படித்தேன்! சுவைத்தேன்!! பகிர்ந்தேன்!!! — 34

முனைவர் ச. சுப்பிரமணியன்
தென்பசியாரின் ‘தமிழ்ப்பாவை’ – ஒரு மதிப்பீடு
முன்னுரை
தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார் இங்கு அமரர் சிறப்புக் கண்டார்’ என்பார் பாரதி. தமிழமுதின் சுவை காண்பது காரணம். அமரர் ஆவது காரியம். தமிழ்ச்சுவை கண்டால் தேவராகலாம். காண்பார் குறைந்துவரும் காலம் இது! காரியச் சிறப்பு உழைப்பின் கனஅளவைப் பொருத்தது. புதுக்கவிதைகளையும் ஹைக்கூ கவிதைகளையும் குறுங்கவிதைகளையும் படித்தவர்கள் “தமிழமுதின் சுவைகண்டோம்” எனச் சொல்லிக் கொள்வது அவர்கள் உரிமை. பழந்தமிழ் பெருமரபை உள்வாங்கித் தமிழிலக்கியங்களின் சுவையுணர்வது என்பது அவ்வளவு எளிதன்று. அகநானூறு படிப்பதும் ஆனந்தவிகடன் படிப்பதும் ஒன்றன்று. எனவே மரபை இன்னதென்று புரிந்து கொள்வதும் அதனை உள்வாங்குவதும் பாடவந்த பொருண்மையை மரபார்ந்த சொற்களால் கவியாக்குவதும் எல்லாருக்கும் கைவரப்பெறாது. அது யாருக்குக் கைவரப்பெறும என்பதை அவ்வளவு எளிதாக அறிந்து கொள்ளவும் முடியாது. அப்படிக் கைவரப் பெற்ற சிலருள் ஒருவர்தான் தென்பசியார் இராமதாசு.! விழுப்புரத்திற்கும் திண்டிவனத்திற்கும் இடைப்பட்ட ஒரு சிற்றூரின் பெயர்தான் தென்பசியார். ஆடுதுறை மாசாத்தானார், ஆலங்குடி வங்கனார், ஆலத்தூர் கிழார் ஒக்கூர் மாசாத்தியார், பிசிர் ஆந்தையார் என்பாரைப் போல இவர் தென்பசியார் இராமதாசு. ஊரால் பெயர் பெற்ற ஓட்டுநர். அன்னார் எழுதிய ‘தமிழ்ப்பாவை’ என்னும் பாவை நூலைப் பற்றிய ஒரு சுருக்கத் திறனாய்வாக இக்கட்டுரை அமைகிறது.
தென்பசியாரும் தமிழ்ப்பாவையும்
தமிழைப் பாடுபொருளாக்கிப் பாடப்பெற்ற பாவைகள் பலவான காரணத்தால் அவற்றினும் பிரித்துணர்வதற்கு இவர் தான் எழுதிய தமிழ்ப்பாவை என்னும் நூலைத் “தென்பசியார் தமிழ்ப்பாவை” என ஊரோடு சேர்த்து உணர வைத்திருக்கிறார். தென்பசியார் இராமதாசு எழுதிய தென்பசியார் தமிழ்ப்பாவை எனல் பொருந்தும். தன்னால் முடிந்த வெளிச்சத்தைத் தமிழுக்குத் தர வேண்டும் என்னும் காரணத்தால் தமிழ்ப்பேரொளி எனப் புனைபெயர் வைத்துக் கொண்டுள்ள இக்கவிஞர் கண்ணாடி அணிந்துதான் கவிதை எழுதுகிறார். தமிழால் தனக்கு ஒளி கிடைக்கும் என நம்புகிறார். நம்பினார்க்கு நலிவில்லை. கள்ளமில்லா வெள்ளையுள்ளத்திற்குச் சொந்தக்காரரான இவரின் கடுஞ்சினம் பலராலும் அறியப்பட்டதே. கோபம் இருக்குமிடத்தில்தான் குணமிருக்கும். .இவரிடம் இரண்டும் இணைந்தேயிருக்கும். கவியரங்குகளில் கவிபாடும் தமிழ்ப்பேரொளி விழுப்புரம் – புதுவை தடத்தில் அரசுப் பேருந்து இயக்கும் ஐம்பது வயது இளைஞர். பல்துறைக் கவிஞர்களைக் கண்ட சங்கக் காலத் தமிழ்க்கவி மரபு தற்போது விழுப்புரம் புதுவைத் தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பயணங்கள் முடிவதில்லை!
தமிழ்ப்பாவையின் பாடுபொருள்
தமிழின் மீது பாடப்பெற்ற அல்லது தமிழைப் பாடுபொருளாக்கிப் பாடப்பெற்ற அத்தனைப் படைப்புக்களும் தமிழின் பெருமையைச் சொல்வதாகவும் தாய்மொழி காக்கத் தமிழினத்தைத் தட்டியெழுப்புவனவாகவே அமைந்திருக்கின்றன. இதில் என்ன சிக்கல் என்றால் தமிழ்விடு தூது என்னும் நூலுக்குப் பின்னாலே வந்த படைப்புக்கள் எதுவும் தமிழ்விடுதூதினை விஞ்ச இயலவிலலை. இவற்றுள் தனித்தன்மை வாய்ந்தது ஒரே நூல்தான். அது பாவலர் ஐயா பெருஞ்சித்திரனார் எழுதிய செந்தமிழ்ப் பாவை. அது இந்தி எதிர்ப்புப் போராட்டக் காலத்தில் சிறையில் எழுதப்பட்டது. இந்தி வந்தால் தமிழ் கெடும் இன்னும் ஏன் உறக்கம்? என்று பெண்குலத்தைத் தட்டியெழுப்பிய அருமையான நூல். யாப்புக்கு யாப்பு., கவிதைக்குக் கவிதை, கற்பனைக்குக் கற்பனை, உணர்ச்சிக்கு உணர்ச்சி, கருததுக்குக் கருத்து என்னும் இயைந்த கலவையால் ஆன இதயம் கவர்ந்த நூல் அது. எனவே பாவை இலக்கியத்தின் கருவறை ஆராய்ச்சி காலங்கடந்த ஒன்று. தமிழ்மொழியைத் தாயாக உருவகப்படுத்திப் பாடும் முறைமையும் பழைமையான ஒன்றுதான். இட்டளியின் வடிவ ஆராய்ச்சியும் அதன் அரிசி மாவு மூலத்தையும் தொடர்ந்து ஆராய்ந்து கட்டுரை எழுதிக் கொண்டிருப்பதில் எள்ளின் முனையளவுப் பயனும் விளையப் போவதில்லை. பாவலர் பெருஞ்சித்திரனார் அவர்கள் கருத்தியலைப் பின்பற்றும் தம்பி பேரொளி இந்தத் தன்னுடைய தமிழ்ப்பாவையில் தமிழ் பாடுவதன்றி மொழி சார்ந்த வேறு சில சமுதாயக் கூறுகளையும் பாடியிருக்கிறார் என்பதுதான் இந்தக் கட்டுரைக்கான காரணம். கவிதை அறிவு சார்ந்ததன்று; உணர்வு சார்ந்தது. உணர்ச்சியின் வெளிப்பாடு. தூய நெஞ்சிலிருந்து வெளிப்படும் எந்தத் தூய உணர்ச்சியும் கவிதைக்கான காரணக் களமாகும். ஒரு பேருந்து ஓட்டுநருக்குத் தமிழில் மரபுக் கவிதை எழுத வேண்டும் என்ற உந்துதல் வந்ததற்கு இந்தத் தூய்மைதான் தலையாய காரணம். தெள்ளிய நீரும் தெளிந்த உள்ளமும் ஒன்று. அது பேரொளிக்குரியது.
தமிழ்ப்பாவையின் உள்ளடக்கம்
‘பாவை’யைத் தனிப்பட்ட சிற்றிலக்கிய வடிவமாக மரபுக்கவிஞர்கள் கருதுகிறார்கள். உண்மையில் ‘பாவை’ என்பதைத் தனி இலக்கியமாகத் தமிழில் காணமுடியவில்லை. தொடக்கக்காலப் பாவை என்பது ஆண்டாள் பாசுரங்களில் ஒன்றாகவும் திருவாசகத்தின் பதிகங்களில ஒன்றாகவுமே அறியப்படுகின்றன. திருவாசகத்தில் காணப்படும் திருச்சதகமும் ஒரு பதிகமே. அவற்றின் கட்டமைப்பும் மொழிச் செழுமையும் வெளிப்பாட்டு உத்தியும் தனியிலக்கியமாகக் கருதக் கூடிய அளவுக்கு இருந்ததால் அவை தனியிலக்கியத் தகுதியைப் பெற்றிருக்கலாம். அகப்பொருள் புறப்பொருள் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றுபறறி ஒரு நூறு பாடல்களால் பாடப்பெறும் இந்தச் சதகத்தின பாடுபொருள் காலத்திற்குக் காலம் வேறுபட்டு அமைந்திருக்கிறது என்பதைத் தமிழிலக்கிய வரலாறு குறித்திருக்கிறது. சிவபெருமானைப் பற்றி மணிவாசகர் பாடினார். நாடுபற்றிப் பாடப்பெற்ற சதகங்கள் பாண்டிமலச் சதகம் சோழமண்டலச் சதகம், கொஞ்குமண்டலச் சதகம், ஈழமணடலச் சதகம், தொண்டமலச் சதகம். முதலியவைகளும் சமயங்கடந்த நிலையில் யாழ்ப்பணாம் சதாசிவப் பிள்ளையால் எழுதப்பட்ட இயேசுநாதர் திருச்சதகம் குணங்குடி மஸ்தான் சாகிபு எழுதிய நந்தீசர் சதகம் முதலியவைகளும் இங்கே உள்ளன. குருபத தேசிகர் எழுதிய குமரேச சதகமும் கொல்லிமலை அறப்பளீசுவரர் மேல் பாடப்பெற்ற அம்பலவாணரின் அறப்பளீசுவரச் சதகமும் இங்கே உண்டு. கட்டமைப்பு உள்ளம் கவர்ந்துவிட்டால் கவிவாணர்கள் ஆதி பாடுபொருளை மாற்றி தாம் விரும்பிய பாடுபொருளைக் கட்டமைப்புக்குள் அடைக்கலமாக்கிவிடுகிறார்கள்.
பாவை இலக்கியக் கட்டுமானமும் சதகத்தை ஒத்தே விரிவடைந்துள்ளது. மார்கழிப் பாவையாக இருந்த அது மாதப்பாவையாக மாறியது கண்ணதாசனின் தைப்பாவையில். மாதவரம் துரை வசநதராசனின் கற்பனைக் காதலி தேன்பாவையாகத் தோற்றம் கொணடாள். தானே எழுதிக் கொள்ளும் தன் வரலாற்றைத் (AUTOBIOGRAPHY) தற்பாவையாக்கிக் காடடினார் வசந்தராசன். செல்வமீனாட்சி சுந்தரனார் தன்னுள்ளங்கவர் கள்வனைப் பெரியார் பாவையில் நாயகனாக்கியிருக்கிறார். இன்ன பொருளை இன்ன யாப்பில்தான பாடவேண்டும் என்னும் இறுக்கமான தமிழ்க்கவிதைக் கட்டுமானம் காலத்திற்கேற்ப மாறி வந்திருக்கிறது அலலது மாற்றப்பட்டுள்ளது என்பதை இதனால் அறியக்கூடும். அதாவது கட்டுமானத்தில் மரபையும் பாடுபொருளால் புதுமையையும் உள்ளடக்கிய அர்த்தநாரீஸவராக இந்தப் பாவையிலக்கியங்கள் திகழ்கின்றன என்றலும் பொருந்தும்.
இயல்பிலேயே சமுதாயப் பார்வையும் மொழிப்பற்றும் படைப்பிலக்கிய ஆர்வமும் கொண்ட தமிழப்பேரொளி தமிழ்ச் சமுதாயத்தில் எல்லாத் துறைகளிலும் புரையோடி போயிருக்கின்ற போலித்தனத்தைச் சாடுவதற்கும் மொழிப்பற்றும் இனஎழுச்சியும் பிரிக்க முடியாத நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதைத் துல்லியமாக எடுத்துக் காட்டுவதற்கும் இன்னபிற உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குமான வாய்ப்பாக இவ்விலககியத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஓட்டுநர் எழுதிய இலக்கியம் என்பதற்காக எத்தகைய விதிவிலக்கும் இவருக்குத் தரப்படவில்லை. இலக்கியத்தில் ஏது இட ஒதுக்கீடு? வழக்கமான தரமதிப்பீட்டுக் கருவிகளைக் கொண்டே தமிழ்ப் பாவை அளககப்படுகிறது.
அவையடக்க மரபு
பாடுபொருளின் பெருமையையும் பாடுகிறவனின் சிறுமையையும் பாடுகிறவனே வெளிப்படுத்தும் ஓர் இலக்கிய உத்திக்கு அவையடக்கம் என்று பெயர். இது உத்தியே ஒழிய உண்மை ஆகாது. உண்மையில் இராமனை விடக் கம்பன் பெரியவன். கல்வியிற் சிறந்தவன் கம்பன். இராமனைக் கருணை மாக்கடல் என்று அறிமுகம் செய்கிறவனே கம்பன்தான். அறிமுகம் செய்யுமிடத்தில கம்பன் இருக்கிறான். தன்னுடைய படைப்பிலக்கியப் பேராற்றலைத் தானே வெளிப்படுத்திக் கொள்வது அடக்கத்திற்கு முரணாகும் ‘தன்னை வியந்து தருக்கலும் கேடு தரும்’ என்பது தமிழ்நெறி. எனவேதான கம்பனைப் போன்ற பெருங்கவிஞர்கள் அவையடக்கம் கூறிப் பிறரை வணங்கித் தம் படைப்புத் தொழிலைத் தொடங்கினார்கள். ஆனால் கவிஞர் அனைவரும் அவையடக்கம் கூறவில்லை. காப்பியங்கள் எல்லாமும் அவையடக்கம் கொண்டிருக்கவில்லை. சிலப்பதிகார்த்திலே ஏது அவையடக்கம்? பெரிய புராணத்திலே ஏது அவையடக்கம்? இந்தப் பின்புலத்திலேயே
ஓசைபெற்று உயர் பாற்கடல் உற்று ஓர்
பூசை முற்றவும நக்குபு புக்கென
ஆசைபற்றி அறையலுற்றேன் மற்றிக்
காசில் கொற்றத்து இராமன் கதையரோ
என்னும் கம்பனின் அவையடக்கத்தைக் காண வேண்டியதிருக்கிறது. பாடுபொருளோடு இரண்டறக் கலந்துவிடும் போது கடவுள் வாழ்த்து தொடங்கிய கவிஞர்கள் கூட அவையடக்கத்தை மறந்துவிடுகிறார்கள். அபிராமியின் பெருமை பாட வந்த அபிராமிபட்டர் அபிராமி அந்தாதிக்கான அவையடக்கத்தை நூலின் இருபததாறாவது பாடலில் பதிவு செய்திருக்கிறார்.
ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம்,- கமழ்பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே.! மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடைத்தே!
நூலின் தொடக்கத்தில் நூலுக்கு வெளியே நின்று பாடப்பட்ட அவையடக்கம் நூலுக்கு உள்ளே பல பாடல்கள் சென்ற பிறகு பாடப்பட்டிருக்கிறது என்பதை இதனால் அறியமுடிகிறது. நூலுக்கு வெளியிலும் இல்லாமல் இடையிலும் இல்லாமல் தமிழ்ப்பாவையின் முதற்பாடலிலேயே அவையடக்கத்தை நூற்பகுதியாகவே வைத்துப் புதுமை செய்திருக்கிறார் தமிழ்ப் பேரொளி
“வார்குழல் பின்னலே வண்ண நிலவே!
சீர்த்தமிழ் உன்னைச் சிறுவனோ யாதறிவேன்?
கூர்மதியாள் என்றன் குறைகள் களைந்திடுவாய்!
நாரோடு பூமணக்கும் நற்றமிழே நீ வாழி!
கூறான வாளேந்திக் குற்றங்கள் நீ தடுப்பாய்!
ஆர்த்தென்னை நீ தாங்கு!”
என்றெல்லாம் பெருந்தமிழ் அன்னையைப் பேதை நிலையிலிருந்து அவையடக்கம் பாடியிருக்கிறார். நு{லின் அகவுறுப்பாகப் பாடப்பெற்ற இந்த அவைபயடக்கம் ஏனைய எட்டடிக் கொச்சமாக இலலாமல் பத்து அடிகளைக் கொணடிருப்பதும் ஒரு சிறப்பு.
கட்டுமானப் பெருமையும் உள்ளடக்க வெறுமையும்
தென்பசியார் முகநூலில் பயணிக்கும் ஒரு கவிஞர். அவர் கவதையைப் பற்றி அறிவதற்கு முன்பாகவே யாப்பினைப் பற்றி அறிந்திருக்கிறார். அல்லது அறியச்செய்பபட்டிருக்கிறார். கவதை உணர்வைச் சார்ந்தது என்பதையும் கடடுமானம் அறிவைச் சார்ந்தது என்பதையும் அவருக்கு அறிவுறுத்தும் ஆசிரியர் கிடடாமல் போனது தவக்குறையே. மேலும் பாடுபொருளும் கட்டுமானமும் தம்முள் பின்னிப் பிணைந்தவை என்பதை அவர் முற்றும் உணரவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது. .இவரை வாழ்த்திப் பாடும் பாடலொன்று “யாப்பேந்தி வாழியவே” எனத் தொடங்கி முடிகிறது, இந்த வாழ்த்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட தென்பசியார் வெண்டளை விரவிய கொச்சகக்கலிப்பாவில் இந்தப் பாவையை நிறைவு செய்திருக்கிறார். அதனால் உள்ளடக்கமாகிய பொருளும் அது வெளிப்படுத்தும உணர்ச்சியும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. பட்டுப் புடவையை இரவல் கொடுத்த கதை என்பது இதுதான்!
“தொல்காப்பியம் தந்த தொல்;தமிழே”
“இரணடடியில் வள்ளுவனும் இவ்வுலகு நன்னெறியில்
நிரந்தரமாய்ச் சென்றிடவே நீள் குறள் யாத்தளித்தான்”
“காவியம் கண்டெடுத்துக் கம்பனவன் நற்றிமிழில்
ஓவியம் தநதளித்தான் ஒண்டமிழ் தன்னிலே
“தீவிரமாய்ப் பாடும் தேவாம் தெய்வ நு{லாம்”
நற்றமிழ் தந்த நறுமணச் சொல்லெடுத்துத்
தெற்றியில் பாடும திரிகூட ராசப்பர்
வெற்றுடல் மேனியிலே வெந்தழல் மேலிடும்
பற்றில்லாப் பட்டினத்தார் பாட்டெல்லாம் பாடிவைததார்”
குறிஞ்சிப் புகழ்பாடிக் கொற்றவன் நட்பேந்தி
அறிவோங்கும் பண்ணெலலாம ஆர்த்தளித்தார்
நம் கபிலர்”
“நெறிகள் வகுத்தளித்தார் நீதி நூல் ஔவையாரும்”
“சொற்சிலம்பாடிய சேரன் இளங்கோவன்”
“கொற்றவனைக் கூடிய ஆண்டாள்”
பொற்றமிழின் மேகலையாய்ப் பெண்ணணியும் சேர்த்தளித்த சாத்தனார்”
என்று முந்தைய நூல்களைப் பட்டியலிடுவதை இவர் மரபுவழிச் சிந்தனை என்று எண்ணிக் கொள்கிறார். இத்தகைய தொகுப்புக்களையும் தொன்மங்களில் சித்தரிக்கப்படும் கதைகளையும் பெரியபுராணச் செய்திகளையும் எல்லாம் ஒன்றாக்கி “எல்லாரும் நீயாய் இருந்தமையால்” என்று தமிழ்விடு தூது ஆசிரியர் கவிநயத்தோடு விளித்து எழுதியிருக்கிறார் என்பதை இங்கே சுட்ட வேண்டியது என் கடமையாகிறது.
தமிழ்ப்பாவையும் தமிழினமும்
தமிழைப் பற்றித் தமிழில் பலரும் பல வடிவங்களில் பாடியிருந்தாலும் பாவேந்தரை விஞ்ச முடியவிலலை என்பது ஆய்வுண்மை. தமிழைப் பாடுகிறபோது ‘தன்னை யிழந்து தன் நாமம் கெட்டு’விடுவார் பாவேந்தர். ஆனால் தமிழுணர்ச்சி என்பது அவரோடு நின்று விடாதல்லவா? அதனால் அவ்வுணர்ச்சி இன்றுவரைத் தொடர்கிறது. தமிழ் நேற்றும் பாடுபொருள்.இன்றும பாடுபொருள். நாளையும் பாடுபொருள். காரணம் அது ஒரு வினைவேக மாற்றி! தமிழனைத் தூங்காது காக்கும் துணைவன் தமிழே! தமீழனத்திற்குத் தமிழ் என்பது உயிர் வளி!
தமிழைப் பற்றிப் பலரும் பாவையிலக்கியம் செய்திருப்பதால் பாடுபொருளால் இநத நூல் புதுமை படைக்கவில்லையெனினும் தமிழைப் பாவையிலக்கியத்தால் தானும் பாடவேண்டும் என்னும் கவிஞரின் வேட்கை கொஞ்சம் தணிந்திருக்கிறது. நல்ல கணவனைப ;பெற வேண்டும் என்னும் வேண்டுதலைப் பழந்தமிழ் பாவையிலக்கியத்தின் உள்ளடக்கமாக இருந்தாலும் காலச் சூழலுக்கேற்ப உள்ளடக்க மாறுதல் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. பெருஞ்சித்திரனார் செந்தமிழ்ப் பாவை எழுதியதற்கும் வசந்தராசன் தேன்பாவையை தீட்டியதற்கும் செல்வமீனாட்சி சுந்தரம் பெரியார் பாவை எழுதியதற்கும் இதுதான் காரணம். எனவே கட்டுமானம் ஒன்றாயினும் உள்ளடக்கம் மாறுபடுவது இலக்கிய வளர்ச்சியையே குறிக்கும்.
“ஒற்றுமையை நாளும் உருக்குலையச் செய்கின்றார்
கற்றுணரும் நம்மொழியைக் கண்டபடி ஏசுகின்றார்!
சற்றும் உனக்கதிலே சங்கடங்கள் நேரலையோ?
வெற்று முழக்கங்கள் வீண்வேலை தானே?
வற்றும் தமிழ் வேட்கை! வண்டமிழும் வாழுமோ?
பெற்றுவக்கும் மேன்மையெல்லாம் பேராண்மை செந்தமிழால்!
குற்றம் குறையிருப்பின் கூடிக் களைந்திடுவோம்!”
என்ற கவிதையில் ஒரு உண்மைத் தமிழ்க்கவிஞனின் உள்ளத்து ஆதங்கம் ஒளிவு மறைவின்றி வெளிப்படுவதைக் காணலாம்.
தமிழ்ப்பாவையின் ‘தொடையழகு’
தமழில் உள்ள் நாற்பத்து மூன்று தொடைவிகற்பங்களுள் பலவற்றை இந்தத் தமிழ்ப் பாவையில் காண முடிகிறது, தொடைவிகற்பங்கள் கவிதையின் புறவழகைக் கூட்டிக் காட்டும். தொடைவிகற்பங்களின் இனிமையைப் பாடலைச் சொல்லிக் கேட்கிறபோது உணரலாம். எந்தச் சிறப்பும் இல்லாத செந்தொடைப் பாட்டுக்கள் அவ்வளவாகச் சிறக்காது, அவை சிறக்க வேண்டுமானால் பாடுபொருள் மிக நுண்ணியதாக அமைநதிருத்தல் வேண்டும். தமிழ்ப்பாவை உணர்ச்சியைத் தூண்டும் ஒரு பாடுபொருளாதாதலின் தொடை விகற’பங்களின் செவிப்பயன்பாடு அதிகமாகவே தெரிகிறது.
தொடுகிற இடமெல்லாம் தட்டுப்படுகின்ற தொடையழகு! உடம்புக்குத்தான் உயிர் காவல். உயிருக்கு உடம்பு காவல். அல்ல. அருவப் பொருளாகிய உயிரின் இருப்பை உருவப் பொருளாகிய உயிரே உறுதி செய்கிறது. உணர்ச்சியும் கருத்துமாகிய கவிதையின் உயிர்ப்புப் பகுதிகளை எண்ணிக் கவிதை செய்வார் எண்ணிக்கையில் சிலரே! ஆனால் கவிதையின் புறவழகைக் கூட்டிக் காட்டும் தொடைவிகற்பங்களில் கவனம் செலுத்திக் கவிபுனைவார் எண்ணிக்கையில் பலர். ஒரு நல்ல கவிதையில் கருத்தியலாகிய அகவழகும் புறவழகாகிய தொடைவிகற்பங்களும் சரிவிகிதத்தில் அமைந்தால்தான் கவிதை சிறக்கும். காலத்துக்கும் அது வாழும்.! கம்பன் கவிதையின் நிலைப்பாட்டுக்கும் காளமேகத்தின் கவிதை வேடிக்கைப் பொருளானதற்கும் இதுதான் காரணம். சொல்ல வேண்டியவறறைச் சொல்கிற முறையில் சொல்வதுதான் கவிதை!.
கருத்தியலை உணர்ச்சியோடும் ஏனைய புற அழகுகளோடும் கலந்து கவி செய்வார் சிலருள் தமிழ்ப்போரொளியும் ஒருவர். முப்பது கலிப்பாக்களில் இழைந்தொளிரும் தொடைவிகற்பங்களைச் சுட்டுவது கற்பாருக்கு ஒரு வழிகாட்டியாக அமையக்கூடும்.
- “பதிகமெல்லாம் பாடிடவே பற்றுவைத்தேன் பாடிடவே” என்பதில் முற்று மோனையும்
- “நாரோடு பூமணக்கும் நற்றமிழே! நீ வாழி என்பதில் பொழிப்பு மோனையும்
- “பீடு நடைபோட்டுப் பேராண்மை கூடட்டும்” என்பதில் உயிரெதுகையும்
- “அன்னைத் தமிழுக்கோர் ஆலயம் என்றெண்ணி” என்பதில் ஒரூஉ எதுகையும்
- “இன்பம் பயக்குமாம் இன்தமிழ் என்றாங்கு” என்பதில் மேற்கதுவாய் எதுகையும்
- “சிற்பம் போல் சீத்தலைச் சாத்தனார் சிந்தையிலே” என்பதில் கீழ்க்கதுவாய் மோனையும்
- நூல் முழுமையும் அடியெதுகைகளும்
அமைந்து அலங்காரம் செய்யப்பட்ட ஒரு கவிதைத் திருமகளை நடமாட விட்டிருக்ககிறார் போரொளி. தடங்கண்டு காரோட்டும் ஒரு தமிழ்ப்பிள்ளையின் தடம் மாறா கவிதைச் செப்பம் கவனத்திற்குரியது. பாராட்டுக்குரியது. பாவையே அழகு என்றால் அந்த அழகுக்கு அழகு சேர்க்கும் தொடைவிகற்பங்களைப் பற்றி இன்னும் எழுதலாம்.
இதுதான் மரபுக் கவிதை. இது உருவத்தால் மணிவாசகரையும ஆண்டாளையும் முன்னிறுத்தி உள்ளடக்கத்தால் பெருஞ்சித்திரனாரைப் பின்னிறுத்துவதால் மரபுக் கவிதையே! பாடலைத் தொடங்குவதற்கு முன்பே விளம் விளம் மா என்றும் காய் காய் கனி என்றும் வாய்பாடுகளுக்காகப் பாடல் புனைவோர் கவிதைத் தொழிலுக்கும் போரொளியின் கவிதைத் தொழிலுக்கும் வேறுபாடு உண்டு. வாய்பாடுகளுக்காகக் கவிதை எழுதுவது என்பது வேறு. கவிதைகளுக்குள் அமைந்துள்ள வாய்பாடுகளைக் காண்பது பேறு!. முன்னதில் வாய்பாடுகள் முன்னிற்கும். பின்னதில் கவிதை சிலிர்க்கும்.! வாய்பாடுகளை முன்னிறுத்திக் கவிதைகளைப் பின்னிறுத்தி எழுதியிருந்தால் கம்பன் இன்னும் பாலகாண்டத்தில் பாதியைக் கூட எழுதியிருக்க முடியாது.
தமிழ்ப்பாவைபயில் கண்ட உத்தி மரபு
நான் அடிக்கடிக் குறிப்பிடுவதுபோல நூன்மரபில் தொடங்கி மரபியல் முடிய உள்ள தமிழ் மரபுகளே தமிழ்க்கவிதை மரபுமாகும். தொல்காபபியமே ஒரு கவிதையியல் நூலாதலின் அதன் உள்ளடக்கம் அத்தனையும் தமிழ்மரபே. இதனை உணராத பெரும்பாலோர் யாப்பை மட்டுமே அதிலும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், நேரிசை வெண்பா, அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் முதலியவற்றையே மரபெனக் கருதி மயங்குவர். இதனால் என்ன விளைவு? எனின் கவிதைகளில் யாப்பினைக் கண்டறிவதே ஆராய்ச்சி என்றாகிவிடுகிறது, அறிவு கண்கொண்டு கவிதையை சுவைக்க எத்தனிக்கிறவன் எவனும் கவிதை ரசிகனாக இருக்கவே முடியாது, அப்படி இருந்திருந்தால் நாம் ஒரு டிகேசியைப் பெற்றிருக்க முடியாது. இந்தப் பின்புலத்தில் கவிதை உத்திமரபுகள் தமிழ்ப் பாவையுள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதைக் காண முடியும்.
“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு”
என்பார் திருவள்ளுவர். இவ்விரண்டனையும் இவராகச் சொல்லாமல் சிலர் சொல்வார்கள் என்று எடுத்துக்காட்டுவதுதான் உத்தி மரபு. கணிதம் என்பார் சிலர். இலக்கியம் ;என்பார் சிலர். நானோ இவையிரண்டுமே மானுடத்திற்குத் தேவையானவை என்பதுதான் என் கருத்து’ என்கிறார் திருவள்ளுவர். “சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்” என்னும் பாட்டு திருவள்ளுவர் உத்தி கண்ணதாசன் சிந்தையில் குடிகொண்ட மரபு.
“தர்மம் என்பார் நீதியென்பார்! தரம் என்பார்!
சரித்திரத்தைச் சான்று சொல்வார்!
தாயன்பு பெட்டகத்தைச் சந்தியிலே நிறுத்திவிட்டுத்
தனமான வீரர் என்பார்!
மர்மமாய்ச் சதிபுரிவார்! வாய்பேசா அபலைகளின்
வாழ்வுக்கு நஞ்சு வைப்பார்!
கர்ம வினையென்பார்! பிரம்மன் எழுத்தென்பார்!
கடவுள் மேல் குற்றம் என்பார்!”
திண்ணைப் பேச்சு வீரர்களைப் பட்டுக்கோட்டை அடையாளப்படுத்துகிற வெளிப்பாடடு உத்தி மரபு இது. இதுபோலப் பல பாடல்களைக் ;காட்டலாம். இந்த மரபினை ஒரு அகப்பாடலில் வைத்துக் காடடினார் கண்ணதாசன்.
“பொன்னென்பேன்! சிறு பூவென்பேன்”
காணும் கண்ணென்பேன்! வேறு என்னென்பேன்?”
இயல்பான கவிஞர்களுக்கு இது கைவந்த கலை!.
“பொன்னெனபார்! பூவென்பார் போற்றிப் புகழ்ந்திடுவார்!
தன்னையே ஈந்து தமிழென் உயிரென்பார்!
மன்றம் முழுதும் மணித் தமழ் போலில்லை!
என்றே முழங்கிடுவார் ஏற்றங்கள பெற்றிடுவார்!
தொன்மை மொழியென்பார் தென்றலே வீசுமென்பார்!
நன்மை பயக்கும் என்பார் நல்லதே செய்யுமென்பார்!
இன்னல் வரும்போது எங்கேதான் செல்வாரோ?
நண்ணலே வேண்டாமோ நற்றமிழே எம்பாவாய்!
என்னும் பாவையுள் இந்த உத்தி மரபு கவிஞரையும் அறியாமல் பதிந்திருப்பதைக் காணலாம்.
சிறுமை கண்டு பொங்கும் தென்பசியார்
பெருஞ்சித்திரனார் எழுதிய செந்தமிழ்ப் பாவையில் சில தொடர்கள் இப்படி அமைந்திருக்கின்றன.
“வல்லடிமை கொண்டார், வரும்பொருளிற் பங்கெடுத்தார்!
மல்லடிமைச் சேற்றில் மனத்தைப் பதமிடுவார்!
தொல்லடிமை செய்வதற்கே தோதுபல சொல்லிடுவார்”
“கற்றவரோ செந்தமிழால் காசு பணம் சேர்க்கின்றார்!
மற்றவரைக் கேட்பானேன்”
“கோல்வலியால் — ஆட்சிக் கொடுமையினால் நம்மவரை
வால்பிடிக்கச் செய்த வடவர் கொடுமொழியை
மேல்நிலையில் வைத்து மணித்தமிழைத் தாழ்த்தினர்காண்”
இந்த எழுச்சியும் வேகமும் பேரொளியின் பாவையிலும் எதிரொலிப்பதைக் காணமுடிகிறது. தமிழை அழிப்பதற்குப் பகைவர செய்துவரும் பல்லாண்டு முயற்சிக்கு நம்மவரே துணை செய்யும் கொடுமை தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது, அது பற்றி எழுதப்போனால் அது ஆராய்ச்சிக் கட்டுரையாக மாறிவிடும்.
மாசு மருவற்ற மாத்தமிழ் போற்றிடவே
தூசு படியாமல் தூயதமிழ் காத்திடவே
நேசம் மிகுந்தோராய் நேர்வழி சென்றெங்கும்
கூசும் வசையறியார்! கூடித்தமிழ் வளர்த்தார்
இது இருந்தநிலை. ஆனால் இன்றைய நிலைஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ? பாடுகிறார்!
பேசும் மொழிக்கோ பழி வந்து சேருகையில்
காசு பணம் யாவும் கண்ணை மறைக்கிறதே!
சூசகமாய் வெல்லுதற்குச் சூழ்ச்சிவலை பின்னுகின்றார்!
காசினியில் வீழ்ச்சி கண்டிடுமொ எம்பாவாய்?
இந்த ஆதங்கம் நூல் முழுமையும் இழையோடுகிறது. “கேடு நினைப்போர்க்குக் கேண்மை வழிசென்று சூடு கொடுத்திடவா!” என்று தமிழையே அழைக்கின்றார்.
‘சதிவலைப் பின்னலிலே சாய்ந்திடுமோ? எந்தமிழோ
விதிவழி என்றே வியன்தமிழை விட்டிடவோ?
கதியென்று உன்னையே காலமெல்லாம் போற்றி
துதித்து நிற்கும் கையுடையார் துன்பமற்றோர் எம்பாவாய்!”
‘தமிழுக்குத் தொண்டு செய்வார் சாவதில்லை” என்னும் பாவேந்தர் அடி பேரொளியின் பாவையில் ‘துன்பமற்றோர்” என வெளிப்படுகிறது. ‘தமிழ்க்காப்பு’ என்பதை மையப் பொருளாகக் கொண்டு பேரொளி பாடியிருக்கும் இந்தப் பாவையுள் மரபின் கூறுகள் மலரின் மணம் போல இழைந்து பற்றிலாத ஒரு சமுதாயத்தின் மேல் பாடப்பெற்ற பதிகம் போல் நிலவுகிறது.
நிறைவுரை
பாவை பாடிக் கோவை பாடியவர் மணிவாசகப் பெருமான். இதற்குப் பின்னால் இவர் என்ன பாடப்போகிறார் என்பது பற்றி இதுவரை தகவல் இல்லை. முகநூல் கண்ட கவி முத்துக்களில் ஒருவர். என்ன? யாப்புதான் கவிதை என்னும் தவறான போதனைக்கும் வழிகாடடுதலுக்கும் ஆளாகிப் போனவர். எழுபத்தைந்து மதிப்பெண் வாங்க வேண்டிய தமிழ்ப்பாவை வெறும் அறுபது மதிப்பெண்களை மட்டும் பெற்றுத் தேருகிறது. இருந்தாலும் அது முதல் வகுப்பு எனக் கருதி அமைதியடையலாம். அவர் யாப்பேந்தி வாழ்ந்ததெல்லாம் போதும். கற்பனை ஏந்தி கவிபுனையட்டும்! உணர்ச்சிகளைப் பேராறாய் ஓடவிடட்டும். சமுதாயச் சிக்கல்களைப் ;பாடுபொருளாக்கட்டும். பாவை பாடிய வாயால் ஒரு பரணி பாடட்டும்; தமிழ்க்கவிதைகள் நிலைத்திருப்பதற்குக் காரணம் யாப்பே என்னும் மயக்கம் நிலவுகிற வரை தமிழ்நாட்டில் தமிழ்க்கவிதை செழிக்கவோ சிறக்கவோ வாய்ப்பில்லை. அவர்களே எழுதி அவர்களே அச்சடித்து அவர்களே படித்துக் கொள்ள வேண்டியதுதான். தேவைப்படுகிற நேரத்தில் அவர்களே விருதுகளை அளித்துக் கொள்ள வேண்டியதுதான். கவிதையின் நிலைதான் கவலைப் பட வைக்கிறது, நான் தமிழ்ப்பேராளியிடம் மிகுந்த நம்பிக்கை கொண்டவன்.
“பனைமரமும் தென்னை மரமும் கூட முறையே ஓலையையும் கீற்றையும் தாம் இருந்ததற்கு அடையாளமாக ஒரு வடுவை ஏற்படுத்தி விட்டுச் செல்கிறது. அது மனிதர்கள் கால் பதிந்து மரத்தில் ஏறுவதற்குத் துணையாய் நிற்கிறது. அதுபோல் தாம் வாழ்ந்ததற்கும் அடையாளமாக ‘தமிழ்ப் பாவை என்னும் தன்னிகரற்ற நூலைத் தரணிக்கு அளித்திருக்கிறார்”
என இந்த நூலுக்கு அணிந்துரை நல்கிய தாரமங்கலம் முத்துசாமி அவர்கள் கூறியதைவிட நான் என்ன சொல்லிவிடப் போகிறேன்! தமிழ்ப் பேரொளியின் விரல்கள் வெல்ல என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!
(தொடரும்)