கேரள மருத்துவக் கழிவுகள் – என் முதல் கேள்வி

அண்ணாகண்ணன்
கேரள மருத்துவக் கழிவுகள், திருநெல்வேலியில் கொட்டப்பட்டுள்ளன. ஏற்கெனவே கன்னியாகுமரியில் இவ்வாறு மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டன. சாலையோரம் கொட்டப்பட்ட கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இவற்றை மீண்டும் கேரளத்துக்கே அனுப்பி வருகின்றனர். இவற்றுக்கு ஆகும் செலவு குறித்துத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் என் முதல் கேள்வி, கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள சோதனைச் சாவடிகளைக் கடந்தே இந்த லாரிகள் வந்துள்ளன. இந்தச் சோதனைச் சாவடிகளில் பணியில் இருந்தோர், என்ன செய்தனர்? முறையாகச் சோதிக்கவில்லையா? அவர்களும் உடந்தையாகச் செயல்பட்டனரா? இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டதா? சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனரா? சோதனைச் சாவடி அலுவலர்களும் குற்றவாளிகளாக ஏன் சேர்க்கப்படவில்லை? அவர்கள் அனுமதித்ததால் தானே இந்த லாரிகள், தமிழ்நாட்டுக்குள் நுழைந்தன? இந்த அலுவலர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்பதால் அவர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும். மருத்துவக் கழிவுகளை அனுப்பியோர் மீது கடும் நடிவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் குப்பை அகற்றும் துப்புரவுப் பணியாளர்களே பல இடங்களில் குப்பைகளை எடுத்துச் செல்லாமல், ஆங்காங்கே தீவைத்து எரிக்கின்றனர். இதன் விளைவுகளை எடுத்துரைத்து, இதுகுறித்துப் பணியாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும். இதில் அலட்சியமாகச் செயல்படுவோருக்கு உரிய அபராதம் விதிக்க வேண்டும். மேலும், குப்பை அகற்றுதல், வகை பிரித்தல், மறுசுழற்சி செய்தல் ஆகியவற்றில் முழுமையாக எந்திரங்களைப் பயன்படுத்துவதே இந்தச் சிக்கலுக்குத் தொலைநோக்குடன் கூடிய தீர்வாக இருக்கும்.
#waste #medicalwaste #kerala #tamilnadu