மறவன்புலவு சச்சிதானந்தன் அரசியல் கள அனுபவங்கள்

அண்ணாகண்ணன்
மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களுடன் நேற்று காசி திரையரங்கில், விடாமுயற்சி திரைப்படம் பார்த்தோம். அடையாறு ஆனந்த பவனில் மதிய உணவு உண்டோம். அவருடைய அரசியல் கள அனுபவங்கள், எங்களுக்குப் புத்துணர்வு ஊட்டின. உற்சாகம் கொள்ள வைத்தன.
83 வயது நிறைந்த ஐயா, இன்றும் துடிப்புடன் தாமே மகிழுந்து ஓட்டி வருகிறார். மக்கள் நலன் சார்ந்த ஏராளமான பணிகளை இடையறாது ஆற்றி வருகிறார். இவரது முயற்சியின் விளைவாக, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியுள்ளது. அடுத்து, சரக்குக் கப்பல் போக்குவரத்தும் தொடங்கும் நிலையில் உள்ளது. இந்திய அரசுத் தரப்பிலும் இலங்கை அரசுத் தரப்பிலும் வணிகர்கள் தரப்பிலும் பலரைச் சந்தித்து, இதை நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
இலங்கையில் சிவசேனையின் தலைவராக, எழுச்சிமிகு பணிகளை நடத்தி வருகிறார். மதமாற்ற முயற்சிகள் எந்த வகையில் வந்தாலும் அவற்றைத் தடுத்து நிறுத்துவதில் வெற்றி கண்டுள்ளார்.
இலங்கைக்குப் பால் தினகரன் வந்து பேசும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள் ஒட்டப்பட்டிருந்தன. ஒரே ஒரு சட்டக் குறிப்பினை வைத்து அவரைத் திருப்பி அனுப்பச் செய்தார். சுற்றுலா விசாவில் வரும் பால் தினகரன், மதப் பிரசாரம் செய்ய அனுமதியில்லை என்ற குறிப்பினை முன்வைத்ததும் அரசே அவரைத் திருப்பி அனுப்பியது.
யாழ்ப்பாணப் பகுதிகளில் மதப் பிரசாரம் செய்வோரை வெளியேற்ற, புதுமையான உத்தியைப் பின்பற்றினார். அவர்கள் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரிடம், நீங்கள் குடியிருக்க வீடு கொடுத்தீர்களா? மதமாற்றம் செய்ய வீடு கொடுத்தீர்களா? என்ற கேள்வியை அங்குள்ள மக்களைக் கேட்க வைத்தார். விளைவு, அந்த வீடு மட்டுமின்றி, வேறு எங்கும் அவர்களுக்கு வீடு கிடைக்கவில்லை.
யாழ்ப்பாண நகருக்குள் மாடுகளை வெட்டக் கூடாது, மாட்டிறைச்சிக் கடை இருக்கக் கூடாது என்ற முழக்கத்தை மக்களே முன்வைக்க வைத்தார். இதில் அங்குள்ள ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற வைத்து, அந்தக் கடைகளை அப்புறப்படுத்தினார்.
பீட்சா ஹட் என்ற நிறுவனத்தில் இதே போல் இறைச்சிப் பண்டங்கள் விற்கக் கூடாது என வலியுறுத்தி வெற்றி கண்டார். அதைத் தொடர்ந்து உலகின் ஒரே சைவக் கடையாக இது செயல்படுகிறது.
யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபராகக் கிறித்தவ மதமாற்றி ஒருவரை நியமிக்கும் செய்தி வந்ததும் அதைச் சிவசேனை எதிர்த்தது. அவர் மதமாற்றி என்பதற்கான ஆதாரங்களை அளித்ததும் அவர் பதவியேற்பதற்கு முன்பே அவரை அரசு இடமாற்றியது.
யாழ்ப்பாண வலையக் கல்விப் பணிப்பாளர் பிறட்லீ, பொறுப்பேற்ற முதல் நாளில் கல்விப் பணிமனையில் இருந்த சைவக் கடவுள்களின் திருவுருவப் படங்களை அகற்றினார். சிவசேனை போராடியது. வடமாகாணக் கல்விச் செயலாளரின் கவனத்திற்கு இந்தச் செய்தியைக் கொண்டு சென்றது. சைவக் கடவுள்களில் படங்கள் உரிய இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டன.
இதில் எங்கும் வன்முறை இல்லை. ஜனநாயக முறையில், அற வழியில் போராடி, சட்ட நுணுக்கங்களுடன் கோரிக்கைகளை முன்வைத்து, உத்திகள் மூலமாகவே மகத்தான வெற்றி கண்டுள்ளார். மக்களைச் சரியாக வழிநடத்தி, தங்கள் உரிமைகளைப் பெற வைத்துள்ளார். எவருக்கும் அஞ்சாமல் துணிச்சலுடன், நெஞ்சுரத்துடன் நந்திக் கொடியைப் பறக்கவிட்டுள்ளார். அனைத்துத் தரப்பினரின் மதிப்பை, மரியாதையைப் பெற்றுள்ளார். இவை, தொலைநோக்கு உள்ள, தனிப் பெரும் தலைவருக்கு உரிய அடையாளங்கள். தமிழ்ச் சமூகம், இவரை உரியவாறு பயன்படுத்தி உய்ய வேண்டும்.