தீதும் நன்றும் பிறர்தர வாரா

அண்ணாகண்ணன்
அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட பலரும் சுமார் 50 லட்சம் செலவு செய்து, பல்வேறு அபாயகரமான வழிகளில் அமெரிக்காவுக்குச் சென்றிருக்கிறார்கள். கடன் வாங்கியும் பலர் அங்கே சென்றிருக்கிறார்கள். இவ்வளவு தொகை புரட்ட முடிந்த இவர்கள், இந்தியாவிலேயே எவ்வளவோ தொழில்கள் செய்திருக்கலாம். பானி பூரி, இட்லி கடை, பரோட்டா கடை, பிரியாணி கடை என்று சாலையோரங்களில் கடை போட்டு, மிகக் குறைவான முதலீட்டில் தொழில் செய்து இங்கே கோடிக்கணக்கானோர் வாழ்ந்து வருகிறார்கள். பேராசைப் பட்டு, குறுக்கு வழியில் சென்றால் என்ன நடக்கும் என்று இப்போது அவர்கள் உணர்ந்திருப்பார்கள். தீதும் நன்றும் பிறர்தர வாரா. நம் செயல்களுக்கு நாமே பொறுப்பு. அதற்குரிய விளைவுகளை ஏற்கத்தான் வேண்டும்.
அமெரிக்கா இவர்களை நல்ல முறையில் திருப்பி அனுப்பவில்லை. மனிதாபிமானம் குறித்து எகிப்துக்கும் ஜோர்டானுக்கும் கூறும் அமெரிக்கா, அதே அடிப்படையில் தானும் நடந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால், தங்கள் நாட்டின் சட்டத்தை மதிக்காதவர்களுக்கு இந்த மரியாதை தான் அளிக்க முடியும் என அவர்கள் காட்டியிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை, இவர்களுக்கு மட்டுமில்லை. இது போன்று அமெரிக்காவுக்குள் நுழைந்து, அமெரிக்க அரசை ஏமாற்றி வாழ்ந்துவிட முடியும் என நம்பி எதிர்காலத்தில் வரக்கூடியவர்களுக்கும் இதுவே பதில். இனியாவது இத்தகையோர் பாடம் கற்பார்களா என்பதே கேள்வி.
இப்போது இந்திய அரசு, ஒரு முக்கியமான பணியைச் செய்ய வேண்டும். வெவ்வேறு முதலீடுகளில் செய்யக்கூடிய சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் குறித்து விரிவான விழிப்புணர்வை ஊட்ட வேண்டும். ஏற்கெனவே இதற்கென ஒரு துறை இருக்கிறது. இந்தத் துறை, சில பயிற்சிகளையும் அளிக்கிறது. இது தொடர்பான விளம்பரங்கள், நாளிதழ்களில் அடிக்கடி வருகின்றன. ஆனால், இதை மிகப் பெரிய அளவில் செய்ய வேண்டும். ஒவ்வொருவரையும் தேடித் தேடிச் செய்ய வேண்டும். பயிற்சி அளிப்பதோடு, நம்பிக்கை அளிக்க வேண்டும். ஏற்கெனவே இவ்வாறு தொழில் செய்து முன்னேறியவர்களின் அனுபவங்களைப் பதிவு செய்து, விரிவாக அவற்றைக் கொண்டு செல்ல வேண்டும். புதிய தொழில்முனைவோருக்காகத் தனிச் செயலி, இணையத்தளம், யூடியூப் அலைவரிசை, தொலைக்காட்சி ஆகியவற்றைத் தொடங்க வேண்டும். நல்ல திறமைசாலிகளை, சிறந்த பொருள்களை அரசே விளம்பரப்படுத்தலாம். இந்தப் பொருள் தேவையா? இந்தச் சேவை தேவையா? இவர்களை அணுகுங்கள் என வாடிக்கையாளருடன் இணைக்கலாம்.
இந்தியச் சந்தையைக் குறிவைத்து, அயல்நாட்டு நிறுவனங்கன் பலவும் இங்கே வருகின்றன. ஆனால், இந்தியர்களோ வெளிநாட்டைத் தேடிச் செல்கிறார்கள். எனில், இந்தியாவின் மதிப்பை இந்தியர்கள் பலர் இன்னும் உணரவில்லை. அவர்கள் அதை உணரும்போது, இந்தச் சிக்கல் தீரும். இந்தியாவும் இதனால் வளம் பெறும்.
#us #usa #america #india #indians #illegalimmigration