பூசத் திருநாள் பொலிவுடைத் திருநாள்!

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண் …. ஆஸ்திரேலியா

தையில் பொங்கல் மங்கலத் தொடக்கம்
தையில் பூசம் பற்பல சிறப்பு
கந்தனை நினைத்து வந்தனை செய்திட
வந்ததே தைப் பூசத் திருநாள்

அருவமாய் இருந்தது உருவம் ஆனது
அரனின் கனற்பொறி அதினுள் இருந்தது
ஆதியாம் சிவனின் மைந்தனாய் வந்தான்
அவனே கந்தனாய் ஆகியே நின்றான்

பூசத் திருநாள் பொலிவுடைத் திருநாள்
தேசுடைக் கந்தனை சேவிக்கும் பெருநாள்
மாசிலா வேலினை மாதுமை கொடுத்த
மகத்தான திருநாள் தைப்பூசத் திருநாள்

வேலின் மகத்துவம் மேவிடும் திருநாள்
வேலவன் சன்னதி யாவரும் குவிவார்
காவடி எடுப்பார் கந்தனைப் பரவுவார்
சாதிகள் கடந்து சமத்துவம் ஆகுவார்

புதிரும் எடுப்பார் புதிதும் தொடங்குவார்
எழுத் தறிவிக்க ஏடும் தொடங்குவார்
தொடங்கும் அனைத்தும் துலங்கும் என்று
எண்ணியே ஏற்றுவார் பூசத் திருநாள்

காது குத்துவார் காரியம் தொடங்குவார்
கந்தனை எண்ணியே யாவும் ஆற்றுவார்
தம்மை மறந்து அலகும் குந்துவார்
தனிப்பெரும் கருணையாய் கந்தனைப் போற்றுவார்

தமிழும் சைவமும் போற்றிடும் திருநாள்
சம்பந்தம் பெருமான் காட்டிடும் திருநாள்
ஒளியாய் இருக்கும் கந்தனை யாவரும்
உவப்புடன் ஏற்றியே போற்றிடும் திருநாள்

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *