கணுப் பொங்கல்

கணுப் பொங்கல்
சத்தியமணி. தில்லி
கணுப் பொங்க லிட்டேனே
காணும் பொங்க லிட்டேனே
மனப் பொங்க லிட்டேனே
மங்களப் பொங்க லிட்டேனே
மஞ்சள் பொங்க லிட்டேனே
வண்ணப் பொங்க லிட்டேனே
தரையில் கோலமும் இட்டேனே
மஞ்சள் இலைகளை வைத்தேனே
திரியில் விளக்கு ஏற்றியபின்
தாயின் முகத்தை நினைத்தேனே
கீழ்திசை நோக்கிட பரிமாற
கவளப் பிடிகளைப் படைத்தேனே
காக்கை குருவிகள் கிளிகளையும்
சாப்பிட வேண்டி துதித்தேனே
உங்களைப் போலொரு கூட்டாக
ஒற்றுமை கற்பிக்க அழைத்தேனே
உடன் பிறந்தோமென உணர்வோடு
ஒருதாய் பெற்ற உறவாலே
பிரிவு வெறுப்பென இல்லாமல்
பரிவுடன் வாழ்ந்திட வாழ்த்திடவே!
பதவி பணவெறி தாக்காமல்
உதவி கரங்களை விழைந்திடவே!
நன்றி மறவா எண்ணமுடன்
கடந்த காலம் நினைத்திடவே
தன்னலப் பொந்தினில் இல்லாது
தருவதும் பெறுவதும் நிறைந்திடவே
கரும்பை இணைப்பது கணுவாகும்
பாசம் இணைப்பது உறவாகும்
கரும்பின் இனிப்பினு மேலாகும்
பிறவிக்கு அன்பும் அமுதாகும்
ஊணும் உயிரும் உறவாடும்
காணும் பொங்க லிதுவாகும்