குமரித் தலபுராணத்தில் அகஸ்தீஸ்வரம்
முனைவர் த. ஆதித்தன்
புராணம் என்பதற்குப் பொதுவாக ‘பழமை, தொன்மை, பழங்கதை’ என்னும் பொருள்களை அகராதிகள் தருகின்றன. யாழ்ப்பாண அகராதி, ‘கதை, காந்த முதலிய புராணம், இஃது ஞானமறுபத்தினான்கி னொன்று, பழங்கதை, பூருவம்’ என்கிற பொருள்களைக் கொடுக்கிறது. நா. கதிரைவேற்பிள்ளை தமிழ் மொழி அகராதி, அபிதான சிந்தாமணி ஆகியவையும் புராணங்கள் குறித்து விளக்குகின்றன. அவை பதினெண் புராணங்கள் குறித்தும், வேதங்களுக்கும் புராணங்கள் வியாக்கியாதமாயுள்ளன என்பதாகவும் பதிவு செய்துள்ளன.
பதினெண் புராணங்களாகச் சைவம், பவிஷ்யம், மார்க்கண்டம், இலிங்கம், காந்தம், வராகம், வாமனம், மச்சம், கூர்மம், பிரமாண்டம், காருடம், நாரதீயம், விஷ்ணு, பாகவதம், பிரம்மம், பதுமம், ஆக்னேயம், பிரமனகவர்த்தம் ஆகியன வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி உப புராணங்களும் பதினெட்டு உள்ளன. அவை உசனம், கபிலம், காளி, சநற்குமாரம், சாம்பவம், சிவதர்மம், சௌரம், துர்வாசம், நந்தி, நாரசிங்கம், நாரதீயம், பாராசரீயம், பார்க்கவம், ஆங்கிரம், மாரீசம், மானவம், வாசிட்டலைங்கம், வாரூனம் என்பனவாகும்.
உபபுராணங்கள் குறித்து வெவ்வேறு பட்டியல்கள் உள்ளன. இவை ஒன்றில் இருந்து மற்றொன்று வேறுபடுகிறது. இவற்றுள் மேற்குறிப்பிட்டவை முதன்மையான உபபுராணங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழில் உள்ள புராணங்களை, ‘கடவுள் புராணம், சான்றோர் புராணம், தல புராணம்’ என மூன்றாகப் பகுப்பதுண்டு. இவற்றுள் கடவுள் புராணமும், தல புராணமும் தொடர்புடையன என்பதே அறிஞர்களின் கருத்தாக உள்ளது. கடவுள் பற்றிய புராணங்கள் தெய்வங்கள் தெய்வீக நிலையில் நின்று செயல்படுவதை விளக்கும். இத்தெய்வங்களின் செயல்கள் ஒரு தலத்தைச் சார்ந்து அமைகின்றபோது அவற்றை எடுத்துரைப்பனவாக அமைவன தலபுராணங்கள் ஆகும்.
காப்பியங்களில் தன்னிகரற்ற தலைவனைப் போற்றுவது இயல்பாக உள்ளதைப் போன்று இறையன்பரைப் பாடுவன சான்றோர் புராணம். இவ்வகைமையுள் சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்திற்கு முதன்மை இடம் உண்டு. இந்நூல் சிவனடியார்களின் கதைகளைப் புராணமாகப் பாடிய சிறப்பிற்குரியது. இதேபோன்று சேக்கிழார் புராணம், திருவாதவூரடிகள் புராணம், பட்டினத்துப் பிள்ளையார் புராணம், புலவர் புராணம் போன்றவை குறிப்பிடத்தகுந்த தொடக்கக் காலச் சான்றோர் புராணங்களாகும்.
ஓர் இடத்தில் அதாவது தலத்தில் இருந்து அருள் பாலிக்கும் இறைப்பொருள் குறித்தும் அவ்விடத்தின் சிறப்புகள் குறித்தும் விவரித்துக் கூறும் தலபுராணங்கள் தமிழுலகில் தனித்து ஆராயத்தக்கன. இடைக்கால வடமொழிச் சார்பு கருதி மான்மியம், மகாத்மியம் போன்ற வடமொழிப் பெயர்களைத் தாங்கினாலும் இவை தமிழ் இலக்கியச் சிறப்புடனேயே திகழ்வதனைக் காணலாம்.
தமிழ்த் தலபுராணங்கள் நூற்றுக்கணக்கில் கிடைக்கின்றன. முதலில் வாய்மொழியாகச் சொல்லப்பட்டு வந்த இவை செய்யுள் வடிவில் பெருகி ஏட்டிலும் எழுதி வைக்கப் பெற்றன. பிற்காலத்தில் உரைநடை வளர்ச்சியின் காரணமாக வசன நடையிலும் இப்புராணங்கள் நூல்களாக மலர்ந்தன. இவ்வகையில் கி.பி. 12ஆம் நூற்றாண்டுத் தொடங்கி 20ஆம் நூற்றாண்டு வரையிலான சுமார் 400 செய்யுள் நடையிலான தலபுராணங்கள் பற்றி இன்று அறியமுடிகிறது. 500க்கும் மேற்பட்ட உரைநடையிலான புராண நூல்களும் எழுதப்பட்டுள்ளன என்கின்றனர். தலபுராணங்கள் குறித்து ஆய்வுகள் பல வெளிவந்துள்ளன. ஆனால், இந்நாள் வரையில் ஆய்வுலகில் கவனம் பெறாத ஒன்றான ‘குமரித்தலபுராணம்’ சுவடியானது தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தில் உள்ளது.
குமரித் தலபுராணம்
உலகின் தொன்மையான நூலகங்களுள் ஒன்றான சரசுவதி மகால் சோழ அரசர்களால் உருவாக்கப்பட்டதாகும். பிற்காலத்தில் தஞ்சை மராட்டியர்களால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இங்கு அரிய சுவடிகளும் ஆவணங்களும் பாதுகாக்கப்படுகின்றன. அதில் உள்ள சுவடிகளில் ஒன்று குமரித் தலபுராணம் (சுவடி எண்.1603). நமது மண்சார்ந்த சுவடி அங்கிருப்பதனைக் கண்டு மகிழ்ந்தேன். பதிப்பிக்கும் வாய்ப்பினையும் பெற்றேன்.
சுவடி பெயர்த்து எழுதப்பெற்ற கையெழுத்துப் பிரதியை ஆழ்ந்து நுணுகிப் பார்க்கும்போது இதன் மூலச் சுவடி மிகவும் சிதைந்த நிலையில் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாயிற்று. மேலும், இச்சுவடியின் தொடக்க ஏடும் முடிவு ஏடும் இல்லையென்பதால், இப்புராணத்தின் ஆசிரியர், காலம் போன்ற செய்திகளை அறிந்துகொள்ள இயலவில்லை.
பாதுகாக்கப்படும் ஓலைச் சுவடியானது 300 ஆண்டுகள் முதல் 400 ஆண்டுகள் வரை நல்ல நிலையில் இருக்கும். பின் பிரதிசெய்தே அதன் தகவல்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வழக்கம் இருந்துள்ளது. பிரதி செய்யப்படும் சுவடியில் பெயர்த்தெழுதுபவர் கால எழுத்தமைதியே இடம்பெறும். எனவே அவ்வெழுத்தமைதியைக் கொண்டும் காலத்தைச் சரியாகக் கணிக்க இயலாது.
பொதுவாகப் பதிப்புப் பணி மேற்கொள்ளப்படும் நூல்களின் பல பிரதிகள் கிடைக்கக்கூடும். பல சுவடிகள் இருந்தால் அவற்றை ஒப்புநோக்கி மூலபாடத் திறனாய்வு செய்து சிறந்த பதிப்பாகக் கொண்டுவரலாம். குமரித் தலபுராணம் என்னும் பதிப்புப் பணிக்கு எடுத்துக்கொண்ட சுவடியில் ஒரு பிரதி மட்டுமே கிடைத்துள்ளது. ஒப்பீடு செய்வதற்கு வேறு சுவடிகள் கிடைக்கப் பெறவில்லை. எனவே அத்தகைய பணியினை மேற்கொள்ள இயலவில்லை. வேறு பிரதிகள் கிடைக்கும் வேளையில் பதிப்பு செம்பதிப்பாக மாறும். அதற்கு இறையருள் துணை நிற்க வேண்டும்.
முழுமையான சுவடியும் கிடைத்திடின் இன்னும் சிறப்பு. கிடைத்துள்ள சுவடியிலும் பல பாடல்கள் அழிந்துவிட்டன. கிடைக்கப்பெற்றுள்ள பாடல்களிலும் சில சிதைந்த நிலையிலேயே கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் 470 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவை 13 சருக்கங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவை,
- திருநாட்டுச் சிறப்பு
- குமரியெனும் பெண் வரலாற்றுச் சருக்கம்
- குமரியெனும் பெயர் வரலாற்றுச் சருக்கம்
- சேது வரலாற்றுச் சருக்கம்
- குகனாண்டேசுரர் சருக்கம்
- இந்திரன் தவம்புரிச் சருக்கம்
- அகத்தியேச்சுரச் சருக்கம்
- தேவி தோற்றச் சருக்கம்
- மதுகயிடவச் சங்காரச் சருக்கம்
- மகிடாசுரன் இந்திரனோடு யுத்தச் சருக்கம்
- கன்னித்தாய் வரலாற்றுச் சருக்கம்
- கன்னிநாயகி முனிவர்களுக்கு அபயம் கொடுத்த சருக்கம்
- கன்னி நாயகி சோலைபுகுச் சருக்கம்
என்பனவாம்.
திருநாட்டுச் சிறப்பு என்னும் முதல் சருக்கமானது மொத்தம் 36 பாடல்களை உடையது. அதில் 17 பாடல்களே கிடைக்கப்பெற்றுள்ளன. முதல் 19 பாடல்கள் கிடைக்கப்பெறவில்லை. 20ஆவது பாடல் தொடங்கி 36ஆவது பாடல் வரையில் கிடைத்துள்ளன.
இச்சருக்கமானது குமரி மாவட்ட நிலப்பரப்பின் வளத்தினையும், சிறப்பினையும் விவரிப்பதாக அமைந்துள்ளது. “நுண்ணோன்பர் கண்ட நானிலமும்…” (திருநாட்டுச் சிறப்பு, பாடல்-21) என்னும் அடி நில வளத்தினை எடுத்துரைக்கிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நானிலங்களையும் கொண்டது குமரி மாவட்டம்.
தற்காலத்திலும் காட்டுவளம், மலைவளம், வயல்வளம், கடல் வளம் என்னும் நானில வளங்களையும் தன்னகத்தே கொண்டதாக விளங்குகிறது. இதைப் போன்றே அக்காலத்திலும் நானில வளங்களைப் பெற்றுக் குமரி சிறந்து விளங்கியிருக்கிறது என்பதனைக் குமரித் தலபுராணம் வாயிலாக அறியமுடிகிறது.
இச்சருக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல ஊர்களின் பெயர்கள் இன்னும் அதே பெயர்களிலேயே வழங்கப்படுகின்றன. சான்றாகப் பூதப்பாண்டி, திருப்பதிசாரம், கோட்டாறு, தோவாளை, சுசீந்திரம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள் கோட்டாற்றின் சிறப்பினைக் குறித்து மட்டும் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தின் வணிகத் தலைமை மையம் என்று சொல்லும் அளவிற்கு, கோட்டாறு முதன்மை பெறும் இடமாகத் திகழ்கிறது.
திவ்விய தேசங்கள் எனப்படும் 108 வைணவத் தலங்களுள் ஒன்றான திருவாழ்மார்பன் கோயில் அமைந்துள்ள இடம் திருப்பதிசாரம். சக்தி வழிபாட்டை முதன்மையாகக் கொண்ட குமரித் தலபுராணத்தில் வைணவத் தலமான திருப்பதி சாரத்தினையும் சிறப்பித்திருப்பது இந்நூலாசிரியரின் சமயப் பொறையினைக் காட்டுகிறது.
தொன்மங்களின் அடிப்படையில் குமரிக் கண்டத்தின் எச்சமாக இன்றைய குமரி மாவட்டம் பேசப்படுகிறது. தொன்மைக் குடிகளின் இடம் என்ற பெருமையினைப் பறைசாற்றும் வகையில்,
பொங்கு பல கலைகளெல்லாம்
புனையறத் தேர்ந்து கற்ற
சங்கந ற்றமிழோர் வாழ்ந்த
யிவ்வளநா டென்றோது
(திருநாட்டுச் சிறப்பு, பாடல்-36)
என்கிறார் ஆசிரியர். சங்கத் தமிழர் வாழ்ந்த மண்ணான குமரியில் பல கலைகளில் சிறந்தோர் வாழ்ந்தனர் என்ற பெருமை மட்டுமல்லாது, நானில வளத்துடன் சிறப்புகள் பல பெற்றது குமரி என்பதனை எடுத்துரைப்பதாகத் திருநாட்டுச் சிறப்பு என்னும் சருக்கம் அமைந்துள்ளது.
அகஸ்தீஸ்வரம்
மொத்தமுள்ள 13 சருக்கங்களுள் இரண்டு சருக்கங்களில் அகஸ்தீஸ்வரம் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது சருக்கமான குமரியெனும் பெண் வரலாற்றுச் சருக்கத்தின் 38ஆவது பாடலில் அகஸ்தீஸ்வரம் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. அதன் விரிவாக அமைந்த அகத்தியேச்சுரச் சருக்கம் என்னும் ஏழாவது சருக்கத்தில் மொத்தம் 36 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் சில பாடல்களின் அடிகள் முழுமையாக இல்லை. சுவடி மிகவும் சிதைந்து காணப்பட்டதால் அதனை முழுமையாகப் பதிவு செய்ய முடியாமல் போகியுள்ளது.
குமரியெனும் பெண்வரலாற்றுச் சருக்கத்தில் குமரி நகரின் பெருமையையும், வளத்தையும் முதலில் குறிப்பிட்டு விட்டுப்பின் எத்தகைய பாவம் செய்தவரும் குமரியில் நீராடி இறைவியை வழிபட்டால் பாவம் தீர்ந்து மீண்டு வரலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து குமரி பகவதியின் பிறப்பு, அகத்தியர் வந்து வழிபட்ட செய்தி போன்றவை இடம்பெறுகின்றன. இச்சருக்கத்தின் 38ஆவது பாடலில் இடம் பெற்றுள்ள புராணச் செய்தியானது, சிவபெருமானின் திருமணத்தின்போது கைலாயத்தில் பெரும் திரளான கூட்டம் ஏற்படுகிறது. அதனால் கைலாயம் தாழ்ந்து குமரி உயர்ந்ததாம். அதனைச் சமன்செய்ய அகத்தியரைச் சிவன் குமரிக்குச் செல்லுமாறு கூறியதோடு, அங்கேயே திருமணக் கோலத்தில் காட்சியளிப்பேன் என்று கூறினாராம். அகத்தியரும் அவ்வாறே செய்தார் என்பதாகும். அகத்தியேசுரச் சருக்கத்தில் இதன் விரிவான செய்தி இடம்பெற்றுள்ளது.
சிவபெருமானின் அறிவுறுத்தலின்படி அகத்தியர் குமரிக்கு வருகிறார். கடலில் தீர்த்தமாடுகிறார். அன்னையை வழிபடுகிறார். பின்னர் குமரியில் அமைந்த குகநாதன் பாதங்களை வணங்கியுள்ளார். குகநாதீஸ்வரர், அன்னை பகவதி ஆகியோரை வழிபட்டபின்பு திருமணக் கோலம் காண வேண்டிச் சிவனை வழிபட்டிருக்கிறார். இப்புராணத்தில் பகவதி குறித்து ‘இப்பகுதியைச் சார்ந்த பாணாசுரன் பிரம்மாவிடம் தனக்கு மரணம் என்று நிகழ்ந்தால் ஒரு கன்னிப் பெண்ணின் கையால் நிகழ வேண்டும் என்று வரம்பெற்றதாகக் கூறப்படுகிறது. வரம் பெற்ற பாணாசுரன் கர்வம் கொண்டு தவறுகள் செய்கிறான். அதனால் அவனை அழிப்பதற்காக, பார்வதியின் அம்சமான பகவதி குமரியில் சிறு பெண்ணாகப் பிறந்தாள்’ எனச் சொல்லப்பட்டுள்ளது. குகநாதீஸ்வரர் குறித்த செய்தியும் இடம்பெற்றுள்ளது. இதில் குகன் என்ற பெயரில் முருகப் பெருமான் சுட்டப்படுகிறார். தந்தை சிவபெருமானைச் சீடனாகக் கொண்டு பிரணவத்தின் பொருள் உரைத்தவர் முருகன். இதனால் முருகனுக்குத் தோசம் உண்டானதாம். அத்தோசம் அகல அன்னை பார்வதியின் வழிகாட்டலின்படி அவள் குமரியாக அருள்பாலிக்கும் கன்னியாகுமரியில் சிவலிங்க வழிபாடு மேற்கொண்டிருக்கிறார். அவ்வாறு குகன் என்னும் பெயர் தாங்கிய முருகன் வழிபட்ட சிவன் குகநாதீஸ்வரர் எனப்படுகிறார். குமரித்தல புராணத்தில் குனாண்டேசுவரர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடங்களில் வழிபாட்டினைச் செய்தபின் அகஸ்தீஸ்வரத்தில் வழிபாட்டினைச் செய்து இறைகாட்சி பெற்றார் அகத்தியர். அப்போது சிவன்,
வாய பேரூவகை பொங்க
வாக்கினை மறந்த வென்றா…
நீயும் நீடு பாங்குறாய்
நினக்கு வேண்டுவ சொல் கென்றான்
(அகத்தியேச்சுரச் சருக்கம், பாடல் -31)
என்றார். சிவன் அகத்தியரிடம் வேண்டும் வரம் கேட்கச் சொன்னதும்,
நீங்கிடர் திருந்து வந்து
நின்றுனைப் பூசித்தோர்க்குப்
பாங்குறுந் தீர்த்த மாடி
பரிசுடன் றெரிசித் தோர்க்கு
மாங்கவர் வேண்டல் யாவும்
அருள் செய்ய வேண்டு மென்றான்
(அகத்தியேச்சுரச் சருக்கம், பாடல்-33)
தீர்த்தமாடி இவ்விடங்களை வழிபட்டபின் தாம் வழிபட்ட அகஸ்தீஸ்வரத்தில் இறையை வழிபடுபவர்கள் வேண்டுவனவற்றிற்கு அருள் செய்ய வேண்டும் என்றார் அகத்தியர் எனக் குமரித் தலபுராணம் சொல்கிறது.
அகத்தியேச்சுரச் சருக்கத்தின் இறுதி ஏடுகள் மிக நொறுங்கியுள்ளதால் அதன் முழுச் செய்தியையும் அறிய முடியவில்லை. அடுத்த சருக்கமான தேவி தோற்றச் சருக்கத்தின் தொடக்கமும் ஏட்டின் சிதைவால் அறியமுடியாததாக உள்ளது.
குமரித்தல புராணத்தின் மூலம் அகஸ்தீஸ்வரம் புராணத் தொன்மை பெற்றுள்ள இடம் என்பது புலனாகிறது. இவ்வாறு சிறப்புப்பெற்ற அகஸ்தீஸ்வரம் ஊரின் உருவாக்கம், அமைவிடம் குறித்து ஆராயவேண்டியுள்ளது. தொன்மையும், பாரம்பரியமும் மிக்கதாகக் கருதப்படும் அகஸ்தீஸ்வரம் ஊரின் வரலாறு, நிலவியல் ஆகியன ஆராயப்பட வேண்டும். பண்பாட்டு இயக்கவியலின் விளைவாக அமையப்பெற்ற ஒரு சிறப்பான வரலாற்றுச் செயற்பாங்கின் பின்னணி ஊரின் ஆக்கத்தில் இருக்கலாம். தொல்லியல் நோக்கில் பார்க்கும்போது ஊர் உருவாக்கம் நாட்டின் பொருளாதார மண்டலங்களின் அடிப்படையில் அமைவனவாகும். குடியேற்றப் பகுதிகள் உருவாவதற்கு எவ்வெவ் அலகுகள் பின்பற்றப்பட்டன என்பதனை முதலாம் பரமேஸ்வர வர்மனின் (கி.பி.670-680) கூரம் செப்பேடு எடுத்துரைக்கிறது. அதில் விவசாயத்திற்குரிய மண்வளம், நீர் மேலாண்மைத் திட்டம், கட்டுமானத்திற்கான மண்வளம், குடியிருப்புப் பகுதி, தண்ணீர் பகிர்மான அலகு, மழைநீர் சேகரிப்பு, சமூகவியல் மையமாகக் கோயில், வணிகர், கருவி தயாரிப்போர் போன்ற அலகுகள் குறித்தும் அவை ஊர்கள் உருவாக்கத்தின்போது எவ்வாறு பின்பற்றப்படும் என்பது பற்றியும் குறிப்பிடுகிறது. இக்கூறுகளை எல்லாம் அடிப்படையாகக் கொண்டு தொல்லியல், நிலவியல், ஆய்வியல் நெறிமுறைகளின்படி அகஸ்தீஸ்வரம் சார்ந்த செய்திகளை மேலாய்வு செய்ய வேண்டும். அவ்வாறு ஆய்வு மேற்கொள்ளும்போது புதிய வரலாற்று உண்மைகளும் புலப்படக்கூடும்.