குறளின் கதிர்களாய்…(512)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(512)
தள்ளா விளையுளுந் தக்காருந் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு.
-திருக்குறள் -731(நாடு)
புதுக் கவிதையில்…
என்றும் குறையாத
உணவுப்பொருள் விளைவிப்பவரும்,
அறவியல்பு கொண்டவரும்,
அழிதலில்லாச் செல்வமுள்ளவரும்
ஆகிய இவர்கள்
அனைவரும்
கூடிவாழ்வது நாடு…!
குறும்பாவில்…
குறையா உணவுப்பொருள் விளைவிப்பவர்,
அறவியல்பு உள்ளவர், அழியாத செல்வமுள்ளோர்
ஆகியோர் கூடிவாழ்வது நாடு…!
மரபுக் கவிதையில்…
என்றும் குறையா உண்பொருட்கள்
ஏற்ற வகையில் விளைவிப்போர்,
நன்றா யறத்தைப் பேணுகின்ற
நல்ல இயல்பு கொண்டோர்கள்,
என்றும் அழிவே யில்லாத
எதிலும் குறையாச் செல்வமுளோர்
என்னு மிவர்கள் சேர்ந்தொன்றாய்
இணைந்தே வாழ்ந்தா லதுநாடே…!
லிமரைக்கூ…
உண்பொருள் உற்பத்தியில் வெல்வர்
பலருடன் நல்லறத்தார் பெருஞ்செல்வர் சேர்ந்தொன்றாய்
வாழ்வதே நாடெனச் சொல்வர்…!
கிராமிய பாணியில்…
நாடுண்ணா அதுதான் நாடு,
நல்லவுங்க எல்லாருமே
நெறஞ்சிருந்தா அதுதான் நாடு..
ஒருநாளும் கொறவு வராம
ஒணவுப் பொளுகள
வெளச்சல் செய்யிறவங்களும்,
நல்லறத்தயே பேணிக் காக்கிற
நல்ல கொணம் உள்ளவங்களும்,
அழிஞ்சிபோவாத நெறஞ்ச
செல்வம் உள்ளவங்களும்,
எல்லாருமே
ஒண்ணாச் சேந்து
வாழுறதுதான்
நல்ல நாடு..
தெரிஞ்சிக்கோ,
நாடுண்ணா அதுதான் நாடு,
நல்லவுங்க எல்லாருமே
நெறஞ்சிருந்தா அதுதான் நாடு…!