விடுதலை 1 & 2 – திரை விமர்சனம்

அண்ணாகண்ணன்
விடுதலை திரைப்படத்தின் இரண்டு பாகங்களையும் பார்த்தேன். பொதுவுடைமைக் கட்சியின் சித்தாந்தப் பிடிப்பையும் தமிழர் விடுதலைப் படையைப் பற்றியும் அதை நடத்திய விஜய் சேதுபதி உள்ளிட்ட தோழர்களைப் பற்றியும் அழித்தொழிப்பு வரலாற்றையும் தெரிந்துகொள்ள முடிந்தது. இவற்றை விட, காவல் துறையில் உள்ளே போட்டி, பொறாமை, அதிகார அடுக்குகள், விசாரணை என்ற பெயரில் நிகழ்த்திய கொடூரங்கள், போராளிகளுடன் சண்டையிடும்போது சகோதரக் காவலர்களையே இரகசியமாகக் கொன்றது, தனக்குப் பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காகச் சரணடைய வந்தவரையே சுட்டுக் கொன்றது, மனிதர்களைக் கொன்றதை விட அறம் கொன்ற நிகழ்வுகளை அதிகமாக அறிய முடிந்தது.
சூரியின் காதலியாக நடித்த பவானி ஸ்ரீ (தமிழரசி), முதல் பாகத்தின் இறுதியில், காவல் துறையின் நிர்வாண விசாரணையில் உண்மையை ஒப்புக்கொள்கிறார். அதன் பிறகு அவருக்கு என்ன ஆனது என இரண்டாம் பாகத்தில் எங்கும் காட்டவில்லை. இடைநீக்கம் செய்யப்பட்ட சூரி, நான் தமிழரசியுடன் எங்காவது போய் வாழ்ந்துக்கிறேன் என்கிறார். அப்படியானால், அவரைக் காவல் துறை விடுவித்துவிட்டதா?
சுயநலத் தலைவர்கள், அவர்களின் நலனுக்காக உழைக்கும் அதிகாரிகள், இவர்கள் இணைந்து சுரங்கத் திட்டத்துக்காக இயற்கை வளங்களைச் சுரண்டி, இதை எதிர்க்கும் அனைவரையும் கொன்று சாய்க்கிறார்கள். இந்தத் தலைவர்களின் உத்தரவுகளை நிறைவேற்றுவதே நியாயமான காவலர்களுக்கும் கடமை ஆகிறது. இந்நிலையில், ஒட்டுமொத்த தமிழகமும் அற வீழ்ச்சியின், அதிகார துஷ்பிரயோகத்தின், அரச பயங்கரவாதத்தின் களமாக மாறி நிற்பதைக் கனத்த நெஞ்சத்துடன் காண்கின்றோம்.
சூரி, விஜய் சேதுபதி, கிஷோர், ராஜிவ் மேனன், கென் கருணாஸ் உள்ளிட்ட பலரின் நடிப்பு மிகச் சிறப்பு. முக்கியமாக, விஜய் சேதுபதியின் உடல்மொழியும் துணிச்சலும் தலைமைத்துவமும் அபாரம். இந்தப் படத்துக்காக அவரைத் தேசிய விருதுக்குப் பரிந்துரைக்கிறேன். இளையராஜாவின் இசை சிறப்பு. இயக்குநர் வெற்றி மாறன், தனது அறச்சீற்றத்தைக் கலாப்பூர்வமாகத் தொடர்ந்து முன்வைக்கிறார். போராடியவர்களின் நியாயத்தைக் காட்டுவதோடு, அநியாயம் செய்தவர்களுக்கு என்ன ஆகிறது என்பதையும் அடுத்தடுத்த படங்களில் அவர் காட்ட வேண்டும்.
#viduthalai #viduthalai1 #viduthalai2 #soori #vijaysethupathi #vetrimaaran