குறளின் கதிர்களாய்…(513)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(513)
ஆற்று பவர்க்கு மரண்பொரு ளஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.
– திருக்குறள் – 741 (அரண்)
புதுக் கவிதையில்…
அறிவொடு ஆண்மையும்
பொருளும் உடையோராய்ப்
பகைவர்மீது படையெடுத்துப்
போர் செய்யச்
செல்பவர்க்குச்
சிறந்ததாகும் அரண்,
அதுபோலப் பிறர்
படையெடுப்புக்கு அஞ்சித்
தம்மைப்
பாதுகாத்துக் கொள்ளும்
புகலிடமாகவும் அரண்
சிறந்ததாகும்…!
குறும்பாவில்…
ஆற்றலுடன் பகைவர் மீது
போர்தொடுத்துச் செல்வோர்க்கும், அதற்கஞ்சித் தற்காப்பு
செய்வோர்க்கும் சிறந்ததாகும் அரண்…!
மரபுக் கவிதையில்…
ஆண்மை யறிவு பொருளெனவே
அனைத்தும் கொண்டே படையெடுத்தல்
வேண்டிச் செல்ல வேண்டுமரண்
வேந்தன் தனக்குச் சிறப்பாக,
வேண்டு மதுவே மற்றவர்க்கும்
வெல்ல வருவோர் படையெடுப்பில்
தாண்டி வராமல் தற்காப்பாய்த்
தடுக்கும் அரணே தேவையாமே…!
லிமரைக்கூ…
கொண்டே மனதினில் முரண்
போர்தொடுத்துச் செல்வோர்க்கும், அதற்கஞ்சித் தற்காப்பு
செய்வோர்க்கும் சிறந்ததாகும் அரண்…!
கிராமிய பாணியில்…
கோட்ட கோட்ட
நல்ல கோட்ட,
நாட்டுக்குப் பாதுகாப்பு
நல்ல கோட்ட..
அடுத்தவங்களோட
படயெடுத்துப் போற ராசாவோட
ஒடமகளப் பாதுகாக்கக்
கோட்ட
ஓதவியா இருக்கும்,
அதுபோல
அடுத்தவங்க படயெடுப்புக்குப்
பயந்து தற்காப்பா
ஒளிஞ்சிக்கதுக்கும் கோட்ட
ஒதவியாத்தான் இருக்கும்..
அதால,
கோட்ட கோட்ட
நல்ல கோட்ட,
நாட்டுக்குப் பாதுகாப்பு
நல்ல கோட்ட…!