எங்களின் சுவாமிநாதா என்றுமே வாழுகின்றாய் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ……. ஆஸ்திரேலியா
உள்ளத்தில் தமிழுணர்வு ஊற்றெடுக்க உழைத்தாரே
ஊரூராய் அலைந்தாரே உவேசா தமிழாசான்
தெள்ளுதமிழ் நூல்களைத் தேடிநின்ற வேளை
செல்லரித்த சேதிகேட்டுத் திகைத்தவரும் நின்றாரே
ஏடுதேடி எங்கேயோ சென்றலைந்தார் அவரும்
காடுமேடு பாராமல் நடந்தலைந்தார் நாளும்
நாடுபோற்ற பணிசெய்து நலம்விளைத்தார் அவரும்
பீடுடைய தமிழ்த்தாத்தா ஆகியே விட்டார்
ஏட்டிலே இருந்தவற்றை எல்லோரும் படிக்க
காட்டியேவிட்ட எங்கள் கற்பகத்தரு ஐயா
பூட்டியே வைத்தவேட்டைப் புத்தகமாக்கி வைத்த
பாட்டனே எங்களையா பணிந்துமே போற்றுவோமே
ஏடெலாம் இடைஞ்சலென்று எரித்திட முயன்றவேளை
கேடது என்றுநீயும் கிளர்த்தெழுந்தாயே ஐயா
புதைகுழி வெட்டியேட்டைப் புதைத்தது கண்டபோது
புயலெனப் புகுந்துஅங்கு புதுவழி சமைத்தாயையா
மெய்வருத்தம் பாராது விடியுமுன்னே நீஎழுந்து
கைநிறைய ஏடுகளை கண்ணாக மதித்துநிதம்
அய்யமறக் கற்றிட்டு அச்சுதனில் ஏற்றிநிதம்
செய்துநின்ற திறல்மெச்சி சிரம்தாழ்த்தி வணங்கிடுவோம்
பைந்தமிழ் மொழியைக் தேர்ந்துமே கற்றாய்
பலருமே வியக்க தமிழாகி நின்றாய்
சொந்தமாய்ச் சேர்த்த சொத்தாய் நினைத்து
சுந்தரத் தமிழினைக் காத்துமே நின்றாய்
நந்தமிழ் சங்கநூல்கள் யாவரும் கற்றுநிற்க
வெந்தழல் புகுந்தவேட்டைப் வேகமாய் பற்றி
நொந்திடச் செய்தாரை வந்தனை செய்துநின்று
செந்தமிழ் காத்தநம் செம்மலைப் போற்றுவோமே
பல்கலைக்கழகம் செய்யும் பணியினைத் தனியேநின்று
நல்மனம் கொண்டுசெய்த நாயகன் நீயேஐயா
இன்தமிழ் சிறந்துநிற்க என்றுமே உழைத்தவையா
எங்களின் சுவாமிநாதா என்றுமே வாழுகின்றாய்
வடமொழி படித்தால் வானுலகு உவந்தேற்றும்
வசதிபல கிடைப்பதற்கு ஆங்கிலமே கைகொடுக்கும்
இவையனைத்தும் புறந்தள்ளி ஏந்தினார் தமிழதனை
உலகவாழ்வில் தமிழதனை உயிராக எண்ணினரே
மேடையில் பேசுதற்கும் விதம்விதமாய் எழுதுதற்கும்
சங்கத் தமிழினைத் தன்னுழைப்பால் எமக்களித்தார்
ஊணுறக்கம் பாராமல் ஓய்வின்றி உழைத்ததனால்
ஏடிருந்த அத்தனையும் எம்சொத்தாய் ஆக்கினரே
சாமிநாத ஐயர் தமிழுக்குச் சொத்தாவார்
நாம்படிக்க நூல்களை நற்றுணையாய் ஈந்தளித்தார்
எழுதினார் பதிப்பித்தார் ஏந்தினார் தமிழை
என்றுமே தமிழுலகில் இருந்திடுவார் உவேசா