்து வடுப்படுத்தி அடக்கம் செய்வர்.  அதேபோன்றே மன்னராக இருப்பவர் போரில் பகைவரின் வாளால் வடுப்பட்டு இறந்திடல் வேண்டும்.  அவ்வாறு இன்றிப் பிழைத்து விட்டால் நாயைச் சங்கிலியால் பிணைப்பதைப்போன்று விலங்கு பூட்டித் துன்புறுத்துவர் பகைவர்.  அத்தகைய பகைவரிடம் நீரை இரந்து கேட்டு வயிற்றுத் தீயை தணிக்க வேண்டாம்.  இவ்வுலகில் அத்தகைய இழிந்த இயல்புடையவரைஅரசர்களும் பெறுவார்களோ! என்று பாடியுள்ளார் சேரமான் கணைக்கால் இரும்பொறை.

இதன்மூலம் சிறு குழந்தை இறந்தாலும் சரி, குழந்தை இறந்து பிறந்தாலும் சரி இறுதிச் சடங்கின்போது அவற்றிற்கு வடு ஏற்படுத்திப் புதைக்கும் முறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நம் தமிழ்ச் சமூகத்தில் இருந்துள்ளமையை அறியமுடிகிறது.

வழிபாடு தொடர்பான சடங்குகள்

மனிதன் ஆரம்பத்தில் இயற்கையை வழிபட்டிருக்கக்கூடும்.  பின்னர்ப் படிப்படியாகக் கடவுள் வழிபாடு வரை வந்துள்ளது.  இவ்வழிபாடுகள் அனைத்தும் என்று தொடங்கியது என்று அறுதியிட்டுக் கூற முடியாத அளவிற்கு மிகத் தொன்மையானதாக உள்ளன.

உலகம் முழுவதும் உள்ள இலக்கியங்களில் புராணக்கதைகள், கடவுள் வழிபாடு போன்ற பதிவுகள் இடம் பெற்றுள்ளன.  தமிழ்மொழியில் இன்று கிடைக்கப்பெற்றுள்ள மிகப் பழமையான சங்க இலக்கியங்களிலும் இறைவழிபாடு குறித்தும் அவை தொடர்பான சடங்குகள் குறித்தும் சில செய்திகள் இடம் பெற்றுள்ளன.

பத்துப்பாட்டில் முதலில் வைத்து எண்ணக் கூடியதாக,  திருமுருகாற்றுப்படை உள்ளது.  நலம் வேண்படுபவர்களை முருகக் கடவுளிடம் ஆற்றுப்படுத்துவதாக நக்கீரரால் படைக்கப்பட்ட நூலே திருமுருகாற்றுப்படை.  இதில் இறைவழிபாட்டுச் சடங்கு குறித்த குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

“ பைங்கொடி, நறைக்காய் இடை இடுபு, வேலன்
அம்பொதிப் புட்டில் விரைஇ, குளவியொடு
வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன்;
நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்
கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்
நீடுஅமை விளைந்த தேக்கண் தேறல்
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர”8 என்னும் அடிகளில், முருகக்கடவுளுக்குப் பூசை செய்யும் வேலன் பச்சிலைக் கொடியால், நல்ல மணமுடைய சாதிக்காயை இடை இடையே சேர்த்துக் கட்டுகிறான்.  அதனோடு அழகிய புட்டியைப் போன்ற வடிவுடைய தக்கோலக்காயையும் கலந்து காட்டு மல்லிகைப்பூ, வெண்டாளிப்பூ ஆகியவற்றையும் சேர்த்துக் கட்டுகிறான்.  இம்மாலையை அணிந்தவனாக வேலன் நிற்கிறான்.  அங்குவரும் குறவர்கள் நல்ல வாசனை வீசும் சந்தனத்தைப் பூசிய மார்பை உடையவர்கள்.  வேட்டை காரணமாகக் கொலைத் தொழிலைச் செய்பவர்கள் அந்தக் குறவர்கள்.  அவர்கள் நீண்ட மூங்கில் குழாய்களில் ஊற்றி நெடுநாள் வைத்து முற்றி விளைந்த தேனால் ஆன கள்ளின் தெளிவைத் தமது சுற்றத்தாரோடு சேர்ந்து உண்டு மகிழ்ந்திருந்தனர்.  தம் குறிஞ்சி நிலத்திற்குரிய வாத்தியக் கருவியாகிய  ‘தொண்டகம்’ எனப்பெறும் சிறுபறையை அடித்தனர்.  அதனது தாளத்திற்கு ஏற்பக் குரவைக் கூத்தாடினர் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் முருக வழிபாட்டுச் சடங்கில் குரவைக் கூத்து இடம் பெறுவது, குறவர்கள் அந்த ஆட்டத்தின்போது சிறுபறையை அடிப்பது, கள்அருந்தி மகிழ்ந்திருப்பது போன்ற செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

சங்க இலக்கியங்களுள் ஒன்றான நெடுநல் வாடையிலும் இறைவழிபாடு பற்றி குறிப்பு உள்ளது.  மாலைக் காலத்தில் பெண்கள் தெய்வத்தை வணங்குவது குறித்துக் குறிப்பிடும் போது,

“மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து,
அவ்விதழ் அவிழ் பதம் கமழ, பொழுது அறிந்து
இரும்பு செய்விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ,
நெல்லும் மலரும் தூஉய், கைதொழுது,
மல்லல் ஆவணம் மாலை அயர”9  என்கிறார் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார். நெடுநல்வாடையில் குளிர்கால வர்ணனை இடம் பெறும் பகுதியிலேயே இவ்வடிகள் இடம்பெற்றுள்ளன.  பகலிலும் மழைமேகம் சூழ்ந்து இருளாகக் காட்சித் தருவதால் மாலைக் காலத்தை அறிய முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.  அப்பொழுது மகளிர் பசுமையான காம்புகளைக் கொண்ட செம்முல்லை அரும்புகளை அழகிய பூந்தட்டுகளில் இட்டு வைக்கின்றனர்.  அவை மலர்ந்து மணம் வீசுவதைக் கொண்டு மாலை நேரம் வந்துவிட்டது என்பதனை அறிந்துக் கொள்கின்றனர்.

இம்மாலைப் பொழுதில் இறைவனை வழிபடுகின்றனர்.  அதற்கு இரும்பினால் செய்யப்பட்ட விளக்கில், நெய்தோய்ந்த திரியைக்  கொளுத்துகின்றனர்.  நெல்லையும் மலரையும் தூவிக் கைக்கூப்பி இல்லுறை தெய்வத்தை வழிபடுகின்றனர்.  வளம்பொருந்திய ஆவண வீதிகளில் உள்ள வீடுகளில் இவ்வாறு இறை வழிபாடானது மாலை வேளையில் இடம் பெறுகிறது.  இவ்வாறு நெல்லையும் மலரையும் தூவிக் கைகளைக் குவித்து விளக்கேற்றி வழிபடும் முறையை நெடுநல்வாடை விவரிக்கின்றது.

பழங்காலம் முதல் இன்றுவரை மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளையும், பின்பற்றி வருகின்ற சடங்குகளையும் இலக்கியங்கள் வாயிலாகவே தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது.

இவற்றின் மூலம்,  மக்கள் தங்களுடைய நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் சார்ந்தே தத்தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளனர் என்பதையும் உணரலாம்.  இவ்வாறு தொடர்ந்து பின்பற்றிவரும் அதாவது மரபு வழியாகத் தொடரும் நம்பிக்கைகள் காலப்போக்கில் சடங்குகளாக மாறுகின்றன.

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்ற மக்களின் நம்பிக்கைகளையும், சடங்குகளையும் குறித்து நுணுகி ஆராய்ந்து மேலாய்வுகளை மேற்கொள்ளலாம்.  அவ்வாறு ஆராயும்போது சங்ககால  மக்களின் பண்பாட்டுக் கூறுகளைத் தெளிவாக அறிந்துகொள்ள இயலும்.

சான்றெண்விளக்கம்

1.ஜோதிராணி.க.அ, தமிழர் பண்பாட்டுத் தளத்தில் சடங்குகள், தன்னனானே, கோடம்பாக்கம், சென்னை-34, முதல் பதிப்பு – டிசம்பர் 2004,  பக்கம் எண்:9-10

2.பாக்கியமேரி.எஃப், தமிழர் பண்பாடும் பயன்பாடும், அஞ்சனச்சிமிழப் பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை- 600 004, இரண்டாம் பதிப்பு – 2013. பக்கம் எண்:23

3.குறுந்தொகை,  நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், அம்பத்தூர், சென்னை – 600 098, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007, பாடல் எண்: 307

4. குறுந்தொகை, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், அம்பத்தூர், சென்னை – 600 098, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007, பாடல் எண்: 229

5. அகநானூறு, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், அம்பத்தூர், சென்னை – 600 098, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007, பாடல் எண்: 221

6. கலித்தொகை, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், அம்பத்தூர், சென்னை – 600 098, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007, பாடல் எண்: 114

7.புறநானூறு,  நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், அம்பத்தூர், சென்னை – 600 098, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007, பாடல் எண்: 74

8.பத்துப்பாட்டு-பகுதி1 (திருமுருகாற்றுப்படை, அடி:190-197),  பகுதி1 நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், அம்பத்தூர், சென்னை – 600 098, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007, பக்கம் எண்: 13

9. பத்துப்பாட்டு – பகுதி 2(நெடுநல்வாடை, அடி:39-44, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், அம்பத்தூர், சென்னை – 600 098, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007, பக்கம் எண்: 178

*****

கட்டுரையாசிரியர் – இணைப் பேராசிரியர்
அரிய கையெழுத்துச் சுவடித் துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
பேச:9841152393
மின்னஞ்சல்:kumaritathithan@gmail.com

 

 

Print Friendly, PDF & Email
Share

Comments (2)

  1. Avatar

    பழந்தமிழர்களின் வாழ்வியலை தெளிவாக புரிந்துகொள்வதற்கு உதவிப்புரிவதாக உள்ளது.

  2. Avatar

    சங்க கால மக்களின் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பற்றி அறிந்து கொள்ள ஏதுவாக உள்ளது.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க