புறநானூற்றில் கருவிகள்
–வி.அன்னபாக்கியம்
முன்னுரை
வேட்டையாடி வாழ்ந்த மக்கள் காலப்போக்கில் குழுக்களாக வாழத் தலைப்பட்டனர். அப்போது பிற குழுவிடமிருந்து தம் குழுவைக் காப்பாற்றப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்நிலையில்தான், இரும்புக்கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். அவ்வாறு அவர்கள் போருக்காகவும் பிற தொழிலுக்காகவும் பயன்படுத்திய கருவிகளின் தன்மையைச் சங்க இலக்கியம் மூலமே அறிய வாய்ப்பு இருக்கின்றது. அந்த அடிப்படையில் சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய புறநானூற்றுப் பாடல்களில் இடம்பெற்றுள்ள பழந்தமிழர் பயன்படுத்திய போர்க்கருவிகளைத் தவிர பிற கருவிகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
கருவி விளக்கம்
எந்த ஒரு செயலையும் செய்வதற்குத் துணையாகத் தூண்டுதலாக இருக்கும் சாதனம் கருவியாகும். கருவி என்பதற்கு, ”ஆயுதம், சாதனம், கேடகம், குதிரைமேலிருக்கும் தவிசு, குதிரைச் சம்மட்டி, உடை, துணைக்காரணம், யாழ்க்கருவி” என செந்தமிழ் அகராதி விளக்கம் தந்துள்ளது. தமிழ்மொழி அகராதி, ”ஆயுதப்பொது, உபகரணம், கவசம், காரணம், குதிரைக் கல்லணை, கூட்டம், தொடர்பு, நட்பு, மெய், வாய் முதலிய கருவி, மேகம், யாழ், வாச்சியம், வீணை” என விளக்கம் தந்துள்ளது.
பொதுவாகக் கருவி என்ற சொல்லுக்கு, “ஆயுதப் பொதுப்பெயர்” என்ற பொருளையே எல்லா அகராதிகளும் தந்துள்ளன. பழந்தமிழர்கள் போர்க்கருவிகளைத் தவிர பிற தொழிற்கருவிகளையும் பயன்படுத்தியுள்ளனர். அவற்றை,
- தொழில் பயன்பாட்டுக் கருவிகள் (கலப்பை, அரிவாள்)
- வீட்டுப் பயன்பாட்டுக் கருவிகள் (ஊசி, உலக்கை)
- பிற பயன்பாட்டுக் கருவிகள் (அடார், சேறுகுத்தி, தட்டை, கரும்பின் எந்திரம்) என வகைப்படுத்தலாம்.
தொழில் பயன்பாட்டுக் கருவிகள்
நாட்டின் இன்றியமையாத தொழில்களுள் ஒன்று பயிர்த்தொழிலாகும். நிலத்தை உழுவதற்கும், தோண்டுவதற்கும் நெற்கதிர்களை அரிவதற்கும் சில கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றில் கலப்பை மற்றும் அரிவாள் பற்றிய குறிப்பு மட்டும் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன.
கலப்பை
நிலத்தை உழுவதாகிய உழவுத்தொழிலுக்கு மிகவும் முக்கியமான கருவி “ஏர்” என அழைக்கப்படும் கலப்பை ஆகும். கலப்பை என்பதற்கு “உபகரணம், உழுபடை, கலப்பையுறுப்பு, யாழ்” 1 எனத் தமிழ்ப்பேரகராதி விளக்கம் தந்துள்ளது. தற்காலத்தில் உழவுத்தொழில் இயந்திரமயமானாலும்கூட நாட்டுப்புறங்களில் சில விவசாயிகள் இன்னும் கலப்பையையே பயன்படுத்தி வருவதைக் காணலாம். புறநானூற்றில் கலப்பையைக் குறிக்க, “உழுபடை, நாஞ்சில்“ என்ற இரண்டு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
”பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே” (புறம். 35 25-26)
”நாஞ்சில் அல்லது படையும் அறியார்” (புறம். 20) என வரும் புறநானூற்றுப் பாடலடிகள் விளக்குகின்றன.
போர்க்களத்தில் அம்பு தைத்து யானைகளின் துதிக்கையும், வாயும் துண்டாகி வீழ்ந்த காட்சியை நிலத்தை உழும் கலப்பைக்கு ஒப்புமைப்படுத்தியுள்ளதை,
”அம்புசென்று இறுத்து அரும்புண் யானைத்
தூம்புடைத் தடக்கை வாயொடு துமிந்து
நாஞ்சில் ஒப்ப நிலம்மிசைப் புரள” ((புறம். 19 9-11)என்ற பாடலடிகள் விளக்குகின்றன. இதனால் கலப்பையின் முனைப்பகுதியானது யானை வாயின் கீழ்ப்பகுதி போலக் கூர்மையாக இருந்தமை தெரியவருகின்றது. இவ்வாறாக நிலத்தை உழுவதற்கு உழவர்களால் பயன்படுத்தப்படும் கலப்பைக்கு உழுபடை, உழவர்படை, நாஞ்சில் என்ற வேறு பெயர்கள் இருப்பதையும் கலப்பையின் உருவ அமைப்பினையும் அறிய முடிகின்றது.
அரிவாள்
பழந்தமிழர்கள் தாங்கள் பயிரிட்ட பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்வதற்காக ஒருவகை கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். அக்கருவியே அரிவாள் எனப்படும். அரிவாள் என்பதற்கு, வின்சுலோ அகராதியில், ”கொய்யுமாயுதம் மற்றும் ஈர்வாள்” 2 என்றும், பெருஞ்சொல்லகராதியில், ”நெற்கதிர் முதலியன அரியும் பிடியுள்ள கத்தி” 3 என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன.
அரிவாள் ஆமையின் முதுகு போன்று வளைந்த வடிவமுடையதை,
”நெல்அரி தொழுவர் கூர்வாள் மழுங்கின்
பிள்ளை மறத்தோடு அரிய, கல்செத்து
அள்ளல் யாமைக் கூன்புறத்து உரிஞ்சும்” (புறம். 379. 3-5) என்ற பாடலடிகள் விளக்குகின்றன.
இந்த அரிவாள் நெல் அறுவடை செய்வதற்கும், பழங்களை அறுப்பதற்கும் பசுக்களின் பசியைப் போக்கும் புல் மற்றும் இலை, தழைகளை அறுப்பதற்கும் பயன்பட்டமையை,
”அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட” (புறம். 246 4)
”பசித்த ஆயத்து பயன்நிரை தருமார்
பூவாக் கோவலர் பூவுடன் உதிரக்” (புறம். 224 14-15)
என்ற பாடலடிகள் விளக்குகின்றன. இவ்வாறாக புறநானூற்றுப் பாடல்கள் அரிவாளின் வடிவத்தையும் அதன் கூர்மையினையும் எடுத்துரைக்கின்றன.
வீட்டுப்பயன்பாட்டுக்கருவிகள்
பழந்தமிழர்கள் வீட்டுப் பயன்பாட்டிற்காகக் கத்தரிக்கோல், விளக்கு, கத்தி, ஊசி போன்ற பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர். புறநானூற்றில் ஊசி, உலக்கை பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன.
ஊசி
பழங்காலத்தில் “ஊசி” என்னும் சொல் தைக்கும் கருவியைக் குறிக்கப் பயன்பட்டுள்ளது. ஊசி என்பதற்கு, ”இழைவாங்கி, கண்டூசி, நிறைகோலின் நடுமுள், கடிகாரத்தின் முள் மற்றும் எழுத்தாணி” 4 என வின்சுலோ அகராதி விளக்கம் தந்துள்ளது.
புறநானூற்றுப்பாடல் ஒன்றின் வாயிலாக ஊசி என்னும் கருவி கட்டில் கட்ட பயன்படுத்தப்பட்ட உண்மை தெரிய வருகின்றது.
”சாறுதலைக் கொண்டென பெண்ஈற்று உற்றென
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ” (புறம். 82)
என்ற பாடல் வாயிலாக ஊசி என்னும் கருவி கட்டில் கட்டுவதற்கும் பயன்பட்டமையை அறியமுடிகின்றது.
உலக்கை
வீட்டுப்பயன்பாட்டுக் கருவிகளில் ஒன்று உலக்கையாகும். உரலில் ஏதாவது பொருட்களை இடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் கருவியாகும். இதன் இரு முனைகளிலும் இரும்பாலாகிய பூண்கள் மாட்டப்பட்டிருக்கும். இதனை இரும்புலக்கை எனலாம். பொதுவாக நெல் குற்றுவதற்கு உலக்கையைப் பயன்படுத்தியுள்ளனர்.
வெண்ணிற நெல்லை பூண் கட்டப்பெற்ற பருத்த உலக்கையால் குற்றிய பின் கிடைத்த அரிசியால் உணவு சமைத்த செய்தியை,
”அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்
தொடிமாண் உலக்கைப் பரூஉக்குற்று அரிசி” (புறம். 399 1-2)
என்ற பாடலடிகள் விளக்குகின்றன. இங்கு உலக்கை சமைப்பதற்குத் தேவையான அரிசியை உரலில் இட்டு குற்றுவதற்குப் பயன்பட்டதால் இது வீட்டுப் பயன்பாட்டுக் கருவிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.
பிற பயன்பாட்டுக் கருவிகள்
பழந்தமிழர்கள் அடார், சேறுகுத்தி, தட்டை, கரும்பின் எந்திரம் போன்ற இரும்பாலாகிய சில கருவிகளையும் பயன்படுத்தியுள்ளனர்.
அடார்
விலங்குகளை அகப்படுத்தும் கருவி பொறி அடார் எனப்படும். அடார் என்பதற்கு, ”புலி முதலியவைகளை அகப்படுத்தும் பொறியாகிய கல்லடார்” 5 எனத் தமிழ்மொழி அகராதி விளக்கம் தந்துள்ளது. புறநானூற்றில் குடபுலவியார் எனும் புலவர் ”அடார்” என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.
பெரிய புலியைப் பிடிக்கும் வேடன் அதற்காக அமைத்த பெரிய கல் அடார் பற்றிய குறிப்பை,
”இரும்புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய
பெருங்கல் அடாரும் போன்ம்” (புறம்.19 5-6)
என்ற பாடலடிகள் விளக்குகின்றன. இப்பாடலுக்கு உரை எழுதிய ஔவை சு.துரைச்சாமிப்பிள்ளை, அடார் என்பது கற்பாறைகளின் இணைப்பாகும். மலை நாட்டவர் பாறைகள் நிறைந்த குன்றுப் பகுதியில் பொறி அமைத்து, அதன் வாயிலில் கற்பலகையால் கதவமைத்து, உள்ளே ஆடுகளைக் கட்டி வைத்திருப்பர். அதனைத் தின்னவரும் புலி உள்ளே நுழைந்து ஆடுகளைத் தாக்கும்போது, வாயில் கதவாகிய கற்பலகை விரைவாக தானே மூடிக் கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த அடாரைப் புலிகளைப் பிடிப்பதற்காக மட்டுமின்றி மழை, வெயில், காற்று போன்ற சமயங்களில் வேட்டுவர்கள் மறைந்திருப்பதற்கும் பயன்படுத்தியுள்ளதாக விளக்கம் தந்துள்ளார். இதன்மூலம் வேட்டையாடும் பொழுது வேடன் பயன்படுத்தும் கருவியாக அடார் இருந்தமையை அறியமுடிகின்றது.
சேறுகுத்தி
புறநானூற்றில் சேறுகுத்தி என்னும் கருவி “தளம்பு“ என்ற சொல்லால் குறிக்கப்பட்டுள்ளது. அதாவது சேற்றினைக் குழப்பிக் கட்டிகளை உடைத்துச் செம்மை செய்யும் கருவியாகும். சேற்றினைக் குழப்பிக் கட்டிகளை உடைக்கச் செல்லுங்கால் சேற்றில் கிடக்கும் வாளைமீன் அக்கருவியின் இடையே விழுந்து அறுபட்டுத் துண்டாகிவிடும் என்பதை,
”மலங்குமிளிர் செறுவின் தளம்புதடிந்து இட்ட
பழன வாளைப் பரூஉக்கண் துணியல்” (புறம். 61 3-4) என்ற பாடலடிகள் விளக்குகின்றன.
சோழன் நலங்கிள்ளியின் மகன் சேட்சென்னியின் நாட்டு இயல்பைப் பற்றிக் கூறும் போது தளம்பு என்ற கருவி இடம்பெற்றுள்ளது.
தட்டை
குறிஞ்சி மற்றும் மருதநிலப் பகுதியில் விளையும் நெற்பயிரைப் பறவை இனங்கள் வந்து சேதப்படுத்தும்போது அவற்றை விரட்டுவதற்காகத் தினைப்புனம் காக்கும் காவலர் “கிளிகடி கருவி“ எனும் ஒரு வகையான கருவியைக் கையாண்டனர். புறநானூறு இக்கருவியைத் “தட்டை“ என்னும் சொல்லால் சுட்டியுள்ளது. தட்டை என்பதற்கு, ”அரிதாள், கவண், கிளிகடி கோல், திணைத்தாள், தீ பரந்த வடிவுள்ளது, மூங்கில், மொட்டை” 6 என தமிழ்மொழி அகராதி விளக்கம் தந்துள்ளது. மூங்கிலைக் கணுக்குக் கண் உள்ளதாக நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசையுண்டாக ஒன்றிலே தட்டுகின்ற கருவியே தட்டையாகும். அவ்வாறு தட்டி ஓசையெழுப்பிய பொழுது நிகழ்ந்ததை,
”புனவர் தட்டை புடைப்பின் அயலது
இறங்குகதிர் அலமரு கழனியும்
பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள்ஒருங்கு எழுமே” (புறம். 49 4-6)
என்ற பாடலடிகள் விளக்குகின்றன. அதாவது குறிஞ்சி, மருத நில வயல்களில் உள்ள பறவையினங்களும் அதனை அடுத்து நெய்தல் நிலத்தில் உள்ள பறவையினங்களும் அஞ்சி எழுந்துள்ளன. இதன் வாயிலாக தட்டை என்பது மூங்கிலால் செய்யப்பட்டதையும், வயல்களின் விளைச்சலைப் பறவையினங்களிடமிருந்து பாதுகாப்பதற்கு இக்கருவியைப் பயன்படுத்தியதையும் அறிய முடிகின்றது.
கரும்பின் எந்திரம்
தற்காலத்தில் கரும்பின் எந்திரம் என்பது கரும்பின் சாறு பிழியும் எந்திரத்தைக் குறிக்கும். ஆனால் கரும்பின் எந்திரம் என்பதற்குக் கரும்பை ஆட்டும் ஆலை என புறநானூற்றுப் பழைய உரையில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
”மன்றில் பாயும் வன்புலத் ததுவே
கரும்பின் எந்திரம் சீலைப்பின் அயல” (புறம்.322 5-6)
என வெள்வேல் வீரனொருவனின் நாட்டுவளத்தைப் பற்றிப் பாடும்போது ஆவுர்கிழார் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.
முடிவுரை
புறநானூறு பழந்தமிழர்களின் புறவாழ்க்கையைச் சிறப்பாக எடுத்துரைக்கும் நூலாகும். இந்நூலில் போருக்குப் பயன்பட்ட கருவிகளைத் தவிர அன்றாட வாழ்க்கையில் பயன்பட்ட தொழிற்கருவிகள், வீட்டுப்பயன்பாட்டுக் கருவிகள் மற்றும் பிற கருவிகள் பற்றிய செய்திகளும் பரவலாகக் காணப்படுகின்றன.
அடிக்குறிப்புகள்
- நெல்லை.எஸ்.சங்கரலிங்க முதலியார், தமிழ்ப்பேரகராதி, ப.340
- எம். வின்சுலோ, தமிழ் ஆங்கில அகராதி, ப.36
- பெருஞ்சொல்லகராதி,(தொகுதி 1), ப.360
- எம். வின்சுலோ, முந்நூல், ப.163
- நா. கதிரைவேற்பிள்ளை, தமிழ்மொழி அகராதி, ப.35
- மேலது., ப.732
*****
கட்டுரையாளர் – தமிழ்த்துறை உதவிப்பேராசிாியர்,
தி ஸ்டாண்டர்டு ஃப்யா்ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிா் கல்லூாி, சிவகாசி.
