”ரமணாயனம்’’….!அமுத சுரபியில் வெளிவந்தது….!
ரமணாயனம்’’….!
————————–
”பால காண்டம்”
————————
திருவா திரையில் திருச்சுழி ஊரில்
கருவாய் அழகம்மை கர்பம் -உருவாய்
பெருந்தவம் செய்த பகவான் ரமணர்
பிறந்து துறந்தார் பிறப்பு….(1)
பேரூழி காலத்தில் பாராழி புக்காது
நீரோய சூலன் நிறுத்திய -ஊராம்
திருச்சுழி தோன்றினன், தாயழ கம்மை கருக்குழியில் கர்மம் கழித்து….(2)
மகப்பேறு கண்ட முழியற்ற மாது
சுகப்ரஸவம் ஆனதும் சொன்னாள் -தகப்பனார்
சுந்தரம் அய்யரிடம் ஜோதியைக் கண்டதாய்
வந்தசேய் வானத் துறவு….(3)
அன்னாளில் சுந்தரம் அய்யரின் முன்னோர்க்கு
சன்யாசி இட்டதோர் சாபத்தால் -பெண்ணாசை
துச்சமென்றோர் பிள்ளை துறவறம் பூண்டது
இச்சிறுவ னால்வரமா யிற்று….(4)
முன்நாக சாமியும் பின்நாக சுந்தரமும்
அண்ணனாய் தம்பியாய் ஆயினர் -கண்ணான
தங்கை அலமேலு, நான்கில் ஒருவராய்
வெங்கட ராமன் வளர்ப்பு….(5)
ஆறுவது கோபம் அறியாத ராமன்தன்
ஆறா வதுவயதில் அப்பனுடன் -ஏறுக்கு
மாறாக பேசி மனைதுறந்தான், கொண்டான்பின்
கூறாமல் கோவணக் கட்டு….(6)
தந்தையிடம் சொன்ன தகாத வசனத்தால்
நொந்த தனயன் நெகிழ்ச்சியால் -உந்த
சகாயவல்லித் தாயார்முன் சென்றமர்ந்து வண்டாய்
முகாரவிந்தம் மொய்த்தான் மகிழ்ந்து….(7)
கோயில் குளத்தில் குளித்தபின் ஊரெல்லை
வாயில் கவுண்டின்யம் வற்றிட -சாயும்
பொழுதுவரை நீந்தி பிடித்துவைத்த நீரை
மொழுகிடுவான் காளையார் மேல்….(or)….நீரால்
தொழுதிடுவான் காளையார் தாள்….(8)
தொடக்கப் படிப்பு திருச்சுழியில் பின்னர்
தொடர்ந்தது திண்டுக்கல் தங்கி -முடிக்கும்முன்
வீட்டில் தகப்பன் விபரீதம், ஞானிக்கு
ஏட்டுச் சுரைக்காய் எதற்கு….(9)
தகப்பன் மறைவால் திகைத்த குடும்பம்
மிகப்பெரும் துக்கத்தை மீள -புகுந்தது
தாய்மா னாமதுரை சேயிருவர் சொக்கப்பன்
தாய்மீனாள் கூடும் தலம்….(10)
வைகையில் நீச்சல், வலியாரை வீழ்த்திட
கைவைக்கும் மல்யுத்தம், கோல்சுற்றல் -பொய்யாம்
உடலை வளர்த்தான் உலகை அழைக்க
கடலின் அலையாய் குதித்து….(11)
சகாவான அப்துல் வகாபுடன் சேர்ந்து
சகோதரன் போலூரைச் சுற்றும் -மகானிவன்
அத்தனை ஜீவனும் ஆன்மன்தான் என்றுரைக்க
ஒத்திகை பார்த்தான் உணர்ந்து….(12)
சொப்புக் கரங்களால் சித்தி இடப்போகும்
அப்பளத்து மாவை அவன்தொட -உப்பலாய்
பொங்கிப் பொரிந்திடுமாம் வெங்கட ராமனை
‘’ தங்கக்கை” என்பர் துதித்து….(13)
எங்கிருந்து வரேளென்று அங்கிருந்த அன்பரிடம்
வெங்கட ராமன் வினவிட -எங்கவூர்
அண்ணா மலையாம் அருணா சலமென்று
சொன்னாராம் மந்திரச் சொல்….(14)
இதய குகையில் இதுநாள் வரையில்
பதுங்கிக் கிடந்த புலியை -புதியவர்
அண்ணா மலையென்(று) அறிமுகம் செய்திட்டார்
உண்ணா பசிக்கோர் உணவு….(15)
காலம் கனிந்திடும் வேளை வரும்வரை
காளை கிடந்தது கன்றாக -நாளும்
அருணா சலத்தப்பன் ஆட்கொள்வான் என்று
மரணாவஸ் தையில் மகன்….(16)
நாயன்மார் போல்நானும் தூயன்பைத் துய்த்திடும்
மாயம்நம் வாழ்வில் மலராதா -ஓயாமல்
சேக்கிழார் சொன்ன சிவனடியார் போலிருக்க
நோக்கியவன் நேர்ந்திட்டான் நோன்பு….(or)
நோக்கினான் நேர்ந்திடும் நாள்….(17)
புத்தகம் கையிலே புத்தியோ மெய்யிலே
பித்தனைப் போல்வானம் பார்த்திருந்து -அத்தன்
புலனாகக் காத்ததில் போனதாம் கல்வி
இளமையில் கல்லாய் இவன்….(18)
அராவணை நம்பி இராவணன் தம்பி
மராமரம்போல் தூங்கி மகிழும் -சிறானிவன்
எட்டாத பேரின்ப தொட்டிலேறப் போவதற்க்காய்
கட்டுண்டான் சும்மா கிடந்து….(19)
நரசிம்ம சாமி ஒருசமயம் கேட்க
கரிசனமாய் ‘நான்’ஒழிந்த கூத்தை -சிரிசிரிக்க
சொன்ன பகவானின் சொற்பானை சோற்றிலினி
என்நா ருசித்தளவு எள்….(20)
சொக்கப்ப நாய்க்கர் மதுரை சந்தில்இ
லக்கம் பதிணொன்னில் லீலையாய் -மிக்கதோர்
அச்சமாம் காலனை துச்ச மெனவுதைத்த
அச்சிறுவன் தாளே அரண்….(21)….(காப்பாகவும் வைத்துக் கொள்ளலாம்)….
பகவான் உவாச
——————————
சித்தப்பா வீட்டில்நான் செத்தப்பா ஆனதும்
முத்தாய்ப்பாய் கேட்டேனோர் சத்தத்தை -வத்தாத
ஜீவநதி ‘’நான்ஆன்ம” சாகர சங்கமிப்பை
சாவதனை ஏற்றேன் சகித்து….(or)
சாவதனில் கொண்டேன் சுகம்….(22)
வந்தது சாவு வரட்டுமே சாவென்றால்
எந்தஎது சாகிறது என்றவினா -தந்த
பலத்தால் மரண பயத்தை எதிர்த்தேன்
களத்தில் இறந்தது கூற்று….(23)
வந்த இறப்பை வரவேற்று வாசியின்றி
அந்தநிலையில் ஆழ்ந்து அடுத்ததாய் -இந்த
உடலை எடுத்து சுடலை நெருப்பில்
விடுவதைப் பார்த்தேன் வியந்து….(24)
உடல்போன பின்பும் உயிர்போன பின்பும்
கடல்போல என்னிருப்பைக் கண்டேன் -மட’நான்’போய்
தான்குவித்த குப்பையை தானே களைந்தது
நான்கவஸ்த்தை தாண்டிய ‘’ நான் ‘’….(25)
————————————————————-