முனைவர் மூ. சிந்து
இணைப் பேராசிரியர்
தமிழ்த்துறை
டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
காளப்பட்டி ரோடு, கோயம்புத்தூர் – 6410483
மின்னஞ்சல் – sindujasms@gmail.com
முன்னுரை
சங்க இலக்கியத்தில் அகத்திணையான நற்றிணை ஐந்திணை ஒழுக்கங்கங்களைப் பற்றிய பாடல்களால் தொகுக்கப்பட்டுள்ளது. ஐந்திணை நிலத்தில் மக்கள் மேற்கொண்ட தொழில்கள் குறிப்பிடப்படுகின்றன. சங்க இலக்கியம் வேட்டைத் தொழிலில் துவங்கி உழவு, நெசவு இரும்பு, தச்சு, போர், கைத்தொழில், பண்டமாற்று, வாணிபம் என்று பல்வேறுபட்ட தொழில்களைக் குறிப்பிடுகிறது. இவற்றில் அனைத்து நிலத்திற்கும் ஏற்ப ஒரு பொதுவானத் தொழிலாக உழவுத்தொழில் குறிப்பிடப்படுகிறது. சில குலத்தொழில்களாகவும் மற்றும் சில குறிப்பிட்ட தொழில்களுக்கு என சிறப்பிடம் பெற்ற ஊர்களும் காணப்படுகின்றன.
வேட்டைத்தொழில்
பழங்காலமக்கள் நாகரிகத்தில் கூடித்தொழில் செய்தல் வழக்கம் இருந்தது. வேட்டையாடுவதோடு, விளைச்சலில் கிடைத்தவற்றை அவர்கள் தமக்குள் பகிர்ந்து கொண்டனர். தம்முள் ஒருங்கிணைந்து கூட்டுச் சமுதாயம் உருவாக வழி வகுத்தனர்.
“பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவோடு
கணைக் கால் ஒனல் கைம்மிகக் கவர்தலின்” (நற் – 336)
சொரசொரப்பான பிடரியை உடைய ஆண்பன்றி,பெண் பன்றியுடன் சென்று திரண்ட அடிப்பகுதியை உடைய திணைக்கதிரை அளவறிந்து தின்பதையறிந்த கானவன் பதுங்கி அம்பெய்து ஆண் பன்றியைக் வேட்டையாடியதை அறியமுடிகிறது. தான் கொண்டு வந்த இறைச்சியை அவன் மனைவி மற்றும் சுற்றத்தார்அனைவருக்கும் பகுத்து கொடுத்த செய்தியை நற்றிணை எடுத்துரைக்கிறது.
மனிதன் காடோடியாக திரிந்த நிலையில் தன் பசியைத் தீர்க்க மிருகங்களை வேட்டையாடி தன் பசியைப் போக்கினான் என்பதை.
“படுவலை வேட்டுவன் பார்வையின் ஓரீஇ
நெடுங்காற் கணந்துளம் புலம்பு கொள்தெள்விளி” (நற் – 212)
என்று கூறுகிறது. குறிஞ்சி நிலம் வேடர் நிலமாக இருந்தது. வேட்டைக்குரிய பொருள்களான வில், வலை, அம்பு போன்றவற்றையும் கண்டறிந்தான். வனவிலங்குகளை வேட்டையாடச் செல்லும் வேட்டுவர் தலைவனே தனது சமூகத்தில் தலைமை வகிக்கும் சிறப்பினைப் பெற்றான். அக்காலத்தில் வேடர், கானவர் தாங்கள் செய்யும் வேட்டுவத் தொழிலில் குலத்தலைவனாக இருந்தவனே பிற்காலத்தில் மன்னன் என்ற தொழிலுக்கு ஏற்பத் தொழிலின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளனர்.
உழவுத்தொழில்
வேட்டையாடித் திரிந்த மனிதன் தன் உணவுக்காக, தானியத்தை விளைவித்தான். உழும் முறை ஏதும் தெரியாததால்,
“பன்றி கிளறி உழுத பாழ்சேம்பு
அன்றிலங் குன்றத் துகுத்தலம் பினவே” (நற் – 08)
என்று உழும் முறை அறியாது பன்றி கிளறிய இடத்தில் தினைப் பயிரை விதைத்தனர். இவ்வாறு துவங்கிய உழவுத் தொழில் நாளடைவில் வளர்ச்சி பெற்றது. உழவு செய்ய அடிப்படைத் தேவை நீர் ஆதலின் ஆங்காங்கே குளங்களும் நீரோடைகளும் நிரம்பின. மழைவரும் காலத்திற்கு ஏற்பப் பயிர்களையும் விதைத்தனர். இதனை
“பன்மர உயர்சினை மின்மினி விளக்கத்துச்
செல்மழை இயக்கங் காணும்” (நற் – 44)
என்று நற்றிணைச் சுட்டுகிறது. நீர்பாய்ச்சுதல், நாற்று நடுதல், அறுவடை செய்தல் மறுபடியும் நிலத்தைப் பண்படுத்துதல் என இவற்றில் வேளாண்மையை உழுதுண்ணும் மேல்நிலை வேளாண், உழுவித்துண்ணும் கீழ்நிலை வேளாளண் என்ற அடிப்படையில் நிலவுடைமையின் ஆதிக்கம் துவங்கிய நிலையில் வர்க்கமும் தோன்றியதைக் காணமுடிகிறது.
தினைப்புனக் காவல்
திணைக் கதிர்களைப் பறவைகளிடமிருந்து காப்பாற்ற பகலில் மகளிரும், இரவில் ஆண்களும் காவல் புரிந்தனர். இவை காதற்கலமாக விளைந்தன என்பது நாம் அறிந்ததே. இதனை
“துயித்தலைப் புளிற்றுக்குரல் பால்வார் பிறைஞ்சித்
தோடலைக் கொண்டன ஏனல்” (நற். 206)
என்று நற்றிணை கூறுகிறது. தினைப்புனம் காத்தல் தொழிலில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் ஈடுபட்டுள்ளதைக் காணமுடிகிறது.
மேய்த்தல் தொழில்
முல்லை நிலச் சமுதாயமான காடும் காடு சார்ந்த இடத்தில் வாழும் இடையன், கால்நடைச் சமுதாயமான ஆடுமாடுகள் மேய்த்தலைத் தொழிலாகக் கொண்டவரைக் கோவலர் என்பார். இதனை.
‘ஆடுடை இடையன்’ (நற். 260:3)
‘கொல்லைக் கோவலர்’ (நற். 266:1)
என்றும் நற்றிணை குறிப்பிடுகிறது. தொழிலுக்கு ஏற்ப பெயர்கள் வழங்கும் வழக்கம் அன்றே இருந்துள்ளது. இவர்களையே பிற்காலத்தில் ஏற்றத்தாழ்வுகள் கொண்டு குறிப்பிடுகின்றனர்.
மண்பாண்டத் தொழில்
முதன்முதலில் மண்பாண்டத் தொழில் கூடைகளின் மீது களிமண்ணைப் பூசுவதன் பொருட்டுத் தோன்றியது. இதனை.
”சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற
பிறவா வெண்ணெய் உருப்பு இடந்தன்ன” (நற். 86:6)
என்கிறது நற்றிணை. நெருப்பில் சுட்டெடுக்கப்பட்ட மண்பானத்தைக் கொண்டு தயிரைக் கடைந்ததால் பானையின் உள்பகுதியில் ஏற்பட்ட தேய்மானம் என்பதன் வாயிலாக மனிதன் நாகரீக நிலையினை சமைத்து உண்ணும் பொருட்டும் மக்களின் பழக்கவழக்கத்திலும் மட்பாண்டங்கள் பெரிதும் பயன்படுத்தியதை அறியமுடிகிறது.
நெசவுத் தொழில்
பருத்தியில் இருந்து அதன் பஞ்சினைப் பிரித்தெடுப்பது மகளிர் தொழில் என்பதை,
‘ஆளில் பெண்டிர் தாளில் செய்த
நுணங்கு நுண் பனுவல்’ (நற். 353)
என்று விளக்குகிறது. இவ்வாறு பெண்கள் நூற்கவும், ஆண்கள் ஆடையாகக் கொடுக்கவும் உரிமைப் பெற்றிருந்தனர்.
‘புன்பூங்கலிங்கம்’ (நற். 90)
என்று ஆடைகளில் பருத்தி, பட்டு என வேறுபட்டு காணப்பட்டது நாம் அறிந்ததே. பட்டாடைகள் மன்னர்களுக்கும், செல்வர்களுக்கும் உரியது. ஏழைகள் இடையில் மட்டுமே ஆடைகள் உடுத்தினர். அதற்கு மேற்பட்ட நிலவுடைமை வர்க்கத்தினர். மேலாடையும் அணிந்தனர் என்பார் ந. சுப்பிரமணியம். (சங்க கால வாழ்வியல்). இந்நிலை சங்ககால மன்னர்களின் ஆட்சியில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தமையைக் காட்டுகிறது.
இடையன் கோவணம் அணிந்தான் எனவும் மற்றும் சிலர் தலையுடைகளை அணிந்தனர் எனவும் கூறுவர். சிறிது நாகரீக வளர்ச்சி பெற்ற காலத்திலும் உடுத்தும் உடையில் வேறுபாடு காணப்பட்டன.
மீன்பிடித் தொழில்
“வேட்டம் பொய்யாது வலைவளம் சிறப்ப” (நற் -38)
என்ற வரியின் மூலம் மீன் வேட்டைக்குச் சென்றதை நெய்தல் திணைப்பாடல் வழி அறியமுடிகிறது.
கடலிடத்து மீன்வேட்டை மேற்ச்சென்றவர்க்கு, தப்பாமல் வேட்டை வாய்க்க மழை பொய்க்காமல் பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. கிடைத்த மீனைப் பரதவர் பிறநாட்டிற்கு சென்று விற்றதும் கூறப்பட்டுள்ளது.
புன்னை மர நிழலில் இருந்து தேன் மணம் வீசும் தெளிந்த கள்ளைப் பருகிய செய்தியும் கூறப்பட்டுள்ளது. கடலிலே சுறா மீன்களையும் வேறு மீன்களையும் திமிலிலேயே துண்டித்து இறைச்சிகளை நிரப்பிக்கொண்டு கரைக்குவரும் செய்தியை
“துய்த்தலை இறவோடு தொகைமீன் பெற்இயர்
வரிவலைப் பரதவர் கருவினைச் சிறாஅர்” (நற்-111)
மேற்கண்ட பாடல் வரிகள் வாயிலாக அறியமுடிகிறது.
இரும்புத் தொழில்
மனிதன் செய்யும் தொழில் அனைத்தையும் விட இரும்புத்தொழில் முக்கியத்துவம் பெற்று விளங்கியது. ஏழு ஊர்களுக்கு ஒரு கொல்லன் இருந்ததாக சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. இதை.
‘…………….கொல்லன்
எறிபொற் பிதரில் சிறுபல்காய
வேங்கை வியுகும் ஓங்கு மலை’ (நற். 13)
என்ற பாடல் வரிகள் விளக்குகின்றன. இவ்வாறு கொல்லன். கம்மியர். வினைஞர் என இரும்புத் தொழில் செய்வோருக்குப் பெயர்கள் வழங்கப்பட்டன. இவற்றில் குலத்தொழில் செய்யும் வழக்கமும் இருந்துள்ளன. இவர்களின் ஊதியம் ஆண்டுக்கு ஒருமுறையே வழங்கப்பட்டுள்ளன.
அணிகலத் தொழில்
பொன், வெள்ளி, செம்பு, முத்து, பவளம் போன்வற்றில் பல்வேறு விதமான அணிகலன்கள் செய்து ஆடவரும், பெண்களும் அணிந்துள்ளனர் என்பதை.
‘உறுவினைச் சோவா உலைஉடல் கம்மியன்
பொறியாறு பிணைக்கட்டும் துறைமண் கொண்டு’ (நற். 365)
என்று குறிப்பிடுகிறது. மேலும் சங்க இலக்கியத்தில் அணிகலன் நில அடிப்படையில் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் அம்மக்களின் பொருள் உற்பத்தியும், அந்நிலச் சூழலுக்கு ஏற்ப அவர்களின் ஆபரணங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அணிகலன் தொழில் செய்வோர் பற்றியும் நற்றிணையில் கூறப்பட்டுள்ளது. கம்மியரில் பொன்செய் கம்மியர், செம்புசெய் கம்மியர் என இருவகைப்படுவர். பொன்செய் கம்மியர் பொன்னை உருக்கி அணிகலன்கள் செய்து தருபவர்கள் இதனை,
“கருங்கால் வேங்கை நாளுறு புதுப்பூப்
பொன்செய் கம்மியன் கைவினை கடுப்ப” (நற்-313)
என்னும் அடிகள் சுட்டும். இவர்கள் பொன்னின் தரத்தை அறிய உரைக்கல்லைப் பயன்படுத்தியுள்ளனர். இதனைக் “கட்டளைக்கல்” எனக் குறிப்பர். பொன்செய் கம்மியர் செய்யும் பொன்னணி தாது அலைந்து வரும் வண்டியின் தோற்றம்போல் இருந்ததை நற்றிணை குறிப்பிடுகிறது.
கைவினைத் தொழில்
சங்க இலக்கியத்தில் ஓலைப்பாய், பொம்மை, கழங்கு, பந்து, சாயப்பாகு, சுண்ணம். கயிறு முதலிய கைவினைத் தொழில்கள் நடைபெற்றன. இதனை.
‘நேரிழை மகளீர் வார்மணல் இழைத்த
வண்டற் பாவை’ (நற் 191)
என்கிறது நற்றிணை. மணலால் செய்த பாவைகளே அன்றி புள்ளாலும், உலோகத்தாலும் பாவைகள் செய்துள்ளனர். அக்கால மக்கள் பொருளாதார தேவைகளுக்கு ஏற்ப தொழில் செய்துள்ளனர்.
சலவைத் தொழில்
சலவைத் தொழில் செய்பவர்களைப் “புலையர்” என்றும் குறித்துள்ளது சங்க இலக்கியம். இவர்களுள் ஆணைப் “புலையன்” என்றும் பெண்ணைப் “புலைத்தி” என்றும் குறிப்பிடுவர்.
“ஆடுஇயல் விழாவின் அழுங்கல் மூதூர்
உடையோர் பான்மையின் பெருங்கை தூவா
வறனில் புலத்தி எல்லித் தோய்ந்த
பகாப் புகர் கொண்ட புன்பூங்கலிங்கம்” (-90)
இவர்கள் உவர்நிலப் பகுதிகளில் குழிதோண்டி ஆடைகளைப் பசை தோய்த்துச் சலவை செய்ததையும், விழா நாட்களில் அதிகமான ஆடைகளைச் சலவை செய்து கொடுத்ததையும் அறியமுடிகிறது.
முடிவுரை
சங்க இலக்கியத்தில் தொழில் நிலம் சார்ந்த தொழில்களாகவும்,அவற்றில் நிலவுடைமை வர்க்க பேதங்கள் நிறைந்ததாகவும் காணப்படுகின்றன.
செய்யும் தொழிலில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வே பிற்காலத்தில் சாதி அடிப்படையில் குறிப்பிடப்படுகின்றன.
தொழில் என்பது ஆண்,பெண் இருபாலருக்கும் இருந்ததைக் காணமுடிகிறது.
குலத்தொழில் என்பது வளரும் சமுதாயத்திற்கு ஏற்ப அவை மாறுபட்டு, சில அழிந்தும் மற்றும் சில இன்றளவும் தொடர்ந்து கொண்டிருப்பதை அறியலாம்.
இவ்வாறு உண்ணும் உணவு, உடுத்தும் உடை. செய்யும் தொழில் என அக்காலச் சமுதாயம் ஓர் முதலாளித்துவ சமுதாயமாக சித்தரிக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர்களிடம் இருந்து பலவகையான பயன்களைப் பெற்ற முதலாளித்துவ சமுதாயமும் இருந்ததை நற்றிணை வாயிலாக அறியலாம்.
துணை நின்ற நூல்கள்
1.நற்றிணை – மூலமும் உரையும், உரையாசிரியர் முனைவர்.கு.வெ .பாலசுப்பிரமணியம்,
நியு செஞ்சரி புக் ஹவுஸ்(பி)லிட்,41பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் அம்பத்தூர், சென்னை – 600098.

Leave a Reply