தெருக்கூத்துக் கலைஞர் பட்டுக் கவுண்டர்!

0

-முனைவர் மு.இளங்கோவன்

நான் பணிபுரியும் அலுவலகத்திற்கு இரண்டு நண்பர்கள் அண்மையில் வந்தனர். ஒருவர் முன்பே அறிமுகம் ஆனவர். அவரின் பெயர் திரு. குணசேகரன் என்பதாகும். பொ.தி.ப. சாந்தசீல உடையார் அலுவலகத்தில் கணக்கராகப் பணிபுரிந்தவர். உடன் வந்தவர் அவரின் தம்பி திரு. சரவணன் ஆவார். வந்தவர்கள் பலபொருள்குறித்து என்னுடன் உரையாடிக்கொண்டிருந்தனர். பின்னர் எங்களின் பேச்சானது தெருக்கூத்து நோக்கி நகர்ந்தது.

புதுச்சேரியில் மிகுதியான தெருக்கூத்துக் கலைஞர்கள் இருந்துள்ளமையையும் அவர்களைப் பற்றிய போதிய பதிவுகள் இல்லாமல் உள்ளதையும் அவர்களிடம் தெரிவித்தேன். என்னுடன் உரையாடிய சரவணன் தெருக்கூத்துக் கலைஞர் என்பதையும், கலைமாமணி கோனேரி இராமசாமி அவர்களின் கலைக்குழுவில் உள்ளவர் என்பதையும் அறிந்து மகிழ்ந்தேன்.

சரவணன் அவர்களிடம், தங்களுக்குத் தெரிந்த மூத்த தெருக்கூத்துக் கலைஞர்கள் புதுவையில் உள்ளனரா? என்று வினவினேன். கல்விப் புலத்திலிருந்து தங்கள் கலையை நோக்கி வினவுபவர் உள்ளாரே என நினைத்து, ஆர்வமுடன் உரையாடலை அவரும் தொடர்ந்தார். தங்கள் உறவினர்கள் பலர் கூத்துக்கலைஞர்கள் எனவும், தங்கள் உறவினருள் அகவை முதிர்ந்த கூத்துக்கலைஞர் ஒருவர் இப்பொழுதும் உள்ளார் எனவும் தெரிவித்தார். அன்றுமுதல் அகவை முதிர்ந்த அந்தக் கூத்துக் கலைஞரைச் சந்திப்பதற்குத் திட்டமிட்டேன்.

கூத்துக்கலைஞர் சரவணன் தம் வாழ்க்கையை நடத்துவதற்கு உரிய தொழிலாகத் திருமணக்கூடங்கள், விழா மேடைகள் ஆகியவற்றை ஒப்பனைப்படுத்தும் கலைஞராகவும் கூடுதல் பணிகளைச் செய்வது உண்டு. திருமண நாளில் மண்டபங்களில் மணமேடையை அழகுப்படுத்துவது, அதனைப் பிரித்தெடுத்து மீண்டும் அடுத்த மண்டபத்துக்குக் கொண்டு செல்வது, அங்குப் பணி முடிந்த பிறகு வீட்டுக்குக் கொண்டுவருவது என்று எப்பொழுதும் பணி அழுத்தமாக இருப்பவர். நான் அழைக்கும்பொழுது இதனைக் கூறி, விலகிக்கொள்வார். அவர் அழைக்கும்பொழுது நான் அலுவலகத்தில் உழன்றுகொண்டிருப்பேன்; அல்லது அயலகப் பயணங்களில் இருப்பேன். இருவரும் சந்திக்கும்பொழுது ஒளி ஓவியர் எங்களுடன் இணையமுடியாதபடி சூழல் இருக்கும்.

இன்று(04.03.2017) மாலை ஒளி ஓவியர், கூத்துக்கலைஞர், நான் மூவரும் ஒருபுள்ளியில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டுப் புதுவையின் கடைசி எல்லைப்பகுதியில் இருந்த நாவற்குளம் பகுதியை அடைந்தோம். ஒருகாலத்தில் நாவல் மரங்கள் நிறைந்திருந்த பெரும் தோப்புகளும், பனந்தோப்புகளும், பொன்விளையும் பூமியுமாக இருந்த நாவற்குளம் என்ற செம்மண் நிலம் இன்று, சிமெண்டு மாளிகைகள் எழுப்பப்பெற்று, சமூகத்தில் முதன்மையானவர்கள் வாழும் இடமாக மாறிவிட்டது.

எங்களின் வருகைக்குக் குணசேகரனும் சரவணனும் காத்திருந்தனர். சாலையை ஒட்டிய ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். வீட்டின் முன்பகுதியில் ஒரு அகவை முதிர்ந்த பெரியவர் அமர்ந்திருந்தார். என்னை அழைத்துச் சென்று அந்தப் பெருமகனாரிடம் அறிமுகம் செய்தனர். முன்பு என்னைப் போல் மூவர் சென்று உரையாடித் திரும்பியுள்ளனர். அவர்களின் செயலால் சோர்வுற்று இருந்த பெரியவர் என்னையும் அந்தப் பட்டியலில் இணைத்து, நினைத்ததில் தவறு ஒன்றும் இல்லை. மனச்சோர்வுடன்தான் பேசினார்.

குடும்பத்தில் இருந்தவர்களுக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தனர். அகவை முதிர்ந்த அந்தக் கூத்துக்கலைஞரை உள்ளே அழைத்து, விளக்கொளியில் அமரச் செய்து உரையாடத் தொடங்கினோம். “பேட்டி”காணும் செய்தியாளர்கள் என்ற பெயரில் யாரேனும் வந்திருந்தால் வந்த வேகத்தில் திரும்பியிருப்பார்கள். ஐயாவை எங்களின் வழிக்குக் கொண்டு வருவதற்குப் பெரும் பாடுபட்டோம்.

என் பெயர் பட்டுக் கவுண்டர். அப்பா பெயர் பெரியதம்பி, அம்மா பெயர் காத்தாயி. இப்பொழுது எனக்குத் தொண்ணூற்றெட்டு வயது ஆகிறது என்றார். பிறந்து வளர்ந்தது, படித்தது, வாழ்ந்தது எல்லாம் இந்த ஊரில்தான். தாய் மாமன் சு. இராஜகோபால் அவர்களிடம் தெருக்கூத்துப் பாடல்களையும், நாடகப் பாடல்களையும் கற்றுக்கொண்டேன் என்றார். இந்தத் தகவலைப் பெறுவதற்குள் பெரும் முயற்சி எனக்குத் தேவைப்பட்டது. நான் கத்திக் கதறி விவரங்களை வாங்குவதற்குள் அக்கம் பக்கம் இருந்தவர்கள் கூடினர். அகவை தொண்ணூற்று எட்டு என்றாலும் இன்னும் கண்ணாடியில்லாமல் செய்தித்தாளைப் படிக்கின்றார்.

திரு. பட்டுக் கவுண்டர் அவர்கள் பெருகிய நிலங்களைக் கொண்ட வளமான வாழ்க்கை வாழ்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் தாத்தா அந்நாளைய பிரெஞ்சு அரசுக்குத் துப்பாக்கிக்குப் பயன்படும் பொருள்களைச் செய்து வழங்கியுள்ளார். அதனால் புதுவையின் ஒதுக்குப்புறமாக இருந்த இவர்களின் நிலங்கள் வரை புதுச்சேரியின் எல்லையைப் பிரெஞ்சியர் அமைத்தனர் என்பதை அறியமுடிந்தது. சற்றுத் தொலைவில் ஆங்கிலேயர்களின் முகாம்(கேம்ப்) இருந்துள்ளதையும் உரையாடலில் அறிந்தேன்.

Pattu2பட்டுக் கவுண்டர் தம் வீட்டை ஒட்டிய பகுதியில் அக்காலத்து இளைஞர்களாக இருந்த உறவினர்களை ஒன்றிணைத்துத் தெருக்கூத்தினைக் கற்றுள்ளார். இவர்களுக்கு ஆசிரியராக இருந்து, இராஜகோபால் என்பவர் தெருக்கூத்துக் கலையை அனைவருக்கும் பயிற்றுவித்துள்ளார். பலநாள் பயிற்சி எடுத்து, அரங்கேறிய தெருக்கூத்துக் கலைஞர்கள் கோவில் திருவிழாக்களிலும், கோடைக் காலங்களிலும் அந்தநாளில் தெருக்கூத்து ஆடியுள்ளனர். பக்கத்து ஊர்களிலிருந்து தெருக்கூத்துக்குத் தேவையான இசைக்கருவிகள், ஒப்பனை செய்வதற்குரிய அணிகலன்கள், கட்டைகள் வாடகைக்கு அமர்த்திப் பயன்படுத்தியுள்ளனர். அருகில் உள்ள ஊர்களுக்கும் சென்று தெருக்கூத்து ஆடியுள்ளனர்.

பட்டுக் கவுண்டர் தருமன், கண்ணன், நாரதன், வசிஷ்டர், அபிமன்யு என்று பல்வேறு பாத்திரங்களில் ஆர்வமாக நடித்தவர். இன்றும் மெல்லிய குரலில் இந்தப் பாத்திரங்கள் பாடும் பாடல்களைப் பாடிக்காட்டித் தம் இளமைக்காலத் தெருக்கூத்து அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். பாடல்களைப் பாடும்பொழுது அடிக்கடி களைப்படைந்துவிடுகின்றார். நினைவுக்குச் சில பாடல்களையும் உரையாடல்களையும் ஒளிப்பதிவு செய்துகொண்டோம். இருபத்தைந்து வயதில் தெருக்கூத்து ஆடத் தொடங்கிய பட்டுக் கவுண்டர் 60 வயது வரையும் தெருக்கூத்தின் உச்ச நிலையைத் தொட்ட கலைஞராக விளங்கியுள்ளார். தெருக்கூத்துக் கலைஞர்கள் சிலரிடம் புகுந்துள்ள மது, புலால் உண்ணுதல் என்ற பழக்கங்கள் இல்லாதவராகவும், அறச்சிந்தனை கொண்டவராகவும் விளங்கும் பட்டுக் கவுண்டர் அவர்கள் போற்றி மதிக்கத்தக்க கலைஞர் என்பதில் ஐயமில்லை.

பட்டுக் கவுண்டர் அவர்களின் மகன் பெருமாள்சாமியும் தெருக்கூத்துக் கலைஞர். இப்பொழுது பகலில் தச்சுத்தொழிலும், இரவில் தெருக்கூத்துப் பணியுமாக உள்ளார். பட்டுக் கவுண்டரின் பெயரன் பற்குணன் கணினி வரைகலையில் பயிற்சிபெற்று வருகின்றார். இவரும் இளம் அகவையிலையே தாத்தாவுடன் இணைந்து தெருக்கூத்தினைப் பார்ப்பது, பாரதக் கதை கேட்பது என்று விருப்பத்துடன் இருந்து, தெருக்கூத்தில் கண்ணன் வேடம் அணிந்து, பாட்டிசைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுவருபவர். மூன்று தலைமுறைக் கூத்துக்கலைஞர்களை ஓரிடத்தில் சந்தித்த மன நிறைவு எனக்கு ஏற்பட்டது. மூவரின் பாடலையும் ஒளிப்பதிவு செய்தோம்.

நாவற்குளம் பகுதி வளர்ச்சி அடைவதற்குச் சாலை அமைக்கவும், பள்ளிக்கூடம் கட்டவும், கோயில் கட்டவும் கோடிக்கணக்கான மதிப்புடைய தம் நிலங்களை அன்பளிப்பாக வழங்கிய கொடை நெஞ்சர் பட்டுக் கவுண்டர் என்பதை அறிந்து கைகுவித்து வணங்கித் திரும்பினேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.