-தமிழ்த்தேனீ

 “ஜாதி  இருக்கிறது“
“சிலரை சீண்டினால் நாம் தாக்கப் படுவோம்
 சீலரைச் சீண்டினால் நாம் ஆக்கப் படுவோம்”                    -தமிழ்த்தேனீ

நிகமாந்த  மஹா தேசிகர்,  இராமானுஜர்  ஆகியோர் வைணவத்தையும்   வளர்க்க, பரப்ப  வந்த மகான்கள். ஆதி சங்கரர் சைவத்தைப் பரப்பவந்த மகான். இப்படிப் பல மஹான்கள் வாழ்ந்த  இந்தப் புனிதபூமியில்  இன்னமும்  சத்விஷயங்கள் எவை அசத் விஷயங்கள் எவை என்னும் ஞானத்  தெளிவில்லாமையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சற்றே ஞானத்தை நோக்கி நுகர்வோமா?

“உறையின் அழகில் மயங்காது கத்தியின் கூர்மையை நோக்குவதுபோல் சான்றோரின் சாதியைக் கேட்காது அவர்களின் ஞானத்தைக் கேட்பீராக!!“ என்று கபீர்தாசர் கூறுகிறார்.

நோக்குதல் என்பதோர் உயர்செயல். நோக்கும் நோக்கெலாம் அன்னை பராசக்தி  என்றார் மஹாகவி பாரதியார். வேத வாக்கியம் என்ன சொல்கிறது என்றால், ஒரு சொல்லை ஒரு வசதிக்காக ஒரு வரிசையில் போட்டுப் பொருள் கொள்கிறோம், ஆயின் அனைத்தின் ஆணிவேரும் இறைமையில் கொண்டுபோய் சேர்க்கிறது என்று. விதை இல்லாமல் வேரே இல்லை  என்பது உண்மைதானே.   ஜாதி என்ற அடையாளத்தை ஒருவர் இந்நோக்கில் பார்த்தால் அதுவும் அங்குதான்  இட்டுச் செல்லும்.

ஜாதி ஒரு அடையாளம். அடையாளம் என்பது என்ன? எதனால்  வருகிறது…இப்படியே நுண்ணறிவு கொண்டு ஆராய்ந்துகொண்டே போனால் அது நம்மை அழைத்துச் செல்லும் இடம் பூஜ்ஜியம் அதாவது  பூஜ்ஜியத்துக்குள்ளே இருந்துகொண்டு நம்மை எல்லாம் ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் இறையை நோக்கியே நகர்கிறது.  மாத்வர்கள் பூஜ்ய ஶ்ரீராகவேந்திராய என்கிறார்கள். இதைத்தான் அவரவர்  பாணியில்  ஶ்ரீ நிகமாந்த  மஹாதேசிகரும்  ஸ்ரீராமானுஜரும், ஆதிசங்கரரும் தெளிய உரைத்தனர். யதார்த்தம், வெகு யதார்த்தம், நாரணனும் சிவனும் ஒண்ணு  இந்த ஞானமில்லாதவன்  மண்ணு  என்பார்கள் பெரியோர். அமலன் ஆதிபிரான் என்று நம்மாழ்வார் அருளிச்செய்த  திருவாய்மொழியார் நம்மாழ்வாரைத் தமிழ்செய்த மாறன், சடகோபன் என்றெல்லாம் வர்ணிப்பதில்  மிகவும் சந்தோஷம்.

ஆகவே  சைவத்துக்கும் வைணவத்துக்கும் சாக்தத்துக்கும்  இருக்கும் பேதங்கள் இடையே மனிதர்களால் ஏற்படுத்தப் பட்டவை. இதிலே குழப்பமே இல்லை.  ஸ்மார்த்தர்களும் (சைவர்களும் ), வைணவர்களும் எல்லோருமே.  ஸ்ரீமன் நாராயணனின் அடியார்கள்தாம். சாக்தத்தைக் கடைப்பிடிப்போரும் அப்பனில்லாமல் அம்மைக்கும் மதிப்பில்லை  என்பதை உணர்ந்தவரே.  மனிதர்களின்  அணுக்கூற்றுக்களின் படியே விஞ்ஞான ரீதியாக எடுத்துக்கொண்டாலும், வேதமூலமாக எடுத்துக் கொண்டாலும்  பெண்குழந்தைகள் தாயைவிடச் சற்றே அதிகமாகத் தகப்பனை விரும்புவதும், பிள்ளைக் குழந்தைகள் தகப்பனைவிடச் சற்றே அதிகமாகத் தாயை விரும்புவதும்தான் மிக நுணுக்கமான வேதியல் பூர்வமான வேதபூர்வமான நுணுக்கம்.

ஆகவே சற்றே அதிகமாகத் தாயை அதாவது சக்தியை  விரும்புவோரும் தகப்பனை  வெறுப்பதில்லை, மாறாகத் தாயை, ஆதி சக்தியைச் சற்றே அதிகமாக விரும்புகிறார்கள் அவ்வளவே.

ஆதிசங்கரரே காலடி என்னும் க்ஷேத்திரத்தில் நாராயணனை  நரசிம்மாவதாரமாய்க் கண்டவர் என்று கூறுவர். அதற்கு ஒருகதை  சொல்வார்கள் என் தாயார் ஆர் கமலம்மாள் அவர்கள். ஒரு காட்டிலே ஒரு வேடுவன் ஆதிசங்கரர் தவம் செய்து கொண்டிருப்பதைப்  பார்த்துவிட்டு, அவர் என்ன செய்கிறார் என்று வினவ அவர்  வேடுவனிடம்  பரப் ப்ரும்மமான ஸ்ரீமன் நாரணனைக் காண  தவமிருப்பதாக சொன்னார். அதற்குக் கண்களை மூடிக் கொண்டிருந்தால்  எப்படி அவரைக் காண முடியும் அவர் எப்படி இருப்பார் என்று கூறுங்கள், இந்தக் காட்டில் எனக்குத் தெரியாத பகுதிகளே இல்லை நான் கண்டுபிடித்துத் தருகிறேன் என்றான். அதற்கு ஆதிசங்கரர் ஸ்ரீமன் நாராயணன் சிங்கமுகமாகவும்,  மனித உடலாகவும் இருப்பார். அவரை அந்த வேடுவன் கண்டுபிடிப்பது கடினம் என்று கூறவே வேடுவன் எனக்குத் தெரியாத ஒரு மிருகமும் காட்டிலில்லை   அந்த மிருகத்தை மாலை அந்தி சாயும் பொழுதுக்குள்  கண்டுபிடித்துத் தருவதாகவும் அப்படி இல்லையென்றால்  தானே இறந்துவிடுவதாகவும் சத்தியம் செய்துவிட்டு தேடத்துவங்கினான்.   அவன் சிந்தையில் சிங்கமுகமும் மனித உடலும் முழுவதுமாக ஆக்ரமித்திருந்தது. மாலை வரை தேடிவிட்டு கிடைக்காததால் மனமுடைந்து தற்கொலை புரிந்துகொள்ள ஒரு கயிறு எடுத்து அதை முடிந்து மரத்தில் மாட்டித் தலையை உள்ளே நுழைக்கும்போது  ஸ்ரீமன் நாராயணன் நரசிங்க அவதாரம் அவன் எதிரில் நின்றது பயங்கரமான கர்ஜனை  கேட்டது. அட இங்கேதான் இருக்கிறாயா? நல்லவேளை  ஒரு வினாடி தாமதித்திருந்தாலும் என் உயிர் போயிருக்குமே  என்று மரத்திலிருந்து கயிற்றை அவிழ்த்து,  அதுதானே என்னிடம் சிக்காமல் எந்த மிருகமும் இருந்தததில்லையே வா என்று வேடன்.  அழைத்தவுடன் அமைதியாக வேடுவனிடம் வந்து அவன் கட்டிய கயிற்றில் கட்டுப்பட்டு அவன் பின்னே நடந்தது  நரசிங்கம்.

பக்தர்களின் உண்மையான  ஏகாக்ர சித்தத்துக்கு ஆண்டவன் கட்டுப் படுவான் என்பதற்கு உதாரணமாக ஸ்ரீமன் நாராயணன் அந்த வேடுவனிடம் கட்டுப்பட்டான்.

அவன் ஆதிசங்கரரிடம் அழைத்துச் சென்று இதோ நீங்கள் கேட்ட  மிருகம் என்று நரசிங்கத்தைக் காட்டினான்.  ஆனால் அவர் கண்களுக்கு கயிறு மட்டும் தெரிந்தது, நரசிங்கம் தெரியவில்லை ஒரு வேடுவனுக்கு காட்சி அளித்த ஸ்ரீமன் நாராயணா  காட்சி அளிக்கக் கூடாதா எனக்கு என்று ஆதிசங்கரர் வேண்டிக்கொள்ள ஸ்ரீமன் நாராயணன்  காலடி என்னும் இடத்தில் அவருக்குக் காட்சிதந்தான் என்று கூறுவர். அதனால் அன்றும் இன்றும் சங்கராசாரியார் அவர்களும்  நாராயணா, நாராயணா, நாராயணா என்று மும்முறை  கூறுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கின்றனர். அது மட்டுமல்ல  ஸ்ரீ மஹாபெரியவாள் தினம் பிக்ஷை செய்ய ஆரம்பிக்கும் முன், அங்கிருக்கும் சிஷ்யர்களை ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமப் பாராயணத்தைச் சொல்லும்படி சமிக்ஞை செய்வார்கள். (தலையில் கையினால் குட்டிக்கொண்டு சமிக்ஞை செய்வார்கள்; “சுக்லாம்பரதரம்” என்று ஆரம்பிக்க வேண்டும் என்று அர்த்தம்) அவர்கள் எல்லோரும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் தினம் இரண்டு ஆவர்த்தி சொல்லுவார்கள். ஸ்ரீ பெரியவாள் அதை ச்ரவணம் செய்து கொண்டே பிக்ஷை செய்வது வழக்கம்.

சைவம் வைஷ்ணவம் அனைத்துக்கும் பொதுவானவன் ஸ்ரீமன் நாராயணன். அங்கு பேதமில்லை. பேதங்கள் நாமாக ஏற்படுத்திக் கொள்வதுதான். புத்தருக்கு ஒரு போதிமரம் போல் நமக்கு அறிவுறுத்தும் போதிமரங்களே  முக்கியம். ஆராய்ந்து பார்த்தால் வைணவமோ சைவமோ இருபாலாரும் அனைவருமே வணங்கத்தக்க பெரு நிலையை அடைந்த பரமாத்மாக்கள்,

ப்ராமணர்களால் வணங்கப்படும் ராமன் க்ஷத்ரியன், க்ருஷ்ணன்   ஆயன் இடையன், சிவன் அம்பலக் கூத்தன் அனைத்துத் தேவதைகளும்  அனைத்து தெய்வங்களுமே ப்ராமணர் அல்லாத குலத்தைச் சேர்ந்தவர்தாமே? அப்புறம் ஜாதி என்ன? மதம் என்ன?   அறிவு விழித்துக் கொள்ளுதலே நலம்.

தோணிமாறலாம், பாதை மாறலாம் போய்ச்சேர வேண்டியது  அனைவருக்குமே  ஒரே இடம்தானே? ஆனால் பெரியவர்களைப் பற்றி எழுதும்போது  கூடியவரையில் அவர்களுடைய இயல்பான நடைப் பாடுகளையும், மிகச் சரியான செய்திகளையும்  நாம் ஆராய்ந்து வெளியிட்டோமானால் நமக்கு இன்னும் நிறைய விஷயங்கள் கிடைக்கும்.  மூலக்கூறுகள் சிதையாமல் இருக்கும் என்பது   அடியேனின் தாழ்மையான கருத்து.

“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி”  (நல்வழி என்னும் நூலில்  ஔவையார்)

”காக்கை குருவி எங்கள் ஜாதி- நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம்.” [ஐய பேரிகை] என்று மஹாகவி பாரதியார் கூறுகிறார்.

என் சிறுவயதில் என் தந்தையாரைக் காண  எல்லாச் சாதிகளையும்  அனைத்து மதங்களையும் சார்ந்தவர்கள் வணிகத்  தொடர்பாக  வருவார்கள். அவர்கள் அழைத்துக்கொள்ளும் விதம் என் மனதிலே பதிந்தது.  வாங்க செட்டியாரே, வாங்க நாயிடு, வாங்க முதலியாரே, வாங்க பாய், வாங்க கிறித்துவரே  என்றெல்லாம் ஜாதியின் பெயரையே சொல்லி  அழைப்பார்  என் தந்தை. அவர்களும்  சொல்லுங்க  ஐயங்காரே  இன்னிக்கு  நாம் என்ன  செய்யணும்  வியாபாரத்தைப் பத்தி பேசுவோமே  என்பார்கள்.

ஆக  அவர்கள் மனதிலே ஜாதிகளின் மேல் வெறுப்பில்லாமல் இயல்பாக வாழ்ந்தனர்.   எல்லோருமே அவரவர்  ஜாதி வழக்கங்களை அவரவர் மத வழக்கங்களைக் கடைப்பிடித்தாலும் அடுத்தவர்  ஜாதியை, மதத்தை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லாதவர்களாக இருந்தார்கள்.

ஆனால் நாம்  இப்போது எல்லோருடைய மதத்தின், ஜாதியின் பெயரை வாய்விட்டு  சொல்லாமல்  இருக்கிறோமே தவிர  மனத்திலே மற்ற  ஜாதிகளை, மதத்தை  மதிக்காமல் வெறுக்கிறோம்.    மனிதனைப் பார்ப்பதில்லை. அவன் குலத்தினைப் பார்க்கிறோம், மதத்தினைப் பார்க்கிறோம்.

நம் எல்லோருடைய  நோக்கமும்  நாம் எந்த  நாட்டைச் சார்ந்தவராக இருந்தாலும்  வாழ்கின்ற  நாட்டை நம் தேசம் போலக் கவனித்து  நாம் வாழும் நாட்டின்  முன்னேற்றத்துக்கு உதவ வேண்டிய காலகட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து  சில விஷமிகள் தூண்டிவிடும்  பிரிவினைவாதத்தைக் கையிலெடுத்துக் கொண்டு  தீவிரவாதமென்னும் பிரிவினையை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

நம் இலக்கும் நோக்கும்  வேறு. செல்ல வேண்டிய தூரமும் அதிகம். குறுக்கு வழிச்சாலைகளுக்குள் புகுந்தால் போகும்நேரம் அதிகமாகும். மிகச் சரியான முடிவு அது மட்டுமல்ல  பழமை வாய்ந்த பல பொக்கிஷங்கள் இப்போதே நம்மால் கவனிக்கப்படாமல் போகின்றன.

21ஆம் நூற்றாண்டின் சமூகவியற்பார்வையில் 11ஆம் நூற்றாண்டு   இந்தியாவைக் காணவியலாது. ஆகவே 21ஆம்  நூற்றாண்டிலும்  எல்லோராலும் படிக்க, கவனிக்கக்கூடிய வகையில் எல்லாப் பொக்கிஷங்களையும் (very chip) போன்ற விஞ்ஞான வளர்ச்சிகளைப் பயன்படுத்திச் சேமித்து வைத்துவிட்டுப் போக வேண்டும் என்பது தான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். பழையதைப் பேசுவதைவிடப் பாதுகாத்து இனிவரும் சந்ததியினர் விவரம் அறிந்துகொள்ள சுலபமான வழிமுறைகளை ஏற்படுத்துதல் நம் நோக்கமாக இருக்க வேண்டும். வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையைப் பலப்படுத்தி நாட்டை முன்னேற்றவேண்டிய அவசியத்தை உணர்ந்து செயல்படுவோம்.  அனைவரும் கைசேருங்கள்!

வந்தே மாதரம்!
ஜெய்ஹிந்த்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *