Tag: முனைவர் மு. இளங்கோவன்

  • கனடாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு

    கனடாவில் அமைந்துள்ள சுவாமி விபுலாநந்தர் கலை மன்றம் சார்பில் முனைவர் மு. இளங்கோவன் இயக்கிய விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் ஜூன் மாதம் 24 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு, ஸ்காபுரோ நகரில் அமைந்துள்ள பெரிய சிவன்கோவில் கலாச்சார மண்டபத்தில் வெளியிடவும் திரையிடப்படவும் உள்ளது. சிறப்பு விருந்தினர்களாகப் பேராசிரியர் நரேஷ் தேவதாசனும், மருத்துவர் கயல்விழி தேவதாசனும் கலந்துகொள்கின்றனர்.

     

    விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் இயக்குநர் முனைவர் மு.இளங்கோவன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தம் ஆவணப்படம் எடுத்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள உள்ளார்.

    பேராசிரியர் சு. பசுபதி அவர்கள் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் குறித்த மதிப்பீட்டு உரையை வழங்க உள்ளார். கவிஞர் புகாரி ஆவணப்படம் குறித்த தம் எண்ணங்களைக் கவிதை வடிவில் வழங்கிப், பாராட்ட உள்ளார்.

    தேநீர் விருந்துடனும், குழலிசையுடனும் தொடங்கும் இந்த நிகழ்ச்சிக்கு விபுலாநந்தர் கலை மன்றத்தின் தலைவர் வல். க. புருஷோத்தமன் தலைமை தாங்கவும், மன்றத்தின் துணைத்தலைவர் க. குமரகுரு வரவேற்புரை வழங்கவும் உள்ளனர். மன்றத்தின் செயலாளர் நித்தி சிவானந்தராஜா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார். கனடாவில் வெளிவரும் உதயன் பத்திரிகையின் ஆசிரியர் நாகமணி லோகேந்திரலிங்கம், உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சுவாமி விபுலாநந்தர் கலை மன்றத்தினர் செய்துள்ளனர்.

    தொடர்புக்கு:

    நித்தி சிவானந்த ராஜா – + 416 844 3304

    Share
  • மலேசியாவில்  விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு நிகழ்ச்சி

    -முனைவர் மு.இளங்கோவன்

    மலேசியாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் SRI_5878வெளியீட்டு நிகழ்ச்சி 26.12.2017 மாலை சிறப்பாக நடைபெற்றது. கோலாலம்பூர்- பிரிக்பீல்ட்சு பகுதியில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாசார மையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

    SRI_5898மலேசியத் திருமுருகன் திருவாக்குத் திருபீடத்தின் நிறுவுநர் தவத்திரு பாலயோகி சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலேசியாவில் வாழும் தமிழறிஞர்களும் தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

    திரு. ம. மன்னர் மன்னன் வரவேற்புரையாற்றினார். முனைவர் க.திலகவதி வாழ்த்துரை வழங்கினார். SRI_5915தவத்திரு. பாலயோகி சுவாமிகள் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் ஒளிவட்டை வெளியிட, மலேசிய இலங்கைச் சைவர் சங்கத்தின் தலைவர் க. அருள்ஜோதி முதல் படியைப் பெற்றுக்கொண்டார். பொறியாளர் இராசு அவர்கள் சிறப்புப் படியைப் பெற்றுக்கொண்டார். தான்ஸ்ரீ  குமரன் அவர்கள் ஆவணப்படதின் சிறப்பினைக் குறித்து உரையாறிறனார்.

    மலேசியாவின் மூத்த தமிழறிஞர் முனைவர் முரசு.SRI_5928 நெடுமாறன், தமிழ்நெறி இயக்கத்தின் தேசியத் தலைவர் திருமாவளவன், கவிஞர் கம்பார் கனிமொழி, ஆசிரியர் பச்சைபாலன், மருத்துவர் பால. தர்மலிங்கம் உள்ளிட்டோர் ஆவணப்படத்தின் சிறப்புப்படிகளைப் பெற்றுக்கொண்டனர்.

    விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் இயக்குநர்SRI_5958 முனைவர் மு.இளங்கோவன் தம் ஆவணப்படத்தின் படப்பிடிப்பு அனுபுவங்களைப் பகிர்ந்துகொண்டார். ம. அண்ணாதுரை நன்றியுரை வழங்கினார்.

    *****

    இந்தியாவில் ஆவணப்படம் பெறுவதற்குத் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: muelangovan@gmail.com
    0091 9442029053

    Share
  • மலேசியாவில் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்கம் செய்தி – மு.இளங்கோவன்

    மலேசியாவில் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்க விழா!

     

         தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தைப் பரப்பும் வகையில் தமிழகத்திலும், பிற நாடுகளிலும் உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பு செயல்படுகின்றது. இந்த அமைப்பின் கிளை மலேசியாவில் தொடங்கப்பட உள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பந்திங்கில் உள்ள தெலுக் பங்ளிமா காராங் என்ற இடத்தில் 23.12.2017 சனி(காரி)க் கிழமை மாலை 6 மணிக்கு உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளை தொடக்க விழாவும், தொல்காப்பியர் நூலகம் திறப்பு விழாவும் நடைபெறுகின்றன.  இந்த நிகழ்ச்சிக்குத் தமிழகத்திலிருந்து முனைவர் மு.இளங்கோவன் வருகை தந்து சிறப்புரையாற்ற உள்ளார்.

         மலேசிய நாட்டில் வாழும் தமிழ்மக்கள் பல்வேறு இலக்கிய அமைப்புகளை ஏற்படுத்தித் தமிழ்மொழிக்குத் தொண்டாற்றி வருகின்றனர். இந்த நாட்டில் வாழ்ந்த தொல்காப்பிய அறிஞர் செ. சீனி நைனா முகம்மது அவர்கள் தொல்காப்பியப் பரவலுக்குப் பல்வேறு முயற்சிகளைச் செய்துவந்தார். அன்னாரின் மறைவு மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது. அவரின் தொண்டினைத் தொடரவும், அவர் செய்த பணிகளை இயன்ற வரை நினைவுகூரவும், தொல்காப்பிய நூல் அறிமுகத்தைப் பரவலாக்கும் வகையிலும் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளையை மலேசியாவில் தொடங்க உள்ளனர். உலகத் தொல்காப்பிய மன்றம் இந்தியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் பல கிளைகளுடன் இயங்குகின்றது.

         தொல்காப்பியத்தில் ஈடுபாடுடைய அறிஞர்களை அழைத்து, தொல்காப்பியத்தை மக்களுக்கும், மாணவர்களுக்கும் அறிமுகம் செய்யவும், தொல்காப்பியப் பணிகளில் ஈடுபடுவோரைச் சிறப்பிக்கவும் இந்த அமைப்பு விரும்புகின்றது.

         மலேசியாவின் மூத்த தமிழறிஞரான முனைவர் முரசு. நெடுமாறன், திரு. ம. மன்னர் மன்னன், திரு. திருச்செல்வம், திரு. கம்பார் கனிமொழி உள்ளிட்ட அறிஞர்கள் நெறியாளர்களாக இருந்து இந்த அமைப்பை நெறிப்படுத்த உள்ளனர். தமிழகத்திலிருந்து தமிழறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொல்காப்பியச் சிறப்புகள் குறித்து உரையாற்ற உள்ளனர்.

         தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தைத் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்யும் எங்கள் முயற்சி வெற்றியடைய அனைவரின் மேலான ஒத்துழைப்பினையும் வழிகாட்டலையும் வழங்க வேண்டும் என்று இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான ம. முனியாண்டி, சரசுவதி வேலு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    உலகத் தொல்காப்பிய மன்றம்  மலேசியாக் கிளை தொடங்கும் விவரம்:

    தேதி: 23.12.2017 காரி(சனி)க் கிழமை

    நேரம் : மாலை 6.00 மணி

    இடம்: 32 B, ஜாலான் உத்தாமா 2, தாமான் ஜெயா உத்தாமா, தெலுக் பங்ளிமா காராங்,  பந்திங்,  சிலாங்கூர்

    தொடர்புக்கு:

    ம. முனியாண்டி 0060 164442029

    சரசுவதி வேலு 0060 123189968

    ஒருங்கிணைப்பாளர்கள்,

    உலகத் தொல்காப்பிய மன்றம் – மலேசியாக் கிளை

    Share
  • மக்கள் தொலைக்காட்சியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா ஒளிபரப்பு!

    அன்புடையீர், வணக்கம்

    விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் இந்த விழாவில் ஆற்றிய உரையின் முதன்மைப்பகுதிகளும், ஆவணப்படத்தின் முதன்மைக் காட்சிகளும் வரும் 14.10.2017 சனிக்கிழமை (இந்திய நேரம்) காலை 8.30 மணிமுதல் 9 மணி வரை மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழார்வலர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியிலும், இணையத்திலும் பார்க்க இயலும். தாங்கள் கண்டு மகிழ்வதுடன் தங்கள் நண்பர்களுக்கும் இந்தச் செய்தியைத் தெரிவித்துப் பார்க்கச் செய்யுங்கள்.

    இணையமுகவரி:

    Home

    இடைக்கட்டு மு.இளங்கோவன்

    Dr.Mu.Elangovan
    Assistant Professor of Tamil
    K. M. Centre for Postgraduate Studies,
    Government of Puducherry,
    Puducherry-605 008, India

    E.Mail : muelangovan@gmail.com
    blog: http://muelangovan.blogspot.com
    cell: +91 9442029053

    Share
  • மின்மினி இதழ் ஆசிரியர் தில்லை சிதம்பரப்பிள்ளை

    முனைவர் மு.இளங்கோவன்

    Thillai_Mu.E.

         இணையத்தின் தொடர்பில் இருப்பவர்களுக்கு மின்மினி இதழ் அறிமுகமாகியிருக்க வாய்ப்பு உண்டு. சுவிட்சர்லாந்திலிருந்து கால் நூற்றாண்டு காலமாக வெளிவரும் மின்மினி இதழ் இலவச இதழாகும். விளம்பரம் உட்பட அனைத்தும் இலவசமாக அமைவது இதன் தனிச்சிறப்பு. தில்லை சிதம்பரப்பிள்ளை இதன் ஆசிரியர். 25/04/1945 இல் பிறந்த இவர், இலங்கை யாழ்ப்பாணம் நாவற்குழியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பெற்றோர் பெயர் சங்கரப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை – சரஸ்வதி என்பதாகும். இவர் உயர்தரக் கல்வியை வண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரியில் பயின்றவர். இலங்கைப் பல்கலைக் கழகம் பேராதனையில் பயின்று 1969இல் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.

         தில்லை சிதம்பரப்பிள்ளைக்குக் கல்லூரியில் கற்கும் நாள்களில் கல்வி சாராத பல நூல்களைப் படிப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகக் கிடைத்தன. எனவே இவரின் உள்ளம் நூல்களைப் படைக்க வேண்டும் என்று ஆவல் கொண்டது. எனவே, அவ்வப்போது நாடகங்கள் சிலவற்றை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த நாடகங்கள் சில இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டன என்பதை இங்குக் குறிப்பிடுதல் வேண்டும்.

        தில்லை சிதம்பரப்பிள்ளை கல்லூரியில் பயின்று, பட்டம் பெற்றுத் தகுந்த வேலை கிடைக்கும் வரை 2 ஆண்டுகள் இலங்கை வீரகேசரிப் பத்திரிகையில் செய்தியாளராகவும், கட்டுரையாளராகவும், சிரித்திரன் பத்திரிகையில் நகைச்சுவை எழுதுபவராகவும் பணியாற்றியவர்.

    Minmini printஇவர் எழுதிய கட்டுரைகள்  வீரகேசரியில் வெளிவந்ததோடு நின்றுவிடாமல்  அக் கட்டுரைகளில் சில அன்றைய ஆட்சியாளர்களிடம் மொழிபெயர்ப்புடன் இவரால் சமர்ப்பிக்கப்பட்டு அவை நடைமுறைக்கு வந்தனவும் உண்டு.

         எடுத்துக்காட்டாக அரசு பனை அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் அமைக்க அப்போதைய இலங்கைப் பல்கலைக்கழகப் புவியியற் பீடத்தலைவர் பேராசிரியர் க. குலரத்தினம் அவர்களுக்கு உதவியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதைக் குறிப்பிடலாம். பல ஆண்டுகளாகப் பெருந்தொகையான பட்டதாரிகள் வேலை எதனையும் பெற வாய்ப்பின்றி இருந்த காரணத்தினை ஆய்வுசெய்தபோது  பட்டதாரிகளுக்கு வேலைப் பயிற்சித் திட்ட முக்கியத்துவம் பற்றிக் கட்டுரை எழுதினார். அதனை அப்போதைய ஆட்சியாளர்களிடம் கையளித்து நடைமுறைப்படுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தினார். இதனால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் – சிங்களப்  பட்டதாரிகள் பயிற்சி பெற்றதுடன் தகுந்த வேலையிலும் அமர்த்தப்பட்டனர்.

         இலங்கை அரசாங்கக் கூட்டுத்தாபனம் ஒன்றில் 15 ஆண்டுகள் நிர்வாக உத்தியோகத்தவராகவும், தொடர்ந்து உதவி முகாமையாளராகவும் கடமையாற்றியவர். அக்காலத்தில் தேவைக்கேற்ற சிறந்த கட்டுரைகள் எழுதுவதில் ஈடுபாட்டுடன் செயல்பட்டவர். இக்கட்டுரைகள் பத்திரிகைகளுக்கும், கடமையாற்றிய அரச நிறுவனத்தின் வளர்ச்சிக்கும்  உதவியுள்ளன. தாம் பணிபுரிந்த நிறுவனத்தின் கருத்தரங்கம், மேடைப் பேச்சுக்களில் பேச்சாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். வவுனியா, மட்டக்களப்பு, திரிகோணமலை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளார்.

           1985 முதல் இலங்கைத் தமிழர்கள் சுவிட்சர்லாந்தில் குறிப்பிடத்தக்க அளவில் குடியேறினர். சுவிசில் வழக்கில் இருந்த பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி  மொழி இவற்றில் ஒன்றை இருப்பிடத்திற்கேற்ப கற்கவேண்டிய சூழ்நிலை  ஈழத்தமிழர்களுக்கு அப்பொழுது ஏற்பட்டது. அம்மொழிகளைக் கற்றுத் தேர்வதற்குக் கால அவகாசம் தேவைப்பட்டது  இக்காலப் பகுதியில் இங்குவாழ்ந்த தமிழ் மக்கள் உள்ளுர் மொழிபற்றி அதிகம் அறியவில்லை. எனவே  இந்த நாட்டின் நடைமுறைகளையும், சிறார்களின் கல்வி முறைகளையும் அறிவதற்கு இதழின் முக்கியத்துவம் உணர்ந்து, மின்மினி என்ற இதழைத் தொடங்கினார். தங்கள் தங்கள் சமய, கலை பண்பாடுகளைப் பேணிக்காக்க உதவும் வகையில் தமிழ் மொழி அறிவைத் தமிழ்ச் சிறார்களுக்கு ஊட்டவும் சில முக்கியச் செய்திகளை அறியச் செய்யவும் மின்மினி இதழ் வெளியிடப்பட்டது.

         1993 புரட்டாசி மாதம் சுவிட்சர்லாந்து  வோ மாநிலத்தில் முதன்முதலாக  மின்மினி இதழ் உதயமானது, முதலில்  மாநில அளவில் இங்கு வாழும் தமிழ்மக்களைச் சென்றடைந்தது. மின்மினி இதழ் நேரடியாக அவரவர் வீட்டுக்கு அஞ்சல் பெட்டியில் இலவசமாகவே கிடைக்கும்படியாக அனுப்பப்பட்டது. பின் படிப்படியாகத் தமிழ்மக்கள் வாழும் எல்லா மாநிலங்களுக்கும் இதன் சேவை பரவியது.  அங்குள்ள வியாபார நிலையங்கள் வழியாகவும் மின்மினி விநியோகிக்கப்பட்டது. பிற்காலத்தில் வெளிநாடுகளுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் விநியோகிக்கப்படுகின்றது.

                    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு அந்த அந்த நாடுகளின் செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுத்  தனித்தனியாகப் பதிப்புகள் சில வருடங்கள் வெளியிடப்பட்டன.

                    தில்லை சிதம்பரப்பிள்ளை 1985ஆம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்தில் ஆரம்பத்தில் சேவை மனப்பான்மையுடன் ஆங்கில, தமிழ் உரையாடல்களை மொழிபெயர்த்தும் சில அரச சார்புடைய ஆவண நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தும் வழங்கியவர்.  தனியார் தமிழ் ஆவணங்களைப் பிரெஞ்சு மொழிக்கு மொழிபெயர்த்தல், வரியிறுப்புப் பத்திரங்களை நிறைவுசெய்வதற்கு உதவுதல், கணினி, இணையம் ஆகியவற்றில் வேண்டியோர்க்கு உறுதுணை அளித்தல் போன்றவற்றில் ஆர்வமாகச் செயல்பட்டவர்.

         தில்லை சிதம்பரப்பிள்ளை மின்மினி என்ற தமிழ்ச் சஞ்சிகையை அன்றைய தேவைகருதி ஆரம்பித்து 24 வருடங்களாகத் தொடர்ந்து வெளியிட்டு, அதன் ஆசிரியராகவும் கடமையாற்றிவருகின்றார். அயல்நாட்டு எழுத்தாளர்களுடன் நல்ல தொடர்பில் உள்ளார்.

                    2013ஆம் ஆண்டில் இருந்து மின்மினி இதழின் வழியாக மாநாடுகள் நடத்துவோர்க்கும், ஆய்வுக்கட்டுரைகள் வழங்கும் ஆய்வாளர்களுக்கும் தொடர்புப் பாலமாக சேவைமனப்பான்மையுடன் கடமையாற்றி வருவதைக் குறிப்பிட்டுச் சொல்லுதல் வேண்டும். 2014இல் நடைபெற்ற 2 வது முருகபக்தி மாநாடு, 2014இல் சிட்னியில் நடைபெற்ற சிட்னி முருகன் சைவநெறி மாநாடு, புதுச்சேரி அருள்மிகு திருப்புகழ் மன்ற வெள்ளிவிழா மாநாடு 2014, 2015இல் நடைபெற்ற 9 வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, மற்றும் ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு 2015, 2016 மற்றும் உலகத் தமிழ் இணைய மாநாடு  ஆகியவற்றின் செய்திகளை உலக அளவில் தெரியப்படுத்தி, கல்வியாளர்களுக்கு உதவியுள்ளார்.

                    தமிழ் மொழி இந்தப் பூமிப்பந்தில் தொடர்ந்து  வாழ வழிதேடும் வகையில் மேற்கொள்ளவேண்டிய பொறிமுறைகளைப் பல ஆய்வாளர்களிடமிருந்து பெற்று, அக்கரையில் பச்சை என்ற கட்டுரைத் தொகுப்பு நூலினை வெளியிட உழைத்துவருகின்றார். இந்த நூல் நூல் வடிவிலும், மின்னூல் வடிவிலும் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு இலவசமாகவே சென்றடையவேண்டுமென்ற நோக்கில் முயற்சிகள் இவரால்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

       மின்மினி இதழில் வெளியிடப்படும் இவரின் கட்டுரைகள் தமிழ் மக்களின் கல்வி சமய வேறுபாடின்றிக் கலை கலாசாரங்களைப் பேணிப் பாதுகாப்பதாக அமைவனவாகும்.

         சுவிட்சர்லாந்தில் மருத்துவக் காப்பீட்டுக் கட்டணம்  வருடாவருடம் அதிகரித்து வருகின்றது.  அதனைக் கட்டுப்படுத்தப் பலதிட்டங்கள் தீட்டப்பட்டும் அதனை மக்கள் ஆதரிக்கவில்லை என்பதால் அமல்படுத்தப்படவில்லை. மின்மினியில் இது தொடர்பான தீர்வுக்குப் பல கட்டுரைகள் வெளியிடப்பட்டன. மேலும் அதன் மொழிபெயர்ப்பைச் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அவ்வப்போது அனுப்பியதால் பயன் ஏற்பட்டுள்ளது.  மாநிலங்கள் அளவிலான மின்மினி ஆசிரியரது தீர்வுத்திட்டம் ஒன்று மேல்மட்டத்தில் ஆராயப்பட்டுத் தற்போது நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்வதாக அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

         புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தில்லை சிதம்பரப்பிள்ளை அவர்கள் தமிழுக்கும், மக்களுக்கும் பயன்படும் அரிய செயல்களைத் தொடர்ந்துசெய்துவருகின்றார். கால்நூற்றாண்டாக மின்மினி இதழ்வழியாக உலகத் தமிழர்களின் உள்ளத்தில் இடம்பெற்றிருக்கும் இவர்தம் தொண்டு தொடர்வதாகுக! நீடு நிலைபெறுவதாகுக!

    Share
  • விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம்!

    வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழாவில்

    கயானா பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து வெளியிட்டார்!!

    unnamed (4)

    அமெரிக்காவின், மினசோட்டா மாநிலம், மினியாபோலிஸ் நகரில் 01.07.2017 இல் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழாவில்

    unnamed (5)

    புதுவைப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் இயக்கிய விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தினை, கயானா பிரதம மந்திரி மோசஸ் வீராசாமி நாகமுத்து வெளியிட்டார். ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவனுக்கு நூல் ஒன்றினை அன்பளிப்பாக வழங்கிப் பாராட்டினார்.

    unnamed (6)

    புதுவையில் பணியாற்றும் மு.இளங்கோவன் இலங்கைப் பேரறிஞரும் யாழ்நூல் ஆசிரியருமான விபுலாநந்த அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றையும் சமூகப் பணிகளையும், இலக்கியப் பணிகளையும் ஆவணப்படமாக உருவாக்கியுள்ளார். இதற்காக விபுலாநந்த அடிகளார் வாழ்ந்த இலங்கையின் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. தமிழகத்தில் தஞ்சாவூர், சென்னை, புதுக்கோட்டை, மதுரை, திருக்கொள்ளம்பூதூர், கொப்பனாப்பட்டு ஊர்களிலும் படப்பிடிப்பு நடந்தது. இலங்கையிலும் இந்தியாவிலும் வாழ்ந்துவரும் மூத்த பேராசிரியர்கள், துறவிகள் பலரை நேர்காணல் செய்து விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது.

    unnamed (7)

    2017, சூலை முதல்நாள்(சனிக்கிழமை) அமெரிக்காவில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை(பெட்னா) விழாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. கயானா நாட்டிலிருந்து விழாவுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினரும், பிரதம மந்திரியுமான மோசஸ் வீராசாமி நாகமுத்து விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தினை வெளியிட்டார். வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி. விஸ்வநாதன் ஆவணப்படத்தின் முதல்படியைப் பெற்றுக்கொண்டார்.  மறைந்த அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் வி. பொன்ராஜ், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கே.பி.கே. செல்வராஜ், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவைத் தலைவர் செந்தாமரை பிரபாகர், பேராசிரியர் தண்டபாணி குப்புசாமி, சிவம் வேலுப்பிள்ளை, வலைத்தமிழ் ஆசிரியர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் ஆவணப்படத்தின் படியினைப் பெற்றுக்கொண்டனர். பின்னர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் முக்கிய பகுதிகள் பார்வையாளர்களுக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டன. அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பேராளர்கள் ஆயிரக்கணக்கில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    Share
  • திருக்குறள் தொண்டர்

    மு. இளங்கோவன்

    திருக்குறள் தொண்டர் கரு. பேச்சிமுத்து

    amu1

         நாகர்கோயில் திருக்குறள் மாநாட்டில் அகவை முதிர்ந்த ஐயா ஒருவர் திருக்குறள் நூலினைச் சுமந்தபடி, அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்கியவாறு, அவரவரின் முகவரியையும் பெற்றவண்ணம் இருந்தார். எனக்கும் திருக்குறள் நூல் ஒன்று கிடைத்தது. அவர் பெயர் கரு. பேச்சிமுத்து என்பதாகும். அந்தப் பெரியாரின் திருக்குறள் பணியினை அருகிலிருந்த திருக்குறள் செம்மல் பேராசிரியர் பா. வளன் அரசு, முனைவர் கடவூர் மணிமாறன், இராம.மாணிக்கம் ஆகியோரிடம் விதந்து பேசிக்கொண்டிருந்தேன். இவர்களைப் போலும் தன்னார்வலர்கள் உலகின் பல பகுதிகளில் இருந்துகொண்டு திருக்குறள் தொண்டூழியம் புரிவதை அறிவேன். கல்விப்புலத்தில் இருப்பவர்கள் இத்தகு இலக்கியத் தொண்டில் ஈடுபடுவது அரிதாகவே என் கண்ணில் தென்படும். தமிழறியாத, கல்லா மக்கள் தமிழ்ப்போர்வையில் நுழைந்துகொண்டு, புளியம்பழம்போல் தமிழோடு ஒட்டாமல் உறவு இல்லாமல் கல்விப்புலங்களில் வயிற்றுப்பாட்டைப் பார்த்துக்கொண்டு, பணியாற்றுவதை(!) அனைவரும் நாடெங்கும் காண்கின்றோம். அத்தகையோரை நாளும்  கண்ட கண்ணுக்கு,  இயந்திரப் பொறியியல் துறையில் பயின்ற ஒருவர் திருக்குறள் தொண்டராகப் பார்வையில் தென்பட்டது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

    amu

         திருக்குறள் கரு. பேச்சிமுத்து ஐயா அவர்களின் வாழ்க்கையை முழுமையாக அறிந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் மிகுதியாக இருந்தது. கருத்தரங்கில் பரபரப்பாக இருந்த என்னால் அவருடன் தனித்து உரையாட நேரம் இல்லாமல் போனது. ஊர் திரும்பியதும் பேச்சிமுத்து ஐயா வழங்கிய திருக்குறள் மற்றும் ஏழிளந்தமிழ் நூல்களைப் படித்துப் பார்த்தேன். அகரூர்க் கல்வி அறக்கட்டளை என்னும் அமைப்பைத் தம் தந்தையாரின் நினைவாக உருவாக்கி, அதன் வழியாகத் திருக்குறள் நூலினை எளிய அமைப்பில் தொடர்ந்து அச்சிட்டு, அனைவருக்கும் இலவயமாக வழங்குவது இவரின் உயிர்மூச்சான பணி என்பதை அறிந்தேன். ஒரு இலட்சம் படிகளுக்கு மேல் இதுவரை இவர் திருக்குறள் நூலினை அச்சிட்டும், விலைக்கு வாங்கியும் வழங்கியுள்ளார். என் கையில் இருந்தது 2016 சூலையில் அச்சிட்ட, ஐந்தாம் பதிப்பு நூலாகும். இதில் வ.சுப..மாணிக்கம் அவர்கள் வரைந்த உரை இடம்பெற்றுள்ளது. தேவநேயப் பாவாணரின் திருக்குறள் குறித்த எண்ணங்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

    திருக்குறள் ஆய்வு என்ற வகையில் திருக்குறளில் இடம்பெற்றுள்ள மொத்த எழுத்துகள் 42914 எனவும், தமிழ் எழுத்துகள் 247 இல் 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை எனவும், அனிச்சம், குவளை என்னும் இரு மலர்களின் பெயர்கள்மட்டும் இடம்பெற்றுள்ளன எனவும், நெருஞ்சிப் பழம் என்ற ஒரு பழத்தின் பெயர் மட்டும் திருக்குறள் நூலில் இடம்பெற்றுள்ளது எனவும், குன்றிமணி என்ற ஒரு விதை மட்டும் இடம்பெற்றுள்ளது எனவும் “ஔ” என்ற ஓர் உயிரெழுத்து மட்டும் பயன்படுத்தப்படவில்லை எனவும், பனை மூங்கில் என்ற இரண்டு மரங்கள்  மட்டும் இடம்பெற்றுள்ளன எனவும், “னி” என்ற எழுத்து மட்டும் 1705  முறை இடம்பெற்றுள்ளது எனவும் “ளீ”, “ங”, என்னும் இரு எழுத்துகள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன எனவும், திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் ஒன்பது எனவும் அரிய ஆய்வுக்குறிப்புகளை இந்த நூலில் கண்டு மகிழ்ச்சியுற்றேன்.

         நூற்பகுப்பு, அதிகாரவகராதி, பாட்டு முதற்குறிப்பு அகரமுதலி, திருக்குறள் மூலமும் உரையும், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, நறுந்தொகை, நன்னெறி, உலகநீதி என்னும் பிற அற நூல்களும் உரையுடன் இந்தச் சிறுதொகுதியில் உள்ளன. பிழைபடச் சொல்லேல், ஒலிப்புப் படங்கள் என்னும் குறிப்புகளும் இந்த நூலில் அமைந்துள்ள பாங்கினைக் காணும்பொழுது தமிழைப் பிழையில்லாமல் பேசவும், எழுதவும் வேண்டும் என்ற கரு. பேச்சிமுத்து ஐயாவின் உள்ளக்கிடக்கை எனக்குப் புலப்பட்டது.

    கரு. பேச்சிமுத்துவின் கல்விப் பின்புலம் என்ன?

         திருக்குறள் தொண்டில் தம்மைக் கரைத்துக்கொண்ட பேச்சிமுத்து அவர்களின் சொந்த ஊர் தேவகோட்டையாகும். 26.09.1944 இல் பிறந்தவர். பெற்றோர் அ. கருப்பையா, பொன்னம்மாள் ஆவர். தேவகோட்டையில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் புகுமுக வகுப்பினைப் பயின்றவர். மூதறிஞர் செம்மல் வ. சுப. மாணிக்கம் அவர்களின் அன்புக்குரிய மாணவராகச், சிறப்புத் தமிழ் பயின்ற இவர் செம்மலின் திருமகனார் தொல்காப்பியனாருடன் உடன் பயின்ற பெருமைக்குரியவர்.

         புகுமுக வகுப்பை அடுத்து, இயந்திரப் பொறியியல் படிப்பை அழகப்பர் கல்லூரியில் பயின்று பொறியாளராக மிளிர்ந்தவர்(1965). அறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடு அவர்களிடம் சிலகாலம் பணிபுரிந்த இவர் கரூர் மின்சார வாரியத்தில் சில மாதங்கள் பணிபுரிந்தவர். திருச்சிராப்பள்ளியில் அமைந்த பாரத மிகுமின் நிறுவனத்தில்(BHEL) 36 ஆண்டுகள் இயந்திரப் பொறியாளராகப் பணிபுரிந்து 1999 இல் ஓய்வுபெற்றவர்.

         மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரின் அகரமுதலிப் பணிக்கு அன்பர்கள் இணைந்து பொருட்கொடை வழங்கியபொழுது இவரும் முன்வந்து கொடை வழங்கியவர்.

         கரு. பேச்சிமுத்து ஐயாவின் பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள். ஆன்மீகத்தில் ஈடுபட்டு உழைத்த பெருமக்கள். தேவாரமும் திருவாசகமும் முழங்கிய இல்லத்தில் பேச்சிமுத்து வளர்ந்த காரணத்தால் இவருக்குத் திருமுறைகளும் வள்ளலாரும் அறிமுகம் ஆயினர்.

    வள்ளலாரின் மனுமுறை கண்ட வாசகத்தின்,

    “நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!

    வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!

    தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!

    கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!

    மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!

    குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!”

    என்னும் வரிகளைக் கேட்ட இவருக்கு, இச் செய்திகள் யாவும் திருக்குறளில் இடம்பெற்றுள்ளனவே என்று உணர்ந்து, திருக்குறளின் பக்கம் தம் கவனத்தைச் செலுத்தினார். தொடர்ந்து திருக்குறளைப் படிக்கவும், பரப்பவும் திட்டமிட்டுத் தம் கைப்பொருள் கொண்டு, திருக்குறள் நூலினை வாங்கியும், அச்சிட்டும் இல்லந்தோறும், பள்ளிதோறும் சென்று வழங்கி வருகின்றார். இவ்வகையில் பள்ளி மாணவர்களுக்கு 51,794 படிகளும், இல்லங்களுக்கு 15,192 படிகளும்  பள்ளிகளுக்கு 533 படிகளும் வழங்கித் தம் திருக்குறள் தொண்டினைச் செய்துவருகின்றார். மணற்பாறை அடுத்த வையம்பட்டியில் தொடங்கிய இவரின் திருக்குறள் பணி இன்று உலகு தழுவிய பணியாகப் பரந்து நிற்கின்றது.

         கரு. பேச்சிமுத்து அவர்களுக்கு 1966 இல் திருமணம் நடைபெற்றது.துணைவியார் பெயர் திருவாட்டி இராக்கம்மாள் ஆகும்.  இரண்டு மக்கள் செல்வங்கள் இவருக்கு வாய்த்தனர். இவர்கள் யாவரும் பேச்சிமுத்து அவர்களின் திருக்குறள் தொண்டிற்கு அரணாக உள்ளனர்.

         குருதிக்கொடை என்ற வகையில் இதுவரை 81 முறை குருதிக்கொடை வழங்கியுள்ளார். கண் கொடை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர். மண்புழு உரம் உருவாக்கம், மரக்கன்று நட்டு ஒராண்டு வளர்த்து ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளுக்கு வழங்குவது, கல்வி உதவித்தொகையாக 596 மாணவர்களுக்கு வாழ்நாள் காப்பீட்டுக் கழகத்தில் பணம் செலுத்தி வருதல், திருக்குறள் குறித்த ஒட்டிகள், தட்டோடுகள், குறுவட்டுகள், பேசும் கடிகாரம் வாங்கி அளித்தல், திருக்குறள் தாங்கிய மேலாடை வழங்குதல் என்று தம் வாழ்நாளைத் திருக்குறளுக்கு ஒப்படைத்து வாழ்ந்துவரும் இப்பெருமகனாரின் தொண்டு தொடர்வதாகுக! வாழ்நாள் நீண்டு வளம் பெருகுவதாகுக!

    Share
  • உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடர்பொழிவும் ஆத்திரேலியா எழுத்தாளர் ம. செயராம சர்மாவுக்குப் பாராட்டுவிழாவும்!

    aje

          புதுச்சேரி உலகத் தொல்காப்பிய மன்றத்தின் சார்பில் புதுச்சேரி நீட இராசப்பையர் தெருவில் அமைந்துள்ள, செகா கலைக்கூடத்தில்   14.04.2017, வெள்ளிக் கிழமை, மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை தொல்காப்பியத் தொடர்பொழிவு நடைபெற்றது.

          வில்லிசைவேந்தர் இ. பட்டாபிராமன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். முனைவர் ப. பத்மநாபன்   வரவேற்புரையாற்றினார்.  முனைவர் மு.இளங்கோவன் அறிமுகவுரைற்றினார். முனைவர் சிவ. மாதவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராசிரியர் தெ. முருகசாமி தமிழ் இலக்கியங்களில் தொல்காப்பியத்தின் தாக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.  தொல்காப்பியத்துள் குறிப்பிடப்படும் இலக்கணச் செய்திகள் சிலப்பதிகாரம், கம்பராமாயணம் உள்ளிட்ட நூல்களில் பொதிந்து கிடக்கும் தன்மையை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்.

          ஆத்திரேலியாவிலிருந்து வருகை தந்த எழுத்தாளர் ம. செயராம சர்மாவின் எழுத்துப்பணியைப் பாராட்டும் வகையில், மரபுப் பாமணி என்ற விருதளித்து இந்த நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டது. மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு உழைத்துவரும் ஏம்பலம் செல்வம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு திரு. சர்மா அவர்களுக்கு விருதளித்துப் பாராட்டினார். ஆத்திரேலியாவில் தமிழும் தமிழர்களும் தொடர்பான அரியதோர் கருத்துரையச் செயராம சர்மா வழங்கினார். திரு. தூ. சடகோபன், தனித்தமிழ்ப்பாவலர் தமிழியக்கன், திருவாசகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தமிழறிஞர்களைச் சிறப்பித்தனர்.

          முனைவர் இரா. கோவலன் நன்றியுரை வழங்கினார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    Share
  • விசயமங்கலம் புலவர் வீ. சொக்கலிங்கம்

     

    முனைவர் மு.இளங்கோவன்

    muelangovan@gmail.com

    Gods_AS

         இந்த முறை திருப்பூர் சென்றிருந்தபொழுது குடந்தை ப. சுந்தரேசனாரின் சமய ஈடுபாட்டை, எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனுக்குத் தெரிவித்து, உரையாடிக்கொண்டிருந்தேன். ப. சு. ஆவணப்படத்திற்காக ஒரு புல்லாங்குழல் செய்யும் கலைஞரைத் தேடி, கேரளாவில் திருச்சூரை அடுத்த குன்னங்குளம் சென்ற கதையையும் அக்கலைஞரின் ஒத்துழைப்பால் புல்லாங்குழல் செய்தமையைப் படம் பிடித்தமையையும் குறிப்பிட்டேன். அப்பொழுது தமக்கு அறிமுகமான விசயமங்கலம் புலவர் வீ. சொக்கலிங்கம் பற்றி சுப்ரபாரதிமணியன் எடுத்துரைத்தார்.

    cho     அண்மையில் புலவர் வீ. சொக்கலிங்கம் நிகழ்த்திய பெரியபுராணச் சொற்பொழிவில் ஆனாய நாயனார் புராணத்தை விளக்கும்பொழுது ஒரு புல்லாங்குழல் கலைஞரை அழைத்துவந்து மேடையில் அருகமர்த்தி, புல்லாங்குழல் செய்வது பற்றியும், அதன் வாசிப்பு முறைகள் குறித்தும் அவையினருக்குச் செய்முறை விளக்கம் அளித்தார் என்று குறிப்பிட்டவுடன்  புலவர் அவர்களைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு மேலிட்டது. ஏனெனில் ஆனாய நாயனார் புராணம் புல்லாங்குழல் குறித்த அரிய உண்மைகளைப் பொதிந்து வைத்திருக்கும் பகுதியாகும்.

         என் ஆசிரியர் இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்கள் ஆனாய நாயனார் புராணத்தில் பொதிந்துகிட்டும் குழல்செய்யும் முறை, குழல் துளைகளின் அளவு, இடைவெளி, குழல் துளைகளின் பெயர், மாறுமுதல் பண்ணல், கோடிப்பாலை உருவாக்கும் முறை, துளைகளில் கைவைத்து ஊதும் முறை, இசைக்கு உயிரினங்கள் மயங்குதல் குறித்து எடுத்துரைத்த கருத்துகள் பலவாண்டுகளுக்குப் பிறகு எனக்கு நினைவிற்கு வந்தன. தமிழிசைக் கலைக்களஞ்சியம் முதல் தொகுதியிலும் (பக்.152, 179), மூன்றாம் தொகுதியிலும் இவை இடம்பெற்றுள்ளன. பெரியபுராணத்தில் இசைக்குறிப்புகள் என்னும் தலைப்பிலும் ( III 290-291), புகல் நான்கு என்னும் தலைப்பிலும்( III பக். 288) வீ.ப.கா.சு. வரைந்துள்ள  விளக்கங்களை ஆர்வலர்கள் அங்கே காண்க.

         பெரியபுராணத்தின் துணைக்கொண்டு புல்லாங்குழல் குறித்து விளக்குவதற்குத் தமிழ்நாட்டில் ஒருவர் உள்ளார் என்பதைக் கேட்டதும் புலவரைக் காணும் வேட்கை மீதூரப்பெற்றேன். ஏனெனில் இன்றைய கல்விப்புலங்கள் தக்க அறிஞர்கள் இல்லாமல் இருண்டுக்கிடக்கும் அவல நிலையை எண்ணி எண்ணி உலைந்து வரும் எனக்குப் புலவரின் ஆற்றல் பளிச்செனத் தெரிந்தது.

         உடல்நலம் இல்லாமல் புலவர் வீட்டில் இருப்பதால் அவரைக் காணும் வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் அடுத்த முறை பார்க்கலாம் என்றும் எனக்குச் சுப்ரபாரதிமணியன் கூறினார். திருப்பூருக்கும் புலவர் வீ. சொக்கலிங்கம் இல்லத்திற்கும் இருபது கல் தொலைவு இருக்கும் என்றும் அவர் இன்று வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் எனக்கு அமைதி கூறினார். அப்படி என்றால் நாம் சென்று புலவரைச் சந்திப்போம் ஐயா!; இது என் விடை.

         எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்கள் சிறுமுயற்சி எடுத்துப் புலவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு என் வருகை பற்றியும் மாலையில் நடைபெறும் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் திரையீடு பற்றியும் சொன்னார். என்னையும் புலவருடன் பேசும்படித் தூண்டினார். புலவரிடம்  நான் பேசினேன். என்னை அறிமுகம் செய்துகொண்டேன். குடந்தை ப. சுந்தரேசனார் ஆவணப்படம் பற்றியும் அவர்தம் தமிழிசை வாழ்க்கையைப் பற்றியும் எடுத்துரைத்தேன். புலவர் சொக்கலிங்கம் அவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. புலவர் அவர்கள் நம் பண்ணாராய்ச்சி வித்தகரை இரண்டுமுறை பார்த்துள்ளதாகவும், அவருடன் பழகிய நாள்கள் இன்னும் தம் மனக்கண்ணில் இருப்பதாகவும் குறிப்பிட்டு, அப்பர் பெருமானின்

    “கூற்றாயின வாறுவி லக்ககிலீர்

    கொடுமைபல செய்தன நானறியேன்

    ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்

    பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

    தோற்றாதென் வயிற்றின் அகம்படியே

    குடரோடு துடக்கி முடக்கியிட

    ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில

    வீரட்டா னத்துறை அம்மானே”

    எனத் தொடங்கும் கொல்லிப்பண் பாடலைப் பாடியும், பண் விளக்கம் சொல்லியும் பண்ணாராய்ச்சி வித்தகர் அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்ததை நினைவூட்டினார். அவர் பாடியபொழுது வயிற்றுவலி வந்தோன் அடையும் துன்பத்தைக் கண்முன் பாடிக்காட்டி நடித்துப் புலப்படுத்தியதைப் பகிர்ந்துகொண்டார். மேலும் சிதம்பரத்தில்

    அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்

    பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை

    என் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற

    இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே?

    என்னும் பாடலை உழவாரப்பணியின் பொழுது, உழவாரம் கொண்டு புல்லைச் செதுக்கி எடுப்பதுபோல் பாடிக்காட்டியதாகப் புலவர் தொலைபேசியில் உரையாடியபொழுது குறிப்பிட்டமை எனக்குப் பெரும் மகிழ்வாக இருந்தது.

         புலவர் அவர்களின் உடல்நலம் நோக்கி, அவரை இல்லம் சென்று நாங்கள் பார்க்க நினைத்தோம். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் மேல் கொண்ட பற்றின் காரணமாகவும், தமிழிசையின்மேல் கொண்டு ஈடுபாட்டின் காரணமாகவும் தாமே உரிய இடத்திற்கு வருவதாகப் புலவர் அவர்கள் வாக்களித்தார். சொன்னபடியே ஆவணப்படம் திரையிடும் இடத்திற்கு முதலாமவராக வந்து  நம் புலவர் காத்திருந்தார். புலவர்முன் கைகுவித்து வணங்கி, ’மாறிப்புக்கு இதயம் எய்தினோம்’. தம் தமிழ்ப் புலமையையும் சமய ஈடுபாட்டையும் இலக்கியப் பயிற்சியையும் புலவர் அவர்கள் என்னுடன் பகிர்ந்துகொண்டார்.

    விசயமகங்கம் புலவர் வீ. சொக்கலிங்கம் அவர்களின் தமிழ் வாழ்க்கை:

         திருக்குற்றாலத்தை அடுத்துள்ள செங்கோட்டை என்னும் ஊரில் வாழ்ந்த திருவாளர் வீரபத்திரன், ஆச்சியம்மாள் ஆகியோரின் தலைமகனாக 22.05.1940 இல் வீ. சொக்கலிங்கம் பிறந்தவர். இவருடன் ஆண் ஒருவரும், பெண் ஒருவருமாக உடன் பிறந்தவர்கள் உண்டு. பிறந்த ஊரான செங்கோட்டையில் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றவர் (1958).  பெரும்புலவர்களை வாட்டும் வறுமைச்சூழல் காரணமாகச் சிலவாண்டுகள் கடையொன்றில் குற்றேவலராகப் புலவர் சொக்கலிங்கம் இளமையில் பணிபுரிந்தார். சிலவாண்டு இடைவெளியில் செங்கோட்டை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ( 1960-62) பயிற்சி பெற்றவர்.

         1962 இல் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம் விசயமங்கலம் என்னும் ஊரை அடுத்துள்ள கினிப்பாளையம் என்னும் ஊரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியில் இணைந்து, பணி நிறைவுக்காலம் வரை அந்தப் பள்ளியில் பணிபுரிந்தார். இவரின் ஆசிரியப் பணியைப் போற்றும் வகையில் தமிழ்நாட்டு அரசு நல்லாசிரியர் விருது (1994-95) வழங்கிச் சிறப்பித்துள்ளது. பணியில் இருந்தபடியே தம் புலமையை வளர்த்துக்கொள்ள, புலவர் (சென்னைப் பல்கலைக்கழகம்), இலக்கிய இளையர் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்), கல்வியியல் இளையர், முதுகலை (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) பட்டங்களைப் பெற்றவர்.

         வாழ்வியல் தேவைக்கு ஆசிரியப் பணிபுரிந்தாலும் உள்ளம் முழுவதும் ஆன்மீக ஈடுபாட்டிலும், இலக்கிய இன்பத்திலும் மூழ்கிக் கிடந்தது. எனவே ஓய்வு நேரங்களில் சொற்பொழிவாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்.

         சமய இலக்கியங்கள், காந்தியம், பாரதிப் பாடல்கள், காமராசர் வாழ்வியல் குறித்து உரையாற்றுவதில் நம் புலவருக்குப் பெரிதும் ஈடுபாடு உண்டு. “நீரதன் புதல்வர்” என்னும் பாரதியார் பாடலடிகளைத் தலைப்பாக்கி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கையூட்டும் எழுச்சியுரையாற்றுவதில் வல்லவர். படித்தவர்களையும் படிக்காதவர்களையும் கவர்ந்திழுக்கும் சொல்லாற்றல் கொண்டவர். ’ஆன்மீகமும் மக்கள் வாழ்க்கையும்’, ’ஒரு ஊதுகுழலின் உலாக்கோலம்’, ’தெய்வச் சேக்கிழார் சுவாமிகளின் திட்பமும் நுட்பமும்’ என்னும் தலைப்புகளில் இவராற்றிய உரைகள் மக்களின் உள்ளத்தில் நீங்கா இடம்பெற்றவையாகும். இலக்கியங்களில் அமைந்துள்ள நுணுக்கமும் நுட்பமும் காணும் பேராற்றல் கொண்டவர் என்பதும் அவற்றை வெளிப்படுத்துவதில் வல்லவர் என்பதும் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

         பேரூர் திருமடத்தில் அருளாட்சி செலுத்தும் தவத்திரு சாந்தலிங்க அடிகளாரின் மெய்த்தொண்டினை நினைவூட்டி, இவர் எழுதிய “தவம் செய்த தவம்” என்னும் நூல் அடியவர்களால் விரும்பிப் பயிலப்படும் நூலாகும். திருக்குற்றாலச் சாரலின் இயற்கை எழிலை வருணித்து இவர் வரைந்துள்ள “கவிச்சரம்” என்னும் நூல் இலக்கிய ஆர்வலர்களுக்கு இனிய விருந்தாகும். 32 கவிதைகள் இந்த நூலின் உள்ளடக்கமாக உள்ளன.

         சென்னை, நெல்லை, நாகர்கோயில் உள்ளிட்ட ஊர்களில் இலக்கியப் பேருரையாற்றிய இவர் மலேசியாவுக்குச் சென்று இருபத்தைந்து நாள் தங்கிச் சமய நூல்கள் குறித்தும், இலக்கியச் சுவையுணர்வு குறித்தும் உரையாற்றி மீண்ட பெருமைக்குரியவர்.

         புலவர் வீ. சொக்கலிங்கம் அவர்கள் சைவ சமய ஈடுபாடு கொண்டவர் எனினும் வடநாட்டிலிருந்தும், பிற பகுதிகளிலிருந்தும் சுற்றுப்பயணம் வரும் சமணர்கள் தங்கிச் செல்லும் வகையில் இவரின் வீட்டுக் கதவம் எப்பொழுதும் திறந்திருப்பதும் அவர்களை விருந்தோம்பி வழியனுப்புவதும், வருவிருந்துக்குக் காத்திருப்பதும் இவரின் உயர்ந்த மாந்த நேயத்தை வெளிப்படுத்துவன. சமயங்கடந்து, அனைவரிடமும் அன்பு பாராட்டி வாழும் தமிழுள்ளம் வாய்த்த புலவர் பெருமான் நலம்பல பெற்று, நீடு வாழ வாழ்த்துவம்!

    Share
  • புதுவைப் பேராசிரியர் அ. அறிவுநம்பி மறைவு!

    மு. இளங்கோவன்

    amu

    புதுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியரும், புகழ்பெற்ற ஆய்வாளருமான முனைவர் அ. அறிவுநம்பி இன்று (09.04.2017) மாரடைப்பால் புதுச்சேரியில் இயற்கை எய்தினார். காரைக்குடியில் பிறந்த பேராசிரியர் அ. அறிவுநம்பி, காரைக்குடி அழகப்பர் கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கல்வி பயின்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கியவர். பின்னர் புதுவைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியராக இணைந்து, பேராசிரியர், துறைத்தலைவர், புலமுதன்மையர் பொறுப்புகளை வகித்தவர். பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். கல்விப்பயணமாகப் பலநாடுகளுக்குச் சென்று வந்தவர்.

    இன்னும் இரண்டு மாதங்களில் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அ.அறிவுநம்பி இன்று திடுமென இயற்கை எய்தியமை தமிழகத்துக் கல்வியாளர்களைப் பெரிதும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

    நாளை 10.04.2017 (திங்கள்) மாலை 4.30 மணிக்குப் புதுச்சேரி, இலாசுப்பேட்டையில் உள்ள கலைவாணி நகர் இல்லத்திலிருந்து உடல் நல்லடக்கம் செய்ய எடுத்துச்செல்லப்பட உள்ளது. பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாக வந்து பேராசிரியர் அ. அறிவுநம்பிக்கு அஞ்சலி செலுத்தியவாறு உள்ளனர்.

    Share
  • தெருக்கூத்துக் கலைஞர் பட்டுக் கவுண்டர்!

    -முனைவர் மு.இளங்கோவன்

    நான் பணிபுரியும் அலுவலகத்திற்கு இரண்டு நண்பர்கள் அண்மையில் வந்தனர். ஒருவர் முன்பே அறிமுகம் ஆனவர். அவரின் பெயர் திரு. குணசேகரன் என்பதாகும். பொ.தி.ப. சாந்தசீல உடையார் அலுவலகத்தில் கணக்கராகப் பணிபுரிந்தவர். உடன் வந்தவர் அவரின் தம்பி திரு. சரவணன் ஆவார். வந்தவர்கள் பலபொருள்குறித்து என்னுடன் உரையாடிக்கொண்டிருந்தனர். பின்னர் எங்களின் பேச்சானது தெருக்கூத்து நோக்கி நகர்ந்தது.

    புதுச்சேரியில் மிகுதியான தெருக்கூத்துக் கலைஞர்கள் இருந்துள்ளமையையும் அவர்களைப் பற்றிய போதிய பதிவுகள் இல்லாமல் உள்ளதையும் அவர்களிடம் தெரிவித்தேன். என்னுடன் உரையாடிய சரவணன் தெருக்கூத்துக் கலைஞர் என்பதையும், கலைமாமணி கோனேரி இராமசாமி அவர்களின் கலைக்குழுவில் உள்ளவர் என்பதையும் அறிந்து மகிழ்ந்தேன்.

    சரவணன் அவர்களிடம், தங்களுக்குத் தெரிந்த மூத்த தெருக்கூத்துக் கலைஞர்கள் புதுவையில் உள்ளனரா? என்று வினவினேன். கல்விப் புலத்திலிருந்து தங்கள் கலையை நோக்கி வினவுபவர் உள்ளாரே என நினைத்து, ஆர்வமுடன் உரையாடலை அவரும் தொடர்ந்தார். தங்கள் உறவினர்கள் பலர் கூத்துக்கலைஞர்கள் எனவும், தங்கள் உறவினருள் அகவை முதிர்ந்த கூத்துக்கலைஞர் ஒருவர் இப்பொழுதும் உள்ளார் எனவும் தெரிவித்தார். அன்றுமுதல் அகவை முதிர்ந்த அந்தக் கூத்துக் கலைஞரைச் சந்திப்பதற்குத் திட்டமிட்டேன்.

    கூத்துக்கலைஞர் சரவணன் தம் வாழ்க்கையை நடத்துவதற்கு உரிய தொழிலாகத் திருமணக்கூடங்கள், விழா மேடைகள் ஆகியவற்றை ஒப்பனைப்படுத்தும் கலைஞராகவும் கூடுதல் பணிகளைச் செய்வது உண்டு. திருமண நாளில் மண்டபங்களில் மணமேடையை அழகுப்படுத்துவது, அதனைப் பிரித்தெடுத்து மீண்டும் அடுத்த மண்டபத்துக்குக் கொண்டு செல்வது, அங்குப் பணி முடிந்த பிறகு வீட்டுக்குக் கொண்டுவருவது என்று எப்பொழுதும் பணி அழுத்தமாக இருப்பவர். நான் அழைக்கும்பொழுது இதனைக் கூறி, விலகிக்கொள்வார். அவர் அழைக்கும்பொழுது நான் அலுவலகத்தில் உழன்றுகொண்டிருப்பேன்; அல்லது அயலகப் பயணங்களில் இருப்பேன். இருவரும் சந்திக்கும்பொழுது ஒளி ஓவியர் எங்களுடன் இணையமுடியாதபடி சூழல் இருக்கும்.

    இன்று(04.03.2017) மாலை ஒளி ஓவியர், கூத்துக்கலைஞர், நான் மூவரும் ஒருபுள்ளியில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டுப் புதுவையின் கடைசி எல்லைப்பகுதியில் இருந்த நாவற்குளம் பகுதியை அடைந்தோம். ஒருகாலத்தில் நாவல் மரங்கள் நிறைந்திருந்த பெரும் தோப்புகளும், பனந்தோப்புகளும், பொன்விளையும் பூமியுமாக இருந்த நாவற்குளம் என்ற செம்மண் நிலம் இன்று, சிமெண்டு மாளிகைகள் எழுப்பப்பெற்று, சமூகத்தில் முதன்மையானவர்கள் வாழும் இடமாக மாறிவிட்டது.

    எங்களின் வருகைக்குக் குணசேகரனும் சரவணனும் காத்திருந்தனர். சாலையை ஒட்டிய ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். வீட்டின் முன்பகுதியில் ஒரு அகவை முதிர்ந்த பெரியவர் அமர்ந்திருந்தார். என்னை அழைத்துச் சென்று அந்தப் பெருமகனாரிடம் அறிமுகம் செய்தனர். முன்பு என்னைப் போல் மூவர் சென்று உரையாடித் திரும்பியுள்ளனர். அவர்களின் செயலால் சோர்வுற்று இருந்த பெரியவர் என்னையும் அந்தப் பட்டியலில் இணைத்து, நினைத்ததில் தவறு ஒன்றும் இல்லை. மனச்சோர்வுடன்தான் பேசினார்.

    குடும்பத்தில் இருந்தவர்களுக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தனர். அகவை முதிர்ந்த அந்தக் கூத்துக்கலைஞரை உள்ளே அழைத்து, விளக்கொளியில் அமரச் செய்து உரையாடத் தொடங்கினோம். “பேட்டி”காணும் செய்தியாளர்கள் என்ற பெயரில் யாரேனும் வந்திருந்தால் வந்த வேகத்தில் திரும்பியிருப்பார்கள். ஐயாவை எங்களின் வழிக்குக் கொண்டு வருவதற்குப் பெரும் பாடுபட்டோம்.

    என் பெயர் பட்டுக் கவுண்டர். அப்பா பெயர் பெரியதம்பி, அம்மா பெயர் காத்தாயி. இப்பொழுது எனக்குத் தொண்ணூற்றெட்டு வயது ஆகிறது என்றார். பிறந்து வளர்ந்தது, படித்தது, வாழ்ந்தது எல்லாம் இந்த ஊரில்தான். தாய் மாமன் சு. இராஜகோபால் அவர்களிடம் தெருக்கூத்துப் பாடல்களையும், நாடகப் பாடல்களையும் கற்றுக்கொண்டேன் என்றார். இந்தத் தகவலைப் பெறுவதற்குள் பெரும் முயற்சி எனக்குத் தேவைப்பட்டது. நான் கத்திக் கதறி விவரங்களை வாங்குவதற்குள் அக்கம் பக்கம் இருந்தவர்கள் கூடினர். அகவை தொண்ணூற்று எட்டு என்றாலும் இன்னும் கண்ணாடியில்லாமல் செய்தித்தாளைப் படிக்கின்றார்.

    திரு. பட்டுக் கவுண்டர் அவர்கள் பெருகிய நிலங்களைக் கொண்ட வளமான வாழ்க்கை வாழ்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் தாத்தா அந்நாளைய பிரெஞ்சு அரசுக்குத் துப்பாக்கிக்குப் பயன்படும் பொருள்களைச் செய்து வழங்கியுள்ளார். அதனால் புதுவையின் ஒதுக்குப்புறமாக இருந்த இவர்களின் நிலங்கள் வரை புதுச்சேரியின் எல்லையைப் பிரெஞ்சியர் அமைத்தனர் என்பதை அறியமுடிந்தது. சற்றுத் தொலைவில் ஆங்கிலேயர்களின் முகாம்(கேம்ப்) இருந்துள்ளதையும் உரையாடலில் அறிந்தேன்.

    Pattu2பட்டுக் கவுண்டர் தம் வீட்டை ஒட்டிய பகுதியில் அக்காலத்து இளைஞர்களாக இருந்த உறவினர்களை ஒன்றிணைத்துத் தெருக்கூத்தினைக் கற்றுள்ளார். இவர்களுக்கு ஆசிரியராக இருந்து, இராஜகோபால் என்பவர் தெருக்கூத்துக் கலையை அனைவருக்கும் பயிற்றுவித்துள்ளார். பலநாள் பயிற்சி எடுத்து, அரங்கேறிய தெருக்கூத்துக் கலைஞர்கள் கோவில் திருவிழாக்களிலும், கோடைக் காலங்களிலும் அந்தநாளில் தெருக்கூத்து ஆடியுள்ளனர். பக்கத்து ஊர்களிலிருந்து தெருக்கூத்துக்குத் தேவையான இசைக்கருவிகள், ஒப்பனை செய்வதற்குரிய அணிகலன்கள், கட்டைகள் வாடகைக்கு அமர்த்திப் பயன்படுத்தியுள்ளனர். அருகில் உள்ள ஊர்களுக்கும் சென்று தெருக்கூத்து ஆடியுள்ளனர்.

    பட்டுக் கவுண்டர் தருமன், கண்ணன், நாரதன், வசிஷ்டர், அபிமன்யு என்று பல்வேறு பாத்திரங்களில் ஆர்வமாக நடித்தவர். இன்றும் மெல்லிய குரலில் இந்தப் பாத்திரங்கள் பாடும் பாடல்களைப் பாடிக்காட்டித் தம் இளமைக்காலத் தெருக்கூத்து அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். பாடல்களைப் பாடும்பொழுது அடிக்கடி களைப்படைந்துவிடுகின்றார். நினைவுக்குச் சில பாடல்களையும் உரையாடல்களையும் ஒளிப்பதிவு செய்துகொண்டோம். இருபத்தைந்து வயதில் தெருக்கூத்து ஆடத் தொடங்கிய பட்டுக் கவுண்டர் 60 வயது வரையும் தெருக்கூத்தின் உச்ச நிலையைத் தொட்ட கலைஞராக விளங்கியுள்ளார். தெருக்கூத்துக் கலைஞர்கள் சிலரிடம் புகுந்துள்ள மது, புலால் உண்ணுதல் என்ற பழக்கங்கள் இல்லாதவராகவும், அறச்சிந்தனை கொண்டவராகவும் விளங்கும் பட்டுக் கவுண்டர் அவர்கள் போற்றி மதிக்கத்தக்க கலைஞர் என்பதில் ஐயமில்லை.

    பட்டுக் கவுண்டர் அவர்களின் மகன் பெருமாள்சாமியும் தெருக்கூத்துக் கலைஞர். இப்பொழுது பகலில் தச்சுத்தொழிலும், இரவில் தெருக்கூத்துப் பணியுமாக உள்ளார். பட்டுக் கவுண்டரின் பெயரன் பற்குணன் கணினி வரைகலையில் பயிற்சிபெற்று வருகின்றார். இவரும் இளம் அகவையிலையே தாத்தாவுடன் இணைந்து தெருக்கூத்தினைப் பார்ப்பது, பாரதக் கதை கேட்பது என்று விருப்பத்துடன் இருந்து, தெருக்கூத்தில் கண்ணன் வேடம் அணிந்து, பாட்டிசைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுவருபவர். மூன்று தலைமுறைக் கூத்துக்கலைஞர்களை ஓரிடத்தில் சந்தித்த மன நிறைவு எனக்கு ஏற்பட்டது. மூவரின் பாடலையும் ஒளிப்பதிவு செய்தோம்.

    நாவற்குளம் பகுதி வளர்ச்சி அடைவதற்குச் சாலை அமைக்கவும், பள்ளிக்கூடம் கட்டவும், கோயில் கட்டவும் கோடிக்கணக்கான மதிப்புடைய தம் நிலங்களை அன்பளிப்பாக வழங்கிய கொடை நெஞ்சர் பட்டுக் கவுண்டர் என்பதை அறிந்து கைகுவித்து வணங்கித் திரும்பினேன்.

    Share
  • பெருஞ்சித்திரனாரின் பாடல்களில் குமுகச் சிந்தனைகள்

    -முனைவர் மு.இளங்கோவன்

     ‘மாந்தரை மீமிசை மாந்தராக மலர்த்துவன பாடல்களாகும். பாட்டுஉணர்வு உணர்வுகளின் உயர்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே நம் முன்னோர்கள் சிறந்த பாட்டுணர்ச்சி உடையவர்களாகவும் இசையீடுபாடு கொண்டவர்களாகவும் விளங்கியுள்ளனர்’ என்ற கருத்தினைக் கொண்டவர் பெருஞ்சித்திரனார் ஆவார். மேம்பட்ட பாட்டுணர்வால், இருபதாம் நூற்றாண்டுப் பாட்டிலக்கிய வரலாற்றில் தமக்கெனத் தனித்த இடத்தைப் பெற்றவராக இவர் விளங்குபவர். இவரின் பாடல்களில் பொதிந்துள்ள குமுகச் சிந்தனைகளை இக்கட்டுரை முன்வைக்கின்றது.

    amu

    பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் துரை. மாணிக்கம் என்பதாகும். சேலம் மாவட்டத்தில் பிறந்த இவர் உலக ஊழியர், தமிழ் மறவர் வை. பொன்னம்பலனார், மொழிஞாயிறு பாவாணர் உள்ளிட்ட அறிஞர்களிடம் தமிழ் கற்கும் வாய்ப்பினைப் பெற்றவர். இப்பெருமக்கள் யாவரும் இயல்பிலேயே தமிழறிவும், தமிழ் உணர்வும் தழைத்தவர்களாக விளங்கியவர்கள். இவர்களிடம் கற்ற பெருஞ்சித்திரனார் பின்னாளில் தமிழ் இலக்கிய உலகில் போற்றப்படும் முன்னோடிப் பாவலராக மலர்ந்தவர்.

    பெருஞ்சித்திரனார் இளம் அகவையிலேயே பாடல் எழுதவும், பாவியம் புனையவுமான பேராற்றல் கொண்டிருந்தவர். தம் பதின்மூன்றாம் அகவையிலேயே பூக்காரி என்னும் பாவியம் வரைந்தவர். கையெழுத்து ஏடுகள் நடத்தியவர். புதுச்சேரி அஞ்சல் துறையில் பணியில் இணைந்த இவருக்குப் பாவேந்தரிடம் அமைந்த தொடர்பு, பாட்டுத்துறையில் மிகப்பெரிய ஈடுபாட்டை உருவாக்கியது. பணிமாறுதலால் கடலூருக்கு இவர் சென்றபொழுது அங்குத் தென்மொழி என்னும் இலக்கிய ஏட்டினைத் தொடங்கி(1959) நடத்தியவர். இக்காலகட்டத்தில் தென்மொழி ஏட்டிலும் தமிழகத்தில் வெளிவந்த பிற ஏடுகளிலும் தமிழுணர்வு தழைக்கும் பாடல்களை இயற்றி இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் தமிழுணர்வை ஊட்டும் பணியில் ஈடுபட்டவர்.

    பெருஞ்சித்திரனார் ஐயை,  கொய்யாக்கனி,  பாவியக்கொத்து உள்ளிட்ட பாவியங்களையும், கனிச்சாறு, பள்ளிப் பறவைகள், நூறாசிரியம் உள்ளிட்ட பாட்டுத் தொகுதிகளையும் இயற்றியவர்.

    பெருஞ்சித்திரனார் காலத் தமிழக நிலை

    பெருஞ்சித்திரனார் பிறந்து (1933)  வளர்ந்த காலகட்டம் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க காலகட்டமாகும். பெரியாரின் தன்மதிப்புச் சிந்தனைகள், பகுத்தறிவுப் பார்வை,  ஆரிய,  புராண, இதிகாச எதிர்ப்புகள் நாடெங்கும் சுடர்விட்டு நின்றன. தவத்திரு மறைமலையடிகளாரின் தனித்தமிழ்ப் பார்வை தமிழகத்தில் நல்ல வளர்ச்சி பெற்ற சூழல் நிலவியது. பாவாணரின் மொழி, இன மீட்சி ஆய்வுகள் மக்களிடம் பரவலாக அறிமுகம் பொற்றிருந்தன. சமற்கிருத மேலாண்மை, கட்டாய இந்தித் திணிப்பு, ஆங்கில வல்லாதிக்கம் மேலோங்கியிருந்த காலகட்டத்தில் பெருஞ்சித்திரனாரின் இலக்கியப் பணி தொடங்கியது. தமிழகத்தில் நிலவிய இச் சூழலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கல்வி உலகத்தில் கருத்துடையோர் இருந்தமையையும் இங்குக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

    வடமொழிச் சார்பாளர்களும், அம்மொழியிலிருந்தே தமிழுக்கு அனைத்தும் வந்தன என்போரும், வடமொழிச் சார்பின்றித் தமிழ் தனித்து இயங்காது என்போரும் அக்காலத்தில் மிகுந்திருந்தனர். தமிழ்ப் பேராசிரியர்கள் சிலரும் இக் கருத்துகளைக் கொண்டிருந்தனர். மேலும் கொச்சைத் தமிழ்தான் தமிழ் என்றும், தூய தமிழ் காலத்துக்கு உதவாது என்றும், இந்தி படிப்பது நன்மை தரும் என்றும் சில அறிஞர்கள் கருத்தினை முன்வைத்தனர். இவற்றை எதிர்க்கும் போர்முரசமாகப் பெருஞ்சித்திரனாரின் பாட்டுக்குரல் ஒலித்துள்ளது. தமிழீழப் போராட்டம் வேர்விட்டுப் பெரிய அளவில் வளர்ந்து கொண்டிருந்த காலம் பெருஞ்சித்திரனாரின் இயக்கப்பணிக் காலமாகும். இதனால் இயக்க ஈடுபாடுள்ள இளைஞர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பவராகவும் பெருஞ்சித்திரனார் விளங்கினார்.

    பெருஞ்சித்திரனார் தமிழில் நல்ல புலமையும், தமிழியச் சிந்தனையும் கொண்டவராக விளங்கித் தமக்கெனத் தனித்த கொள்கைகளை வகுத்துக்கொண்டு செயல்படத் தொடங்கியவர். தமிழினத்தின் பெருமையையும் அவர்களின் மொழிச் சிறப்பையும் இடைக்காலத்தில் தமிழுக்கு நேர்ந்த கேடுகளையும் வரலாற்று வழியாக உணர்ந்திருந்த பெருஞ்சித்திரனார் தமிழர்களையும் தமிழ்மொழியையும் மேம்படுத்தும் நோக்கில் தம் படைப்புகளை வழங்கத் தொடங்கினார். தம் கொள்கைகளை நிலைநாட்டவும், தம் எதிர்ப்புகளை வெளிப்படுத்தவும் இவர் எழுதிய எழுத்துகள் இவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தமை போல் எதிர்ப்புகளையும், சிறைத்தண்டனைகளையும் பெற்றுத் தந்துள்ளமையை இவர் வரலாற்றைக் கற்கும்பொழுது அறியமுடிகின்றது.

    தமிழ்நாடு என்பது இன்றுள்ள கன்னியாகுமரிக்குத் தென்பகுதியில் இருந்த பெருநிலபரப்பு; பண்டைக்காலத்தில் இது இலெமூரியாக் கண்டமாக விளங்கியது; இந்த நிலப்பரப்பில்தான் முதல் மாந்தன் தோன்றினான்; அவன் பேசியமொழி தமிழ்; இத்தமிழ் மொழியே உலக மொழிகளுக்குத் தாய்; ஆரியத்திற்கு மூலம்; இங்கு வாழ்ந்த மக்களே உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர்; காலப் பழைமையால் இவர்கள் பேசும் மொழிகளில் திரிபுகள் உண்டாயின எனத் தம் ஆசிரியர் பாவாணர் கொள்கைகளை முழுவதும் கொண்டவர் பெருஞ்சித்திரனார். மேலும் மதம் வழியாகப் பின்னப்பட்டுள்ள சமூக இழிவுகளிலிருந்து தமிழர்கள் விடுபட்டு, கலை, இலக்கியப் பண்பாட்டில் மேம்பட்டவர்களாக வாழவேண்டும் என்ற கொள்கையையும் வரித்துக்கொண்டவர்; ‘கெஞ்சுவதில்லை பிறர்பால்; அவர்செய் கேட்டினுக்கும் அஞ்சுவதில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை” என்ற நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தவர். எனவே இக்கருத்துகளை நிலைப்படுத்தவும்,  பரவலாக்கவும், தம் கொள்கைகளுக்கு முரண்பட்டவர்களை எதிர்த்துக் கருத்துரைக்கவும் அஞ்சாதவராகப் பெருஞ்சித்திரனார் விளங்கியவர். இக்கொள்கைகளை நிலைநாட்ட எழுத்தாலும் பேச்சாலும், இயக்கத்தாலும் பாடுபட்டவராகப் பெருஞ்சித்திரனாரை மதிப்பீடு செய்யலாம்.

    பெருஞ்சித்திரனாரின் படைப்புகளில் தமிழ்க் குமூகத்தில் உள்ள சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள், ஆசிரியர்கள், அறிஞர்கள், புலவர்கள் அரசியல் தலைவர்கள், தொழிலாளர்கள், இதழாளர்கள் என அனைவரும் தமிழ்ப்பணியாற்ற வேண்டும், இழந்த பெருமையை மீட்க வேண்டும்; பகையை நீக்குவதற்குப் பாடுபட வேண்டும் என்பன உள்ளடக்கமாக அமைந்துள்ளன. மொழி வழியாகவே குமுகம் கட்டமைக்கப்படுகின்றது. அனைத்துக்கும் ஊற்றுக்கண்ணாக இருப்பது மொழி என்று உணர்ந்து சாதியாலும் மதத்தாலும் பிரிந்துகிடக்கும் தமிழர்களை ஒன்றிணைக்க முனைந்தார். சாதி ஒழிப்புப் பாடல்கள் பலவற்றை எழுதியவர். தமிழர்களை ஒன்றுபடுத்தும் பல பாடல்களும் இவரால் படைக்கப்பட்டுள்ளன.

    “என்மொழி என்னினம் என்நாடு நலிகையில்
    எதனையும் பெரிதென எண்ணமாட்டேன் – வேறு
    எவரையும் புகழ்ந்துரை சொல்லமாட்டேன்! – வரும்
    புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
    பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்!- இந்த(ப்)
    பூட்கையில் ஓரடி தள்ளமாட்டேன்!

    என்று கொள்கை வாழ்க்கை வாழ்ந்தவர் பெருஞ்சித்திரனார்.

    “மூச்சுள்ள வரைக்கும் – உலகத் தமிழின
    முன்னேற்றம் ஒன்றே பேசுவேன் – அதில்
    ஏச்சுகள் பேச்சுகள் ஆயிரம் வரினும்
    எதிர்நின் றிருகை வீசுவேன்…….”

    என்று பாடிய இவர்,

    “எந்தக் கட்சியில் நீயிருந்தாலும்
    இனத்தை மறந்துவிடாதே! தமிழா
    இனத்தை மறந்துவிடாதே!’

    என்று பிளவுபட்டுக் கிடக்கும் தமிழர்களை ஒன்றுபடுத்த விழைந்து எழுதியுள்ளார்.

    தமிழகத்தில் தமிழைக் கற்போரும் கற்பிப்போரும் பேசுவோரும் கணக்கின்றி உள்ளனர். வெற்று ஆரவாரக் கூச்சல்களால் பயன் இல்லை எனவும், ஒவ்வொருவரும் தமிழ்ப்பற்றுடன் விளங்கவேண்டும் எனவும் பெருஞ்சித்திரனார் விரும்பியவர். கல்வி நிலையங்கள் தமிழ்ப்பற்றை ஊட்டும் இடமாக விளங்கவேண்டும்; ஆசிரியர்கள் வகுப்பறைகளில் தமிழ்ப்பற்றை ஊட்டும் பணியைத் திறம்படச் செய்தல் வேண்டும்; மாணவர்கள் தமிழ்ப்பற்றுடன் இருக்க வேண்டும்; நாட்டை ஆளும் தலைவர்கள் தமிழ்ப்பற்றுடன் விளங்கி ஆக்கப்பணிகளில் முன்னிற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுத் தமிழ்ப்பற்றுக்கு வழிகாட்டியவர். இத்தகு வைர வரிகளை மனத்துள் தேக்கிய மாணவர்களும், ஆசிரியர்களும், தலைவர்களும் கூடி இந்தி எதிர்ப்புப் போரில் வினையாற்றி வெற்றி வாகை சூடியமையை இங்கு எண்ணிப்பார்த்தல் வேண்டும். இந்தி எதிர்ப்புப்போரில் ஈடுபட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து மாணவர்களின் தமிழ்ப்பற்றுக்குக் காரணமாகப் பெருஞ்சித்திரனாரின் பாடல்கள் அக்காலத்தில் விளங்கின.

    தமிழ்த்தொண்டு  செய்வோரின் கடமையைப் பின்வருமாறு குறிப்பிடுவார்.

    “தமிழ்ப்பற்றை ஊட்டாத தமிழ்க்கல்வி
    தமிழர்க்குத் தீங்கு செய்யும்!
    தமிழ்ப்பற்றை எழுப்பாத கணக்காயர்
    தருந்தமிழால் தமிழர் தாழ்வர்!
    தமிழ்ப்பற்றை வளர்க்காத மாணவரால்
    தமிழ்நாட்டைக் கேடு சூழும்!
    தமிழ்ப்பற்றுக் கொள்ளாத தலைவரெல்லாம்
    தமிழ்நாட்டுப் பகைவ ராமே!”               (1960, கனிச்சாறு, தொகுதி 1)

    பேராயக் கட்சியினரும் அக்கட்சியின் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட அறிஞர்கள் சிலரும் வடவெழுத்துகளை வகைதொகையின்றிக் கலந்து எழுதினால்தான் தமிழ் வளரும் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். தமிழ்ச்சுவையறியாத  எளிய நிலை மக்களும் இக்கருத்தை மொழிவது உண்டு. இதனைப் பெருஞ்சித்திரனார்,

    “சந்தோஷம் என்பதற்கு ‘ஷ’ வேண்டுமாம்;
    ஜனநாயகத்திற்கு ‘ஜ’ தேவையாம்;
    சிந்தித்துப் ‘புஸ்கத்’தை ‘அக்ஷரத்’தைச்
    சொல்லுங்கால் ‘ஸ’ வேண்டும் ‘க்ஷ’ வும் வேண்டும்!
    இந்தவெழுத் தெல்லாம்நம் தமிழில் சேர்ந்தால்,
    இந்நாட்டைத் தமிழ்ஆளத் தகுதி யாகும்!
    விந்தையல்ல! ஆராய்ச்சி! மொழியாராய்ச்சி!
    வெள்ளெலும்பு கண்டார், வெள்ளெலும்பே கண்டார்!
    குழுமுடிவைக் கேட்டிருந்த அமைச்சரெல்லாம்
    ‘கோணல் முடிவல்ல’ ‘நல்ல முடிவே’ என்றார்!…
    …………………………..    ………………..        நம்மனோர்க்குக்
    கழுநீரா ஓடுவது உடலில்! தீங்கைக்
    கண்டபின்னும் பிணம்போல இருப்பதற்கே! (1960, கனிச்சாறு, தொகுதி 1)

    என்று கடிந்து எழுதியுள்ளார். தமிழ் மொழியில் பிற எழுத்தோ, பிற சொல்லோ கலந்தால் அதன் தூய்மை கெடும் என்பதை அறியாமல் அக்காலத்தில் ஆட்சியில் இருந்தோர் எடுத்த முடிவுகளைப் பெருஞ்சித்திரனார் துணிவுடன் கண்டித்துள்ளதை இந்தப் பாடல் நமக்கு உணர்த்துகின்றது.

     தனித்தமிழ் இயக்க அறிஞர்களின் தொடர்ந்த செயல்பாடுகளால் வடவெழுத்து, வடசொற்கலப்பு தடுத்து நிறத்தப்பட்டு எங்கும் தூய தமிழ் நிலைபெற்றமை வரலாறாகும். ‘அபேட்சகர்’ என்பது வேட்பாளர் எனவும், ‘அக்கிரசனாதிபதி’ என்பது தலைவர் எனவும், ‘ஸ்டேஷன்’ என்பது நிலையம் எனவும், ‘வந்தனா உபசாரம்’ என்பது வரவேற்புரை எனவும் வழக்கிற்கு வந்தமைக்குத் தனித்தமிழ் அறிஞர்களின் உழைப்பு பெரிய அளவில் பயன்பட்டுள்ளது.

    இளைஞர்களுக்குத் தமிழ்ச்சிறப்பை எடுத்துரைத்து அவர்களைத் தமிழ் மறவர்களாக மாற்றும் பணியைப் பெருஞ்சித்திரனார் பாடல்கள் செய்துள்ளன. தமிழ்ச்சிறப்பு எடுத்துரைத்தல், தமிழ்ப்பகைவர்களை அடையாளம் காட்டல், பகைமுடித்து மொழிகாத்தல் என நெறிப்படுத்தும் பணியைப் பெருஞ்சித்திரனார் பாடல்கள் செய்துள்ளன.

    “மொழிப்போர் புரி! செழிப்பாந் தமிழ்
    மொழிப்பால் குடிப்பாய்! – இனிப்
    பழிப்பார் உனை; அழிப்பார் பினை;
    விழிப்பாய் தமிழா!

    அறப்போர் புரி! சிறப்பாந் தமிழ்
    மறப்போர் புரிவாய்! – உயிர்
    துறப்பார்க் கினிப் பிறப்பார் வயின்
    இறப்பே தடடா!

    சிறுத்தாய் என ஒறுத்தார்; துயர்
    பொறுத்தாய் பலநாள்! – உயர்(வு)
    அறுத்தார்; குரல் மறுத்தார்; நிலை
    நிறுத்தாய் நெடுந்தோள்!”                   (1963, கனிச்சாறு, தொகுதி 1)

    என்று எழுதியுள்ள வரிகள் பெருஞ்சித்திரனாரின் தமிழ்ப்பற்றினையும் இன மேன்மைச் சிந்தனையையும் எடுத்துரைப்பதுடன் அவர்க்கு அமைந்திருந்த யாப்பாளுமையையும் புலமைச்செறிவையும் நமக்குப் புலப்படுத்துகின்றன.

    பெருஞ்சித்திரனார் 1965 ஆம் ஆண்டு அளவில் இந்தி எதிர்ப்புப் பாடல்களைத் தம் இதழ்களில் எழுதி மாணவர்களுக்கும் மக்களுக்கும் தமிழ் உணர்வூட்டியதால் அரசால் சிறைசெய்யப்பெற்று, வேலூர்ச் சிறையில் தளைப்படுத்தப்பட்டார். அப்பொழுது மார்கழி மாதம் என்பதால் திருவெம்பாவை, திருப்பாவைப் பாடல்களைப் பெண்டிர் பாடுவதை அறிந்த பெருஞ்சித்திரனார் பாவைப் பாடல்களின் அமைப்பில் பாடல்களை எழுதிப் பெண்குலத்தைத் தமிழ்காக்கும் பணிக்கு அழைத்துத் தம் பங்களிப்பை வழங்கியுள்ளார். 30 பாடல்களைக் கொண்ட இப்பாடல்கள் ‘செந்தமிழ்ப்பாவை’ என்ற தலைப்பில் அமைந்துள்ளது.

    “கற்றவரோ செந்தமிழால் காசுபணம் சேர்க்கின்றார்!
    மற்றவரைக் கேட்பானேன்! மான்விழியே! நாட்டுநலம்
    உற்றசிலர் நின்று உரிமைதரக் கேட்டாலோ
    கொற்றவரும் அன்னார் குரலை நெரிக்கின்றார்!
    குற்றமென்று கூறிக் கொடுஞ்சிறையுள் தள்ளுகின்றார்!
    முற்றும் தமிழரினம் மூங்கையதாப் போகுமுன்
    பெற்ற குலத்தோரே பேருரிமை காக்கவல்லார்!
    பொற்றொடியே துஞ்சல் புரையேலே ரெம்பாவாய்!

    மேற்கண்ட பாடலில் கற்றவர்களின் நிலையையும், அரசாட்சியில் இருப்பவர்களின் நிலையையும் எடுத்துரைத்துத் தமிழினம் அழியும் முன்பாக இவ்வினத்தைக் காப்பதற்குப் பெண்குலத்தோர் முன்வரவேண்டும் என்று குறிப்பிடுவதை இங்குக் கவனித்தல் வேண்டும்.

    “செந்தமிழுக்குத் தீதோ? தெளிதேனில் வெங்கசப்போ?
    எந்தமிழர் செந்நாவுக் கிந்தியோ? ஏலோம் யாம்!
    கந்தை உடுப்போம்! கிழங்குண்போம் கான்செல்வோம்!
    இந்தி படிக்க இசையோம் யாம்” என்பதனை
    வெந்த உளத்தோடும் வெல்கின்ற வீறோடும்
    இந்தத் தமிழ் நிலத்தின் ஏந்திழையார் கூறுவரேல்
    வந்து புகுமோ? வடக்குமொழி? வார்குழலாய்!
    முந்தி எழுந்தே முழங்கேலோ ரெம்பாவாய்!

    இந்தப் பாடலில் பழைய வடிவத்தை எடுத்துக்கொண்டு காலத்தேவைக்கு ஏற்ற கருத்தைப் பொதியவைத்து எழுதியுள்ள திறம் போற்றுதலுக்கு உரியது. குமுகத்தில் பெரும்பான்மைப் பெண்கள் பக்திவயப்பட்டவர்களாக இருப்பதும், சமய, மத நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதும் கண்கூடு. இவர்களைச் சென்று சேரவேண்டிய கருத்துகளை இவர்களுக்கு அறிமுகமான வடிவத்தில் பெருஞ்சித்திரனார் வழங்கியுள்ளமை மிகச் சிறந்த உத்தியாகக் கொள்ள வேண்டும்.

    மொழியியல் பேராசிரியர்கள் சிலர் எழுதுவதெல்லாம் இலக்கியம் என்று கூறும் கருத்தைப் பெருஞ்சித்திரனார் மறுத்து,

    “யாழிசைப்போனுக்கு யாழ்ப் பயிற்சி வேண்டும்!
    பாழாய் இசைப்போன் பழிக்கப்படுவான்;
    நாட்டியங் கற்பரே நாட்டியம் ஆடலாம்!
    பாட்டுப் புலவனும் பண்கள் பயிலுவான்!” (1965, கனிச்சாறு முதல்தொகுதி, பக்கம், 46)

    என்று இலக்கியம் எழுதுவோர் நல்லறிவு பெற்றவராகவும் மொழிநலம் பேணுபவராகவும் இருக்க வேண்டும் என்று கடிந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறைப் பேராசிரியரை இடித்து எழுதியுள்ளமை இவரின் மொழிக்காப்பு முயற்சிக்குச் சான்றாக அமைந்துள்ளது.

    தமிழகத்தில் வெளிவரும் தாளிகைகள், இதழ்கள் யாவும் தமிழ்ப்பெயரின்றி வருகின்றன; தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரான கருத்துகளையும்  படங்களையும் தாங்கி வருகின்றன. இதனைக் கண்டித்துப் பல பாடல்களை  எழுதியுள்ளார். மிகுதியான மக்கள் படிக்கின்றனர் என்றோ, இதழ் நடத்துபவர்கள் தமிழ்ப்பற்று உடையவர்கள் என்றோ சிறிதும் எண்ணாமல் தம் மொழிக்கு ஊறு ஏற்படுத்தும் வேலைகளை யார் செய்தாலும் அறச்சீற்றம் கொண்ட அரிமாவாகப் பெருஞ்சித்திரனார் பாடியுள்ளார்.

    “தமிழரசின் அவைத்தலைவர்
    செய்தித்தாள் நடத்துகின்றார்;
    ‘தினத்தந்தி’ ‘ராணி’ என்றே!
    உமிழ்கின்ற கொச்சைநடை;
    உடை களையும் புகைப் படங்கள்;
    ஊர்கெடுக்கும் உரைகள்; காட்சி!
    தமிழ் நாட்டின் இளைஞர்கை
    மிளிர் தலெல்லாம் ‘பேசும்படம்’
    ‘குமுதங்’கள் இழிந்த நூல்கள்! (1967, கனிச்சாறு, தொகுதி 1,பக்கம் 52)

    எனவும்,

    “அவாள் இவாள் என்னும் ஆனந்த விகடன்
    கவர்ச்சி ஓவியக் கழிசடைக் குமுதம்”  (கனிச்சாறு, முதல்தொகுதி, பக்கம் 46)

    எனவும் தமிழ்ப் பண்பாட்டைக் குலைக்கும் ஏடுகளைப் பெருஞ்சித்திரனார் கண்டித்து எழுதியுள்ளார். இவர் எழுதுவது போன்றே இவ்வேடுகளின் இதழ்ப்பணிகள் இருந்ததை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு ஏடுகள் வகைதொகையின்றித் தொடக்கத்தில் சமற்கிருதச் சொற்களைக் கலந்து எழுதுவதையும், தமிழ் மக்களின் அறிவை மழுங்கடிக்கும் செய்திகளைப் பரப்பியதையும், தமிழர் தலைவர்களின் செயல்பாடுகளை வெளியிடாமல் இருட்டடிப்புச் செய்தமையையும் இவண் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும் இந்த ஏடுகள் அட்டைப்படங்களை வெளியிட்டு வருகின்றமை கவர்ச்சியைத் தந்து வணிகம் செய்யும் இழிசெயல் தொடர்வதை நாகரிகக் குமுகம் தம் ஆதரவு நல்கலைத் தவிர்த்தல் வேண்டும் என்கின்றார்.

    ‘தமிழ் வாழ்க தமிழ் வாழ்க’ என்று வெற்றுரை முழங்குவதால் தமிழ் வாழாது என்று கண்டு உணர்ந்து, இன்றைய அரசியல், பொதுமக்கள் நிலையினைத் தமிழ் வாழ வேண்டுமா? என்ற தலைப்பில் பெருஞ்சித்திரனார் பதிவு செய்துள்ளார்.

    “பட்டிமன்றம் வைப்பதிலும் தமிழ்வா ழாது;
    பாட்டரங்கம் கேட்பதிலும் தமிழ்வா ழாது;
    எட்டிநின்றே இலக்கியத்தில் இரண்டோர் பாட்டை
    எடுத்துரைத்துச் சுவைபடவே முழக்கி னாலும்
    தட்டி, சுவர், தொடர்வண்டி, உந்துவண்டி
    தம்மிலெல்லாம் “தமிழ் தமிழ்” – என்றெழுதி வைத்தே
    முட்டி நின்று தலையுடைத்து முழங்கி னாலும்
    மூடர்களே, தமிழ்வாழப் போவ தில்லை!

    என்று கூறி தமிழறிஞர்களைப் பாதுகாப்பதன் வழியாகவும், இழந்த பெருமைகளை மீட்பதன் வழியாகவும் தமிழ் வளர்க்க முடியும் என்கின்றார் (1970, கனிச்சாறு,1: 55).

    பெருஞ்சித்திரனார் பாடல்களில் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய தாய்மொழி வழிக்கல்வி குறித்த செய்திகள், தமிழ் வழிபாடு (கனிச்சாறு 1: 83), தமிழக அரசு செய்யவேண்டிய தமிழ்ப்பணிகள், பொதுமக்கள் செய்ய வேண்டிய தமிழ்ப்பணிகள், மாணவர்கள் ஆசிரியர்கள் செய்யவேண்டிய தமிழ்ப்பணிகள் யாவும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கண்ணெதிரே தமிழுக்கு நேர்ந்துவரும் அழிவுகளைக் கண்டு நேர்க்கூற்றாகவும், தாயின் கூற்றாகவும், பிறர்கூற்றாகவும் பாடல்களைத் தந்துள்ளார்.

    “கனித்தமிழ் நிலத்தில்
    கண்ணெனும் தமிழில்
    கற்பதுதானே சரி!
    தனித்தமிழ் மொழியைத்
    தாழ்த்திய பகையைத்
    தணலிட்டே, உடன்எரி !” (கனிச்சாறு, தொகுதி 1, பக்கம்,58)

    என்று பாடியுள்ளமை இதற்குக் காட்டாகும்.

    சுனிதிகுமார் சட்டர்சி என்னும் வடநாட்டு அறிஞர் சமற்கிருத உதவியின்றித் தமிழ் இனிது இயங்காது என்றும், சமற்கிருதத்தின் தயவில் தமிழ் வளர்ந்தது என்றும் கூறியமையைக் கண்டிக்கும் பெருஞ்சித்திரனார், அறிஞர் தொ.பொ.மீ. உள்ளிட்டோர் இக்கருத்துக்கு உடன்பட்டு இருந்ததையும் கண்டிக்கத் தயங்கவில்லை. (கனிச்சாறு, தொகுதி 1: 60)

    ஆங்கில இதழ் நடத்துவோர் அதில் பிழையின்றி நடத்த வேண்டும் என்று கூறிக்கொண்டு, தமிழில் இதழ் நடத்தும்பொழுது அதில் பிழை மலிய எழுதுவதைப் பெருஞ்சித்திரனார் கண்டித்துள்ளார் (கனிச்சாறு 1:62).

    தமிழர்கள் கட்சியிலும், சாதியிலும் தம்மை இணைத்துக்கொள்வதை விடுத்து மொழியடையாளம் கொண்டு “தமிழர்” என்று கூற வேண்டுமெனப் பல பாடல்களில் எழுதியுள்ளார் (கனிச்சாறு 1: 62). தமிழ் இளைஞர்களும் பெண்களும் ஒருவரையொருவர் திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனவும் கூறுகின்றார். தமிழ்ப் பற்றில்லாதவர் எழுதும் நூல்களை ஒதுக்கும்படி வேண்டுகின்றார். தமிழ் நன்கு பயன்படுத்தாத திரைப்படங்கள், வானொலிகளைத் தவிர்க்க வேண்டும் என்கின்றார். தமிழர்களையும் தமிழர் பெருமைகளையும் இழிவுசெய்யும் வரலாற்று நூல்களைத் தவிடுபொடியாக்கி நீக்க வேண்டும் என்கின்றார். பணந்திரட்டும் நோக்கில் நடத்தப்படும் ஏடுகளின் இழிதொழிலை எடுத்துப் பாடியுள்ளார் (கனிச்சாறு1:74). காமச்செய்திகளைக் கவினார்ந்த சொற்களால் வெளிப்படுத்தும் கயவர்களை இனங்கண்டு ஒதுக்க வேண்டும் என்கின்றார் (கனிச்சாறு 1: 71).

    தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் என்னும்பெயரில் தமிழ் அழிப்பு முயற்சி இருபதாம் நூற்றாண்டில் பலரால்  முன்னெடுக்கப்பட்டு அவ்வப்பொழுது அறிஞர் பெருமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சியைக் கடிந்து எழுதும் பெருஞ்சித்திரனார் நாட்டில் சாதி, மதம் காரணமாகவும், இன்னும் பல இழிவுகள் காரணமாகவும் மக்கள் பல்வேறு இன்னல்களை  அடைந்து வருகின்றனர். அந்த நிலைகளை மாற்றாமல் எழுத்துச் சீர்திருத்தம் என்ற மாற்றம் வேண்டுகின்றனரே என்று கடிந்து கூறுவதைத்,

    “தொத்துபிணி யெனுஞ்சாதி இனுந்தொலைய வில்லை;
    தொல்லைமதக் கேடுகளும் வளர்ந்துவரும் நாட்டில்!
    செத்துசெத்துப் பிழைக்கின்றார் ஏழையரிம் மண்ணில்;
    சிறுகுடிலும் வாய்க்காமல் தெருக்களில்வாழ் கின்றார்.
    ஒத்துவராக் கொள்கையினால் உழைப்பாளர் கூட்டம்
    ஓயாத தொல்லைகளால் நலிகின்றார்! இன்னும்
    எத்தனையோ சீர்திருத்தம் இங்கிருக்கப் பண்டை
    எழுத்துக்களைத் திருத்தவந்தார், எளிமையது வென்றே! (கனிச்சாறு 1:79)

    என்று பாடியுள்ளார்.

    இன்று தமிழ்கற்றவர்களின் நிலையை நினைத்துப் பெருஞ்சித்திரனார் கவலை தோய்ந்து எழுதியுள்ளார். இலக்கண இலக்கியத் தேர்ச்சி இல்லை எனவும், புலமையில்லை எனவும், கொள்கைத் தோய்வு இல்லை எனவும் நேர்மை, ஒழுங்கு, மானம் முதலிய பண்புகள் இல்லை எனவும் கூறி, பெரியோரைச் சேர்தல், கிளையினைப் புரக்கும் இயல்பு யாவும் அற்றவர்களாக உள்ளனர் எனக் கூறி அற்றைநாள் புலவரைப் போல் ஒருவரும் இல்லை என்று குறிப்பிட்டுவிட்டு,

    “மண்டுபே ரறிவால் மல்கு
    மறைமலை யடிக ளைப்போல்
    பண்டித மணிபோல், சோம
    சுந்தரப் பாவ லர்போல்
    விண்டுசெந் தமிழ்வ ளர்த்த
    விறல்மிகு திறமை மிக்கோர்
    உண்டெனில் அன்றோ நந்தம்
    ஒண்டமிழ் வளரும் கண்டீர்! (கனிச்சாறு 1:81)

    என்று நாட்டில் பெரும்புலமை வாய்த்த அறிஞர்கள் இருத்தல் வேண்டும் என்று தம் விருப்பத்தைப் பதிந்துள்ளார்.

    நிறைவுரை

    தமிழர்களின் உயர்வுக்குத் தமிழ்மொழியே அடிப்படையானது என்று பெருஞ்சித்திரனாரின் பாடல்கள் குறிப்பிடுகின்றன. மேலும் அம்மொழியைக் காப்பதன் வழியாகவும், அம்மொழியினர் ஒன்றுபடுவதன் வழியாகவும் தமிழ்க் குமுகம் மேம்படும் என்ற கருத்தினையும் முன்வைத்துள்ளன. பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருந்த தமிழ்க் குமுகம் பலநிலைகளில் தாழ்வுற்றிருப்பதைப் பெருஞ்சித்திரனார் பாடல்கள் எடுத்துரைத்துத் தமிழர்களும் தமிழ்மொழியும் மேம்பாடு உறுவதற்கான வழிமுறைகளையும்  தீர்வுகளையும் சொல்லியுள்ளன. இருபதாம் நூற்றாண்டில் நிலவிய பிறமொழி வல்லாண்மை எதிர்ப்பு, தனித்தமிழ்க் காப்பு, சாதியெதிர்ப்பு, பெண்ணுரிமை, அரசியல் உள்ளிட்ட குமுகச் சிக்கலை நடுவணாகக் கொண்டு பல பாடல்களைத் தந்த பெரும்பாவலராகப் பெருஞ்சித்திரனார் விளங்கியுள்ளார்.

    குறிப்பு: என் கட்டுரையை எடுத்தாள விரும்புவோர் இசைவுபெறுக. நூல் எழுதுவோர், வெளியிடுவோர் எடுத்த இடம் சுட்டுக.

    நன்றி: தமிழ்த்துறை, சமால் முகமது கல்லூரி, திருச்சிராப்பள்ளி

    Share
  • “வெட்டிக்காடு” சுயுபுனைவின் வெளிப்பாடு

    -முனைவர் மு.இளங்கோவன்

    இலக்கிய வடிவமும் பாடுபொருளும் படைப்போரும் ஒவ்வொரு காலத்திலும் வேறுபட்டு வந்துள்ளமையை இலக்கிய வரலாற்றின் தொடர்ச்சியைக் கவனிக்கும்பொழுது அறியமுடிகின்றது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகம் முழுவதும் இலக்கியப்போக்குகளில் புதுப்புது மாற்றங்களைக் காணமுடிகின்றது. அதில் ஒன்று சுயபுனைவு (Auto Fiction) என்னும் வெளியீட்டு முறை. தன் இளமைக்கால வாழ்க்கையைப் புனைவுகளை இணைத்து வெளிப்படுத்தும்பொழுது அரிய படைப்பாக இலக்கியம் உருவாகிறது.

    raviதம் இளமைக்கால வாழ்க்கையைப் படைப்பாக்குவதில் மேற்குலகப் படைப்பாளிகள் முன்னின்றதைத் திறனாய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர். 1977இல் சுயபுனைவு என்னும் சொல்லை வழங்கியவர் செர்ஜ் தூப்ரோவ்ஸ்கி (Serge Doubrovsky). குறிப்பாகப் பிரெஞ்சுத் தேசத்தில் வாழ்ந்த படைப்பாளிகள் மிகச்சிறந்த புனைவு இலக்கியங்களைத் தந்துள்ளனர். ஹினெர் சலீமின் ‘அப்பாவின் துப்பாக்கி’ என்னும் புனைவு இலக்கியம் குர்தீஸ்தான் விடுதலைப் போரை மிக அழகிய வடிவில் தந்துள்ளது. சலீம் சுயபுனைவாகத் தம் படைப்பை உருவாக்கினாலும் குர்தீஸ்தானின் பழைய வரலாறு, பண்பாட்டுச்சிறப்பு, வாழ்க்கை முறை என அனைத்தையும் நுட்பமாகப் பதிவுசெய்திருப்பார்.

    சுயபுனைவு வடிவில் தமிழில் நிறைய படைப்புகள் சிறுகதையாகவும், புதினமாகவும், திரைப்படமாகவும், கவிதைகளாகவும் வந்துள்ளன. கி.ரா.வின் ’பிஞ்சுகள்’ என்ற குறுநாவல் சுயபுனைவுக்கு நல்ல சான்று. பேராசிரியர் த. பழமலய் அவர்களின் ’சனங்களின் கதை’ குறிப்பிடத்தக்க படைப்பு. சேஷாசலத்தின் ’ஆகாசம்பட்டு’, சிற்பியின் ’கிராமத்து நதி’ குறிப்பிடத்தக்க கவிதை இலக்கியங்களாகும். கிராமப்புறத்து நிகழ்வுகள், கதைமாந்தர்கள், சொல்லாட்சிகள் கொண்டு புதிய இலக்கியப் போக்காக இத்தகு நூல்கள் வெளிவந்த பிறகு பல்வேறு படைப்புகள் தமிழில் வெளிவந்தன. குறிப்பாக நடுநாட்டு இளைஞர்கள் தங்கள் படைப்புகளில் தங்கள் வாழ்க்கை, பழக்க வழக்கம், குடும்ப அமைப்பு, ஊர், உறவு, தெய்வம் என அனைத்தையும் உள்ளடக்கிய படைப்புகளை வழங்கினர். தங்கர்பச்சானின் ’ஒன்பதுரூபாய் நோட்டு’, ’வெள்ளைமாடு’, ’கொடிமுந்திரி’ உள்ளிட்ட படைப்புகளைச் சொல்லலாம். கி. தனவேல் இ.ஆ.ப. அவர்களின் ’செம்புலச் சுவடுகள்’ நூலில் புதுக்கூரைப்பேட்டை (இன்றைய நெய்வேலியின் பகுதி) மக்களின் வாழ்க்கைச் சுவடுகள் பதிவாகியுள்ளன.

    vettikkatu-inayam’வெட்டிக்காடு’ என்னும் தம் ஊர்ப்பெயரில் பொறியாளர் இரவிச்சந்திரன் எழுதியுள்ள நூல் சுயபுனைவு வடிவில் வந்துள்ள சிறந்த நூலாக புலப்படுகின்றது. பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பலர் நல்ல மதிப்பெண் எடுத்து மாநில அளவில் முதன்மை பெற்றுப் பாராட்டுப் பெறுவதை ஆண்டுதோறும் காண்கிறோம். இப்படித் திறன் படைத்த மாணவ மாணவியர் பிற்பாடு என்ன ஆனார்கள் என்பதை அவர்களே சொன்னால்தான் உண்டு. இந்நூல் பள்ளியில் பத்தாம் வகுப்பில் மாநில முதன்மைபெற்ற கிராமத்து மாணவரான இரவிச்சந்திரன் கல்வி தனக்கு ஏற்றம் தந்ததை விளக்கும் நூல்.

    இரவிச்சந்திரன் இப்போது உலகளாவிய அளவில் முன்னோடித் தொலைத்தொடர்பு கட்டமைப்புத் திட்டங்களில் (Telecommunications Network) மின்னணுப் பொறியாளராக பணியாற்றுகிறார். மிகச் சிறந்த எழுத்தாளராகவும் மலர்ந்துள்ள இவர் அமெரிக்கக் குடியுரிமை பெற்று, பணியின் காரணமாகச் சிங்கப்பூரில் வசித்துவருகிறார். ஒவ்வொரு நாளும் அலுவல் காரணமாகக் கண்டம்விட்டுக் கண்டம் பறக்கிறார். வானுலக வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும் தாம் பிறந்த வெட்டிக்காடு என்னும் சிற்றூரின் நினைவு இவரைப் பேயைப் போல் பிடித்தாட்டியதால் தம் அனுபவங்களை 2003 முதல் எழுதத் தொடங்கினார்.

    இரவி 17 வயது வரை தஞ்சை மாவட்டம் மன்னார்குடிக்கு அருகில் உள்ள வெட்டிக்காடு ஊரில் வாழ்ந்து, சராசரி உழவர் குடும்பத்தின் அனைத்து வகையான மேடுபள்ளங்களையும் கடந்து, கிண்டி பொறியியல் கல்லூரியில் மின்னணுப் பொறியியல் படித்து, தெற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மைப் பட்டம் (எம்.பி.ஏ) பெற்றவர். பத்தாம் வகுப்பில் மாநில அளவில் தர முதன்மை பெற்று, இந்திய அரசின் உதவித் தொகைபெற்றுப் பொறியியல் கல்வி பெற்றவர்.  இவரின் உள்ளம் கிராமத்து இளைஞனின் உள்ளம். பதினேழு வயதுவரை வாழ்ந்து பெற்ற அனுபவங்கள் ஆழ்மனத்துள் புதைந்து கிடந்து, நேரமும் சூழலும் உந்தித் தள்ள அவை சிறுகதை, கவிதை, எழுத்துரை எனப் படைப்புகளாக வெளிவந்துள்ளன.

    தம் கிராமத்து இளமைக்கால நினைவுகளையும் சில உண்மை நிகழ்வுகளையும் அவ்வப்பொழுது கட்டுரையாக்கிய இவர், இவற்றைத் தொகுத்து வெட்டிக்காடு என்னும் தலைப்பில் நூலாக்கியுள்ளார். வெட்டிக்காடு, காடுவெட்டி என்னும் ஊர்ப்பெயர்கள் பண்டைக்காலத்தில் மக்கள் காடு கரம்புகளை அழித்து ஊராக்கிய வரலாற்றைச் சொல்கின்றன. அந்த வகையில் வயலும் வயல்சார்ந்த பகுதியுமாக விளங்கும் வெட்டிக்காடு என்னும் சிற்றூரில் வாழ்ந்த சோமு ஆலம்பிரியர் என்னும் நெல்வணிகரின் மகனாகப் பிறந்து, படிப்புடன் ஊடுதொழிலாக ஆடுமாடுகளை மேய்ப்பது, ஏரோட்டுவது, பனங்காய் வெட்டுவது, நாவல்பழம் பறிப்பது என்று கிராமத்துக்குரிய அனைத்துப் பொழுதுபோக்குகளையும் பயின்ற ஒரு பட்டிக்காட்டுச் சிறுவனின் இளமைக்கால நிகழ்வுகள்தான் இந்த வெட்டிக்காடு நூலின் உள்ளடக்கமாக விரிந்து நிற்கின்றது.

    வெட்டிக்காடு நூலில் கரைந்த எழுத்தாளர் வேல. இராமமூர்த்தி, முனைவர் ம.இராசேந்திரன், நீதியரசர் நாகமுத்து ஆகியோரின் அணிந்துரைகள் நூலின் சிறப்புகளை இனங்காட்டியுள்ளன. இரவிச்சந்திரனின் இன்றைய வளர்ச்சி நிலையையும், கடந்துவந்த பாதைகளையும் வியப்புடன் பார்த்து மகிழும் அணிந்துரை அறிஞர்கள் தங்கள் இளமைக்கால நிகழ்வுகளையும் கிராமப்புறங்கள் நாகரிக வளர்ச்சியால் அடையாளங்களை இழந்து வருவதையும் மறவாமல் பதிவுசெய்துள்ளனர்.

    சமூக, பொருளாதார மேல்சாதிக்காரர்களால் வரலாறு எழுதப்படும் சூழலில் அடித்தட்டு மக்களின் வரலாறு (Subaltern History) எழுதப்பட்டு வருவதை வரவேற்கும் சுந்தர்ராஜ் மாணிக்கம் போன்றவர்களை நினைக்கும்பொழுது வெட்டிக்காடு நூலின் முக்கியத்துவம் விளங்கும்.

    பன்னிரண்டு தலைப்புகளில் அமையும் வெட்டிக்காடு நூல் உழைக்கும் மக்களின் வாழ்க்கை வரலாற்றைச் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளது.

    வெட்டிக்காடு என்னும் முதல் தலைப்பில் ஊர் அமைவிடம், உழவுத்தொழில் செய்யும் மக்களின் நிலை, ஊரின் காலைக்காட்சி உள்ளிட்ட, தாம் பதினேழு ஆண்டுகள் வாழ்ந்த ஊரின் சிறப்புகளை இரவி பதிவுசெய்துள்ளார். உழுதல், விதைத்தல், பறித்தல், நடுதல், அறுத்தல் என்று ஆறுமாதம் ஊர் அமர்க்களப்படும். இங்கு நடவுப்பாடல் வழியாகவும், தெருக்கூத்துகள் வழியாகவும் இசைத்தமிழ் வளர்ந்ததை இரவிச்சந்திரன் குறிப்பிடுகின்றார். மாடுமேய்த்தலும், ஆடுமேய்த்தலும் கிராமங்களின் தேசியத்தொழிலாகும். கபடி விளையாடுதல், ஓரியடித்தல், கிளிகோடு பாய்தல், பந்தடித்தல், பட்டம் விடுதல் போன்ற கிராமத்து விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன.

    வெட்டிக்காட்டில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி பெருந்தலைவர் காமராசரின் கல்விக்கொடையால் கிடைத்தது. இரண்டு ஆசிரியர்களுடன் எழுபத்தைந்து மாணவர்களைக் கொண்டு பீடுநடைபோட்ட பள்ளி அது. இரவிச்சந்திரன் நான்காம் வயதில் அடம்பிடித்துப் பள்ளிக்குச் சென்றது முதல் சுப்பிரமணியன் ஆசிரியரிடம் அகரம் பயின்றது வரையிலான செய்திகளைப் படிக்கும்பொழுது கிராமத்து மனிதர்கள் அனைவரும் தங்களின் இளமை வாழ்க்கைக்குக் கட்டாயம் திரும்புவார்கள். ஒன்றாம் வகுப்பில் (1973) சேர்ந்தது தொடங்கி தம் வாழ்க்கைக் குறிப்புகளை இந்நூலில் பதிவு செய்துள்ளார் இரவி. வேப்பங்குச்சியில் பல்துலக்கியது, கிராமத்து ஏரிகளில் குளித்தமை பற்றி விளக்கும் இரவிச்சந்திரன் பேஸ்ட், பிரஷ், சோப் நாங்கள் பார்க்காதது என்கின்றார். பழைய சோறும் தயிரும் உணவாக அமைந்த கிராமத்து வாழ்க்கையில் இட்டிலி, தோசை போன்ற உணவுகள் பொங்கல் தீபாவளியில்தான் கிடைக்கும் என்கின்றார். நம் உணவு, பழக்க வழக்கம், பண்பாட்டு மாற்றங்கள் எவ்வாறு மாற்றங்களைச் சந்தித்துள்ளன என்பதை எதிர்காலத் தலைமுறைகள் அறிந்துகொள்வதற்கு இந்த நூல் ஒரு சமூக ஆவணம்.

    அக்கா திருமணத்தன்றும் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்ததைப் பாராட்டிய சுப்பிரமணியன் சாரின் பேருள்ளம் இந்த நூலில் பதிவாகியுள்ளது. பள்ளிக்கு நாள்தோறும் செல்லும் பழக்கத்தை நினைவூட்டும் இரவி, பின்னாளில் இரண்டு முறை விடுப்பெடுக்க நேர்ந்தமைக்கான காரணத்தையும் கூறத் தயங்கவில்லை, பன்னிரண்டு ஆண்டு பள்ளி வாழ்க்கையில் மஞ்சள் காமாலை நோயும், கடுங்காய்ச்சலும் விடுப்பெடுக்க வைத்ததைக் குறிப்பிடுகின்றார் (பக்கம் 42). எட்டுக் கிலோ மீட்டர் தொலைவிலிருந்த மன்னார்குடிப் பள்ளிக்குப் பேருந்தில் செல்லக் காசு இல்லாதபொழுது, நடந்தே சென்றுள்ளதையும் காலில் செருப்பில்லாமல் நடந்துபோனதால் தார் காலில் படிந்து சுட்ட நிலையையும் படிக்கும்பொழுது இரவியின் வறுமை வாழ்க்கை கண்ணீர்வரச் செய்கின்றது.

    அரசுப்பள்ளிகள் ஆதரிப்பார் இன்றிக் கிடக்கும்பொழுது, இன்றைய கான்வென்டு கல்விக்கூடங்கள் வேன்களிலும் ஆட்டோக்களிலும் கிராமத்துப் பிள்ளைகளைச் சீருடைகளில் அள்ளிக்கொண்டு போவதைக் காணும்பொழுது தமிழகக் கல்வி வரலாறு இருவேறு துருவங்களில் பயணம் செய்வதை உணரலாம். ‘எருமை மாடு மேய்க்கிறவனுக்கும் மாட்டுக்கறி திங்கிறவனுக்கும் படிப்பு வராது” என்று சுப்பிரமணியன் ஆசிரியர் சொன்னதை நினைத்த இரவி மாடுமேய்க்க மறுத்த நிகழ்வும் பதிவாகியுள்ளது. எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் இளமை வாழ்க்கையைத் திறந்து காட்டியுள்ள இரவியின் எழுத்துகள் தமிழ்க் கல்வி வரலாற்றை அறிய விரும்புவர்களுக்குப் பேருதவி புரிவன.

    கிண்டி பொறியியல் கல்லூரியில் சேரும் தம் பதினேழாம் வயதுவரை மாடுமேய்த்த வரலாற்றை நினைவுகூர்ந்துள்ளார். படிப்பறிவு இல்லாத அம்மாவுக்கு மாடுமேய்ப்பதைச் செய்யாத மகன்மேல் எப்பொழுதும் கோபம்தான். எழுதிய நோட்டுகளைக் கிழித்தமை, நான்காம் வகுப்பில்தான் ஏபிசிடி படிக்கத் தொடங்கியது, ஐந்தாம் வகுப்பில் ஆங்கிலத்தில் பெயர் எழுதியது என்று பூர்வாசிரம வரலாறு பதிவாகியுள்ளது. ஆங்கிலத்தில் 36 மதிப்பெண் வாங்கியதற்குத் திட்டித் தீர்த்த இந்திரா டீச்சர், “பர்ஸ்ட் ரேங் மாணவன் சீனிவாசன் ஆங்கிலத்தில் 98… நீயெல்லாம் கிராமத்துல மாடு மேய்க்கதான் லாயக்கு” (பக்கம் 52) என்று கூறிய கண்டிப்புச் சொற்களும் அவமானச் சொற்களும்தான் இரவியை உயர்ந்த இடத்திற்குக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளன. அதே இந்திரா டீச்சர் இரவியின் மாநில முதன்மை மதிப்பெண் பார்த்து, வாழ்த்தியிருப்பது நெகிழ்ச்சி! தம் இளமைக்கல்விக்கு வித்திட்ட சுப்பிரமணியன் சார், முத்துக்கிருஷ்ணன் சார் இருவரையும் நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.

    பள்ளியைத் திறப்பது, கூட்டுவது, மணி அடிப்பது, உணவுக்குரிய பொருள்களை எடுத்துத் தருவது, உணவு சமைப்பது, பரிமாறுவது, ஆசிரியர்களுக்குத் தேநீர் வாங்கிவருவது, ஆசிரியர்களின் வயல்வேலைகளின்பொழுது அதற்குரிய குற்றேவல் செய்வது, ஆசிரியர்கள் வராதபொழுது வகுப்புகளை அமைதியாகப் பார்த்துகொள்வது, பள்ளியைப் பூட்டிச் செல்வது வரையிலான கிராமப்புறப் பள்ளிப் பணிகளை மனந்திறந்து எழுதியுள்ளார். இந்த வாழ்க்கையை இன்றைய மாணவர்கள் கேட்பதற்குக்கூட வாய்ப்பில்லை.

    தேர்வில் பார்த்து எழுதுவது தவறு என்பதை அடிப்படைக் கொள்கையாக வைத்திருந்த இரவி தம் கிண்டி பொறியியல் கல்லூரிச் சம்பவங்களை நினைவுப்படுத்தி, அங்கும் தான் பார்த்து எழுதாமல் நேர்மையாக எழுதியதைப் பதிவு செய்கின்றார். தவறு செய்வதற்குரிய வாய்ப்பு வந்தாலும் அங்கும் நேர்மையுடன் நடந்துகொள்ளும் உயர்பண்பே இவருக்கு வாழ்க்கையில் முன்னேற்றங்களைத் தந்தது என்கின்றார். வெட்டிக்காடு தொடக்கப்பள்ளியில் பெற்ற படிப்பு, நேரம் தவறாமை, ஏற்றுக்கொண்ட பொறுப்புகளைத் முழுமனத்துடன் திறம்படச் செய்தல், நேர்மை போன்ற பண்புகளே முன்னேற்றத்திற்குக் காரணம் என்கின்றார்.

    இந்நூலில் இடம்பெற்றுள்ள உன்னால்முடியும் தம்பி என்ற சிறுகதையில் சண்முகம் என்ற பாத்திரத்தின் வழியாக இரவி தம் இளமைக்கால வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளார். வெட்டிக்காட்டுக்கு அருகில் உள்ள மூவாநல்லூர் கிராமத்தில் ஏழாம் வகுப்புப் படித்தபொழுது கடலைச்செடிக்குத் தண்ணீர் இறைத்திருக்கிறார். பெற்றோரோ கல்விக்கு ஆதரவு தரவில்லை. இந்நிலையில் ஆசிரியர் இராஜகோபால் என்பவர் கொடுத்த ஊக்கமும் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. கிராமப்புறத்து மாணவர்கள் கல்வி கற்பதில் உள்ள தடைகளையும் உதவிய ஆசிரியர்களின் செயல்பாடுகளையும் இரவி நினைவுகூர்ந்துள்ளார். வறுமையில் படித்து முன்னேறி, அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனத்தின் பொறியாளராக உயர்வு பெற்றுத் தாம்படித்த பள்ளிக்குச் சிறப்பு விருந்தினராக வந்த நிலையை அழகிய கதையாக்கிக் காட்டியுள்ளார். கவிதை, கதை, உரைநடை என்று பல்வேறு வடிவங்களில் இந்தப் படைப்பை அமைத்துள்ளார்.

    அய்யனார்சாமி என்ற சிறுகதையில் புலவர் சவுந்தரராசன் பகுத்தறிவுக் கொள்கையுடையவர் எனவும், அச்சம் என்பதை அறியாதவர் எனவும் தவறு செய்யும் மாணவர்களைத் தண்டிப்பதில் தயக்கம் காட்டாதவர் எனவும் அறிமுகம் செய்கின்றார். அதே நேரத்தில் ஏழை மாணவர்களுக்குப் புத்தகம், குறிப்புச்சுவடி வாங்கித் தருவதுடன் தம் மன்னார்குடி வீட்டுக்கு விடுமுறை நாளில் வரச்செய்து உணவுகொடுத்துப் படிப்புச்சொல்லித் தருவார் என்றும் அவரின் பொறுப்பார்ந்த ஆசிரியப்பண்புச் சிறப்பையும் நமக்கு அறிமுகம் செய்துள்ளார். புலவர் ஐயா தம் இடுப்பில் கத்தியை எப்பொழுதும் செருகியிருப்பார் எனவும் ஒருமுறை விடுப்புத் தராத தலைமையாசிரியரின்  மேசைமீது கத்தியை எடுத்துக் குத்தி, மிரட்டியதையும் இக்கதையில் இரவி குறிப்பிட்டுள்ளார். மாணவர்கள் செய்யும் குறும்புகளைக் கவனித்துப் புலவர் கடும் தண்டனை கொடுத்ததால் பல மாணவர்கள் பள்ளிக்கு வராமல் போனதையும் குறிப்பிடுகின்றார். கடைசி பெஞ்சு இராமமூர்த்தி அய்யனார்சாமி போல் அருள் சொன்னதை விளக்கியுள்ள காட்சி இரவியிடம் மிகச்சிறந்த எடுத்துரைப்பு ஆற்றல் உள்ளதை நமக்கு நினைவூட்டுகின்றது.

    ’கொட்டாப்புலிக் காளைகள்’ என்ற தலைப்பில் இரவி எழுதியுள்ள செய்திகள் படிப்பவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டும் நிகழ்வுகளாக விரிந்துள்ளன. அப்பா பட்டுக்கோட்டைச் சந்தையிலிருந்து வாங்கிவந்த கன்றுக்குட்டிகள் வளர்ந்து ஏரோட்டவும், வண்டியில் பூட்டவும் பழக்கிய நிகழ்ச்சிகளைக் கண்முன்கொண்டுவந்து இரவி நிறுத்துகின்றார். அப்பா, அம்மா, வீட்டு வேலையாள் நாகநாதன் மூவர்தான் அந்தக் கொட்டாப்புலிக் காளைகளைப் பிடிக்கமுடியும் என்ற நிலையில் ஊரில் சண்டியராக வலம்வந்த வேணு ஆலம்பிரியரை அந்த மாடுகள் முட்டி வேலியில் தள்ளியதையும் அம்மாவின் குரலுக்குப் பணிந்து அந்த மாடுகள் அம்மாவை நெருங்கி வந்ததையும் அறியும்பொழுது நமக்கு ஆச்சரியத்தை இந்தக் கதை ஏற்படுத்துகின்றது.

    வீட்டில் வளர்க்கப்படும் மாடுகள் அறிவுள்ளவையாகவும், மானமுள்ளவையாகவும், வீரமுள்ளவையாகவும் இருப்பதைக் கொட்டாபுலிக் காளைகள் கதை உணர்த்துகின்றன. ஒவ்வொரு நாளும் தம்மைக் கவனிக்கும் அம்மா, அப்பா, நாகநாதனைத் தவிர மற்றவர்களைத் தம்மை நெருங்கவிடாமல் செய்யும் கொட்டாபுலிக் காளைகளைப் போல் வரலாறு படைத்த பல காளை மாடுகள் தமிழகத்தின் கிராமங்களை ஆட்சிசெய்துள்ளதை ஒவ்வொரு உழவனும் தங்கள் வாழ்க்கையை எழுதும் பொழுது இதுவரை தமிழுக்குக் கிடைக்காத கதைக்கருக்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். தம் குடும்பத்தினருடன் வண்டிமாடுகளை இணைத்துப் புகைப்படம் எடுப்பதையும், மாடுகளின் அருகில் நின்று புகைப்படும் எடுப்பது, வண்டியோட்டுவதுபோல் புகைப்படம் எடுப்பது தமிழகத்து உழவர்களின் விருப்பமாகும்.

    ’கொள்ளிவாய்ப் பிசாசுகள்’ என்ற கதையில் கிராமங்களில் காலம் காலமாக நம்பப்படும் கொள்ளிவாய்ப் பிசாசுக் கதையைச் சொல்லி தம் அண்ணன் இந்திரஜித் மூலமாகப் பயம் தெளிந்த தம் அனுபவத்தை எழுதியுள்ளார்.

    ’நாவற்பழம்’ சிறுகதையில் பள்ளி நிகழ்வுகள் பேசப்படுகின்றன. மாரியப்ப கண்டியர் வீட்டின் நாவல்பழம் திருடித் தின்னும் நிகழ்வு தத்ரூபமாக காட்டப்பட்டுள்ளது. இரவி, உப்பிலி, இராதா மூவரும் நாவல் மரத்தில் ஏறி நாவல் பழம் பறிப்பதும் இந்தக் கூட்டுக்கொள்ளையில் பங்கேற்காத இளஞ்செழியன் இரவியின் அப்பாவிடம் பற்றவைப்பதும், அப்பாவின் தண்டனையும் இந்தச் சிறுகதையைச் சுவையுடையதாக்குகின்றது. அன்று அப்பாவிடம் வாங்கிய அடிதான் முதலும் முடிவும் என்று கதையை இரவி முடித்துள்ளார்.

    ’பொங்கல்’ என்ற தலைப்பில் இரவிச்சந்திரன் எழுதியுள்ள எழுத்துரையில் கிராமங்கள் எவ்வாறு தம் பாரம்பரிய இயல்புகளை இழந்து, தனித்தன்மை கெட்டு மாற்றங்களைச் சந்தித்து வருகின்றன என்பதைப் பதிவு செய்துள்ளார். பொங்கல் திருவிழா உறவினர்கள் ஒன்றுகூடி நடத்தும் பெருவிழாவாக நடைபெற்று மக்களுக்கு மகிழ்ச்சியைத் தந்த நிலைமாறிக் கிராமங்களில் பிரிவுகள் உண்டாகி, மனக் கசப்புகளால் பிரிந்து கிடக்கும் நிலையை எடுத்துரைத்துள்ளார். வழிபாட்டு முறைகள், உறவினரின் ஒன்றுகூடல், சிற்றூர்ப்புறப் பழக்க வழக்கங்கள், கிராமப்புற விளையாட்டுகள், சிற்றூர் வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், சடங்குகள், வேளாண்மை, பொழுதுபோக்கு உள்ளிட்ட நிகழ்வுகளை அடுத்த தலைமுறைக்கு நினைவூட்டும் எழுத்துரைகளாக இரவியின் எழுத்துரைகள் உள்ளன. ஒற்றுமையுடன் வாழ்ந்த கிராமத்து மக்கள் சண்டை சச்சரவுகளால் போலிஸ், கோர்ட்டுக்குச் செல்லும் நிலையில் உள்ளதைக் கவலையுடன் பதிவுசெய்துள்ள இரவியின் ஆதங்கம் ஒவ்வொரு எழுத்திலும் பதிவாகியுள்ளது.

    களவாணி திரைப்படம், குற்றப்பரம்பரை புதினம் குறித்த மதிப்பீடுகளையும் எழுதியுள்ளார்.

    அப்பா என்னும் தலைப்பில் எழுபது வயதுவரை வாழ்ந்து, இயற்கை எய்திய தம் தந்தையின் குணநலன்களை இரவி வரலாறாக்கியுள்ளார். ஒவ்வொரு மகனும் தந்தையின் வரலாற்றை எழுதும்பொழுது தமிழகப் பண்பாட்டு வரலாறு முழுமையடையும். அன்பின் வடிவமாகவும், பாசத்தின் உருவமாகவும் விளங்கிய தம் தந்தை சோமு ஆலம்பிரியர் குழந்தைகள் மீது அளவுகடந்த பாசம் கொண்டவர் என்பதைப் பல சான்றுகள் காட்டி விளக்குகின்றார். உழைப்பால் உயர்ந்த தன் தந்தை வெட்டிக்காட்டு மக்களும் சுற்றுவட்டார மக்களும் போற்றும்படியாக வாழ்ந்தவர் என்பதை ஒவ்வொரு கருத்துகளாக அடுக்கிக்காட்டி ஒரு சித்திரமாக நமக்கு வரைந்து காட்டுகின்றார். அப்பா பிள்ளைகளைப் படிக்க வைத்த பாங்கு, கூத்துக்கலையில் அவருக்கு இருந்த ஈடுபாட்டைக் காட்டி, சிலநாளில் குடிப்பது உண்டு என்று பதிவு செய்து நடுநிலையாளராக இரவி நமக்குக் காட்சி தருகின்றார்.

    சோமு ஆலம்பிரியர் நேர்மையாளர்; வணிகத்தை உயர்வாகப் போற்றியவர்; தொழில் தர்மம் கடைப்பிடித்தவர்; நம்பிக்கைக்குப் பெயர் பெற்றவர்; தம் பிள்ளைகளின் படிப்பு, பணிக்காக வீட்டிலிருந்த நகைகளை விற்றாலும் உழைத்து வாங்கிய நிலங்களை விற்க மறுத்தவர். தந்தை 69 ஆம் வயதில் இயற்கை எய்திய நேரத்தில் இரவியின் செமஸ்டர் தேர்வு தொடங்கியதால் அப்பாவின் இறப்புச் செய்தியைப் பத்துநாள் கழித்துதான் தெரிந்துகொண்டார்.” அமெரிக்கக் குடியுரிமை பெற்று இன்று நல்ல வேலையில் ஓரளவு வசதியான வாழ்க்கை. ஆனால் பார்க்கத்தான் அப்பா இல்லை!”(பக்கம் 124) என்று முடித்துள்ளமை நம் கண்ணில் கண்ணீர் வரச்செய்கின்றது.

    ’தேடுகிறேன்’ என்ற தலைப்பில் பிறந்து வாழ்ந்த வெட்டிக்காடு கிராமத்தில் இருந்த மக்களின் வாழ்க்கைமுறை, பண்பாடு, தொழில் யாவும் மாற்றமடைந்து புதிய தலைமுறை உருவாகிவிட்டதை வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். உழவுமாடுகள், நடவு, அறுவடை, கதிரடிக்கும் காட்சிகள், ஏற்றம், முச்சந்தி உரையாடல், கோயில் திருவிழாக்கள், கூத்துகள், சிற்றூர் விளையாட்டுகள், உடையலங்காரம் யாவும் மறைந்து வெட்டிக்காடு புதிய வடிவம் பெற்ற்றுள்ளதைக் கண்டு, தாம் ஓடி விளையாண்ட கிராமம் எங்கே என்று கேட்கும் ஒரு கேள்வியில் நூறாண்டு  மாற்றம் அடங்கியுள்ளதை உணரலாம்.

    நூலில் உள்ள எழுத்துப் பிழைகள் சரிசெய்யப்பட வேண்டும்.

    சுய புனைவாகத் தெரியும் வெட்டிக்காடு நூல், தன் வரலாறாகவும், குடும்ப வரலாறாகவும், ஊர் வரலாறாகவும் தமிழர் பண்பாட்டு வரலாறாகவும் உயர்ந்து நிற்கின்றது.

    குறிப்பு: வெட்டிக்காடு நூல் 18.12.2016 மாலை தஞ்சையில் வெளியிடப்பட்ட து.

    ***

    நூல்:  வெட்டிக்காடு
    ஆசிரியர்: இரவிச்சந்திரன்
    பக்கம்: 128
    விலை: ரூ. 150 – 00
    கிடைக்குமிடம்:  சோ. இரவிச்சந்திரன், 14 ஏ, புளோரா சாலை,
    # 08-02அளாளியா பார்க், சிங்கப்பூர்  509 731
    மின்னஞ்சல்: vssravi@gmail.com

     

     

    Share
  • சென்னையில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா ஆய்வரங்கம்

    -முனைவர் மு. இளங்கோவன்

     

    tt

    தனித்தமிழ் இயக்கத்திற்கு அறிஞர்களின் பங்களிப்பு என்னும் தலைப்பில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா ஆய்வரங்கம் சென்னை, நீலாங்கரையில் 06.11.2016 (ஞாயிறு) காலை 10 மணிமுதல் மாலை வரை நடைபெறுகின்றது.

    திரு. இ. பி. கனகசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கவும், பாவலர் இரா. தேவதாசு அவர்கள் முன்னிலையுரையாற்றவும் பாவலர் செவ்வியன் அவர்கள் வரவேற்புரையாற்றவும் உள்ளனர்.

    காலை 10 மணிக்கு அமையும் முதல் அமர்வில் மறைமலையடிகளாரின் தனித்தமிழ் இயக்கப் பங்களிப்பு என்னும் தலைப்பில் முனைவர் க. தமிழமல்லன் அவர்களும், நீலாம்பிகையாரின் தனித்தமிழ் இயக்கப் பங்களிப்பு என்னும் தலைப்பில் முனைவர் மறை. திரு. தாயுமானவன் அவர்களும் உரையாற்ற உள்ளனர்.

    பிற்பகல் 3 மணிக்கு அமையும் இரண்டாம் அமர்வில் தேவநேயப் பாவாணரின் தனித்தமிழ் இயக்கப் பங்களிப்பு என்னும் தலைப்பில் முனைவர் மு.இளங்கோவன் அவர்களும் தமிழ் மறவர் பொன்னம்பலனாரின் தனித்தமிழ் இயக்கப் பங்களிப்பு என்னும் தலைப்பில் முனைவர் பொற்கோ அவர்களும் உரையாற்ற உள்ளனர்.

    தமிழ்ஆர்வலர்களை அன்புடன் அழைக்கின்றோம்.

    இடம்: அறிஞர் செவ்வியன் இல்லம், 311, 5 ஆம் தெற்குக் குறுக்குத் தெரு, கபாலீசுவரர் நகர், நீலாங்கரை, சென்னை- 600115

    நிறுத்தம்: நீலாங்கரை காவல் நிலையம் நிறுத்தம் எதிரில்.

    தொடர்புக்கு: 99624 61632 / 97916 29979

    Share
  • புதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் தொடக்க விழா

    மு.இளங்கோவன்

    amu

    இலங்கையில் பிறந்த விபுலாநந்த அடிகளார் யாழ்நூல் என்ற நூலை எழுதி உலக அளவில் அறிமுகம் ஆனவர். இவர் சென்னை இராமகிருஷ்ண மடத்தில் துறவியாக இணைந்து, அந்த மடத்தின் பணிகளை இலங்கையில் கவனித்தவர். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உறவுப் பாலம் அமைத்த இவரின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக்கும் முயற்சியில் மு.இளங்கோவன் ஈடுபட்டுள்ளார். விபுலாநந்த அடிகளாரின் கடிதங்கள், கையெழுத்துச் சுவடிகள், நூல்கள், புகைப்படங்கள், நேர்காணல்கள் ஆகியவற்றின் துணையுடன் இந்த ஆவணப்படம் உருவாக உள்ளது.

    இந்த ஆவணப்படத்தின் தொடக்க விழா புதுச்சேரியில் 06.10.2016 வியாழன் மாலையில் நடைபெற்றது. புதுச்சேரி காமராசர் சாலையில் உள்ள ஜெயராம் ஓட்டலில் நடைபெற்ற ஆவணப்படத்தின் தொடக்க விழாவில் புதுச்சேரி உயர்கல்வித்துறை அமைச்சர் இரா. கமலக்கண்ணன் ஆவணப்படத்தைத் தொடங்கிவைத்தார். சட்டப்பேரவையின் துணைத்தலைவர் வே.பொ. சிவக்கொழுந்து. திருக்குறள் தமிழ் – ஆங்கிலப் பதிப்பினையும், இணையம் கற்போம் என்ற நூலினையும் வெளியிட்டார். தில்லித் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் கி.வா.க. பெருமாள் நூலின் முதல்படிகளைப் பெற்றுக்கொண்டார்.

    amu1

    கனடாவைச் சேர்ந்த சிவம் வேலுப்பிள்ளை சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

    ஆய்வறிஞர் கு. சிவமணி, புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் க. இளமதி சானகிராமன், சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் ஒப்பிலா. மதிவாணன்,  அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் அரங்க பாரி, வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியின் பேராசிரியர் ப. சிவராஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் வி.முத்து தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் புலவர் இ. திருநாவலன், புதுவை மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முனைவர் அரங்க.மு. முருகையன் வரவேற்புரையாற்றவும், மு.இளங்கோவன் ஏற்புரையாற்றவும், பேராசிரியர் உரு. அசோகன் நன்றியுரையாற்றினர். நிகழ்ச்சியைப் பேராசிரியர் மா. சுஜாதா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி, தமிழகத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் மிகுதியாகக் கலந்துகொண்டனர்.

    Share