கம்புள்
சற்குணா பாக்கியராஜ்
“வெண் நுதல் கம்புள் அரிக் குரல் பேடை
தண் நறும் பழனத்துக் கிளையோடு ஆலும்’”
ஓரம்போகியார், ஐங்குறு நூறு, 85: 1-2
சுருக்கமான உரை: வெண்மையான நெற்றியையும் விட்டு விட்டு ஓசை எழுப்பும் குரலையும் உடைய பெண் கம்புள், தன் சுற்றத்தோடு குளிர்ந்த பொய்கையிலிருந்து மகிழ்ந்து விளையாடும்..

சங்க இலக்கியத்தில் “கம்புள்” என்ற பறவையின் பெயர் நான்கு பாடல்களில் காணப்படுகிறது (ஐங்குறுநூறு 85, 60, அகநானூறு 356, புறநானூறு 297). மேற் கண்ட ஒரே ஒரு பாடலில் மாத்திரமே “வெண் நுதல் கம்புள்” என்று இந்தப் பறவையைச் சங்கப் புலவர் ஓரம்போகியார் மருதத் திணையின் பின்னணியில் வர்ணித்துள்ளார்.
கம்புள் என்றால் அது எந்தப் பறவை?
திரு. பி. எல். சாமி, தன்னுடைய “சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்” என்ற நூலில் “கம் என்றால் நீர் என்று பொருள். நீர்ப்புள் என்ற பொருளில் கம்புள் என்று வந்திருக்கலாம்” என்கிறார்.

ஆகவே கம்புள், நீரில் வாழும் பறவை என்ற அடிப்படையில் பறவையியலை ஆராயும் போது தமிழகத்தில் ஏழு வகை நீர்க் கோழிகள் காணப்படுகின்றன. இவை குளக் கோழி (Common Moorhen), நீலக் கோழி (Purple Moorhen), வெண் நெஞ்சு நீர்க்கோழி (White-breasted Waterhen), தண்ணீர்க் கோழி (Water Cock), நாமக் கோழி(Coot), தாழைக் கோழி (Moorhen), இலைக் கோழி (Jacana) என்பவையாகும்.
இந்தப் பறவைகள் Rallidae குடும்பத்தைச் சார்ந்தவை. இவை பொதுவாகக் குளம், குட்டைகள், ஏரிகள் அருகில் வளரும் நாணல் போன்ற புல் புதர்களில் மறைந்து வாழுபவை. இவைகளால் நீரில் வேகமாக நீந்தவும் முடியும். தண்ணீர்க் கோழியைத் (Water Cock) தவிரப் பிற நீர்க்கோழிகளுக்குப் பால் வேறுபாடு கிடையாது.
இந்த ஏழு வகைக் கோழிகளிலும் இரண்டு வகை நீர்க் கோழிகளுக்கு மட்டுமே நெற்றியில் வெண்மை நிறம் உண்டு. அவை: நாமக் கோழி (Common Coot- Felica atra), வெண் நெஞ்சு நீர்க்கோழி (White breast Waterhen -Amaurornis phoenicurus).
இந்த இரண்டு நீர்க் கோழிகளிலும் நாமக் கோழி ஒன்றிற்கு மட்டுமே நெற்றியில் வெண்மையான பட்டை போன்ற கவசமும் (frontal shield) வெண்மையான அலகும் காணப்படுகின்றன. பிற உடல் பாகங்கள் கறுப்பு நிறம். இந்தப் பறவை வாத்துப் போல் தோற்றமளித்தாலும் இது வாத்து அல்ல.
நாமக் கோழிகள், இனப் பெருக்கமல்லாத காலங்களில் நீர் வளமுடைய பகுதிகளில் இரண்டு முதல் இருபது வரையிலும் சில சமயங்களில் நூற்றிற்கும் மேலாகக் கூட்டமாகக் காணப்படுகின்றன. நிலத்தில் காணப்படுவதை விடத் திறந்த நீர்பரப்புகளில்தான் அதிகமாகக் காணப்படுகின்றன.
வெண் நெஞ்சு நீர்க்கோழிக்கு, வெண்மை நிறம் நெற்றியில் மட்டுமல்லாமல் நெற்றியிலிருந்து தொடங்கி, தலையின் இரு பக்கங்களும் மார்பும் அடி வயிறும் வெண்மையாகக் காணப்படும். முதுகுப் பகுதிக் கரும் சாம்பல் நிறமாகவும் வாலின் அடிப்பகுதி செம்பழுப்பு நிறமாகவும் இருக்கும்.
வெண் நெஞ்சு நீர்க் கோழி தனித்தோ அல்லது இணையாகவோ காணப்படும். கூட்டமாகக் காணப்படுவதில்லை. நீர்க் கரையோரங்களிலும் வயல் பகுதிகளிலும் பூங்காவனங்களிலும் காணப்படும். எதிரிகளைக் கண்டால் புதர்களில் மறைந்து கொள்ளும்.
இரண்டு பறவைகளின் குரல்களும் கரகரப்பானவை. இனப் பெருக்கக் காலங்களில் ஆண் பெண் இரண்டு பறவைகளும் குரல் எழுப்புகின்றன. வெண் நெஞ்சு நீர்க் கோழி விட்டு விட்டுக் குரல் கொடுப்பது தொலைவில் கேட்கும்.

வெண் நெஞ்சு நீர்க்கோழி—– நாமக் கோழி
ஒற்றுமைகள்:
1. இரண்டு பறவைகளும் நீர்க் கோழிகள் இனத்தைச் சார்ந்தவை
2. இனப் பெருக்கக் காலத்தில் இரண்டு பறவைகளும் இரவும் பகலும் கரகரப்பான குரல்களை எழுப்புகின்றன.
3. பால் வேறுபாடு கிடையாது.
வேற்றுமைகள்:
1. வெண் நெஞ்சு நீர்க் கோழி, தனித்தோ இணையுடனோ காணப்படும்.
கூட்டமாகக் காணப்படுவதில்லை.
நாமக் கோழி இனப் பெருக்கம் அல்லாத காலங்களில் கூட்டமாகக் காணப்படும்
2. வெண் நெஞ்சு நீர்க் கோழியின் நெற்றி மட்டும் வெண்ணிறமாக இல்லாமல் முகம், மார்பு, வயிற்றுப் பகுதியும் வெண்ணிறமாக இருக்கும்.
நாமக் கோழிக்கு நெற்றிப் பட்டையும் அலகும் வெண்மை நிறம்.
மேற் கண்ட தகவல்களைக் கொண்டு பாடலை ஆராய்ந்தால் புலவர் ஓரம்போகியார் வர்ணித்துள்ள “வெண் நுதல் கம்புள்” நாமக் கோழியாகத்தான் இருக்க முடியும் என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது.
References:
The Book of Indian Birds (Ornithologist, Dr. Salim Ali, Twelfth Revised and Enlarged Centenary Revised Edition, 1997)
திரு.. பி.. எல்.. சாமி, பி எசி, 1976. “சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்” pp.112- 113.
எங்கள் வீட்டருகே இருக்கும் வெண்நெஞ்சு நீர்க்கோழியை இங்கே நீங்கள் பார்க்கலாம் https://www.youtube.com/watch?v=43RRJN95XX0
கம்புள்கோழி, சம்புக்கோழி, வெள்ளை நெஞ்சு நீர்க்கோழி | white-breasted waterhen, Amaurornis phoenicurus – https://www.youtube.com/watch?v=whjAuGHYnHc
Snake attacks White-breasted Waterhen | கம்புள் கோழி மீது பாய்ந்த பாம்பு – https://www.youtube.com/watch?v=HDzsakZ5_28