நினைவுகள் கரைந்திடும் மாயம்

மரத்தில் பூத்த கதிர் மலர்
காமபாணம் கொண்டது
நிலத்தில் பூத்த கவி மலர்
காதல்நாணம் கொண்டது
குளத்தில் பூத்த பதுமமோ
இதழ்விரியச் சிரித்தது மின்
தளத்தில் பூத்த பதிவிலோ
தமிழும் பொழியச் சிவந்தது
இரவில் மலர்ந்த கனவுகளெல்லாம்
விழித்ததும் மறைந்து போகும்
உறவில் கிடைத்த இன்பங்களெல்லாம்
முதிர்வினில் மறந்து போகும்
பிரிவில் விளைந்த துயரம் எல்லாம்
பிணியினில் மறத்து போகும்
பிறப்பில் தொடர்ந்த அனுபவமெல்லாம்
இறப்பில் எரிந்து போகும்
பயணம் முடிந்த தருண மெல்லாம்
சீட்டை கிழித்திடும் நாளும்
அயனம் மாறிடும் உதய மெல்லாம்
ஏட்டைப் புரட்டிடும் மேலும்
சயனம் நிரந்தர மாகிடுமேனி
சடலம் என்றவர் காணும்
நயனம் பெருகிடும் நீராற்றில்
நினைவுகள் கரைந்திடும் மாயம்