எம்.ஜி.ஆர். – நிஜத்திலும் மன்னாதி மன்னன்

சேஷாத்ரி பாஸ்கர்
(எம்ஜியாரின் நூற்று எட்டாம் வருடப் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை)
பிம்பங்கள் இயல்பிலே உருவாவது மிக அபூர்வம். எனக்கு தெரிந்து அது மகாத்மாவுக்கும், கர்ம வீரருக்கும் நிகழ்ந்தது. பிம்பங்களை உருவாக்குவதில் பெரிதும் முயன்று அதில் பெரும் வெற்றி கண்டவர் எனக்கு தெரிந்து இந்தியாவில் ஒருவர் தான். அது எம் ஜி ராமச்சந்தர் தான். முதன் முதலில் நடிக்க வந்த போது அவருக்கு பொருளாதாரம் மட்டுமே பிரச்சனை. புகழ் அடைய வேண்டும், பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் சிறிது கூட இல்லை. ஆனால் வாழ்க்கைப் போராட்டம் அவரை வெறி கொள்ளச் செய்தது. ஒரு உத்வேகம் வந்தது, அவர் நிராகரிக்கப்பட்ட போது தான். இந்த ஒதுக்குதல் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்தது. கிடைத்த துணைப் பாத்திரங்களில் பெரிதாகச் சோபிக்க முடியவில்லை.
ஒரே ஒரு காட்சியில் நடித்தால் என்ன பெயர் சம்பாதிக்க முடியும்? அவருக்கு முக்கியமாகப் பின்னாளில் கை கொடுத்தது அவரின் கட்டுடலும் அழகிய முகமும் தான் .போராட்டம் தொடர ஒரு கட்டத்தில் மெதுவாகச் சோபிக்க ஆரம்பித்தார். அவர் கண்டியைச் சேர்ந்தவர் தான். ஆயினும் அவருடைய தமிழ் உச்சரிப்பு மிகச் சிறப்பு. கணேசன், ராஜேந்திரன் அளவுக்கு ஈடு செய்யக் கூடியவர். நாடோடி மன்னன் வசனம் ஒன்றே சாட்சி.
அவர் மனோகரியிடம் பேசும் கட்டம் இன்றும் ரசிக்கப்படுகிறது. அவரின் திட்டமிடல் இங்கு தான் தொடங்குகிறது. மனோகரியாக நடித்த ராஜம் சொல்வார்.
” நான் மட்டும் இல்லை அண்ணா, இந்த நாடே உங்களைத் தான் நம்பி இருக்கிறது (வசனம் கண்ணதாசன் மற்றும் ரவீந்தர்). அவருக்குப் புகலிடம், அண்ணாதுரையால் கிடைத்தது. நண்பராய் இருந்த கருணாநிதி அவருக்கு எதிரி ஆனார். காரணம் அவரின் அபரித வளர்ச்சி.
ஒரு பக்கம் கணேசனிடம் திரை உலகப் போட்டி. இன்னொரு பக்கம் அரசியலில் கருணாநிதியிடம் போட்டி. இரண்டையும் ஜெயித்தார். பிம்பம் உருவாகி, பிம்பம் பெரிதானது. அதனைக் காப்பாற்றிக்கொள்ள அவர் மிகவும் பிரயத்தனம் செய்தார். இது அசாதாரணம். எல்லோரும் நினைப்பது போல அவருக்கு அரசியல் ஆசை இல்லாமல் இல்லை. அவர் பெரியாய் இடத்திற்கு வருவதற்குப் போட்ட கணக்கு தான் எழுபத்து இரண்டாம் ஆண்டு வெடித்தது. அது இயல்பில்லை. அதன் பின்னால் பெரிய திட்டம் இருந்தது. எம் ஜி யார் நினைத்தபடி அவர் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். அவர் எதிர்பார்த்ததும் அதனைத் தான். அதிமுக தோன்றியது. அந்தப் பெரும்புயலில் திமுக சாய்ந்தது. அந்த அலை, தமிழகத்தைச் சுமார் பதினைந்து ஆண்டுகள் ஆண்டது.
இதற்கு முன் அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகத்தில் நடிக்க இருந்தார . அண்ணாதுரையின் தொண்ணூறு பக்க வசனத்தை அவரால் குறுகிய காலத்தில் மனனம் செய்ய முடியவில்லை. பேரறிஞரின் தமிழ் அப்படி. நாடகத்தை விட்டு அவர் விலக, அந்த இடத்தில் அமர்ந்தவர் விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேசன். பின்னாளில் அவர் தான் நடிகர் திலகம். பட்டம் கொடுத்தவர் பெரியார். எம்ஜியார் நடித்து இருந்தால் அவர் நடிகர் திலகமாக மாறியிருப்பார். காலம் போடும் கோலம் என்பார்களே, அது இது தான் போலும்.
எம்ஜியாரைப் போல பிம்பம் உருவாக்கியவர்கள் வேறு எங்கும் இல்லை. அவரின் வறுமை, போராட்டம், தந்தையற்ற சூழல் எனப் பல காரணிகள் இருந்தாலும் அவரின் வெற்றிக்குக் காரணம், அவருடைய நல்ல குணவான் தன்மை. அவரிடம் குறைகள் இருக்கலாம். அது கடந்து போகக் கூடியவை. ஒரு சின்ன இல்லத்தில் எல்லோரின் அன்புக்குப் பாத்திரமாவதே பெரிய கஷ்டம் எனும் போது கோடிக்கணக்கான மக்கள் அவரைக் கொண்டாடுவது என்பது என்பது என்ன லேசுப்பட்ட காரியமா? எம்ஜியார் அதனை லாகவமாகச் செய்தார்.
அவரின் ஈகைக் குணம், வசீகர முகம், நல்ல விஷயங்களைக் கொண்டாடும் மக்கள் எனத் தமிழ்நாடு இருந்ததனால் தான் அது சாத்தியம் ஆயிற்று. அவர் நிஜத்திலும் மன்னாதி மன்னன் தான். அவர் ஒரு சரித்திரம் என்ற விளிப்பு, எம் ஜி யார் முன்பு ஒரு சாதாரண பிரயோகம். அவரே அவரை ஜெயித்துவிட்டார். நல்ல உள்ளங்களைக் கொண்டாடுவதில் தமிழ் மக்களுக்கு ஈடு இணை இல்லை. அவர் உதாரண புருஷர்.