இந்த வார வல்லமையாளர்!

ஜூலை 14, 2014

சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர் …

இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு  திரு. கிரேசி மோகன்  அவர்கள்

கிரேசி மோகன்

இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்  “கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்” காலத்தில் இருந்து, ஒரு கால் நூற்றாண்டிற்கும் மேலாகத் தமிழர்கள் நன்கறிந்த நகைச்சுவை எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் அவர்கள்.  வல்லமையில் “தாம்புக் கட்டு”  என்ற தலைப்பில் அவர் சென்ற வாரம் எழுதிய கதைக்காகவும், வெப்துனியா செய்தித்தளத்தில் அவர் எழுதிய திரைப்பட விமர்சனத்திற்காகவும் வல்லமையாளராகத் தெரிவு செய்யப்படுகிறார்.  வல்லமையாளர் விருதிற்கு அவரைப் பரிந்துரைத்து தேர்வுக் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்தவர் வல்லமையின் வாசகர் திரு. சு. ரவி அவர்கள்.

“தாம்புக் கட்டு”  கதை மிகவும் வித்தியாசமான கோணத்தைக் கொண்டிருக்கிறது.  இந்தியாவில் பிறந்து வளர்ந்த யாவருமே மகாபாரதக் கதைகளையும், குறும்புகள் நிறைந்த கண்ணன் பிறந்து வளர்ந்த  நிகழ்வுகளையும், பின்நாளில்   அவன் பார்த்தனுக்கு தேரோட்டியாகப் பணியாற்றி கீதை உரைத்ததையும் பலமுறை படித்திருக்கிறோம்.  ஆனாலும் கிரேசி மோகன் வழங்கிய கோணம் முற்றிலும் புதுமையானது.

“தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தை கம்சனைக் கொல்லும்” என்ற வானில் தோன்றிய ஒலியினால் எச்சரிக்கை அடைந்த கம்சன்  தங்கை தேவகியையும், மைத்துனன் வாசுதேவனையும், சிறையிலடைத்து அவர்களுக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் பிறந்தவுடன் கொன்றுகொண்டே வருகிறான். ஏழு குழந்தைகள் இவ்வாறு உயிரிழக்க நேரிடுகிறது.  எட்டவதாகப்  பிறந்த கண்ணனை கோகுலத்தை ஆண்ட நந்தகோபனிடமும், யசோதையிடமும் சேர்ப்பித்து அவர்களை வளர்க்கச் செய்ய  வாசு மாமாவும்  (அப்படித்தான் அந்தக் கதையின் நாயகியான சிறுமி வாசுதேவனை  அழைக்கிறாள்) முடிவெடுக்கிறார்.  அவருக்கு உதவி செய்கிறாள்  ஆயர்பாடியில் வசிக்கும்  சிறுமி ஒருத்தி.

கண்ணன் பிறந்த அந்த மழைநாளில் ஆயர்பாடியில் உள்ள நந்தகோபன் இல்லத்தில் குழந்தைகளை மாற்ற உதவிய அந்தச் சிறுமி யார்?  இந்த உதவியைச் செய்ய அவள் என்ன பிரதிபலன் எதிர்பார்த்து வாசு மாமாவிடம் சத்தியம்  பெற்ற பின்னர் உதவி செய்தாள்? அவள் விருப்பம் என்ன? யாரவள்?  இவள் இல்லாவிட்டால் மகாபாரதமே இல்லாமல் போயிருக்கும் ஆபத்து உண்டு.  இவள் யாரென்ற கேள்விக்கு விடையை வெள்ளித்திரையில் … மன்னிக்கவும்… வல்லமையில் இந்த சுட்டி வழி சென்று  காண்க.  படிக்கும் வாசகர்கள் கதையைப் பற்றித்  தனது தோழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், ஆனால் முடிவினைத் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இதற்கு உங்கள் ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.

“பால்கார அம்மா வசதியானவள்….வீடு தோப்பும் துரவுமாக பிரும்மாண்டமாக இருந்தது….சுற்றிலும் கோட்டை போல மதில் சுவர்….வந்த திருடன் வேறு வழியில்லாமல் மனம் திருந்தி நல்லவனாகும் அளவுக்கு வாசல் கதவு வீட்டையே மறைத்தது…”  

“கஷ்க் முஷ்க் ” என்று கன்னங்கரேல் உருண்டையாய் (சிறுமி காதில் விழுந்தால் கோபிப்பாள்….நீல உருண்டையாய்) இருந்த அந்தப் பொருள் விளங்கா உருண்டையை…”

கதையில் வரும் இந்த வர்ணனைகள்  கிரேசி மோகனின் “டச்”.  இக்கதை கிரேசி மோகனின் கற்பனைக்கு நல்லதொரு சான்று.  இது போன்ற மற்றொரு   வியக்கவைக்கும் கற்பனையை  மதுரை சித்திரைத் திருவிழாவை ஒட்டி அவர் வழங்கிய “மீனாட்சி திருக்கல்யாணம்” என்ற  கவிதைத் தொகுப்பிலும் காணலாம் …

அந்தப் பாடலில் இருந்து சில வரிகள் இங்கு… முழுக்கவிதையும் இந்த சுட்டியில் கிடைக்கும்..

கன்னிகாதானம்
——————

தாரையை வார்க்கையில் தன்சார்பில் தந்தையாய்
யாரை நிறுத்துவது என்றீசர் -பாரமுற
பாக்கையில் வந்தார் பெரிய புராணத்து
சேக்கிழார் சாமி சபைக்கு…

பாம்பலையில் தூங்கும் பெருமாள் சுபாவமாம்
சோம்பலை விட்டு சுறுசுறுப்பாய் -மாம்பலம்
நல்லிகுப்பு சாமியிடம் செல்ல சகோதரிக்காய்
அள்ளிவந்தார் சேலை அலைந்து…

கண்ணைப் பறிக்கின்ற கூறைப் புடவையில்
மின்னலென மேடையில் மீனாள்தன் -அண்ணன்
மடியமர நான்முகன் மாங்கல்யம் ஏந்த
முடிந்தான் அரன்முடிச்சு மூன்று…

கிரேசி மோகன் அவருக்கு  கைவந்த கலையான “குப்பாச்சுலு VS கோடபட்ரி” என்ற நகைச்சுவை நாடகம் ஒன்றையும் , அத்துடன் மற்றொரு கைவந்த கலையான ஓவியங்களையும் வல்லமை வாசகர்களுக்குத் தந்திருக்கிறார்.  ஆம்… கிரேசி மோகன் ஒரு சிறந்த ஓவியரும் கூட, வல்லமையில் வெளியான அவரது ஓவியங்கள் ஒரு சில இங்கே  உங்கள் பார்வைக்கு…

சென்ற வார இறுதியில் (2014 ஜூலை 11 அன்று) வெளிவந்த இயக்குனர் ஞானராஜசேகரன் அவர்களின்  ராமானுஜன் திரைப்படத்திற்கு   கிரேசி மோகன் அவர்கள் எழுதிய விமர்சனம் இது …

எனது பொக்கிஷம் ஞானராஜசேகரனின் ‘பாரதியார்’ டிவிடி…. 100 தடவைகளுக்கு மேல் பார்த்துவிட்டேன்….இனி பார்ப்பேனா தெரியாது….!

‘பாரதியாருக்கு’ப் போட்டியாக இவரே ‘ராமானுஜன்’ எடுத்துவிட்டார்…. ராமானுஜன் டிவிடிக்காகக் காத்திருக்கிறேன்…. கணக்கு வழக்கு இல்லாமல் நான் பார்க்கப் போகும் ‘ராமானுஜன்’ திரைப்படம் நேற்று பார்த்தேன்….

‘ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ’ என்று தன் மனைவி ஜானகிக்கு அவர் கடிதம் எழுதும் போது, ஏனோ தெரியவில்லை புனித மேதை பெரும்புதூர் ஸ்ரீ ராமானுஜரையும், கணித மேதை கும்பகோணம் ராமானுஜரையும் ஒப்பிட்டு அடியேன் மனக் கணக்கு போட ஆரம்பித்தேன்…. இருவருமே அந்த ‘சேடரின்’ விசேட அம்சமாக எனக்குத் தோன்றியது….

பெரும்புதூர் மாமுனி ஆதிசேடன் அவதாரம்… தொல்(பழைய) COBRA…. கும்பகோணம் ராமானுஜர் அல்ஜீப்ரா…. அவர் த்ரிகுணம் கடந்த மூர்த்தி….இவர் ட்ரிக்னாமெட்ரி…. அவர் எளியவர்களுக்கும் நாராயணன் நாமமிட்டு தீட்டும் திருமேனி ஆக்கினார்…. இவர் Cos THETA plus தியரியை தீட்டினார்…. அவர் உடையவர்…. இவர் கணக்கின் விடையவர்…. பெரிய கடவுள் பாரதியாரைக் கவிதையால் தடுத்தாண்டு கொண்டார்…. இவரைக் கணக்கால் தடுத்தாண்டு கொண்டார்….

படம் பார்க்கும் போது எனக்கு ராமானுஜத்தை விட அவரது LAURELS ஸை வெளிக்கொணர்ந்த HARDY பாத்திரம் மிகவும் பிடித்தது….

அமரர் வாலியின் ‘ஓராயிரம் ஈறாயிரம்’ பாடலும் ரமேஷ் வினாயகத்தின் இசையும் சூப்பர்….

‘எழுத்தையும்’ (பாரதியார்) ‘எண்ணையும்’ (ராமானுஜன்) எடுத்த ஞானராஜசேகரனிடம் ஒரு வேண்டுகோள்…. அடுத்ததாக ‘கண்ணெனத் தகும்’…. ‘பகவான் ஸ்ரீரமணரின்’ சரிதையை எடுங்கள் சார் ப்ளீஸ் ….

தயாரித்தவர்களுக்கு ‘பல்லாண்டு பாடலாம்’….எனக்குப் பிடிச்ச கணக்கு….படத்துக்கு அடியேனின் மார்க் 100 / 100….

 

அத்துடன் முத்தாய்ப்பாக,  படத்தின் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம் அவர்களைப் பாராட்டி,  அவர் இசை அமைத்த   “ராமானுஜன்” பட இசை அவரை இசைபட வாழவைக்க வேண்டும் என்றுவாழ்த்துறைத்து  ஒரு  வெண்பாவும்   பாடியுள்ளார் ….

“புனிதமே தையும், கணிதமே தையும்,
மனிதமே தையுன் மியூஸிக், -இனிதாக,
கேட்டிடும் காதுக்குள் கூட்ட, இனியுந்தன்,
காட்ல மழைவினாய கம்”

திருமால் திருப்புகழ் என்ற தலைப்பில்  தினமும் வெண்பாக்கள்  புனைந்து வரும் கிரேசி மோகன், இதுவரை அந்த வெண்பாக்களை (இதுவரை 140  வெண்பா பதிவுகள்) வல்லமை மின்னிதழ் வாசகர்களுடனும், வல்லமை கூகிள் குழுவிலும் பகிர்ந்து வருகிறார். இவ்வாறு வெண்பாக்களையே உயிர்மூச்சாய் கொண்ட அவரை வெண்பாபாடி வாழ்த்துவதுதான் முறையல்லவா …ஆதலால்…

வெண்பா வடித்து வெகுமதியாய்  நாளுமொரு
பண்பாடும் பாவல, நீவிர் திரையுலக
எல்லை  கடந்திங்கே என்றும் புகழ்காணும்
வல்லமை யாளர்தாம்  இன்று”   

என்று வெண்பா சொல்லிப்  பாராட்டி …

சிந்தனையைக் கவரும் கவிச்சுவை நிறைந்த வெண்பாக்ளையும், நகைச்சுவை நிறைந்த   நாடகம் மற்றும் கதைகளையும் பகிர்ந்துகொண்டு வல்லமை வாசகர்களை மகிழ்விக்கும்   கிரேசி மோகன்  அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

 

நன்றி:
வெப்துனியா –
http://tamil.webdunia.com/article/movie-review-in-tamil/crazy-mohan-on-ramanujan-movie-114071200014_1.html

பதிவாசிரியரைப் பற்றி

9 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. வல்லமையாளருக்கு வாழ்த்துக்கள்.நல்ல நகை சுவை எழுத்தாளர் என்று மட்டுமே அறிந்திருந்த அவரை நல்ல ஓவியர் என்பதை அறிந்து இரட்டை வாழ்த்துக்கள். திரு சுஜாதா அவர்களின் ஓவியம் நல்ல உயிர்ப்பு.

    ஆளானப்பட்டவர்களுக்கே சுவை குன்றாமல்,பொருள் சிதறாமல் வெண்பா அமைப்பது அத்தனை சிரமம் இங்கு இத்தனை வெண்பா அமைத்தவருக்கு கண் திரிஷ்டியே.

    தொல்காப்பியத்தில்
    ஆசிரியப்பாவும் வெண்பாவும் 
    செல்லமாய்
    சாமரம் வீசும்.

    வெண்பா வேந்தனை பாராட்டி
    இந்த 
    வல்லமை ஆசிரியர் பாடிய
    வெண்பாவும்
    அதற்கு இனையான ரகம்.

  2. நண்பன் மோகனுக்கு நல்வாழ்த்துகள். கே.ரவி

  3. பாராட்டியவர்களுக்கும், சீராட்டிய வல்லமைக்கும், தேரோட்டிய திவ்ய தேசத்தோனுக்கும் நன்றி….முக்கியமாக அடியேனுக்கு தமிழ் நீரூற்றிய தோழன் பூனேவில் வசிக்கும் சு.ரவிக்கு நன்றி சொன்னால் கோபிப்பான்…எனவே ….’’நன்றி நவிலும் வெண்பா’’

    ‘’வல்லமை யாளன், விருதுக்குக் காரணம்-
    சொல்லமைத்துத் தந்த சுரவியே, -புல்லெமை,
    ஆயிரங் காலத்(து) , அறுவடை நெல்லாக,
    வாயுரம் தந்ததவன்(ரவி) வாக்கு’’….கிரேசி மோகன்

  4. கிரேஸி மோகன்..
    ஹாஸ்யம் விரும்பும் நெஞ்சங்கள் உச்சரிக்கும் அழகுதமிழ்ப் பெயர்ச்சொல்!
    கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக நாடகத்துறையில் சாதனை படைத்துவரும் சரித்திரம்!
    கூட்டுக்குடும்பத்தின் பெருமைகளை மேடைதோறும் சொல்லிமகிழும் அன்பு உள்ளம்!
    திரையுலக ஜாம்பவான்களையும் இலக்கியத்துறை அன்பர்களையும் தம் இதயத்திற்குள் நிறுத்திவைத்திருக்கும் அதிசயத் தராசு!
    வல்லமையின் வாயிலாக தன் எழுத்துக்களை வலம்வரச் செய்துவரும் வித்தகர்!
    இலக்கணம் அறிந்து இயற்றிடும் செய்யுள்களை அடுக்கடுக்காக தருவிக்கும் இதயம்!
    அடுக்கடுக்காக இவர் பெருமைகள் அவனி அறியும்.. ஆயினும் வல்லமையாளர் விருதினை வழங்கி சிறப்பிக்கும் இந்நேரம் ..
    பக்தியில் திளைக்கும் உங்கள் உள்ளத்தில் பகவான் அருட்கடல் தெரிகிறது!
    தொட்டது அனைத்தும் துலங்கும் என்பதற்கு உங்கள் வாழ்வே உதாரணம்!
    இத்தனைக்கும் நேரம் எங்கிருந்து ஒதுக்குகிறீர்கள்.. எனக்கு மட்டும் சொல்லுங்களே.. (நான் வல்லமை உறுப்பினர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்).
    உங்கள் வல்லமை.. திறமை.. புகழ் அனைத்தும் இன்னும் மிளிர இறைவனை பிரார்த்தித்து நகைச்சுவைதன்னை இவ்வுலகினிற்கு அள்ளித்தரும் வள்ளலை வாழ்த்தி விடைபெறுகிறேன்..
    அன்புடன்
    காவிரிமைந்தன்
    நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்
    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்
    பம்மல் – சென்னை 600 075
    தற்போது – துபாய்
    00971 50 2519693
    kaviri2012@gmail.com
    http://www.thamizhnadhi.com

  5. இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.கிரேசி மோகன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *