அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முன்னுரிமைகள்

அண்ணாகண்ணன்
அமெரிக்க அதிபராக டிரம்ப், அடித்து ஆடத் தொடங்கிவிட்டார்.
உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுகிறது. காரணம், அமெரிக்கா அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியைச் சேமிக்க. வெளிநாட்டுப் போர்களில் அமெரிக்கா இனிப் பங்கேற்காது. காரணம், நிதிச் சிக்கனம். டாலரில் வர்த்தகம் செய்யாத நாடுகளுக்கு 100 சதம் கூடுதல் வரி என எச்சரித்துள்ளார். இதன் மூலம் டாலரின் முக்கியத்துவத்தை இழக்காமல், தன்னைச் சார்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்துகிறார்.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதைக் குறைத்து, அமெரிக்காவைப் பொருள்களின் உற்பத்தி மையமாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் உள்ள எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து, பெட்ரோலிய இறக்குமதியைக் குறைக்கவும் திட்டம் வைத்துள்ளார்.
பனாமா கால்வாயில் அமெரிக்கக் கப்பல்களுக்கான கட்டணத்தைக் குறைக்க வேண்டும் அல்லது அதன் நிர்வாக உரிமையை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அமெரிக்கப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே அவரது முன்னுரிமையாக இருக்கிறது. நிச்சயமாக டிரம்ப், அயல் பணி ஒப்படைப்பிலும் கை வைக்க வாய்ப்பு இருக்கிறது.
டிரம்பின் அடுத்த முன்னுரிமை, அமெரிக்கப் பெருமிதம். செவ்வாய்க் கோளில் அமெரிக்கக் கொடி பறக்கும் என்பதும் மெக்சிகோ வளைகுடா இனி அமெரிக்க வளைகுடா எனப் பெயர் மாற்றம் செய்வதும் இதையே குறிக்கிறது. அமெரிக்கக் குடியுரிமையைக் கட்டுப்படுத்துவது, அமெரிக்கர் என்னும் அடையாளத்தை அவ்வளவு எளிதில் மற்றவர்கள் பெற முடியாது என்பதைச் சுட்டவே. அமெரிக்கப் பொருள்களை வாங்குங்கள் என அவர் பரப்புரை செய்தால், ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பார். அமெரிக்கப் பொருளாதாரமும் வளரும். அமெரிக்கப் பெருமிதமும் உயரும்.
புதிய தலைவர் பொறுப்பு ஏற்கும்போது அதிரடி அறிவிப்புகள் வருவது இயல்பே. ஆரம்ப ஆரவாரங்களைக் கடந்து, அனைவரது நன்மையையும் அவர் கருத்தில் கொண்டால், புதிய சகாப்தம் படைப்பார்.